தன் மனதில் இருந்த காதலை முல்லையிடம் எடுத்து சொன்னவன். மேற்கொண்டு அங்கே நிற்க மனமில்லாமல் அந்த அறையின் கதவை திறந்துகொண்டு வேகமாக வெளியேறி இருந்தான்.
இதே சமயம். காரணமே இல்லாமல் நாகராஜன KV யிடம் பேசிக்கொண்டு இருக்க.“ நேரமாகுது அண்ணா. நாங்க கிளம்புறோம்” என்றவன் தன் கார் நிற்கும் இடத்துக்கு வந்தான்.
“அக்கா. அக்கா எங்க காணோம்” என்று KV தன் கார் அருகே தான் முல்லை நின்று இருப்பாள் என்று எண்ணி அவளை அழைக்க.“ஒரு வேள முல்லை கதிர் கூட பேசிக்கிட்டு இருக்கும்” என்றான் நாகராஜன்.
“என் அக்கா ஏன் அவர்கூட பேசணும். அதான் அவரு வேணான்னு முடிவு பண்ணி முருகன் பெரியப்பா வீட்டுக்கு போயிட்டாங்களே.“ என்று KV கேட்க.“புருஷன் பொஞ்சாதி பிரச்சனை எல்லாம் ஒரு விஷயம் இல்ல தம்பி. இன்னைக்கு அடிச்சிப்பாங்க நாளைக்கு சேர்ந்துப்பாங்க” என்றான் நாகராஜன்.
“அப்போ என் அக்கா உள்ள தான் இருப்பாங்களா” என்று கேட்டுக்கொண்டே KV மண்டபத்துக்குள் நுழைய.
இதே சமயம் கஸ்தூரி, தனம் ஆகிய இருவரும் பந்தி நடக்கும் இடத்தில் இருந்து கையில் குளோப் ஜாமுன்னுடன் கீழே இறங்கி வந்தார்கள்.
“எப்படியோ. இந்த ரோஜாவை என் வீட்டுக்கு மருமகளாக்கி, அவ கொட்டத்தை நான் அடக்குறேன் பாருங்க” என்று தனம் சொல்ல.“ அக்கா அக்கா, “ என்று மீண்டும் முல்லையை அழைத்தான் KV.
“இவன் என்ன நடு மண்டபத்துல நின்னுகிட்டு அக்கா அக்கானு காக்கா ஓட்டிகிட்டு இருக்கான், இரு என்னனு கேப்போம்” என்று கஸ்தூரி சொல்ல.“ஐயோ, அவன்கிட்ட நான் பேச மாட்டேன், அவனுக்கு ரொம்ப வாயி போல” என KVயை பார்த்து சொன்னாள் தனம்.
“என்னவிடவா அவனுக்கு வாயி அதிகம். அதுக்கெல்லாம் வாய்ப்பில்ல. நீ வா நம்ம போய் என்னனு கேப்போம்” என்ற கஸ்தூரி KVயை நெருங்க, “அக்கா எங்க போன நீ” என்று மீண்டும் KV முல்லையை தேடினான்.
“இரு கந்தா. பாப்பா எங்கன்னு நான் பார்க்குறேன்” என்ற நாகராஜன் அங்குள்ள அறையின் கதவை தட்ட. அது தாழ் இடமால் இருந்ததால் சட்டென்று கதவு திறந்துகொண்டது.
“பாப்பா.“ என்று முல்லையை அழைத்துக்கொண்டே நாகராஜன் உள்ளே நுழைந்தவன் தரையில் சரிந்து கிடந்த முல்லையை பார்த்து, “ ஐயோ பாப்பா” என்று பதறியதும், அவனின் குரலை கேட்டு அங்குள்ள அறைக்குள் நுழைந்தான் KV.
முல்லை தரையோடு தரையாக விழுந்துக்கடக்க.“அக்கா.“ என்று பதறிய KV. முல்லையை மடி மேல் படுக்க வைத்தவன் “அக்கா என்னை பாரு. என்னாச்சு உனக்கு. என்னை பாரு அக்கா” என்று அழுத KVயின் குரலைக்கேட்டு கஸ்தூரி, தனம் மற்றும் இவர்களுடன் சேர்ந்து மீனா, ரோஜாவும்
உள்ளே நுழைந்தார்கள்.
“அண்ணி.“ என்று ரோஜாவும் அலற.
“நகருங்க நகருங்க” என்ற நாகராஜன் அவன் கையில் இருந்த தண்ணீரை முல்லையின் முகத்தில் தெளித்ததும் மயக்கம் தெளிந்து சோர்வாக எழுந்து அமர்ந்தாள் முல்லை.
“அக்கா என்னாச்சு. நீ ஏன் இந்த ரூமுக்கு வந்த” என்று KV கேட்டதும்,
“எல்லோரும் கொஞ்சம் வெளிய போங்க. அண்ணி வாங்க. வந்து Chairlல உக்காருங்க” என்றாள் ரோஜா.
மயக்கம் தெளிந்த முல்லைக்கு சற்று முன் கதிர் தன்னை அறைந்தவரை மட்டுமே நினைவில் இருக்க. மேலும் கண்கள் கலங்கியவள்.“ வேலா. வா நம்ம போகலாம்” என்றதும்.
“முல்லை. முல்லை என்னாச்சு மா” என்று பதற்றத்துடன் அங்கே வந்தார் பாண்டியன்.
“ஒண்ணுமில்ல மாமா. சாப்பிடல. அதான் மயக்கம் வந்துடுது” என்று முல்லை சொன்னதும். சட்டென்று பாண்டியன் முல்லையின் நாடியை பிடித்து பார்க்க. சுற்றி உள்ள அனைவரும் பாண்டியணை கேள்வியாக பார்த்தார்கள்.
முல்லையும் புரியாமல் பாண்டியனை காண. அவரின் முகமோ கவலைகளை மறந்து கலையாக மாறியது.
================================
“அப்பா. அண்ணிக்கு என்னாச்சு” என்று ரோஜா கேட்க.
“எல்லாம் சந்தோசமான விஷயம் தான் ரோஜா. நம்ம குலம் விருக்த்தியாகி இருக்கு” என்று பாண்டியன் சொன்னதும் ரோஜா தன் அண்ணியை கட்டி அணைத்து முல்லையின் நெற்றியில் இதழ் பதித்தாள்.
பாண்டியனின் வார்த்தையை கேட்டு ரோஜா நாகராஜ் என்று இருவரும் மகிழ்ச்சி அடைய, தனம், மீனா, கஸ்தூரி என்று மூவரின் முகமும் முத்தி போன முருங்கைக்காயாக மாறி இருந்தது.
“அம்மாடி முல்லை. எனக்கு. எனக்கு எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா. நீ. நீ எனக்கு எவ்ளோ பெரிய மகிழ்ச்சியை கொடுத்து இருக்க.“ என்று பாண்டியனும் தன் மருமகளின் கையை பிடித்து கண்கள் கலங்க. முல்லைக்கோ அவள் தலையில் இடி இறங்கியது போல தான் இருந்தது.
“டேய் நாகா. கதிர் எங்கடா. எங்க அவன். அவன கூப்பிடு. அவன் அப்பாவாக போறான். கூப்பிடு டா அவனை” என்று பாண்டியன் தன் மகனை அழைக்க.
“அண்ணா அண்ணா இரு. இப்போ என்னாச்சுன்னு நீ இப்படி தலை கால் புரியாம குதிகிற. ஆமா இது என்ன கூத்தா இருக்கு. இவ ஒரு மாசமா கதிர் கூட வாழவே இல்லையே. அப்புறம் எப்படி இவ வயத்துல கதிரோட புள்ள இருக்கும்” என்று கஸ்தூரி கேட்டு வைக்க. முல்லையின் கண்களில் கண்ணீர் பெருகியது.
“ஏய். யார பத்தி என்ன பேசுற.“ என்று கோவம் கொண்ட KV கஸ்தூரியின் கழுத்தை பிடிக்க போக.“இந்தா பா தம்பி. அவங்க கேக்குறதுல என்ன தப்பு இருக்கு. கதிர் முல்லைக்குள்ள எப்போ பாரு சண்ட தானே நடக்குது. அப்படி இருக்க, இதெல்லாம் எப்படி சாத்தியமுன்னு அவங்க நினைக்கிறாங்க” என்று தனமும் கேவலமாக பேசியதும்.
“ஏய். நீ எல்லாம் பொம்பளயா” என்று கோபத்துடன் கேட்டான் KV.
“ஏங்க. என்ன பேசுறீங்க நீங்க. இன்னும் ஒரு வார்த்தை என் அண்ணியை பத்தி தப்பா பேசுனா கூட உங்களுக்கு மரியாதை கெட்டுடும்” என்று ரோஜா தனத்தை எச்சரிக்க.“என்ன நீ. என் எதிர்ல என் அக்காவை மரியாதை இல்லாம பேசுற” என்று ரவி ரோஜாவிடம் சண்டைக்கு நின்றான்.
“தம்பி தம்பி விடு டா. கத்திரிக்கா முத்துனா கடை தெருவுக்கு வந்து தானே ஆகணும்” என்று தனம் முல்லையை பார்த்து ஏளனமாக சொல்ல.
“ஏய். கத்திரிக்கா மாங்கான்னு என் அக்காவை குத்திக்காட்டி பேசுனன்னு வையென். நான் பொம்பள பொறி கடலன்னு பார்த்துகிட்டு இருக்க மாட்டேன். உன் வாயை வடக்கு வாசல் பக்கம் திருப்பி விட்டுடுவேன்” என்று KV முல்லைக்காக பரிந்து பேசினான்.
“டேய். என்ன அக்காவை மரியாதை இல்லாம பேசுற” என்று ரவி KV யிடம் வம்புக்கு போக.“இதுக்கு எல்லாம் எவண்டா மரியாதை குடுப்பான். அடுத்த வீட்டு புருஷன் பொஞ்சாதி சண்ட போட்டா ஸ்வீட் சாப்பிட்டு கொண்டாடுற ஈன புத்தி இருக்குற உன் அக்காவுக்கு நான் மரியாதை தரணுமா” என்று பதிலுக்கு KVயும் ரவியை பார்த்து எகுறினான்.
இவர்கள் அனைவரும் அவர்களுக்குள் மாறி மாறி சண்டையிட்டு க்கொண்டு இருக்க.
“ஐயோ கொஞ்சம் எல்லோரும் சும்மா இருங்க. அம்மாடி முல்லை. நீ வா மா நம்ம வீட்டு போகலாம். வா டா. வா போகலாம்” என்று பாண்டியன் முல்லையின் கையை பிடித்து அவரோடு அழைக்க.
முல்லையோ அவர் கையை பொறுமையாக தன் வசமிருந்து எடுத்து விட்டாள்.
முல்லையின் செய்கையில் பாண்டியனின் முகம் மாறி போக.“அண்ணி. யார் என்ன பேசினா என்ன. நீங்க வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம். இந்த விஷயம் மட்டும் வாத்திக்கு தெரிஞ்சா உங்க ரெண்டு பேருக்குள்ள இருக்குற எல்லா சண்டையும் மறந்து அவரு உங்கள தல மேல தூக்கி வச்சி ஆட ஆரம்பிச்சிடுவாரு” என்றாள் ரோஜா.
“என்னடி இது. மறுபடியும் இந்த முல்லை அந்த வீட்டுக்கு வந்துடுவாளா” என்று ரோஜாவின் வார்த்தையை கேட்டு பயந்து போன கஸ்தூரி தன் மகள் மீனாவின் காதை கடிக்க. மீனாவோ கதிர் முல்லைக்குள் காதலே இல்லாமல் முல்லை எப்படி அவள் கருவில் பிள்ளையை சுமக்கின்றாள் என்ற கேள்வி அவளுக்குள்ளும் எழுந்தது.
“டேய் நாகா. கதிர் எங்க டா” என்று மீண்டும் பாண்டியன் தன் மகனை தேட.
“அவன் போன் எடுக்கல ஐயா, அவன் எங்கன்னு தெரியல” என்றான் நாகராஜன்.
“சரி அவன் வரும் போது வரட்டும். முல்லை நீ வா நம்ம வீட்டுக்கு போகலாம்” என்று பாண்டியன் மீண்டும் முல்லையை அழைக்க.“நான் வரல மாமா. தம்பி வா போகலாம்” என்ற முல்லை சோர்வுடன் எழுந்து வாசலில் நிற்கும் காரை நோக்கி நடந்தாள்.
“அண்ணி. ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிறிங்க. வாங்க அண்ணி வீட்டுக்கு போகலாம்” என்று ரோஜாவும் முல்லையை அழைக்க, முல்லையோ யார் பேசுவதையும் காதில் வாங்காதவள் வேகமாக நடந்து சென்று காரில் ஏறி அமர்ந்ததும் KV காரை சிவகங்கையை விரட்டினான்.
பாண்டியன் எவ்வளவு எடுத்து சொல்லியும் முல்லை மீண்டும் கதிரின் வீட்டிற்கு செல்லாமல் தன் தந்தையின் வீட்டிற்கு சென்றதை நினைத்து பாண்டியனின் மனதில் மேலும் கவலை எழ.
“வயத்துல பிள்ளை வெச்சி இருக்கும்போது கூட அண்ணி இப்படி பிடிவாதம் பிடிக்கிறது சரியில்ல. எனக்கு இவங்கள நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று வாய் விட்டு புலம்பினாள் ரோஜா.
“ஆமாமா இப்போ புலம்பி என்ன ஆக போகுது. ஆரம்பத்திலிருந்தே நீங்கதான் இந்த முல்லைக்கு ஜால்ரா அடிப்பீங்க. நீங்க வேணா பாருங்க, முல்லை வயதில் இருக்கிற குழந்தையை வச்சுதான் கதிருக்கும் முல்லைக்கும் பிரச்சனையே வந்து இருக்கு. இந்த முல்லை கதிருக்கு தெரியாம என்னமோ.“ என்று கஸ்தூரி அவர் வார்த்தையை முடிக்கும் முன்னே “போதும் நிறுத்து கஸ்தூரி” என்று கத்தினார் பாண்டியன்.
“இதுக்கு மேல என் மருமகளை பற்றியோ, இந்த வீட்டுடைய வாரிசை பற்றியோ யாராவது நாக்கு மேல பல்ல போட்டு ஒரு வார்த்தை பேசினால் கூட மரியாதை கெட்டுடும்.
முல்லைக்கும் கதிருக்கும் இருக்கிற பிரச்சனையை அவங்க பேசி தீர்த்துப்பாங்க.
ஆனால் முல்லை வயிற்றில் வளர்வது இந்த குடும்பத்தோட வாரிசு. இதுக்கு மேல யாரும் இந்த விஷயத்தை பேசக்கூடாது.
டேய் நாகராஜ். கதிர் எங்க இருந்தாலும் அவனை உடனே வீட்டுக்கு வர சொல்லு. இன்னைக்கு சாய்ங்காலம் நம்ம கிளம்பி போயி முறைப்படி முல்லையை நம்ப வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வரலாம்” என்ற பாண்டியனின் வார்த்தையை கேட்டு நாகராஜன் கதிரை தேடி மண்டபத்திலிருந்து வெளியேறி இருந்தான்.
================================
KVயின் காரில் முல்லை பிரமை பிடித்ததை போல அமர்ந்து இருக்க.
“அக்கா.“ என்று அழைத்தான் KV.
“மண்டபத்துல் நடந்த எந்த விஷயத்தையும் அப்பா அம்மாகிட்ட சொல்லிடாத வேலா” என்று முல்லை சொல்ல.
“இதெல்லாம் மறைக்கிற விஷயமா” என்று கேட்டான் KV.
“ம். எனக்கு புரியுது. ஆனா இப்போ சொல்ல வேண்டாம்ம்” என்ற முல்லை தன் வலது கையை அவள் அடி வயிற்றின் மீது வைத்தவளுக்கு இவள் சம்மதம் இல்லாமல் கதிர் அவளுடன் கொண்ட கூடல் தான் நினைவுக்கு வந்தது.
அவன் மேல் காதல் கொண்ட இதயம் இப்போது அவன் மீது வெறுப்பை மட்டுமே தத்தெடுத்து கொண்டது.
அழுது அழுது அவள் கண்ணீரில் கண்ணீரும் வற்றி விட்டது.
அவள் வாழ்கை தான். அவள் விரும்பிய வாழ்கை தான். ஆனால் இந்த வாழ்கை இப்போது அவளுக்கு இன்பத்தை கொடுக்க வில்லை.
அவள் விரும்பிய மாமன் மகனை திருமணம் செய்துகொண்டாலும் அவனுடன் மனம் ஒத்து போய் தான் இவர்களின் இல்லற வாழ்வை ஆரம்பிக்க வேண்டும் என்று எண்ணியவளுக்கு இந்த நொடி வரை அது எட்டா கனியாக தான் இருக்கிறது.
அவளை பொறுத்தவரை காதலே இல்லாமல் தான் கதிர் தன்னுடன் கூடல் கொண்டான் என்று எண்ணுபவளுக்கு அவள் வயிற்றில் வளரும் குழந்தை சுகத்தை கொடுக்காமல் சுமையை தான் கொடுத்தது.
தன் எதிர்காலமே எதை நோக்கி நகர போகிறது என்று குழப்பத்தில் இருந்தவளுக்கு இப்போது தன்னோடு சேர்ந்து தன் பிள்ளையின் எதிர்காலமும் என்னவாகுமோ என்ற பயம் முதல் முறை எழுந்தது.
முல்லை இப்படியாக குழப்பத்தில் இருக்க. KV விரட்டிய கார் சிவகங்கையை அடைந்து இருந்தது.
================================
இதே சமயம் கதிரை தேடி நாகராஜன் வெளியே சென்று இருக்க.
பாண்டியனோ அவர் வீட்டின் பூசை அறையில் சாமிக்கு மஞ்சள் துணியில் பணம் முடித்து வைத்தவர்.
“இந்த குடும்பத்தோட முதல் வாரிசு பொண்ணு தான் பிறக்கணும்” என்று கை கூப்பி இறைவனை வணங்கிக்கொண்டு இருந்தார்.
ஜீவாவின் அறையில் மீனா ஆழ்ந்த யோசனையில் அமர்ந்து இருந்தவள். எதையோ யோசித்தவளாக பெருமுசச்சுடன் வெளியே எழுந்து வந்து, “மாமா. நான் ஒரு வாரம் அம்மா வீட்டுல போய் தங்கிட்டு வரேன்” என்று சொல்ல.
முல்லை மீண்டும் இங்கே வரும் நேரம் மீனா இல்லாமல் இருப்பதே நல்லது என்று எண்ணிய பாண்டியன், “சரி போயிட்டு வா” என்றார்.
இதே சமயம் முல்லை தன் வீட்டுக்குள் நுழைய.“என்ன மா முல்லை. இன்னைக்கு நைட் உன் புகுந்த வீட்டுல தங்கிட்டு வந்து இருக்காலமே?” என்று கேட்டார் பார்வதி.
“பெரியம்மா. அக்கா ஏன் அங்க தங்கனும்” என்று KV கேட்க.
“பின்ன. கல்யாணம் பண்ணிக்கொடுத்துட்டா பெண்களுக்கு புகுந்த வீடு தானே நிரந்தரம்” என்றார் பார்வதி.
“ஆமா பெரிய புகுந்த வீடு. அங்க அக்காவை அங்க கஸ்தூரி எப்படி எல்லாம் தப்பா பேசினாங்க தெரியுமா” என்று KV கேட்க, “ஏன் ஏன். அவ ஏன் முல்லையை தப்பா பேசணும்” என்று பார்வதி கோவமாக கேட்டார்.
எங்கே தான் கருவுற்ற செய்தியை KV இங்கே சொல்லிவிட போகிறான் என்று பயந்த முல்லை.
“வேலா. சும்மா இருக்க மாட்ட. அம்மா. கஸ்தூரி சித்தியை பற்றி நமக்கு தெரியும் தானே. நீங்க இதெல்லாம் பெரிசுப்படுத்தாதீங்க. சரி அப்பாவை நாளைக்கு காலையில செக் அப் அழைச்சிட்டு போகணும். நீங்களும் எங்க கூட வாங்க. உங்களுக்கும் அப்படியே Full செக் அப் பண்ணிடலாம்” என்றாள் முல்லை.
“என்ன நேரமோ என்னமோ. அன்னைக்கு மட்டும் இந்த accident ஆகலைனா, இந்நேரம் என் பொண்ணு அவ புகுந்த வீட்டுல சந்தோசமா வாழ்ந்துட்டு இருப்பாள்” என்று முருகன் அவர் அறையில் இருந்து புலம்பும் சத்தம் கேட்டு முல்லை தன் தந்தையின் அறைக்குள் நுழைய. முருகனோ ஒரு கை இரண்டு கால் வராத நிலையில் கட்டிலில் படுத்து இருந்தார்.
ஆம். ஒரு மாத காலத்திற்கு முன்னதாக கதிர் வீட்டில் இருந்து அர்த்த ராத்திரியில் வெளியே வந்த முருகனும் பார்வதியும் பெரிய விபத்தை சந்தித்தவர்கள்.
இன்று முருகன் கை கால் வராமல் சக்கர நாற்காலியில் அவர் வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டு இருக்க. பார்வதியும் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக அவர் உடல் நிலை தெறி எழுந்து நடக்க ஆரம்பித்து இருந்தார்.
முருகனின் இந்த நிலைமைக்கு காரணம் கதிர் தான் என்று எண்ணிய முல்லை. அன்றில் இருந்து இன்று வரை கதிர் வீட்டுக்கே செல்லாமல் இருக்க. இன்று அவள் கருவுற்ற செய்தியை கூட தன் தந்தையிடம் இருந்து மறைத்து இருந்தாள்.
“ஏன்மா முல்லை. நான் தான் இப்போ சரியாகிட்டு வரேனே. இனியாவது நீ உன் புகுந்த வீட்டுக்கு போய் உன் வாழ்க்கையை வாழ ஆரம்பி மா” என்று முருகன் சொல்ல.
“அதுக்கெல்லாம் வாய்ப்பில்ல அப்பா. நீங்க வாங்க நான் உங்கள பாத்ரூம் அழைச்சிட்டு போறேன்” என்று தன் தந்தையை அந்த இடத்தில் தாயாக மாறி கவனித்துக்கொண்டாள் முல்லை.
================================
அன்றைய தினம் நேரம் இரவு 8pm மணியை கடந்தும் கதிர் வீடு வந்து சேராமல் இருக்க.
“அப்பா. இந்த வாத்தி எங்க தான் போனாரு. நாகாவுக்கு போன் பண்ணாலும், அவரும் போனை எடுக்க மாட்டுறாரு” என்ற ரோஜா. மீண்டும் தன் கைபேசி வாயிலாக நாகராஜனை அழைத்தாள்.
இவள் அழைப்புக்கும் எந்த பதிலும் இல்லாமல் போக. நேரம் யாருக்காகவும் காத்துக்கிடக்காமல் மறுநாள் காலை பொழுதை அடைந்து இருந்தது.
காலை 8 மணி அளவில் குளித்து முடித்து பாண்டியனும் ரோஜாவும் கதிரின் வருகைக்காக காத்து இருக்க. இவர்களின் எதிர்பார்ப்புப்பை பூர்த்தி செய்யும் விதமாக நாகராஜனின் கார் இவர்கள் வீட்டின் வாசலில் வந்து நின்றதும்.
“அப்பா வாத்தி வந்துட்டாரு” என்று குரல் கொடுத்தாள் ரோஜா.
இரவெல்லாம் குடித்து குடித்து மயக்கத்தில் இருந்த கதிரை கை தாங்கலாக அழைத்து வந்து கிணத்தடியில் அமர வைத்து தண்ணீரை இரைத்து ஊற்றினான் நாகராஜன்.
தன் மகனின் நிலையை பார்த்து கோவம் கொண்ட பாண்டியன். அதே கோவத்தோடு வீட்டுக்குள் செல்ல.
“நாகா. இந்தாங்க வாத்தியோட மாத்து துணி. நீங்க ரெண்டு பேரும் குளிச்சிட்டு வீட்டுக்கு வாங்க. நம்ம சாப்பிட்டுட்டு அண்ணி வீட்டுக்கு போகலாம்” என்று ரோஜா சொல்ல. நாகராஜன் சம்மதமாக தலை அசைக்க. இன்னுமும் அரை போதை மயக்கத்தில் தான் இருந்தான் கதிர்.
சில நிமிடங்கள் நடந்த நிலையில் நாகராஜன் கதிரை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் வந்ததும் ரோஜா அவர்கள் இருவருக்கும் காலை உணவை பரிமாறினாள்.
“நண்பா. சாப்பிடு டா” என்று நாகராஜன் சொல்ல.“எனக்கு வேண்டாம்ம்” என்று முகத்தை திருப்பிகொண்டான் கதிர்.
“ஏன் வேணாம். நான் வேணும்னா சாராயம் க்கொண்டு வந்து வைக்கவா” என்று ரோஜா கேட்க. தன் தங்கையை அடிபட்ட பார்வை பார்த்தவன்.“ அம்மா. நான்.“ என்று அவன் தரப்பு நியாயத்தை சொல்ல வரும் முன்னே அவன் முன் தன் கையை நீட்டி அவன் வார்த்தையை தடுத்தாள் ரோஜா.
“நீங்க எதுவும் சொல்ல வேணா வாத்தி. உங்க கவலை எனக்கு புரியாம இல்ல. ஆனா அதுக்காக இப்படி குடிச்சிகிட்டே இருந்தா உங்க பிரச்சனை இருக்க இருக்க பெருசா தான் ஆகுமே தவிர. ஒரு துளி கூட குறையாது” என்று ரோஜா சொல்ல. அதே சமயம் பாண்டியன் அவர் அறையில் இருந்து வெளியே வந்தார்.
“இத்தனை வருஷமா நீ ஒரு குடிக்காரன், கோவக்காரன், முரடன் இப்படி தான் நீ உன்னை அடையாள படுத்திகிட்டே இருக்க. ஆனா அந்த கடவுளா பார்த்து உனக்கு நீ ஒரு புருஷனா இருக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தும். அந்த வாழ்க்கையை வாழ துப்பு இல்லாம ஏன் இப்படி குடிச்சி குடிச்சு நாசமா போற?” என்று பாண்டியன் கேட்க. கதிரின் பதில் மௌனமாக தான் இருந்தது.
“இங்க பாருங்க வாத்தி. உங்க மேல எனக்கு நிறைய கோவம் வருத்தமெல்லாம் இருக்கு. ஆனா அதெல்லாம் மீறி நான் இப்போ ரொம்ப சந்தோசமா இருக்கேன்” என்று ரோஜா சொல்ல. தன் தங்கையின் மகிழ்ச்சிக்கு என்ன காரணம் என்று கதிர் யோசித்த வண்ணம் அவளை பார்த்தான்.
“என்ன அப்படி பாக்கறீங்க. ஆமா நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன். ஏன் தெரியமா” என்று தன் வார்த்தையை ஒரு நொடி நிறுத்தியவள்.“ஏன்னா நான் அத்தையாக போறேன், நம்ம அப்பா தாத்தாவாக போறாரு. நீங்க அப்பாவாக போறீங்க” என்று முகம் மலர்ந்து ரோஜா சொன்ன வார்த்தையை கேட்டு கதிருக்கும் தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை.
“என்ன நண்பா அப்படி பாக்குற. சின்னமா சொல்றது உண்மை தான். நீ அப்பாவாக போற. நான் மாமாவாக போறேன்” என்ற நாகராஜன் தன் நண்பனை கட்டி அணைத்து அவன் மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொள்ள.
“எ. என்ன டா சொல்லுற. அ. அப்போ முல்லை.“ என்று கதிர் தன் வார்த்தையை திக்கி திணற.“ஆமா டா கதிர். நம்ம முல்லை. நம்ம குடும்ப வாரிசை அவ வயத்துல சுமக்குறா டா” என்று பாண்டியன் சொல்ல. எல்லை இல்லாத மகிழ்ச்சியில் கதிரின் விழிகள் ஈராமகியது.
“முல், முல்லை மாசமா இருக்காளா. என் குழந்தை. எனக்கு குழந்தை பிறக்க போகுதா. நான் அப்பாவாக போறேனா” என்று கதிர் அங்கிருந்து எழுந்தவன் தன் தந்தையை கட்டி அணைத்து கதறி அழுதவனின் தோளில் ஆறுதலாக தட்டிக்கொடுத்தார் பாண்டியன்.
கதிர் அவன் மனதில் உள்ள பாரம் இறங்கும் வரை அழுது தீர்த்தால் போதும் என்று பாண்டியனும் தன் மகனை கட்டி அணைத்து இருக்க.“நான். நான் எவ்ளோ பெரிய பாவம் பண்ணிட்டேன். அவ மாசமா இருக்குறது தெரியாம அவள நான் கை நீட்டி அடிச்சிட்டேன்” என்று கதிர் தன் தந்தையிடம் அவன் செய்த காரியத்தை ஒப்புக்கொள்ள. அவன் எதிர்பார்க்காத தருணம் பாண்டியன் கதிரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தார்.
“அப், பா.“ என்று கதிர் அதிர்ச்சி அடைய.“வாயை மூடு டா, பொம்பள புள்ள மேல கை வைக்கக்கூடாதுன்னு உனக்கு எத்தனை முறை சொல்லி இருக்கேன். என்ன. தாலி கட்டிட்டா என் மருமகளை நீ கை நீட்டுவியா, பெண்கள் ஆண்களை திருப்பி அடிக்காத வரை தான் உனக்கு மரியாதை. நீ பேசுன பேச்சுக்கும். நீ நடந்துக்குற திமிருக்கும் ஒரே ஒரு முறை என் மருமக உன்னை திருப்பி அடிச்சு இருந்தா வையென். நீ இந்நேரம் பொட்டி பாம்பா அவளுக்கு அடங்கி இருப்ப” என்று பாண்டியன் கதிரை எச்சரிக்க.
கதிர் தன் மேல் உள்ள தவறை உணர்ந்தவனாக தலை குனிந்து நின்று இருந்தான்.
“அப்பா. வாத்தி பண்ணது தப்புதான். ஆனா இப்போ அதெல்லாம் பேச நேரமில்லை. வாங்க உடனே முருகன் மாமா வீட்டுக்கு போய் முல்லை அண்ணியை கையோடு நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வரலாம்” என்று ரோஜா சொல்லும் தருணம் அவளின் கைபேசி ஒலி எழுப்ப,
“இவ ஏன் இந்த நேரத்துல போன் பண்றா” என்றாள் ரோஜா.
“யாருமா போன்ல” என்று பாண்டியன் கேட்க “என் பிரண்டு நீலு தான் பா, சிவகங்கையில நர்சா இருக்கிறா” என்ற ரோஜா.
“ஹலோ. சொல்லு டி எப்படி இருக்க”
என்று ரோஜா தன் தோழியை நலம் விசாரித்தாள்.
“நான் நல்லா தான் இருக்கேன். சரி. என்ன ரோஜா உன் அண்ணி கருவை கலைக்கனும்னு ஹாஸ்பிடல் வந்திருக்காங்க” என்று ரோஜாவின் தோழி சொன்ன வார்த்தையை கேட்டு ரோஜாவின் விழிகள் அசைய மறுத்த நிலையில், “என்னமா என்ன ஆச்சு” என்று கதிரும் பதற்றம் அடைய.
“அண்ணி. அண்ணி கரு கலைக்க ஹாஸ்பிட்டல் போயிருக்காங்களாம்” என்று ரோஜா சொன்ன வார்த்தையை கேட்டு நாகராஜன், பாண்டியன் என்று தொடங்கி கதிரின் தலையிலும் இடி இறங்கியதைப் போல உணர்ந்தார்கள்.