Stories that touch hearts

Home  /  25. யட்சன் (யட்சனின் நேகா)  /  Chapter 7

CHAPTER 7

விலகிய மர்மம்

By yatchan · October 16, 2026

0

அவளுக்குப் பதிலளிக்காதவன் மெதுவாகத் தன் முகக்கவசத்தைக் கழற்றினான்.

அவனுடைய முகத்தைக் கண்ட நேகாவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.

“வெற்றி…” என்று அவளது உதடுகள் முணுமுணுத்தன. அடுத்த நொடியே, அவளுக்குள் அடக்கி வைத்திருந்த ஏக்கமும் வலியும் ஒன்றாக வெடிக்க, எதையும் யோசிக்காமல் அவனை இறுக்கி அணைத்துக்கொண்டாள்.

எதிர்பாராத அவளுடைய அணைப்பில் யட்சன் ஒரு கணம் திகைத்துப் போனான். அவளுடைய மனநிலையைப் புரிந்துகொள்ள முடியாமல் அசையாமல் நின்றான்.

சில நிமிடங்கள் கரைந்த பின்னர்தான் தான் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பது நேகாவிற்குப் புரிந்தது. சட்டென்று அவனைவிட்டு விலகியவள், அவனுடைய முகத்தை உற்றுப் பார்த்தாள்.

சற்று முன்பு அவளிடம் பொங்கிய உணர்வுகள் அடங்கியிருக்க, இப்போது அவளுடைய விழிகளில் குழப்பம் மட்டுமே எஞ்சியிருந்தது.

“நீங்க… நீங்க யாரு?” என்று தடுமாற்றத்துடன் கேட்டாள்.

“என் பேரு யட்சன்…” என்று மெதுவாகத் தயங்கியபடி கூறினான்.

மேலும் குழம்பிப்போன நேகா, “உங்க சொந்த ஊர் எது?” என்று கேட்டாள்.

அவளுடைய மனமோ விடை தெரியாத கேள்விகளுடன் போராடத் தொடங்கியது.“அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க. நான் கண் முழிச்சுப் பார்க்கும்போது ஒரு ஹாஸ்பிட்டல்ல இருந்தேன். பழசெல்லாம் மறந்துட்டேன்…” என்றவன், அவளுடைய கண்களைச் சந்திக்க முடியாமல் தலைகுனிந்துகொண்டான்.

அந்த வார்த்தைகளைக் கேட்ட நேகாவின் கண்கள் ஆச்சரியத்தில் அகல விரிந்தன.

“எந்த ஹாஸ்பிட்டல்ல இருந்தீங்க?” என்று படபடப்புடன் கேட்டாள்.

“தூத்துக்குடி கவர்மெண்ட் ஹாஸ்பிட்டல்…” என்று யட்சன் கூறி முடிக்கவும், நேகாவின் கண்களில் கண்ணீர் வழிந்தோடத் தொடங்கியது.அவளுடைய மனம் அடித்துச் சொன்னது… அவன் வெற்றிதான் என்று!உடனே, “கொஞ்சம் உங்க கையைக் காட்டுறீங்களா?” என்று கேட்டாள்.

அவளுடைய கேள்விக்கான காரணம் புரியாவிட்டாலும் யட்சன் தன் கைகளை நீட்டினான். அவனுடைய கையில் அம்மு என்ற பெயர் பச்சை குத்தப்பட்டிருந்தது.அதைக் கண்டதும் நேகாவின் சந்தேகம் விலகியது. ஆனந்தக் கண்ணீர் அவளுடைய கன்னங்களில் வழிந்தோட, மீண்டும் ஒருமுறை யட்சனை இறுக்கி அணைத்துக்கொண்டாள்.

இம்முறை அவளுடைய அணைப்பில் இருந்த உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியாமல் யட்சன் திகைத்து நின்றான்.அந்த நேரத்தில் அங்கு வந்த கீதா, அவர்கள் இருவரும் அணைத்துக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு,“இங்க என்னடி நடக்குது?” என்று கேட்டார்.

அவருடைய குரலில் தன்னிலைக்கு வந்த நேகா, சட்டென்று யட்சனைவிட்டு விலகினாள்.“ஒத்தையில நீ கஷ்டப்படுவியேன்னு வந்தா, நீ என்னடி இந்தப் பையனைக் கட்டிப்பிடிச்சிட்டு இருக்க?” என்று கேட்டுக்கொண்டே யட்சனின் முகத்தைப் பார்த்த கீதா, அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனார்.

அவருடைய கண்கள் வியப்பில் அகல விரிந்தன.“உன் புருஷன் மாதிரியே இந்தப் பையன் எப்படி டி அப்படியே இருக்கான்?” என்று கேட்டவர், நம்ப முடியாமல் கன்னத்தில் கைவைத்தார்.

கீதாவின் இடுப்பில் இருந்த தியோ, யட்சனைப் பார்த்ததும் புன்னகைத்தான்.“அவரு மாதிரி இல்லைம்மா… அவரேதான்!” என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினாள் நேகா.

அதைக் கேட்டுக் குழம்பிப்போன கீதா, “என்னடி லூசு மாதிரி பேசுற? செத்துப்போனவரு எப்படி உயிரோட வர முடியும்?” என்று கோபத்துடன் கேட்டார்.

பிறகு யட்சனையும் நேகாவையும் மாறி மாறிப் பார்த்தார்.“ஏன்மா அப்படிப் பார்க்கிற? அவருதான் மா! அவரை எனக்கு அடையாளம் தெரியாம இருக்குமா?” என்று கேட்டாள் நேகா.

கீதாவின் மனதில் பலவிதமான எண்ணங்கள் ஓடின. அவர் நேகாவின் கணவராக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி… தன் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கைத் துணை கிடைத்தால் போதும் என்ற எண்ணம் அவருக்குள் இருந்தது.

“உண்மையைத்தான் சொல்றியா டி?” என்று மகளிடம் உறுதிப்படுத்திக்கொள்ளும் விதமாகக் கேட்டார்.

“ஆமாம்மா…” என்று தலையசைத்தாள் நேகா.

அம்மாவுக்கும் மகளுக்கும் இடையில் நடந்த உரையாடல்கள் புரிந்தும் புரியாததுமாக இருக்க, யட்சன் மட்டும் அமைதியாக நின்றுகொண்டிருந்தான்.

அவனுடைய விழிகளில் தெரிந்த குழப்பத்தைப் புரிந்துகொண்ட நேகா, அவனுக்கு எல்லாவற்றையும் விளக்க வேண்டும் என்று நினைத்தாள். அருகிலிருந்த நிழலான இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே சென்று அமர்ந்தாள்.

அவளுக்கு அருகில் கீதா, தியோவுடன் அமர்ந்துகொள்ள, யட்சனும் அவர்களுடன் வந்து அமர்ந்தான்.அவனுடைய முகத்தை மீண்டும் ஒருமுறை பார்த்த நேகாவின் மனம், ஆறு வருடங்களுக்கு முன்பு நடந்த அந்தச் சம்பவத்தை நோக்கிப் பின்னோக்கிச் சென்றது.

ஆறு வருடங்களுக்கு முன்பு…

கல்லூரியின் விளையாட்டு மைதானம் விழாக்கோலம் பூண்டிருந்தது. மைதானத்தின் நடுவே அலங்கரிக்கப்பட்ட மேடையில் கல்லூரி முதல்வர் அமர்ந்திருக்க, அவருக்கு அருகில் விருந்தினர்கள் இருவர் அமர்ந்திருந்தனர். மாணவர்கள் அனைவரும் மைதானத்தைச் சுற்றிலும் கூட்டம் கூட்டமாக அமர்ந்து விளையாட்டு தின நிகழ்ச்சிகளை ஆர்வத்துடன் ரசித்துக்கொண்டிருந்தனர்.

அனைவரின் கண்களும் அப்போது நடைபெற்றுக்கொண்டிருந்த 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தின் மீதே பதிந்திருந்தன.

ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றிருந்த மாணவிகள் ஒவ்வொருவரும் நூறு மீட்டர் தூரத்தைக் கடந்து, தங்களுடைய அணியின் அடுத்த வீராங்கனையிடம் கையில் வைத்திருந்த உருளை வடிவிலான கோலைக் கொடுத்துக்கொண்டே ஓடினர்.

இறுதியாக, தன்னிடம் கோலைப் பெற்றுக்கொண்ட நேகா ஓடத் தொடங்கினாள்.அவள்தான் கடைசியாக ஓடி இலக்கை அடைய வேண்டிய வீராங்கனை என்பதால், வெற்றியைத் தன் அணிக்குப் பெற்றுத் தர வேண்டும் என்ற வேகத்துடன் முன்னேறினாள்.ஆனால், மண்ணில் நீட்டிக்கொண்டிருந்த ஒரு கல் அவளுடைய கால்களை இடறிவிட, நிலைதடுமாறிக் கீழே விழுந்தாள்.

அவள் விழுந்ததைக் கண்டதும் சுற்றியிருந்த மாணவர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.

“என்ன மச்சி, நேகா விழுந்துட்டா! அவ்வளவுதான்… நம்ம டீம் தோத்துடும்!” என்று அவளுடைய அணியைச் சேர்ந்த சில மாணவிகள் கவலைப்பட்டனர்.

கீழே விழுந்த வேகத்தில் நேகாவின் முழங்கால்களிலும் கைகளிலும் சிராய்ப்புகள் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் உடனே எழுந்தவள், மீண்டும் ஓடத் தொடங்கினாள்.எவ்வளவு வேகமாக ஓடியும், கீழே விழுந்ததால் ஏற்பட்ட தாமதத்தை அவளால் ஈடுசெய்ய முடியவில்லை. இறுதியில், அவளுடைய அணி மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

ஓட்டத்தை முடித்துவிட்டு மைதானத்தின் ஓரமாக வந்த நேகா, மூச்சைச் சீராக்கிக்கொண்டு நின்றாள். அவளுக்காகத் தண்ணீர் பாட்டிலுடன் காத்திருந்தாள் தோழி ரூபி.

“கொஞ்சம் பார்த்து ஓடியிருக்கலாம்ல டி! அடி எதுவும் பலமா படலையே?” என்று கேட்டுக்கொண்டே அவளுடைய கைகளில் ஏற்பட்டிருந்த சிராய்ப்புகளைக் கவனித்தாள் ரூபி.

“வா டி, நம்ம பி.டி. மேம்கிட்டப் போய் மருந்து போட்டுக்கலாம்.”

“இது சின்னக் காயம்தான். இதுக்குப் போய் மருந்தா? அதுவே விட்டா சரியாயிடும், ரூபி…” என்று தோழியின் அக்கறையைப் புரிந்துகொண்டு பதிலளித்தாள் நேகா.

“சரி, மருந்து வேண்டாம். இந்தத் தண்ணியையாவது குடி” என்று கூறிய ரூபி, தண்ணீர் பாட்டிலை நீட்டினாள்.

நேகாவும் அதை மறுக்காமல் வாங்கிக் குடித்தாள்.கல்லூரி விளையாட்டு தினப் போட்டிகளுக்காக மாணவர்கள் சிவப்பு, நீலம், மஞ்சள், பச்சை என நான்கு அணிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். அதில் நீல நிற அணியின் சார்பாக நேகா கலந்துகொண்டிருந்தாள்.அவள் பங்கேற்றிருந்த அணியின் துணைக் கேப்டனான நித்யா, அவளிடம் வந்தாள். கல்லூரி இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்த நித்யா, முதலாம் ஆண்டு மாணவியான நேகாவிடம் அக்கறையுடன் விசாரித்தாள்.

“ஒண்ணும் பிரச்சினை இல்லையே, நேகா?”

“அதெல்லாம் ஒண்ணும் இல்லைக்கா. நான் ஓகேதான்!”

“அடுத்த போட்டி 200 மீட்டர் ஓட்டப்பந்தயம். அதுக்கும் நீ பேர் கொடுத்திருக்கல்ல? இப்போ உன்னால ஓட முடியுமா? இல்ல, வேற யாரையாவது ஓடச் சொல்லட்டுமா?”

“நான் ஓகேதான்கா! நானே ஓடிடுவேன்!” என்று கூறியவள், தன்னம்பிக்கையுடன் பெருவிரலை உயர்த்திக் காட்டினாள்.

“சரி, நேகா. பார்த்து ஓடு!” என்று கூறிவிட்டு அடுத்த வேலைகளைக் கவனிக்கச் சென்றாள் நித்யா.

அவள் சென்றதும் நேகாவை முறைத்துப் பார்த்தாள் ரூபி.தோழியின் முறைப்பைக் கண்ட நேகா புன்னகைத்தாள்.

“சிரிக்காத டி! இப்பத்தானே கீழே விழுந்த? மறுபடியும் கீழே விழணுமா?” என்று புருவத்தை உயர்த்திக் கேட்டாள் ரூபி.

“என்ன டி நீ! விளையாட்டுல அடிபடுறதெல்லாம் சாதாரணம்!”

“அடிபடுறது சாதாரணம்தான். அதுக்காக இப்படியா அலட்சியமா இருப்ப? வா, இங்க நின்னுட்டே இருக்காம அங்க உட்காருவோம்” என்று அழைத்தாள் ரூபி.

இருவரும் மைதானத்தின் ஓரத்தில் இருந்த புளியமரத்தின் அடியில் சென்று அமர்ந்துகொண்டனர்.

அவர்கள் அங்கே அமர்ந்திருந்த சிறிது நேரத்தில், மாணவிகள் அடங்கிய ஒரு குழு அவர்களை நோக்கிப் படையெடுத்து வந்தது. அருகில் வந்தவர்கள் நேகாவையும் ரூபியையும் சுற்றி வளைத்து நின்றுகொண்டனர்.

அவர்களை ஏறிட்டுப் பார்த்தாள் நேகா.“என்னமோ எங்க டீம்தான் ஃபர்ஸ்ட் வரும்னு சவால் விட்ட! இப்போ என்னாச்சு?” என்று கூட்டத்தில் இருந்த ஒரு மாணவி கேட்டாள்.

“பார்த்தியா? எங்க ரெட் டீம்தான் முதல்ல வந்திருக்கு!” என்று கண்ணாடி அணிந்திருந்த மாணவி பெருமையாகக் கூறினாள்.

“எங்க டீம்தான் ஓவரால் சாம்பியன்ஷிப் வாங்கப்போகுது!” என்று மற்றொரு மாணவி பெருமையுடன் சொன்னாள்.

அவர்கள் மாறி மாறிப் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்ட நேகாவுக்குக் கோபம் வந்தது.

“கொஞ்சம் எல்லாரும் நிறுத்துறீங்களா?” என்று கடுப்புடன் கத்தினாள்.

அவளுடைய குரலைக் கேட்டதும் அந்தக் குழுவினர் அமைதியாகினர். அனைவரும் அவளையே உற்றுப் பார்த்தனர்.

“அடுத்து வர்ற 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்துல எங்க டீம்தான் ஜெயிக்கும். அப்படி ஜெயிக்கலைன்னா, நீங்க என்ன சொன்னாலும் நான் செய்றேன். ஓகேவா?” என்று பொறுமையிழந்து சவால் விட்டாள் நேகா.

அதைக் கேட்டதும் மாணவிகளின் முகங்களில் மகிழ்ச்சி மின்னியது.

“ஜெயிக்கலைன்னா நாங்க என்ன சொன்னாலும் செய்யணும், சரியா?” என்று அந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கிய மாணவி கேட்டாள்.

“செய்றேன்! போதுமா?” என்று கோபத்துடன் பதிலளித்த நேகா, அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியானாள்.ஆனால், அந்தக் குழுவினர் அங்கிருந்து செல்லாமல் நின்றுகொண்டிருந்தனர்.

“அவதான் பதில் சொல்லிட்டாள்ல! அப்புறம் என்ன இன்னும் நிக்கிறீங்க? போங்க!” என்று கடுப்புடன் கத்தினாள் ரூபி.

ஒருவருக்கொருவர் முணுமுணுத்துக்கொண்டே அந்தக் குழுவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.அவர்கள் சென்றதும் ரூபி நேகாவின் பக்கம் திரும்பினாள்.

“என்ன டி, லூசுத்தனமா அவங்ககிட்டப் போய் சவால் விட்டுட்டு இருக்க? அவங்களே நீ எப்போ மாட்டுவன்னு பார்த்துட்டு இருக்காங்க. இப்போ நீயே அவங்களுக்கு வாய்ப்புக் கொடுத்துட்ட!”

தோழியின் அக்கறையைப் புரிந்துகொண்ட நேகா, “என் மேல நம்பிக்கை இல்லையாடி உனக்கு?” என்றுவிட்டு அவளுடைய கண்களை நேராகப் பார்த்தாள்.

“அது இல்ல டி…” என்று ரூபி தயக்கத்துடன் இழுத்தாள்.

“என்ன? இந்தத் தடவை மாதிரி மறுபடியும் தடுக்கி விழுந்திடுவேன்னு நினைக்கிறியா?”

“அப்படி இல்லை டி…” என்று மீண்டும் தடுமாறினாள் ரூபி.

“நான் கண்டிப்பா ஜெயிச்சிடுவேன். நீ கவலைப்படாத, ஓகேவா?” என்று தோழிக்குத் தைரியம் கூறினாள் நேகா.

அந்த நேரத்தில், “200 மீட்டர் ஓட்டப்பந்தயத்துல கலந்துக்க போறவங்க எல்லாரும் ஸ்டார்ட்டிங் பாயிண்ட்டுக்கு வாங்க!” என்ற ஒலிபெருக்கியில் அறிவிப்புஒலித்தது.

“சரி டி, நான் போறேன். கூப்பிட்டுட்டாங்க!” என்று கூறிவிட்டு நேகா எழுந்தாள்.

அவளுடன் போட்டியில் கலந்துகொள்ளும் மற்ற மாணவிகளும் வந்து சேர்ந்தனர். அனைவரும் தொடக்கக் கோட்டுக்கு முன்னால் வரிசையாக நின்றனர்.

உடற்கல்வி ஆசிரியர்,“ஆன் யுவர் மார்க்… கெட் செட்… கோ!” என்று கூறி விசில் ஊத, அனைவரும் இலக்கை நோக்கி ஓடத் தொடங்கினர்.

நேகாவின் கால்கள் மண்ணில் வேகமாகப் பதிய, அவளது கண்கள் இலக்கை மட்டுமே குறிவைத்திருந்தன.முந்தைய போட்டியில் கீழே விழுந்ததால் ஏற்பட்ட தோல்வி அவள் மனதில் இருந்தது . இந்த முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியுடன் மற்ற மாணவிகளுக்கு இணையாக ஓடினாள்.

ரூபியோ மூச்சைப் பிடித்துக்கொண்டு தூரத்தில் நின்றபடி தோழியின் ஓட்டத்தைக் கவனித்துக்கொண்டிருந்தாள். அவளைக் கிண்டலடித்துச் சென்ற மாணவிகளும் ரூபிக்கு அருகில் நின்றுகொண்டு, அசட்டுச் சிரிப்புடன் நேகாவின் ஓட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

தொடரும் ..

உங்கள் விமர்சனங்களை கதையை படித்துவிட்டு கூறுங்கள் ..

1,087 words

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!