ரூபியோ மூச்சைப் பிடித்துக்கொண்டு தூரத்தில் நின்றபடி, தோழியின் ஓட்டத்தைக் கவனித்துக்கொண்டிருந்தாள்.
அவளைக் கிண்டலடித்துச் சென்ற மாணவிகளும் ரூபிக்கு அருகில் நின்றுகொண்டு, அசட்டுச் சிரிப்புடன் நேகாவின் ஓட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அனைவரையும் முந்திக்கொண்டு முதலாவதாக வெற்றிக்கோட்டை அடைந்தாள் நேகா.
அவளுடைய மனம் மகிழ்ச்சியில் பூரித்தது. ஓடி முடித்ததும் ரூபியிடம் வந்தாள்.
“சூப்பர் டி!” என்று பாராட்டினாள் ரூபி.தோழியின் பாராட்டைக் கேட்ட நேகா, புருவங்களை உயர்த்தி, தன்னைக் கேலி செய்தவர்களை ஏறெடுத்துப் பார்த்தாள். என்ன சொல்வதென்று தெரியாமல் அவர்கள் வெட்கித் தலைகுனிந்தனர்.
புள்ளிகள் அடிப்படையில்தான் குழுக்களின் வெற்றி தீர்மானிக்கப்படும். கடைசிப் போட்டியான ஓட்டப்பந்தயமே அனைத்து அணிகளின் வெற்றியைத் தீர்மானிக்கும் போட்டியாக அமைந்தது. அதில் நேகா முதலாவதாக வரவும், நீலநிறக் குழு வெற்றி வாகை சூடியது.
குழுவில் இருந்த அனைத்து மாணவிகளும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கத் தொடங்கினர்.
அவளுடைய துள்ளலைக் கவனித்துக்கொண்டே அவளுக்கு அருகில் வந்தான் கல்லூரி இறுதியாண்டு மாணவனான வெற்றி.
நீலநிறக் குழுவின் தலைவனாகப் பொறுப்பேற்றிருந்தவன் அவன்.நேகாவின் அருகில் வந்தவன், அவளுக்கு வாழ்த்துச் சொல்லும் விதமாகக் கைகுலுக்கக் கையை நீட்டினான்.
அவனுடைய முகத்தைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டே தன் கையைக் கொடுத்தாள் நேகா.இருவரும் கைகுலுக்கிக்கொண்டதைக் கண்ட மற்ற மாணவர்களுக்குப் பொறாமையில் வயிறு எரிய ஆரம்பித்தது. பல பெண்களின் கனவு நாயகனாக வலம் வருபவன்தான் வெற்றி. அவனுடைய புருவங்களுக்கு இடையே சிறிய வெட்டுத் தழும்பு காணப்பட, காதில் அணிந்திருந்த சிறிய கடுக்கன் மின்னியது. அடர்த்தியாக வளர்ந்திருந்த தலைமுடி அவனுடைய கண்களை ஓரளவு மறைத்திருந்தது. கட்டுமஸ்தான உடலமைப்புடன் இருப்பவனைக் காணும் பெண்கள் அவன் மீது ஆசை கொண்டனர்.
அவனுடன் கைகுலுக்கியதில் வெட்கப்பட்டு முகம் சிவக்க, கனவு உலகில் மிதந்துகொண்டிருந்த நேகாவைத் தரையிறக்கியது வெற்றியின் வார்த்தைகள்.
“நல்லா ஓடுன பாப்பா, வாழ்த்துக்கள்!” என்றான்.
அதுவரை பிரகாசமாக எரிந்துகொண்டிருந்த பல்பைப் போல இருந்த நேகாவின் முகம், அவனுடைய வார்த்தைகளைக் கேட்டதும் அணைந்துபோனது.
முகம் இறுகியது.”நா ஒண்ணும் பாப்பா இல்லை!” என்று சற்றே முறைத்துக்கொண்டு கூறினாள்.
“வெற்றி பெற்ற குழுவில் உள்ள அனைவரும் மேடைக்கு அருகில் வரவும்!” என்று ஒலிபெருக்கியில் அறிவிப்பு ஒலித்தது.
“நீயும் வா, பாப்பா!” என்றவன், அவளையும் அழைத்துக்கொண்டு மேடையை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
‘நா பாப்பாவா?’ என்று மனதிற்குள் நினைத்தவாறே அவனுக்குப் பின்னால் சென்றாள் நேகா.
இதுவரை அவளைக் கிண்டலடித்த கூட்டத்தில் இருந்த ஒரு மாணவி, “ஆளு கேன்சமா இருக்கான்ல!” என்றாள்.
“அவளுக்குக் கொடுத்து வச்சது நமக்குக் கிடைக்கலை டி!” என்று கண்ணாடி அணிந்திருந்த கமலி கூறினாள்.
அங்கிருந்த அனைவரின் கண்களும் வெற்றிக்கு அருகில் சென்றுகொண்டிருந்த நேகாவைப் பொறாமையுடன் பார்த்தன.
வெற்றியின் குழுவில் இருந்த அனைவரும் ஒன்றாக நிற்க, நேகா வெற்றிக்கு அருகில் நின்றுகொண்டாள்.
“நடந்து முடிந்த போட்டியில் 90 புள்ளிகளைப் பெற்று ப்ளூ டீம் வெற்றி பெற்றுள்ளது!” என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து, பள்ளியின் முதல்வரும் விருந்தினரும் மேடையிலிருந்து கீழே இறங்கி வந்து, குழுவுக்குத் தலைமை தாங்கிய வெற்றியின் கையில் கோப்பையை வழங்கினர்.
சுற்றியிருந்த மாணவர்கள் அனைவரின் கைத்தட்டல்களும் ஆரவாரமும் விளையாட்டுத் திடலில் எதிரொலித்தன.வெற்றி பெற்ற அணியினர் அனைவரும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அது முடிந்ததும், மகிழ்ச்சியில் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து தங்கள் சந்தோஷத்தைப் பரிமாறிக்கொண்டனர்.
வெற்றியைச் சுற்றி அவனுடைய நண்பர்கள் சூழ்ந்துகொள்ள, சற்றுத் தள்ளி நகர்ந்து வந்தாள் நேகா.
அவனுடைய அருகாமையில் ஏதோ ஓர் இனம்புரியாத உணர்வை உணர்ந்தவள், அது என்னவென்று புரியாமல் விழித்தாள்.அதற்குள் வெற்றியைத் தூக்கி வைத்துக்கொண்டு அவனுடைய நண்பர்கள் கொண்டாடத் தொடங்கினர்.
அனைத்தையும் பார்த்த நேகாவின் இதழோரத்தில் புன்னகை மலர்ந்தது.’பசங்க பசங்கதான்!’ என்று மனதிற்குள் மெச்சிக்கொண்டாள். காரணம், அவனைத் தூக்கிக் கொண்டாடியவர்கள் மற்ற மூன்று அணிகளுக்கும் தலைமை தாங்கிய அவனுடைய நண்பர்கள்தான்.
நண்பர்களுடன் கொண்டாட்டத்தில் இருந்தாலும், வெற்றி நேகாவின் புன்னகையை ஓரக்கண்ணால் பார்த்து ரசித்தான்.
இனிதாக அன்றைய நாள் நிறைவடைந்தது.
அடுத்த நாள்..
.’பி.எஸ்.சி. கணிதம் முதலாம் ஆண்டு’ என்று வகுப்பறையின் மேலே இருந்த பலகையில் எழுதப்பட்டிருக்க, அதனைச் சோகத்துடன் பார்த்தவாறே உள்ளே நுழைந்தாள் நேகா.
இரண்டாவதாகப் போடப்பட்டிருந்த இருக்கையில் ரூபியின் அருகில் சென்று அமர்ந்துகொண்டாள்.அவளுக்குப் பின்னாலேயே வகுப்பறைக்குள் நுழைந்த கணித ஆசிரியை கனகவல்லி பாடத்தைத் தொடங்கினார்.
அவர் கரும்பலகையில் எழுதி நடத்திக்கொண்டிருக்க, நேகாவுக்கோ கொட்டாவிதான் வந்தது. தூக்கம் கண்ணைச் சொக்கிக்கொண்டு வரவே, இப்படியே இருந்தால் சரிப்படாது என்று நினைத்தவள், மெதுவாகத் தன் பையிலிருந்து ஒரு சாக்லேட்டை எடுத்தாள். ஆசிரியை பார்க்காத நேரமாகப் பார்த்து அதை வாயில் போட்டுக்கொண்டாள்.
அந்த நேரம் பார்த்து வகுப்பறைக்குள் நுழைந்தான் வெற்றி.
அவனைப் பார்த்த ஆசிரியை புன்னகையுடன்,”என்னப்பா வெற்றி? எதுக்கு வந்த?” என்று அவனிடம் சகஜமாகப் பேசினார்.
வந்த விஷயத்தைக் கூறுவதற்காக ஆசிரியையின் கண்களைப் பார்த்தவன், தயக்கத்துடன், “அது வந்து மேம்… நேகாவைப் பி.டி. சார் கூப்பிட்டாங்க!” என்று கூற வந்ததைச் சொல்லி முடித்தான்.
இதுவரை சாந்தமாக இருந்த ஆசிரியை கனகவல்லியின் முகம் இறுகத் தொடங்கியது.
“சரி, நீ போ. அவளை இண்டர்வெல்ல வந்து பார்க்கச் சொல்றேன்!” என்றார்.
“இல்லை மேம்… இப்பவே கூப்பிட்டாங்க!” என்று வெற்றி தயக்கத்துடன் கூறவும், ஒரு நிமிடம் பத்ரகாளியாக மாறியவர், பிறகு தன்னைச் சமாதானப்படுத்திக்கொண்டு,”நேகா மட்டும் தானே?” என்று கேட்டார்
.”ஆமா மேம்!” என்று வெற்றி கூறினான்.
“நேகா, உன்னைப் பி.டி. சார் கூப்பிட்டாங்களாம்!” என்று வகுப்பறையே அதிரும் வகையில் அழைத்தார் கனகவல்லி.
உடனே நேகாவின் மனதில் பதற்றம் அதிகரித்தது. கீழே குனிந்து தன் கால்களைப் பார்த்தாள். இன்னைக்கு பார்த்து ஷூவுக்குப் பதிலாகக் காலணிகளை அணிந்துகொண்டு வந்திருந்தாள்.’ ஸ்கூல் பிள்ளை மாதிரி ஷூ போட்டுட்டு வரச் சொல்ற ஒரே காலேஜ் இதுதான். வரவர இது ஸ்கூலா, காலேஜான்னே தெரியலை!’ என்று வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டாள்.
தனக்குள்ளேயே பேசிக்கொண்டிருந்த நேகாவைப் பார்த்த கனகவல்லி,”நேகா, உன்னைத் தான் பி.டி. சார் கூப்பிட்டாங்களாம். சீக்கிரமா போயிட்டு வந்திடணும்!” என்று கண்டிப்புடன் கூறினார்.
அதைக் கேட்டு தலையாட்டியவள், எதற்காகக் கூப்பிட்டிருப்பார்கள் என்ற பயத்துடனே வகுப்பறையை விட்டு வெளியே வந்தாள்.
“பி.டி. சார் எதுக்காகக் கூப்பிட்டாங்க?” என்று மனதில் இருந்த குழப்பத்தைத் தீர்த்துக்கொள்வதற்காக வெற்றியிடமே கேட்டாள்.
அவளை மேலிருந்து கீழாகப் பார்த்தவன்,”நீ ஷூ போடலல்ல, பாப்பா! அதான் கூப்பிட்டிருப்பாருன்னு நினைக்கிறேன்!” என்று அவளிடம் விளையாடினான்.
அவன் கூறியதை உண்மை என்று நம்பிய நேகா, கையைப் பிசையத் தொடங்கினாள். அவளுடைய செயல்களைக் கண்டவன் மனதிற்குள் சிரித்துக்கொண்டே நடக்க ஆரம்பித்தான்.இருவரும் மாடிப்படிகளில் இறங்கி விளையாட்டுத் திடலை நோக்கிச் சென்றனர்.
விளையாட்டு ஆசிரியரைச் சுற்றி மாணவர்கள் பலரும் நின்றுகொண்டிருந்தனர்.இன்னும் பயத்துடனேயே திருதிருவென்று விழித்துக்கொண்டிருந்த நேகா, விளையாட்டு ஆசிரியர் அருணின் அருகில் செல்லத் தயங்கியபடி நின்றாள்.
“சும்மா சொன்னேன், பாப்பா! ஷூவுக்காக எல்லாம் சார் கூப்பிடலை!” என்றவன், பற்கள் தெரியப் புன்னகைத்தான்.
இதுவரை அவளிடம் இருந்த பயம் நீங்கியிருக்க, அவனைப் புருவத்தை உயர்த்தி முறைத்தாள் நேகா.அவளுடைய கண்களை உற்றுநோக்கியவன், உதட்டின் ஓரத்தில் புன்னகையை உதிர்த்தான்.
“நா முறைக்கிறது உங்களுக்குச் சிரிப்பா தெரியுதா?”
“அப்படியெல்லாம் இல்லை, பாப்பா. சும்மா ஒரு ஜாலிக்கு விளையாண்டேன்!”
“முதல்ல இந்தப் பாப்பான்னு சொல்றதை நிறுத்துங்க. என் பேர் நேகா!” என்று பொய்யான கோபத்துடன் கூறினாள்.
“நேகா…” என்று தனக்குள் முணுமுணுத்துக்கொண்டான்.
“பெயர் அழகா இருக்கு, பாப்பா!”
மறுபடியும் பாப்பாவா என்று தன் புருவத்தை உயர்த்தினாள் நேகா.
“பாப்பா இல்லை, நேகான்னு சொல்லுங்க பார்ப்போம்!”
“சரி, நேகா. இப்போ ஓகேவா?”
“ம்…” என்று தலையாட்டிவிட்டு விளையாட்டு ஆசிரியரின் அருகில் சென்றாள்.
அவளைக் கண்டதும்,”ரெண்டு லேப் கிரவுண்டைச் சுத்தி ஓடிட்டு வா!” என்று மட்டும் கூறினார்.
அது ஏன் என்று புரியவில்லை என்றாலும், ஆசிரியர் கூறியதால் ஓடத் தொடங்கினாள்.
ஒரு சுற்றை வெற்றிகரமாக முடித்தவள், அடுத்த சுற்றில் ஓடும்போது அதிகமாக மூச்சு வாங்கியது.
“உஷ்… உஷ்…” என்று மூச்சுவிடும்போது விசில் சத்தம் வெளிவரத் தொடங்கியது.
தொடரும் ..படித்துவிட்டு உங்கள் விமர்சனங்களை கூறுங்கள் 😊