காட்டுச் சுனையின் சலசலப்பிற்கு நடுவே, எழிலின் இந்தக் கதறலும் கண்ணீரும் ராயனின் நெஞ்சை அப்படியே பிளப்பதைப் போலக் கொடூரமான வலியைக் கொடுத்தது.
அவளது குடும்பத்தின் வலியையும், அவள் சுமக்கும் பாரத்தையும் உணர்ந்து, பதில் பேச முடியாமல் உறைந்து போய் நின்றான்.
எழில் தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, முகத்தில் திடீரெனப் பூத்த ஒருவித நிம்மதியான புன்னகையோடு அவனை நிமிர்ந்து பார்த்தவள், “ஆனா… இப்போ ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கு இளன்! என்ன ஆச்சுன்னு தெரியல, எங்க அப்பாவும் அம்மாவும் நேராகவே அக்கா வீட்டுக்குப் போய் அவளைப் பார்த்துட்டு வந்திருக்காங்க. அநேகமா அடுத்த வாரம் அக்கா தன் குடும்பத்தோட எங்க வீட்டுக்கு வந்தாலும் வருவா. அக்காவுக்கு ரெண்டு பசங்க இருக்காங்க…” என்று எழில் சந்தோஷமும் நெகிழ்ச்சியுமாகச் சொன்னாள்.
அவளது வார்த்தைகளைக் கேட்டதும் இப்போது ராயனின் முகத்தில் ஒரு நம்பிக்கை ஒளி வீச, “அப்புறம் என்னடி… உன் அக்காவையே ஏத்துக்கிட்ட பிறகு, கண்டிப்பா நம்மளையும் உங்க அப்பா ஏத்துப்பாரு!” என்று அவன் உற்சாகமாகச் சொல்ல…
எழில் சட்டென்று குறுக்கிட்டு, ஒரு கசப்பான புன்னகையோடு, “எங்க மாமா நல்லாப் படிச்சவர் இளன்… காலேஜ் புரொபசர், கை நிறையச் சம்பாதிக்கிறார். அவ்வளவு தகுதி இருந்தும் அவரை எங்க குடும்பம் இத்தனை வருஷமா ஏத்துக்கல… நீங்க என்னன்னா…” என்று அவள் இயல்பாகச் சொல்லி முடிக்க, அந்த வார்த்தை ராயனின் நெஞ்சில் சுருக்கென்று ஊசியாகக் குத்தியது.
அவனது படிப்பு, அவனது காட்டு வாழ்க்கை, அவனது அசுரத்தனமான பிம்பம் என எல்லாமே அவளது அந்த ஒரே ஒப்பிட்டில் தூள் தூளாக நொறுங்கிப் போயின. அவளது பார்வையில் தான் ‘தகுதியற்றவன்’ என்ற உண்மை அவனை சுட, அவளிடமிருந்து பட்டென்று தள்ளி விலகி நின்றவனின் முகத்தில் இருந்த காதலும் கனிவும் கணப்பொழுதில் மறைந்து, ஒரு உறைந்த அமைதி குடியேறியது.
“சரி எழிலரசி,” என்று முதன்முறையாக அவளை ‘வாங்க’ என்று மிகுந்த இடைவெளியோடு, அந்நியமாகத் தள்ளி வைத்துப் பேசினான். அவனது அந்த மாற்றமும், குரலின் வேறுபாடும் ஒரு நொடி திடுக்கிட வைத்தன.
“நேரமாகுது… காட்டுல மற்ற பகுதிகளைப் பார்த்துட்டுப் போயிடலாம்,” என்று உணர்ச்சியற்ற குரலில் சொன்னவன், அவளுக்குப் பாதையைக் காட்டிக்கொண்டே முன்னால் நடந்தான்.
காட்டின் அழகை அவளுக்குச் சுட்டிக்காட்டினாலும், அவனது பார்வையில் முன்பு இருந்த அந்த அசுரத்தனமான காதல் ஒளியைக் காணவில்லை.பொழுது சாயும் நேரத்திற்குள்ளேயே அவளைப் பத்திரமாக அழைத்து வந்து, அவளது வீட்டின் வாசலில் விட, எழில் ஏதோ பேச முற்படுவதற்குள், அவளைத் திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட்டான்.
ஆனால் இவ்வளவு நேரம் அவள் அவனுக்கு வைத்த செல்ல பெயர் ‘இளன்’ என்றுதான் அவனை அழைத்து பேசியதை கூட அவன் உணராமல் போனதும் அவனது துருதிஸ்டம்.
அவனது அந்த மௌனமும் விலகலும், தான் பேசிய வார்த்தையின் வீரியத்தை எழிலிற்கு உணர வைத்து, அவளது நெஞ்சை ஆழமாகப் பிசைந்தது.
உண்மையில், எழில் காட்டில் அவனிடம் சொல்ல வந்த விஷயம் வேறு. “எங்க மாமா அவ்வளவு படிச்சவரா இருந்தும் அவங்களுக்கே இவ்வளவு பிரச்சனை வந்தது… அப்போ நாம ரெண்டு பேரும் சேருறப்போ இதைவிட அதிகமான எதிர்ப்புகளும் பிரச்சனைகளும் வரும். அதனால் நாம ரெண்டு பேரும் சேர்ந்துதான் பேசிப் பெத்தவங்களைச் சம்மதிக்க வைக்கணும்!” என்றுதான் அவனிடம் நம்பிக்கையோடு சொல்ல வந்தாள்.
ஆனால், அவள் சொன்னதன் முதல் பாதியை மட்டுமே கேட்டுக்கொண்டு, தன்னை எழில் தகுதியற்றவனாகத் தாழ்த்திப் பேசுகிறாள் என்று தவறாகப் புரிந்துகொண்டு ராயன் விலகியது அவளுக்குப் பெரிய வலியைக் கொடுத்தது.
“நான் என்ன சொல்ல வர்றேன்னு கடைசி வரைக்கும் முழுசா புரிஞ்சுக்கவே மாட்டேங்குறானே! எப்பப் பார்த்தாலும் பாதியிலேயே தன் இஷ்டத்துக்கு ஒரு முடிவை எடுத்துக்கிட்டு விலகிப் போறதுதான் இவனுக்கு வேலையா போச்சு!” என்று ராயன் மீது வந்த ஆத்திரத்தில் எழிலும் கோபத்தோடு வீட்டிற்குள் சென்று கதவை மூடிக்கொண்டாள்.
அதன் பின்னர் வந்த நாட்களில், இருவருக்குள்ளும் ஒரு பெரிய மௌனச் சுவர் எழும்பியது.அவனது அந்த விலகலையும், கண்டுகொள்ளாத போக்கையும் பார்த்து எழிலின் மனதுக்குள்ளும் கோபம் கனன்றாலும், இன்னொரு பக்கம் அவளது நெஞ்சம் அவனைத் தேடித் தவித்தது.
தானாகச் சென்று விளக்கம் சொல்ல அவளது சுயமரியாதையும் கோபமும் தடுத்தன.இருவரின் மனதுக்குள்ளும் ஆழமான காதல் துடித்துக் கொண்டிருந்தாலும், தவறான புரிதலாலும் பிடிவாதத்தாலும் பிறந்த அந்த மௌனம், அவர்களைச் சுற்றியிருந்த கானகத்தை விடவும் அடர்த்தியாக இருவரையும் சூழ்ந்துகொண்டது.
நாட்கள் ஓடியது….இதோ ஊரின் ஆண்டுத் திருவிழா நெருங்கிக் கொண்டிருந்ததால், ஊரே ஒரு புதிய பொலிவோடும் சுறுசுறுப்போடும் காணப்பட்டது. திருவிழா ஏற்பாடுகளைத் தொடங்குவதற்காக, ஊர்க் கோயில் வளாகத்தில் பெரியதனக்காரர்களும் ஊர்ப் பொதுமக்களும் ஒன்றுகூடி பஞ்சாயத்தைக் கூட்டினார்கள்.
ஊர்ப் பெரியவர் தலைமையில் கூட்டம் தொடங்க, திருவிழாவின் ஒன்பதாம் நாளில் சாமி வீதி உலாவுக்கானப் பந்தக்கால் ஊன்றுவது என்றும், அதற்கான பூசைகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளைச் சிறப்பாக நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், ஊரிலிருக்கும் ஒவ்வொரு குடும்பமும் திருவிழாவிற்காக எவ்வளவு வரித் தொகை செலுத்த வேண்டும் என்பது குறித்த காரசாரமான விவாதங்கள் நடந்து,குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு, வரித் தொகை முறைப்படிப் பிரிக்கப்பட்டு ஊர் மக்களிடம் அறிவிக்கப்பட்டது.
ஊர் மக்கள் அனைவரும் சம்மதத்தோடு தங்களின் வரியைக் கொடுக்க ஒப்புக்கொண்டனர்.இந்தத் திருவிழாச் செய்தியும் பஞ்சாயத்து முடிவுகளும் எழிலின் மூலமாக அவளது வீட்டிற்கும் வந்தடைந்தது.
அவளின் தந்தையோ அக்கா குடும்பத்தையும் அழைத்து வருவதாகச் சொன்னார்.ஒருபுறம் குடும்பம் ஒன்று சேரும் மகிழ்ச்சி இருந்தாலும், இன்னொரு புறம் ராயனின் உறைந்த மௌனத்தை நினைத்து அவளின் நெஞ்சம் திருவிழாச் சத்தத்திற்கு நடுவிலும் அமைதியின்றித் தவித்துக் கொண்டிருந்தது.
திருவிழாவின் மிக முக்கியமானத் தொடக்க நிகழ்வான ‘காப்பு கட்டும் நாள்’ வந்தது. கோயில் வளாகம் முழுவதும் கெட்டிமேளச் சத்தமும், தூப தீபங்களின் நறுமணமும், பக்தர்களின் ‘ஆத்தா…தாயே’ கோஷமும் நிறைந்து வழிந்தது.
வருடா வருடம் விரதமிருந்து காப்பு கட்டுபவர்களோடு, இந்த முறை வழக்கத்திற்கு மாறாகப் புதிய பக்தர்களின் கூட்டமும் அதிகமாகக் கூடியிருந்தது.
அந்தப் புதிய பக்தர்களின் கூட்டத்தில், ராயனின் நெருங்கிய நண்பர்கள் பட்டாளமும் பயபக்தியோடு (அதே சமயம் தங்களின் கெத்தோடு) வந்து வரிசையில் இணைந்துகொண்டனர்.ஊரையே ஆட்டிப்படைக்கும் நான்கு கூட்டாளிகள் திடீரெனக் கையில் தட்டுடன் காப்பு கட்ட வந்து நிற்பதைப் பார்த்த ஊர்ப் பெரியவர்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
பெரியவர் ஒருவர் கண்ணாடியைச் சரிசெய்தபடி, “என்னப்பா இது… அதிசயமா இருக்கு! ஊர்ல இருக்குற ரவுடிப் பயலுங்க எல்லாம் புதுசா வந்து வரிசையில நிக்கிறீங்க?” என்று கிண்டலாகக் கேட்க…நண்பர்களில் ஒருவன் மீசையை முறுக்கிக்கொண்டே, “இனிமே எல்லாம் அப்படித்தான் பெருசு. ஊர் காரியத்துல நாங்களும் முன்னாடி நிற்போம்!” என்று கெத்தாகச் சொன்னான்.
அதைக் கேட்ட பெரியவர்கள் சிரித்துக்கொண்டே, “அதானே பார்த்தேன்… இந்த அசுரக் கூட்டம் கோயிலுக்கு வந்தாலும் அடங்காதே! ஆனா சாமிக்கு முன்னாடி வந்தாச்சு, ஒழுங்கா அடங்கி நடங்கப்பா!” என்று சொல்லி, “ஆத்தா…நீதான் இவனுங்களை நல்லபடியா திருத்தணும்!” என்று கும்பிடு போட்டனர்.
அதன்பின்னர், கோயில் பூசாரி வேத மந்திரங்கள் முழங்க, ஒவ்வொருவருக்கும் முறைப்படி மஞ்சள் காப்புக் கட்டினார். காப்பு கட்டியதும்,மனதார வேண்டி விரதத்தைத் தொடங்கினர்.
மகன் ராயன் காப்பு கட்டியிருப்பதால், முதல் நாளே வீட்டைச் சுத்தப்பண்ணி மெழுகியிருந்தாள் தாய் மயிலா. அன்று விரதச் சாப்பாடு சமைக்க வேண்டும் என்பதால், அதிகாலையிலேயே எழிலை வீட்டிற்கு வரச்சொல்லி, அவளோடு சேர்ந்து சமையல் வேலைகளைச் செய்தாள்.
மதியம் கோயில் பூசைகள் முடிந்து வீட்டிற்கு வந்த ராயன், அங்கே தன் வீட்டிற்குள் எழில் நடமாடுவதை ஓரக்கண்ணால் பார்த்தான். ஆனால், எதுவுமே தெரியாதது போல அமைதியாக வந்து தரையில் உட்கார்ந்துகொண்டான்.
சமைத்த விரத உணவுகளைச் சாமிக்கு மருது ஐயா படைத்து முடித்ததும், ராயனுக்கு இலை போட்டு உணவைப் பரிமாறத் தொடங்கினர். எழில்தான் முன்னின்று அவனுக்குப் பரிமாறினாள். அவனது பிடிவாதமும், தன்னைப் பார்த்தும் பார்க்காதது போல இருக்கும் அந்த அமைதியும் அவளது நெஞ்சை ஆழமாகப் பிசைந்தது. ராயனும் எதுவும் பேசாமல் அமைதியாகச் சாப்பிட்டுவிட்டு, கைகழுவி விலகிச் சென்றான்.
அவன் சாப்பிட்டு முடித்ததும், “நீயும் வந்து உட்காரு தாயி… சாப்பிட்டுப்போ,” என்று மயிலா அன்போடு கூப்பிட…”இல்லைம்மா… எனக்கு ஹாஸ்பிடலுக்கு நேரமாச்சு. பர்மிஷன் கேட்டுட்டு வந்தேன். டியூட்டி முடிச்சு வந்து சாப்பிட்டுக்கிறேன்,” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.
அவள் பசியோடு போவதைக் கதவோரம் நின்று பார்த்தவனின் நெஞ்சில் ஏதோ செய்தது. உடனே அம்மாவிடம் வந்தவன், “மயிலு… நான் நம்ம காட்டுக்குத்தான் போறேன். அந்தச் சாப்பாட்டைக் கொஞ்சம் கட்டிக்குடு, போகும்போது அவகிட்ட கொடுத்துட்டுப் போறேன்,” என்றான்.
அதைக் கேட்டதும் மயிலாவின் மனம் குளிர்ந்தது. “நல்ல காரியம் பண்ணுனப்பா…” இனி அவ இவனு சொல்லாத கண்ணு காப்பு கட்டியிருக்க என்றவர், மனதிற்குள், “மலையாத்தா… அடுத்த திருவிழாவுக்கு என் பிள்ளையும் எழிலும் புருஷன் பொண்டாட்டியா உன் சன்னதியில வந்து நிக்கணும்டி தாயி! நீதான் அதுக்கு வழிவகுக்கணும்!” என்று கண்ணீர்மல்க வேண்டிக்கொண்டார்.
பின்னர் சமைத்த உணவுகளை ஒரு கேரியரில் போட்டு மகனிடம் நீட்ட, அதை வாங்கிக்கொண்டு ராயன் வாசலுக்கு வர, எதிரே வந்த நண்பர்கள், “என்னடா மாப்பிள்ளை… ஐயோ சாரி! என்ன சாமி… கையில தூக்குச்சட்டியோட கிளம்பிட்டீங்க?” என்று கிண்டலடித்தனர்.
“எழிலுக்குச் சாப்பாடு…” என்று ராயன் சொல்ல, நண்பர்கள் சிரித்தபடியே, “மாலையைப் போட்டுக்கிட்டு ஒன்னும் சொல்ல முடியாது… சரி சரி, விரதச் சாப்பாடா?” என்று அவனைப் புரிந்துகொண்டபடி பேசினர்.
அங்கிருந்து நேராக மருத்துவமனைக்கு வந்தவன், உள்ளே செல்லாமல் வாசலிலேயே நின்று அங்கிருந்த வாட்ச்மேனிடம் கேரியரைக் கொடுத்து, “எழில்கிட்டக் கொடுத்துடுங்க,” என்று சொல்லிவிட்டு, நேராகக் காட்டுப் பகுதிக்குக் கிளம்பிச் சென்றான்.
வாட்ச்மேன் அதைக் கொண்டுவந்து அவளிடம் கொடுக்க, “யாரு கொடுத்தா?” என்று ஆச்சரியமாகக் கேட்டாள்.
“நம்ம ராயன் தம்பிதான்ம்மா கொடுத்துட்டுப் போகுது,” என்று வாட்ச்மேன் சொன்னதும், எழில் சட்டென ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள்.தூரத்தில் தன் நண்பர்களோடு காட்டுப் பாதையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த ராயனின் கம்பீரமான உருவம் அவளது கண்ணில் பட்டது.
தன்மீது கோபமாக இருந்தாலும், தான் பசியோடு இருக்கக் கூடாது என்பதில் அவன் காட்டிய அந்தப் பாசமும் அக்கறையும் எழிலிவின் நெஞ்சைக் கரைய வைத்தன.நாட்கள் கடகடவென ஓடத் தொடங்கின. தினமும் காலை மற்றும் மதிய உணவை ராயனின் வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடுவதும், இரவு உணவை மட்டும் எழிலின் வீட்டில் சமைத்துச் சாப்பிடுவதுமாக அவர்களின் வழக்கம் மாறியது.
ஒரு இளம் பெண் தினமும் ஒருவன் வீட்டிற்குச் சென்று வருவது ஊருக்குள் தவறான பேச்சாக மாறிவிடக் கூடாது என்பதில் மருது மிகக் கவனமாக இருந்தார். அதனாலேயே, ஊர்ப் பெரியவர்களிடமும் தெரிந்தவர்களிடமும், “எழிலைத் தான் என் மகனுக்குப் பொண்ணு கேட்டு முடிச்சு வச்சிருக்கோம்… சீக்கிரமே கல்யாணம் தான்!” என்று முன்கூட்டியே செய்தியைப் பரப்பி வைத்திருந்தார்.
ஊர் மக்களும், “நம்ம வூட்டுக்கு ஏற்ற நல்ல குடும்பத்துப் பொண்ணுப்பா…” என்று பாராட்டியதால், யாரும் தவறாகப் பேச வழியில்லை.
திருவிழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே, தமிழரசி, அவளது கணவர் செபாஸ்டின், அவர்களின் குழந்தைகள் மற்றும் அப்பா அம்மாவோடு மேதினூருக்கு வந்து சேர்ந்தாள்.நீண்ட வருடப் பிரிவுக்குப் பிறகு அக்காவைக் கண்டதும், எழிலுக்குச் சந்தோஷத்தில் கண்களில் கண்ணீர் பெருகியது.
அக்காவை அணைத்துக் கொண்டு கண்ணீர்மல்க வரவேற்பளித்தவள், பரஸ்பரம் நலம் விசாரித்து முடிக்க, “வாங்க… எல்லாரும் மருது ஐயா வீட்டிற்குப் போயிட்டு வரலாம்,” என்றபடி ரவி அழைத்துப் போனார்.
பழங்கள் இருக்கும் பையோடு மருது ஐயாவின் வீட்டிற்குள் நுழைந்தனர். மருதுவும் மயிலாவும் அவர்களை, “வாங்க… வாங்க!” என்று இன்முகத்தோடு வரவேற்றனர்.
இயல்பான பேச்சு வார்த்தைகளுக்கு நடுவே, ரவி பெருமையோடும் நெகிழ்ச்சியோடும், “ஐயா… இது என்னோட பெரிய பொண்ணு தமிழரசி, இவர் என் மருமகன் செபாஸ்டின், இவங்க என் பேரப்பிள்ளைகள்…” என்று அறிமுகப்படுத்தி வைத்தார்.
“அப்படியா… ரொம்ப சந்தோஷம்!” என்று மருதையன் அவர்களுடன் அன்பாகப் பேசிக் கொண்டிருந்த அந்தச் சமயத்தில், வாசலில் புல்லட் வந்து நிற்கும் சத்தம் கேட்ட சிறிது நிமிடத்தில், உள்ளே நுழைந்தான் ராயன்!
பனி சிந்தும்…