அன்றைய தினம் முழுதும் விசாலாட்சியிடம் யாரும் பேசவே இல்லை.
நிலா கூட தன் கணவன் குழந்தையுடன் அங்கே தான் இருந்தாள் என்றாலும் அவளும் அதிகம் அன்னையிடம் பேசவில்லை. அவ்வளவு கோபம் இருந்தது நிலாவிற்குமே.
இவ்வளவு தூரம் வந்த பின்பும் கூட அன்னை இன்னும் முகம் காட்டாமல் தனி அறையில் அமர்ந்திருப்பதை கொஞ்சம் வேதனையும் கோபமும் என்று தான் கண்டாள் அவள்.
இரவு வீடு திரும்பும் நேரமும் தந்தையிடம் சொல்லிக் கொண்டு அவள் கிளம்பிவிட, தங்கள் அறைக்கு சென்ற பிருந்தாவிடம் அத்தனை கேள்விகள் இருந்தன கணவனிடம் கேட்பதற்கு என்று.
“ட்ரெஸ் எல்லாம் பேக் பண்ணிடு பிருந்தா. அத்தான்கிட்ட பேசியாச்சு. அவங்களை கூட்டிட்டு போவோம். நாளைக்கு மார்னிங் நான் போய்ட்டு வர்றேன். அங்க இருந்த திங்க்ஸ் எல்லாம் இப்ப இல்ல. எல்லாமே புதுசா தான் வாங்கணும். கொஞ்சம் க்ளீன் பண்ணனும். அதெல்லாம் முடிச்சு வச்சுட்டு நாளைக்கு நைட்டு வர்றேன். அடுத்த நாள் கிளம்பிடலாம்!” என்றான் தீரன் தன் திட்டத்தை.
“நீங்களே தனியா பண்ணவா?” பிருந்தா கேட்க,
“ஹ்ம்! பண்ணிட்டா நீ வந்ததும் உனக்கு யூஸ் ஆகுமே!” என்றான் தீரன்.
“இல்ல எல்லாரும் சேர்ந்து பண்ணினா வேலை கம்மியாகும் இல்ல? அண்ணியும் வர்ராங்க இல்ல?” என அவள் கூறவும் தீரன் யோசித்தான்.
“எல்லாம் முடிச்சுட்டா நீங்க வந்து அங்க ஸ்டே பண்ண ஈஸியா இருக்குமே நினைச்சேன்!” என்றவன்,
“நான் போய் ரொம்ப நாள் ஆச்சு. எப்படி இருக்கோ!” என்றும் சொல்ல,
“அதான் சொல்றேன். ஆளுக்கு ஒரு வேலையா பார்த்துட்டு போய்டலாம். தனியா பண்றது தான் கஷ்டம்!” என்றாள் பிருந்தாவும்.
“அதுவும் சரி தான். உனக்கு ஓகேனா அப்படியே பண்ணிடுவோம்!” என்றுவிட்டான் தீரனும்.
“அத்தைகிட்ட நீங்க இன்னும் எதுவும் சொல்லலயே!” என பேச்சோடு பிருந்தா கேட்டுவிட,
“ஏன் உன்னை எதுவும் சொன்னாங்களா?” என்றான் வேகமாய்.
“அதெல்லாம் இல்ல. நானா தான் கேட்குறேன். நீங்க இப்ப அவங்ககிட்ட சொல்லாம, அவங்களை கூப்பிடாம என்னை கூட்டிட்டு சென்னை போனாலும் அது பிரச்சனை தான் ஆகும். இன்னும் அவங்க தப்பா நினைப்பாங்க!”
“அதுக்காக?” என்றவன் குரலில் அதற்கு மேல் அவளுக்கு சொல்ல தெரியவில்லை.
“ஏற்கனவே நான் என்னென்ன கஷ்டப்பட்டு மூச்சு விட கூட முடியாம இருந்தேன்னு அவங்களுக்கு நல்லா தெரியும். அப்படியும் அவங்களா டிசைட் பண்ணி கல்யாணம் பண்ணி வச்சு… இப்ப உன்னையும் தள்ளி வச்சு… இதனால யாருக்கு என்ன கிடைக்க போகுதுன்னு அவங்க யோசிச்சிருக்கணுமே பிருந்தா?” என்றான்.
“நான் அவங்களை ஒதுக்கி எல்லாம் வைக்கல. வேற எப்படி என் கோவத்தை காட்டுறதுன்னு எனக்கு தெரியல. நிலா மாதிரி தானே உன்னையும் அவங்க பார்த்திருக்கணும். நான் இருந்தாலும் இல்லைனாலும் உன்னை பார்த்துக்க அம்மா இருக்காங்கன்னு நம்பி தானே நான் சென்னை போனேன்?” என்றவன் கேட்ட கேள்விக்கும் அவளிடம் விடையில்லை.
“ஆயிரம் இருக்கட்டும். மத்தவங்க சொன்னது உண்மை பொய் எதுவாவும் இருக்கட்டும். கல்யாணமான இத்தனை நாள்ல நீ எப்படி இருந்தனு அவங்களுக்கு தெரிய வேண்டாமா?” என்றவன்,
“நேரம், காலம், ஜாதகம், கட்டம் இப்படி எல்லாமே மாறிட்டே தான் இருக்கும் பிருந்தா. ஒருத்தங்க எப்படினு அவங்க கூட இருக்கவங்களுக்கு தான் தெரியணும். கேரக்டர் பிடிக்கல, ஒத்து வரலைனு சொன்னா அதுக்கு ரீசன் கேட்கலாம். பேசலாம். ஏன் மன்னிப்பு கூட கேட்கலாம். இவங்க என்ன நினைச்சு உன்னை தள்ளி வச்சாங்க சொல்லு?” என்று கேட்க,
“தள்ளி வைக்கல. நானும் தான் பயந்து வெளில வரவே இல்ல. அதுக்கப்புறம் தான் அவங்களும் பேசல!” என்றாள் பிருந்தாவும்.
“ஹ்ம்! அப்போ தப்பு உன் மேலயும் தான்!” என முறைத்தவன் முகம் பார்த்து பின் தலை தாழ்த்திக் கொண்டாள் அவள்.
“அதான் அம்மாவே சொன்னாங்களே. போதா குறைக்கு நீயும் என்கிட்டயே சொல்ற. என் நேரம் அப்படி தான் நான் எங்கேயாவது போயோடுறேன்னு!” என்றவன் கோபத்தில் அவள் அமைதியாய் இருக்க,
“இப்படி என் ரூம்குள்ள மறுபடியும் ஒரு பொண்ணு வரும்னு நான் போன மாசம் வரை நினைக்கல. ஆனா நடந்துச்சு தானே?” என்றதும் அவள் சட்டென்று நிமிர்ந்து பார்க்க,
“கேரக்டர், மனசுன்னு எதுவும் சரி இல்லாத ஒரு பொண்ணையே கூட வச்சு பார்த்துட்டு சகிச்சுட்டு இருந்தவன் நான். எக்ஸ்ட்ரீம் லெவல்ல முடியவே முடியாதுன்னு போன பின்னாடி தான் என்னை விட்டுடுங்கன்னு கோர்ட் போனேன்! அப்படி இருக்க, இப்படி கண்ணால பார்க்க முடியாத எங்கேயும் விசாரிக்க முடியாத ஒரு காரணத்தை வச்சு நீயும் அம்மாவும் இப்படி பண்ணீங்கனா அகைன் நான் என்ன பண்ணுவேன்?” என்றவன் கேள்வியில் வாயடைத்து அமர்ந்துவிட்டாள் பிருந்தா.
“இன்னைக்கு ஒரு நாள் இப்படியே இருக்கட்டும். நல்லா யோசிக்கட்டும். நாளைக்கு அவங்க நடந்துக்குறதை பொறுத்து நான் அவங்ககிட்ட பேசிக்குறேன்!” என்றவன் சொல்லுக்கு வேகமாய் தலையாட்டினாள் பிருந்தா.
“இப்போ தூங்கு!” என அதையும் அவன் சொல்லும் வரை என்னவோ யோசனை பிருந்தாவிடம்.சில நிமிடங்களில் அவனருகே படுத்தவள் ஆழ்ந்த உறக்கத்திற்கும் சென்றுவிட்டாள் நீண்ட நாட்களுக்கு பின்னாக.
அருகில் அமர்ந்திருந்தவன் சில நொடிகள் பிருந்தா முகத்தில் பார்வையை வைத்திருந்து பின் ஒரு பெருமூச்சுடன் எழுந்து சென்று விளக்கணைத்து படுத்துக் கொண்டான்.
இன்னும் இருவருக்குமே பாரம் நீங்கிய உணர்வெல்லாம் இல்லவே இல்லை. எதிர்காலம் பற்றிய பயம் இன்னும் அதிகமாய் இருந்தது இப்பொழுது.
சிறு மாற்றமாய், அவளை கஷ்டபடுத்துவதாய் இருக்க கூடாதே என தீரணும் அவனிற்கு தான் பாரமாய் இருந்துவிடக் கூடாதே என்று பிருந்தாவும் ஒருவருக்காக மற்றவர் யோசிக்க துவங்கி இருந்தனர்.
அடுத்தநாள் மதியம் வரை அறையை விட்டு வெளிவரவே இல்லை விசாலாட்சி.
“அவளை எல்லாம் எதிர்பார்க்காத தீரா. நீ நினைக்குறதை செய். இனி உன் வாழ்க்கையைப் பாரு!” என்று சொல்லி வெளியில் சென்றுவிட்டார் தந்தை.
காலை உணவு மதிய உணவு என இன்று மீண்டுமாய் பிருந்தா தான் சமையலை முடித்திருக்க, தீரன் மதிய உணவிற்கு அமரவும் பிருந்தா அனைத்தையும் எடுத்து வைக்க,
“ம்மா!” என சத்தமாய் குரல் கொடுத்தான் தீரன். அப்பொழுது தான் பிருந்தாவிற்கும் கொஞ்சம் திருப்தியாய் இருந்தது கணவனின் செயல்.
இரண்டாவது அழைப்பிலேயே வந்துவிட்டார் விசாலாட்சியும். கடுகடுவென்ற முகத்தோடு அவர் வந்து அமர,
“மார்னிங் சாப்பிடலை போல!” என்றவன் மனைவியைப் பார்க்கவும் விசாலாட்சிக்கும் ஒரு தட்டினை எடுத்து வந்து உணவினை அதில் வைத்தாள் பிருந்தா.
“நீயும் உக்கார்!” என தீரன் சொல்லவும் பிருந்தாவும் அமர்ந்து சாப்பிடப் போக,
“எனக்கு வேண்டாம்!” என்றார் விசாலாட்சி. அதுவும் முகத்தில் கோபம் அப்பட்டமாய் தெரிய, கொஞ்சம் பயந்து தான் வந்தது பிருந்தாவிற்கு.
“ம்மா! நாளைக்கு நான் பிருந்தாவோட சென்னை போய்டுவேன். அப்புறம் சேட்டார்டே சண்டே எல்லாம் வந்துட்டு இருக்க முடியாது. மன்ந்த்லி ஒன்ஸ் தான் வர்ற மாதிரி இருக்கும். அதுவும் மார்னிங் வந்துட்டு மதியம் கிளம்பினா தான் அங்க என் வேலையை நான் பார்க்க முடியும்!” என்றவனை விசாலாட்சி அதிர்ந்து பார்க்க, என்ன பேசுகிறான் என்பதாய் தான் பார்த்து வைத்தாள் பிருந்தாவும்.
“சோ! இனி நீங்க தான் உங்களை இன்னும் கவனமா பார்த்துக்கணும். நேர நேரத்துக்கு சாப்பிட்டு தான் ஆகணும். அப்பாவும் வெளில வேலைக்கு போறவங்க. எந்நேரமும் பார்த்துட்டே இருக்க முடியுமா நீங்க சாப்பிட்டீங்களா என்ன பன்றிங்கனு?” என்றவன் சொல்லில்,
“என்ன டா பேசுற நீ? அபசகுனமா பேசிட்டு இருக்க. தெரியுதா இல்லையா உனக்கு?” விசாலாட்சி அதிர்வோடே கேட்க,
“என்ன பேசுறீங்க!” என சத்தமே இன்றி என்றாலும் கணவன் தன்னை கவனிக்கவும் சொல்லிவிட்டாள் பிருந்தாவும்.
“வரமாட்டேன். எதாவது ஆகிடும்.. இதெல்லாம் நல்ல வார்த்தையா? இப்படியா பேசுவ?” என பதற்றம் குறையாமல் விசாலாட்சியும் தொடர,
“இதுலயுமா? நான் உண்மையை சொன்னேன். நான் என் பேமிலியோட சென்னைல செட்டில் ஆகிடுவேன். அடுத்து என்னன்றதை சொன்னேன். அவ்வளவு தான். இதுக்கும் அபசகுனம், நல்ல வார்த்தை கெட்ட வார்த்தைனு.. ஏன் ம்மா இப்படி இருக்கீங்க!” என்று தீரன் கேட்கவும் மகனையும் மருமகளையும் என மாறிமாறிப் பார்த்தார் விசாலாட்சி.
“சாப்பிடுங்க முதல்ல!” என்றவன்,
“நாளைக்கு கிளம்புறோம். நீங்க வர்றிங்களா?” என்றான் அவர் பார்வையில் மனது கேளாமல்.
“இப்படி தான் தகவல் சொல்லுவியா நீ? நான் அவ்வளவு தூரமாகிட்டேனா உனக்கு? அன்னைக்கு என்னவோ கட்டிட்டு வர்றவளை சென்னை கூட்டிட்டு போக பயமா இருக்கு. நான் இங்க தான் விட போறேன் சொன்ன? இப்போ கூட்டிட்டு போக போறேன் நீங்க பாத்திரமா இருங்கனு சொல்ற?” என்றவர் குற்றம் சாட்ட,
“என்ன ம்மா பண்ண? எல்லாரும் சொன்ன மாதிரி இருக்காங்களா என்ன? அதுவும் பிருந்தா இப்போ அவளா என்னோட வர்றேன்னும் சொல்லல. நானும் இவ்வளவு நாளும் இப்படி இவ்வளவு சீக்கிரம் அவளை கூட்டிட்டு போவேன்னு நினைக்கல. கல்யாணம்னு முடிஞ்ச பின்னாடி என்ன நடந்தாலும் அவ என் பொண்டாட்டி தானே? அப்போ நான் அவளை உங்ககிட்ட விட்டுட்டு போனா பத்திரமா பார்த்துக்க வேண்டியது உங்க பொறுப்பு தானே?” என்றவன் கேள்வியில்,
“இப்போ அப்படி என்ன பண்ணிட்டேன் நான்?” என்றார் விசாலாட்சி.
“என்னங்க?” என சத்தமின்றி பிருந்தாவும் பதறி அழைக்க, இருவரும் ஒருசேர பிருந்தாவைக் கண்டதில் பேசவும் முடியவில்லை அவளால்.
“நீங்க எதுவும் பண்ணல. பண்ண போறதும் இல்ல. உங்களுக்கு நேரப்படி ராசிப்படி என் பொண்டாட்டி இங்க இருக்குறது பிரச்சனையா இருக்கு. எனக்கு என் நேரப்படி ராசிப்படி என் பொண்டாட்டி என் கூட இல்லைன்றதால உடம்பு சரி இல்லாம வருது. எதுக்கு இதெல்லாம்? அதான் கூட்டிட்டு போறேன். நடக்குறது நடக்கட்டும். இனி நான் பார்த்துக்குறேன் இவளை. அந்த கஷ்டம் உங்களுக்கு வேண்டாம் பாருங்க!” என்றவன் சொல்லில் அவருக்கு சுருக்கென்றாக, பாதி உனவோடு அமர்ந்திருந்தாள் பிருந்தா பாவமாய்.
“என்னோட ஆசை நாளைக்கு நீங்களும் வந்தா நல்லாருக்கும்ன்றது தான். ஆனா உங்களுக்கு விருப்பம் இருக்கணுமே. நேரம், ஜாதகம் பார்த்து அவன் வேண்டாம்னு சொன்னா வேற நீங்க வர மாட்டிங்க!” என ஏகத்திற்கும் குத்திக்காட்டியே பேசினான் தீரன்.
“உங்க சார்பா தான் நிலாவையும் அத்தானையும் கூட்டிட்டு போறேன். ரெண்டு நாள்ல அவங்க வந்துடுவாங்க. இல்ல நீங்க வர்றிங்கன்னா பிளான் சேன்ஞ் பண்ணனும்!” என்று சொல்ல, பிருந்தா கண்களை அகல விரித்து கணவனைக் கண்டாள்.