Stories that touch hearts

Home  /  29. ராஜேஷ் (மதில் தாண்டுமா மனசு)  /  Chapter 11

CHAPTER 11

மனசு-11

By karuppiahrajesh70@gmail.com · October 15, 2026

0

மதில் தாண்டுமா மனசு-11

பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, அனாதை ஆசிரமத்தின் அரவணைப்பில் தன் வாழ்க்கையைத் தொலைத்துவிடத் துடித்தவள் அனுஷா. அந்தச் சிறிய அறையை விட்டு வெளியேற அவளுக்கு வேறு வழிகள் புலப்படவில்லை. தன் பிடிவாதத்திற்கு ஒப்புதல் முத்திரை பெற, ஒரு விதவைக்கான சான்றிதழைத் தயாரித்து, பெற்றோர் தன் முடிவுக்கு முழுச் சம்மதம் தெரிவித்தது போல் ஒரு போலிக் கடிதத்தையும் கையெழுத்திட்டுத் தன் கைப்பைக்குள் ரகசியமாய்ப் புதைத்துக் கொண்டாள். தேவைப்பட்டால் காட்டிடத் தன் திருமணப் புகைப்படத்தையும் பாதுகாப்பாய் எடுத்துக்கொண்டு, ஞாயிற்றுக்கிழமை காலைப் பிரார்த்தனைக்கு வருகை தரும் பள்ளி முதல்வரைச் சந்திப்பதற்காக அருகிலுள்ள தேவாலயத்தை நோக்கித் தன் நடையைத் துரிதப்படுத்தினாள்.​

அதே பாதையில் மூச்சு வாங்க ஓடிவந்த ஆனந்தன், அவளது வேகத்திற்கு ஈடுகொடுத்து அவளுக்கு அருகில் வந்து நின்றான். அவனது முகத்தில் எப்போதும் போல ஒரு மெல்லிய புன்னகை மலர்ந்திருந்தது.​

அனு, “இவ்வளவு சீக்கிரமா எங்க போயிட்டு இருக்கீங்க?” என்றாள் லேசான ஆச்சரியத்துடன்.​

“இந்தப் பூங்காவிற்கு வீட்டிலிருந்து ஜாக்கிங் வருவேன். அப்படியே கொஞ்ச நேரம் மனதை அமைதிப்படுத்திட்டுப் போவேன். இன்னைக்கு உங்களைப் இந்தப் பாதையில புதுசா பார்த்ததும் உங்களை நோக்கி வந்தேன்,” என்று தன் வழக்கமான சுறுசுறுப்புடன் பகிர்ந்துகொண்டான் அவன்.​

“அப்படியா! சரி, நான் கொஞ்சம் அவசரமா சர்ச்சுக்குப் போகணும்,” என்றபடி அனு தனது பயணத்தைத் தொடர்ந்தாள்.​அவனது கண்கள் ஆர்வம் மேலிட அவளை ஊடுருவின.

“நீங்க இந்துவா, கிறிஸ்டியனா அனு?”​மெலிதாகப் புன்னகைத்த அனுவின் இதழ்கள் இயல்பாக உதிர்த்தன,

“நான் இந்துதான், ஆனா கிறிஸ்டியனா மாறப்போறேன்.”​

அவன் புருவங்கள் வியப்பில் வளைந்தன. “என்னங்க இது புதுக்கதை!

இந்து மதத்துல இருக்கிற கடவுள் கொடுக்காததையா கிறிஸ்டியன் மதத்துல இருக்கிற கடவுள் கொடுக்கப் போறாரு?”

​”அப்படி இல்லை… இந்து மதத்துல இருக்கிற கடவுள்கள் நல்லவங்களுக்கு உதவ மாட்டேங்கிறாங்கன்னு எனக்குத் தோணுது. அதனாலதான் மதம் மாறிப் பார்க்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.”​

“எதை வச்சு நீங்க அப்படி ஒரு முடிவுக்கு வந்தீங்க?”

​”நிறைய காரணங்கள் இருக்கு ஆனந்த். உதாரணத்திற்கு ராமாயணத்தையே எடுத்துக்கோங்க… தாராதேவிங்கிற கதாபாத்திரம், நல்லவரான ராமருக்கு உதவாம ராவணனுக்கு உதவத் தேர்ல வருவாங்க. நீங்க ராமாயணம் படிச்சிருக்கீங்கதானே?”​

சிறிது நேரம் யோசனையில் மூழ்கிய ஆனந்தன், “படிச்சிருக்கேன்… ஆனா, அதை இப்படியும் எடுத்துக்கலாமே? நல்லவங்களுக்கு உதவாத கடவுள் இனிமேல் வேண்டாம்னு நீங்க ஒரு நாத்திகரா மாறியிருக்கலாமே?” என்றான் ஒரு முதிர்ந்த சிந்தனையுடன்.​

“ஆனா, இயேசு கிறிஸ்து நல்லவங்களுக்கு நிறைய உதவி செய்திருக்காரே!”​

“நிஜமாவா? அதுக்கு ஏதாவது ஒரு உதாரணம் சொல்லுங்களேன்,” என்று ஆனந்தன் குறும்பாகக் கேட்க,​

சிரித்துக்கொண்டே அனு சொன்னாள், “இப்படித் திடீர்னு கேட்டா நான் எதைச் சொல்றது? போகட்டும் விடுங்க, எங்க ஸ்கூல் பிரின்சிபல் இன்னைக்குப் பிரேயருக்கு வந்திருப்பார். அவர்கிட்ட ஒரு சின்ன உதவி கேட்கறதுக்காக போறேன்.”

​”ஓ! அப்போ இவ்வளவு நேரம் நீங்க பேசினதெல்லாம் வெறும் தமாஷா?”

​”ஏன், உங்களுக்குச் சிரிப்பு வரலையா?”​

“சரிங்க… அது என்ன உதவின்னு என்கிட்ட சொல்லலாமே?”​

சற்று நேரம் தயங்கியவள், “அது வந்து…” என்று வார்த்தைகளைத் தேடியபோது,​அவளது தயக்கத்தைப் புரிந்து கொண்ட ஆனந்தன் கனிவோடு சொன்னான்,

“விருப்பமில்லாட்டி சொல்ல வேண்டாம் அனு.”​

“அப்படி ஒன்றும் பிரம்ம ரகசியம் இல்லை. ஒரு அனாதை ஆசிரமத்துல தங்கி வேலை பார்க்கறதுக்கு ஆசிரியர் தேவைன்னு சொன்னாங்க. நான் அந்த வேலைக்குப் போகலாமானு அவங்ககிட்ட கேட்டிருந்தேன். அதைப்பற்றிப் பேசுவதற்காகத்தான் பிரின்சிபாலைப் பார்க்கப் போறேன்.”​”

“உங்களுக்குக் குழந்தைகள்மேல அவ்வளவு பிரியமா அனு?”​

அதற்கு என்ன பதிலளிப்பதென்று அறியாமல் அனு மெலிதாகப் புன்னகைத்தாள்; அந்தப் புன்னகைக்குள் பல ரகசியக் காயங்கள் ஒளிந்திருந்தன.

​”நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க அனு…” என்றவன் குரலில் தீர்க்கமான அக்கறை நிரம்பியிருந்தது. “ஆதரவற்ற குழந்தைகள் கஷ்டப்படுறாங்க, அவங்க கூடவே இருந்து பாதுகாக்கணும்னு நீங்க நினைக்கிறது தப்பில்லை. ஆனா, உங்களோட பிரிவால் உங்களைச் சார்ந்தவங்களும் கஷ்டப்படுவாங்கன்னு கொஞ்சம் யோசித்துப் பாருங்க. அதுக்காக அந்த வேலைக்குப் போகாதீங்கன்னு நான் சொல்லல; தாராளமா போங்க. குழந்தைகளோட உங்களால எவ்வளவு நேரம் செலவழிக்க முடியுமோ அவ்வளவு நேரம் இருங்க. ஆனா, ராத்திரி தூங்குறதுக்கு உங்களோட சொந்த வீட்டிற்குத் திரும்பி வந்துடுங்க. அதுக்காக ‘எந்த ஊர்லயோ இருந்துட்டு இங்க வர முடியுமா’னு கேட்டுடாதீங்க; குடும்பத்தோட அந்த ஊருக்கே போயி, அங்க உங்களுக்கென்று ஒரு தனி வீடு எடுத்துத் தங்குங்க. நான் சொல்றதை ஏத்துக்கிறது உங்க விருப்பம்.

“​ஆனந்தனின் அந்த நிதானமான வார்த்தைகள் அனுவின் இதயத்தில் ஆழமாகப் பதிந்தன. அதுவரை எப்படியாவது அந்த ஆசிரமத்தில் சேர்ந்துவிட வேண்டும் என்ற ஒற்றை இலக்கு மட்டுமே அவளது மூளையை ஆக்கிரமித்திருந்தது. குடும்பத்தைப் பற்றியோ, தன் பிரிவால் தவிக்கும் வயதான பெற்றோரைப் பற்றியோ சிந்திக்கும் பக்குவமோ அவளிடம் இருக்கவில்லை. ‘ஆமாம்… அம்மாவும் அப்பாவும் தனியாகத்தானே இருப்பாங்க? அவர்களுக்கு இந்த உலகத்தில் இருக்கிற ஒரே சொந்தம் நான் மட்டும்தானே’ என்ற எண்ணம் அவளுக்குள் ஒரு மின்னல் வெட்டாய் வெடித்தது.​”சரிங்க, நீங்க சொல்றபடியே அங்க தங்கி வேலை பார்க்க முடியுமான்னு யோசிச்சுப் பேசுகிறேன்,” என்று சொல்லி அவள் கிளம்பும் அந்தத் தருணத்தில்தான் அந்த எதிர்பாராத நாடகம் அரங்கேறியது.

​பூங்காவிற்கு வெளியே சாலையோரமாக அமர்ந்திருந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் திடீரெனத் தள்ளாடிச் சரிந்து கீழே விழுந்தார்.​அவர் விழுந்ததைக் கண்ட பக்கத்துக்கடைக்காரர்களும் அந்தத் தெருவாசிகளும் நொடிப்பொழுதில் தங்கள் தீர்ப்பை வழங்கிவிட்டனர்.

​”நேத்து அடிச்ச போதை இப்பதான்யா ஏறி இருக்கு போல…” என்று ஒருவன் அலட்சியமாக உதட்டைப் பிதுக்கினான்.​

“இவன் போற வர்ற ஆளுகளை வம்பு இழுத்துட்டு இருந்தான்; இப்போ கண்ட இடத்துல படுத்து உறங்கப் புறப்பட்டுட்டான் பாரு!” என்று மற்றொருவன் ஏளனம் செய்தான்.

​”இவனெல்லாம் திருந்தாத ஜென்மம், குடிகாரப் பையன்!” என்று ஊரே அவரை ஏளனமாகவும் வசைபாடிக் கொண்டிருக்க,

அனுஷா எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஓடினாள் அந்த மனிதரின் அருகில்.​அவரது கன்னத்தைத் தட்டி, பதற்றத்துடன் அழைத்தான், “சார்… என்னாச்சு சார்?”​

அவரால் பேச முடியவில்லை; உதடுகள் வெடவெடத்தன, கண்கள் சொருகித் திணறின.​

பதறிப்போன ஆனந்தன் அருகில் வந்து கையைப் பிடித்து இழுத்தான். “அனு, இவர் இந்தத் தெருவுல குடிச்சுட்டுக் கிடக்கிறது வழக்கமான ஒண்ணுதானே… நமக்கு எதுக்கு வம்பு, விடுங்க.”​

“இல்லை ஆனந்த், இவர் குடிபோதையில் விழல; இவருக்குச் சர்க்கரை அளவு திடீர்னு குறைந்திருக்கும். பக்கத்துக்கடையில போய் ஒரு ஜூஸ் வாங்குங்களேன்… கேஸ் இல்லாததா பார்த்து வாங்குங்க!” என்றாள் அனு உறுதியான குரலில்.​

“மேங்கோ ஜூஸ் ஓகேதானே அனு?” என்றபடியே பக்கத்து பெட்டிக்கடைக்கு மின்னல் வேகத்தில் ஓடிச் சென்று மாம்பழ ஜூஸ் ஒன்றை வாங்கி வந்து அனுவின் கையில் நீட்டினான் ஆனந்தன்.​

அதை மெல்லத் திறந்து அந்த நபரின் வாயில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றினாள் அனு. இரண்டு மூன்று மொடுக்குகள் தொண்டையில் இறங்கியதும், அந்த மனிதருக்கு மெல்லத் தெளிவு பிறந்தது. அவர் தடுமாறிக்கொண்டே எழுந்து அமர்ந்தார்.​அனு பாட்டிலை முழுவதுமாகக் கொடுத்து, “இப்படியே குடிங்க சார்,” என்றாள் கனிவோடு.​அதை வாங்கி முழுவதையும் குடித்துவிட்டுப் பெருமூச்சு விட்டவர், கலங்கிய கண்களுடன் கூறினார்: “

எனக்குச் சுகர் வந்துடுச்சும்மா… அதனால இப்போதெல்லாம் நான் போதையை தொடுவதே இல்லை. ஆனாலும் யாருமே என்னை நம்ப மாட்டேங்கிறாங்க. நேத்து கூட வீட்ல சண்டை போட்டுட்டு சாப்பிடாம வெளிய வந்துட்டேன். இங்கதான் விடிய விடிய உறங்கிக்கிட்டிருந்தேன். இப்போ எந்திரிச்சு வீட்டுக்குப் போகலாம்னு நினைச்சப்போ கை காலெல்லாம் நடுங்கிச்சு, தடுமாற்றமா இருந்தது… அதனாலதான் உட்காரப் பார்த்தேன், ஆனா என்னால நிலை கொள்ள முடியல. ரொம்ப நன்றிம்மா… நீங்களாவது என் நிலைமையைப் புரிந்து உதவி செய்றீங்களே…” என்று இருவரையும் பார்த்துத் தழுதழுத்த குரலில் நன்றி கூறினார்.​

அனு அவரை முறைத்துக்கொண்டே, “உடம்பு கெட்டுப் போகுதுன்னு தெரிஞ்சும் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் உங்க இஷ்டத்துக்குச் சுத்திட்டு, இப்போ யாரும் நம்ப மாட்டேங்கிறாங்கன்னு சொன்னா என்ன அர்த்தம் சார்? உங்க வீட்ல இருக்கிறவங்க என்ன காரணத்துக்காக உங்ககிட்ட சண்டை பிடிச்சாங்களோ தெரியாது; ஆனா, அவங்களுக்கு உங்க மேல ஒரு நல்ல நம்பிக்கை வர வைக்க வேண்டியது உங்க பொறுப்பு. முதல்ல போயி ஏதாவது கடையில நல்லாச் சாப்பிடுங்க,” என்று கண்டிப்புடன் கூறிவிட்டு, தன் ஹேண்பேக்கில் இருந்த நூறு ரூபாய் நோட்டை எடுத்து அவரது கையில் வலுக்கட்டாயமாகத் திணித்தாள்.​

அதை வியப்போடு பார்த்துக்கொண்டிருந்த ஆனந்தன், “பரவாயில்லையே அனு… நீங்க டீச்சர் படிச்சதுக்கு நர்ஸ் படிச்சிருக்கலாமே? உங்களுக்கு இவ்வளவு விஷயம் தெரியுதே!” என்றான் ஆச்சரியம் நீங்காமல்.​

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை ஆனந்த்… என்னோட அப்பாவுக்கும் சில நேரம் இந்த மாதிரிச் சர்க்கரை குறைபாடு வரும். அதனால நான் இதைப் பார்த்திருக்கேன்; உடனே சுலபமா கண்டுபிடிச்சிட்டேன்,” என்றாள் இயல்பாக.​

“சரி அனு, நீங்க கிளம்புங்க; இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தால் அடுத்த ட்ரீட்மென்ட்டுக்கு ஆள் தயார் ஆகிடும் போலிருக்கு,” என்று ஆனந்தன் புன்னகையுடன் கூற,​”எனக்குத் தெரிஞ்ச வைத்தியத்தை செய்துட்டுப் போறேன்,” எனச் சிரித்துக்கொண்டே விடைபெற்று தேவாலயத்தை நோக்கி விரைந்தாள் அனுஷா.​

நடந்து செல்லும் அவளது நிழலையே விழி அகலாமல் பார்த்துக் கொண்டு நின்றான் ஆனந்தன். அவளது ஒவ்வொரு அடியும் அவனது இதயத் துடிப்போடு பின்னிப் பிணைந்திருந்தது. மனதுக்குள் அவளிடம் கெஞ்சினான், மன்றாடினான்—’அனு, தயவு செஞ்சு இந்த ஊரை விட்டு எங்கேயும் போயிடாதீங்க; நீங்க காலமெல்லாம் என்னோட வாழணும்னு நான் ஆசைப்படுகிறேன். என்னோட ஆசை கூடிய சீக்கிரமே உங்களுக்குப் புரியவரும்… அதுவரைக்கும் ஆவது எங்கேயும் போயிடாதீங்க’ என்று ஒரு தெய்வத்திடம் முறையிடுவதைப் போல தன் மனதுக்குள் வேண்டிக்கொண்டே, அவள் தூரத்தில் ஒரு புள்ளியாய் மறையும் வரை அங்கேயே சிலிர்ப்புடன் நின்றிருந்தான்.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!