Stories that touch hearts

Home  /  விவாதக் காதல் (S.K வேலன்)  /  Chapter 39

CHAPTER 39

விவாதம் – 39

By S.K Velan · October 4, 2026

0

தன் மகன் தான் பேசுகிறான் என்று நினைத்த ஜெயா, “தம்பி ஊருக்கு போயிட்டியாப்பா. அங்க ஒன்னும் பிரச்சனை இல்லையே. இங்க நீ இருக்கும்போதே உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு நினைச்சேன். நான் சொல்லுறத கவனமா கேட்டுக்கோ செல்லம். சித்ரா பாவம்டா. இன்னைக்கு உன் அக்கா கல்யாணம் நடந்து இருக்குன்னா, அதுக்கு சித்ரா எடுத்த தைரியமான முடிவுதான் காரணம். அவ இந்த கல்யாணத்த முழு மனசா ஏத்துக்கலடா. ஆனாலும், எனக்கு நம்பிக்கை இருக்கு. உன் அன்பால சித்ரா மனசை மாத்தி, நீங்க ரெண்டு பேரும் உங்க இல்லற வாழ்க்கையில சந்தோஷமா இருப்பிங்கன்னு. எனக்கு ரொம்பவே நம்பிக்கை இருக்கு” என்று நம்பிக்கையுடன் பேசும் வார்த்தையை கேட்டவளுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை.

மறந்துபோன தன் பர்ஸ் எடுக்க மாடிக்கு வந்தவனைப் பார்த்த மகிழினி, அவன் மீது கோவப் பார்வையை வீசி, கைபேசியை மேசை மேல் வைத்தவள், அவன் அறையில் இருந்து வேகமாக வெளியேறினாள்.

மேசை மேல் இருந்த கைபேசி தன் அம்மா பேசும் குரல் கேட்டு, “அம்மா” என்றான்.

“என்ன தம்பி, நான் பாட்டுக்கிட்டு பேசிக்கிட்டே இருக்கேன். நீ பதிலே சொல்லல?”

“அ…அது போன் கீழே விழுந்துடுச்சிமா. இப்போ சொல்லுங்க. என்ன விஷயம்?”

“அதான்பா. நம்ம சித்ரா பாவம் அவளை நீ நல்லா பாத்துக்கோ. அவளுக்கு இந்த கல்யாணம் திடீர்னு நடந்ததால, கண்டிப்பா உன்னை ஏத்துக்க கொஞ்ச காலம் ஆகும் தான். அதனால…”

“அம்மா இருங்க இருங்க. நீங்க ஏன் இப்போ இவ்ளோ யோசிக்கிறீங்க? நான் பாத்துக்குறேன்மா. உங்க மகன் மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்குதானே. விடுங்க எல்லாம் நன்மைக்கே.” என்றான் கொடிவீரன்.

“சரிப்பா. எதுக்கும் நீ உன்னோட முன் கோவத்தை மட்டும் கொஞ்சம் கம்மி பண்ணிக்கோ.”

“கல்யாணம் முடிந்த கையோடு முன்கோவம், சைடு கோவம் எல்லாம் காணாமல் போயிடுச்சிமா. நான் பொறுமையா இருக்க பழகிக்குறேன். நீங்க கவலைப்படாதிங்க. அப்புறம் அக்கா…” என்று நிறுத்தினான்.

“என்னப்பா என்னாச்சு?”

“இல்லம்மா. இந்நேரம் நான்தான் அக்கா, மாமாக்குக் கூட இருந்து எல்லா நல்லதையும் பண்ணி இருக்கனும். ஆனா, என் வாழ்க்கையை பார்த்துட்டு இப்படி இவங்க கூட வந்துட்டேன்னு, அக்கா என்னை எதாவது தப்பா நினைச்சிக்கிட்டாங்களா?” என்றவனுக்கு வருத்தம் அதிகம்.

“அட லூசு பயலே. நீ விரும்புன பொண்ணு உனக்கு மனைவியா அமைந்ததை நினைத்து, சசி தான் எல்லை இல்லா மகிழ்ச்சியில் இருக்கா. அதெல்லாம் அவ உன்மேல எந்த வருத்தத்திலும் இல்ல. உன் மாமா அவளை மும்பை அழைச்சிட்டு போறதுக்கு முன்னாடி, சென்னைக்கு கூட்டிட்டு வரேன்னு சொல்லி இருக்காரு” என்றார் ஜெயா.

“ம்… வரட்டும்மா. சந்தோஷமா வந்து தங்கட்டும்.”

“சரி தம்பி நீ போனை சித்ராகிட்ட தரியா?”

“அவங்க கீழே இருக்காங்கம்மா.”

“என்னப்பா சொல்லுற? அப்போ நீ மாடியில தனியா இருக்கியா?” என்றார்.

“அம்மா!” என்றான் கண்டிக்கும் குரலில்.

“இல்லப்பா. அது எப்படி நீ மாடியில… அவ கீழ…”

“அம்மா எல்லாம் ஒரே நாளில் மாறாது. யாருமே எதிர்பாராமல் தான் இந்த கல்யாணம் முடிந்து இருக்கு. அதனால எதையும் ரொம்ப எதிர்பார்க்கமல் இந்த வாழ்க்கையை வாழப் பழகிப்போம்.” என்று எதார்த்தம் சொன்னான்.

“சரிப்பா. நான் சித்ராவை கேட்டேன்னு சொல்லு.”

“ம்… சரிமா நீங்க நல்லா சாப்பிட்டு வேளை வேளைக்கு டேப்லெட் போடுங்க நான் நாளைக்கு காலையில கால் பண்ணுறேன்

என்றவன் தன் கைபேசி இணைப்பை துண்டித்த தருணம்

“மாமா… மாமா உங்கள பாட்டி சாப்பிட வர சொன்னாங்க” என்று ஏலம் போட்டுக்கொண்டே வந்தான் வேணு.

“என்னடா சொல்ற? நான் ஹோட்டல் போகலாம்னு நினைச்சேனே.”

“இல்ல இல்ல பாட்டி இங்கேயே டின்னர் பண்ணிட்டாங்க. வாங்க போய் சாப்பிடலாம்.”

“ம்… சரி வா” என்றான் கொடி.

“மாமா மாமா இருங்க.”

 “என்னடா?”

“ம்… ஒன்னும் இல்ல” என்று தயங்கினான்.

“என்னமோ கேட்க வந்தியே. என்னன்னு சொல்லு?”

“நேரம் வரும்போது கேக்குறேன்.”

‘பயபுள்ள என்ன கேட்க, போதுன்னு தெரியலையே’ என்று மனதில் நினைக்க,

“அதை நான் கேட்கும் போது தெரிஞ்சிக்கோங்க மாமா. இப்போ வாங்க போய் சாப்பிடலாம்” என்றான்.

இருவரும் கீழே இறங்கி செல்ல அங்கே டைனிங் டேபிளில் பாட்டியும் கீதாவும் அமர்ந்து இருந்தார்கள்.

“தம்பி இங்க உங்களுக்கும், சித்ராவுக்கும் சாப்பாடு இருக்கு. நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க. நானும் உங்க அத்தையும் வேணுவை அழைச்சிட்டு போய் மாடியில உங்க ரூம்ல தூங்கிக்கிறோம். நீங்க…” என்று பாட்டி தன் வார்த்தையை முடிக்கும் காட்டிலும்

“ஐயோ பாட்டி இதெல்லாம் இப்போ வேணாம். நான் மாடியில தூங்கிப்பேன் நான் அவங்க கழுத்துல தாலி கட்டினத்தால எல்லாமே ஒரே நாளில் மாறணும்னு, தயவுசெய்து யாரையும் நீங்க கம்பெல் பண்ணாதீங்க. நீங்க இப்படி ஒரு விஷயத்தை திணிக்கிறதால, அவங்களுக்கு அது பிடித்திருந்தாலும் அவங்க ஏத்துக்க மனதார சம்மதிக்க மாட்டாங்க. பிளீஸ் எல்லாத்துக்கும் கொஞ்சம் டைம் கொடுங்க” என்றவனின் கண்கள் மகிழினியை தேடியது.

“மருமகனே நாங்களும் உங்களை சித்ரா அறையில் தூங்க சொல்லல. நீங்க இதோ இந்த ஹாலில் படுங்க. நாங்க இன்னைக்கு ஒருநாள் மாடியில தூக்குறோம். டேய் வேணு வா நம்ம நிலா சோறு சாப்பிடலாம். உன் மாமாவும் அத்தையும் இங்கேயே சாப்பிட்டுட்டு இங்கேயே தூங்கட்டும்” என்ற கீதா சாமரத்தியமாக கேவி & சிஎம் இருவரையும் ஒன்றாக கோர்த்து விட்டு, அவர்களை அழைத்துக்கொண்டு மாடிக்கு சென்றார்.

டைனிங் டேபிளில் இருந்த சாப்பாட்டை பார்த்தவன் பெருமுச்சுடன் மகிழினி இருக்கும் அறையின் கதவை தட்ட, கதவைத் திறந்தவள், “இப்போ என்ன வேணும் உங்களுக்கு?” என்றாள் முகத்தில் அறைந்தது போல்.

“வாங்க சாப்பிடலாம்” என்றவனை முறைத்தவள், “உங்ககிட்ட நான் சாப்பாடு கேட்டேனா. ஏன் இப்படி ஓவரா பண்ணுறீங்க? போங்க போய் உங்களுக்கு பசிச்சா நீங்க சாப்பிடுங்க.” என்றவள் தன் அறையின் கதவை வேகமாக சாத்த, தடுக்க வந்த கொடிவீரனின் விரல்கள் கதவின் இடுக்கில் மாட்டிக்கொண்டு நசுங்கியது

 “ஆ… அம்மா” என்று அவன் கத்தும் சத்தம் கேட்டு கதவை திறக்க, வலது கை விரல்கள் நான்கும் அடிபட்டு துடித்துக்கொண்டிருந்த கொடிவீரனைக் கண்டதும் மகிழினியின் உள்ளம் வலியில் துடித்தது.

“ஐயோ சாரிங்க. நான் நான் வேணும்னே பண்ணல” என்று பதறி அவன் அருகில் வந்தாள்.

“தெரியுதுங்க. நான் வேணாம்ன்னு தான் நீங்க பண்ணிருக்கீங்க.” என்றான் வலியைப் பொறுத்துக்கொண்டு.

“இல்ல. ஐயோ நீ… நீங்க இப்படி உக்காருங்க. நான் ஐஸ் கியூப் கொண்டு வரேன்.”

“ஓ… எனக்கு அடிபட்ட சந்தோஷத்துல நீங்க ஜூஸ் வேற குடிக்க போறிங்களா?” என்று அவளை வம்பிழுக்க,

“உளராதீங்க. இருங்க வரேன்” என்றவள் சமையலறை சென்று குளிர்சாதன பெட்டியில் உறைந்து இருக்கும் பனிக்கட்டியை எடுத்து வந்தவள், கொடிவீரன் கை விரலில் ஏற்பட்ட காயத்தில் ஒத்தடம் கொடுக்க, “ஸ்…ஆஆ…” என்று வலியால் முனகுபவனைக் கண்டு வருந்தினாள்.

“ஏங்க உங்கள சாப்பிட கூப்பிட்டதுக்கா, இப்படி என் கையை காயப்படுத்துட்டிங்க?” என்று கேட்டான்.

“உங்க விரல் கதவு சந்துல இருந்ததை நான் பாக்கலங்க.”

“பார்த்திருந்தா இன்னும் வேகமா சாத்தி இருப்பிங்க இல்ல.”

“ப்ச் நான் சொல்றேன்ல தெரியாம பண்ணேன்னு, திரும்பத் திரும்ப அதையே சொன்னா என்ன அர்த்தம்?”

“சரி நம்புறேன்” என்றான் அவன்.

“ரொம்ப வலிக்குதா? வேணும்னா பெய்ன் கில்லர் தரட்டுமா?”

“அதெல்லாம் வேணாங்க. ரொம்ப பெய்ன் இருந்தா கேக்குறேன்.”

“சரி போய் சாப்பிடுங்க.”

|நீங்களும் வாங்க சாப்பிடலாம்” என்று அழைத்தான்.

“எனக்கு பசிக்கல நீங்க போய் சாப்பிடுங்க,”

“ஆனா, எனக்கு ரொம்ப ரொம்ப பசிக்குது. உங்களுக்கே தெரியும் நான் பசி தாங்கமாட்டேன். இப்போ நீங்க மட்டும் சாப்பிட வரலைனா, நானும் பட்டினியா தான் படுப்பேன்.”

“ஏன் இப்படி இம்சை பண்ணுறிங்க?”

“பசிக்குதுங்க சோறு போடுங்க” என்றதும் அவள் முறைக்க, “அப்புறமா முறைப்பீங்க. அட வாங்க வந்து சாப்பிட்டுட்டு, அப்புறமா தெம்பா முறைங்க” என்று அவள் வராது போகமாட்டேன் என்பதாய் நின்றான்.

“போங்க வந்து தொலைறேன்” என்றாள் எரிச்சலில்.

“ம்… அது நல்ல பொண்ணுக்கு அழகு.”

“ரொம்ப ஓவரா தான் போறீங்க. வாங்க” என்ற மகிழினி டைனிங் டேபிளில் இவர்களுக்காக காத்திருக்கும் இரவு உணவை கேவி தட்டில் எடுத்து வைத்தவள், கடமைக்கென்று தன் தட்டிலும் வைத்து சாப்பிட ஆரம்பித்தாள்.

கடுப்பாக அவளை பார்த்தவன், “ஏங்க என் கையை அடிச்சு நொறுக்கிட்டு, இப்போ தெரு நாய்க்கு தூக்கிப்போடுற மாதிரி என் தட்டுல சாப்பாட்டை தூக்கிப்போட்டா, இந்த கையை வச்சிக்கிட்டு நான் எப்படிங்க சாப்பிடுறது?” என்றான்.

“இப்போ என்ன நான் உங்களுக்கு ஊட்டி விடணும்னு எதிர்பாக்குறீங்களா?”

“நீங்க ஊட்டியையும் விட வேணாம். கொடைக்கானலையும் விட வேணாம். ஒரு ஸ்பூன் கொடுங்க போதும்.” என்றான்.

“ம்… இந்தாங்க.” என்றதும் வாங்கி இரவு உணவை உண்டு முடித்தவன் தட்டை எடுக்கப்போக, “விடுங்க நான் எடுத்து வச்சிடுறேன்” என்றாள்.

“இல்லிங்க பரவாயில்ல. நானே…”

“ப்ச்… அதான் கையில் அடிப்பட்டிருக்குல்ல. கொடுங்க நான் பாத்துக்குறேன்” என்றவள் மேசையை சுத்தம் செய்தபின் ஹால் லைட்டை ஆஃப் செய்யும் முன்பு, “ஆமா பாட்டி, உங்க அத்தை, வேணு எல்லாம் ஏன் இன்னும் கீழே வராம இருக்காங்க?’ எனக் கேட்டாள்.

“அவங்க எல்லாம் இன்னைக்கு மாடியில தூங்க போறாங்க. நான்தான் இன்னைக்கு இங்க…” என்றதும் அவள் முறைக்க, “அட முறைக்காதீங்க. நான் சோபாவுல தான் படுக்கப்போறேன். நீங்க இங்க தாராளமா படுத்துக்கோங்க” என்றான்.

“இவங்க எல்லாம் மனசுல என்ன நினைச்சுகிட்டு இப்படி பண்ணுறாங்க?” என்றாள் கோபத்தோடு.

“அவங்க என்ன வேணா நினைக்கட்டும். நீங்க என்னை நினைக்கல இல்ல. பின்ன என்ன உங்களுக்கு பயம் போங்க போய்ப்படுங்க குட் நைட். ப்ச்… என்னங்க? ஏன் இப்போ முறைச்சிட்டு நிக்கிறீங்க?” என்றான்.

“நீங்க தனியா படுத்து நல்லா யோசித்து, நாளைக்கு காலையில ஒரு நல்ல முடிவா சொல்லுங்க.”

“எதைப்பற்றி நல்ல முடிவு?” என்றான் புரியாது.

“அதான் நம்ம டிவோர்ஸ் பற்றி.”

“ஓ… இன்னைக்கு என்ன கிழமைங்க?”

“ஏன் கேட்குறீங்க? இன்னைக்குப் புதன்கிழமை” என்றாள்.

“பொதுவா புதன்கிழமையில நான் பேட் வேர்ட்ஸ் யூஸ் பண்ணுறது இல்ல. சோ, பிளீஸ் நீங்க போய்ப்படுங்க.”

“நீங்க என்ன சொன்னாலும் சரி. நாளைக்கு நானே போய் ஜீவா சாரை பார்த்து, என்ன பண்ணணுமோ அதைப் பண்ணுறேன்.”

“ம்… முயற்சி செய்யுங்க. முயற்சி திருவினையாக்குமாம்” என்றவன் தன் பாக்கெட்டில் இருந்த செல்போனில் பாட்டை ப்ளே செய்து, சோபாவில் படுத்துக் கண்கள் மூடினான்

கேவி மீது உள்ள அதிகப்படியான கோவத்தில், தன் அறைக்குள் நுழைந்த மகிழினி, அப்படியே கட்டிலில் சரிந்தாள். இனி தன் வாழ்க்கை எதை நோக்கி நகரப்போகிறது என்ற குழப்பத்தில் கண் உறங்காமல் தவித்து இருந்தவள், தன் காதில் இருந்த மெஷினை கழட்டி மேசை மேல் தூக்கி வீசி கண்கள் மூடினாள். சில நிமிடங்கள் கடந்தும் உறக்கம் வராது போக, கட்டிலின் அருகில் இருந்த மேசைமேல் இருக்கும் தண்ணீர் பாட்டிலை எடுக்க, அதில் தண்ணீர் இல்லை என்ற நிலையில், பாட்டிலை எடுத்துக்கொண்டு தன் அறையில் இருந்து வெளியே வர, அங்கே சோபாவில் அவன் உயரத்துக்கு கால் நீட்ட இடம் பற்றாமல், தலையணை போர்வை கூட இல்லாமல் உறங்கிக் கொண்டிருக்கும் கொடிவீரனின் அருகில் வந்தாள் மகிழினி.

‘எதுக்கு இவருக்கு இந்த தலையெழுத்து. ஒழுங்கா மாடியில இவரோட ரூமுக்கு போய் தூங்க வேண்டியது தானே’ என்றெண்ணினாள். அவன் தலைக்கு மேல் இருக்கும் கைபேசி ஒலி எழுப்பியதை பார்த்தவள், அதை எடுத்துப் பார்த்தாள். அதில் மெல்லிய இசை ஒலிக்கும் சத்தம் கேட்க, தன் காதின் அருகில் கொண்டு சென்றவள், சட்டென்று தன் கையில் இருந்த போனை தவற விட, சத்தம் கேட்டு கண் விழித்த கொடிவீரன், தன் எதிரில் மகிழினி பதற்றதுடன் நின்றிருப்பதைப் பார்த்தான்.

“என்னங்க என்னாச்சு?” என்று கேட்க,

“அ…அது உங்க போன்…” என்று தயங்கினாள்

“அச்சோ என் போனை உடைச்சிட்டீங்களா?” என்றவன் கீழே விழுந்து கிடந்த தன் கைபேசியை கையில் எடுத்துக்கொண்டான்.

“ஹாங் இல்ல இல்ல. அதுல என்னமோ சத்தம் கேட்ட மாதிரி இருந்துச்சு. அதான் எடுத்து பார்த்தேன். ஆனா, கை தவறி கீழே போட்டுட்டேன்” என்றாள் சிறு பதற்றதுடன்

“ஓ… அது சத்தம் இல்லிங்க பாட்டு” என்றவன் மீண்டும் கைபேசியில் இசையை இயங்கச் செய்தான்.

“ம்…போன் உடைஞ்சிடுச்சா?” என்றவள் காதில் இசை ஒலி கேட்கவில்லை என்பதை அறிந்த கொடிவீரன்

“இல்ல போன் வொர்க் ஆகுது. இதோ பாட்டு சத்தம் கேக்குது கேளுங்க” என்று தன் கைபேசியின் ஒலியை அதிகமாக்க பாடல் ஒலித்தது பாடலின் சத்தம் அதிகமாக இருக்க மகிழினியின் செவியில் காது மெஷின் இல்லாமலயே பாடல் இசை கேட்க,

“நீங்க தூங்கும் போது கூட இந்த பாட்டு கேட்டுகிட்டு தான் தூங்குவிங்களா?” என்றாள் ஒரு ஆர்வத்தில்

“ம்… ஆமாங்க. நல்ல இசை நமக்கு நல்ல எண்ணத்தை தரும். சில பாடலின் வரிகள் எல்லாம் நம்ம வாழ்க்கைக்கு எதாவது ஒரு வழியை சொல்லும்” என்றான் அவளுக்கு புரியும் வகையில் கை சைகையுடன்.

“என்ன? பாடல் வரி நம்ம வாழ்க்கைக்கு வழி சொல்லுமா?” என்று கேட்டாள் அவனை நம்பாத வண்ணமாக.

“ம்… ஆமாங்க கண்டிப்பா சொல்லும். இதோ இந்த பாட்டை கேளுங்க. இதுல நம்ம வாழ்க்கைக்கு உண்டான ஒரு மறைமுக செய்தி இருக்கு பாருங்க” என்றவன் தன் கைபேசியில் வேறொரு பாடலை ஒலிக்க செய்தான்.

🎶சென்றது கண்ணுறக்கம்

நெஞ்சில் நின்றது உன் மயக்கம்

இங்கு ஓய்வதேது தேய்வதேது

உந்தன் ஞாபகம்

உன்னிடம் சொல்வதற்கு

எண்ணம் ஒன்றல்ல நூறிருக்கு

அதை நீயும் கேட்க,

நானும் சொல்ல ஏது வாசகம்

பாத சுவடுகள் போகும்

பாதை அறிந்திங்கு நானும்

கூட வருகின்ற போதும்

கூட மறுப்பதோ நீயும்

உள்ளக் கதவினை மெல்ல திறந்திங்கு

நெஞ்சில் இடம் தர வேண்டும்

ஊரெல்லாம் உன் பாட்டுதான்

உள்ளத்தை மீட்டுது

நாளெல்லாம் உன் பார்வைதான்

இன்பத்தை கூட்டுது🎶

என்ற பாடல் வரிகளை கேட்டு மகிழினி முகம் மாறியவள், “எனக்கு தூக்கம் வருது. நீங்களும் இந்த பாட்டை எல்லாம் நிறுத்திட்டு, சீக்கிரமா தூங்குங்க. நாளைக்கு முதல் வேலையா ஜீவா சாரை போய் பாக்கணும்.” என்றவள் வேகமாக தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள்

– “என்னடா வீரா உனக்கு வந்த சோதனை. நீ பாட்டுக்கிட்டு பாட்டு கேட்டுகிட்டு சிவனேன்னு தானே தூங்கிகிட்டு இருந்த. இவங்களா வந்தாங்க. இவங்களா பேசுனாங்க. இப்போ இவங்களா நம்மள தூங்க சொல்லிட்டு போறாங்க. ரொம்ப ஓவரா இருக்கே இவங்க அலும்பல்” என்று வாய் விட்டு புலம்பியவன் எதிரில், அனல் வீசும் பார்வையோடு மீண்டும் வந்து நின்றாள் மகிழினி

“ஐயோ நீங்க எப்போங்க வந்திங்க?” என்றவன் கேள்விக்கு பதில் சொல்லாமல், அவனை தீயாய் பார்வையில் பொசுக்கியவள், தன் கையில் இருந்த பாய் தலையணை போர்வையை எல்லாம் அவனிடல் கொடுத்தாள்.

“இதெல்லாம் எதுக்குங்க” என்றான் புரிந்தும் புரியாமலும்

“வேற எதுக்கு நீங்கதான் பனைமரம் மாதிரி வளந்து இருக்கீங்களே. உங்களுக்கு சோபாவுல படுக்க கஷ்டமா இருக்கும்ல. அதான்” என்றாள் அதே முறைப்புடன்.

“யூ மீன் நீங்க என்னை பாய்ல படுக்க சொல்றிங்களா?” என்று கேட்டான் புருவம் உயர்த்தி.

“ம்…” என்று இவள் தலை அசைக்க

“நோ நோ. நீங்க நினைக்குற மாதிரி பாய்ல தனியா பரமபதம் ஆடுற ஆளு நான் இல்லைங்க. நமக்கு இந்த பாய்ல படுத்து சொம்ப உருட்டுறது எல்லாம் செட் ஆகாது. நான் வெறும் தரையில படுத்தாலும் படுப்பேனே தவிர, பாய் எல்லாம் நமக்கு சத்தியமா செட் ஆகாது. சோ உங்க கரிசனதுக்கு ரொம்ப நன்றி. நீங்க சீக்கிரம் போய் உறங்குங்க. நாளைக்கு காலையில நம்ம ரெண்டு பேரும், ஜீவா…” என்று அவன் முடிக்கும் முன் மகிழினியின் முகம் மிளிர,

“ஜீவா கல்யாணத்துக்காக கிப்ட் வாங்க ஷாப்பிங் போகலாம்” என்றவனை பார்த்து கோவம் கொண்டவள், அதே வீராப்புடன் தன் அறைக்குள் புகுந்துகொள்ள, மெலிதாகப் புன்னகைத்த கொடிவீரன் பாடலை கேட்டு கொண்டே சோபாவில் சரிந்தான்.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!