தன்னுடைய அண்ணன் கார்த்திக்கைப் போலவே ஆனந்தனுக்கும் திருமணமாகி, குழந்தைகளுடன் சந்தோஷமாக குடும்பம் நடத்திக் கொண்டிருப்பான் என்றே அனு நினைத்திருந்தாள். அதனால் தான், சற்றும் யோசியாமல், “உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?” என்று அவனிடம் கேட்டுவிட்டாள்.
ஆனால், தனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை என்று ஆனந்தன் அமைதியாகத் தெரிவித்ததும், அனுவிற்குத் தன் தவறை உணர்ந்து முகத்தில் சங்கடம் படர்ந்தது.
உடனடியாகச் சற்றே தர்மசங்கடத்துடன், “அய்யோ, என்னை மன்னிச்சுடுங்க… கார்த்திக்கும் நீங்களும் ஒரே வயசுல இருப்பீங்கனு நினைச்சு, உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சோனு கேட்டுட்டேன்…” என்று வருத்தப்பட்டாள்.
ஆனந்தன் தன் புன்னகையை மாறாமல் வைத்துக்கொண்டு, “அட பரவாயில்லைங்க… தெரியாமத்தானே கேட்டீங்க? இதுல மன்னிப்பெல்லாம் எதுக்கு?” என்று சொல்லிவிட்டு வனஜாவின் பக்கம் திரும்பினான். “அத்தை, நாளைக்கு பாப்பாவைக் கூட்டிட்டு வந்து விடுறேன்” என்றபடி அங்கிருந்து விடைபெற்றுச் சென்றான்.
ஆனந்தன் சென்றதும், அனு வனஜாவின் அருகில் சென்று அமர்ந்தாள். “கார்த்திக் அண்ணனுக்கு இப்போ வயசு எப்படியும் 33, 34 இருக்கும்ல பெரியம்மா?” என்று மெல்ல வினவினாள்.
அனு என்ன கேட்க வருகிறாள் என்பதைப் புரிந்துகொண்ட வனஜா, ஒரு பெருமூச்சுடன் பேசத் தொடங்கினார்.
”கார்த்திக்குக்கு இப்போ 35 வயசாகுது அனு. இவனுக்கும் அதே 35 தான். ‘அவன் எதுக்காக இவ்வளவு நாளா கல்யாணம் பண்ணிக்காம இருக்கான்?’னுதானே யோசிக்கிற? ஆனந்தன் தங்கம் மாதிரி ரொம்ப நல்ல பையன்டி. கார்த்திக் மட்டும் ஒரு பொண்ணா பிறந்திருந்தா, இவனுக்குத்தான் கண்ண மூடிட்டு கட்டிக் கொடுத்திருப்பேன்! அவனோட அந்த நல்ல குணத்துக்குத்தான் இன்னும் கல்யாணமே ஆகாம நிக்குது…” வனஜா உருக்கமாகச் சொன்னதும்,
அனுவிற்குத் தூக்கி வாரிப்போட்டது.
”நல்ல குணம் இருக்கிறது ஒரு குற்றமா பெரியம்மா? அதுக்காகக் கல்யாணமே நடக்காமப் போகுமா?” என்று வியப்புடன் கேட்டாள்.
வனஜா தொடர்ந்தார். “ஆனந்துக்கு ஒரு தம்பி இருக்கான்டி… மூளை வளர்ச்சி இல்லாத பையன். அவனுக்குப் பேசுறதுக்கு வாய் சரியா வராது. பசிக்குதுன்னோ, பாத்ரூம் வருதுன்னோ கூடச் சொல்லத் தெரியாது. பசித்தாலும் சரி, உடம்புக்கு வலிச்சாலும் சரி, அழுகை மட்டும்தான் அவனுக்குத் தெரிந்த ஒரே பாஷை! நின்ன இடத்துல, உட்கார்ந்த இடத்துலேயே எல்லாத்தையும் கழிச்சிடுவான். எந்த நேரமும் வாயிலிருந்து எச்சில் ஒழுகிக்கிட்டே இருக்கும். பார்க்கவே மனசுக்குக் கஷ்டமா, விகாரமா இருப்பான்.
ஆனந்தன் வீட்டுக்குள்ள புதிசா நுழையுறவங்களுக்கு, அது ஏதோ ஒரு ஹாஸ்பிட்டலுக்குள்ள நுழையுற மாதிரிதான் உணர்வு வரும். அவனோட அம்மாவும் தங்கச்சியும் எந்த நேரமும் அவனைப் பராமரிக்கிறதுக்காகத் துடைச்சு சுத்தம் பண்ணிக்கிட்டும், வீட்டைக் கழுவி ஃபெனைலும் டெட்டாலும் போட்டுத் துடைச்சுக்கிட்டும் இருப்பாங்க. அந்த வீட்டுக்குள்ள நுழைஞ்சா, அந்த நெடி மனசுக்கு பழகுறதுக்கே கொஞ்ச நேரம் பிடிக்கும்…”
சிறிது இடைவெளி விட்டு வனஜா மீண்டும் பேசினார். “இதையெல்லாம் பார்த்த பொண்ணு வீடுகாரங்க, ‘மாப்பிள்ளை தம்பியையும் குடும்பத்தையும் விட்டுட்டு தனியா வந்துட்டா கல்யாணம் பண்ணி தர்றோம்’னு சொன்னாங்க. ஆனா ஆனந்தன், ‘என்னால என் தம்பியையோ, என் குடும்பத்தையோ எந்தச் சூழ்நிலையிலயும் விட்டுட்டு வர முடியாது’ன்னு தீர்க்கமா சொல்லிட்டான். அதுக்கப்புறம் அவனுக்கும் கல்யாணம்ங்கிற எண்ணமே மனசுல இருந்து மறைஞ்சு போச்சு…”
வனஜா சொல்லி முடித்ததும், அனுவின் மனதிற்குள் ஆனந்தன் மீதிருந்த பிம்பம் அப்படியே மாறியது. மரியாதையும் நன்மதிப்பும் அவன் மீது பிரவாகமாகப் பெருகியது. ஊனமுற்ற தன் தம்பிக்காக சுயநலமில்லாமல் வாழும் அந்த உயர்ந்த உள்ளமும், எந்த வயதானாலும் அவனைப் பொறுப்பாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பக்குவமும் அவளை மெய்சிலிர்க்க வைத்தது. வனஜா தன் மகளையேக் கொடுக்கும் அளவிற்கு அவனை உயர்வாகப் பேசியதன் அர்த்தம் இப்போது அனுவிற்குத் தெளிவாய் விளங்கியது.
வீட்டிற்குச் சென்ற ஆனந்தனோ, அங்கிருந்தவர்களிடம் அனுவைப் பற்றிப் பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தான். “சொந்தப் பெத்த பிள்ளையே ‘என்னால முடியாது’னு விட்டுட்டுப் போயிட்டான்… ஆனா, அந்தத் தங்கச்சி பொண்ணு அனு, எதையும் யோசிக்காம ‘நான் வந்து பார்த்துக்கிறேன்’னு வந்து நிற்கிறா பாருங்க! எவ்வளவு தங்கமான பொண்ணு…” என்று அவளை உயர்வாகப் புகழ்ந்து தள்ளினான்.
திங்கட்கிழமை மாலை…
பள்ளியிலிருந்து வீடு திரும்பிய சிறுமி மதுவை, ஆனந்தன் கார்த்திக்கின் வீட்டிற்கு அழைத்துச் சென்று டியூஷனில் விட்டுவிட்டு வந்தான்.
மாலை 6 மணியிலிருந்து 8 மணி வரை நடைபெற்ற டியூஷன் வகுப்பு நிறைவுற்றது. அங்கிருந்த மற்ற குழந்தைகள் அனைவரும் அவரவர் வீடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றனர். மது மட்டும் தன் ஆனந்த் மாமாவின் வருகைக்காகக் காத்திருந்தாள்.
அப்போது அனு மெல்ல மதுவின் அருகில் வந்து, “மது, உனக்கு மொத்தம் எத்தனை மாமா இருக்காங்கடா?” என்று அன்போடு கேட்டாள்.
மது சற்றுத் தயக்கத்துடன், “எனக்கு… ஒரு மாமா இருக்காங்க மேம்…” என்று இழுத்தாள்.
”உனக்கு ரெண்டு மாமா இருக்கிறதா பாட்டி சொன்னாங்களே பாப்பா?”
”ஒரு மாமா ஆக்டிவா இருக்காரு மேம்… இன்னொன்னு… லூசு…” என்று மது மழலை மாறாமல் சொன்னதும், அனுவின் முகம் மாறியது.
”அப்படிச் சொல்லக் கூடாது பாப்பா!” என்று கண்டிப்பான குரலில் திருத்தினாள் அனு. “ஒருத்தரோட உடல் குறைபாட்டையோ, மன நிலையையோ வச்சு அவங்களைக் கேலி பேசக் கூடாது. அவரும் இயல்பா இருந்திருந்தா இந்நேரம் உன்னோட ஆனந்த் மாமா மாதிரி சுறுசுறுப்பா இருந்திருப்பார் இல்லையா?”
”ஆனா, அவருக்குக் குணமாகாதுன்னு எல்லா டாக்டரும் சொல்லிட்டாங்களாமே மேம்?”
”டாக்டர் சொல்றது இருக்கட்டும் மது. ஆனா, அவர் இருக்கிற நிலையில இருந்து கொஞ்சம் முன்னேற்றம் அடைஞ்சா போதாதா? அதுக்கு நம்ம குடும்பத்துல இருக்கிற எல்லாரும் அவரை அன்பாவும் அனுசரணயாவும் பார்த்துக்கணும். உன்னோட சின்ன மாமாவுக்குக் குழந்தை மாதிரி மனசுடி… அதனால குழந்தைகளோட சேர்ந்து விளையாட ஆசைப்படுவாரு. நீ அவரை உன்னோட சேர்த்துக்கிட்டு விளையாடு, அவருக்குத் தெரியாத வார்த்தைகளைக் கத்துக் கொடு… அப்படியே கொஞ்சம் கொஞ்சமா அவரை முன்னேற்றலாம்…”
மது வியப்புடன் தன் கண்கள் விரிய, “என்னால இதெல்லாம் செய்ய முடியுமா மேம்?” என்று ஆச்சரியமாகக் கேட்டாள்.
”நிச்சயமா முடியும்டா! தினமும் மாமாகூட பேசு… அவருக்குப் பேப்பரும் பென்சிலும் கொடுத்துப் படம் வரையச் சொல்லு. ஒவ்வொரு எழுத்தா கத்துக் கொடு… நடக்கும்போது அன்பா கைப்பிடிச்சு கூட்டிட்டுப் போ. மத்த பிள்ளைகள்கிட்ட அவரை அறிமுகப்படுத்து. அவரோட அந்த இயல்பை உன்னால கொஞ்சம் கொஞ்சமா மாத்த முடியும்!”
அனுவின் வார்த்தைகள் மதுவின் பிஞ்சு மனதில் புதிய நம்பிக்கையை விதைத்தன. தான் தன் தாய்மாமனைச் குணப்படுத்தப் போகிறோம் என்ற எண்ணமே, அவளை ஒரு பெரிய மருத்துவரைப் போல உணர வைத்தது.
”ஓகே மேம்! நான் என் மாமாவைச் சீக்கிரமே குணமாக்கிடுவேன்!” என்று தன்னம்பிக்கையுடன் சிரித்தாள் மது.
”குட் கேர்ள்! நான் சொன்னதைச் சட்டுனு புரிஞ்சுகிட்டியே…” என்று செல்லமாக அவளது தோள்களில் தட்டிக்கொடுத்தாள் அனு.
சரியாக அந்த நேரத்தில், மதுவை அழைத்துச் செல்ல ஆனந்தன் அங்கே வந்தான்.
”வாங்க சார்…” என்று அனு அவனை அழைக்க, ஆனந்தன் லேசான தயக்கத்துடன் சிரித்தான்.
”என் பேரு ஆனந்த்… என்னை ‘ஆனந்த்’னே கூப்பிடுங்க டீச்சர். எதுக்கு ‘சார்’னு சொல்லிக் கூச்சப்பட வைக்கிறீங்க?”
அனு புன்னகையுடன், “அப்போ நீங்களும் என்னை ‘டீச்சர்’னு கூப்பிடாம ‘அனு’ன்னே கூப்பிடுங்க,” என்றாள்.
”ஓகே… அனு! பாப்பாவைக் கூட்டிட்டுப் போறேன், நாளைக்கு வறேன்,” என்று முகத்தில் அரும்பிய புன்னகையோடு விடைபெற்ற ஆனந்தன், மதுவின் கரங்களைப் பற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்.
மது வீட்டிற்கு வரும் நேரத்தில் சந்தோஷை உறங்க வைத்திருந்தார் கனகம். மது டியூஷன் முடிந்து வீட்டிற்குள் நுழைந்ததும் கேட்ட முதல் கேள்வி, “சந்தோஷ் மாமா எங்கே?” என்பதுதான்.
கனகம், மீனா, ஆனந்தன் ஆகிய மூவருக்குமே அந்தக் கேள்வி பெரும் வியப்பைக் கொடுத்தது.
கனகம் ஆச்சரியத்துடன், “எப்போதிருந்துடி ‘லூசு’ன்னு கூப்பிட்டவ, இப்ப ‘சந்தோஷ் மாமா’ன்னு பேரு வச்சுக் கூப்பிடுற?” என்றார்.
ஆனந்தன் உடனே, “நீ சும்மா இரும்மா… இப்பதான் மாமா மேல அக்கறையா பேச ஆரம்பிக்கிறா, அவளை ஊக்குவிக்காம…” என்று தன் அம்மாவைத் தடுத்தான்.
மது தன் தாயைக் கட்டியணைத்துக் கொண்டு, “அம்மா, எங்க அனு மேம் சொன்னாங்க… நான் தான் மாமாவை குணப்படுத்துற நல்ல டாக்டராம்! மாமாவும் என்ன மாதிரி விளையாட ஆசைப்படுவாராம். அவரைக்கூட வச்சு விளையாடணும், அவருக்கு எழுதவும் படம் வரையவும் கத்துக் கொடுக்கணுமாம். அதோட என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் அறிமுகப்படுத்தி வைக்கணுமாம்… அப்பத்தான் அவர் சீக்கிரமா குணமாவாராம்! அதனால நான் மாமாவை நல்லா பார்த்துப்பேன், அவரைச் சீக்கிரமே குணமாக்கிடுவேன்!” என்று மழலையில் சொன்னாள்.
அதைக் கேட்ட மீனா நெகிழ்ந்துபோய், மதுவின் நெற்றியில் முத்தமிட்டாள்.
கனகத்திற்கு இப்போது சந்தோஷ் குணமானதைப் போன்ற ஒரு மகிழ்ச்சி; அவர் கண்கள் குளமாகத் தேங்கி நின்றன.
ஆனந்தனுக்கோ, ‘பரவாயில்லையே… ஒரே ஒரு நாள் பாடம் நடத்தினதிலேயே மதுவை இத்தனை தூரம் மெருகேற்றி விட்டாளே!’ என்று அனுவின் மீது மதிப்பும் மரியாதையும் மேலும் உயர்ந்தது.
”மாமாவை பாட்டி தூங்க வச்சுட்டாங்க மது” என்றாள் மீனா.
”சரிமா… மாமா தூங்கட்டும். எனக்கு பசிக்குது, சாப்பாடு ஊட்டிவிடும்மா…” என்று மது கேட்க,
”சரி தங்கம்” என்ற மீனா, கனகத்திடம் “அம்மா, பாப்பாவிற்கு ஒரு தோசை சுட்டுத் தர்றீங்களா?” என்றாள்.
கனகமும் மிகுந்த மனநிறைவோடு, புன்னகையுடன் சமையலறைக்குத் தோசை சுடச் சென்றார்.