Stories that touch hearts

Home  /  01. சீமா (பாறைக்குள் ஓர் பனித்துளி)  /  Chapter 9

CHAPTER 9

பனித்துளி 9

By seema · October 18, 2026

0

ரேக்கில் இருந்த மருந்துப் பாட்டில்களை அடுக்கிக் கொண்டே ராயனைப் பற்றி யோசித்தவள், சட்டென்று ஒரு கணம் நின்று தன்னைத் தானே எச்சரித்துக் கொண்டாள்.

‘சே… எழில்! என்ன இது? எதுக்கு தேவையில்லாத ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்க? நம்ம வந்த வேலை என்ன… இங்க இருக்குற சூழ்நிலை என்ன? இதெல்லாம் உனக்குத் தேவையில்லாத விஷயம்!’ என்றபடி தன் தலையை லேசாக உலுக்கிக் கொண்டாள்.

பின்னர் தன் கவனத்தை மேஜையில் இருந்த நோயாளிப் பதிவேட்டின்  பக்கம் திருப்பினாள். பேனாவை எடுத்துப் பதிவேட்டில் எண்களை எழுதத் தொடங்கினாலும், அடிமனதில் ஏதோ ஒரு மூலையில்…ராயனின் அந்த ஆழமான பார்வையின் தடம் அழியாமல் அப்படியேதான் இருந்தது.

வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடப்பது ராயனுக்குப் பெருத்த எரிச்சலாக இருந்தது. காடு, மலை, மழை, புயல் என எதற்கும் அஞ்சாமல் திரிந்தவனுக்கு, இப்போது வீட்டின் நாலு சுவருக்குள் இருப்பது கூண்டில் அடைபட்ட புலி போலக் குமைந்தது.

ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்தவன், “மயிலு… நான் காட்டுக்குப் போறேன்!” என்று சத்தமாகச் சொல்லியபடி கிளம்பினான்.

மயிலா பதறிப்போய், “ஏய்யா இந்தக் கையை வச்சுக்கிட்டு எதுக்கு நீ காட்டுக்குப் போற?” என்று தடுக்க வந்தாள்.

“ஏம்மா… இந்த கைக்கு என்ன வந்துச்சு? சின்னக் காயம்தான்! ஏன் தான் இந்தக் கையைச் சொல்லி என் உசுரை வாங்குறீங்களோ தெரியல…” என்று சடசடவெனப் பொரிந்து தள்ளிவிட்டு, வீட்டின் கொள்ளைப்புறத் தோட்டத்து வழியாக காட்டுப் பாதைக்குள் வேகவேகமாகப் புகுந்தவனோ மலையடிவாரத்தில் இருந்த சோளக் கொள்ளைக்கு வந்து சேர, அங்கே அறுவடை வேலைகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தன.

கையில் கட்டோடு வந்த ராயனைப் பார்த்த அவனது நண்பர்கள், “டேய்…ராயா..உன்னை யாருடா இப்போ இங்க வரச் சொன்னா?” என்றனர்.

அதைக் கேட்டதும் அவனுக்கு இன்னும் கடுப்பு எகிறியது. “ஏன்டா… நான் என்ன வயசுக்கு வந்த பிள்ளையா? சமைஞ்ச பொண்ணு போல அறையிலேயே உட்கார்ந்து கிடக்கக் சொல்றீங்க?” என்று எரிச்சலாகக் கத்திவிட்டு,அங்கே மலைபோல் குவிந்து கிடந்த சோளத்தை ஆட்கள் சாக்கில் அள்ளிக் கொட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தவன், “சித்தப்பா… கொஞ்சம் தள்ளு!” என்று சொல்லிக் காயம்படாத ஒரு கையால் சாக்கைப் பிடித்துக்கொண்டான்.

இன்னொருவர் முறத்தால் சோளத்தை அள்ளிப் போட, வேலை துரிதமாக நடந்தது.

மாலை நேரம் நெருங்கியதும் மற்ற வேலை ஆட்கள் ஊருக்குள் புறப்பட்டுச் சென்றனர். வழக்கம் போல ராயனும் அவனது நெருங்கிய நண்பர்களும் பரணிலேயே தங்கிவிட்டனர்.

முதல் இரண்டு நாட்கள் தான் வெளியிலிருந்து சாப்பாடு வாங்கிச் சாப்பிட்டார்கள். அதன் பின்னர், பரணுக்குக் கீழேயே சமைத்துச் சாப்பிடுவது என முடிவானது.

“இன்னைக்கு நைட்டு என்ன சமைக்கலாம்?” என்பதை யோசித்துக்கொண்டிருக்கும் போது, நண்பர்களில் ஒருவன், “முசலு வேட்டைக்குப் போலாமாடா?” என்றான்.

போவோமே என்றவாறு நால்வரும் காட்டுக்குள் மெதுவாக நடந்து செல்லும்போது, மூக்கையன் மெல்லப் பேச்சை ஆரம்பித்தான்.

“எலேய்… நம்ம ஊருக்குள்ள ஒரு புது ஜிகிடி வந்திருக்கு, தெரியுமாடா?”

“யாருடா அது?” என்று இன்னொருவன் ஆவலுடன் கேட்டான்.

“அதான்டா… ஆஸ்பத்திரிக்கு நர்ஸா ஒரு பொண்ணு வந்திருக்கே!” என்று மூக்கையன் சிரித்துக்கொண்டே கிண்டலாகச் சொன்னான்.

அதைக் கேட்ட அடுத்த நொடி… ராயனுக்கு இரத்தக் கொதிப்பே வந்து விட்டது. எழிலைப் பற்றி அப்படிப் பேசியதை அவனால் தாங்கவே முடியவில்லை.

“எலேய்! பொம்பளைப் பிள்ளையைப் பத்தி இப்படி அசிங்கமாப் பேசாதடா!” என்று ராயன் அதட்டல் குரலில் ஆத்திரமாகக் கத்த, மூக்கையன் ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்து, “என்னடா மச்சானுக்குப் புதுசா ரோஷம் பொங்குது?” என்று சிரித்தான்.

கண்களை மூடி திறந்த ராயன், “டேய் மூக்கையா… வாய மூடுடா! அவ நம்ம வூட்டுலதான் தங்கியிருக்கா. நம்ம குயிலாவுக்கு அண்ணி !” என்றான்.

மூக்கையன் திடுக்கிட்டு, “எதே…!” என்று கத்த, மற்ற நண்பர்களும் அதிர்ச்சியில் ராயனை ஏறிட்டுப் பார்த்தனர்.

ஊரிலேயே எவளுக்காகவும் பரிந்து பேசாத நண்பன்,  இப்படி சொல்லியதும், நண்பர்கள் அவனைப் பார்த்து அதிர்ந்து நிற்க,  ஒரு நீளமான மூச்சை இழுத்து விட்டான்.

அவன் முகத்தில் எப்போதும் இருக்கும் அந்த கரடுமுரடான கம்பீரம் மாறி, ஒருவிதத் தவிப்பும் தயக்கமும் வந்து ஒட்டிக்கொண்டன.

தரையிலிருந்த ஒரு சிறிய குச்சியை எடுத்து மண்ணில் கோடு போட்டபடியே, தன் மனதிற்குள் பூட்டி வைத்திருந்த உணர்ச்சிகளை நண்பர்களிடம் முதன்முறையாகக் கொட்டத் தொடங்கினான்.

“மச்சான்… முதன்முதலா அவளை நம்ம வீட்டுத் தோட்டத்து வெளிச்சத்தில பார்த்தப்போவே, என் மனசுக்குள்ள ஏதோ ஒன்னு பண்ணிடுச்சுடா. ஊர்ல எத்தனையோ பொண்ணுங்களைப் பார்த்திருக்கேன்… ஆனா, இவளைப் பார்த்த அந்த ஒரு நொடியில என் தலையெழுத்தே மாறுன மாதிரி ஆயிடுச்சு. அந்த நிமிஷத்துல இருந்து என் கண்ணுக்குள்ள அவ முகத்தைத் தவிர வேற எதுவும் நிக்க மாட்டேங்குது,” என்று ராயன் மெல்லிய குரலில் சொன்னான்.

நண்பர்கள் அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டிருக்க, “அன்னைக்கு ஆஸ்பத்திரியில என் கைக் காயத்துக்கு அவ மருந்து தடவுனப்போ… அந்த மெல்லிய கைகளோட தொடுதல், அவளோட அமைதியான பார்வை, பயமும் வெட்கமும் கலந்த அவளோட அந்த முகம்… அப்படியே என்னை மொத்தமா உலுக்கிடுச்சுடா”

“அவகிட்ட ஏதோ ஒரு வசீகரம் இருக்கு. அதை வார்த்தையில சொல்லத் தெரியல! அவளைப் பார்க்கணும், அவகிட்ட பேசணும்னு என் மனசு பேயா அலையுது. எனக்குள்ள இப்படி ஒரு மாற்றம் வரும்னு நானே நினைச்சுப் பார்த்ததில்லடா…” என்று ராயன் மனம்திறந்து பேசிய வார்த்தைகளில் இருந்த உண்மையும், எழில் மீதான அவனது ஆழமான ஈர்ப்பும் நண்பர்களுக்குத் தெளிவாகப் புரிந்தது.

எதற்கும் அசையாத ராயன், ஒரு பெண்ணின் பார்வையில் கட்டுண்டு தவிப்பதைப் பார்த்த நண்பர்களில் ஒருவனான பரமு, தாடையில் கைவைத்துச் சற்று யோசனையோடு பேச்சை ஆரம்பித்தான்.

“டேய் ராயா… நாம ஒரு முக்கியமான விஷயத்தை யோசிக்கணும்டா. அவ படிச்ச பொண்ணு! வெளியூர்ல இருந்து இங்க வந்து வேலை பாக்குது. நம்ம காட்டுப் பொழப்பு அந்தப் பொண்ணுக்கு செட் ஆகுமாடா?” என்று நிதானமாகக் கேட்டான்.

அவன் சொன்னதைக் கேட்டதும் சொக்கன் தலையசைத்து, “ஆமாடா… பரமு சொல்றதும் நியாயம்தானே? நாளைக்கு ஊரை விட்டு ஊரு வந்து, இந்த மலையடிவாரத்துல வாழப் பழகணும்ல? யோசிக்க வேண்டிய விஷயம்தான்,” என்றான்.

நண்பர்கள் இருவரின் கேள்வியும் ராயனுக்கு உண்மையை உணர்த்த, “எனக்கும் அந்த யோசனையும் தயக்கமும் இருக்கத்தான் செய்யுதுடா… ஆனா என்ன பண்றது? மனசு கேட்க மாட்டேங்குது. அவளை விட்டுக் கொடுக்கவே கூடாதுன்னு உள்ளுக்குள்ள ஏதோ ஒன்னு தோணிகிட்டே இருக்கு. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலடா…” என்று தன் மனதில் இருந்த தவிப்பையும் குழப்பத்தையும் ஒத்துக்கொண்டான்.

எப்போதும் கம்பீரமாக, அஞ்சாத சிங்கமாக வலம் வரும் ராயன், ஒரு பெண்ணுக்காக இப்படித் தயங்கித் தவிப்பதைப் பார்த்த மூக்கையன், “ஹாஹா… அடடே! அஞ்சா சிங்கம்னு ஊருக்குள் சுத்திக்கிட்டு கிடந்தவனுக்கு, இப்போ மாட்டுக்கு மூக்கணாங்கயிறு போட்ட கதை ஆயிடுச்சேடா!” என்று சத்தமாக சிரித்தான்.

சொக்கனும் அவனோடு சேர்ந்துகொண்டு, “ஆமாடா மூக்கா! காதல்னு ஒன்னு வந்ததால்…காளமாடு போல கம்பீரமா  இருந்தவன்  இப்போ கண்ணுக்குட்டி மாதிரி குழையறானே! ஏன் டி மலையாத்தா… இதையெல்லாம் கண்ணால பாக்குறதுக்கா எங்களைப் பெத்து போட்ட?” என்று வானத்தைப் பார்த்துக் கேட்டான்.

நண்பர்கள் இருவரும் சேர்ந்து தன்னை நக்கலடிப்பதைப் பார்த்த ராயனுக்கு ஆத்திரம் வரவில்லை; மாறாக அவனுக்கும் அடக்க முடியாமல் சிரிப்பு வந்துவிட்டது.இருந்தும் சமாளித்தவன் “என்னடா ரெண்டு பேருக்கும் ரொம்பத்தான் நக்கலு?” என்று ராயன் பொய்யான கோபத்துடன் அவர்களைப் பார்க்க, போடா போடா என்றனர்.

பின்னர் நண்பர்கள் நால்வரும் கேலி கிண்டல்களோடு காட்டுக்குள் சென்றவர்கள், விடாமுகமாகத் தேடி இரண்டு கொழுத்த முயல்களை வேட்டையாடி எடுத்து வந்தனர்.

ஆளுக்கொரு வேலையை வேகமாக செய்து கொண்டு பரணுக்கு கீழே அடுப்பு மூட்டி காரசாரமாக சமைக்கத் தொடங்கினர். அந்த நள்ளிரவுக் காற்றில் முயல் கறி வறுவலின் வாசனை மூக்கைத் துளைத்தது.

சோறும் முயல் கறியும் தயாரானதும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தவர்கள், மீதமிருந்த நெருப்புத் தணலின் மீது மணலையும் தண்ணீரையும் ஊற்றி, காட்டுத் தீ பரவாமல் இருக்க அடுப்பு குழியை மூடி அணைத்தனர்.

பின்னர், பரணின் மேலே வந்தவர்கள் அடர்ந்த இருளும், சில்வண்டுகளின் பேரிரைச்சலும், மலைக் காற்றும் சூழ்ந்திருக்க… ஒருமுறை காட்டை சுற்றி பார்த்து விட்டு படுத்து விட்டார்கள்.

நண்பர்கள் மூவரும் தூங்கிவிட, ராயன் மட்டும் கைகளைத் தலைக்கு அடியில் கொடுத்துக்கொண்டு, பரணின் மேல்கூரை வழியே தெரியும் பௌர்ணமி நிலவைப் பார்த்தபடிப் படுத்திருந்தான்.

அவனது மனதிற்குள் எழிலின் நினைவுகளும், நண்பர்கள் கேட்ட “படிச்ச பொண்ணு நமக்குச் செட் ஆகுமா?” என்ற கேள்வியும் மாறி மாறி அலைமோதிக்கொண்டே இருந்தன.

அடுத்த இரண்டு வாரங்கள் வேகமாக ஓடிமறைந்தன.சுற்றியிருந்த காடுகளில் சோள அறுவடை முழுமையாக முடிவடைந்துவிட்டது. ராயனும் அவனது நண்பர்களும் காடே கதியெனக் கிடந்து, அறுவடை செய்த சோள மூட்டைகளையெல்லாம் கட்டிப் பத்திரமாக ஊருக்குள் எடுத்து வந்தனர்.

பின்னர் வெயிலில் நன்றாகக் காய வைத்த சோளத்தை லாரியில் ஏற்றி, நாகர்கோவில் டவுனுக்குக் கொண்டு சென்று எடை போட்டுவிட்டு பணத்தை எடுத்துக்கொண்டு வந்து தங்கள் பெற்றோரிடம் கொண்டு போய்க் கொடுத்தனர்.

மருது தன் மகனிடமிருந்து பணத்தைப் வாங்கும்போது, வழக்கமான கரடுமுரடான பாணியில், “உன்னைப் பெத்ததுக்கு இதைப் பண்ணித் தந்தியே… இது ஒன்னுதான்டா புண்ணியம்!” என்று கிண்டலாகச் சொன்னார்.

மற்ற நண்பர்களின் பெற்றோர்களும் இதேபோலவே தங்கள் பிள்ளைகளைச் சொல்ல மறக்கவில்லை.

“போனாப் போகுதுன்னு கொண்டுவந்து கொடுத்தோமே… அது எங்களோட தப்புதான்ப்பா!” என்று சிரித்துக்கொண்டே பதில் சொன்ன ராயனின் அடிமனதில் வேறு ஒரு தவிப்பு ஓடிக்கொண்டிருந்தது.

கடந்த இரண்டு வாரங்களாகக் காட்டு வேலையிலேயே இருந்ததால் எழிலை அவனால் ஒருமுறை கூடப் பார்க்க முடியவில்லை. அவளது நினைவுகள் உள்ளுக்குள் உறுத்திக்கொண்டேதான் இருந்தன.

‘இன்னைக்கு எப்படியாவது அவளைப் பார்த்துடணும்…’ என்று மனதிற்குள் உறுதியாகத் தீர்மானித்துக் கொண்டு இரவு உணவை முடித்துவிட்டு, வேகவேகமாக மாடியில் இருக்கும் தன் மர அறைக்குச் சென்று வழக்கம்போல ஜன்னலைத் திறந்துவைத்துக்கொண்டு, எதிரே தெரியும் எழிலின் வீட்டை நோட்டம் விட்டான்.

தோட்டத்து லைட் எரியும், அவள் வெளியே வருவாள் என்று அவனது கண்கள் ஏங்கித் தவித்தன.

ஆனால், அன்று எழிலுக்கு மருத்துவமனையில் இரவுப் பணி என்பதால் அவள் வீட்டிற்கு வரப்போவதில்லை என்ற விஷயம் பாவம் ராயனுக்குத் தெரியாது.

மணி ஒன்பதைத் தாண்டிப் பத்தாகியது. சில்வண்டுகளின் ரீங்காரமும் குளிர்ந்த காற்றும் மட்டுமே அவனுக்குப் பதிலளித்தன தவிர அவன் எதிர்பார்த்தது நடக்கவில்லை.

காத்திருந்து காத்திருந்து கண்கள் தவித்துப்போக, வேறு வழியின்றி நீண்ட பெருமூச்சோடு,ஏமாற்றமும் சோர்வும் மேலிட, அப்படியே தன் மரக்கட்டிலில்  எழிலின் நினைவுகளோடு படுத்துவிட்டான்.

பனி சிந்தும்..

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!