மதில் தாண்டுமா மனசு — 22
ஒரு மாத கால கட்டாய விடுமுறைக்குப் பிறகு, சுகந்தி கம்பெனியின் வாசற்படியை மீண்டும் மிதித்தபோது அவளது நடையில் பழைய வேகம் கூடியிருக்கவில்லை. உடம்பில் இன்னும் சோர்வின் சுவடுகள் எஞ்சியிருந்தன.அவள் வருவதைக் கண்டதும் ஆனந்தன் சுறுசுறுப்பாக அவளருகே வந்தான். அவளது முகவாட்டத்தைக் கவனித்தபடி, “இப்ப உடம்பு பரவாயில்லையா?” என்று கரிசனையோடு விசாரித்தான்.சுகந்தி சற்று தயக்கத்துடனும் தாழ்ந்த குரலிலும், “பரவாயில்லை ஆனந்த்… ஆனா, முன்ன மாதிரி உடனே ஓடியாடி வேலை பார்க்க முடியாதுன்னு தோணுது. அதனால எனக்கு இன்னும் ரெண்டு மாசம் லீவு வேணும்” என்றாள்.ஆனந்தன் உடனே மறுப்பாகத் தலையசைத்தான். “எதுக்கு வீணா லீவு போட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடக்க போறீங்க? இங்கேயே வந்து இருங்க. ஓடியாடி எந்த வேலையும் செய்ய வேண்டாம். சுதாவுக்குக் கூடவே இருந்து கணக்கு வழக்கு பார்க்கிறதையும் எழுதுறதையும் மட்டும் கவனிச்சுக்கோங்க. கம்பெனி சம்பளமும் வந்திடும்” என்று அன்புடன் வழிமுறையைக் கூறினான்.அவன் சொல்வதில் இருந்த நியாயமும் அக்கறையும் சுகந்தியின் மனதைத் தொட்டன. சம்மதமாகத் தலையசைத்தவள், அன்றிலிருந்து சுதாவுக்கு உறுதுணையாக, ஒரு மூத்த மேற்பார்வையாளராக அங்கேயே தங்கத் தொடங்கினாள்.நாட்கள் தங்கு தடையின்றி நதியென நகர்ந்தன. மீனாவின் புதுவீட்டு வேலைகள் அனைத்தும் நிறைவுற்று, புதுமனை புகுவிழாவுக்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்தன.ஆனால், அந்த மகிழ்ச்சியான சூழலை உலுக்கும் விதமாக, உலக நாடுகளிடையே பெரும் போர் மூளும் அபாயகரமான செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. ஆனந்தன், அனுஷா, மீனா, சந்தோஷ் ஆகிய நால்வரும் பதற்றத்துடன் செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.செய்தியாளர் போர் நடக்கும் நாட்டின் பெயரைக் குறிப்பிட்டதும், மீனாவின் நெஞ்சம் படபடவென அடித்துக்கொண்டது. அவளது கணவன் சங்கர் வேலை பார்ப்பது அதே நாடுதான்! முகம் வெளுத்துப்போக, நடுங்கும் விரல்களால் சங்கருக்கு உடனே வீடியோ கால் செய்தாள். அவளது பதற்றத்தைக் கண்டு ஆனந்தனும் அனுஷாவும் கவலையோடு அவளைப் பார்த்தனர்.நீண்ட நேரம் ஒலித்த ரிங் டோனுக்குப் பிறகு, திரையில் சங்கரின் முகம் தோன்றியது.கணவனைக் கண்டதும் மீனாவால் தன் பயத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. “ஏங்க… டிவியில போர் அறிவிப்பு செய்றாங்க! எல்லாரையும் அவங்க அவங்க சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போகச் சொல்றாங்களாமே… நீங்க எப்ப வரப் போறீங்க?” என்று அலறினாள்.சங்கர் நிதானமான குரலில், “மீனா, முதல்ல பயப்படாம இரு. எல்லாரையும் ஊருக்குப் போகச் சொல்லியிருக்காங்கதான். ஒரு வாரத்துக்குள்ள இடத்தை காலி பண்ணணும்னு உத்தரவு வந்திருக்கு. நான் இந்த வாரக் கடைசியில கிளம்பி வீட்டுக்கு வந்துடுவேன்” என்று ஆறுதல் கூறினான்.”எல்லாரையும் போகச் சொன்னதுக்குப் அப்புறமும் நீங்க ஏன் அங்க இருக்கணும்? வேலையாவது ஒண்ணாவது… உடனே கிளம்பி வாங்க!””புரிஞ்சுக்கோ மீனா… நான் இங்க சமையல் வேலையில இருக்கேன். கூட இருக்கிறவங்களுக்குச் சமைச்சுப் போடணும் இல்லையா? எல்லாரும் கிளம்பின அப்புறம் கடைசி ஆளாத்தான் நான் வர முடியும்.””அங்க இருக்கிறவங்களுக்குச் சமைக்கத் தெரியாதா? நீங்க முதல்ல கிளம்பி வாங்க!” என்று கூச்சலிட்டபடி மீனா கதறி அழத் தொடங்கினாள்.அவளது நிலையைக் கண்டு பொறுக்க முடியாத ஆனந்தன் போனைத் தன் கைக்கு மாற்றினான். “மச்சான்… உங்களால எவ்வளவு சீக்கிரம் புறப்பட்டு வர முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் வந்துடுங்க” என்றான் அழுத்தமாக.ஆனால் மீனா போனைப் பிடுங்காத குறையாக, “அதெல்லாம் முடியாது, நீங்க இப்பவே உடனே கிளம்பி வாங்க!” என்று அழுதுகொண்டே ஆனந்தனின் தோளில் சாய்ந்தாள்.மனைவியின் தீவிரமான பதற்றமும் கண்ணீரும் சங்கரின் நெஞ்சைப் பிழிந்தன. திரையில் அவனது முகமும் கலங்கியது. “ஆனந்த், நீங்க யாரும் வருத்தப்படாதீங்க மச்சான். நான் அங்கிருந்து சீக்கிரம் வர்றதுக்கான வழியைப் பார்க்கிறேன்” என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தான்.மீனா விம்மி விம்மி அழுதாள். “ஏன்னா… ஏன் இப்படிச் செஞ்சீங்க? அவரை உடனே வரச் சொல்ல வேண்டாமா? அங்க எப்ப குண்டு போடுவாங்கன்னே தெரியல… அந்த அளவுக்கு கொடூரமா நடந்துக்கிறாங்க! இவர் அப்புறமா வெளியேறி வர்றது கஷ்டம். அதனால ‘முதல்ல கிளம்பி வா’னு நீங்க கூப்பிட்டிருக்க வேண்டاமா?”அதுவரை அமைதியாக அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த அனுஷா, மெல்ல மீனாவிடம் நெருங்கி அவளது தோள்களை அன்போடு பற்றினாள்.”அண்ணி, பயப்படாதீங்க… அண்ணனுக்கு எதுவும் ஆகாது. நிச்சயம் பத்திரமா திரும்பி வந்துடுவார். இந்த ஒரு வாரத்துக்கு மட்டும் கொஞ்சம் பொறுமையா இருங்க, ப்ளீஸ்…”மீனா கலங்கிய கண்களோடு அனுஷாவின் முகத்தைப் பார்த்தாள். “உன்னோட அண்ணனுக்கு ஒண்ணும் ஆகாது இல்ல? நிஜமாவே ஒண்ணும் ஆகாது இல்லம்மா?” என்று கேட்டபடி அவளை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு ஓவென்று அழுதாள்.அனுஷா தாய்மை ததும்பிய அன்போடு அவள் தோள்களைத் தட்டிக் கொடுத்தாள். “ஒண்ணும் ஆகாது அண்ணி. போர் நடக்குற இடத்துல இருந்து பாதுகாப்பான இடத்துலதான் இருக்கிறதா அண்ணன் சொன்னார் இல்லையா? நீங்க பயப்படுற அளவுக்கு எதுவுமே நடக்காது. பாருங்க… அடுத்த வாரம் அண்ணன் உங்க முன்னாடி வந்து நிப்பாரு. நான் சொல்றது சத்தியம்… அண்ணன் கண்டிப்பா வருவாரு!”அனுஷா தந்த அந்த வார்த்தைகளை ஒரு தெய்வத்தின் வாக்காகவே மனதார ஏற்றுக்கொண்டாள் மீனா.மறுமணம் செய்துகொண்டு தன் அண்ணன் வீட்டிலேயே வாழ்ந்தாலும், தன் முதல் கணவனின் நினைவுகளுக்கு எந்தத் துரோகமும் இழைத்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக நின்று, தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொண்டு வாழும் அனுஷா, மீனாவுக்கு உண்மையிலேயே ஒரு தெய்வமாகவே தெரிந்தாள்.அந்தத் தெய்வத்தின் வார்த்தை தந்த நம்பிக்கையில் மீனாவின் மனமும் அமைதியடைந்தது. “நீ சொன்னா சரியாதான் இருக்கும்…” என்றபடி அவள் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.வெளிப்புறம் சற்று நேரம் காலாற நடந்துவிட்டு வரச் சென்றிருந்த கனகமும் மதுமிதாவும் ஒன்றாக வீட்டுக்குள் நுழைய, அங்கே நிலவிய பதற்றத்தைக் கண்டு, “என்ன ஆச்சு?” என்று பதறியவாறே உள்ளே வந்தனர். கனகத்திடம் நடந்த விபரத்தை விளக்கிச் சொன்னான் ஆனந்தன்.கனகம் மீனாவின் அருகில் சென்று அவளைத் தாங்கிக் கொண்டு, “ஒண்ணும் ஆகாதுடி, எதையும் நினைச்சு வருத்தப்படாத. நம்ம கும்பிட்ட சாமி நம்மளைக் கைவிடாது” என்றார். மீனா அதற்குப் பதில் சொல்லாவிட்டாலும், தன் தலையை அசைத்து அதை ஏற்றுக் கொண்டாள்.சங்கர் சொன்னது போல ஒரு வாரத்திற்குப் பிறகு நாடு திரும்பியிருந்தான். மதுமிதாவுக்கும் மீனாவுக்கும் சங்கர் வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. அதேபோல சங்கரின் பெற்றோர்களான லட்சுமிக்கும் நாராயணனுக்கும் அளவற்ற சந்தோஷம். அவர்கள் அனைவரும் சங்கரை பாசத்தோடு வரவேற்றுத் தங்களது அன்பைக் கொட்டினர்.மீனா தங்களுக்காகக் கட்டியிருந்த வீட்டின் பால் காய்ச்சும் விழாவை நடத்துவதற்காக, குடும்பத்தார்களுடன் ஜோதிடரைச் சந்தித்து நாள் குறித்துவிட்டு வந்து பத்திரிகை அச்சிட்டு அனைவருக்கும் கொடுத்தாள். மீனா தனது குடும்பத்தோடு செய்யும் முதல் பெருவிழா என்பதால், தெரிந்த சொந்த பந்தங்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்து பால் காய்ச்சும் விழாவைச் சிறப்பாக நடத்தி முடித்தார்கள்.அதேபோல, சங்கர் தன்னுடைய பெற்றோர்கள் இருந்த கிராமத்தை விட்டுத் தங்களுடன் வந்து புது வீட்டில் அனைவரும் ஒன்றாக குடி ஏறினார்கள். சந்தோஷுக்கு எதுவும் விளங்கவில்லை என்றாலும், அக்கா தன்னை விட்டுப் பிரிந்து செல்கிறார் என்று புரிந்து அவனது முகம் சோர்ந்து போய் அமர்ந்துவிட்டது.மீனாவும் சங்கரும் தங்களுக்குள் கலந்து ஆலோசித்துவிட்டு, சந்தோஷையும் கனகத்தையும் தங்களுடன் அழைத்துக் கொள்ளுமாறு ஆனந்தனிடம் கேட்டார்கள்.ஆனந்தன் தயக்கத்துடன், “மச்சான், நீங்க எதை மனசுல வச்சு கேட்கிறீங்கன்னு எனக்குப் புரியுது. ஆனாலும் அது தப்பு; அவங்க இருக்கிற இடத்திலேயே இருக்கட்டும். நீங்க எதையும் போட்டு உங்களது மனசைக் குழப்பிக்காதீங்க” என்று மறுத்துக் கூறிவிட்டான்.சங்கர், “சரி மாப்ளை” என்று அதை ஏற்றுக் கொண்டவன், “நான் பார்த்துட்டு இருந்த வேலையை விட்டுட்டு வந்துட்டேன். எனக்கு இந்த ஊருக்குள்ள புதுசா வேலை தேடி இன்னும் இளவட்டப் பையன் போல அலைய முடியாது. ஏதாவது ஏற்பாடு பண்ணுங்க” என்று தயக்கத்தோடு சொன்னான்.ஆனந்தன் புன்னகையுடன், “ஒன்னும் பிரச்சனை இல்ல மச்சான். கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்க; பக்கத்துல கடை ஒன்னு வாடகைக்கு வருது. அதுல ஃபாஸ்ட் ஃபுட் கடை ஆரம்பிக்கலாம்” என்று சொல்ல, சங்கர் மகிழ்ச்சியோடு, “ரொம்ப நன்றி மாப்ளை” என்றான்.உடனே அனுஷா, “எதுக்கு மச்சானை நன்றி சொல்லி அந்நியப்படுத்துறீங்க? சொந்தங்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்தும் ஒற்றுமையா வாழனும் தானே?” என்றாள்.சங்கர், “ஆமாமா… ஆனாலும், ஆனந்த் மாதிரி சொந்தம் கிடைக்கிறதுக்கு ஒரு பெரிய புண்ணியம் செய்திருக்கணும்” என்றான்.அனுஷாவுக்கு அது உண்மைதான் என்று பட்டாலும், பதில் சொல்ல மட்டும் வாய் வரவில்லை.