குணா,மணி,திவ்யா,ஷாலினி என நால்வரும் வருணின் அருகில் வந்து
“டேய் நீ அந்தப் புள்ளையை பார்க்கிற பார்வையே சரியில்லையே?” என கேட்க
“டேய் அவ தான் என்னோட கனவு காதலி” என வருண் சொல்லி சிரிக்க நால்வரும் அதிர்ந்து விட்டனர்.
“டேய் வரு உண்மையைத்தான் சொல்றியா?” என திவ்யா கேட்க,
“உண்மைதான் மச்சி, நேத்து சிந்துவை தான் கடற்கரையில பார்த்தேன்!
திடீர்னு என் கண் முன்னாடி நின்னவ மறைஞ்சு போயிட்டா,அப்புறம் கடற்கரையில் தேடி தேடி பார்த்தேன் கண்டுபிடிக்க முடியல, ஆனால் இப்ப என் கண் முன்னாடியே இருக்கா, அதான் என் காதலிய ரசிச்சுக்கிட்டே இருக்கேன்” என கூறினான் வருண்.
காலையில் வருண் சொல்லும்போது கூட யாரும் நம்பவில்லை, ஆனால் இப்போது வருண் சொல்வதை அவர்களால் நம்பாமல் இருக்க முடியவில்லை.
“இன்னைக்கு உங்களுக்கு
என்னோட ட்ரீட் தான் “ என வருண் சொல்ல,
“தேங்க்ஸ் டா மச்சான்” என கூறினான் மணி.
“சரி சொல்லுங்க எங்க போகலாம்”
“பப்புக்கு போகலாம்” என மணியும் குணாவும் கோரசாக கூறினார்கள்.
“உதை விழும், போன தடவை பப்புக்கு தான் போனோம், இந்த தடவை ரெஸ்டாரன்ட் போயி, தலப்பாக்கட்டி பிரியாணியை ஒரு புடி புடிப்போம்” என திவ்யா கூறினாள்.
சில நிமிட உரையாடளுக்கு பிறகு ரெஸ்டாரெண்டுகே போகலாம் என முடிவு எடுக்க, ஷாலினியும் திவ்யாவும் ஹை-ஃபை போட்டுக் கொண்டனர்,
இவர்கள் கூச்சல் போட்டு சிரித்துக் கொண்டிருந்ததை பார்த்த சிந்து
“என்ன மீட்டிங் பெருசா இருக்கு?”என
கேட்க, நால்வரும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக் கொண்டனர்
அவர்களின் முகத்தை பார்த்த சிந்து “சொல்லக்கூடாத விஷயமா இருந்தா சொல்ல வேண்டாம்!” எனக் கூற
“அதெல்லாம் ஒன்னும் இல்ல
வருண் அவனோட காதலியை கண்டுபிடிச்சிட்டான், அதுக்காக இன்னைக்கு அவனோட ட்ரீட்டு அதான் எங்க போகலாம்னு முடிவு பண்ணிக்கிட்டு இருக்கோம்!” என மணி கூறினான்
“காதலியை கண்டுபிடிச்சிட்டாரா புரியலையே?” என சந்தேகமாய் வருணைப் பார்த்து கொண்டே சிந்து கேட்க,
சொல்லக்கூடாது எனும் விதமாய் சைகை செய்தான் வருண்.
சொல்லக்கூடாது என்று சொன்னால் விட்டு விடுவார்களா அவனின் நண்பர்கள்!
வருணைப் பார்த்தபடி சிரித்துக்கொண்டே
“பய கனவுல ஆறு மாசமா ஒரு பொண்ணு கனவுல வந்து காதல் டார்ச்சர் பண்ணிக்கிட்டே இருந்தா,
ஆறு மாசம் கழிச்சு நேத்து அந்த பொண்ண மாப்பிள நிஜத்துல பாத்துட்டான்!அதுக்குத்தான் இந்த ட்ரீட்” என கூறினான் குணா.
“ உங்க பிரண்டு நிறைய சினிமா பார்ப்பாரோ கனவு காதலின்னு சொல்லிக்கிட்டு இருந்திருக்காரு,நீங்களும் நம்பிகிட்டுயிருந்து இருக்கீங்க!இந்த காலத்துல இப்படி ஒருத்தர நான் பார்த்ததே இல்லை” என வருணை பார்த்துச் சிரித்தாள் சிந்து.
சிந்து கேலியாக பேசியதை கேட்கவும் வருணின் முகம் வாடியது.
“சரி யார் அந்த பொண்ணு?எங்க இருக்காங்க ? எனக்கும் அவங்கள இன்ரோ கொடுங்க பாக்கணும் போல இருக்கு!” என சிந்து சொல்ல பக்கத்தில் நின்ற நால்வரும் சிரித்தனர். இவர்களில் யாராவது சிந்துவிடம் உண்மையைச் சொல்லில் விடுவார்கள் என்று எண்ணி வருண் அவசர அவசரமாக
“சென்னையில தான் இருக்காங்க
நானே இன்னும் என்னோட லவ்வ சொல்லல,அவ கிட்ட என்னோட லவ்வ சொல்லிட்டு உங்களுக்கு இன்ட்ரோ கொடுக்கிறேன்”என கூறினான்.
“ஆல் தி பெஸ்ட், உங்க காதலிய மீட் பண்றதுக்கு நானும் ஆவலா இருக்கேன் “ என கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு வெளியேறினாள்.
“சிந்து ஒரு நிமிஷம்”
எனக் கூற திவ்யா நால்வரும் அதிர்ந்தனர். திவ்யா என்ன சொல்லப் போகிறாளோ என்று நால்வரும் அதிர்ச்சியாக அவளை பார்க்க,
“சிந்து நீங்களும் எங்களோட ரெஸ்டாரன்ட் வாரீங்களா?”என திவ்யா கேட்டாள். அதற்குப் பிறகுதான் வருணுக்கு உயிரே வந்தது.
“சாரி திவ்யா, என்னால இன்னைக்கு வர முடியாது.இன்னும் ஒரு நாள் பார்க்கலாம்”என கூறிக் கொண்டே விடைபெற்றாள்.
வருணின் முகத்தைப் பார்த்த நால்வரும்
“விடு மச்சான்,
அவ சொன்னதை நினைச்சு பீல் பண்ணாத! இவ்வளவு நாள் நீ சொன்னதை நாங்க நம்பவே இல்லை. எத்தனை தடவ நாங்க உன்னை கலாய்ச்சி இருக்கோம்.இப்ப இவதான்னு நீ சொன்னதுக்கு அப்புறம் நாங்க நம்புறோம்! அதே மாதிரி சிந்துவும் ஒரு நாள் புரிஞ்சிக்கிருவா” என்று கூறினான் மணி.
“கவலையை விடு மச்சி, இதுக்கே இப்படின்னா, இன்னும் எவ்வளவோ பாக்கணும்” என்று திவ்யா கூறி சிரித்தாள்.
இருவர் ஆறுதல் கூறிய பிறகும் வருணின் முகம் மாறாமல் இருக்க அவனை சிரிக்க வைக்க வேண்டும் என்று எண்ணி “உன் லவ்வ சிந்து ஏத்துக்கிட்ட பின்னாடி, அடி வாங்கணும், அப்புறம் மிதி வாங்கணும், அப்புறம் பொய் சொல்லணும், அப்புறம் வேலை செய்ற இடத்துல அசிங்கப்படணும்,
அப்புறம் தீயா வேலை செய்யணும் குமாரு” என சொல்லி சிரித்தான் குணா.
அவன் சொன்னதை கேட்டு அனைவரும் சிரிக்க வருணின் முகத்திலும் புன்னகை லேசாக எட்டிப் பார்த்தது.
வருண் ராகவுக்கும் போன் பண்ணி,”மச்சான் இன்னைக்கு என்னோட ட்ரீட்டு, பாக்கியா ரெஸ்டாரண்டுக்கு வந்துரு? “ என கூற
“சரி மச்சான் இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க இருப்பேன்” என ராகவ் கூறினான்.
நால்வரும் தங்கள் வாகனங்களை எடுத்துக் கொண்டு ரெஸ்டாரண்டை நோக்கி பயணித்தனர்.
ராகவ், தன்னுடைய காரை எடுத்துக்கொண்டு, ரெஸ்டாரண்டடிற்க்கு விரைந்தான்
அவன் வரும் வழியில் சாலையை கடப்பதற்க்காக நின்ற ஐம்பது வயது பெண்மணி ஒருவர் எதிர்பாராமல் ராகவ் காரின் குறுக்கே விழுந்தார்
ராகவ் சுதாரித்துக் கொண்டு காரை சடன் பிரேக் போட்டு நிப்பாட்ட,
கார் அப்பெண்மணியின் காலில் சற்று உரசி விட்டு நின்றது
சாலையில் கூட்டம் கூடி விட்டது, சாலையில் பக்கத்தில் இருந்தவர்கள், ராகவை திட்ட அந்தப் பெண்மணியோ, “என் மேல தான் தப்பு, நான் தான் அவசரப்பட்டு குறுக்க வந்துட்டேன் “ என கூறினார்
ராகவ் காரை விட்டு இறங்கி,அப்பெண்மணியை தன் காரில் ஏற்றிக்கொண்டு , மருத்துவமனையை நோக்கி விரைந்தான் ராகவ்
அந்த பெண்மணியோ, வலியில் முனங்க
“அம்மா ரொம்ப வலிக்குதா?
கொஞ்சம் பொறுத்துக்கோங்க,
இன்னும் கொஞ்ச நேரத்துல ஹாஸ்பிடல் போய்விடுவோம்” என ராகவ் கூறினான்.
“சரிங்க தம்பி,நான் இந்த ஊருக்கு புதுசு,ரோடை கிராஸ் பண்ண முடியாம ரொம்ப நேரம் நின்னுகிட்டு இருந்தேன்! என் பேரன பக்கத்துல இருக்குற ஸ்கூல்ல தான் சேர்த்து இருக்கோம். அவன கூப்பிட போகணும், லேட்டா போனா அவன் பயந்துருவான்,அதனாலதான் அவசரப்பட்டு ரோடு கிராஸ் பண்ண போக, உங்க கார் முன்னாடி விழுந்துட்டேன். என்னய மன்னிச்சிடுங்க தம்பி, என் மேல தான் தப்பு “ என மன்னிப்பு கேட்டார் அந்த பெண்மணி.
“பரவால்லம்மா, நீங்க குறுக்க வரவும் திடீர்னு என்ன செய்றதுன்னு தெரியாம நானும் பிரேக் போட்டேன் ஆனாலும் உங்க கால்ல
அடிபட்டுருச்சு “ என வருத்தப்பட்டு கொண்டே ராகவ் காரை ஓட்டி மருத்துவமனை வந்து சேர்ந்தான்.
பெண்மணியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல,மருத்துவர் பரிசோதித்து விட்டு, “ஒன்னும் பிரச்சனை இல்ல சின்ன சிராய்ப்பு தான், மருந்து வச்சு கட்டி விடுறேன்.
ஆயில்மெண்ட் எழுதி தாரேன் அதை மட்டும் போடுங்க சரியாயிடும்” என கூறினார் மருத்துவர்.
கொஞ்ச நேரத்தில் அடிபட்ட இடத்தில் மருத்துவ உதவி செய்து முடிய” அம்மா உங்க வீடு எங்க இருக்குன்னு சொல்லுங்க! உங்கள வீட்டிலேயே விட்டுவிடுகிறேன்”என ராகவ் கூறினான்.
“இல்ல தம்பி ஒரு ஆட்டோ புடிச்சு தாங்க நான் வீட்டுக்கு போயிடுறேன்.
என் பேரனையும் வீட்டுக்கு கூப்பிட்டு போகணும்” என சீதா கூறினார்.
“ஒன்னும் பிரச்சனை இல்லம்மா,
நானே உங்களையும் உங்க பேரனையும் உங்களையும் உங்க வீட்டில விடுறேன்” என ராகவ் சொல்ல ,”சரி தம்பி” என தலையசைத்தாள் அந்த பெண்மணி
அந்த பெண்மணி சொன்ன பள்ளிக்கூடத்தை நோக்கி ராகவின் விரைந்தது
“அம்மா உங்க பேரன் பெயர் என்ன?” என்று ராகவ் கேட்க “விஷ்வத்”என பதில் கூறினார் சீதா.
ராகவ் காரில் இருந்து இறங்கி அங்கிருந்த வாட்ச்மேனிடம் “விஷ்வத் எங்க?” எனக் கேட்க ,
“அதோ, அங்கே” என கைகாட்டினார் வாட்ச்மேன்.
அவர் கைகாட்டிய திசையை நோக்கி ராகவ் பார்க்க, குண்டு குண்டு கன்னங்களோடு,வசீகரிக்கும் விழிகளோடு ஐந்து வயது சிறுவன் ஒருவன் நின்று கொண்டிருந்தான்.
“விஷ்வத்” என ராகவ் கூப்பிட திருத்திருவென விழித்தான் அந்த பாலகன்.
“நீங்க யார்?” என விஷ்வத் கேட்க
உங்க பாட்டி கார்ல தான் இருக்காங்க உன்னைய கூப்பிட்டு வர சொன்னாங்க” என கூறினான் ராகவ்.
ராகவிடம் வந்த விஷ்வத், “எங்கே என்னோட பாட்டி?” என கேட்க
காரை நோக்கி கை நீட்டினான் ராகவ்,
இருவரும் காருக்குள் ஏறி அமர, சீதாவை பார்த்த விஷ்வத்
“பாட்டி உனக்கு என்ன ஆச்சு?”எனக் கேட்க, “பாட்டி கீழ விழுந்துட்டாங்க!” எனக் கூறினான் ராகவ்.
“ஏன் பாட்டி கவனமா வரமாட்டியா?” என விஷ்வத் கோபமாக கேட்டான் சீதாவிடம்!!
“அது ஒன்னும் இல்ல ராசா தெரியாம, விழுந்துட்டேன்” என சீதா கூறினார்
“நீ மட்டும் கீழே விழுந்தது தெரிஞ்சா அம்மா ரொம்ப கோபப்படுவாங்க, அப்புறம் அழுதுகிட்டே இருப்பாங்க” என விஷ்வத் கூறினான்.
அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை காரை ஓட்டியபடியே ராகவ் கேட்டுக் கொண்டே வந்தான்
“எங்கம்மா போகணும்?” என ராகவ் கேட்க அந்தப் பெண்மணி அவர்களின் வீட்டு முகவரியை சொல்ல அதிர்ச்சியாக சடன் பிரேக் போட்டுவிட்டு திரும்பிப் பார்த்தான் ராகவ்.
“ என்னாச்சு தம்பி ஏன் இந்த அதிர்ச்சி” என்று சீதா ராகவை பார்த்து கேட்க,”எங்க ஏரியாவுலயா இருக்கீங்க?” என ராகவ் கேட்டான்
“நீங்களும் அங்க தான் இருக்கீங்களா தம்பி. நாங்க குடி வந்து ரெண்டு நாள் தான் தம்பி ஆச்சு” என சீதா கூறினார்.
காரை விட்டு மூவரும் இறங்க, “அதுதான் தம்பி எங்க வீடு” என காட்டினார் சீதா.
ராகவ் சிரித்துக் கொண்டே, “உங்க வீட்டுக்கு எதிர்ப்புறம் இருக்கிறது தான் நான் குடியிருக்கிற வீடு” என்று சொல்ல, “ ரெண்டு பேரும் பக்கத்துல தான் இருக்கோம் போல!” என சிரித்தார் சீதா.
“தம்பி உள்ள வாங்க?” என ராகவை உள்ளே அழைத்தார் சீதா.
சிந்து என அந்த பெண்மணி கூப்பிட வெளியே வந்தாள் வருணின் கனவு காதலி.
“அம்மா இங்கே வாங்க, பாட்டிக்கு அடிபட்டு இருக்கு?” என விஷ்வத் சொல்ல ஓடி வந்தாள் .
“அத்தை என்ன ஆச்சு? எப்படி அடிபட்டுச்சு பார்த்து வர மாட்டீங்களா?
இதுக்கு தான் சொன்னேன், நீங்க போக வேண்டாம்னு வேலை முடிஞ்சு வரும்போது நானே தம்பியை கூப்பிட்டு வாரேன்னு நீங்க தான் கேட்கவே இல்லை, இப்ப
எப்படியாச்சுனு பாத்தீங்களா?” என பேசிக்கொண்டே அழுதாள்
“அதெல்லாம் எனக்கு ஒன்னும் இல்ல, நீ பயப்படாதே!இந்த தம்பிதான் என்னைய கூப்பிட்டு போய் ஆஸ்பத்திரியில வைத்தியம் பாத்துட்டு கூப்பிட்டு வந்துச்சு” என சீதா சொல்ல
“நன்றி அண்ணா” என ராகவ்வை பார்த்து கூறினாள் சிந்து.
“தம்பிக்கு குடிக்க காப்பி தண்ணி போட்டுட்டு வாம்மா?” என சீதா கூற
“வேண்டாம்மா! இன்னொரு நாள்
குடிச்சுக்குறேன்.உங்க வீட்டுக்கு எதிர் வீட்ல தான் நான் குடி இருக்கேன். ஏதாவது ஒரு உதவி வேணும்னா சொல்லுங்க? “என ராகவ் கூற
சரி என தலையசைத்தனர்
சீதாவும்,சிந்துவும்!
“என்னோட வீட்டுக்கு விஷ்வத் வர்றியா?” என ராகவ் கேட்க
“வரேன் அங்கிள்” என கூறிக்கொண்டே ராகவுடன் சென்றான். சிந்துவும் சீதாவும் தயங்கியபடி அமைதியாக நிற்க
“கொஞ்ச நேரம் கழிச்சு இவன உங்க வீட்டுல வந்து விடுறேன், பயப்படாதீங்க!”என சொல்லிவிட்டு விஷ்வத்தை தன்னோடு அழைத்துச் சென்றான் ராகவ்.
சிந்துவிற்கு திருமணமாகி ஐந்து வயதில் குழந்தை உள்ளது என்பதை வருண் அறிந்தால் என்ன செய்யுவான்.
இனி என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
கதையைப் படித்துவிட்டு கதையின் போக்கு எப்படி இருக்கிறது என்று
உங்கள் மதிப்பீடுகளையும் விமர்சனங்களையும் தந்து விட்டு செல்லுங்கள்