Stories that touch hearts

Home  /  01. சீமா (பாறைக்குள் ஓர் பனித்துளி)  /  Chapter 22

CHAPTER 22

பனித்துளி 22

By seema · November 1, 2026

0

“ஆமாம்ல… நான் திரும்பக் கல்யாணம் பண்ணா இது எனக்கு இரண்டாவது கல்யாணம் தானே?” என்று நினைத்த கணத்திலேயே, ராயனது இதயம் மீண்டும் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியது.

தன் மீதே அவனுக்கு அருவருப்பும், பேரமைதியும் சூழ்ந்த ஒருவித வெறுப்பும் ஏற்பட்டது.ஆனால், அவனது மனதின் இன்னோர் ஓரம் மெல்லப் பேசி அவனுக்குச் சாதகமாக முட்டுக் கொடுத்தது:

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை ராயா… மனசார நீ இன்னும் எழிலை மட்டும்தானே நேசிச்சுக்கிட்டு இருக்க? அது ஏதோ விதி செஞ்ச சதி… ஒரு விபத்து மாதிரி நடந்துபோன விஷயம். அதை நினைச்சுக்கிட்டே வாழ்க்கையை தொலைச்சிடாதே!”இரண்டு பக்கமும் நியாயங்களைப் பேசித் தவிக்கும் மனசாட்சியின் போராட்டத்திற்கு நடுவே, ராயனுக்கு உண்மை சுடத் தொடங்கியது.

தான் எழிலிடம் காட்டும் உரிமையும், எல்லையை மீறி நடந்து கொள்ளும் விதமும் தவறுதான் என்பது உறைத்தாலும், காதல் என்ற அந்தக் கட்டுப்பாடு இல்லாத உணர்வு அவனை வசீகரித்துக் கொண்டே இருந்தது.

அவளை மறக்கவும் முடியாமல், அவளைத் தவிர வேறொரு பெண்ணை நினைத்துப் பார்க்கக்கூட முடியாமல் தவித்தான்.”எதுக்குடா எனக்கு மட்டும் இப்படியொரு சோதனையான நிலைமை?” என்று அந்த ஆளற்ற பரணில் சுற்றிலும் யாருமில்லாத தனிமையில் புழுங்கிப் புலம்பியவனின் கண்களிலிருந்து கட்டுக்கடங்காமல் கண்ணீர் வழியத் தொடங்கியது. அது கன்னங்களில் வழிந்து, அந்தப் பரணின் மூங்கில் மரங்களில் சொட்டுச் சொட்டாக விழுந்தது.

உண்மையாக நேசித்த ஒருவனுக்கு, இந்த உலகமும் விதியும் கொடுக்கும் ஒரே பரிசு இந்தத் தனிமையும், கண்ணீரும் மட்டும்தானா? விடை தெரியாத இந்தக் கேள்வியோடு, கம்பு கொல்லையின் நடுவே இருந்த அந்தப் பரணில், தன் காதலின் பாரத்தைச் சுமக்க முடியாமல் கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தான் இளந்திரையன்.

மலைக்காட்டின் நடுவே, அந்தப் பரணில் விடிய விடியத் தவித்துக் கொண்டிருந்த ராயனுக்கு, விடை தெரியாத இந்த மனப்போராட்டத்திற்கு ஒரே ஒரு வழிதான் தென்பட்டது.

மனிதர்களின் மனமும், சூழ்நிலைகளும் தனக்கு எதிராக நிற்கும்போது, தன் தலைமுறையைக் காக்கும் குலதெய்வமான மலையம்மன் மட்டுமே தனக்கு நல்வழி காட்ட முடியும் என்ற நம்பிக்கை அவனுக்குள் தளிர்த்தது.

விடிந்ததும் விடியாததுமாக, பரணிலிருந்து கீழே இறங்கியவன், சுனையில் குளித்துவிட்டு ஈர துணியோடு நேராகத் தன் குலதெய்வம் மலையம்மன் கோயிலை நோக்கி நடந்தான்.காலை நேரத்துப் பனிமூட்டத்திற்கு நடுவே, இயற்கை எழில் கொஞ்சும் அந்த மலையடிவாரத்தில் மலையம்மன் சன்னதி அமைதியாகக் காட்சியளித்தது.

கருவறையில், கம்பீரமும் தாய்மையும் ஒருசேர மிளிரும் ரூபத்தில் மலையம்மன் அந்த முன்னூறு வருடங்கள் கடந்த வைரம் பாய்ந்த மரத்தில் அருள்பாலித்துக் கொண்டிருந்தாள்.

கோயிலுக்குள் நுழைந்த ராயன், அம்மனின் பாதங்களில் தன் தலையை வைத்து நெடுஞ்சாண்கிடையாக விழுந்தவனோ கண்களை மூடி, தன் நெஞ்சில் பூட்டி வைத்திருந்த சகல பாரத்தையும் அம்மன் முன் இறக்கி வைத்தான்.

“தாயே… மலையம்மா! என் மனசுல என்ன கிடந்து துடிக்குதுன்னு உனக்குத் தெரியாதது இல்ல. என் உசிரு, என் நினைப்பு எல்லாமே எழில் மேல மட்டும்தான் இருக்கு. ஆனா, உலகம் என்னை இரண்டாம் தரக்காரன்னு தான் சொல்லும். ஏற்கெனவே ஒருத்தி கழுத்துல தாலி கட்டினவனுக்கு இன்னொரு கல்யாணமான்னு என் மனசாட்சியே என்னை சாட்டையால அடிக்குது ஆத்தா…” என்கும் போதுஅவன் குரல் தழு தழுத்து, கண்களிலிருந்து சொட்டுச் சொட்டாகக் கண்ணீர் அம்மனின் பாத பீடத்தில் விழுந்தது.

“எனக்கு இந்த இரண்டாவது கல்யாணம் தேவையா, இல்லையான்னு எனக்குத் தெரியல தாயே… நான் எழிலையேக் கல்யாணம் பண்ணிக்கிறது தர்மமா, அதர்மமான்னு நீதான் முடிவு பண்ணனும். உன்னோட சம்மதம் கிடைக்காம நான் அடுத்த அடியைக் கூட எடுத்து வைக்க மாட்டேன்.

நீதான் எனக்கு ஒரு வழி காட்டணும் ஆத்தா!”மனதில் உள்ளதை கொட்டியவன் தன் குலதெய்வத்தின் முன் ‘பூ வாக்கு’ கேட்பதற்காக, வெள்ளை மற்றும் சிவப்பு மலர்களை தனித்தனி காகிதத்தில் மடித்து, அம்மனின் பாதத்தில் வைத்து எடுக்கச் சொல்லி பூசாரியிடம் கொடுத்து விட்டு, “அம்மா மலையம்மா… எழிலையே நான் இரண்டாவதாகத் திருமணம் செய்து கொள்வது உனக்குச் சம்மதம் என்றால், அந்த வெள்ளை மலரைக் கொடுத்து எனக்கு உத்தரவு கொடு தாயே!” என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டு, அங்கிருந்த ஒரு சிறுவனை அழைத்து பூவை எடுக்கச் சொன்னார்கள்.

அந்தச் சிறுவன் சன்னதிக்கு முன் வந்து, மலையம்மனின் பாதத்தில் இருந்த மடிப்புகளில் ஒன்றை எடுத்து பூசாரியிடம் கொடுத்தான். பூசாரி அதை வாங்கிப் பிரித்துப் பார்த்தபோது… அதில் தூய்மையான வெள்ளை நிற மலர் சிரித்துக் கொண்டிருந்தது!

அவ்வளவுதான், ராயனின் மெய்சிலிர்த்தது!

அதுமட்டுமன்றி, அதே கணத்தில் கருவறையில் இருந்த மலையம்மனின் கையில் சாத்தப்பட்டிருந்த பிச்சிப்பூ மாலையிலிருந்து ஒரு பூ உதிர்ந்து, காற்றில் பறந்து வந்ததோ ராவணனின் கன்னத்தில் வந்து விழவும் மலையம்மனே நேரில் வந்து தன்னை ஆசீர்வதித்தது போல் உணர்ந்தான்.

இத்தனை நேரமாக அவனது மனதை ஆட்கொண்டிருந்த சகல குழப்பங்களும், குற்றவுணர்ச்சியும் அந்த நொடியில் பனி போல் விலகின. தன் குலதெய்வமே இந்தத் திருமணத்திற்குச் சம்மதித்து விட்டாள்; இனி எந்த உலகத்தின் பேச்சுக்கும், எந்தச் சந்தேகத்திற்கும் தன் மனதில் இடமில்லை என்ற மாபெரும் தெளிவும் தைரியமும் அவனுக்குள் பிறந்தன.

“நன்றி ஆத்தா!” என்று கண்ணீரோடு அம்மனை மீண்டும் வணங்கிவிட்டு, நிமிர்ந்த நெஞ்சத்தோடும், தெளிவான மனதோடும் கோயிலை விட்டு வெளியேறினான்.

இந்த இடைப்பட்ட சில நாட்களிலேயே, ராயனின் அந்த அதிகாரத்திற்குள்ளும், நக்கலான பேச்சுக்கும் பின்னே இருக்கும் ஆழமான ஈர்ப்பு தன் மனதிற்குள் காதலாகத் துளிர்விடத் தொடங்கியிருப்பதை எழில் இன்னும் உணரவே இல்லை.

அவனைக் காணாத போது தேடுவதும், அவன் கூப்பிடும்போது நெஞ்சம் படபடப்பதையும் வெறும் ‘கோபம்’ என்று மட்டுமே அவள் நினைத்துக் கொண்டு தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டிருந்தாள்.

அவளது மனப்போராட்டம் இப்படிப் போய்க்கொண்டிருக்க, எதிர்பாராத விதமாக நாகர்கோவிலில் இருந்து அவளுக்கு ஒரு அழைப்பு வந்தது. அங்கு நடைபெறவிருக்கும் ஒரு வார கால ‘சிறப்பு மருத்துவ முகாமிற்கு’ எழில் உடனடியாகச் செல்ல வேண்டியிருந்தது.

ராயனை விட்டு, இந்தச் சூழலை விட்டுச் சில நாட்கள் தள்ளி இருப்பது நல்லதுதான் என்று நினைத்தவள், உடனே கிளம்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்தாள். மயிலா அம்மாவிடமும் மருதுவிடமும் சொல்லிவிட்டு, தன் துணிமணிகளை எடுத்துக்கொண்டு நாகர்கோவிலுக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டாள்.

நாகர்கோவிலின் டவுனில் அமைந்திருந்த அந்த அரசு கிராமத்துப் ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவ முகாமின் முதல் நாள் பரபரப்போடு தொடங்கியது.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அரசு கிராமத்துப் மருத்துவமனைகளில் இருந்தும் செவிலியர்களும் மருத்துவர்களும் அங்கே ஒன்று கூடியிருந்தனர்.

முகாமின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த வரவேற்புப் பகுதியில் பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. வெள்ளைச் சீருடையில் வந்திருந்த செவிலியர்களின் வருகையால் அந்த மருத்துவமனை வளாகமே ஒரு புதிய பொலிவையும் சுறுசுறுப்பையும் பெற்றிருந்தது.

எழில் தன் பயணப் பையோடு வளாகத்திற்குள் அடியெடுத்து வைத்தபோது, அங்கே ஒரு புதிய புத்துணர்ச்சியான சூழல் அவளை வரவேற்றது. கூட்டத்திற்கு நடுவே, இதற்கு முன்பு மண்டல அளவிலான கலந்தாய்வு கூட்டங்களில் பார்த்த சில தெரிந்த முகங்கள் அவளது கண்ணில் பட்டன.

“ஹே… எழிலரசி! நீயும் இந்த கேம்பிற்கு வந்திருக்கியா?” என்று பக்கத்து ஊர் ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து வந்திருந்த மேரி அக்கா ஓடிவந்து அன்போடு விசாரிக்க, எழிலின் முகம் மலர்ந்தது.

“ஆமாங்காக்கா… நேத்து நைட்தான் மெசேஜ் வந்துச்சு, உடனே கிளம்பி வந்துட்டேன். நீங்க நல்லா இருக்கீங்களா?” குழந்தைகள் எப்படி இருக்காங்க அக்கா? என்று நலன் விசாரித்தாள்.அவர்களோடு மேலும் சில செவிலியர்கள் இணைய, அனைவரும் ஒருவரையொருவர் விசாரித்துக்கொண்டனர்.

வந்திருந்த செவிலியர்களுக்குப் பணிப் பொறுப்புகள் பிரிக்கப்பட்டன. காய்ச்சல் பரிசோதனை, ரத்த அழுத்தப் பரிசோதனை, தடுப்பூசி முகாம் என தனித்தனிப் பிரிவுகள் ஒதுக்கப்பட்டன.

பரபரப்பு சூழ்ந்த அந்த டவுனில், காலை நேரக் குளுமையோடு மருத்துவ முகாமிற்கான அழைப்பு மணிகள் ஒலிக்கத் தொடங்கின.செய்தி அறிந்து சுற்றுவட்டாரக் கிராமங்களிலிருந்து வயதானவர்களும், தாய்மார்களும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு மெல்ல மருத்துவமனை நோக்கி வரத் தொடங்கினர்.

அங்கிருந்த சக ஊழியர்களின் கலகலப்பான பேச்சும், புதிய சூழலும் எழிலின் கவனத்தை திசைதிருப்பினாலும், அந்த நெரிசலான சூழலுக்கு நடுவேயும் அவளது மனதின் ஏதோ ஒரு மூலையில்… ஊரில், அந்த அடர்ந்த தாடி மீசைக்குள் ஒற்றைப் புன்னகையோடு நிற்கும் ராயனின் உருவம் லேசாக வந்து போவதை அவளால் தவிர்க்க முடியவில்லை.

நாகர்கோவிலில் எழில் முகாமில் பிஸியாக இருக்க, இங்கே ஊரில் காட்டு வேலையில் மூழ்கியிருந்தான் ராயன்.

மரவள்ளிக்கிழங்கு வயலில் நண்பர்களோடு சேர்ந்து களையும் கிழங்கும் எடுத்துக்கொண்டிருந்தான். கையில் வேலையைச் செய்தாலும், ராயனின் பார்வையும் கவனமும் அடிக்கடி எழிலின் நினைவுகளை நோக்கியே சென்று கொண்டிருந்தன.

சில நாட்களாகவே நண்பனின் மாற்றத்தைக் கவனித்த சொக்கன், கையில் இருந்த களையெடுக்கும் அரிவாளை ஆட்டியபடியே உரத்த குரலில் பாட்டுப் பாடத் தொடங்கினான்.”மச்சான் பார்வை எல்லாம்… எதிர் வீட்டு ஜன்னலோரம் ரோஜா செடி மேலதான் இருக்கு போலயே!”அவனது பாட்டைக் கேட்டு மற்ற நண்பர்கள் பொங்கிச் சிரித்தனர்.

மூக்கையன் உரக்கச் சிரித்தபடியே, “ஆமாடா மாப்பு! நர்சம்மா இந்த ஊருக்கு வந்ததுல இருந்து என் பங்காளியைக் கையிலேயே பிடிக்க முடியலை!” என்றான்.

ராயன் அவர்களைப் பார்த்துப் போலியாக முறைத்து, “என்னடா மூக்கையா… களையெடுக்க வந்த இடத்துல ரொம்பத்தான் நக்கலா?” என்று அதட்டினான்.

“நக்கலெல்லாம் இல்லைடா மச்சி… மூணு வருஷமா முறுக்கிக்கிட்டு இருந்த பையன், இப்ப என்னடான்னா இவ்வளவு குழைஞ்சுகிட்டு இருக்கான்! அதான் எங்களால தாங்க முடியலை,” என்று சிரித்த சொக்கன், “மச்சான்… இந்த வாட்டியாவது தங்கச்சியைப் புடிச்சுப் போட்டுடுடா, விட்டுடாத!” என்றான் அக்கறையும் கேலியுமாக.

“அந்த முடிவோடதான்டா இருக்கேன்… ஆனா அவ ரொம்பச் சிலுத்துக்கிறாடா!” என்றாலும் ராயனின் அடர்ந்த மீசைக்குள் லேசான புன்னகை அரும்பியது.

“அவ சிலுத்துக்கிட்டா என்னடா… உன் அசுரத்தனத்துக்கு முன்னாடி அவ எம்மாத்திரம்? சீக்கிரம் காரியத்தை முடி!” என்று நண்பர்கள் அவனைக் கேலி செய்ய, ராயனால் தன் சிரிப்பைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.மாலை வீட்டிற்கு வத்தவனுக்கு அவள் ஊரில் இல்லாத விஷயம் தெரிந்தது.

மரவள்ளிக்கிழங்கு வயலில் நண்பர்களின் கேலி கிண்டல்களோடு வேலை விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்க, ராயனின் மனமோ நாகர்கோவிலில் நர்சம்மா என்ன செய்து கொண்டிருப்பாள் என்ற நினைவிலேயே சுற்றிக் கொண்டிருந்தது.

அவள் போய் இதோட ஐந்து நாட்கள் கடந்திருந்தது.அன்றைய நாள் வேலைகள் முடிந்து மாலையானதும், வீட்டிற்கு வந்த ராயனுக்கு எழிலைப் பார்க்காமல் இருக்கவே முடியலை.

வழக்கமாக மாடியில் ஜன்னல் வழியாக அவள் வீட்டையே பார்த்துக்கொண்டிருக்கும் அவனுக்கு, பூட்டிக்கிடக்கும் அந்த வீடு ஒருவிதத் தனிமையைக் கொடுத்தது.

சரியென்று போனை எடுத்தவன், அவளுக்கு போன் போடுவதா வேண்டாமா என்று சிறிது நேரம் யோசித்தான். ‘நாம கூப்பிட்டா இவ இன்னும் கெத்து காட்டுவாள்’ என்று நினைத்தாலும், மனசு கேட்காமல் அவளது எண்ணிற்கு அழைத்தான்.

மெடிக்கல் கேம்ப் முடிந்து அன்றைய நாளின் அறிக்கைகளைத் தயார் செய்து கொண்டிருந்த எழிலின் போன் அதிர்ந்தது. திரையில் ‘இளன்’ என்ற பெயர் மின்னியதும், அவளது நெஞ்சம் ஒரு நொடி தடதடவென அடித்துக்கொண்டது.

சட்டெனப் போனை எடுக்காமல், இரண்டு முறை ரிங் போன பிறகே நிதானமாக அட்டென்ட் செய்து”ஹலோ…” என்று சாதாரணமாகக் கேட்க…”என்னடி… போனை எடுக்க இவ்வளவு நேரமா? நாகர்கோவில் போனதும் பெரிய ஆள் ஆயிட்டியோ?” என்று எடுத்தவுடனேயே தன் கம்பீரமான குரலில் அதட்டினான் ராயன்.

அவனது குரலைக் கேட்டதும் எழிலுக்குள் எழும் இனம் புரியாத சந்தோஷத்தை மறைத்துக்கொண்டு, “நான் வேலையா இருக்கேன்… எதுக்கு இப்ப போன் பண்ணீங்க?” என்று லேசான கடுமையோடு கேட்டாள்

.”வேலையா இருக்கியா? இல்ல உனக்கு பார்த்த லூசு பயல் கிட்ட பேசி சிரிச்சுக்கிட்டு இருக்கியா?” என்று அவன் வழக்கம் போலப் பொறாமையில் வார்த்தையைக் கொட்ட, அதைக் கேட்ட எழிலிற்குப் பற்றி எரியும் கோபம் வந்தது.

“அறிவிருக்கா உங்களுக்கு? என்ன பேச்சு பேசுறீங்க? நான் இங்க மெடிக்கல் கேம்ப் வேலையா வந்திருக்கேன்! உங்ககிட்ட பேசி என் நேரத்தை வீணடிக்க விரும்பல…” என்று சொல்லிவிட்டுச் கோபத்தில் போனைத் துண்டித்தாள்.

மறுமுனையில் போன் கட் ஆனதும் ராயனுக்குக் கோபம் தலைக்கேறியது.

“என்கிட்டயே போனை வைக்கிறியாடி… இருடி வர்றேன்!” என்று பற்களைக் கடித்தவன், அடுத்த நொடியே கீழே வந்தவன் அம்மா வண்டிக்கு ஆயில் வாங்கணும்னு சொல்லி இருந்தேன் அது வந்துடுச்சாம். நான் போய் டவுன்ல வாங்கிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு தன் புல்லட்டை ஸ்டார்ட் செய்தான்.

மாலை நேரத்துக் குளிரிலும், அடர்ந்த காட்டு வழியிலும் புல்லட்டை நாகர்கோவிலை நோக்கி அதிவேகமாக விரட்டினான்.

அவளது கோபமும், அவனது இந்த அசுரத்தனமான பிடிவாதமும் அடுத்து என்னப் புயலைக் கிளப்பப் போகிறதோ!

மலையிலிருந்து வேகமாக வந்தாலும், பாதையின் ஆபத்தை உணர்ந்து நிதானமாகவே வண்டியை ஓட்டிக்கொண்டு மலைப்பாதையைக் கடந்து நாகர்கோயில் டவுனுக்கு வந்து சேர அவனுக்கு ஒன்றரை மணி நேரம் பிடித்தது.நேராக அங்கிருந்த அரசு தலைமை மருத்துவமனையின் வாசலுக்குச் சென்று புல்லட்டை நிறுத்தினான்.

அங்கே முகாம் முடிந்து செவிலியர்கள் அனைவரும் தங்களின் வேலைகளை முடித்துக்கொண்டு வெளியே கிளம்பிக் கொண்டிருப்பது தெரிந்தது.

அந்தப் பெருங் கூட்டத்தில் எழிலை எங்கே தேடுவது என்று அவன் யோசித்துக்கொண்டிருந்தபோதே, கையில் இருந்த போனை எடுத்து அவளது எண்ணிற்கு அழைத்தான்.

அதே நேரத்தில், அவளுக்குத் தெரிந்த ஒரு செவிலியரிடம் சிரித்துப் பேசிக்கொண்டே வெளியே வந்தாள் எழில்.

பையிலிருந்த போன் அடிக்கும் சத்தம் கேட்கவே, திரையில் ராயனின் பெயர் மின்னியதைப் பார்த்ததும் சட்டென அழைப்பைத் துண்டித்தாள்.

மருத்துவமனை வாசலில் நின்று கொண்டிருந்த ராயனின் கூர்மையான விழிகள் அதைத் துல்லியமாகப் பார்த்துவிட்டன. “வாடி மகளே…” என்று பற்களைக் கடித்தவன், வண்டியைச் சற்றுத் தள்ளி நிறுத்திவிட்டு அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.

கூட வந்த செவிலியரிடம், “சரிங்க அக்கா… அடுத்த கேம்ப்ல பார்க்கலாம்,” என்று சொல்லி விடைபெற்ற எழில், இடதுபக்கம் இருந்த பேருந்து நிலையத்தை நோக்கி நடை போட்டாள்.

ஆனால், வழியில் புல்லட்டின் மேல் கம்பீரமாக அமர்ந்திருந்த ராயனைக் கண்டதும் அதிர்ச்சியில் அப்படியே திடுக்கிட்டு நின்றாள்.

அவளது திகைப்பைக் கண்டு மீசையை முறுக்கியவன், “ஒழுங்கா வந்து வண்டியில ஏறுடி!” என்றான் அதட்டலாக.

“முடியாது! நான் வரலை!” என்று அவள் முகத்தைத் திருப்பிப் போக முயல…”நீயா வந்து ஏறுறியா… இல்ல நானே வந்து உன்னைத் தூக்கி வண்டியில உட்கார வைக்கவா?” என்று அவன் ஒரு படி இறங்கி மிரட்டினான்.

“எதுக்கு இப்போ இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க? எனக்குத்தான் உங்க மேல அப்படி ஒன்னும் விருப்பம் இல்லையே!” என்று எழில் கோபமாகச் சொன்னாள்.

அவளது வார்த்தைகளைக் கேட்டு லேசாக நகைத்தவன், “உனக்கு விருப்பம் இருக்கோ இல்லையோ… அதை அப்புறம் பேசிக்கலாம்! உனக்காகத்தான் மலையில இருந்து இறங்கி வந்து நிற்கிறேன், ஒழுங்கா வா!” என்றான்.

“நான் ஒன்னும் உங்களை இங்க வரச் சொல்லலையே?” என்று அவள் விதண்டாவாதமாகப் பேசினாள்.

ராயனின் கண்கள் சிவந்தன.

அவளருகே நெருங்கி, “ஒழுங்கா வந்து உட்காருடி.மணி ஆறாயிடுச்சு… மலைக்குப் போற கடைசி பஸ்ஸும் போயிடுச்சு. இனிமே உங்க அப்பன் தான் புதுசா பஸ் வாங்கி விடணும்! வா… பத்திரமா உன்னை ஊர்ல கொண்டு போய் விடுறேன்,” என்றான் உறுதியான குரலில்.

ஆறு மணிக்கு மேல் மலைக் கிராமத்திற்குப் பேருந்து கிடையாது என்பது எழிலிற்கும் நன்றாகத் தெரியும். வேறு வழியே இல்லாமல், அவனை முறைத்துக்கொண்டே வண்டியின் பின்சீட்டில் ஏறி அமர்ந்தாள்.

முன்னே அமர்ந்திருக்கும் அவனது பரந்த முதுகைப் பார்த்தவளுக்குக் போனில் பேசிய வாக்குவாதங்கள் நினைவுகள் வர, “முன்னாடி வந்தா முட்டுறீங்க… பின்னாடி போனா உதைக்கிறீங்க! என்னதான் பண்ணச் சொல்றீங்க என்னை?” என்று சலிப்போடும் கோபத்தோடும் கத்தினாள்.

வண்டியை ஸ்டார்ட் செய்து, பக்கவாட்டுக் கண்ணாடியில் அவளது சிவந்த முகத்தைப் பார்த்து லேசாகப் புன்னகைத்தவன் “உன்னால என் நெஞ்சுக்குள்ள ஏற்பட்ட காயத்துக்கு நீதான்டி மருந்து போடணும்… அதுக்கு ஒரே வழி, நீயே என்னை கல்யாணம் பண்ணிக்கிறதுதான்!” என்று ஆழமான குரலில் சொல்லிவிட்டு, புல்லட்டின் ஆக்சிலரேட்டரை முடுக்கினான்.

அவனது அந்தத் தீர்க்கமான வார்த்தைகளும், கம்பீரமான குரலும் எழிலின் மனதிற்குள் ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வலைகளைப் பாய்ச்சி, அவளது உதடுகளை மௌனத்தில் பூட்டியது.

அந்த இரவின் அமைதியில், புல்லட்டின் சத்தத்தோடு இருவரின் இதயத் துடிப்பும் ஒன்றிணைந்து மலையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது.

பனி சிந்தும்…

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!