Stories that touch hearts

Home  /  ரோஜா ரோஸ் (பாலைவனத்து முல்லை)  /  Chapter 52

CHAPTER 52

முல்லை – 52

By Roja Roslin · October 29, 2026

0

நாகா ப்ரோ. அங்க நிக்குறது கதிர் அங்கிள் தானே.“ என்று KV. கேட்க,

அவன் கேள்வியில் கதிரின் முகம் மாறியது.

“டேய். எங்க கதிர் உனக்கு அங்கிளா” என்று கோவமாக கேட்டாள் தனம்.

“ஆமா ஆன்ட்டி. அவர் எனக்கு அங்கிள் தான்” என்றான் KV.

“டேய் என்ன லந்தா.“ என்று கதிர் கோபத்துடன் கேட்க.

“தம்பி. நீ வா நம்ம போகலாம்” என்றாள் முல்லை.

“அம்மாடி முல்லை. வா வா.“ என்று முல்லையின் பெயரை அழைத்துக்கொண்டே மண்டப வாசலை நோக்கி ஓடி வந்தார் பாண்டியன்.

“மாமா. எப்படி இருக்கீங்க” என்று முல்லை தன் தாய் மாமனை நலம் விசாரிக்க.

“இன்னும் உயிரோட தான் இருக்கேன்” என்ற பாண்டியனின் மனதில் எல்லையில்லாத கவலை இருந்தது.

தன் மாமனின் இந்த நிலைக்கு தானும் ஒரு காரணம் என்று அறிந்து இருந்த முல்லை அந்த இடத்தில் அமைதி காத்தாள்.

“அப்பா. வாங்க போகலாம். அண்ணி உள்ள வாங்க” என்று ரோஜா முல்லையை அழைக்க.“என்னை கூப்பிட மாட்டிங்களா” என்று கேட்டான் KV.

ஆறடி உயரம். தலையில் குடுமி, ஒற்றை காதில் நீல நிற கடுக்கன், வெள்ளி காப்பு, வெள்ளை சட்டை காக்கி பேண்ட், விழிகளை மறைத்து இருக்கும் கூலர்ஸ் என்று திரைப்பட நாயகனை போல இவர்கள் முன்னே நிற்கும் ஆடவனின் பெயர் KV என்கிற கந்த வேலன்.

KV பார்வதியின் தங்கை மகன்.

அதாவது முல்லைக்கு தம்பி முறை வேண்டும்.

இத்தனை வருடம் பார்வதியுடன் ஒட்டு உறவு இல்லாமல் இருந்தார் KVயின் அம்மா.

ஆனால் ஒரு மாத காலத்துக்கு முன்னே பார்வதிக்கு ஏற்பட்ட விபத்தை கேட்டு மீண்டும் இவர்களின் சொந்தம் தொடர்ந்தது.

KV கடந்த பத்து நாட்களாக முருகனின் வீட்டில் தங்கி இருப்பவன். முல்லையை சொந்த சகோதரியை போல பார்த்து கொள்வான்.

கதிர் முல்லை வாழ்வில் ஏற்பட்ட சண்டை என்னவென்று தெரியாமல். தன் அக்கா மீது உள்ள அதீத பாசத்தால் KV கதிரை மனதார வெறுத்தவன். பார்க்கும் இடத்தில் எல்லாம் கதிரிடம் சண்டைக்கு முட்டிக்கொண்டு நிற்பான்.

இப்போதும் அதே போல ரோஜாவின் நிச்சியதுக்கு வருகை தந்து இருக்கும் முல்லைக்கு துணையாக KV வந்து இருக்க. கதிரோ இவர்கள் இருவரையும் முறைத்து பார்த்தப்படி தான் நின்று இருந்தான்.

“வாங்க அண்ணி. அந்த ரூமுக்கு போகலாம் வாங்க” என்று ரோஜா முல்லையை மணப்பெண் அறைக்கு அழைத்து செல்ல. தூரத்தில் இருந்து மீனா இந்த காட்சியினை பார்த்துக்கொண்டு தான் இருந்தாள்.

“என்ன கதிர் இது. முல்லைக்கு ரொம்ப திமிர் தான் போல. உன்னை பார்த்தும் பார்க்காதது போல இவ்வளவு ராங்கா போறா” என்று தனம் கதிரின் மூளையை சூடாக்கிக்கொண்டு இருக்க, “நண்பா. நீ பந்தி நடக்குற இடத்துக்கு போ. நான் இங்க நிக்குறேன்” என்றான் நாகராஜன்.

கதிரின் இதயம் முல்லையின் வருகையால் மகிழ்ச்சி அடைந்து இருந்தாலும் அவளின் பாரா முகம் அவனை இம்சைப்படுத்த.

வேகமாக மண்டபத்திற்குள் நுழைந்தவனின் கண்கள் முல்லையை தேடியது.

“என்ன கதிர். யாரை தேடுற. உன் பொண்டாட்டி இந்த நிச்சியதுக்கு வந்து இருக்காளா என்ன.?” என்று சொந்தங்களில் ஒருவர் கேட்க.

“ஏன். அவ வரலைனா. நீ இங்க இருந்து சாப்பிடாம போக போறியா. இல்லை தானே. போ. போய் வந்த வேலையை பாரு” என்று அந்த நபரை கதிர் கடிந்துகொண்டவன். மீண்டும் முல்லையை தேடினான்.

“என்ன மாமா. பந்தி நடக்குற இடத்துல இருக்காம இங்க என்ன பண்ணுறிங்க” என்று மீனா கேட்க.

“முல்லை. முல்லை எங்கன்னு பார்க்க வந்தேன்” என்றான் கதிர்.

“மாமா. உங்களுக்கு அறிவே இல்லையா.

அவ தான் உங்கள வேணான்னு சொல்லிட்டு போயிட்டாளே. இன்னும் ஏன் நீங்க அவளையே தேடுறீங்க” என்று கடுப்பாக கேட்டாள் மீனா.

அவள் கேள்விக்கு செவிக்கொடுக்காமல் கதிர் தன்னவளை காண காத்து இருக்க.

“பொண்ணையும் பையனையும் மேடைக்கு அழைச்சிட்டு வாங்க” என்றார் ஐயர்.

“ஏய் மீனா. போடி. இந்த குடும்பத்தோட மூத்த மருமகளா. உன் நாத்தனாரை மேடைக்கு அழைச்சிட்டு வா” என்று கஸ்தூரி தன் மகளின் உரிமையை நிலைன்னாட்ட.

மீனா மணபெண்ணின் அறைக்குள் நுழைந்தவள். ரோஜாவை அழைத்து வந்து மேடையில் அமர வைத்தாள்.

அந்த அறையில் இருந்து ரோஜா வெளியேறியதற்குப் பிறகும் முல்லை வருகை தராமல் இருக்க, யாரும் அறிந்திடாத வகையில் கதிர் மணப்பெண்ணின் அறைக்குள் நுழைய முயன்றவனின் முன்னே KV வந்து நின்றதும், “டேய் வழியை விடு” என்று கோபமாக கர்ஜித்தான் கதிர்.

“இது பொண்ணுங்க ரூம் தானே. இங்கே நீங்க எதுக்கு போறீங்க” என்று KV கேட்க, “அதெல்லாம் உன்கிட்ட சொல்லனும்னு எனக்கு அவசியமில்லை. வழியை விடு” என்று கதிர் கோபமாக அவனை தள்ளிவிட, அதே சமயம் முல்லை மணப்பெண்ணின் அறையில் இருந்து வெளியே வந்தவளின் கோபப்பார்வை கதிரை சுட்டெரித்தது.

தன் இதயம் முழுதும் அவள் மீது காதலை கொண்டிருந்தாலும், அந்த இடத்தில் தன் உணர்வுகளை வெளிப்படுத்த தெரியாத கதிரோ, “என்ன முறைக்கிற. எங்க வீட்டுல இருந்து போய் ரொம்ப சந்தோஷமா இருக்கியா” என்று கேட்டு வைக்க,

“அக்கா. இவர்கிட்ட என்ன பேச்சு. வாங்க நம்ம வந்த வேலையை பார்க்கலாம்” என்ற KV. தன் அக்காவின் கையை பிடித்து அங்கிருந்த இருக்கையில் அமர வைத்தான்.

“ரவி. நல்லா சிரிச்ச மாதிரி நில்லு டா. அப்போ தான் போட்டோல அழகா இருப்ப” என்று தனம் தன் கையில் உள்ள கைபேசி மூலம் புகைப்படம் எடுத்தப்படி தன் தம்பியிடம் பேசிக்கொண்டு இருக்க.

கதிரின் பார்வை முல்லையை தவிர்த்து வேறு எந்த காட்சியையும் காண மறுத்தது.

, , , , , , , , , ,

“மாப்புளை வீட்டு பக்கத்து பெரியவங்க வந்து சபையில உக்காருங்க” என்று ஐயர் சொல்ல. தனத்தின் அம்மா சரஸ்வதியின் அக்காவும் மாமாவும் சபையில் வந்து அமர்ந்தார்கள்.

“பொண்ணோட வீட்டுல இருந்தும் பெரியவங்க இங்க வந்து உக்காருங்க” என்று ஐயர் சொல்ல.

“யோவ். நீ வா நம்ம போய் நிக்கலாம்” என்று கஸ்தூரி சபையில் ஏற போகும் நேரம்.

“இரு கஸ்தூரி. அம்மாடி முல்லை. நீயும் கதிரும் போய் சபையில உக்காருங்க” என்றார் பாண்டியன்.

அனைவரின் முன்னிலையிலும் பாண்டியனின் வாயில் இருந்து இப்படி ஒரு வார்த்தை வந்து இருக்க.“நானா. .“ என்று செய்வதரியாமல் நின்று இருந்தாள் முல்லை.

“என்ன நானான்னு கேக்குற.

ஜீவா இருந்திருந்தா மீனாவும் ஜீவாவும் நின்னு இருப்பாங்க. அதான் அவன் இல்லையே. போ. போய் உன் புருஷன் கூட நின்னு, உன் நாத்தனாருக்கு பண்ண வேண்டிய நல்லதை பண்ணு மா போ” என்று பாண்டியன் சொல்ல. முல்லை தயக்கத்துடன் கதிரை பார்த்தாள்.

“அண்ணா என்ன நீங்க. அப்போ பெரியவங்கன்னு நாங்க எதுக்கு இருக்கோம்” என்று கஸ்தூரி விதண்டாவாதம் பேச.

“அடியே. கூறு இல்லாதவளே. ரோஜா நம்ம மருமக. நம்மள விடவே கதிரும் முல்லையும் தான் ரோஜாவுக்கு அப்பா அம்மா ஸ்தானத்துல இருந்து இதெல்லாம் பண்ண முடியும். நீ சத்த நேரம் அமைதியா நில்லு” என்று ஜெகதீஸ் கஸ்தூரியை அடக்க.“பாப்பா. கதிர் கூட போய் மேடையில நில்லு மா” என்றான் நாகராஜன்.

யார் என்ன சொன்னாலும் முல்லையின் மனம் கதிரின் அருகே நின்று, இந்த உரிமையை ஏற்றுக்கொள்ள தயங்கிய நிலையில்.“அதான் கதிர் கூட முல்லைக்கு நிற்க்க விருப்பம் இல்லையே. பேசாம நீங்க மட்டும் தனியா போய் நில்லுங்க மாமா” என்று பாண்டியணை பார்த்து சொன்னாள் தனம்.

தனத்தின் வார்த்தையை கேட்டு கதிருக்கு கோவம் எழுந்த நிலையில், அவன் முல்லையை மேலும் அழுத்தமாக முறைக்க.“என் அக்கா நிக்க மாட்டாங்கன்னு அவங்க சொன்னாங்களா. அக்கா நீங்க போய் என்ன பண்ணணுமோ பண்ணுங்க போங்க” என்று KV சொல்ல.

“ம்.“ என்று தலை அசைத்து மேடை ஏறி நின்றாள் முல்லை.

தன் மகளின் அருகே பாண்டியனின் மருமகள் ஸ்தானத்தில் முல்லை நின்று இருப்பதை பார்த்த பாண்டியனுக்கு மறைந்து போன அவரது தங்கை வள்ளியே உயிருடன் நிற்பது போல எண்ணம் தோன்ற. அவரது விழிகளும் ஈரமானது.

“நண்பா. அதான் பாப்பா போய் நிக்குதே. போ நண்பா, நீயும் போய் நில்லு” என்று நாகராஜன் சொல்ல.“ போடா. போய் நில்லு” என்ற பாண்டியனின் குரலை கேட்டு கதிரும் மேடை ஏறியவன். முல்லையின் அருகே ஜோடியாக நிற்கும் காட்சியினை பார்த்து மீனா தனம் என்று இருவரின் கண்களிலும் பொறாமை கொழுந்து விட்டு ஏரிந்தது.

ஐயர் சிலவற்றை வாசித்து. சபையில் சில வார்த்தைகளை பேசியவர். இறுதியில் இரு வீட்டாரின் சம்மதத்தோடு ரவி ரோஜா இருவரின் திருமணத்தை அடுத்த முகூர்த்ததில் நடத்த தேதி குறித்து கொடுத்த நிலையில். கதிரும் முல்லையும் ஒன்றாக சேர்ந்து மாப்பிளை வீட்டாரிடம் இருந்து தம்புலத்தை மாற்றிக்கொண்டார்கள்.

“அப்புறம் என்ன. நிச்சயம் நல்ல முறையில் நடந்து முடிந்துடுது. வாங்க எல்லோரும் போய் விருந்து சாப்பிடலாம்” என்று சரஸ்வதி விஷேஷத்துக்கு வந்துள்ள அனைவரையும் பந்தி நடக்கும் இடத்துக்கு அனுப்பி வைக்க.

“டேய் ரவி. நீ ரோஜாவை அழைச்சிட்டு மாடிக்கு போ. நான் கதிரை அழைச்சிட்டு வரேன்” என்றாள் தனம்.

மேடையில் நிற்கும் ரவியோ, “ வா சாப்பிட போகலாம்” என்று ரோஜாவை வேண்டாம் வெறுப்பாக அழைக்க. அதே மனநிலையில் ரோஜாவும் அவனுடன் செல்ல முற்பட்டவள்.“அண்ணி நீங்களும் வாங்க” என்று முல்லையின் கையை பிடித்து தன்னோடு அழைத்தாள்.

“இல்ல ரோஜா. நான் மாமாகிட்ட சொல்லிட்டு கிளம்புறேன். நீ போய் சாப்பிடு.“ என்ற முல்லை மேடையில் இருந்து கிழே இறங்க. அவளை கோவபார்வை பார்த்து இருந்த கதிரின் அருகே சென்று மீனாவும் தனமும் அவனிடம் பேச்சுக்கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்.

யார் என்ன செய்தாலும் எதையும் கண்டுக்கொள்ளவே கூடாது என்ற முடிவில் சிவங்கையில் இருந்து குண்ணக்குடி வந்து இருந்த முல்லை.“மாமா நான் கிளம்புறேன்” என்று பாண்டியனிடம் சொல்ல.

“என்னமா நீ. இவ்ளோ தூரம் வந்துட்டு சாப்பிடாம போனா எப்படி. டேய் கதிர். இங்க வா. நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா போய் சாப்பிடுங்க போங்க” என்றார் பாண்டியன்.

தன் தந்தையின் வார்த்தையில் வில்லில் இருந்து கிளம்பிய அம்பாக கதிர் முல்லையை நோக்கி வர,

“இல்ல மாமா. நான் இன்னைக்கு விரதம். நான் சாப்பிட மாட்டேன்” என்றவளின் வார்த்தையை கேட்டு பாண்டியனுக்கு வருத்தம் தான் ஏற்பட்டது.

“சரி மாமா. நான் போய்ட்டு வரேன்” என்று முல்லை சொல்ல.

“பாண்டியன் மாமாவுக்கு செம்ம பல்பு. ம். நல்லா வேணும் அவருக்கு. எப்ப பாரு அந்த முல்லை தான் முக்கியம் அவருக்கு” என்று மீனா சொல்ல.

“அதான் அவளே இவங்க யாரும் முக்கியம் இல்லைனு காட்டிட்டாளே. சரி வாங்க நம்ம இந்த நாளை ஸ்வீட் எடுத்து கொண்டாடலாம்” என்ற தனம். மீனாவுடன் பந்தி நடக்கும் இடத்துக்கு செல்ல. ரோஜா அதற்குள் நாகராஜனை பார்த்து, “வாத்தி கூட அண்ணியை பேச வையுங்க” என்று கண் ஜாடை காட்டியவள். அவளும் ரவியுடன் பந்தி நடக்கும் இடத்துக்கு சென்றாள்.

ரோஜா சுட்டி காட்டிய கண் ஜாடையின் அர்த்தத்தை புரிந்து கொண்ட நாகராஜன் முல்லையின் அருகே நின்றிருந்து KVயிடம் பேச்சி கொடுப்பதை போல அவனை அங்கிருந்து அழைத்துச் செல்ல, கதிரும் முல்லையும் மட்டும் அங்கே தனியே நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இத்தகைய சமயத்தில் முல்லை மட்டும் தனிமையில் இருப்பதை கதிர் தனக்கு சாதகமாக்கி கொண்டவன், அவள் சுதாரிக்கும் முன்னே முல்லையின் கையைப் பிடித்து அங்குள்ள சின்ன அறைக்குள் அவளை இழுத்து செல்ல, “கைய விடுங்க” என்று கத்தினாள் முல்லை.

அவளின் குரலைக் காதில் வாங்காத கதிரோ, வேகமாக அந்த அறையின் கதவை அடித்து சாத்த, “என்ன பண்றீங்க. கதவை திறங்க” என்று கோபமாக கத்தியபடி முல்லை கதவை திறக்க போனவளின் கையைப் பிடித்து இழுத்து சுவற்றோடு சுவற்றாக நிறுத்தினான் கதிர்.

அவனின் இத்தகைய செயலில் மேலும் கோபம் கொண்ட முல்லை, “என்ன. ரவுடித்தனம் பண்றீங்களா” என்று கேட்க.

“என்னடி. பேச்சு எல்லாம் திமிரா இருக்கு. நானும் போனா போது. போன போதுன்னு விட்டா ஓவரா ஆடுற. என்ன கொழுப்பு ஏறிப் போச்சா” என்று கேட்க.

“ஆமா. கொழுப்பு தான். இப்போ அதுக்கு என்ன பண்ண போறீங்க” என்று அவளும் பதிலுக்கு அவனிடம் தைரியமாகவே எதிர்த்து நின்று கேள்வி கேட்டாள்.

“ஹாங். கொழுப்பு இருக்கும் தானே, ஏன் இருக்காது. என் தொல்லை இல்லாம உங்க அப்பா வீட்டுல நிம்மதியா இருக்கல்ல, அதான் கொழுப்பு கூடி போச்சு உனக்கு” என்றான் கதிர்.

அவனின் வார்த்தையில் கடுப்பான முல்லை.“ உங்ககிட்ட பேச எனக்கு பிடிக்கல. கதவை திறங்க” என்றவள் மீண்டும் அறையின் கதவை திறக்க போக.

“என்ன சொன்ன. என்கிட்ட பேச பிடிக்கலையா. ஓ. அப்போ என்கிட்ட பேசாம வேற யார் கூட.“ என்று கதிர் வார்த்தையை முடிக்கும் முன்னே.

“நான் உங்கள மாதிரி இல்ல. ரைட்ல ஒன்னும் leftல ஒன்னும் வச்சிக்கிட்டு அரட்டை அடிக்க, மரியாதையா கதவ திறங்க” என்றாள் முல்லை.

இதுவரை தன் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாத முல்லையின் இந்த அவதாரம் கதிரை மேலும் கோவப்படுத்த.

“நீ ரொம்ப பேசுற, சரி. அதெல்லாம் விட்டு தள்ளு. அதான் உன் வீட்டுல இருந்து இங்க வந்துட்டல்ல. மறுபடியும் நீ உன் அப்பன் வீட்டுக்கு போக வேண்டாம்ம், வா நம்ம வீட்டுக்கு போகலாம்” என்ற கதிர் முல்லையின் கையை பிடித்து தன் வசம் அழைக்க. அவளோ கோவமாக அவன் கையை தட்டி விட்டாள்.

“என்ன நம்ப வீடா. எது நம்ம வீட்டு. அது உங்க வீடு, என் வீடா இருந்து இருந்தா நீங்க என் அம்மா அப்பாவை அர்த்த ராத்திரில வீட்டை விட்டு போக சொல்லி இருந்துருக்க மாட்டிங்க.

இன்னைக்கு நானும் அவங்களுக்காக இப்படி அழுதுகிட்டு இருந்து இருக்க மாட்டேன்” என்ற முல்லையின் கண்கள் ஆதங்கத்தில் கலங்கியும் போனது.

அவளை அந்த இடத்தில் அவன் சமாதானம் செய்து இருந்தால் கூட முல்லையின் இழகிய மனம் அவனை மன்னித்து ஏற்றுக்கொண்டு இருக்க வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் விதண்டாவாதம் எண்ணம் படைத்த கதிரோ.

“போதும் நிறுத்துறியா, இப்போ என்னாச்சுன்னு இப்படி ஒப்பாரி வைக்கிற. ஏன்? உன் அப்பாவும் சித்தியும் உயிரோட தானே இருக்காங்க. என்னமோ அவங்க ரெண்டு பேரும் போய் சேர்ந்த மாதிரி.“ என்று கதிர் தன் வார்த்தையை முடிக்கும் முன்னே, “ச்சி வாயை மூடு” என்று அடக்கி வைத்த கோவம் வெளிப்பட்டு கத்தி இருந்தாள் முல்லை.

“என்ன மனுஷன் நீ. தாலி கட்டின ஒரே காரணத்துக்காக என் விருப்பமே இல்லாம என்கூட வாழ்ந்தது மட்டும் இல்லாம. அர்த்த ராத்திரியில, குடி போதையில என் அப்பா அம்மாவை உன் வீட்டை விட்டு வெளிய போக சொல்லுவ.

அவங்களும் நான் நல்லா வாழ்ந்தா போதுமுன்னு மனச கல்லாக்கிகிட்டு உன் வீட்ட விட்டு வெளிய போய். அவங்க கார் accident ஆகி. இன்னைக்கு என் அப்பா கை கால் வராம சக்கர நாற்காலில உக்காந்து இருக்காரு. என் சித்தி.

இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா உடம்பு தெறிட்டு வராங்க. இதெல்லாம் நடந்தது உன்னால தான். ஆனா நீ. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம அவங்க சாகல தானேன்னு கேக்குறியே.

உண்மையாவே உனக்கு மனசாட்சின்னு ஒன்னு இருக்கா. இல்ல நீ சரியான காட்டானா” என்று முல்லை ஒரு மாத காலம் கதிரிடம் கேட்க நினைத்து தன் மனதில் புதைத்து வைத்த கேள்வியை எல்லாம் கேட்டு வைக்க,

இந்த நொடி வரை தன் மீதும் தவறும் உள்ளது. விபத்து என்பது விதியினால் ஏற்பட்டது தான் என்று நினைத்தாலும், அந்த விபத்துக்கு தானும் ஒரு காரணம் என்று உணராத கதிரோ,

“ஏய். யாரை பார்த்து காட்டான்னு சொல்லுற.“ என்றவன் அதே கோவத்தோடு முல்லையின் கன்னத்தில் ஒரு அரை வைத்தான்.

அவன் அடித்த வேகத்தில் முல்லை தொப்பன்று கீழே விழுந்தவளை பார்த்து.

“அன்னைக்கும் இப்படி தான் தேவையில்லாததை எல்லாம் பேசி என்னை கோவப்படுத்தி என்னை மிருகமா ஆக்கி என் வாயாலையே உன் அப்பாவ வீட்டை விட்டு வெளியே போக சொல்ல வச்சி இருக்க.

இதோ இன்னைக்கும் கூட. வாடி நம்ம வீட்டுக்கு போகலாமுன்னு சொன்னா இப்பவும் தேவையில்லாத கதையை தான் பேசுற.

நான் தெரியாம தான் கேக்கறேன். இப்படியே இன்னும் எத்தனை நாளைக்கு தான் டி என் காதலை புரிஞ்சிக்காம என்னை கஷ்ட்டப்படுத்தி அதுல நீ சந்தோஷம் காண போற” என்று கதிர் முதல் முறையாக அவன் மனதில் முல்லையின் மீது அவனுக்குள்ள காதலை அவள் எதிரே நின்று மனதார ஒற்றுக்கொள்ள.

முல்லையோ கீழே விழுந்தவள் இந்த நொடி வரை அப்படியே தரையில் சரிந்து தான் கிடந்தாள்.

தொடரும்

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!