Stories that touch hearts

Home  /  ரோஜா ரோஸ் (பாலைவனத்து முல்லை)  /  Chapter 25

CHAPTER 25

முல்லை – 25

By Roja Roslin · October 29, 2026

0

இரவு மணி ஒன்பதை நெருங்கி இருக்கும்.

“மீனா அண்ணி சாப்பிட வாங்க” என்று ரோஜா அழைத்தாள்.

“எனக்கு பசிக்கல ரோஜா” என்ற மீனாவோ ஜீவா அறையில் தரையில் பாய் விரித்து படுத்து இருந்தவள். ரோஜா குரலை கேட்டு எழுந்து அமர்ந்தாள்.

ரோஜாவும் மீனாவும் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் கஸ்தூரி அனுமதியின்றி ஜீவாவின் அறைக்குள் நுழைந்து, “ ஏய் மீனா உனக்கு புத்தி இல்லையா, எதனால நீ தரையில பாய் விரிச்சு படுத்து இருக்க. நீ இந்த குடும்பத்தோட மூத்த மருமகள். உனக்கு தான் இங்கே எல்லா உரிமையும் இருக்கு” என்று சம்பந்தமே இல்லாமல் தன் மகளின் உரிமைக்காக குரல் கொடுத்தார் கஸ்தூரி

“அம்மா. எனக்கு இருக்கிற பிரச்சனை தெரியாம நீ எதையாவது பேசி என் கோபத்துக்கு ஆளாகாத, ஒழுங்கா இந்த வீட்ல இருந்து வெளியே போயிடு. இல்லன்னா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்று தன் அன்னையை வார்த்தையால் குதறி எடுத்தாள் மீனா

“ஆமா ஆமா. நான் ஒருத்தி இருக்கும்போதே இந்த வீட்ல உன்னை ஒரு ஆளாக யாருமே மதிக்கல. இப்ப நானும் இங்கே இருந்து போயிட்டா இவங்க எல்லாரும் சேர்ந்து உன்னை இந்த வீட்டோட வேலைக்காரியா கூட மாத்திடுவாங்க” என்ற கஸ்தூரியின் பார்வை ரோஜாவை தான் சுட்டிக்காட்டியது

“இங்க பாருங்க அத்த. எதுடா சாக்குனு எங்களை குறை சொல்ற வேல வச்சுக்காதீங்க. இப்ப என்ன. மீனா அண்ணிக்கு இங்க என்ன குறை இருக்கு? யாரு அவங்கள மதிக்கல?” என்று ரோஜா கேட்க.

“வேற யாரு. மீனா கழுத்துல தாலி கட்டியது ஜீவா தானே. ஆனா அவன் என்னமோ இவளை விட்டுட்டு எப்போ பாரு முல்லையை நினைச்சு சுத்திகிட்டு இருக்கானே. இதெல்லாம் எந்த ஊரு நியாயம்” என்று கேட்டார் கஸ்தூரி.

“அத்த. உங்க பொண்ணு நல்லதுக்கு தான் சொல்றேன். இனி ஜீவா அண்ணன் வாழ்க்கையில் முல்லை இல்லவே இல்லை. இதை உங்க மூளையில நல்லா ஏத்திக்கோங்க. நீங்களாவே எதையாவது பேசி நல்லா இருக்கிற குடும்பத்தை நக்க வச்சுட்டு போயிடாதீங்க. முதல்ல ஜெகதீஷ் மாமா வந்ததும் இந்த வீட்ல இருந்து நீங்க கிளம்பற வழிய பாருங்க” என்ற ரோஜா கஸ்தூரியை முறைத்த வண்ணம் அங்கிருந்து சென்றாள்.

“பாத்தியா டி மீனா. வேற வீட்டுக்கு வாழ போற பொண்ணுக்கு இவ்வளவு வாய் இருக்குன்னு. .

ஆனா நீ இந்த வீட்டோட மருமக. நீ என்ன உம்மானா சாமி மாதிரி உட்கார்ந்து இருக்க. முதல்ல எழுந்து கட்டில்ல படு. இந்த ஆம்பளைங்க தானா நம்ப வழிக்கு வர மாட்டாங்க. நம்ப தான் அவங்கள நம்ப வழிக்கு வர வைக்கணும். முதல்ல இந்த மாதிரி அழுமூஞ்சியா இல்லாம. நல்லா மூஞ்ச கழுவிட்டு, எங்க அண்ணி லட்சுமியுடைய நகை எல்லாம் கேட்டு வாங்கி போட்டுக்கிட்டு, இந்த நாட்டாமை படத்துல வருவாங்களே கு. ஷுப்பு, அவங்கள மாதிரி நல்லா சிக்குனு இரு புரியுதா” என்ற கஸ்தூரி தன் மகளுக்கு தூபம் போட்டபடி அங்கிருந்து வெளியே செல்ல.

மீனா தன் அன்னையைப் பார்த்தவள், தலையில் அடித்துக் கொண்டு மீண்டும் பாயில் படுத்துக்கொண்டாள்.

இதே தருணம் தென்னந்தோப்பில் இருக்கும் நாகராஜனின் குடிசையில் கதிர்வேலன் ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருக்க. ரோஜா சாப்பாட்டு பையுடன் தன் அண்ணனை பார்க்கச் சென்றாள்.

“நண்பா. சின்னம்மா சாப்பாட்டோட வந்திருக்காங்க” என்று நாகராஜன் சொல்ல, “சின்னமாவும் வரல பெரியம்மாவும் வரல, இந்தாங்க உங்க நண்பனுக்கு இந்த சாப்பாட்டை குடுங்க, நான் கிளம்புறேன்” என்று கோவமாக சொன்னாள் ரோஜா.

“அம்மா. ம்மா இருங்க. இப்ப ஏன் என்கிட்ட கோவமா இருக்கீங்க” என்று கதிர்வேலன் நல்ல முறையில் தன் தங்கையிடம் பேச, ரோஜா கதிரை மேலிருந்து கீழ் வரை கண்களால் நோட்டமிட்டவள், “என்ன வாத்தி. இன்னும் சரக்கு உள்ள போகலையா?” என்று கேட்டாள்

“சரக்கு வீட்டுகுள்ள பத்திரமா இருக்கு. இனிமேல் தான் குடிக்கணும். நான் உங்ககிட்ட பேசணும்ன்னு தான் காத்துகிட்டு இருக்கேன். சரி சொல்லுங்க போன்ல ஏன் என்கிட்ட கோவமா பேசினீங்க” என்று கதிர்வேலன் கேட்க,

“பின்ன எப்படி பேச சொல்றீங்க. நீங்க இன்னைக்கு முல்லைக்கிட்ட பேசுனது ரொம்ப தப்பான அணுகுமுறை, எனக்கு சுத்தமா பிடிக்கல” என்றாள் ரோஜா.

“மறுபடியும் மறுபடியும் அதையே சொல்லாதீங்க. ரவா லட்டுக்கு என்னை பிடிக்காது. அனாலதான் நானே முன்னாள வந்து அந்த மாதிரி பேசினேன்” என்று கதிர்வேலன் சொல்ல

“என்னது. முல்லைக்கு உங்கள பிடிக்காதா. அப்படின்னு அவ சொன்னாளா” என்று ரோஜா கேட்க,

“ஆமா. முல்லைக்கு உங்க யாரையும் பிடிக்காது. முல்லைக்கு என்னை மட்டும் தான் பிடிக்கும். இந்த உலகத்திலேயே என் முல்லைக்கு பிடிச்சது நான் மட்டும் தான்” என்ற ஜீவா. மூக்கு முட்ட குடித்துவிட்டு நாகராஜனின் குடிசைக்குள் நுழைய.

நாகராஜன், கதிர், ரோஜா என்று மூவரும் ஜீவாவின் மாற்றத்தை எண்ணி அதிர்ச்சி கலந்த கவலையுடன் இருந்தார்கள்.

“என்ன எல்லோரும் அப்படி பாக்கறீங்க. ஆமா என் மேல தான் முல்லைக்கு அன்பு அதிகம். நான் அவளை எந்த அளவுக்கு நேசித்தேன் தெரியுமா, ஆனா. ஆனா அவளுக்கு நான் துரோகம் பண்ணிட்டேன், நான் பாவி. நான் படுபாவி” என்று பிணர்த்திய ஜீவானந்தம் நாகராஜன் வீட்டில் இருந்த கட்டிலில் அமர்ந்து மேலும் குடிப்போதையில் புலம்ப ஆரம்பித்தான்.

தன் அண்ணனின் நிலைமையை கண்டு கதிர்வேலனுக்கு என்ன செய்வதென்று விளங்காமல் போனது.

“வாத்தி. உங்க பழக்கத்தை இப்போ பெரியவரு தொடங்கி இருக்காரு, நீங்க ரெண்டு பேருமே இந்த குடியை குடிக்க ஒரே காரணம் தான். ஆனா உங்க ரெண்டு பேருக்குமே அமைய இருந்த நல்ல வாழ்க்கையை நீங்களே கெடுத்துகிட்டு ஏன் இப்படி குடிக்கு உங்கள அடிமை படுத்துக்கிறீங்கன்னு தெரியல” என்ற ரோஜா, அவள் கொண்டு வந்த சாப்பாட்டை ஜீவாவிற்கு கொடுத்தாள்.

“வேண்டாம். எனக்கு சாப்பாடு வேண்டாம். நான் முல்லைக்கு பண்ண பாவத்துக்கு நான் பட்டினி கிடந்தே சாக போறேன்” என்ற ஜீவாவை பார்த்து ரோஜாவிற்கு கோவம் எழுந்தது.

“இங்க பாருங்க. ஏற்கனவே அந்த கஸ்தூரி அத்த நம்ம குடும்ப மானத்தை வாங்குற மாதிரி பேசிகிட்டு இருக்கு, இதுல நீங்க வேற இப்படி குடிச்சிட்டு முல்லை பேரை சொல்லிக்கிட்டு இருந்தா அது தான் நீங்க முல்லைக்கு பண்ணுற பெரிய பாவம். இந்தாங்க சாப்பிட்டுட்டு நீங்க இங்கேயே படுங்க, வாத்தி. பெரியவரு இங்கேயே தூங்கட்டும்” என்று ரோஜா சொல்ல,

அன்றைய தினம் இரவு ஜீவா அவர் அறைக்கு செல்லாமல் நாகராஜன் வீட்டிலேயே மது மயக்கத்தில் உறங்கி இருந்தார்.

சிவகங்கையில் முருகன் வீட்டில், முல்லையின் அறையில் அழுது அழுது பசியால் சோர்ந்து போய் சுருண்டு படுத்து இருந்த முல்லைக்கு அவள் வாழ்வே சூனியமாக தோன்றியது.

சொல்லி அழ உற்ற தோளும் இல்லை.

தனக்காக பேச அன்னையும் இல்லை.

தன் மனதை புரிந்துகொள்ளும் அன்பில் தன் தந்தையும் இல்லை.

என்று தனக்குள் நொந்துக் கொண்டவள் அப்படியே பசியால் கண்கள் மூடினாள்.

நள்ளிரவு ஒரு மணி அளவில் முல்லையின் அறைக்கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு முல்லை கண் விழித்தவளுக்கு பசி மயக்கத்தில் கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது.

மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்க, சோர்வுடன் எழுந்து சென்றவள், கதவை திறக்க, அங்கே ஒரு மார்க்கமாக நின்று இருந்தான் கேசவன்.

“என்ன வேணும் உங்களுக்கு” என்று கேசவனை கோபத்துடன் முல்லை கேட்க, அவனோ அவள் கேள்விக்கு பதில் தராமல். முல்லையை மேல் இருந்து கீழ் வரை பார்வையால் எல்லை மீறிக்கொண்டு இருந்தான்.

அவனின் கண் போன இடத்தை பார்த்து முகம் சுழித்த முல்லையோ தன் ஆடைகளை சரி செய்துகொண்டவள், “என்ன வேணும்” என்று மீண்டும் கோபத்துடன் கேட்க,

“நீ தான் டி வேண்டும்” என்றவனின் வார்த்தையில் முல்லையின் முகத்தில் இறுக்கம் கூடியது.

“ச்சி. மனுஷனா நீ, உன் பொறுக்கி புத்தியை எல்லாம் வேற எங்காவது போய் காட்டு” என்ற முல்லை வேகமாக அவள் அறையின் கதவை மூட முயன்றவளின் கையை பிடித்து வளைத்து தன் வசம் அணைத்துக்கொண்டான் கேசவன்.

“ஏய் ச்சி விடு” என்று கேசவனிடன் இருந்து திமிரிய முல்லைக்கு. ஒரு பக்கம் பசி மயக்கம். மறுபக்கம் பாம்பு கொத்திய இடத்தில் வலி என்று அவளை இம்சிக்க. எவ்வளவு போராடியும் கேசவனிடம் இருந்து தன்னை காத்து கொள்ள முடியாமல் முல்லை துடித்து போனாள்.

“ஏய் விடுன்னு சொல்லுறேனே. அப்பா. அப்பா” என்று முல்லை தன் தந்தையை கத்தி அழைக்க, கேசவன் முல்லையின் வாயை அழுத்தி மூடியவனின் செயலில் முல்லைக்கு மூச்சு முட்டியது.

இருப்பினும் இரவு நேரம் என்பதால் முல்லையின் குரலை தெளிவாக கேட்ட முருகன் தன் அறையில் இருந்து வெளியே வர, அவரை தொடர்ந்து பார்வதியும் வந்தவரின் காதில் முல்லையின் அனத்தல் சத்தம் தெளிவாக கேட்டது.

“என்ன சத்தம் இங்க. முல்லை கத்துன மாதிரி இருந்துச்சே” என்ற முருகன் முல்லையின் அறைக்கு செல்ல, அங்கே மது போதையில் கேசவன் முல்லையின் வாயை மூடிக்கொண்டு அவளை வலுகட்டாயமாக அவன் கட்டுப்பாட்டில் அணைத்து இருப்பதை பார்த்த முருகன்,

“டேய். என்ன பண்ற” என்று கோபத்துடன் கத்திய வேகத்தில் முல்லை கேசவனின் கையை கடித்தவள், அவன் வலியால் துடிக்கும் நேரம் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பை போல முருகனை நோக்கி ஓடி வந்து தன் தந்தையின் பின்னே பயத்தில் ஒளிந்துகொண்டாள்.

தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்ற சொல்லுக்கு அர்த்தம் சேர்ப்பதை போல முல்லையிடம் கேசவன் நடந்துகொண்டதை பார்த்து முருகனுக்கு சொல்ல முடியாத அளவுக்கு கோவம் எழ, அதே கோபத்துடன் கேசவன் அருகே சென்ற முருகன் பளார் பளார் என்று அவன் கன்னத்தில் அறைந்த வேகத்தில்,

“ஏங்க ஏங்க என் தம்பி ஏதோ தெரியாம பண்ணிட்டான். அவன் கட்டிக்க போற பொண்ணு என்ற உரிமையில பண்ணிட்டான்” என்று பார்வதி முருகனின் கையை பிடித்து மேலும் அவர் கேசவனை அடிக்காதப்படி தடுத்து இருந்தாள்.

“என்ன.? தெரியாம பண்ணிட்டானா. ஏய். உன் தம்பி கை வச்சது என் பொண்ணு மேல. எவ்ளோ தைரியம் இருந்தா இவன் இப்படி ஒரு கேவலத்தை பண்ணி இருப்பான்” என்ற முருகனின் முன்னே குடி போதை தலைக்கேறிய நிலையில் நின்று இருந்தான் கேசவன்.

“என்னங்க. நான் தான் சொன்னேனே. அவன் கட்டிக்க போற பொண்ணு என்ற உரிமையில தான்” என்று பார்வதி சொல்லும் முன்னே,

“வாயை மூடு” என்று கத்தினார் முருகன்.

“இதான் இவனுக்கு கடைசி எச்சரிக்கை. இனி முல்லை பக்கமே இவன் வரக்கூடாது, மீறி வந்தா உன் தம்பியை நானே கொன்னு போட்டுடுவேன்” என்ற முருகன், மீண்டும் கேசவனின் கன்னத்தில் ஒரு அறை விட,

“யோவ் மாமா. என்ன. அப்படியென்ன நான் தப்பு பண்ணிட்டேன்னு என்னை அடிக்கிற.“ என்று முருகனை மரியாதை இல்லாமல் பேசிய கேசவனின் பார்வை அழுதப்படி நின்று இருந்த முல்லையை முறைத்து பார்த்தது.

கேசவனின் பார்வையை கண்டு முல்லை உடல் நடுங்கி, அவள் தன் தந்தை பின்னே ஒளிந்து இருக்க,

“நான் தானே உன் பொண்ணை கட்டிக்க போறேன். ஏன்? அவகிட்ட நான் இந்த உரிமையை கூட எடுத்துக்க கூடாதா” என்ற கேசவனை முருகன் வெட்டவா குத்தவா என்ற எண்ணத்தோடு பார்த்து இருக்க,

“டேய் தம்பி. கொஞ்சம் அமைதியா இருடா” என்று கேசவனை அடக்கினார் பார்வதி.

“அக்கா. நீ சும்மா இரு அக்கா. யோவ் மாமா. நைட் ஒரு மணிக்கு உன் பொண்ணு ரூமுக்கு நான் போனதுக்கே உனக்கு கோவம் வருதே. ஒரு நாள். ஒரு நாள் நைட் முழுக்க உன் பொண்ணும் அந்த கதிரும், பாண்டியன் வீட்டுக்கே வராம எங்கேயோ போய் நைட் முழுக்க கூத்து அடிச்சிட்டு வந்து இருக்காங்களே. ஏன்? அப்போ அந்த கதிர் இவளை தொடாமலா இருந்து இருப்பான்” என்ற கேசவனின் வார்த்தையை கேட்டு முல்லை மேலும் அழுதவள்,

“அப்பா. இவன் சொல்லுற மாதிரி எல்லாம் எதுவும் நடக்கல. என். என்னை பாம்பு” என்று முல்லை சொல்லும் முன்னே,

“நீ எதுவும் சொல்ல வேணா. நீ போய் படு, ஏய். நீ வெளிய போ. இனி குடிச்சிட்டு நீ இந்த வீட்டு வாசப்டியை மிதிக்க கூடாது. போ. இப்போவே வெளியே போ” என்று கேசவனை பார்த்து கட்டளையிட்டார் முருகன்.

“ஐயோ. தவளை தன் வாயால் கெடுவதை போல இவனே இவன் கல்யாணத்தை கெடுத்துக்க போறான்” என்று புலம்பிய பார்வதி,

“டேய் தம்பி நீ போய் மொட்டை மாடியில படு போ” என்று வலுகட்டாயமாக கேசவனை அங்கிருந்து பார்வதி வெளியேற்ற, கேசவனோ அந்த மது போதையிலும் வன்மத்துடன் முல்லையை முறைத்தப்படி அங்கிருந்து வெளியேறி இருந்தான்.

அவன் சென்றும் கூட அழுதுக்கொண்டு இருந்த முல்லையை பார்த்து மனம் இறங்கிய முருகன்,

“இசக்கி. முல்லைக்கு பால் காச்சி எடுத்துட்டு வா” என்று சொல்ல, பல வருடமாக வீட்டு வேலை செய்யும் இசக்கி என்ற பெண்மணி சில நிமிடமிகளில் பால் குவழையுடன் வந்தவர் அதை முல்லையிடம் கொடுத்தார்.

“அம்மாடி. பாலை குடிச்சிட்டு உன் ரூம்ல போய் கதவை பூட்டிகிட்டு படு” என்றவாரு முருகன் சோபாவில் படுத்து கண்கள் மூடியவரை நன்றி கலந்த பார்வையுடன் கடந்து சென்று தன் அறையில் படுத்துக்கொண்டாள் முல்லை.

மறுநாள் காலை அனைவருக்கும் ஆதவன் அழகான விடியலை கொடுக்க,

நேரம் பத்து மணி அளவில் முல்லை அவள் அறையை சுத்தம் செய்துக்கொண்டு இருந்தவள் கண்ணுக்கு கதிர்வேலன் தன் காலில் கட்டிய இறைவனின் அருள் பெற்ற மாங்கல்யம் தென்பட்டது.

அந்த மஞ்சள் கயிறை கையில் எடுத்து முல்லை கலங்கிய விழிகளுடன் பார்த்து இருக்க,

“முல்லை. ஏய் முல்லை வெளியே வா”என்ற கேசவனின் குரலைக்கேட்டு முல்லை மீண்டும் தாலி கயிறை துணிக்கு கீழ் மறைத்து வைத்தவள்,

“என்ன?” என்று கோவமாக கேட்டப்படி அவள் அறையில் இருந்து வெளியே வந்தாள்.

“இவ தான் முல்லை. நான் கட்டிக்க போற பொண்ணு. இவளை தான் நீங்க செக் பண்ணனும்” என்ற கேசவன். அவனுடன் செவிலியர் பெண் ஒருவரை அழைத்து வந்து இருக்க,

“டேய் தம்பி. என்னடா. இப்போ முல்லைக்கு என்ன பிரச்சனைன்னு அவளை செக் பண்ண இவங்கள இங்க அழைச்சிட்டு வந்து இருக்க” என்று பார்வதி கேட்டார்.

“பிரச்சனை முல்லைக்குன்னு நான் நர்ஸை இங்க அழைச்சிட்டு வரல, எதிர்காலத்துல முல்லையால பிரச்சனை வரக்கூடாதுன்னு தான் நான் இவங்கள அழைச்சிட்டு வந்தேன்” என்று கேசவன் சொல்ல,

“என்னடா உளறுற.“என கேசவனின் கேவலமான புத்தியை அறிந்திடாத பார்வதி அவர் தம்பியை கேள்வி கேட்க்கும் நேரம், முல்லையும் ஏதும் புரியாமல் செவிலியரை பார்த்தப்படி நின்று இருக்க,

“அக்கா. இவ அந்த கதிர் கூட ஒரு நாள் முழுக்க பகல் நைட்டுனு தங்கி கூத்தடிச்சிட்டு வந்து இருக்கா,

அதான் இவ இன்னும் கன்னி, “ என்று கேசவன் தன் வார்த்தையை முடிக்கும் முன்னே முல்லை கேசவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தவளின் இதயம் எரிமலையென வெடித்து கண்களில் கோவக்கனல் வீச,

கேசவனை சுட்டேரிக்கும் பார்வை பார்த்து இருந்தாள் முல்லை.

“ஏய். என் மேலையே கை வைக்கிறியா”என்ற கேசவன் முல்லையின் கையை பிடித்து முறுக்கி,

“உண்மையை சொன்னா உனக்கு கோவம் வருதா” என்றவன்,

“கலா. நீ போய் அவளை செக் பண்ணு போ” என்று அவன் அழைத்து வந்த பெண்ணுக்கு கட்டளையிட,

“டேய் கேசவா.“ என்ற கர்ஜனையுடன் இவன் முன்னே வந்து நின்றார் முருகன்,

“ச்சி. நீயெல்லாம் ஒரு ஆம்பளையா. நேத்து நீ பண்ண கேவலத்துக்கு அப்பவே உன்னை நான் குழி தோண்டி புதைத்து இருக்கனும்” என்ற முருகன் கோபத்துடன் கேசவனை அடிக்க கை ஓங்க,

முருகனை தடுத்து பிடித்து தன் முழு பலம்க்கொண்டு கேசவன் தள்ளி விட்ட வேகத்தில், முருகன் நிலை தடுமாறி கீழே விழ.

அவர் பின் தலையில் அடிபட்டு, அப்படியே கண்கள் மூடியவரின் விழிகள் இறுதியாய் கண்ணீருடன் அனாதையாக நின்று இருந்த தன் மகள் முல்லையை மட்டுமே உள்வாங்கி இருந்தது. 🌹

முருகனை கேசவன் தள்ளிவிட்ட வேகத்தில் அவர் கீழே விழுந்து அவரின் பின் தலையில் அடிப்பட்ட நிலையில் முருகன் முழுவதுமாக மயங்கிய வரை பார்த்து முல்லையும் பார்வதியும் பதறிப் போனார்கள்.

என்னதான் முருகனை பார்வதி இரண்டாம் தாரமாக திருமணம் செய்து இருந்தாலும் முருகனின் மீது அவருக்கு அன்பு இருக்கும் பட்சத்தில் தன் கணவனின் நிலையைக் கண்டு பதறிய பார்வதி, “ டேய் படுபாவி என்ன காரியம் பண்ணிட்ட” என்று கேசவனின் கன்னத்தில் அறைந்தார்

ஆத்திரத்தில் முருகனை தள்ளிவிட்ட கேசவனுக்கும் அந்த நொடி என்ன செய்வது என்று புரியாமல் தவித்து நின்றான்.

கேசவனுடன் வந்திருந்த செவிலியர் முருகனுக்கு முதலுதவி செய்யும் பட்சத்தில் “இவருக்கு தலையில் அடிபட்டு ரத்தம் வருது, இவர உடனே ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போகணும்” என்று சொல்ல,

“அப்பா அப்பா.“ என்று முல்லை கதறி அழ, அடுத்த நொடியே கேசவன் முருகனை மருத்துவமனையில் சேர்த்தான்.

“எப்படி இவர் தலையில அடிபட்டுச்சு, இது போலீஸ்கேஸ் ஆச்சே” என்று மருத்துவர் சொல்ல,

“அது, அது பாத்ரூம் போகும்போது வழுக்கி விழுந்துட்டாரு” என்று கேசவன் பொய்யுரைத்தவனின் வார்த்தைக்கு எதிர் பேச்சு பேசும் நிலையில் முல்லையும் இல்லாமல் இருக்க,

“டாக்டர் என் அப்பாவை எப்படியாவது காப்பாத்துங்க” என்று மருத்துவரிடம் கதறி அழுதாள் முல்லை.

“டாக்டர். என் புருஷனை காப்பாத்துங்க” என்று பார்வதியும் மருத்துவரிடம் மன்றாட முருகனுக்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

ஆத்திரத்தில் முருகனை தள்ளி விட்டாலும் தன் அக்கா கணவன் முருகனின் உயிருக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்று எண்ணிய கேசவனும் உள்ளூர பயத்துடன் இருந்தான்.

“அப்பா அப்பா.“ என்று மேலும் முல்லை கதறி அழுதபடி சிகிச்சை அறையின் வாசலில் நின்று இருந்தவள்,

“என் அப்பாவுக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா உன்னை நான் சும்மா விடவே மாட்டேன்” என்று கேசவனை பார்த்து எச்சரித்தாள்.

முல்லையை வாய் திறக்க விட்டால் தனக்கு தான் பிரச்சனை நேர்ந்திடும் என்று அறிந்திருந்த கேசவன், “ஏய். எவ்வளவு திமிரு இருந்தா என்னையே மிரட்டுவ, இப்போ நான் நினைச்சா கூட உன் அப்பா கதையை இந்த ஹாஸ்பிடல்யே வச்சு முடிக்க முடியும்” என்று முல்லையை கேசவன் பயமூட்டும் விதமாக பேசியதும், முல்லையின் முகத்தில் அச்சம் குடி கொண்டது.

“டேய். என்னடா பேசுற? அவர் என் புருஷன்” என்று பார்வதி தன் தம்பியை மிரட்ட.

“அக்கா. என்ன காப்பாத்திக்க நான் என்ன வேணாலும் பண்ணுவேன். இவ மட்டும் வீட்ல நடந்ததை போலீஸ்ல சொல்றேன், வேற எங்காவது சொல்றேன்னு கதை அளந்துக்கிட்டு இருந்தா. அந்த டாக்டர்க்கிட்ட காசு கொடுத்து உள்ளே இருக்கிற உன் புருஷன் கதையை முடிக்க சொல்லிடுவேன், அப்புறம் இந்த சொத்து சுகத்துக்கெல்லாம் இவதான வாரிசு. இவ கழுத்துலையும் தாலிய கட்டி வீட்டோட அடச்சு வச்சுடுவேன். என்னை பத்தி உனக்கு தெரியும் தானே” என்று கேசவன் தன் சொந்த அக்கா என்று பாராமல் பார்வதியை மிரட்ட. முல்லைக்கு அந்த இடத்தில் அமைதியை கடைபிடிப்பதை தவிர வேறு வழி இல்லாமல் போனது.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!