Stories that touch hearts

Home  /  37. யாழினி திரவியன் (விடியலைத் தேடும் வெண்ணிலா)  /  Chapter 2

CHAPTER 2

விடியல் – 02

By yazhinithiraviyan · October 8, 2026

0

அத்தியாயம் – 02

மறுநாள் காலை அழகாக விடிய, முதல் வேலையாக திவ்யாவின் சான்றிதழ்கள் அனைத்தையும் பத்திரமாக ஃபைலில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான் கடம்பன்.”மாமா, இதெல்லாம் எதுக்கு நீ பண்ற? நானே எடுத்து வச்சிருப்பேன்,” என அவள் சொல்ல, “யார் எடுத்து வச்சா என்ன? முதல்ல நீ டிரஸ் மாத்திட்டு வா இன்னைக்கு நிறைய வேலை இருக்கு அதுக்கு முன்னாடி குழந்தையை ரெடி பண்ணி அம்மா கிட்ட கொடுத்துட்டு போ,” என்றுவிட்டு அவன் வெளியேறஅப்போதுதான் அவன் சொல்ல வந்தது அவளுக்குப் புரிந்தது.

கட்டிலில் தன் மழலை மொழியில் பிதற்றிக் கொண்டிருந்த மகளை நெஞ்சோடு அணைத்தவள், அவள் நெற்றியில் முத்தமிட, அவள் நெஞ்சில் தலை சாய்த்துக் கொண்டாள் அவள் செல்ல மகள் நேத்ரா.அவளைப் பார்த்து மெல்லப் புன்னகைத்தவள், அவளை மடியில் அமர வைத்து அவளுக்குப் பசியாற்ற, அமைதியாகப் பாலைக் குடித்தது குழந்தை. குழந்தைக்குப் பால் கொடுத்து அவளைத் தட்டிக் கொடுத்தவள், குழந்தையைத் தயார் செய்து தானும் தயாராகி வெளியே வர, அவள் கையிலிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டார் அம்பிகா.”இவ்வளவு நேரம் என்னடி பண்ண? குழந்தைக்குப் பால் கொடுத்துட்டியா?” என அம்பிகா கேட்க, “ஹா ஆமா, குடிச்சிட்டா,” என்றாள் திவ்யா.”சரி, டைம் ஆகுது பாரு சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பு நான் குழந்தையைப் பார்த்துக்குறேன்,” என்றுவிட்டு அவர் அவரின் அறைக்குள் நுழைந்து கொள்ள, அவசர அவசரமாக உணவை முடித்துக் கொண்டு அவள் அவசரமாக வெளியே வர, வாசலில் பைக்குடன் காத்திருந்தான் கடம்பன்.

கடம்பனின் பைக்கில் ஏறி கல்லூரி வாசலை வந்தடைந்த பெண்ணவளுக்கோ இதயம் படபடவென அடித்துக் கொண்டது. எத்தனை கனவுகளுடன் நுழைய வேண்டிய கல்லூரி வளாகத்தினுள் அவள் நுழைந்திருக்கும் நிலை என எண்ணும்போதே, அவள் மனம் பாரமாகிப் போவதை அவளால் தடுக்க முடியவில்லை.பெரிய கேட்டைத் தாண்டி உள்ளே நுழையும்போது, சுற்றிலும் இருந்த மாணவிகளைப் பார்த்ததும் ஏனோ அவளுக்கு இனம் புரியாத தயக்கம் தொற்றிக் கொண்டது. அவளது தயக்கத்தைப் புரிந்து கொண்ட கடம்பன், தன் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு அவளுடன் சேர்ந்து கல்லூரி முதல்வர் அறையை நோக்கி நடந்தான்.

முதல்வர் அறைக் கதவைத் தட்டிவிட்டு திவ்யாவும் கடம்பனும் உள்ளே நுழைய, அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த முதல்வர் இவர்களைப் பார்த்ததும், “அட, கடம்பன்! உள்ள வாப்பா. பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு? முதல்ல உட்காரு ரொம்ப நாளுக்கு அப்பறம் காலேஜ் பக்கம் வந்திருக்க, என்ன விஷயம்?” என விசாரிக்க, கடம்பனும் அவரைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு, அருகிலிருந்த நாற்காலியில் திவ்யாவை அமரச் செய்துவிட்டு, அவனும் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.”வணக்கம் சார், நல்லா இருக்கீங்களா? நான் ஒரு முக்கியமான விஷயமாத்தான் உங்களைப் பார்க்க வந்தேன்,” என்று தன் கையில் இருந்த சான்றிதழ்களையும், விண்ணப்பப் படிவத்தையும் மேசையில் வைத்தவன் “இவங்க என் வைப் இவளுக்குச் சில பர்சனல் இஸ்யூஸ்னால ஸ்கூல் முடிச்சதுல இருந்து மூணு வருஷம் இடையில படிப்பு நின்னு போச்சு. இப்போ மறுபடியும் படிக்கணும்னு ஆசைப்படுறா. அதான் இவளை இங்க கூட்டிட்டு வந்தேன்,” என்று அவன் சொல்ல, முதல்வர் அந்த ஃபைலை வாங்கிப் புரட்டிப் பார்த்தார்.திவ்யாவின் சான்றிதழ்களையும் அதிலிருந்த மூன்று வருட இடைவெளியையும் பார்த்தவர், கடம்பனைப் பார்த்து, “உனக்கே தெரியும்ல கடம்பா, இந்த மாதிரி கேப் விழுந்தா நாங்க உடனே அட்மிஷன் கொடுக்க யோசிப்பாம். ஏன்னா பசங்க ஒழுங்கா காலேஜ் வருவாங்களா? ஃபேமிலி பிரஷரைத் தாண்டி படிப்பாங்களான்னு சந்தேகம் வரும். ஆனா நீயே நேர்ல வந்து பேசுறப்ப என்னால இல்லைன்னு சொல்ல முடியுமா, என்ன?” என்றவர் திவ்யாவிடம் திரும்பி, “ஒழுங்கா படிப்பல்லம்மா?” என்று கேட்க “கண்டிப்பா சார்,” என்றவளின் குரல் தழுதழுத்திருந்தது.

மறுநொடியே தன் பேனாவை எடுத்த முதல்வர், அந்த விண்ணப்பப் படிவத்தில் அனுமதி கையெழுத்திட்டு அட்மிஷன் ஸ்லிப்பை நீட்டினார். “போய் ஃபீஸ் செக்‌ஷன்ல ஃபீஸைக் கட்டிட்டு நாளையில இருந்து கிளாஸ் அட்டென்ட் பண்ணுங்கம்மா,” என அவர் சொல்ல, கல்லூரி முதல்வருக்கு நன்றி செலுத்திவிட்டு இருவரும் வெளியே வந்தனர்.முதல்வர் அறையிலிருந்து வெளியே வந்தபோது திவ்யாவின் முகம் மலர்ந்திருந்தது. அதே மலர்ச்சியுடன் கடம்பனைத் திரும்பிப் பார்த்தவள், “ரொம்ப தேங்க்ஸ் மாமா! சேர்மனை உங்களுக்கு தெரிஞ்சதுனாலதான் எல்லாம் ஈஸியா முடிஞ்சது,” என அவள் நிம்மதிப் பெருமூச்சுடன் சொல்ல, “ஏய், எதுக்கெல்லாம் போய் தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு இருக்க? வா, முதல்ல ஃபீஸைக் கட்டிட்டு வரலாம்,” என்று அவளை அழைத்துச் சென்றவன், கணக்குப் பிரிவில் பணத்தைச் செலுத்திவிட்டு அதற்கான ரசீதையும் அவளிடமே கொடுத்தான்.ஒரு வழியாக அவள் காலேஜ் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தவன், அவளைத் தன் பைக் பார்க்கிங் செய்திருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல, அமைதியாக அவளுடன் நடந்தாள்

பெண்ணவள்.பைக்கில் ஏறி அமர்ந்தவள் அந்த ரசீதைப் பார்க்க, அவள் காதுகளில், “இதுக்கப்புறம் படிச்சு என்ன சாதிக்கப் போற? கல்யாணம் ஆகி குடும்பம்னு வந்தாச்சு. இனி என்னத்துக்கு படிப்பு? சமைக்கிற வேலையை மட்டும் பார்த்துட்டு வீட்டிலேயே சும்மா இருக்க வேண்டியதுதானே? இதுக்குத்தான் இந்த வயசுல கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுங்கிறது என்ற வார்த்தைகள் அவள் காதில் ஒலிக்க கூடவே, “அவன் கூட வாழ்ந்தா நீ சந்தோஷமா இருக்க மாட்ட,” ஏன்னா அவள் சித்தி அதட்டியதும் நினைவில் வந்து போனது.அன்று அவள் சித்தி சொன்ன வார்த்தைகள் இன்று அடிபட்டுத் திருந்திய பிறகுதான் பெண்ணவளுக்குப் புரிந்தது.

தன் சுயமரியாதையை இழந்து நிம்மதியில்லாமல் தவித்த அந்த நரகத்திலிருந்து மீண்டு வந்தவளுக்கு, கல்லூரி கனவுகள் காணல் கனவுகளாகவே கரைந்துவிடும் என எண்ணியிருந்தாள். ஆனால், அதை மாற்றி அவள் கனவை அடைய மீண்டும் ஒரு பாதையை உருவாக்கியிருந்தான் அவள் கணவன். தனக்காக இவ்வளவு செய்யும் கணவனுக்கு நான் செய்தது என்ன என நினைக்கும்போதே அவளுக்கு மூச்சு முட்டியது.

“திவ்யா, என்ன ஆச்சு? ஏன் என்ன ஒரு மாதிரி யோசனையாவே இருக்க?” என்று கடம்பனின் குரல் கேட்டு நிகழ்காலத்திற்கு வந்தவள், கண்ணில் தங்கிய நீரைத் துடைத்துக்கொண்டு முகத்தில் மலர்ச்சியை வரவழைத்தவளாக, “ஒன்னும் இல்ல மாமா,” என்றாள்.அவனும் அவள் மனதைப் படித்தவனாய், “சரி வா, பசிக்குது, சாப்பிட்டுப் போலாம்,” என அவளை அருகிலிருந்த ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் செல்ல, இருவரும் அந்த ஹோட்டலிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு வீடு திரும்பினர்.அடுத்ததாக அவன் அவளை ஒரு துணிக்கடைக்கு அழைத்து வர, “இப்ப எதுக்கு, மாமா?” என அவள் ஏதோ சொல்லத் தன் வாயைத் திறக்க முன், அவளை ஒரு பார்வையாலேயே அடக்கியிருந்தான் கடம்பன்.

கடைக்குள் வந்தவன், எந்த உடையையும் எடுக்காமல் தயக்கத்துடன் நின்றிருக்க, “என்ன திவ்யா யோசிக்கிற? உனக்கு என்ன புடிச்சிருக்கோ அந்த மாதிரி எடு,” என அவன் சொல்ல, அவளோ தன் அருகிலிருந்த பச்சை நிறச் சுடிதாரைக் கடமைக்கு எடுத்துக்கொண்டாள்.அவளை மேலிருந்து கீழ் ஒரு பார்த்தவன், “உனக்குத்தான் பச்சை கலர்னாலே பிடிக்காதுல? கடமைக்குப் எடுக்காம புடிச்சதை எடு,” என்றவன், அவளுக்குப் பிடித்தமான ஆடைகளை அவனே தேர்வு செய்தான்.அவன் தேர்வு செய்தவற்றைப் பார்த்தவள், “எதுக்கு, மாமா, இவ்வளவு…” என கேட்க, “காலேஜ் போகணும்ல, காலேஜுக்கு புடவை கட்டிட்டுப் போகப் போறியா? வாயை மூடிட்டு இரு,” என அவளை அடக்கியவன், அந்த உடைக்கான பணத்தைச் செலுத்திவிட்டு அவளை அங்கிருந்து வெளியே அழைத்து வந்தான்.அடுத்து, இருவரும் அங்கிருந்து நேராகப் பக்கத்திலிருந்த புத்தகக் கடைக்குச் செல்ல, அங்கு அவளுக்குத் தேவையான புத்தகங்கள், ஸ்டேஷனரி பொருட்கள் என அனைத்தையும் வாங்கிக் கொடுத்தவன், அவளை வீட்டிற்கு அழைத்து வர, அவன் பின் அமைதியாக அமர்ந்திருந்தாள் திவ்யா.நாளையிலிருந்து அவளது கல்லூரி வாழ்க்கை ஆரம்பம்! அன்று தன் காதலுக்காகப் படிப்பைத் தூக்கி எறிந்தவள், இன்று தன் தவறை உணர்ந்து தன் வாழ்க்கையைச் செதுக்கிக் கொள்ளப் படிப்பை ஆயுதமாக மாற்ற எண்ணம் கொண்டாள். அதற்காக முதல் படி நாளையும் முதலான அவள் கல்லூரி வாழ்க்கை. அதை நினைக்கும்போதே அவள் மனதில் சொல்ல முடியாத உணர்வு! அதே உணர்வுடன் தன் வீட்டை நோக்கிப் பயணித்தாள் திவ்யா.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!