Stories that touch hearts

Home  /  ரோஜா ரோஸ் (பாலைவனத்து முல்லை)  /  Chapter 28

CHAPTER 28

முல்லை – 28

By Roja Roslin · October 29, 2026

0

இதே சமயம் இரவு நேர உணவிற்காக பாண்டியன் வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்திருக்க, ரோஜா மட்டும் முகத்தை கோபமாக வைத்தபடி இருந்தாள்.

“என்ன ரோஜா உன் முகமே சரியில்லையே” என்று கஸ்தூரி கேட்க,

“அத்த. உங்ககிட்ட சண்ட போடுற நிலைமையில் நான் இல்ல. கொஞ்சம் வாயை மூடுங்க”என்றாள் ரோஜா.

“இப்ப நான் என்ன கேட்டுட்டேன்னு என்ன எடுத்தெறிந்து பேசுற” என்ற கஸ்தூரி, தன் கையில் இருந்த ஒரு புகைப்படத்தை பாண்டியனிடம் காட்ட,

“என்ன கஸ்தூரி என்ன போட்டோ இது”

என்று பாண்டியன் கேட்க, “அண்ணா. இந்த பையனுக்கு நம்ம ரோஜாவை கல்யாணம் பண்ணி கொடுக்கலாமா” என்று கஸ்தூரி கேட்க.

“என்ன. ஆடு நனைத்துன்னு ஓநாய் கவலைப்படுது” என்று கேட்டார் கதிர்வேலன்

“என்னப்பா இப்படி பேசுற. ஏன் ரோஜா வாழ்க்கையில எனக்கு அக்கறை இல்லையா” என்று கஸ்தூரி கேட்க

“என் கல்யாணத்தைப் பற்றி யாருக்கும் எந்த கவலையும் வேண்டாம்ம். எனக்கு இப்போ கல்யாணம் பண்ற ஐடியா இல்ல” என்றாள் ரோஜா.

“என்ன ரோஜா. பெரியவங்ககிட்ட இப்படியா பேசுவ” என்று பாண்டியன் கேட்க.

“அப்பா. அங்க மாமாவுக்கு தலையில அடிபட்டு ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்க. பாவம் முல்லை. தனி ஆளா அங்க என்ன அல்லோல படுறான்னு தெரியல. அவங்கள போய் பாக்கணும்னு உங்களுக்கு தோணவே இல்ல. ஆனா அதை விட்டுட்டு என் கல்யாண கதையை பேசிக்கிட்டு இருக்கீங்க” என்றாள் ரோஜா.

“என்னமா.? எனக்கு மட்டும் முருகனைப் போய் பார்க்கணும்னு விருப்பம் இல்லையா என்ன.? ஆனா நம்ம அங்க போனா அது சரிவராதுமா. கண்டிப்பா நம்ம போறதால இன்னும் அவங்களுக்கு மன கஷ்டம் தான் அதிகமாக இருக்கும்” என்று பாண்டியன் சொல்ல.

“சரியா சொன்னீங்க அண்ணா. துஷ்டனை கண்டால் ஓரடி தூரம். இனிமே அந்த முருகன் குடும்பத்துக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் வேண்டாம்ம். சரி சொல்லுங்க. இந்த போட்டோல இருக்கிற பையனை நம்ப ரோஜாவுக்கு மாப்பிள்ளை கேட்கலாமா” என்றார் கஸ்தூரி.

“இல்ல கஸ்தூரி. நான் ரோஜாவுக்கும் கதிருக்கும் வேற இடத்துல பெண் பார்த்துட்டேன்” என்று பாண்டியன் சொல்ல,

“ஐயோ என்ன அண்ணா சொல்ற” என்று கஸ்தூரி பதறினார்.

“இந்த அஞ்சரை பெட்டி வாய் ஏன் இப்படி பதறுது” என்று தனக்குள் எண்ணியப்படி கதிர்வேலன் கஸ்தூரியை பார்த்து இருக்க,

“என்ன அண்ணனா நீங்க. ரோஜாவுக்கு ஏத்த இடமா நான் ஒரு வரணை கொண்டு வந்து இருக்கேன், நீங்க என்ன அதுக்குள்ள வேற யாரையோ பார்த்துட்டேன்னு சொல்லுறீங்க” என்று படபடப்புடன் கேட்டார் கஸ்தூரி.

“நான் பார்த்த இடமும் நல்ல இடம் தான். கூடிய சீக்கிரம் இந்த வீட்டுள்ள இரண்டு நல்ல காரியம் நடந்தே தீரும்” என்ற பாண்டியனின் சொல்லில் ரோஜா கோவம் வந்தவளாக எழுந்து தன் அறைக்குள் சென்று இருந்தாள்.

“கதிர். ரோஜாவை நீ தான் சமாதானம் பண்ணனும். அடுத்த வராதுள்ள ஒரு நல்ல நாளாக பார்த்து உனக்கும் தனாவுக்கும், ரோஜா சிவாவுக்கும் நிச்சயம் பண்ண நான் ஏற்பாடு பண்றேன்” என்ற பாண்டியனின் சொல்லில் கஸ்தூரியின் முகத்தில் நிலவிய பதற்றத்தை கதிர்வேலன் கண்டுகொண்டு தான் இருந்தான்.

“அப்புறம் நம்ம முருகனை போய் பார்க்க ஏற்பாடு பண்ணு, ஆயிரம் தான் இருந்தாலும் உன் அத்த புருஷன் அவரு” என்று பாண்டியன் சொல்ல,

“அப்பா. அதான் அந்த ரவா லட்டு நம்ம உறவே வேணான்னு சொல்லிட்டாளே. பின்ன ஏன் நம்ம அவங்கள போய் பார்க்கணும்” என்ற கதிர்வேலனின் மனதில் முல்லை பேசிய வார்த்தைகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

“அப்படியெல்லாம் சொல்லக்கூடாது கதிரு. முல்லை நிலைமையில் இருந்து யோசித்து பார்த்தா தான் உனக்கு அவளோட மனநிலை புரியும். பாவம் அந்த புள்ள. அவளை குறை சொல்லி மேலும் நம்ம குடும்பத்துக்கு பாவத்தை சேர்த்து வைக்காத” என்ற பாண்டியன் பொறுமையாக நடந்து தன் அறைக்குள் சென்றார்.

“என்னடா இது. அந்த சுருள் வாயன் சுந்தரேசேன் வேற ரோஜாவை அவன் சொல்லுற மாப்பிளைக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி நமக்கு ஆர்டர் போட்டு இருக்கான். ஆனா நம்ம என்னமோ வேற எவனையோ ரோஜாவுக்கு மாப்பிளை பார்த்து வச்சிருக்கே, இப்போ இந்த செய்தி மட்டும் அவனுக்கு தெரிஞ்சா என்னை பத்தி ஸ்டேஸ் வச்சே மானத்தை வாங்கிட்டுவானே” என்று தனக்குள் எண்ணிய கஸ்தூரி. தன் கைபேசியுடன் வேகமாக வெளியேறி இருந்தார்.

கஸ்தூரியின் நடவடிக்கையில் கதிருக்கு சந்தேகம் எழுந்திட, “ டேய் நாகா. அந்த கஸ்தூரி அத்த நடவடிக்கை சரி இல்ல. அவங்க மேல ஒரு கண்ணு வச்சிக்கோ” என்றார் கதிர்வேலன்.

கதிர்வேலனுக்கும் ரோஜாவிற்கும் திருமணம் செய்ய பாண்டியன் ஏற்பாடு செய்யும் விஷயங்கள் எதுவும் ஜீவாவிற்கு தெரியாமல் இருக்க, தினமும் ஜீவா மதுவின் பழக்கத்திற்கு ஆளாகி இருந்தார்.

மீனாவும் நடந்த சம்பவங்களை ஜீரணிக்க முடியாத நிலையில், இன்னமும் கதிர்வேலனையும் மறக்க முடியாமல். ஜீவாவையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருதலைக்கொல்லியாக தவித்து இருக்க.

ரோஜாவை சுந்தரேசன் ஏற்பாடு செய்த மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்க முடியாமல் கஸ்தூரியும் அல்லோலப்பட்டுக் கொண்டுதான் இருந்தார்.

ரோஜாவிற்கோ. திருமணம் செய்து கொள்ள கூடாது என்ற எண்ணமெல்லாம் இல்லாமல் இருக்க. ஆனால் தன் வாழ்விற்காக தன் அண்ணனின் வாழ்க்கையை அடமானம் வைப்பதற்கு அவளுக்கு ஒரு துளி சம்மதமும் இல்லாமல் இருந்தது.

யார் என்ன நினைத்தாலும் ரோஜாவிற்கும் கதிருக்கும் சரஸ்வதியின் பிள்ளைகளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பாண்டியன் ஆணித்தரமாக முடிவெடுத்த நிலையில் அடுத்து வரும் முகூர்த்தத்திலேயே அவர்களின் திருமணத்திற்கு தேவையான விஷயங்களை பார்த்து பார்த்து செய்ய வேண்டும் என்று தன் மனதிற்குள் முடிவெடுத்து இருந்தார்.

ஜீவாவிற்கும் மீனாவிற்கும் எப்படி திருமணம் நடந்தது என்று கதிர்வேலன் தன் தரப்பில் விசாரித்துக் கொண்டிருந்தவனுக்கு கிடைத்தது என்னவோ தோல்விதான்.

மீறி ஜீவாவிடமோ மீனா விடமோ இவர்களின் திருமண நிகழ்வைப் பற்றி கேட்டால் இருவரும் பிடி கொடுக்காமல் பேசி இருக்க, இந்த நொடி வரை இவர்களின் திருமணம் எந்த சூழ்நிலையில் நடந்தது என்பதை யாரும் அறிந்திடாமல் தான் இருந்தார்கள்.

இதேசமயம் மறுபக்கம் சிவகங்கை மருத்துவமனையில் முருகனை பார்வதியும் முல்லையும் கவனமாக பேணிக் காத்து இருக்க, தன் தந்தைக்கு அந்த இடத்தில் முல்லை தாயாகவே மாறி பணிவிடை செய்ய ஆரம்பித்து இருந்தாள்.

முருகனின் உடல் நிலையை தூரத்தில் இருந்து கண்காணித்துக் கொண்டு இருந்த கேசவனுக்கு.

முருகன் எதிரில் சென்று தான் செய்த தவறுக்கு உண்டான மன்னிப்பை கேட்கும் அளவுக்கு திராணி இல்லாத நிலையில், எங்கே தன்னை தன் அக்கா கணவன் வீட்டை விட்டு துரத்தி விடுவாரோ என்ற பயம் கேசவனுக்கு இருக்கத்தான் செய்தது.

நாட்கள் வேகமாக நகர்ந்து செல்ல.

இந்த இடைப்பட்ட நாட்களில் பாண்டியன் கைப்பேசி வாயிலாக சரஸ்வதியை அழைத்து தன் மகளுக்கும் மகனுக்கும் சரஸ்வதி குடும்பத்திலேயே சம்பந்தம் வைப்பதற்காக சம்மதத்தை தெரிவித்தார்.

பத்து நாட்கள் கடந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து முருகனை பார்வதியும் முல்லையும் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்ல. அப்போதும் கேசவன் முருகனின் எதிரே வருவதை தடுத்துருந்தான்.

முருகனின் சொந்த பந்தங்கள் சிலர் மாறி மாறி முருகனின் உடல் நிலையை அவர் வீட்டிற்கு வந்தே விசாரித்துச் செல்ல. அன்றைய தினம் பாண்டியனின் குடும்பத்தில் உள்ள அனைவரும் முருகனைப் பார்ப்பதற்காக அவர் வீட்டிற்கு வந்து இருந்தார்கள்.

ஆயிரம் தான் இருந்தாலும் சொந்தபந்தங்களுக்குள் நல்லது கெட்டதை ஒன்று கூடி கலந்து செய்திட வேண்டும் என்று முடிவெடுத்த பாண்டியன்,

முருகனின் கோபத்திற்கு ஆளானாலும் பரவாயில்லை என்று எண்ணி தன் குடும்பத்துடன் முருகன் வீட்டிற்கு செல்ல. என்னாளும் இல்லாத திருநாளாக பார்வதியும் முருகனும் பாண்டியனின் குடும்பத்தை மரியாதை உடனே வீட்டிற்குள் அழைத்தார்கள்.

அனைவரும் கூடி இருக்கும் இடத்தில் கலகம் செய்ய ஒருவர் இருக்கத்தான் செய்வார்கள் என்பதைப் போல கஸ்தூரியும் பாண்டியன் குடும்பத்துடன் வந்து இருக்க.

ஜீவா, மீனா, ரோஜா, பாண்டியன் கதிர்வேலன் என்று அனைவரும் முருகன் வீட்டின் ஹாலில் அமர்ந்திருந்தார்கள்.

இன்றைய தினம் இவர்கள் அனைவரும் தன் வீட்டிற்கு வருவார்கள் என்று அறிந்திடாத முல்லைக்கு இவர்களின் சந்திப்பு ஒரு வகையில் மகிழ்ச்சியை கொடுத்தாலும், மறு வகையில் இப்படிப்பட்ட குடும்பத்தில் தனக்கு வாழ கொடுத்து வைக்கவில்லை என்ற ஏக்கம் அவள் மனதில் இருக்கத்தான் செய்தது.

பாண்டியனின் சொல்லை மீற முடியாமல் கதிர்வேலன் முருகனின் வீட்டிற்கு வந்திருந்தவனுக்கு ஏனோ முல்லையின் முகத்தை பார்ப்பதற்கே விருப்பம் இல்லாமல் இருக்க, அதற்கு காரணம் மருத்துவமனையில் வைத்து முல்லை கதிர்வேலனின் மனம் நோங்கும்படி பேசிய வார்த்தைகள் தான் என்று ரோஜா அறிந்திருந்தாள்.

தான் மருத்துவமனையில் கதிர்வேலனை அவமானப்படுத்தும் விதமாக பேசியதால்தான் அவன் தன்னை காண மறுக்கிறான் என்ற கூற்றை உணர்ந்திடாத முல்லையோ. தன்னைக் கண்டாலே கதிர்வேலனுக்கு பிடிக்காத காரணத்தால் தான் தன் முகத்தைக் கூட பார்க்காமல் திரும்பிக் கொள்கிறான் என்று மேலும் தனக்குள் அவளே ஒரு பிம்பத்தை உருவாக்கி இருந்தாள்.

இவர்கள் இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் தவறாக எண்ணி இருக்க, ஜீவானந்தமோ முல்லைக்கு அவன் செய்த துரோகத்தை எண்ணி உள்ளுக்குள் நொந்து கொண்டு இருக்க. மீனாவோ அந்த இடத்தில் வாய் திறவாமல் அமைதியை கடைப்பிடித்து இருந்தாள்.

“அப்புறம் மச்சான். இப்போ உடம்பு எப்படி இருக்கு, மருந்தெல்லாம் தவறாமல் எடுக்குறீங்கள?” என்று அனைவரின் மௌனத்தையும் உடைக்கும் விதமாக பாண்டியன் பேச்சை ஆரம்பிக்க,

“மரண வாசலை நெருங்கி மீண்டும் திரும்பி வந்த பிறகுதான் என் வாழ்க்கையில நிறைய நல்லது கெட்டதை உணர்ந்து இருக்கிறேன்” என்ற முருகன்,

“நான் நல்லா இருக்கேன் மாமா. உங்க உடம்பு எப்படி இருக்கு” என்று மரியாதையுடன் பாண்டியனை நலம் விசாரித்ததை பார்த்து கூறியிருக்கும் அனைவருக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது.

வீட்டிற்கு வந்தவர்களை உபசரிக்கும் விதமாக, முல்லை அனைவருக்கும் தேநீரை கொடுக்க.

“முல்லை. எப்படி மா இருக்க?” என்று பாண்டியன் கேட்க,

“இருக்கேன் மாமா” என்ற முல்லை தேநீரை ஜீவாவிடம் நீட்டினாள்.

ஜீவானந்தம் முல்லையின் முகத்தை பார்க்க முடியாமல் தேநீரை கையில் எடுக்க,

“எப்படி மீனா இருக்க?” என்று முல்லை பொதுவாக மீனாவை நலம் விசாரித்தாள்.

“என் பொண்ணுக்கு என்ன குறைச்சல். பாண்டியன் வீட்டோட மூத்த மருமக என் பொண்ணு, அவளுக்கென்ன. அவ நல்லாதான் இருப்பாள்” என்று கூத்தல் பேச்சுடன் இன்னொரு தேநீரை எடுத்துக் கொண்டார் கஸ்தூரி.

“அத்த. ஆரம்பிக்காதீங்க, கொஞ்சம் அமைதியா உட்காருங்க” என்ற ரோஜா,

“முல்லை நீ எப்படி இருக்க” என்று நலம் விசாரிக்க,

“அவளுக்கு என்ன. அவ நல்லாதான் இருப்பாள். அதான் அவளை பார்த்துக்க இனி கேசவன் இருக்கானே” என்று தனக்குள் முணங்கியபடி அமர்ந்திருந்தான் கதிர்வேலன்.

அனைவருக்கும் தேநீரை கொடுத்த முல்லை. கதிர்வேலனிடம் தேனீர் குவளையை நீட்ட,

“மச்சான். அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒரே கோவில்ல ஒரே முகூர்த்ததில் என் ரெண்டு பிள்ளைகளுக்கும் நிச்சயதார்த்தம் வச்சி இருக்கேன், நீங்க குடும்பத்தோட வந்து நிச்சயத்தை சீரும் சிறப்புமாக முடித்து கொடுக்கணும்” என்று பாண்டியன் சொல்ல,

“என்ன மாமா சொல்றீங்க.

ஒரே குடும்பத்தில் இரண்டு பேருக்கும் வரன் பாத்திருக்கீங்களா?” என்று முருகன் மகிழ்ச்சியுடனே கேட்க.

“ஆமா மச்சான். பொண்ணு கொடுத்து, பொண்ணு எடுக்கலாமுன்னு இந்த சம்பந்தத்தை பேசி முடிச்சு இருக்கேன்” என்றார் பாண்டியன்.

பாண்டியனின் வார்த்தையை காதில் வாங்கிய முல்லை, ஒரு கணம் கதிர்வேலனின் விழிகளை பார்க்க. முல்லையின் விழிகளில் தெரிந்த ஆதங்கம், கேள்வி, பரிதவிப்பு, கோவம், அன்பு என்று இவை அனைத்திற்கும் அர்த்தம் என்ன என்று கதிர்வேலன் யூகிக்கும் முன்னே.

“ஞாயிற்றுக்கிழமை தானே உங்க பசங்களுக்கு நிச்சயதார்த்தம். ஆனா வெள்ளிக்கிழமையே எனக்கும் முல்லைக்கும் இதே வீட்ல நிச்சயதார்த்தம் நடக்கப் போகுது. அதனால நீங்களும் குடும்பத்தோட வந்து இந்த நல்ல காரியத்தை முடித்து வையுங்கள்”

என்ற செய்தியோடு கேசவன் இவர்கள் அனைவரின் முன்னிலையிலும் வந்து நின்றவனை முறைத்துப் பார்த்த கதிர்வேலனுக்கு.

முல்லையின் விழிகளில் வழிந்தோடிய காதல் உணர்வை இந்த நொடி கூட உணர முடியாமல் போனது.

கேசவனின் வார்த்தையை கேட்டு கஸ்தூரியின் முகம் மகிழ்ச்சியில் மிளிர.

மீதம் இருக்கும் அனைவரின் முகத்திலும் வெறுப்பு தான் தெரிந்தது.

கேசவனின் கிண்டலான செய்கையில் கதிர்வேலனுக்கு கோவம் எழுந்திட.

அவன் கையை பிடித்து தன் அருகே அமர்த்தி இருந்தாள் ரோஜா.

“என்ன மச்சான். கேசவன் என்ன சொல்லுறப்புல.“ என்று பாண்டியன் கேட்க,

“அவன் பேச்சை அப்புறம் பேசிக்கலாம். நீங்க சொல்லுங்க. நிச்சயம் எந்த மண்டபத்துல நடத்த போறீங்க” என்று கேட்டார் முருகன்.

“நிச்சியம் தாலி காத்த அம்மன் கோவில்ல பண்ண போறோம்” என்று பாண்டியன் சொல்ல,

முல்லை சமையலறையில் நின்றப்படி இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு தான் இருந்தாள்.

“மாப்புள்ள என்ன பண்ணுறாரு” என்று முருகன் விசாரிக்க,

பாண்டியனும் சரஸ்வதி வீட்டின் அருமை பெருமைகளை சொல்லிக்கொண்டு இருக்க, கதிர்வேலனுக்கோ முள்ளின் மேல் நின்று இருப்பதை போல உணர்ந்தவன்,

“அம்மா. வீட்டுக்கு போகலாமா” என்று தன் தங்கையை கேட்டான்.

“இருங்க வாத்தி நான் முல்லையை போய் பார்த்து பேசிட்டு வரேன்” என்ற ரோஜா. சமையலறைக்குள் நுழைய,

“வா ரோஜா. கூடிய சீக்கிரம் திருமதி ரோஜாவாக போற. வாழ்த்துகள் டி” என்று நட்புடன் அவளை கட்டி அனைத்தாள் முல்லை.

“எனக்கு வாழ்த்து சொல்றதை விடு. நீ எப்படி டி இருக்க, ஏன் அந்த கேசவன் மேல இன்னும் போலீஸ் கம்பளைண்ட் தராம இருக்க, ஆமா அவன் சொல்லுற மாதிரி அவன்கூட உனக்கு நிச்சயம் நடக்கப்போகுதா” என்று ரோஜா கேட்க,

அதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனா இனி என் அப்பா என்ன சொல்லுறாரோ அதன் படி தான் என் வாழ்கை” என்றாள் முல்லை.

“என்ன முல்லை நீ. அந்த கேசவன் உன் அப்பாவை கொலை பண்ண முயற்சி பண்ணிருக்கான். போதாக்குறைக்கு உன் நடத்தையை சந்தேகப்பட்டு இருக்கான். என்னை கேட்டா நீ அவனை இந்நேரம் போலீஸ் ஸ்டேஷன்ல பிடிச்சி கொடுத்து இருக்கனும்” என்று ரோஜா சொல்ல. முல்லையின் இதழ் ஓரத்தில் விரக்தியான புன்னகை பூத்தது.

“என்னடி நீ, நான் என்ன சொல்லுறேன் நீ என்ன கிண்டலா சிரிக்கிற” என்று ரோஜா கேட்க, “அப்புறம். உன்னை கல்யாணம் பண்ணிக்க போற மாப்பிளை பேர் என்ன. என்ன வேலை. எந்த ஊர்” என்று பேச்சை மாற்றும் விதமாக பேசும் முல்லையின் கேள்விக்கு பதில் தராமல் ரோஜா அங்கிருந்து வெளியேறினாள்.

ஹாலில் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த வேளையில், மீனாவும் ஜீவாவும் ஒன்றாக அமர்ந்து இருந்தாலும் அவர்களுக்குள் இருந்த விலகளை பார்த்து பார்வதியின் மனதில் குற்ற உணர்வு ஏற்பட்ட நிலையில்,

“முல்லை. பூஜையறையில் மஞ்சள் குங்குமம் இருக்கும் எடுத்துட்டு வா” என்ற பார்வதி, தன் அறையில் இருந்து புதுமண ஜோடிகளுக்கு புது துணியை எடுத்து வந்து சபைக்கு நடுவே வைத்தார்.

பார்வதியின் மாற்றத்தை பார்த்த கஸ்தூரி, “இது என்ன இவ. வச்சா குடுமி அடிச்சா மொட்டை போல சட்டுனு இப்படி நல்லவளா மாறிட்டாளே” என்று எண்ணிய கஸ்துரிக்கு,

ஜீவா மீனா கல்யாணம் நடக்க காரணமாக இருந்தது இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் தான் என்ற உண்மையை பார்வதி சபையில் போட்டு உடைத்து விடுவாரா என்ற அச்சம் இருக்கதான் செய்தது.

இவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பொதுவான விஷயங்களை பேசிக்கொண்டு இருக்க, இதே சமயம். கதிர்வேலனின் கைபேசிக்கு புது எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.

“யாரு நம்பர் இது” என்ற எண்ணத்தோடு கைபேசியுடன் கதிர் முருகனின் வீட்டில் இருந்து வெளியேறி, தோட்டத்து பக்கம் சென்றவன், “ஹலோ. யாரு பேசுறத” என்று தனக்கு வந்த அழைப்பிற்கு பதில் கொடுத்தார்.

“நா. நான் தனா பேசுறேன், நீங்க கதிர்வேலன் தானே” என்று மறுமுனையில் இருந்து வந்த கேள்விக்கு, “ஆமா. நான் தான். சொல்லு என்ன விஷயம்” என்று கதிர் ஒருமையில் பேசியதும்,

“So. உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் தானே” என்று கேட்டாள் தனா.

ஒரு கணம் அவள் கேள்விக்கு பதில் தராமல் தன் தந்தை சொன்ன விஷயத்தை யோசித்து பார்த்த கதிர்வேலன், “ஆமா. உன்னை கல்யாணம் பண்ணிக்க எனக்கு சம்மதம்” என்று சொல்ல. மறுமுனையில் தனாவின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது.

“அம்மாவே உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமுன்னு சொல்லிட்டாங்க. ஆனாலும் உன்கிட்ட வெளிப்படையா பேசிட்டா நல்லதுன்னு தான் நான் கால் பண்ணேன்” என்று தனா சொல்ல.“ம்.“என்றார் கதிர்.

“அப்போ என் வயசு உனக்கு ஒரு பிரச்சனை இல்லை அப்படித்தானே” என்று தனா கேட்க,

“அதெல்லாம் எனக்கு ஒரு பிரச்சனை இல்லை” என்றார் கதிர்.

“இன்னைக்கு என்னை கல்யாணம் பண்ண சம்மதம் சொல்லிட்டு. நாளைக்கு என் தங்கைக்காக தந்தைக்காக தான் உன்னை கட்டிகிட்டேன்னு சொல்ல மாட்டீங்க தானே” என்று தனா கேட்க,

ஒரு நொடி கடுப்பான கதிர், “இங்க பாரு. நான் சொல்லுறத நல்லா கேட்டுக்கோ. எனக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்க முழு சம்மதம். போதுமா. இல்ல வேற எதாவது கேள்வி இருக்கா” என்று கதிர் சற்று அழுத்தமாக கேட்டதும்,

“இது போதும் கதிர். புடவை எடுக்குற கடையில மீட் பண்ணலாம்” என்ற தனா கைபேசி இணைப்பை துண்டித்தாள்.

“நான் ஆசைப்பட்ட வாழ்கை தான் எனக்கு கிடைக்காம போச்சு. இனி என் அம்மா(ரோஜா) வாழ்க்கையாவது நல்லா இருக்கட்டும்” என்று தன் தங்கையின் வாழ்க்கையயை எண்ணி கதிர் தனாவை திருமணம் செய்துக்கொள்ள சம்மதம் தெரிவித்ததை. சமையலறை ஜன்னல் அருகே நின்று இருந்த முல்லையின் காதில் தெளிவாக கேட்டது.

“என்னதான் மாமா சார் மீனாவை விரும்பி இருந்தாலும். ரோஜாவிற்காக வேற ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் தெரிவித்து இருக்காரு போல” என்று தனக்குள் எண்ணிய முல்லை,

“என்னைக்குமே அவர் மனசுல கடுகளவு கூட என் மேல பிரியம் இல்லைனு நினைக்கிறேன்” என்ற முல்லை, இனி கதிர்வேலனை மனதளவில் நினைக்கவே கூடாது என்று முடிவெடுத்து இருந்தாள்.

பாண்டியன் குடும்பத்தில் உள்ள அனைவரும் சகஜமாக முருகனிடம் பேசிக்கொண்டு இருக்க, “சரி மச்சான். அப்போ நாங்க கிளம்புறோம். வீட்ல எதாவது விஷேஷம்னா எனக்கு சொல்லி அனுப்புங்க” என்ற பாண்டியன். முல்லையின் அருகே சென்று அவள் தலையில் கை வைத்து,

“உனக்கு என் பையன் பண்ண துரோகத்துக்கு அவன் சார்புல நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் தாயி” என்றதும்.

“ஐயோ மாமா.“ என்று முல்லை பதறி அடித்து அவர் கரங்களை பற்றி கண்கள் கலங்கினாள் முல்லை.

“அழாத தாயி. உன் நல்ல மனசுக்கு நீ நல்லா இருப்ப” என்ற பாண்டியன்.“, எல்லோருக்கும் போயிட்டு வரோம்” என்று கைகள் கூப்பி அனைவருக்கும் நன்றி தெரிவிக்க, “மீனா. ஒரு நிமிஷம்” என்ற பார்வதி புது துணிகளை எடுத்துக்கொண்டு ஜீவா மீனா தம்பதினரை நெருங்கினார்.

“என்னங்க. இப்படி வந்து நில்லுங்க.“ என்று பார்வதி முருகனை அழைக்க,

மீனாவும் ஜீவாவும் ஒன்றாக சேர்ந்து முருகன் பார்வதி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டார்கள்.

பார்வதியின் மாற்றத்தை கதிர்வேலன் சந்தேகமாக பார்த்து இருக்க,

மனிதனின் மனம் தான் யாரும் கணிக்கவே முடியாத கணிதம் என்று ரோஜா உணர்ந்து இருந்தாள்.

“மாமா. சாப்பிட்டு போகலாமே” என்று முல்லை பாண்டியனிடம் கேட்க,

“அதான் உனக்கு வெள்ளிக்கிழமை நிச்சயம் நடக்கப்போகுதே. அப்போ வந்து விருந்தே சாப்பிட்டுட்டு போறோம்” என்ற கதிர்வேலனின் பதிலில் முல்லையின் இதழ்களில் வெறுமையான வெற்று புன்னகை மலர்ந்தது.

“வாத்தி. நீங்க போய் காருல உக்காருங்க. முல்லை. நாங்க போய்ட்டு வரோம். நேரம் இருக்கும் போது போன் பண்ணு” என்று ரோஜா சொல்ல. கதிர்வேலன் முல்லையை முறைத்த வண்ணமாக அங்கிருந்து வெளியேறி இருந்தார்.

“என்ன முல்லை. இந்த முறையாவது உனக்கு நிச்சயம் நடக்குமா. இல்ல இதுவும் உன் ராசிப்படி நின்னு போய்டுமா” என்று கஸ்தூரி கிண்டலுடன் கேட்க,

“என்ன அத்த. வாத்தியை உள்ள கூப்பிடவா” என்று ரோஜா கேட்டதும்,

முல்லை எப்பொதும் போலவே கஸ்தூரியின் நாகரிகம் இல்லாத பேச்சுக்கு தன் புன்னகையை மட்டுமே பதிலாக கொடுத்தாள்.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!