கால் வரும் சத்தத்தில் புது நம்பராக இருக்கவும் யோசனையுடன் போனை எடுத்த குயிலாவிடம், நான் தான் எழில் இது என் புது நம்பர் என்றவள் முதலில் சாதாரணமாக குழந்தைகள் நலன்களை விசாரித்துப் பேசத் தொடங்கினாள்.
“அப்புறம் குயிலா… நான் இல்லாத இந்த மூணு வருஷத்துல ஊர்ல என்னென்ன விசேஷம் நடந்துச்சு?” என்று எழில் ஏதும் அறியாதவள் போல மெதுவாகப் பேச்சைத் திருப்பினாள்.
“என்னத்தைக் கேட்கிறீங்க அக்கா… அண்ணனுக்கு நம்ம சொந்தத்திலேயே செம்பான்னு ஒரு பொண்ணைப் பார்த்து மலையம்மன் கோவில்ல வச்சுப் பிரம்மாண்டமாக் கல்யாணத்தை முடிச்சோம். ஆனா, கல்யாணம் முடிஞ்ச மறுநாளே…” என்று நிறுத்தியவள், அழுதுகொண்டே பஞ்சாயத்தில் நடந்ததை சொல்லும் போது குயிலாவுக்கு தொண்டை அடைத்தது.
“அதிலிருந்து அண்ணன் பேச்சையே குறைச்சுகிட்டு, காடு மலையின்னு உடம்பை வதைச்சுக்கிட்டு சுத்துறாரு அக்கா… நாங்களே அவரோட வாழ்க்கையைக் கெடுத்துட்டோம்…” என்று குயிலா புலம்பினாள்.
“அப்படியா!…” என்று கேட்ட எழிலுக்கு, அதிர்ச்சியில் வார்த்தைகளே வரவில்லை. போனைப் பிடித்திருந்த அவளது கரங்கள் நடுங்கின.
தான் இல்லாத இந்த மூன்று வருடங்களில் ராயனின் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய புயல் வீசி அடங்கியிருக்கிறதா? அவன் ஏன் தன் மீது இவ்வளவு கோபமாக இருக்கிறான், “உன்னால் என் வாழ்க்கையே நாசமாப் போச்சு” என்று ஏன் சீறினான் என்பதற்கான அர்த்தம் இப்போதுதான் எழிலிற்குத் தெளிவாகப் புரிந்தது.
அவளது நெஞ்சை ஏதோ ஒன்று பலமாகத் தாக்குவது போலானதோடு, ராயன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான் என்ற உண்மையோ எழிலின் நெஞ்சில் பேரிடியே விழுந்தது போலிருந்தது.
‘தன்னை உயிருக்கு உயிராகக் காதலிப்பதாகச் சொன்னவன், இன்னோரு பெண்ணைத் திருமணம் செய்யும் அளவிற்குப் போய்விட்டானா? அப்போ இவன் சொன்ன காதலுக்கு என்னதான் மதிப்பு?’ என்ற எண்ணம் எழுந்ததும், அவளுக்கு அதிர்ச்சியையும் தாண்டி மாபெரும் ஆத்திரம் தலைக்கேறியது.
“இவன் வேற ஒரு பொண்ணை ஆசையா கல்யாணம் பண்ணிக்கிட்டான்… அவ இன்னோருத்தனைக் காதலிச்சுத் தாலியைக் கழட்டிப் போட்டுட்டுப் போயிட்டா! இதுக்கு நடுவுல நான் எங்கடா வந்தேன்? நான் ஒன்னும் இவனை உருகி காதலித்து ஏமாத்திட்டு போகலையே? எனக்கு விருப்பம் இல்லைனு தெளிவாக தானே சொன்னேன்.இவன் கல்யாணம் முறிஞ்சு போனதுக்கு நான் எப்படி காரணமாவேன்?” என்று எழிலின் மனம் கொதித்தது.
தன் மீது எந்தத் தப்பும் இல்லாதபோதும், தன் வாழ்க்கை பாழானதற்குத் தான் தான் காரணம் என்று பழி போட்ட ராயனின் ஆக்ரோஷம் நினைவுக்கு வர, “நாளைக்கு இருக்குடா உனக்கு! என் மேல இல்லாத பழியையெல்லாம் போட்டுட்டு, என்னையோ மிரட்டிட்டுப் போற இல்ல… நாளைக்கு உன்கிட்ட நியாயம் கேட்கல, என் பேரு எழிலரசி இல்லை!” என்று மனதிற்குள் வஞ்சினமாகச் சொல்லிக்கொண்டாள்.
அன்றைய இரவு முழுவதும் ஆத்திரமும், ஏமாற்றமும், காயமும் அவளைத் தூங்க விடாமல் தவிக்க வைத்தன. ராயனை நேருக்கு நேராகச் சந்தித்து அவனது போலித்தனத்தைக் கேள்வி கேட்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு விடியலுக்காகக் காத்திருந்தாள் எழில்.
வெளிக்குத்தான் எழிலின் மீது அத்தனை கோபத்தையும் ஆத்திரத்தையும் கொட்டித் தீர்த்தானே தவிர, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவள் மீண்டும் இந்த ஊருக்குள் காலடி வைத்த நொடியிலிருந்தே ராயனின் நெஞ்சிற்குள் ஏதோ ஒரு இனம்புரியாத மாற்றம் மலரத்தான் செய்திருந்தது.
“வறண்டு கிடந்த அவனது பாலைவன மனதிற்குள், எழிலின் வரவு ஒரு சின்னப் பனித்துளியாக இறங்கி உள்ளுக்குள் ஜில்லென்ற குளிர்ச்சியைக் கொடுக்காமல் இல்லை”.
வழக்கம்போல் அதிகாலையிலேயே எழுந்து வாசல் பெருக்க வேண்டிய மயிலா, இன்று எழ முடியாமல் பாயிலேயே சுருண்டு படுத்துக் கிடந்தார். மருதுவும் எப்போதும்போலக் காலையிலேயே எழுந்து மலைக்காட்டுக்குப் போய்விட்டிருந்தார்.
“மயிலு… மயிலு…” என்று கூப்பிட்டுக்கொண்டே மாடியிலிருந்து கீழே வந்த ராயன், தாய் இன்னும் படுக்கையை விட்டு எழாமல் சுருண்டு படுத்திருப்பதைப் பார்த்துக் பதறிப்போனவன் “மயிலு என்ன ஆச்சு உனக்கு?” என்று தாயின் தோளைத் தொட்டுத் தூக்க முயன்றான். அவனது கை பட்டதும் அவனுக்குத் தூக்கி வாரிப்போட்டது; மயிலாவின் உடம்பு நெருப்பாய்க் கொதித்துக் கொண்டிருந்தது.
“அய்யயோ… என்னம்மா உடம்பு இப்படிச் சுடுது!” என்று அலறினான்.
மகனின் வாழ்க்கை இப்படிப் பாழாய்ப் போய்விட்டதே என்ற வேதனை கடந்த இரண்டு வருடங்களாகவே மயிலாவின் நெஞ்சை உருக்கிக்கொண்டிருந்தது.அந்த மன உளைச்சலையும் கவலையையும் வெளியே காட்டிக்கொள்ளாமல் உள்ளுக்குள்ளேயே பூட்டி வைத்திருந்ததால், அது இன்று பெரிய விபரீதமாக மாறி, கடுமையான காய்ச்சலாக அவரையோ சுருட்டிப் போட்டிருந்தது.
ஒரு நொடி ராயனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பின்னர் பதற்றத்தில் வேகமாக வீட்டை விட்டு வெளியே ஓடியவன், நேராக எழில் இருக்கும் வீட்டின் கதவைச் சென்று ஓங்கித் தட்டினான்.
எழிலோ அப்போது தான் குளித்து முடித்து, தன் ஈரக் கூந்தலைத் துண்டால் துவட்டிக்கொண்டிருந்தாள்.
கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, “யாரு?” என்கவும், “ஏய்… கதவைத் திறடி! அம்மாவுக்கு உடம்பு சரியில்லை… சீக்கிரம் வந்து பாரு!” என்று கத்தினான்.
பதறிப்போய்க் கதவைத் திறக்க… அங்கே அன்று பூத்த மலரைப் போலக் குளித்து முடித்து, ஈரக் கூந்தலோடும் பளிச்சென்ற முகத்தோடும் நின்றிருந்த எழிலைப் பார்த்த நொடி, ராயனின் ஆத்திரமெல்லாம் எங்கே போயின என்றே தெரியவில்லை!
அவனுக்குள் இத்தனை வருடங்களாக ஆழப் புதைந்து கிடந்த காதல், அந்த ஒரே ஒரு நொடியில் விழித்துக்கொண்டு அவளை ரசிக்க வைக்காமல் இல்லை.அவனது விழிகள் அவளது உச்சி முதல் பாதம் வரை ஒரு நொடி காதலோடு சிறைபிடித்தன.
அடுத்த கணமே ‘வந்த காரியம் என்ன?’ என்று உணர்ந்து, தன் மூடத்தனமான ரசனையை வெறுத்துத் தன் தலையிலேயே அடித்துக்கொண்டவன், “சீக்கிரம் வந்து அம்மாவைப் பாருடி!” என்று கத்தியபடியே தன் வீட்டை நோக்கி வேகவேகமாக ஓடினான்.
ஏற்கனவே இந்த ஊரில் தங்கிப் பணியாற்றியிருந்தாலும், எழில் நைட்டி அணிந்துகொண்டு வீட்டு வாசல்படியைத் தாண்டி வெளியே வந்ததே கிடையாது. ஆனால் இன்று மயிலா அம்மாவின் உடல்நிலை சரியில்லை என்ற அவசர செய்தி கேட்டதும், உடைகளைப் பற்றிய சிந்தனையே அவளுக்கு வரவில்லை.
தோளில் ஒரு டவலை மட்டும் எடுத்துப்போட்டுக்கொண்டு, மருந்து பையுடன் வீட்டை அப்படியே சும்மா சாத்திவிட்டுப் பதற்றத்தோடு ஓடி வந்தாள்.
அவள் ஓடி வந்த கோலத்தைப் பார்த்த ராயனோ ஒரு நொடி மூச்சடைத்துத்தான் போனது. ஈரம் சொட்டும் கூந்தலும், அவசரத்தில வந்த கோலமும் அவனுள் ஏதோ செய்ய, உடனே மனசாட்சி ‘தாயின் உடல்நிலை முக்கியம்’ என்று அவனைக் காரித்துப்பவும், அவளிலிருந்த தன் பார்வையை அவசரமாக விலக்கிக்கொண்டான்.
வேகமாக உள்ளே வந்து மயிலாவைப் பரிசோதித்த எழில் “அம்மாவுக்கு ரொம்ப காய்ச்சல் அடிக்குது,” என்றவாறே கையோடு எடுத்து வந்த மருத்துவப் பையைத் திறந்தாள்.
காய்ச்சலைக் குறைக்க உடனடியாக ஒரு ஊசியைப் போட்டுவிட்டு, வேகமாக சமையலறைக்குச் சென்று அடுப்பில் கஞ்சியை ஒரு பக்கம் வேக வைத்துவிட்டு, இன்னொரு அடுப்பில் மருது காலையிலேயே கறந்து வைத்துவிட்டுப் போன பால் இருக்கவே, அதில் சுடச்சுட டீ போட்டாள்.
அங்கே தன் தாயின் தலைமாட்டில் அமர்ந்து கவலையோடு பார்த்துக்கொண்டிருந்த ராயனின் அருகே சென்றவள், நேற்றைய கோபத்திற்கும், அவன் பேசிய பேச்சிற்கும் அவனிடம் வாதாட இது நேரமில்லை என்பதால் அமைதி காத்து ‘உன்னை அப்புறமா கவனிச்சுக்கிறேன்டா’ என்று மனதிற்குள் கருவிக் கொண்டவள், வெளியில், “இஷ்டம் இருந்தா இந்த டீயை குடிங்க, இல்லைனா வச்சுட்டுப் போங்க,” என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு, அடுப்பில் வெந்துகொண்டிருந்த கஞ்சியைப் பார்க்க விரைந்தாள்.
ராயனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து ஒரு நாள் கூட மயிலா இப்படிச் சுருண்டு படுத்ததே இல்லை. எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் தன் தாய் காய்ச்சலில் முடங்கிக் கிடப்பதைப் பார்த்து மனம் கலங்கியது. தாயின் தலையை அன்போடு தடவிக் கொடுத்துவிட்டு, அங்கே எழில் வைத்துவிட்டுப் போன டீயை எடுத்து ஒரு மடக்குக் குடித்தான்.
“இவளுக்கு வாய் ரொம்பப் பெருத்துடுச்சு! அன்னைக்கெல்லாம் என்னைப் பார்த்தா நிமிர்ந்து கூடப் பார்க்க மாட்டா… இன்னைக்கு எதிர்த்து எதிர்த்துப் பேசுறாளே!” என்று மனதிற்குள் கருவிக் கொண்டவன்நேராகத் தன் வீட்டுச் சமையல்கட்டுக்கு வந்தான்.
அங்கே ஒரு பக்கம் மயிலாவுக்காகக் கஞ்சி கொதித்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் முதல் நாள் வைத்த குழம்பை எழில் சூடு பண்ணிக் கொண்டிருந்தாள்.அவளது நைட்டி கோலத்தையும் ஈரக் கூந்தலையும் பார்த்தவன், பொறுக்க முடியாமல், “முதல்ல போய் புடவையை மாத்திட்டு வாடி!” என்று அதட்டலான குரலில் திடீரென்று கேட்டான்.
அவனது அந்த எதிர்பாராத குரலில் திடுக்கிட்டுத் திரும்பிய எழிலின் கையிலிருந்த கரண்டி, பலத்த சத்தத்தோடு “நங்”கென்று கீழே விழுந்தது.”என்னடா மிரட்டுறியா?” என்பது போல அவனை ஆத்திரத்தோடு ஏறெடுத்துப் பார்த்தாள் எழில்.
“என்னடி அப்படிப் பாக்குற? ஊர்ல எல்லாரும் எழுந்து நடமாடுற நேரம்… இந்த லட்சணத்துலயா ஓடி வருவ? அந்த டவலையாவது ஒழுங்கா போத்திக்கக் கூடாதா?” என்று கோபத்துடன் சீறினான்.
எழில் உடனே சுதாரித்துக் கொண்டு, கீழே விழுந்த கரண்டியை எடுத்துப் போட்டுவிட்டு, “உங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு பதறி ஓடி வந்தா… உனக்கு என் டிரஸ் தான் பெருசா போச்சா? நான் என்ன போட்டு வந்தா உனக்கென்னடா?” என்று கோபத்தோடு எதிர்த்துக் கேட்டாள்.
“ஏய்! என்னடி ரொம்பப் பேசுற? என் வீட்டு வாசப்படிக்குள்ள இப்படி நிற்காதடிங்கிறேன்!” என்று அவன் அருகே வர, எழில் அவனைக் கூர்மையாகப் பார்த்தபடியே, “நான் இப்போ போகத்தான் போறேன். ஆனா ஒன்னு நினைப்புல வச்சுக்கோங்க… உங்களுக்கு நடந்த கல்யாணத்துக்கும், அது முறிஞ்சு போனதுக்கும் நான் தான் காரணம்னு என் மேல பழி போட்டீல… அதுக்கு இன்னைக்கு சாயந்தரம் நீங்க எனக்குப் பதில் சொல்லியே ஆகணும்!” என்று விரலை நீட்டி எச்சரித்துவிட்டு, விறுவிறுவெனத் தன் வீட்டிற்குப் புடவை மாற்றச் சென்றாள்.
அவள் போன பாதையையே பார்த்துக் கொண்டு நின்ற ராயனுக்கு, அவளது அந்த தைரியமான பேச்சும், மாறாத கோபமும் மனதிற்குள் ஏதோ ஒரு புதுக் கலக்கத்தையும், அடங்காத கர்வத்தையும் ஒருசேரக் கொடுத்தன.
வீட்டிற்கு வந்தவளோ பெட்டியைத் திறந்து வேகமாகப் புடவையை எடுக்கும்போதே, “ரொம்பத்தான் வாடி போடினு மிரட்டுறான்… பெரிய இவன்!” என்று ஆத்திரத்துடன் முணுமுணுத்துக் கொண்டே புடவையைக் கட்டிக் கொண்டாள்.புடவையை ஒழுங்குபடுத்தி முடித்துவிட்டு மீண்டும் அவனது வீட்டிற்குள் நுழைய, அங்கே சமையலறையில் ராயன் நின்றிருப்பதைப் பார்த்து ஒரு நொடி தயங்கி நின்றவள் பின்னர் தன் தயக்கத்தை மறைத்துக்கொண்டு, “கொஞ்சம் தள்ளுங்க…” என்றாள் அழுத்தமாக.
ராயன் நகரவில்லை. அவளைக் கூர்மையாகப் பார்த்தபடி, “ஏன்… நான் பக்கத்துல இருந்தா உனக்கு ஏதாச்சும் ஆகுதா?” என்று வம்புக்கென்றே கேட்டான்.
எழில் அவனை நேருக்கு நேராக நிமிர்ந்து பார்த்தவள், “எனக்கு ஒன்னும் ஆகாது! உங்களுக்குத்தான் பத்திக்கிட்டுப் போகும். நேத்துதானே மாடியில வச்சுப் பெரிய வீராப்பா சொன்னீங்க… என்னைப் பார்க்கவே பிடிக்கலை, என் முகத்துலயே முழிக்காதன்னு? இப்போ எதுக்குத் தேவையில்லாம என்கிட்டப் பேச்சு கொடுக்குறீங்க?”.
அவளது அந்தப் பதில் பேச்சில் ராயனின் முகம் மாறியது. “என்னடி ரொம்ப வாயாடுற?” என்றவன், திடீரென எட்டி அவளது புடவைத் தலைப்பைப் பற்றிக் கையில் சுருட்டிப் பிடித்தவன் அரண்டு நிற்ப்பவளை பார்த்து “ரொம்பப் பேசின என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது! உன் மேல அவ்வளவு ஆத்திரத்துல இருக்கேன் பார்த்துக்கோ!” என்று அவளது முகம் அருகே வந்து சீறினான்.
சுதாரித்த எழில் சிறிதும் அஞ்சாமல், அவனது கையை ஓங்கித் தட்டிவிட்டாள்!
பனி சிந்தும்…