Stories that touch hearts

Home  /  37. யாழினி திரவியன் (விடியலைத் தேடும் வெண்ணிலா)  /  Chapter 1

CHAPTER 1

விடியலை தேடும் வெண்ணிலா

By yazhinithiraviyan · October 4, 2026

1

அத்தியாயம் – 01

மாலை நேரத்து சூரியனின் பொன்னிறக் கதிர்கள் பூமியை ஆக்கிரமித்திருந்த தருணம் அது. மெல்லிய குளிர்காற்று உடலைத் தழுவிச் செல்ல, அந்தச் சூழலின் குளிர்மையைக் கூட அனுபவிக்க முடியாமல் தன் மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருந்தாள் திவ்யா.

அவள் பார்வை முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த அவள் மகளின் மீதே நிலைத்திருக்க அவளுக்கு முன் காஃபி கப்பை நீட்டியது ஒரு வலிய கரம் அதை கண்டவள் நிமிர்ந்து பார்க்க கையில் காஃபியுடன் நின்றிருந்தான் கடம்பன்.அவனை கண்டதும், “நீங்க எதுக்கு மாமா காஃபி போட்டீங்க? சொல்லிருந்தா நானே போட்டு தந்திருப்பேன்ல” என்றவாறு அவன் கையில் இருந்த காஃபி கப்பை வாங்கிக் கொண்டாள்

திண்ணையில் அவளுக்கு அருகில்அமர்ந்தவன், “என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று கேட்க அவளோ எதுவும் பேசாமல் குழந்தையைப் பார்த்தவாறே அமைதியாக இருந்தாள்.”அம்மா எதுவும் சொன்னாங்களா?” என்று கடம்பன் கேட்க “அத்த திட்டுறது ஒன்னும் புதுசு இல்லையே மாமா நான் பண்ணதும் சின்ன தப்பு இல்லையே…” என்றாள் அவள் எங்கோ வெறித்தவாறு

அவளது தோளில் கையை வைத்தவன், “இங்கு பாரு திவ்யா… நீ பண்ணது தப்புதான், அதை நான் இல்லைன்னு சொல்ல மாட்டேன். ஆனா, தப்பே பண்ணாம இங்கே யாருமே இல்லை. நம்ம எடுக்கிற ஒவ்வொரு தப்பான முடிவும் நமக்கு வாழ்க்கையைச் சொல்லித் தரும். நீ எடுத்த அந்த ஒரு தப்பான முடிவு, உனக்கு ‘வாழ்க்கைன்னா என்னன்னு புரிய வச்சது இல்ல?இனி நீ என்ன பண்றதா இருந்தாலும் ஒன்னுக்கு ஆயிரம் தடவை யோசிப்ப நம்ம பண்ற தப்பு, அதனால் நம்ம அனுபவிக்கிற வலி, பட்ட காயம் அதெல்லாம் தான் நம்மள செதுக்கும்! இப்போ நீ ஒரு விஷயம் சொல்லு… நீ பண்ண தப்பை உன்னால மாத்த முடியுமா?” என்று அவன் கேட்க இல்லை என்பது போல் மெலிதாகத் தலையசைத்தாள்

பெண்ணவள்.”நீ பண்ண தப்பையோ, அதனால் நடந்த விஷயங்களையோ உன்னால மாத்த முடியாதுங்கிறப்ப, அதையே நினைச்சு கவலைப்பட்டு என்ன பண்ணப் போற? நீ பண்ண தப்புக்கு நீ நிறைய அனுபவிச்சுட்ட இப்போ அதையே யோசிச்சு உன் நிம்மதியை நீயே கெடுத்துக்காம, ‘அடுத்து என்னன்னு பாரு. காலமும் நேரமும் யாருக்காகவும் நிக்காது திவ்யா! யாரு என்ன சொன்னாலும், இது உன் வாழ்க்கை இதை நீதான் வாழணும். மத்தவங்க பேசுறதை மண்டையில ஏத்திக்கிட்டா, கடைசி வரைக்கும் உன்னால ஒண்ணுமே பண்ண முடியாது!”அவன் சொன்னதைக் கேட்டவளுக்குள் அடக்கி வைத்திருந்த அழுகை கண்ணீராகப் பெருகியது.

“ஏன் மாமா எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது? நான் அவனை எவ்வளவு நம்புனேன் தெரியுமா? ஏன் மாமா அவன் இப்படி பண்ணான்? லவ் பண்ணது என்ன அவ்வளவு பெரிய குத்தமா?” என்று திவ்யா விம்மலுடன் கேட்க “லவ் பண்றது தப்பு இல்ல திவ்யா, தப்பான ஒருத்தங்களை லவ் பண்றதுதான் தப்பு. நீயே யோசிச்சு பாரு… இப்போ உனக்கு வயசு என்ன? இந்த வருஷம் தான் உனக்கு 21 வயசு ஆகுது! இது படிக்கிற வயசு. 18 வயசுல கல்யாணம், 19 வயசுல குழந்தை, 20 வயசுல டிவோர்ஸ், 21 வயசுல இன்னொரு கல்யாணம்… இதெல்லாம் ஏத்துக்கிறது எவ்வளவு கஷ்டம்னு எனக்கும் புரியுது. ஆனா, இந்த நிலைமைக்கு நீ வந்ததுக்கு காரணம் லவ் பண்ணது இல்ல… தப்பான ஒருத்தனை காதலிச்சதுதான்!ஸ்கூல் டைம்ல நம்ம உலகம் ரொம்ப சின்னது. வீடு, ஸ்கூல், பிரண்ட்ஸ், சொந்தக்காரங்க… இப்படி சின்ன வட்டத்துக்குள்ளேயேதான் இருப்போம். உலகம்னா என்னன்னே தெரியாது, சொசைட்டினா என்னன்னு தெரியாது. அந்த வயசுல வர்றது மோஸ்ட்டா லவ்வாவே இருக்காது, அது ஒரு ஈர்ப்பாத்தான் (Attraction) இருக்கும். அந்த வயசுல லவ்வுக்கும் அட்ராக்ஷனுக்கும் வித்தியாசம் தெரியாம நிறைய பேர் லைஃப்பை வேஸ்ட் பண்றாங்க. அதே மாதிரிதான் நீயும் பண்ண தப்பான ஒருத்தனை காதலால மாத்துறது சினிமாலதான் நடக்கும். ரியல் லைஃப்ல எல்லாருக்கும் அந்த மாதிரி நடக்காது சில பேர் லவ்வால் மாறுறாங்க, இல்லைன்னு சொல்லல. ஆனா, நிறைய பேர் தப்பான ஒருத்தனை காதலிச்சிட்டு, அவனை எப்படியாவது மாத்திருவோம்னு நினைச்சு அவங்க லைஃப்பை மொத்தமா ஸ்பாயில் பண்ணிக்கிறாங்க. இங்க நம்ம யார் லைஃபையும் மாத்த வரல அதுக்காக உன் அம்மா, அப்பா உன்னை பெத்து வளர்க்கல.” என்றவன் ஒரு நிமிடம் நிறுத்தி “நிறைய பொண்ணுங்க இந்த மாதிரி ஒருத்தனை மாத்துறேன்னு சொல்லி, கடைசி வரைக்கும் அவங்க வாழ்க்கையை வாழாமலே போயிடுறாங்க. ஆனா, நீ அப்படி இல்ல! ரியாலிட்டி புரிஞ்சதும் அந்த லைஃப்ல இருந்து வெளிய வந்துட்ட அதை நினைச்சு சந்தோஷப்படு. ஒரு புது லைஃப்பை லீட் பண்ணு. உன் உலகம் இந்த வீட்டோட முடிஞ்சதுன்னு நினைக்காத. நடந்ததெல்லாம் தள்ளி வச்சிட்டு ஒரு புது லைஃப்பை வாழு, உன் கூட நான் இருக்கேன் மொத கண்டதுக்கும் கண்ணை கசக்காம கண்ணை துடை என அவள் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைக்க முயல சட்டென்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் திவ்யா.

“ஏண்டி… விளக்கு வைக்கிற நேரத்துல இப்படி அழுது வடிஞ்சா வீடு விளங்குமா?” என்று தோட்டத்தில் இருந்து வந்த அம்பிகா, திவ்யா அழுது கொண்டிருப்பதைக் கண்டு அதட்ட”அம்மா… நீ எதுக்கு எப்பபாரு அவளை அதட்டிக்கிட்டே இருக்க?” என தன் தாயிடம் எகிறினான் கடம்பன்.”ஹும்… உன் பொண்டாட்டியை ஏதாவது சொன்னா உடனே வந்துருவியே! இந்த அம்மா பெரிய மகாராணி… இந்தம்மாவை நாங்க ஒன்னும் சொல்லக்கூடாது! மணி ஆறாகப் போகுது… வீட்டைப் பெருக்கி விளக்கு வைப்போம்! குழந்தை மண்ணுல விளையாடுது, அதைக் கூட்டிட்டுப் போய் குளிக்க வைப்போம், ஒன்னும் இல்ல… இவளைப் போய் உனக்குக் கட்டி வச்சேன் பாரு, என்னைச் சொல்லணும்!”என்று புலம்பியவாறே முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையைத் தூக்கினார்.

“நான் போய் குழந்தையைக் குளிப்பாட்டுறேன், அவளை வீட்டைப் பெருக்கி விளக்கை வைக்க சொல்லு!” என்றுவிட்டு அவர் அங்கிருந்து நகர அவர் சொன்னது போல திவ்யாவும் வீட்டைப் பெருக்கி விளக்கேற்றினாள்.இதற்கிடையில் அம்பிகா குழந்தையைக் குளிப்பாட்டி, புதிய ஆடை அணிவித்து, நெற்றியில் பெரியதாய் ஒரு பொட்டு வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தார்.விளக்கேற்றி முடித்தவள், இரவு சமையலைக் கவனிக்கும் பொருட்டு சமையலறைக்குள் நுழைய “ஏண்டி… இப்படியே வீட்டுல சும்மாவே இருக்கிறதை முடிவு பண்ணிட்டியா? ஏதேதோ படிச்சு கிழிக்கப் போறேன்னு கப்சா விட்டுட்டு, இப்படியே வீட்டுக்குள்ளேயே இருந்தா என்ன அர்த்தம்? குழந்தைக்கு ரெண்டு வயசு முடிஞ்சது இல்ல… இவளை நான் பார்த்துக்கிறேன், நீ ஒழுங்கா போய் படிக்கிற வழியைப் பாரு!””இப்படி ஒன்னத்துக்கும் உருப்படாம இருக்கிறதுக்கு அதையாவது உருப்படியா பண்ணு!” என்று அம்பிகா அதட்ட திவ்யாவுக்குள் பழைய கனவுகளும் வலிகளும் சேர்ந்து தொண்டை அடைக்க எதுவும் பேசாமல் சமையலைக் கவனித்துக் கொண்டிருந்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது.அதை அவருக்கு காட்டாது அவசரமாகத் துடைத்துக் கொண்டவள், காய்கறிகளை வெட்டத் தொடங்கினாள்.அவள் கைகள் நடுங்குவதைக் கவனித்த அம்பிகா, “ஒழுங்கா ஒரு வெங்காயம் கூட வெட்டத் தெரியுதா பாரு…” என்றுவிட்டு, அவள் கையிலிருந்த கத்தியைப் பிடுங்கித் தாமே வெட்ட ஆரம்பித்தார்.

அறையின் மூலையில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியின் முன்பு நின்றிருந்தாள் திவ்யா. கழுத்தில் புதிதாக மின்னிய அந்தத் தாலிக்கயிற்றை விரல்களால் மெதுவாய்த் தடவிப் பார்த்தவளுக்கு, எதேச்சையாக இரண்டு நாள்களுக்கு முன்பு நடந்த திருமணத்தின் ஞாபகங்கள் நிழலாடி மறைந்தன. காலமும் வாழ்க்கையும் தனக்கு வழங்கிய இந்த இரண்டாவது அத்தியாயம் எப்படிப்பட்டதாக இருக்கப் போகிறது என்ற தவிப்பு அவளது உள்ளுக்குள் மெலிதாக அலைமோத ​கட்டிலில் படுத்திருந்த மகளின் மழலைக் குரல் அவள் நிலையை கலைத்தது.இவ்வளவு நேரம் இருந்த மனநிலை மாற புன்னகைத்தபடியே மகளின் அருகில் விரைந்தவள், அவளை மார்போடு அணைத்துத் தோளில் போட்டுக் கொண்டு மெதுவாய் முதுகைத் தட்டத் தொடங்கினாள்.​அச்சமயத்தில், அவளது நிழல் மீது மற்றொரு நிழல் விழ, நிமிர்ந்து பார்த்தாள். அறையின் கதவோரத்தில் சாய்ந்தபடி நின்றிருந்தான் கடம்பன்.அவனை கண்டதும் கட்டிலில் அமர்ந்திருந்தவள் எழுந்து நிற்க அறைக்குள் நுழைந்தவன் ​அவன் தன் கையில் வைத்திருந்த ஒரு காகிதத்தை அவளிடம் நீட்டினான்.அவள் அவனை கேள்வியாக பார்க்க இது காலேஜ் அட்மிஷன் ஃபார்ம் எல்லாத்தையும் பேசிட்டேன். நாளைல இருந்து நீ காலேஜ் போக ரெடியாகு பாப்பாவ நானும் அம்மாவும் பாத்துப்போம் வீட்டுக்குள்ளயே உலகம் முடிஞ்சுறாது வெளிய இன்னும் எவ்வளவோ இருக்கு என அந்த காகிதத்தை அவள் கையில் திணிக்க தன் கையில் இருந்த அந்தப் படிவத்தையே நம்ப முடியாமல் பார்த்தவளுக்கு, உள்ளுக்குள் சொல்ல முடியாத சந்தோஷமும் அதே நேரம் ஒரு சின்ன நடுக்கமும் தொற்றிக் கொண்டது.

← Previous All Chapters Next →

1 comment

yatchan October 4, 2026 - 7:46 pm

கதை ஆரம்பம் நன்றாக உள்ளது ..பழையதையே நினைத்து வீட்டிற்குள் மூழ்காமல் அடுத்த நகர்வை நோக்கி போ என்று கூறும் கடம்பனின் வார்த்தைகளில் எதார்த்தம் தெரிகிறது..

Leave a Comment

error: Content is protected !!