“என்னை விடுடி… நா போயிட்டா உனக்குனு யார் இருக்கா சொல்லு?” என்று கண்ணீர் மல்க கீதா கேட்க, அதற்குப் பதிலாகத் தன் தாயை அணைத்துக்கொண்டாள் நேகா.
அவளின் கண்களில் கண்ணீர் துளிர்க்கும் சமயம், அவர்களுக்கு முன்பாக வந்து நின்றான் யட்சன்.
அந்த இளைஞனைப் பார்த்ததும், நேற்று பார்த்த அதே இளைஞன் என்பதைப் புரிந்துகொண்டார் கீதா.
“நேகா… நேகா!” என்று கீதா அழைத்ததும், அவருடைய கண்களை, ‘என்ன?’ என்பது போல் நோக்கினாள்.“பின்னாடி பாருடி” என்று கண் அசைவில் காட்ட, பின்னால் திரும்பிப் பார்த்தாள் நேகா.
முகத்தில் கருப்பு நிற முகக்கவசம் அணிந்து நின்றுகொண்டிருந்தான் யட்சன். இன்று தான் அவனை உற்றுக் கவனித்தாள் நேகா. நீல நிறச் சட்டைக்கு எடுப்பாகக் கருப்பு நிறப் பேண்ட் அணிந்து, பார்க்கவே ஐ.டி.யில் வேலை செய்பவனைப் போல் டிப்டாப்பாக நின்றிருந்தான். முகக்கவசத்தைத் தாண்டித் தெரிந்த அவனுடைய கண்களைக் கூர்ந்து நோக்கியவளின் மனம் திகைப்பில் ஆழ்ந்தது.
‘இது எப்படி சாத்தியம்?’ என்று மனதிற்குள் கேட்டுக்கொண்டாள்.அடுத்த நொடியே அவனுடைய முகக்கவசத்தைக் கழற்றி முகத்தைக் காண வேண்டும் என்று அவளுடைய உள்ளம் துடிக்கத் தொடங்கியது.
அறியாத ஆடவனிடம் முகக்கவசத்தைக் கழற்றச் சொல்வது எப்படி என்று புரியாமல் கையைப் பிசைந்தாள்.
தன் மகளின் விசித்திரமான நடவடிக்கையைக் கண்ட கீதா, இருக்கையிலிருந்து எழுந்து, “எங்களுக்கு உதவி செஞ்சதுக்கு ரொம்ப நன்றி தம்பி” என்று முகத்தில் புன்னகையுடன் கைகூப்பிக் கூறினார்.
அதில் பதறிய யட்சன், “பெரியவங்க நீங்க… நீங்க என்னம்மா என்னைப் போய்க் கையெடுத்துக் கும்பிடுறீங்க?” என்றவன், அவருடைய கரங்களைப் பிடித்துக் கீழே இறக்கினான்.
அவனுடைய குரலைக் கேட்டதும் நேகாவுக்குள் சந்தேகம் வலுத்தது. இருப்பினும், நம்ப முடியாமல் மீண்டும் அவனுடைய கண்களை ஏறெடுத்துப் பார்த்தாள்.
“நீங்கதான் தம்பி, அந்தக் கடவுள் போல வந்து காப்பாத்துனீங்க. நீங்க இல்லைன்னா அன்னைக்கு என்ன நடந்திருக்கும்னு நினைச்சுக்கூடப் பார்க்க முடியலை. ரொம்ப நன்றிங்க தம்பி” என்று மீண்டும் நன்றி கூறினார்.
சில நொடிகள் அவனுடைய கண்களையே உற்றுப் பார்த்தவள், அதிலிருந்து மீண்டாள்.
இதுவரை தன் மகள் எதுவும் பேசாமல் சிலைபோல் நிற்பதை ஓரக்கண்ணால் கவனித்துவிட்டவர்,“நேகா… நேகா!” என்று அழைத்தார்.
அவருடைய அழைப்பில் சுயநினைவுக்கு வந்தவள், “ரொம்ப நன்றிங்க… உங்க காசை மாசம் மாசம் கொஞ்சம் கொஞ்சமா திருப்பிக் கொடுத்திடுறோம்” என்று அவனுடைய கண்களை உற்றுப் பார்த்தபடி கூறினாள்.
“அந்தக் காசெல்லாம் எனக்கு வேண்டாங்க… நீங்களே வச்சுக்கோங்க” என்று மென்மையாக மறுத்தான்.
“என்னங்க சொல்றீங்க? இருபதாயிரம் என்ன சின்ன அமௌண்ட்டா? சீக்கிரமாவே உங்க காசைத் திருப்பிக் கொடுத்திடுறேன்” என்று மீண்டும் நேகா கூற, அதற்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் தலையசைத்தான்.
“வேற ஏதாவது உதவி வேணும்னா தயங்காம கேளுங்க. உங்களுக்கு ‘ஹாய்’னு ஒரு மெசேஜ் வந்திருக்கும் பாருங்க. அதுதான் என் நம்பர்” என்றான்.
உடனே தன் மொபைலை எடுத்து வாட்ஸ்அப்பைப் பார்த்தாள். அதில் புதிய நம்பரிலிருந்து வந்த ‘ஹாய்’ என்ற குறுஞ்செய்தி இருக்கவே, அதைப் பார்த்துவிட்டு யட்சனை ஏறெடுத்துப் பார்த்தாள்.
அவளுடைய கண்களை நேருக்கு நேர் பார்க்க இயலாதவன், சற்றுத் தலையைக் குனிந்துகொண்டான்.
“ஏன், நம்பர் உங்களுக்கு எப்படி கிடைச்சது?” என்று புருவங்களை உயர்த்திக் கேட்டாள்.
“என்னடி உனக்குப் பிரச்சனை? அந்தத் தம்பி நமக்கு இவ்வளவு உதவி செஞ்சிருக்கு. அந்தப் புள்ளையைப் போய் நொய் நொய்னு கேள்வி கேட்கிற?” என்று நேகாவை வசைபாடினார் கீதா.
இனிமேலும் அங்கு நின்றுகொண்டிருந்தால் வேறு எதையாவது கேள்வி கேட்பாள் என்று நினைத்தவன், “நான் போயிட்டு வரேங்க” என்றுவிட்டு அங்கிருந்து சென்றான்.
செல்லும் யட்சனைக் கண்ட கீதாவின் மனதில் இதுவரை நிலவிய பயம் விலக, அவருடைய கண்களில் ஒளி பிறந்தது.
யட்சன் செல்வதைப் பார்த்துவிட்டுத் திரும்பிய நேகாவின் கண்களில், கீதாவின் பிரகாசமான முகம் பளிச்சிட்டது.
அவருடைய எண்ணத்தை அறிந்த நேகா, “பகல் கனவு காணாத மா… பலிக்காது” என்றாள்.
“உன் வாயிலிருந்து நல்ல வார்த்தையே வராதாடி? அந்தத் தம்பி எவ்வளவு நல்ல பையனா இருக்கான். அந்தப் பையனைப் போய் நேத்து துரத்திவிட்டுட்டியே!” என்றவரின் முகத்தில் சிறிது கவலை தெரிந்தது.
அப்போதுதான் நேத்து நடந்தது நினைவுக்கு வர, தன் நாக்கைக் கடித்துக்கொண்டாள். வலியில், “ஆ! ஆ!” என்றாள்.
“என்னடி ஆச்சு?”
“அது ஒண்ணுமில்லை மா… நாக்கைக் கடிச்சிட்டேன். சரி, நீ வா. எக்ஸ்ரே எடுக்கப் போவோம்” என்று கூறிக் கீதாவை அழைத்துச் சென்றாள்.
எக்ஸ்ரே எடுத்துவிட்டு மருத்துவரைப் பார்க்கச் சென்றனர்.
மூக்குக் கண்ணாடியுடன், ஓரிரு முடிகள் நரைத்திருந்த பெண் மருத்துவர் ஒருவர் நாற்காலியில் அமர்ந்திருந்தார். இவர்களைப் பார்த்ததும் தலையசைத்து, “உள்ளே வாங்க” என்றார்.
இருவரும் மருத்துவருக்கு எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்துகொள்ள, தியோவை மடியில் வைத்துக்கொண்டாள் நேகா. அவனுடைய கண்கள் மேசையில் வைத்திருந்த பொருள்களை எடுக்கத் துடித்தன. அதைக் கவனித்தவள், அவனுடைய கைகளை ஒற்றைக் கையால் பிடித்தபடி, மற்றொரு கையால் எக்ஸ்ரேவையும் டெஸ்ட் ரிப்போர்ட்டையும் மருத்துவரிடம் நீட்டினாள்.
அவற்றை வாங்கிப் பார்த்த மருத்துவரின் கண்கள் சுருங்கின. பின்னர் நிதானமாகத் தலையை நிமிர்த்தி நேகாவைப் பார்த்தவர், கீதாவை நோக்கித் திரும்பினார்.
“எத்தனை நாளா உங்களுக்கு இருமல், சளிப் பிரச்சனை இருந்தது?” என்று மூக்குக் கண்ணாடி வழியே அவரை உற்றுப் பார்த்துக் கேட்டார்.
“அது ஒரு மாசமா இருந்தது டாக்டரம்மா” என்றார் கீதா.அந்த வார்த்தைகளைக் கேட்ட மருத்துவர், அருகிலிருந்த நேகாவைப் பார்த்தார்.
“இத்தனை நாளா ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டு வராம என்ன பண்ணிட்டு இருந்தீங்க?” என்று சற்றுக் கடுமையாகக் கேட்டார்.
“நா எவ்வளவோ சொல்லியும் அம்மாதான், டாக்டர், ஹாஸ்பிடலுக்கு வரமாட்டேன்னு அடம்பிடிச்சு வரலை” என்றுவிட்டு நேகா தலையைக் குனிந்துகொண்டாள்.
மருத்துவர் மருந்துச் சீட்டில் சில மருந்துகளை எழுதிக் கொடுத்தார்.
“இந்த மருந்துகளை நான் சொன்னபடி தவறாம எடுத்துக்கணும். உடம்புல ஏதாவது மாற்றம் தெரிஞ்சா உடனே வந்து பார்க்கணும். அடுத்த பரிசோதனைக்கும் சரியான நேரத்துக்கு வந்திடுங்க” என்று அறிவுறுத்தினார்.
மருந்துச் சீட்டை வாங்கிக்கொண்டு எழுந்து அறையை விட்டு வெளியே சென்றனர்.வெளியில் வந்ததும் தான் தியோவைக் கவனித்தாள் நேகா. அவனுடைய கைகளில், மருத்துவரின் மேசையில் பேப்பர் வெயிட்டாக வைக்கப்பட்டிருந்த தாஜ்மஹால் உருவம் உள்ளே தெரியும் அழகிய கண்ணாடி உருண்டையை வைத்து விளையாடிக்கொண்டிருந்தான்.
“டேய் தியோ, இது என்ன பழக்கம்? அடுத்தவங்க பொருளை எடுக்கிறது? ஒழுங்கா கொடு” என்று அதட்டினாள்.
அதில், “அஅஆஆ…” என்று அழுதுகொண்டு அதைத் தர மறுத்தான். அவனுடைய கைகளிலிருந்து அதைப் பிடுங்கியவள், “ஏம்மா, நீ இவனைப் பார்த்துக்கோ. நா டாக்டர்ட்ட இதைக் கொடுத்துட்டு வந்துடுறேன்” என்றுவிட்டு தியோவைக் கீதாவிடம் கொடுத்துச் சென்றாள்.
மருத்துவர் அறைக்குள் விறுவிறுவென்று நுழைந்தவள், “ஸாரி டாக்டர், என் மகன் இதைத் தெரியாம எடுத்துட்டு வந்துட்டான்” என்று கூறிப் பொருளை மேசையின் மேல் வைத்தாள்.
பின்னர் மருத்துவரை நோக்கியவள், “எங்கம்மாவுக்குச் சரியாயிடும் தானே, டாக்டர்?” என்றுவிட்டு அமைதி காத்தாள்.
“நீங்க இன்னும் கொஞ்சம் சீக்கிரமா வந்திருக்கணும். இப்போ அவங்க உடல்நிலையை ரொம்பக் கவனமா பார்த்துக்க வேண்டியிருக்கு. நான் கொடுத்த மருந்துகளைச் சரியான அளவுல, சரியான நேரத்துக்கு எடுத்துக்கணும். சத்தான உணவுகளைக் கொடுங்க. அடுத்த பரிசோதனைக்கு மறக்காம கூட்டிட்டு வாங்க” என்று மருத்துவர் கூறினார்.
“நன்றி டாக்டர்” என்றுவிட்டு வெளியே வந்தவளின் மனம் வலியால் நிறைந்திருந்தது.
கீதாவைச் சுற்றி ஓடி விளையாடிக்கொண்டிருந்தான் தியோ. அவனைப் பிடிக்க முயற்சி செய்துகொண்டிருந்தார் கீதா. அனைத்தையும் கண்டவளின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. அதை யாருக்கும் தெரியாமல் துடைத்துக்கொண்டு புன்னகைத்தாள்.
ஓடிக்கொண்டிருந்த தியோவைத் தூக்கித் தன் இடுப்பில் வைத்துக்கொண்டாள். இவளிடம் வந்தவன் முறைத்துக்கொண்டு தலையைத் திருப்பிக்கொண்டான்.
“அடேங்கப்பா, கோபமா? செல்லக்குட்டி சமத்தா இருந்தா சாக்லேட் வாங்கித் தருவேனாம்!”
அதைக் கேட்டவன், “இஈஈ…” என்று தன் பற்கள் வெளியே தெரியப் புன்னகைத்தான்.
மாத்திரைகளை வாங்கிக்கொண்டு மூவரும் வீட்டிற்குச் சென்றனர். வழிநெடுக மறைந்திருந்து யட்சன் தன்னைப் பின்தொடர்வதை நேகா கண்டும் காணாததுபோல் நடந்துகொண்டாள்.
வீட்டிற்குள் நுழைந்ததும் கட்டிலில் அமர்ந்த கீதா, “அந்தப் பையன் உன்னையே சுத்திச் சுத்தி வரான் டி. அவனையே நீ ஏன் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது?” என்று தன் மகளின் வாழ்வில் விடியல் கிடைக்க வேண்டுமென்ற நப்பாசையில் கேட்டார்.
அதில் கோபமான நேகா, “ஏம்மா, எத்தனை தடவை உங்கிட்ட சொல்ல? இந்த ஜென்மத்துல என் புருஷன் ஒருத்தர் தான் மா. வேற யாருக்கும் என் மனசுல இடமில்லை” என்றாள்.
அவளுடைய மனக்கண்ணின் முன் யட்சனின் கண்கள் வந்து சென்றன.
“நடிக்காத டி… பெத்தவளுக்குத் தெரியாதா உன் மனசுல என்ன இருக்குனு? பின்ன ஏன்டி அந்தப் பையன் கண்ணையே அப்படி உத்துப் பார்த்த? ஆசை இல்லாமலையா?”
இந்தக் கேள்வியை எதிர்பாராதவள் சற்றுத் தடுமாறினாள்.
“நீ வேற ஏன் மா… அந்தப் பையனை ஏற்கெனவே பார்த்த மாதிரி இருந்தது. அதான் யாருனு உத்துப் பார்த்தேன்” என்றாள்.
“அப்படி தெரிஞ்சா அந்தப் பையன்கிட்ட மாஸ்க்கைக் கழட்டச் சொல்லிப் பார்க்க வேண்டியதுதானேடி? அப்படியா பார்ப்ப?” என்றவரின் கேள்விக்கு நேகாவால் பதில் கூற முடியவில்லை.
கீதா தன் மகளின் முகத்தையே உற்றுப் பார்த்தார். அவள் பதில் சொல்லாமல் தடுமாறுவதையும், பார்வையைத் தவிர்ப்பதையும் கவனித்தார்.
“என்னடி, நான் கேட்கிறதுக்குப் பதில் சொல்லாம முகத்தைத் திருப்பிக்கிற? உன் மனசுல என்ன ஓடுதுன்னு உன் முகத்தைப் பார்த்தாலே எனக்குத் தெரியும். ஏதோ ஒண்ணை என்கிட்ட மறைக்கிற, இல்லையா?” என்றார்.அந்தக் கேள்வியில் நேகா ஒரு கணம் அமைதியானாள்.
தன் தாயின் பார்வையை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் வேறுபக்கம் திரும்பினாள்.
“நீ இப்படித்தான் சம்பந்தமில்லாததைப் பேசிட்டு இருப்ப. உனக்குப் பதில் சொல்லி முடியாது. நா குளிக்கப் போறேன்” என்றுவிட்டு தன் துணிகளை எடுத்துக்கொண்டு வெளியே இருந்த கிடுகுகளால் ஆன குளியலறையை நோக்கிச் சென்றாள்.
குளியலறையின் கதவைச் சாத்தியவள், வழக்கம்போல் பாவாடை ஒன்றைக் கட்டிக்கொண்டு குளிக்கத் தொடங்கினாள்.
கப்பை எடுத்து தண்ணீரை மொண்டு தன் மேனியில் ஊற்றிக்கொண்டிருந்தவளின் மனதில் ஏதோ சரியில்லை என்று தோன்றியது. சுற்றும் முற்றும் பார்த்தாள். கிடுகுகளால் சுற்றப்பட்டிருந்த அந்தக் குளியலறையின் ஒரு சிறிய ஓட்டையின் வழியாக ஒரு கண் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தது.
அதைக் கண்டதும் பதறியவள், “அம்மா! அம்மா!” என்று கத்தத் தொடங்கினாள்.அவளுடைய சத்தத்தைக் கேட்டு கீதா வெளியே வர, இதுவரை மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த உருவம் அங்கிருந்து சென்றிருந்தது.
“என்னடி கத்திட்டே இருக்க?” என்ற முணுமுணுப்புடன் அவளின் அருகில் வந்தார் கீதா.
“துண்டு எடுத்துட்டு வர மறந்துட்டேன் மா… எடுத்துட்டு வந்து தா” என்றாள் நேகா.
“குளிக்க வரவளுக்கு அதைக்கூட எடுத்துட்டு வரத் தெரியாதாடி?” என்று கடிந்துகொண்டவர், துண்டை எடுத்துவந்து கொடுத்துவிட்டுச் சென்றார்.
பாதியிலேயே குளியலை முடித்துவிட்டு வெளியே வந்தவள், சுற்றும் முற்றும் யாராவது இருக்கிறார்களா என்று தேடினாள். யாரும் இல்லையென்றதும் வீட்டிற்குள் சென்றாள்.
இதுவரை நேகா குளிப்பதை ஒளிந்திருந்து பார்த்துவிட்டு ,சிறிய சந்துக்குள் மறைந்திருந்த நபரின் முகத்தை துணியால் மூடி தன்னிடம் இழுத்தான் யட்சன்.
அடுத்த நொடியே அவன் முன்னால் வந்து நின்ற யட்சன், அவனுடைய முகத்தில் நான்கு குத்துகள் விட்டான். அதிலும் ஆத்திரம் அடங்காதவன், அவனுடைய இரு கைகளையும் பிடித்து மடக்கினான். அவன் திமிறித் தப்பிக்க முயன்றபோதும் விடாமல் பிடித்திருந்த யட்சன், அவனுடைய கைகளை முறுக்கி எலும்பு முறியும் வரை திருகிவிட்டு அங்கிருந்து ஓடிச் சென்று மறைந்தான்.
அடிபட்ட நபர் வலியால் துடித்தபடி முகத்தை மூடியிருந்த துணியை விலக்கிப் பார்த்தான். அதற்குள் யட்சன் அங்கிருந்து மறைந்திருந்தான்.
வீட்டிற்குள் சென்ற நேகாவின் மனதினுள், ‘யார் ஒளிந்திருந்து பார்த்தது?’ என்ற கேள்வி ஓடிக்கொண்டிருந்தது.
குளித்துவிட்டு வந்ததிலிருந்து ஏதோ யோசனையில் அமர்ந்திருந்த நேகாவைப் பார்த்த கீதா, “என்னடி ஆச்சு உனக்கு? வந்ததுல இருந்து நானும் பார்க்கிறேன். தலையைக்கூட துவட்டாம, அப்படியே பேய் அறைஞ்ச மாதிரி உட்கார்ந்திருக்க” என்றார்.
அவருடைய குரலில் யோசனையிலிருந்து விடுபட்டவள், கீதாவை நோக்கினாள்.“ஒண்ணுமில்லை மா…” என்றவள் தலையைத் துவட்டிவிட்டு, “சரி மா, நா வயலுக்குப் போறேன். நீ இவனைப் பார்த்துக்கோ” என்றுவிட்டுக் கிளம்பினாள்.
“என்னடி சொல்ற? நானும் வரேன்…” என்றவருக்குச் சளி தொண்டையை அடைக்க, இறுமிக்கொண்டே வெளியே வந்தார். மண் நிரப்பப்பட்டிருந்த தேங்காய் சிரட்டையில் துப்பினார். அதில் ரத்தம் கலந்த சளி வெளிப்பட, உடனே அதை நேகாவின் கண்களுக்குத் தெரியாமல் மறைத்தார்.
“இப்படி இறுமிக்கிட்டே அங்க வந்து களவெட்டப் போறியா மா? நீ ரெஸ்ட் எடு மா. நா வள்ளி அக்காவைத் துணைக்கு கூப்பிட்டுக்கிறேன்” என்றுவிட்டு அவரைக் கடந்து வெளியே சென்றாள்.
போகும் நேகாவைப் பார்த்தவரின் கண்கள் கலங்கின. ‘தனக்குப் பின் தன் பிள்ளைக்கு யார் இருக்கா?’ என்ற நினைப்பு வந்து சென்றது.
அதற்கு விடையாக யட்சனை மனதில் நினைத்தவர், ‘அந்தப் பையனை எப்படியாவது நேகாவுக்குத் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும்’ என்று மனதிற்குள் சபதம் எடுத்துக்கொண்டார்.
மறுபுறம், வயலுக்கு நேகா நடந்துசென்ற ஒத்தையடிப் பாதையில் எதிரில் வந்தார் மாரியப்பன். முடிகள் நரைத்து, முன்பக்க வழுக்கைத் தலை வெயிலில் மின்னிக்கொண்டிருந்தது. முன்பக்கத் தொப்பை நீண்டுகொண்டிருக்க, கம்பீரமாக மீசையை முறுக்கிவிட்டுக்கொண்டு அவளுக்கு முன்னால் வந்து நின்றார்.
“உங்களுக்கு என்ன வேணும் தாத்தா?” என்று மரியாதையுடன் கேட்டாள்.
“தாத்தானு சொல்லாத…” என்றவரின் குரலில் வழக்கத்திற்கு மாறான குழைவு தெரிந்தது.
அதில் ஏதோ சரியில்லை என்று புரிந்துகொண்டவள், “குடிச்சிருக்கீங்களா தாத்தா? பார்த்து வீட்டுக்குப் போங்க” என்றுவிட்டு அங்கிருந்து நகர முயன்றாள்.
“தாத்தானு சொல்லாதனு சொன்னா கேட்க மாட்டியா?” என்றவர் அவளுடைய கைகளைப் பிடித்து இழுத்தார்.
அதில் பதறியவள், அவரிடமிருந்து தன் கைகளை விடுவிக்கப் போராடினாள்.“என்னடி, பத்தினி மாதிரி நடிக்க? ஒரு ராத்திரிக்கு எவ்வளவுனு சொல்லு, நா தரேன். அந்த ஓரமா ஒதுங்கிக்கலாம்” என்றவரை முறைத்துப் பார்த்தாள்.
கோபத்தில் அவரை மற்றொரு கையால் தள்ளிவிட்டு, தன் கையை விடுவித்துக்கொண்டு அங்கிருந்து ஓடினாள்.வயலுக்குச் சென்றவளின் மனவலி உச்சத்தை அடைந்தது. மாரியப்பனின் கேவலமான பேச்சு காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்தது. அவள் எத்தனை முறை அனைத்தையும் பொறுத்துக்கொண்டு வாழ முயன்றாலும், ஒவ்வொருவரும் தன்னைத் தவறாகவே பார்ப்பது அவளுக்குள் வலியை ஏற்படுத்தியது.
அவளுடைய கணவனை இழந்த துயரம் போதாதென்று, அவள் மீது சுமத்தப்படும் அவதூறுகளும் அவமானங்களும் அவளை நிம்மதியாக வாழவிடவில்லை.
கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.
“இவ மூஞ்சுல முழிச்சா விளங்குமாடி?”
“ராசிகெட்டவ… இவ ராசிதான் இவ புருஷனைக் கொன்றிருக்கும்!”
“அந்தப் பையனை இவ வச்சிருக்காளாம் டி!”
“ஓடுகாளி தானே இவ!”
“ஒரு ராத்திரிக்கு எவ்வளவுனு சொல்லு?”என்று ஒவ்வொருவரும் பேசிய வார்த்தைகள் அவளுடைய காதுகளில் மீண்டும் ஒலித்தன.
அவற்றிலிருந்து தப்பிக்க முடியாமல் மனதிற்குள் தவித்தவள், அருகிலிருந்த கிணற்றைப் பார்த்தாள். அவளுடைய கால்கள் தன்னால் கிணற்றை நோக்கி முன்னேறியது.
அடுத்த நொடி, தடுமாறி கிணற்றின் விளிம்பை நெருங்கியவளின் கையைப் பிடித்து இழுத்துத் தாங்கியது ஒரு கரம்.
அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தவளின் கண்முன்னே நின்றுகொண்டிருந்தான் யட்சன்.
அவனைக் கண்டதும் எதுவும் நடக்காததுபோல் கண்களில் இருந்த கண்ணீரை மறைத்துக்கொண்டு புன்னகைத்தாள்.
“நீங்க என்னங்க இங்க?” என்றாள்.
அவளுக்குப் பதிலளிக்காதவன் மெதுவாகத் தன் முகக்கவசத்தைக் கழற்றினான்.
அவனுடைய முகத்தைக் கண்ட நேகாவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.