அத்யாயம் 1
“கொஞ்சமாச்சும் புரிஞ்சுக்கோ கீதன்.. இது நிச்சயமா சரியாய் வராது. உங்கம்மா சொல்ற பொண்ணை பார்த்து கல்யாணம் செஞ்சுகிட்டு குடும்பத்தை பெருக்க பாரு. என்னை ஆளை விடு. எனக்குன்னு கமிட்மெண்ட்ஸ் இருக்கு. உன்னோட காதலுக்கு நா ஆள் இல்லை” தனது வழக்கமான பதிலை மீண்டும் தனது பால்ய வயது முதலே தோழனான கீதனிடம் சொல்லி கொண்டு இருந்தாள் கீதனின் மஹிமா. அவளையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டு நின்றான் கீதன். அதைவிட மஹிமாவின் அம்மாவும் கீதனின் அப்பாவும் உடன்பிறந்தவர்கள். அதாவது அத்தை பெண் -மாமன் மகன் எனும் உறவும் அங்கே உண்டு.
எப்போது கேட்டாலும் இதே பாட்டுதான் பாடுகிறாள் மஹிமா. இருவரும் ஆறாம் வகுப்பு முதல் ஒன்றாக படித்து,ஒரே கல்லூரியில் வெல்வேறு துறைகளில் பொறியியல் முடித்து வரும் பொழுது கேம்பஸ் செலக்ஷனில் பிரிந்தவர்கள். கீதனுக்கு பெங்களூருவில் வேலை கிடைக்க மைசூரில் பயிற்சிக்கு சென்றுவிட்டான். மஹிமாவுக்கு சென்னை போரூரில் இருக்கும் நிறுவனத்தில் வேலை. அவள் படித்தது எலெக்ட்ரோனிக் என்ஜினீரிங். கீதன் படித்தது டேட்டா சயின்ஸ்.
இருவரும் வேலைக்கு சேர்ந்த இரண்டாம் வருஷத்தில் மஹிமாவுக்கு திருமணத்திற்கு பார்த்தார் அவளது அப்பா சுந்தரம் .அதுவரை பெரியதாக புரியாத காதல் எனும் உணர்வை கீதன் உணர்ந்த தருணம் அது. உணர்ந்த நொடி கீதன் அமைதியாக இருந்துவிடவில்லை. உடனடியாக தனது அம்மா ரமாவிடம் சென்று கேட்டான் தான்.
“அம்மா..மாமாகிட்டே மஹிமாவை எனக்கு கல்யாணம் செஞ்சு குடுத்துற சொல்லு.நா அவளை நல்லா பார்த்துப்பேன்.உனக்கும் அவள ரொம்பவும் பிடிக்கும் தானே?”
மகன் சொன்னதை கேட்ட ரமாவுக்கு ஆச்சர்யமாகி போனது.முகவாயில் கையை வைத்தவர் லேசாக வாயை திறந்து மகனை பார்த்தார். இப்போதுதான் கீதனுக்கு வயது இருபத்து மூன்று முடிந்து இருபத்து நான்கு ஆரம்பித்திருக்க மீசை கூட இன்னமும் முழு வளர்ச்சி பெற்றிருக்கவில்லை.முகத்தில் குழந்தைத்தனமும் முழுவதுமாக மாறி இருக்கவில்லை. மிகவும் நன்றாகவே படிப்பவன் என்பதால் பிரச்சனை இல்லை.
இல்லாவிட்டால் அவனை கூட படித்தவர்கள் கிண்டல் அடித்திருக்கும் வாய்ப்பும் உண்டு. சதாசர்வ காலமும் அம்மாவின் பின்னேயே திரிந்து கொண்டிருப்பவனுக்குள் இதுபோலவெல்லாம் தோன்றவும் வாய்ப்பு இருந்ததை ரமா சற்றே ஆச்சரியத்துடனும், கொஞ்சம் பீதியுடனும் பார்த்தார்.அவனது குரலில் அவ்வளவுக்கும் பிடிவாதம் நிறைந்திருந்தது.அதை உணர்ந்தவருக்குள் லேசான நடுக்கம் .அதை வெளியே காண்பித்துக் கொள்ளாமல்,” கொஞ்சம் சும்மா இருடா. நீ சொல்றத அப்படியே உங்கப்பாகிட்டேயும் ,என் கூட பொறந்தவன்கிட்டேயும் சொன்னா நடக்கிறதே வேறே.உங்கப்பா உன்னை வெளுத்து வணங்கிடுவாரு. உன் மாமா உன்னை இளக்காரமா பார்ப்பான். இன்னும் உனக்கு வயசு இருக்குடா. முதல்லே வேலைல செட்டில் ஆகணும். ஒரு பிளாட் வாங்கணும். கார் வாங்கணும்.இதெல்லாம் இருந்தா தான் இன்னிக்கி மார்க்கெட்டுல நீ விலை போவே. எங்கண்ணனும் அது போல ஒருத்தனை தான் மஹிமாவுக்கு பார்க்கிறான்.கல்யாண செலவே முப்பது லட்சத்துக்கு குறையாம செய்ய ரெடியா இருக்கான். அவங்களுக்கு சமமா நாம இல்ல. உங்கப்பாவுக்கு வர வருமானம் தான் நமக்கு. அந்தஸ்த்துலயும் சரி , சொத்துலயும் சரி. ஏதோ பண்டிகை நாளுக்கு பிறந்த வீட்டு சீருன்னு வருஷத்துக்கு ஒரு புடவையும்,கொஞ்சம் பழங்களும் வருது.அதுக்கு மேலே எதிர்பார்க்க முடியாது டா. கொஞ்சம் பொறுமையா இரு.உனக்குன்னு பிறந்தவ நிச்சயம் உன்னை தேடி உன்கிட்ட வருவா” என்றுவிட்டு வேறு வேலைகளை கவனிக்க சென்றுவிட்டார் ரமா .மகன் வேறு ஏதாவது கேட்டால் பதில் சொல்லும் நிலையில் அவர் இப்போது நிச்சயம் இல்லை.
ராமாவுக்கு ஒரே படபடப்பாக இருந்தது. தங்கள் அறைக்கு சென்றவர் அப்படியே படுத்துக்கொண்டார். மகனின் முகத்தில் தெரிந்த ஆசையும் ,கண்களில் தெரிந்த மஹிமா மீதான நேசமும் மகனை பெற்றவளை அப்படியே உருவிப் போட்டது.நிச்சயம் இது நிறைவேறப் போவது இல்லை. இந்த பிள்ளை இப்படி கேட்டுக்கொண்டு வந்து நிற்கிறானே .மறுத்து சொல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேனே’ என்று கழிவிரக்கம் பொங்க ,அது கண்ணீராய் கீழே இறங்கி மார்பை நனைத்தது.
அடுக்களையில் வெகுநேரம் நின்று கொண்டிருந்த கீதன் தனது அறைக்கு சென்றுவிட்டான். அவனால் இந்த ஏமாற்றத்தையும்,மஹிமா வேறு ஒருத்தரை திருமணம் செய்து சென்றுவிடுவாள் என்பதையும் ஜீரணிக்க கடினமாக இருந்தது. அறையில் தனது கட்டிலில் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்தவன் தான்.
அம்மா சொல்வதில் இருக்கும் உண்மை அவனுக்கு ஏற்கனவே தெரிந்தது தான்.சுந்தரம் மாமாவும், அத்தையும் பணத்தை வைத்துதான் மனிதர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். உடன்பிறந்தவள் என்பதால் தான் ரமாவுக்கு மரியாதை. ஆரம்பத்தில் சாதாரண நிலையில் இருந்தவர் தான் சுந்தரம் மாமா.பிறகு அத்தையுடன் திருமணம் நடந்தது.அத்தை பெரிய பணக்கார குடும்பம்.அதோடு மாமாவுக்கும் அலுவலகத்தில் வேலையின் முன்னேற்றம். பணம் சேர,குணம் மாறிவிட்டது.
நிச்சயம் இவர்கள் வீட்டிலிருந்து பெண் கேட்டு அங்கே சென்றால் அடித்து விரட்டவும் தயங்க மாட்டார் அத்தை. மிக முக்கியமான இன்னொரு விஷயம் மஹிமாவின் மனம். தனக்கு அவள் மீது உண்டான காதல் மருந்துக்கும் அவளுக்கு தன் மீது இல்லை என்பதையும் கீதன் அறிவான்.
அமமாவுக்காக மனதை மறைத்து சிரித்துக்கொண்டே சுற்றினாலும், பெற்றவளுக்கு புரிந்தது. இரண்டு நாட்கள் இருந்துவிட்டு மீண்டும் ஞாயிற்றுகிழமை கிளம்பிவிட்டான் கீதன்.
அதற்குப் பிறகு அவனது சென்னை பயணங்கள் வெகுவாக குறைந்து போனது.அம்மாவை அவ்வப்பொழுது அழைத்து தன்னுடன் வைத்துக்கொண்டான்.அவனது அப்பா இன்னமும் வேலையில் இருக்கிறார். ஓய்வு பெறவே பன்னிரண்டு வருஷங்கள் மீதம் இருக்கிறது.அதனால் அவரால் வர முடிவது இல்லை. மனைவியை அவர் தடுப்பதும் இல்லை.ஒற்றைப்பிள்ளை. அம்மாவுக்கும் மகனுக்கும் இடையில் இருக்கும் பாசப்பிணைப்பும் ,மகன் தனது அருகே இல்லாமல் மனைவி தவிக்கும் தவிப்பும் அவருக்கு நன்றாகவே தெரியும். அவரும் ஓசூருக்கு மாற்றல் கேட்டு விண்ணப்பித்து இருக்கிறார். அலுவலகத்தில் சிரிக்கிறார்கள்.
“ஏன் குரு சார், எல்லாரும் சென்னைக்கு மாற்றல் கொடுக்க கேப்பாங்க.நீங்க என்னடான்னா ஓசூருக்கு கேக்குறீங்க?” என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு வெறும் மௌனம் தான் பதில்.
இவையெல்லாம் நடந்து எட்டாவது மாதத்தில் மஹிமாவுக்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது.மாப்பிள்ளை அவுஸ்திரேலியாவில் வேலை. பெயர் பிரவீன் ஆளும் அசரடிக்கும் அழகன். பிறந்து வளர்ந்தது எல்லாமே அங்கே தான். பெற்றவர்கள் இருவரும் கனடாவில் இருக்கிறார்கள். அப்பாவுக்கு அங்கே மாற்றல் ஆகிவிட்டதாம். பிள்ளை மட்டும் இங்கே தனியாக இருப்பதாக சொன்னார்கள். சராசரிக்கும் கூடுதலான ஆறடி,ஐந்தங்குல உயரம். வெளிநாட்டுகாரர்களுக்கு உரிய வெளுப்பு நிறத்தில் இந்திய முக அமைப்பு.மீசை இல்லை. திரண்ட சொத்துக்கு ஒரே வாரிசு. உடன்பிறந்தவர்கள் என்று யாருமே இல்லை. ஜாதகம் நன்றாகவே பொருந்தி இருப்பதாக சொல்லிவிட்டார் ஜோசியர். வேறு என்ன வேண்டும்.
‘டும் டும் டும் ‘தான். ஒரு சுபயோக சுபதினத்தில் ஜூம் மீட்டிங்கில் பெண்பார்க்கும் படலம்.கனடாவில் இருந்து பிரவீனின் பெற்றவர்கள் இணைய பிரவீன் ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்டிங்கில் இணைந்தான் .மஹிமாவின் பெற்றவர்கள்,மஹிமா அவரவர் மடிக்கணினி வழியாக மீட்டிங்கில் இணைய கொஞ்சநேரம் பொதுவான விஷயங்கள் பேசப்பட்டது.
பிரவீன் ‘பெண்ணுடன் தனியாக பேச வேண்டும்’என்றான். அவளது அலைபேசி எண்ணை கொடுத்து தனியாக பேச சொன்னார் பெண்ணை பெற்றவர். இருவரும் பேசிக்கொண்டார்கள். சொல்லவேண்டும் என்றால் பிரவீன் பேச மஹிமா அமைதியாக கேட்டாள் .அவளுக்கு அவனிடம் பேசவும் கேட்கவும் ஒன்றும் இருக்கவில்லை .அவனது தோற்றம் தந்த மயக்கம் அவளுள் தெளியவே இல்லை. இப்போதே திருமணம் என்றாலும் அவளுக்கு சம்மதம் தான்.
மடிக்கணினியில் வீடியோ கால் வழியாக பிரவீன் பார்த்தது எல்லாம் பெண்ணின் கண்களில் தெரியும் தன் மீதான மயக்கத்தை தான். இது அவனுக்கு பழகிய ஒருவிஷயம் தான் என்பதால் அவள் அலட்டிக் கொள்ளவில்லை. பெண்ணும் பார்க்க சுமாராகவெல்லாம் இல்லை. தன்னளவுக்கு இல்லாவிட்டாலும் பெண் நன்றாகத்தான் இருக்கிறாள் என்று நினைத்துக்கொண்டான்.
அவளது படிப்பு,பிடித்தங்கள் ,சமைக்க தெரியுமா,நிரந்தரமாக இங்கே ஆஸ்திரேலியா வர சம்மதமா என்று தனக்கு வேண்டிய விஷயங்களை எல்லாம் பெண்ணிடம் கேட்டு தெரிந்து கொண்டவனுக்கு ,மஹிமாவை திருமணம் செய்து கொள்ள மறுப்பு எதுவும் இல்லை. ப்ரவீனுக்கும் மஹிமாவுக்கும் ஏழு வருட வயது வித்யாசம் இருந்தது. அதைப்பற்றி மட்டும் மனதில் லேசாக நெருடல்.அவனுக்கு ஒன்றுமில்லை.பெண் எப்படி யோசிப்பாளோ என்று நினைத்துக் கொண்டான்.
நிச்சயம் செய்வதற்கு பிரவீனின் பெற்றவர்கள் மட்டும் வந்தார்கள்.பிரவீன் ஜூம் மீட்டிங் மூலமாக இணைந்து கொண்டான். அவன் போட வேண்டிய மோதிரத்தை அவனது அம்மா பிரவீனின் சார்பாக மஹிமா விரலில் அணிவித்தார். நிச்சயம் ஆனதற்காக பிரவீன் குடும்பத்தின் சார்பாக மஹிமாவுக்கு வைர ஆரம் பரிசாக கொடுக்கப்பட்டது.
திருமண திகதி பின்பு முடிவு செய்துகொள்ளலாம் என்றுவிட்டார் பிரவீனின் அப்பா. விழாவுக்கு சென்றுவிட்டு வந்த ரமாவுக்கு மனதில்,’நல்லவேளையாக கீதன் தனது காதலை வெளிப்படுத்தாமல் இருந்துவிட்டான்’என்றுதான் தோன்றியது. அதை கீதனிடம் சொல்லவும் செய்தாள் . “நம்ம மஹிமா முகத்துல அந்த பையன் மீதான பிடித்தம் அவ்வளவுக்கு தெரியுது கீதன். நல்ல பணத்துடைய செழுமை அவங்க எல்லார் முகத்துலயேயும் தெரியுது. மஹிக்கு வைர ஆரம் போட்டுவிட்டாங்க அவளோட வருங்கால மாமியார்.”என்று போனில் அங்கலாய்த்தார் ரமா . கீதனிடம் எதற்கும் பதில் இல்லை.அவனிடமிருந்து ஒரு கசந்த முறுவல் தான். பணம் எல்லாவற்றையும் விலைக்கு வாங்கிவிடும். காதலையும் கூட வாங்கிவிடுமா? என்று மனதில் கேட்டுக்கொண்டான்.
மஹிமா வீட்டில் சென்னையில் திருமணம் வைக்கலாம் என்று கேட்க, ப்ரவீனா,”என்னோட பர்த் பிளேஸ் இங்கே ஆஸ்திரேலியா தான்.நா எதுக்கு அங்கே இந்தியா வந்து கல்யாணம் செஞ்சுக்கணும்? என்னோட பிரண்ட்ஸ் எல்லோரும் இங்கே தானே இருக்காங்க.அவங்களுக்கு இந்தியன் வெட்டிங் பார்க்கணும்னு ஆசை இருக்காதா? ஸோ , இங்கே தான் வெட்டிங் இருக்கணும்”என்று தனது பெற்றவர்களிடமும், மஹிமாவிடமும் சொல்லிவிட்டான்.இன்று வரை அவன் தனது வருங்கால மாமியார் மாமனாரை வயதை முன்னிறுத்தி கூட மதித்து பேசியதில்லை என்பதெல்லாம் எழுத்துக்குள் வராத வரலாறு.இன்னமும் அவர்கள் அதைபற்றி யோசிக்கக்கூட இல்லை. அவ்வளவுக்கு தரையில் கால் பரவாத பெருமையில் இருக்கிறார்கள்.
மென்று விழுங்கி மஹிமா விஷயத்தை பெற்றவர்களிடம் சொல்ல, அப்போதும் இந்த வரன் தேவையா என்று பெண்ணும் யோசிக்கவில்லை.பெற்றவர்களும் பின்னே அங்கே திருமணம் என்றால் ஏற்பாடுகளை யார் கவனிப்பார்கள் என்று கவலைப் பட்டார்களே தவிர இதுபோன்ற மாப்பிள்ளை அவசியமா என்றெல்லாம் சற்றும் தயங்கவில்லை.
பிரவீனின் அம்மா,தாங்களே அங்கே தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்வதாகவும், அதற்கான தொகையை மட்டும் மஹிமாவின் பெற்றவர்கள் கொடுத்தால் போதும் என்றும் பெருந்தன்மையுடன் ஒப்புக்கொள்ள மஹிமாவின் வீட்டில் பிரவீனின் பெருமை பேசி ஓயவில்லை.
மற்ற உறவுகளிடம் இதை சொல்லி பெருமைப்பட, “இவ்ளோ கஷ்டம் எதுக்கு சுந்தரம்,இங்கேயே நல்ல வரன்கள் இருக்கு தானே!என்று கேட்ட சொந்தங்கள் சிலருக்கு பொறாமை என்று பட்டம் கட்டினார்கள் சுந்தரம் தம்பதி.
அடுத்து வந்த மூன்று மாதத்தில் வேலையை விட்டுவிட்டாள் மஹிமா. மனம் முழுவதும் ப்ரவீனுடன் பேசும் நாணம் கொள்ள செய்யும் பேச்சுகளும்,அவனுடனான வாழ்வு பற்றிய கனவுகளும் தான். நான்காம் மாதத்தில் மருந்துக்கும் இவர்கள் பக்க சொந்தங்கள் இல்லாமல், மஹிமா தனது பெற்றவர்களுடன் ஆஸ்திரேலியா பயணமானாள் .
மூவரும் அங்கே இருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டார்கள் .அங்கே இவர்கள் வந்த ஒரு வாரத்தில் திருமணம் பிரவீனின் வீட்டில் அருகே இருக்கும் கோவிலில் ஏற்பாடு ஆகி இருந்தது. அவர்கள் பக்கமும் சொந்தங்கள் என்று பெரியதாக யாரும் கலந்து கொள்ளவில்லை. ப்ரவீனுக்கும் அவனது பெற்றவர்களுக்கும் இருக்கும் நண்பர்கள் நிறையபேர் வந்திருக்க அங்கிருக்கும் கோவிலின் அர்ச்சகர் திருமணத்தை நடத்தி வைத்தார். திருமணமும் பதிவு செய்யப்பட்டது.