எழில் சொன்ன வார்த்தைகள் நெஞ்சில் தைக்க, ராயன் சில நொடிகள் ஆணி அடித்த மரம் போல அப்படியே திகைத்து நின்றான். ஆனால் அடுத்த நொடியே, வேகமாக வந்து, எட்டி அவளது கையை இறுக்கமாகப் பிடித்து அவளது நடையை நிறுத்தினான்.
அதிர்ந்து போய் திரும்பியவளைப் பார்த்தவன், “ஒரு விஷயத்தைக் கேட்டுக்கடி… என்னைக்கு இருந்தாலும் இந்த இளந்திரையனுடைய பொண்டாட்டி நீதான்! அதுவரைக்கும் நான் உன்னை எந்தத் தொந்தரவும் பண்ண மாட்டேன்,” என்று மிக அழுத்தமாக, உறுதியான குரலில் சொல்லிவிட்டு, வேகவேகமாக அங்கிருந்து இருட்டுக்குள் மறைந்து போய்விட்டான்.
அவன் பிடித்துப் போன அந்த அழுத்தமும் சூடும் இன்னும் தன் கையில் இருப்பதை உணர்ந்து சத்தமின்றித் தன் அறையில் போய் படுத்துக்கொண்டாள்.
மறுநாள் இரவு வழக்கம் போல் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, எழிலின் அக்காவிடமிருந்து கால் வந்தது. போனை எடுத்ததும் அக்கா புலம்பத் தொடங்கினாள்.
“இன்னும் எத்தனை வருஷம் தான் டி அப்பாவும், அம்மாவும் என்னை இப்படி ஒதுக்கி வைப்பாங்க? என் மாமியார் வீட்ல எல்லாரும் என்னைப் பெத்தவங்களே கைவிட்டுட்டாங்கன்னு ரொம்பக் கேவலமாப் பேசுறாங்கடி…” என்று அக்கா அழாத குறையாகப் பேசினாள்.
அதைக் கேட்ட எழிலிற்குள் லேசான ஆதங்கம் எட்டிப்பார்த்தது. “நீ காதலிச்சு உன் இஷ்டத்துக்குக் கல்யாணம் பண்ணிக்கிட்டீனாக்க, அதுக்கு இந்த ஒதுக்குதலை அனுபவிச்சுதானே ஆகணும்?” என்று அவள் கேட்க, அக்கா பெருமூச்சு விட்டாள்.
“நீ என் நிலைமையில இருந்தாதான்டி இதோட வலி என்னன்னு உனக்குப் புரியும். நாளைக்கே உனக்கு ஒரு காதல் வந்ததுன்னா… அப்போ அப்பா அம்மா சம்மதிக்கிற வரைக்கும் நீ கல்யாணம் பண்ணிக்காமக் காத்திருப்பியா? சொல்லு… நம்ம ஜாதியும் அவங்க ஜாதியும் வேற! அப்புறம் எப்படி அவங்க சம்மதிப்பாங்க சொல்லு?” என்று அக்கா கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றும் எழிலின் மனதுக்குள் ஆழமாகப் போய் தைத்தன.
அக்காவிடம் பேசி முடித்து போனை வைத்த பிறகும், எழிலிற்குத் தூக்கம் வரவில்லை. அக்கா சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் யோசித்துப் பார்த்தாள்.’ஆமாம்… காதலித்து ஓடிப்போய் குடும்பத்தை விட்டு விலகி நிற்பதில் என்ன சந்தோஷம் இருக்கிறது? பெத்தவங்களை எதிர்த்துட்டு வாழற வாழ்க்கையில் நிம்மதியே இருக்காது…’
நிச்சயமாகத் தன் பெற்றோர்கள் பார்க்கும் மாப்பிள்ளைக்குத் தான் கழுத்தை நீட்ட வேண்டும் என்பதில் எழில் மிக உறுதியாக முடிவெடுத்துவிட்டாள்.
அன்று தோட்டத்தில் ராயன் பேசிவிட்டு ஓடியதைத் தவிர, அதற்குப் பிறகு அவன் எழிலைச் சந்திக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
சொன்னபடியே அவளை எந்தத் தொந்தரவும் செய்யாமல் ஒதுங்கியே இருந்தான். எழிலும் வழக்கம்போல மருத்துவமனை வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மனதிற்குள் தெளிவான முடிவு எடுத்ததால், ராயன் பேசியதைப் பற்றி நினைத்துப் பார்க்கும் சூழ்நிலையிலும் அவள் மனநிலை இல்லை.
நாட்களும் மின்னல் வேகத்தில் ஓடியது. யாரும் எதிர்பார நேரத்தில் உலகை அச்சுறுத்தும் கொரோனாவின் அகோரபசிக்கு சிறு பிள்ளைகள் பெரியோர்கள் என்று பலியாகக் கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் அரசாங்கம் ஒரு முடிவெடுத்தது…அது லாக்டவுன் காலம் என்பதால் உலகமே முடங்கிக் கிடக்க, அவரவர் வேலைகளை அவரவர் பார்த்துக்கொண்டிருந்தனர்.
நாட்கள் உருண்டோடி, மீண்டும் பழைய இயல்பு நிலைக்கு திரும்பவும் அதுவோ இதுவோ என்று இரண்டு முழு வருடங்கள் கடந்துபோயிருந்தன.இந்த இரண்டு வருடங்களில் ராயன் தொலைவிலிருந்து அவளைப் பார்த்தபடியே தன் காதலை உள்ளுக்குள் அடக்கித் தவித்துப் போனானே தவிர, அவளது அமைதியைக் கெடுக்க விரும்புவதில்லை என்பதால் நெருங்கிச் செல்ல மனம் வரவில்லை.
‘என்றோ ஒருநாள் அவளுக்கு என் காதல் நிச்சயமாகப் புரியும், அன்னைக்கு அவளே என்னைத் தேடி வருவாள்’ என்ற ஆழமான நம்பிக்கையோடு அமைதியாகக் காத்திருந்தான்.
குயிலாவும் கல்லூரியில் மூன்றாம் ஆண்டிற்கு வந்துவிட்டாள்.அன்று வழக்கம்போல எழில் மருத்துவமனையில் வேலையில் இருந்தபோது, அந்த மலைக்கிராமத்து மருத்துவமனை தொலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது.
போனை எடுத்துப் பேசியபோது, நாகர்கோவில் அரசு தலைமை மருத்துவமனையிலிருந்து பேசுவதாகவும், உடனே கிளம்பி அங்கு வரச் சொல்லியிருப்பதாகவும் கூறினர்.என்ன விஷயம் என்று புரியாமல், எழில் டாக்டரிடம் சொல்லி அனுமதி பெற்றுக்கொண்டு தயாரானாள்.
என்னவா இருக்கும் என்ற யோசனையுடன் நாகர்கோவிலில் இருக்கும் அரசு தலைமை மருத்துவமனைக்குச் சென்றாள். அங்கே மேலதிகாரியைச் சந்தித்தபோது, “உங்களுக்கு டிரான்ஸ்ஃபர் கிடைச்சிருச்சு மேடம்,” என்றனர்.
“அப்படியா சார்… எங்கே கிடைத்திருக்கு?” என்று எழில் ஆவலுடன் கேட்க, “உங்க சொந்த ஊர் பக்கத்துலேயேதான்! சிதம்பரத்துக்குக் பக்கத்துல இருக்கிற குமாரட்சி ஜிஹச்ல போஸ்டிங் போட்டுருக்காங்க,” என்று கடிதத்தைக் நீட்டினார்.
சொந்த ஊர் பக்கமே மாறுதல் கிடைத்துவிட்டதை அறிந்து மிகவும் சந்தோஷப்பட்டாள் எழில். டிரான்ஸ்ஃபர் ஆர்டரை வாங்கிக்கொண்டு, மனநிறைவோடு நாகர்கோவிலில் இருந்து மீண்டும் மேதினூருக்கு வந்தாள்.
பின்னர் நேராக மருதுவின் வீட்டிற்குச் சென்றவள், அங்கிருந்த மயிலாவிடம் விஷயத்தைச் சொல்லவும், அதைக் கேட்டதும் மயிலாவின் கண்கள் கலங்கிவிட்டன.
“தாயா பிள்ளையா பழகிட்டோமேத்தா… எப்படித்தா திடீர்னு இப்படிப் போறேன்னு சொல்ற?” என்று கவலையோடு கேட்டார்.
“இது அரசாங்க வேலை இல்லையா அம்மா.நாம விரும்புற இடத்துல ஒரேடியா இருக்க முடியாதே,” என்றவள் உடனே தன் பெற்றோருக்கும் போன் செய்து விஷயத்தைச் சொல்லி சந்தோஷப்பட்டவளோ, மறுநாளே ஊருக்குக் கிளம்பத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தாள்.
அச்சமயத்தில் ராயனும் அவனது நண்பர்களும் இராமேஸ்வரத்திற்கு ஆன்மீகப் பயணம் சென்றிருந்ததால், எழில் ஊரைவிட்டு கிளம்பும் செய்தி சுத்தமாகத் தெரியாமல் போய்விட்டது!
இதோ எழில் ஊருக்குப் போய் இரண்டாம் நாளில்தான் ராயனும் அவனது நண்பர்களும் தங்களின் சுற்றுலாவை முடித்துக்கொண்டு மேதினூருக்குத் திரும்பினர்.
ஊருக்குள் நுழைந்ததும் அனைவரும் அவரவர் வீட்டிற்குப் பிரிந்து சென்றனர்.
“நான் வந்துட்டேன் மயிலா!” என்றவாறே வீட்டிற்குள் வந்த ராயன், “அப்பாடா… உன்னைப் பார்க்காம இந்த மூணு நாளும் எனக்கு நிம்மதியாகவே இல்லை மயிலு!” என்று செல்லமாகப் புலம்பினான்.
மகனை ஆசையோடு ஏறிட்ட மயிலா, அவனது தலையைக் கோதி, “சாமி தரிசனம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சதாயா?” என்று கேட்டார்.
“ஆ… அதெல்லாம் நல்லபடியா முடிஞ்சது,” என்றவன், ராமேஸ்வரம் கோயிலில் இருந்து எடுத்து வந்த தீர்த்தப் பாட்டிலைத் தன் பையிலிருந்து எடுத்து, “இந்தா…” என்க, அதை வாங்கிய மயிலா, மிக பக்தியோடு சாமி படத்திற்கு முன்னால் பூஜை அறையில் பத்திரமாக வைத்தார்.
பின்னர், “சரி கண்ணு, போய் குளிச்சிட்டு வா… சாப்பிட்டலாம்,” என்கவும், “இதோ மயிலு” என்றவாறே விசில் அடித்தபடி படிக்கட்டில் ஏறித் தன் மாடி அறைக்குச் சென்றான்.
அறைக்கதவைத் திறந்ததும் அவனது கண்கள் வழக்கம் போல ஜன்னல் வழியே எழிலின் வீட்டைத்தான் தேடின. பூட்டியிருந்த வீட்டைப் பார்த்ததும், ‘சரி, வழக்கம்போல டியூட்டிக்குப் போயிருப்பா போல’ என்று தனக்குள்ளேயே நினைத்துக்கொண்டான்.
பின்னர் ஒரு துண்டை எடுத்துக்கொண்டு கீழே வந்து, தோட்டத்துக் கிணற்றடியின் ஜில்லென்று நீரில் குளித்துவிட்டு வரவும், மகனுக்குச் சூடான சாப்பாட்டைப் பரிமாறியபடி மயிலா சுற்றுலாவைப் பற்றி விசாரித்துக்கொண்டிருக்க, ராயனும் சாப்பிட்டுக்கொண்டே அவரிடம் பேசிக்கொண்டிருந்தான்.
நேரம் கடந்து மாலையானது. இப்போது வயலில் அறுவடை வேலைகள் எதுவும் இல்லாததால், ஊரின் நடுவில் இருக்கும் பெரிய ஆலமரத்தடியில்தான் நண்பர்கள் கூட்டம் கதையளந்து கொண்டிருக்கும். வயது வித்தியாசம் பார்க்காமல் பெருசுகளும் சிறியவர்களும் அங்கேதான் ஒன்று கூடுவார்கள்.
ராயனும் தோட்டத்துப் பக்கமாகச் சென்று அந்த ஆலமரத்தடியை அடைந்தான். மற்ற நண்பர்களும் அங்கே வந்து சேர, ஒரு பக்கம் சிலர் சீட்டு விளையாடிக்கொண்டும், இன்னொரு பக்கம் ஆடுபுலி ஆட்டம் ஆடிக்கொண்டும் இருந்தனர்.
பெருசுகள் தங்களுக்குள் ஏதோ ஊர்க் கதைகளைப் பேசிக்கொண்டிருந்தனர்.எழிலைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மேலிட, ராயன் பக்கத்தில் இருந்த சொக்கனின் காதில், “மச்சான்… வாயேன் அப்படியே போய் உன் தங்கச்சியப் பார்த்துட்டு வரலாம்?” என்று ரகசியமாகச் சொன்னான்.
மற்றவர்கள் எல்லாரும் விளையாட்டில் தீவிரமாக இருக்க, இவர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் நைஸாக அங்கிருந்து கிளம்பி மருத்துவமனையை நோக்கி வந்தனர்.
மருத்துவமனை வாசலில் இருந்த முதிய வாட்ச்மேன் இவர்களைப் பார்த்ததும், “என்னய்யா… மூணு நாளா ஊருப் பக்கமே ஆளைக் காணோம்? ராமேஸ்வரம் போனீங்களாமே?” என்று சிரித்தபடியே கேட்க, “ஆமாங்கையா…” என்று ராயன் சொல்லி முடிக்கும் முன்பே, அந்த வாட்ச்மேன் பெருமூச்சு விட்டபடி பேசத் தொடங்கினார்.
“இன்னைக்கு பார்த்து ஆஸ்பத்திரி காத்து வாங்குதுய்யா. நல்லா தாயும் பிள்ளையுமா பழகின பிள்ளைக்குத் திடீர்னு டிரான்ஸ்ஃபர் வந்துருச்சு! அந்த எழிலு பொண்ணு ஊருக்குப் போய் இரண்டு நாள் ஆகுதுப்பா…” என்றார் வாட்ச்மேன்.
அதைக் கேட்ட நொடி, உலகமே ஒரு நிமிடம் நின்றுபோய், நெஞ்சில் பேரிடி விழுந்தது போல அதிர்ந்துபோய் நின்றான் ராயன். அவளது சொந்த ஊர் சிதம்பரம் என்று மட்டும்தான் அவனுக்குத் தெரியுமே தவிர, அவளைப் பற்றிய வேறு எந்த விபரமும் அவனுக்குத் தெரியாது.
பின்னர் சுதாரித்தவன் பதற்றத்தை மறைத்தபடி, “எந்த ஊருக்கு டிரான்ஸ்ஃபர் ஆகிப் போயிருக்காங்கன்னு தெரியுமா தாத்தா?” என்று குரல் நடுங்கக் கேட்டான்.
வாட்ச்மேன் தன் தலையைச் சொறிந்தபடி யோசித்து, “அவங்க சொந்த ஊரு பக்கத்துலதானாம்ப்பா… ஏதோ ஒரு ஊரு பேரு சொன்னாங்களே ராயா… இரு யோசிச்சு சொல்றேன்,” என்று தாடையைத் தடவினார்.
ராயனின் இதயம் தாறுமாறாகத் துடித்தது. நொடிப் பொழுதும் அவனுக்கு பெரும் யுகமாகக் கழிய, “ஆ… ஞாபகம் வந்துருச்சு! ‘குமராட்சி’… குமராட்சி ஆஸ்பத்திரிக்குத் தான் டிரான்ஸ்ஃபர்னு சொன்னாங்கப்பா!” என்றார் வாட்ச்மேன்.
‘குமராட்சி…’ அந்தப் பெயரை மனதிற்குள் மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்த ராயனின் கண்கள் சிவந்தன.ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் தன்னை விட்டுத் தூரம் போய்விட்ட எழிலின் நினைவில் அவனது கரங்கள் தானாக இறுகின!.
“இப்படி ஒரு வார்த்தை கூடச் சொல்லாமப் போயிட்டாளேடா சொக்கா…” என்று ராயன் இதயமே நொறுங்கியது போல வாட்ச்மேன் முன்னாடியே புலம்பித் தவித்தான்.
அவனது இந்தத் தவிப்பைப் பார்த்து கடுப்பான சொக்கன், “விடுடா அவளை! அவளுக்குத்தான் உன் மேல இஷ்டம் இல்லைன்னு அப்பவே முகத்திலடிச்ச மாதிரி சொல்லிட்டாளே? அப்புறமும் ஏன்டா அவளை நினைச்சு உருகிக்கிட்டு இருக்க? இந்த ஊர்ல வேற பொண்ணா இல்ல உனக்கு?” என்று ஆத்திரத்தில் கத்தினான்.
ஏமாற்றத்தை வெளிக்காட்டிக்காமல் தனது அறைக்குள் வந்தவனுக்கோ, சுற்றிலும் இருந்த அமைதி நரகமாகத் தெரிந்தது.
‘என்கிட்ட ஒரு வார்த்தை… ஒரே ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதாடி? உன்னைத் தொந்தரவு பண்ண மாட்டேன்னுதானே சொன்னேன், நேர்ல பார்க்கக் கூடாதுன்னு சொல்லலையேடி அரசி…’ என்று மனதிற்குள் ரத்தக் கண்ணீர் வடித்தவனுக்கு எழிலின் நினைவுகள் நெஞ்சை விட்டு அகலாமல் அவனைப் போட்டுச் சித்திரவதை செய்தன.
சொந்த ஊருக்கு வந்து சேர்ந்த மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், ஏனோ எழிலிற்கு மனம் முழுமையாக நிறைவடையவில்லை.
மேதினூரில் மயிலா அம்மாவுடனும் குயிலாவுடனும் பழகிய அந்த அன்பான நாட்களை நினைத்துப் பார்க்கும்போது, மனதின் ஏதோ ஒரு மூலையில் லேசான பாரம் இறங்கியது.
அவளையும் மீறி ராயனின் கம்பீரமான முகமும், அவனது அதட்டலான உரிமைக் குரலும், காட்டுக்குள் கைகளில் தூக்கி வந்த அந்தச் சூடான ஸ்பரிசமும் அவ்வப்போது நினைவுக்கு வந்து போனது தான்.
அன்று காலை வழக்கம் போல் எழிலும் அவளது தோழி உஷாவும் பேசிக்கொண்டே பஸ்ஸில் ஏறி உட்கார, அப்போது உஷா சிரித்தபடியே, “எழில்… நமக்கு இந்த குமராட்சி ஆஸ்பத்திரியிலேயே போஸ்டிங் கிடைச்சது எம்புட்டு வசதியா போச்சு பாரு! தினமும் ரெண்டு பேரும் ஒண்ணாவே போயிட்டு வந்தரலாம்,” என்று உற்சாகமாகப் பேசினாள்.
“ஆமாடி உஷா… வீடும் பக்கத்துல, வேலை செய்யற இடமும் நமக்குத் தெரிஞ்ச இடத்துல இருக்கிறது ரொம்ப நல்லதா போச்சு,” என்று எழில் மேலோட்டமாகப் பதில் சொன்னாலும், அவளது மனம் குமராட்சி மருத்துவமனையை நோக்கி நடக்கும் வழியில், மேதினூர் காட்டின் காற்றையும் அங்குத் தன்னிடம் ‘உன் மேல எனக்குக் கொள்ளைப் பிரியம் இருக்குடி’ என்று ஆணித்தரமாகச் சொன்ன ராயனின் நினைவுகள் வர, அக்கா படும் கஷ்டத்தையும், தன் தந்தையின் கோபத்தையும் நினைவில் கொண்டு, அந்த நினைவுகளை அப்படியே கடந்து செல்லப் பழகிக்கொண்டாள்.
பனி சிந்தும்…