நடுநிசி நாய்கள் ஓலமிட, நள்ளிரவு நேரத்தில் அவ்வீட்டின் வாசலை கடந்து ஒருவனை இரத்த வெள்ளத்தில் இழுத்துக் கொண்டு சென்றது ஒரு உருவம்…
இரத்தம் ஒழுக அவன் கண்களில் மிரட்சியோடு அவ்வுருவத்தை பார்க்க,
இரத்தம் வழிந்து சதைகள் கிழிந்து தொங்கும் உடலோடு, அவனை கண்கள் சிவக்கும் கோபத்தில் இழுத்து உள்ளே போட்டு அவன் மார்பில் அமர்ந்து அவன் நெஞ்சில் மாறி மாறி ஆக்ரோஷமாய் சதக் சதக் என கத்தியால் குத்தியது அவ்வுருவம்….
அவன் இரத்தம் அதன் முகத்தில் தெறித்து முகமே அழகான பெண்ணின் முகத்தோடு காளி வடிவம் பெற்றிருக்க,
அவன் மீதிருந்து எழுந்து அவன் கன்னத்தை காலால் உதைத்து நிமிர்த்து தன்னை பார்க்க செய்த அந்த இரத்தக் களரியோடு நின்றிருந்த உருவம், தான் சுய உருவத்திற்கு வந்து மீண்டும் பேயாய் மாறி விட,
அவளை கண்டவனோ ” நீ… நீ.. நீ பேயா..?” என குரல் நடுங்க கேட்டான்……
அவனை ஓங்கி மிதித்த அந்த காட்டேரி உருவம் ” ஆமா டா.. அந்நியாயமா என்னை கொன்னுட்டிங்களா??? இன்னும் அந்த கிழவன் தான் பாக்கி.. அடுத்தது அவன் தான்.. அவனை இன்னும் கொடூரமா பகிரங்கமா கொன்னே தீருவேன் டா ” என குரல் கர்ஜித்து அந்த அறையெங்கும் எதிரொலிக்க கூறி, அவனை துடிக்க துடிக்க கொன்று விட்டு, தன் உருவத்தை மாற்றிக் கொண்டு காற்றில் கரைந்தது அந்த காட்டேரி…..
அன்றொரு நாள் மதியம்
பச்சப் பசேல் என படர்ந்திருக்கும் நெல் வயல் வரப்பின் மீதிருந்த இருந்த தெனங்கீற்றால் வேயப்பட்ட கூரை வீட்டின் உள்ளே உத்திரத்தில் தலை கீழாக தொங்கிக் கொண்டிருந்தது ஒரு உருவம்……
” விட்டுடுங்க பிளீஸ். ” என கைகூப்பி கெஞ்சிக் கொண்டு நின்றாள் அவ்வீட்டின் புது மருமகள் நந்தனா…”
அவளின் கூந்தலை பற்றி இழுத்து தன் முகம் பார்க்க செய்த அவ்வுருவம், இரத்தம் வழிந்தோட கூந்தல் விரிந்த நிலையில் கருப்பு புடவை உடுத்தி கொண்டு, சத்தமாய் சிரித்து ” என் மாமனை என் கிட்ட இருந்து பிரிச்சுட்டு நீங்க மட்டும் சந்தோஷமா இருப்பிங்களா???? விட மாட்டேன் டி… விடவே மாட்டேன் .. உன்னையும் உன் புருஷன் அதான் என் மாமன் தருமனையும் கொன்னு பழி தீர்த்தா தான் என் ஆத்மா இங்க இருந்து போகும் டி” என கோபம் கண்ணில் ரத்தமாய் வழிய ஆக்ரோஷமாய் அவளை தூக்கி வீசியது அவ்வுருவம்….
அதில் பயந்த நந்தனா, ” மல்லி அக்கா.. நான் சொல்ல வரதை கொஞ்சம் கேளு… மாமனுக்கும் எனக்கு எந்த நிலைமையில் கல்யாணம் நடந்தது தெரியுமா??” என ஏதோ கூற வர,
அவளை ஓங்கி அறைந்து கழுத்தை பிடித்து மேலே தூக்கிய ரத்த களரியான முகம் கொண்ட அவ்வுருவமோ, ” என்ன டி… நீங்க செய்ததை சரின்னு நிரூபிக்க பார்க்குறிங்களா??? மாமா மாமான்னு அவருக்காக உயிரையே கொடுத்தேனே டி… என்னை மறந்துட்டு அவர் உன்னை எப்படி டி கல்யாணம் பண்ணிக்கலாம்.. என் முன்னாடியே சந்தோஷமா வாழ வேற வந்துருக்கிங்களா? அப்போ என் மாமன் என்னை உருகி உருகி காதலிச்சது எல்லாம் பொய்யா?” என தன் கைவிட்டு போன காதலை எண்ணி கதறி அழுதது அவ்வுருவம்….
ஆறுமாதங்களாகியும் தன் மருமகள் முகம் பார்த்துக் கூட பேசாமல் இருக்கும் தன் மகனின் வாழ்க்கையை எண்ணி பதறிய தருமனின் தாய் மீனாட்சி அழுது ஆர்ப்பாட்டம் செய்து அவனை தன் தந்தை ஊரான இங்கு அனுப்பி வைத்திருந்தார்…
எனில் பசுமை நிறைந்த இடங்கள் மனதை இதமாக்கி மகனை மனைவியோடு மஞ்சத்தில் மகிழ்வாய் வாழ வழி வகுக்கும் என்பது அவரின் எண்ணம்.. பாவம் அவர் அறியவில்லை இங்கு தான் த மகனின் வாழ்வே பல போராட்டங்களை காணப் போகிறது என…..
மேலிருந்து குதித்து நந்தனாவை நெருங்கி அமர்ந்த கருப்பு புடவையில் சதை கிழிந்து நின்ற அந்த உருவம், வாயில் இரத்தம் ஒழுக,
“அதோ அந்த மாந்தோப்பில் அவர் மடியில் படுத்து எத்தனை கனவுகளோடு எவ்வளவு சந்தோஷமா பேசி சிரிச்சிருப்பேன் தெரியுமா டி???
என் மாமன் வருஷத்துக்கு ஒருமுறை ஊருக்கு வரும் போதெல்லாம் இதோ இந்த பக்கம் இருக்க பம்ப் செட்டு, இங்கன மறைவா உக்கார்ந்து தான் என் விரல் சொடுக்கெடுத்து பேசி சிரிக்கும்..
அது தோளில் சாய்ஞ்சு அது பேசுறதை ரசிச்சு கேட்டுட்டே இருப்பேன் டி.. பொழுதுக்கும் அது பேச்சு மட்டுமே என் உயிர் மூச்சா இருந்தது..
ஒருவருஷம் ரெண்டு வருஷம் இல்ல டி, முழுசா அஞ்சு வருஷம்…” என கண்களை துடைத்துக் கொண்டு அழுத உருவமோ
“என் மாமன் ரெண்டு பேரோட படிப்பும் முடிக்கும் வரை ஆசைகளை அடக்கிக்கிட்டு கண்ணியமா காதலிச்சிது டி..
அந்த கண்ணியத்தில் மெய் மறந்து வருஷத்துக்கு ஒருமுறை மட்டுமே வரும் அவரை நினைச்சுட்டு அந்த மொத்த வருஷத்தையும் இதோ இங்கன வந்து அதோட வாசத்தை பிடிச்சு அனுபவிப்பேன்.. அவருக்காக காத்திருந்தேன்… என் மாமன் இப்படி என்னை ஏமாத்துமுன்னு நினைக்கவே இல்லையே… ஐயோ மாமா…” என மீண்டும் குரல் கரகரக்க கூறி கண்களில் இரத்தம் ஒழுக அழுக,
நந்தனாவுக்கும் கூட அதன் உணர்வுகள் அனைத்தும் உயிர் வரை வலித்தது…
தருமனை பற்றி எதுவும் அறியாத நந்தனா, இன்று அவனின் காதலை அவன் காதலி வழியே அறிந்தவள் உள்ளம் நொந்து நொறுங்கி சிதறியது… இப்போது தான் அவன் தன்னிடம் பேசாமல் தன்னை தவிர்க்கும் காரணம் புரிந்து போனது….
அதற்காக உயிரற்ற ஒரு உருவத்திடம் அவனை கொடுத்து விட்டு செல்ல முடியாதே…
எந்த மனைவிக்கு தான் தன் கண் முன்னே தன் கணவனை இன்னொரு பெண்ணுக்கு விட்டு கொடுக்கும் மனம் வரும்… அதுவும் அத்தனை வலியிலும் தன்னிடம் கண்ணியமான அன்பை காட்டிய அவனை உருவமில்லா உயிருக்கு விட்டு கொடுக்க முடியுமா என்ன???
கை கூப்பி அவ்வுருவத்தை கண்டு பயந்து பின்னே சென்ற நந்தனா, ” அக்கா… உன்னை பத்தி தாத்தா தப்பு தப்பா சொன்னாக… உன்னால வாழ்க்கை இழந்து பைத்தியமாக சுத்திட்டு இருந்த மாமனுக்கு வாழ்க்கை வேணும்னு அத்தை கெஞ்சினதால தான் மாமன் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாக அக்கா… மாமன் பாவம் அவரை விட்டுடுக.. பிளீஸ் ” என கெஞ்சி கதறிக் கொண்டிருந்தாள்…
அதில் கை தட்டி சத்தமாய் சிரித்த அவ்வுருவம் கண்களில் வழியும் இரத்த கண்ணீரை துடைத்து கொண்டு ” நீ சொல்லுறது சரியாகவே இருக்கட்டுமுடி… என் மாமன் எப்படி அதை நம்பலாம்??? என் நடத்தை எப்படி??? இங்கன நான் எதுக்கு வந்தேன்?? என்னை பத்தி அதுக்கு தெரியாதா???” என கர்ஜித்து உறுமியது….
பயத்திலும், தன் கணவனை விட்டு கொடுக்க முடியாத தவிப்பிலும் அழுது அழுது முகம் சிவந்து எழுந்த நந்தனா, வெளியே களத்து மேட்டில் உச்சி வெயிலில் கவலையோடு படுத்திருக்கும் தன்னவனை காக்க எண்ணி பயத்தில் வீட்டை விட்டு வெளியே ஓட,,
இரத்தக்கறையோடு விரல் சொடுக்கிய அவ்வுருவத்தின் கட்டுப்பாட்டில் அவள் செல்லும் முன் குடிசையில் இருந்த சின்ன கதவும் படாரென அறைந்து சாத்தப்பட்டது….
கதவில் சாய்ந்து உடல் குறுக அமர்ந்த நந்தனா, ” அக்கா பிளீஸ் உன்னை கெஞ்சி கேட்கிறேன்… மாமனை ஒன்னும் பண்ணிடாத ” என அழுக துவங்கினாள்….அதில் அவ்விடமே அதிர சிரித்த அவ்வுருவம்,
” அவ்வளவு சுலபமா அவனை கொல்லவா டி இன்னும் மேலோகம் போகாம இருக்கேன்??” என ஆக்ரோஷம் பொங்க கேட்டு, ” இங்க இருக்க ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நரகத்தை காட்டுவேன் டி… என்னை மறந்த அவனை கொஞ்சம் கொஞ்சமா சித்ரவதை செய்யாம விட மாட்டேன்” என கூறி கதவை திறந்து அரூபமாய் மாறி காற்றில் கரைந்து போனது….
தரையில் மடங்கி சரிந்து அழுத நந்தனா,
” ஐயோ… மாமா.. நான் உன்னை எப்படி காப்பாத்த போறேன் ” என அழுது வெம்பி துடிக்க,
அடுத்த கணமே கண்களை புறங்கையால் துடைத்துக் கொண்டு தைரியமாய் எழுந்து தருமனை தேடி ஓடினாள்…
அங்கு தருமன் வெயிலின் வெம்மையை கூட உணராமல் மல்லியை எண்ணி கண்களில் கண்ணீருடன் வெறும் வரப்பில் படுத்திருக்க,
அவனை ஓடி சென்று அணைத்துக் கொண்ட நந்தனா, ” மாமா… உள்ள வாங்க மாமா… நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்… பிளீஸ் எழுந்திருங்க ” என பதறி அழைத்தாள்…..
அவனோ அவள் கைகளை தட்டி விட்டு அவளை விலக்கி நிறுத்தி, ” என்னை தொடாதன்னு சொல்லி இருக்கேன் நந்தனா… ப்ச்… நகரு” என எழுந்து கொண்டவன் மல்லிகாவோடு மகிழ்ந்திருந்த பம்ப் செட் மறைவுக்கு சென்று அமர்ந்தான்…அவன் சென்ற பின் சிரித்த அவ்வுருவமோ அவள் கண்களுக்கு புலப்படாமல், ” என்ன ரெண்டு பேரும் நாடகமாடுறிங்களா??” என குரல் கரகரக்க கேட்க,
மனதில் வரவழைக்கப்பட்ட தைரியத்துடன் எழுந்த நந்தனா, ” நீ மாமனை நம்பல தானே… இப்போ நிரூபிக்கிறேன் பாரு மாமன் மேல தப்பு இல்லன்னு” என சபதம் செய்து கொண்டு, ” மாமன் உன்னை எவ்வளவு காதலிக்கிதுன்னு இப்போ தெரியும் உனக்கு.. ஆனா அதன் பிறகு நீ அவரை விட்டுட்டு போயிடனும்… எங்க வாழ்க்கையில் தொந்தரவா இருக்க மாட்டேன் சத்தியம் பண்ணு” என அவ்வுருவத்தின் கோபத்தை தூண்டி அதை சத்தியம் செய்ய நிர்பந்தித்தாள்….
ஆக்ரோஷம், வருத்தம், கவலை, தன் காதல் என அனைத்தும் கொண்ட கலவையான உணர்வுகளில் சிக்கிய கருப்பு நிற புடவையில் அரூ
பமாய் காற்றில் பறந்த அவ்வுருவமும் அவளுக்கு சத்தியம் செய்து கொடுத்தது….. ஆக்ரோஷம், வருத்தம், கவலை, தன் காதல் என அனைத்தும் கொண்ட கலவையான உணர்வுகளில் சிக்கிய கருப்பு நிற புடவையில் அரூபமாய் காற்றில் பறந்த அவ்வுருவமும் அவளுக்கு சத்தியம் செய்து கொடுத்தது…..
அதே வேகத்தோடு எழுந்து சென்ற நந்தனா தருமனின் அருகே அமர்ந்து, ” மாமா.. என்னை உங்க மனைவியா நினைக்க வேண்டாம்.. ஒரு தோழியா… உங்க மனசில் இருக்கும் கவலையை பகிர்ந்து கிட்டு உங்களை கொஞ்சம் திடப்படுத்திக்கோங்க மாமா பிளீஸ்” என அவன் கைகளை பிடித்து கெஞ்ச,
பின்னால் இருந்து ஒரு குரல், ” என் மாமன் மேல இருந்து கையை எடு டி” என கத்தி அவள் கூந்தலை காற்றில் இழுக்க,
” ஆ… எனும் தன் வலியை கட்டுப்படுத்திக் கொண்டு அதை காதில் வாங்காமல்,
” எனக்காக சொல்லுவீகளா மாமா ” என உயிர் உருகும் குரலில் கேட்டாள்……
யாருக்கு தான் அதை மறுக்க மனம் வரும் தன்னை புரிந்து தன் விலகலை கூட பெரிதாய் எண்ணாமல் தனக்காக பார்த்து பார்த்து செய்யும் அன்பான மனைவியின் முதல் கோரிக்கை… அதுவும் உயிர் உருகும் அழைப்பில் கெஞ்சும் தன் மனைவியின் கோரிக்கை..
அதில் செவி சாய்த்த தருமன், அவள் கைகளை தன் கண்களில் வைத்து கொண்டு ” நானும் இந்த ஊரு ராஜன் விவசாயி பொண்ணு மல்லிகாவும் காதலிச்சோம்… அதுவும் கிட்டத்தட்ட அஞ்சு வருஷமா… வருஷத்தில் ஒரே முறை மட்டுமே பார்த்துகிட்டு தொலைவில் இருந்து திகட்டாத நினைவுகளில் காதலிச்சோம்…..
முதல் முறை கோவில் திருவிழாவுக்கு ஊருக்கு வந்தப்போ, அவ கண்ணாடி வளையல் சரசரக்க என்னை ஒரு முறை இடிச்சுட்டா… உடனே “மன்னிச்சுக்கிடுக
ன்னு” சொல்லிட்டு கண்ணை சுருக்கி திரும்பி பார்த்துட்டு போனா…
ரெட்டை ஜடையில், அரக்கு நிற தாவணியில், கெண்டை காலுக்கு கீழ பின்னல் விழ, மல்லிகைப்பூ சரம் வச்சு, கருப்பா இருந்தாலும் கன்னக் குழி விழ சிரிச்சி அழகா இருந்த மல்லியை அப்போ தான் முதல் முதலில் பார்த்தேன்……. என்னவோ அப்போ அவளை அடிக்கடி பார்க்க மனசு தவிச்சுது…
சரி அது ஈர்ப்புன்னு என்னை நானே திடப் படுத்திட்டு விட்டுட்டேன்.. பிறகு அவளை இதோ இந்த மாந்தோப்பில் அவ தோழிகளோடு ஊஞ்சல் ஆடிட்டு இருக்கும் போது பார்த்தேன்… அப்போ இருந்து உள்ளுக்குள்ள ஏதோ ஒரு இனம் புரியாத தாக்கம் அவ மேல வந்தது… அதன் பின்ன அதை ஈர்ப்புன்னு விட முடியாத மாதிரி ராட்சஸி என் மனசை கொலையா கொன்னு வதைச்சா… நின்னா நடந்தா கூட அவளோட மஞ்சள் பூசிய முகமும், என்னை பார்த்ததும் தலை குனிஞ்சு சிரிச்ச அழகான அவ குண்டு கண்ணும் உயிர் வரைக்கும் ஆழமா பதிஞ்சி போச்சு நந்தனா…
பல நாள் அவளை எண்ணி பல விதமான கனவுகள் கூட கண்டேன்.. என் வாழ்க்கை முழுக்க அவளோட தான் வாழனும்னு முடிவு பண்ணினேன்..
அவ வீட்டுக்கும் தாத்தா வீட்டுக்கும் பகை இருந்ததால அவ கிட்ட என்னால சொல்ல முடியல…
அடுத்த வருஷம் ஒருமுறை வந்தப்போ அவளை இதே மாமரத்தில் ஊஞ்சலாடும் போது பார்த்து அவளை அப்படியே நிறுத்தி, அவ தோழிகளை போக சொல்லிட்டு அவ கண்களை நேருக்கு நேர் பார்த்து ” மல்லி.. நீ என் உயிருக்குள் இறங்கிட்ட டி… என் உயிருள்ளவரை நீ என் பொண்டாட்டியா என் கூட வாழுவியான்னு கேட்டேன்..”
அவளும் அந்த நிமிஷம் என் கண்ணை பார்த்து, ” நானும் உங்களுக்காக தான் தினமும் இந்த இடத்துக்கு வந்து உங்க வாசத்தில் சுவாசத்தை கலந்து உங்க நினைவில் உயிர் வாழுறேன் மாமா… என்னை இப்போவே கூட கட்டிகிடுகன்னு சொன்னா பாரு… அப்படியே நம்ம உயிர் நம்ம கையில் இருந்தா எப்படி அதை உணருவோம் அப்படி ஒரு ஆத்ம சந்தோஷமா இருந்தது நந்தனா..” என உயிர் உருக தன் காதலை அவளிடம் கூறிக் கொண்டிருக்க,
நந்தனா அவனின் காதலை எண்ணி கண்ணீரை சிந்த,
அவ்வுருவமோ இன்னும் அவன் தங்கள் காதலித்த அனுபவத்தை சிலாகித்து கூறியதில் அவன் தன்னை மறக்கவில்லை என்பதை உணர்ந்து ரத்தக்கண்ணீர் வடிக்க, அது நந்தனா மனதை இன்னும் வதைத்தது…
சொல்லும் போதே கண்களில் சிந்திய கண்ணீரை துடைத்து தருமன், ” இப்படி தான் வருஷத்துக்கு ஒருமுறை வந்தாலும் ஒரு மாசம் முழுக்க இந்த மாந்தோப்பில், பம்ப் செட் மறைவில் உக்கார்ந்து யாருக்கும் தெரியாமல் பேசுவோம் டி…
அவளை இப்படி மடியில் படுக்க வைச்சு பாட சொல்லி நாள் முழுக்க கேட்கலாம்.. அப்படி இருக்கும் அவ தேன்குரல்… நான் பேச பேச என் கண்ணையே பார்த்து என்னை பேச விடாமல் திணற வைப்பா ராட்சஸி… அதே நேரம் பேசு மாமா பேசு மாமான்னு கெஞ்சி என்னை கொஞ்சி தீர்ப்பா…
என் கவலை, கோபம், காதல், காமம் எல்லாத்தையும் அவ கிட்ட கொஞ்சமும் ஒளிவு மறைவு இல்லாம பகிர்ந்துக்குவேன்…
இப்படி காதலிச்சுட்டு இருந்தப்போ தான் ஒரு நாள் நான் வேலை விஷயமா வெளியூர் போயிருக்கும் போது “மல்லி இங்க வேற ஒரு பையனோட ..” என அதற்கு மேல் கூற முடியாமல் தவித்து விம்மி வெடித்து அழுது கதறி விட்டான் அந்த ஆறடி ஆண்மகன்…
அவ தூக்கு போட்டு இறந்ததா தகவல் வந்தும் என்னால அங்க இருந்து வர முடியாத நிலைமை நந்தனா… விட்டுட்டு வந்தா என் கம்பெனியோட ஷேர் 2000 கோடி நஷ்டம் ஆகிடும்… ரொம்ப இக்காட்டான சூழ்நிலையில் நான் கிட்டத்தட்ட அரை பைத்தியமா அங்க இருந்து வேலையை முடிச்சு கொடுத்துட்டு ஓடி அவளை பார்க்க தான் வந்தேன்…
ஆனா அவளோட சாம்பலை கூட என்னால பார்க்க முடியல டி… இங்கேயே செத்து போயிடலான்னு கிணத்துக்கு போகும் போது அம்மா உயிருக்கு போராடுறதா போன் வந்தது…. நான் என்ன தான் செய்ய முடியும்… உயிரானவளுக்காக உயிரை கொடுக்கவா, இல்ல எனக்கு உயிர் கொடுத்தவங்களுக்காக உயிரோட வாழவா??? ரெண்டுக்கும் இடையில் இப்போ வரைக்கும் செத்து செத்து பிழைக்கிறேன் நந்தனா” என கதறி விட்டான் தருமன்…
அவனை மார்போடு அணைத்து தாங்கிக் கொண்டாள் அவன் தாரம்…
எதிரே நின்று தன்னவன் நிலையை எண்ணி விம்மி வெடித்து இதயம் சுக்கு நூறாக உடைய நின்றிருந்தாள் அவனின் ஆருயிர் காதலி மல்லிகா…..
அவனை தேற்றிய நந்தனா, ” சரி மாமா… அழுகாதீக, இப்போ சொல்லுங்க.. மல்லி அப்படி ஒருத்தர் கூட தப்பா இருந்திருப்பான்னு நம்புறீகளா?” என அவன் முகத்தை கையிலேந்தி கேட்க,
கோபத்தில் பம்ப் செட் சுவற்றை குத்தியவன் ” என் மல்லி அக்னி மாதிரி நந்தனா…அவளை என்னை தவிர யாராலயும் நெருங்க முடியாது… நெருங்கின அவங்களை பொசுக்கி இருப்பா.. இல்ல தன்னை தானே அழிச்சிட்டு இருந்திருப்பா..” என அத்தனை கர்வமாய் கூறியவன் கண்கள் அடுத்த நிமிடம் குழப்பத்தில் ஆழ்ந்தது…
அதை கேட்ட மல்லிக்கோ அவன் வார்த்தை உயிர் வரை ஊடுருவ, இத்தனை ஆழமாய் காதலித்த தன்னவனை நிந்திக்க வந்ததை எண்ணி தன் மீதே கோபம் கொண்டு தன்னை அடித்துக் கொண்டு மடங்கி அமர்ந்தாள் அந்த தூய ஆத்மா…..
தருமனை நேருக்கு நேர் பார்த்த நந்தனா,
” அப்போ மல்லி இந்த முடிவெடுக்கவும், அவளுக்கு இந்த அவப்பெயர் கிடைக்கவும் என்ன காரணமா இருக்கும் மாமா??” என கேட்க,
அப்போது தான் அதை பற்றி சிந்தித்தவன்,
” ஆமா நந்தனா… இத பத்தி நான் சிந்திக்கவே இல்லை…. இப்போவே அந்த உண்மையை கண்டு பிடிச்சு, என் மல்லி உத்தமின்னு நிரூபிக்கிறேன்” என கூறி வேகத்தில் எழுந்தவன் சென்றது அவன் தாத்தாவை நோக்கி தான்….
ஆனால் அவனுக்கு முன் அங்கே தருமனின் தாத்தா வீரநாயகம் முகம் முழுதும் இரத்தம் ஒழுக, கழுத்தில் காயங்களோடு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து கொண்டிருந்தார்….
தன் எதிரே வந்தவரை அந்நிலையில் பார்த்த தருமனும் ஊர்மக்களும் அவரிடம் நடந்ததை கேட்க, மேலிருந்து ஒரு குரல்,
” சொல்லு டா… என் மாமன் முன்னாடியும் என்னையும் என் குடும்பத்தையும் தப்பா பேசி, என் குடும்பத்தையே ஊரை விட்டு துரத்தின உண்மையை ஊர்மக்கள் முன்னாடியும் சொல்லு” என காற்றில் அவர் காதுக்குள் நுழைந்து நாராசமான குரலில் ரீங்காரமிட,
” சொல்லுறேன் சொல்லுறேன் ” என பதைபதைத்தவர், ” தர்மா…எனக்கு நீ நம்மளை விட வசதி கம்மியா இருக்க ராஜன் பொண்ணு மல்லியை காதலிக்கிறது பிடிக்காம, அவன் மேல இருந்த பகையையும் மல்லி மூலமா தீர்க்க திட்டம் போட்டேன்…
அவளை நீ வந்திருக்கிறதா அவ தோழி ஒருத்தி மூலமா சொல்லி விட்டு மாந்தோப்புக்கு வர வச்சு, அங்க ஒருத்தன் கூட தப்பா இருக்க மாதிரி செட் பண்ணி அவளை தற்கொலை பண்ணிக்க வச்சேன்… ” என கூறிய நொடியே,
தருமனோ தன்னவள் மேல் கொண்ட கலங்கள் தீர்ந்தாலும் அவளை கொன்ற கோபம் தீராமல் அவரை அடிக்க கை ஓங்க,
அதற்குள் அவர் கழுத்தில் மேலிருந்து ஓர் கத்தி தொங்கி அனைவர் முன்பும் வேகமாய் குத்தி கொண்டே இருந்தது…
அதில் அதிர்ந்த தர்மன், ” மல்லி..” என கத்தி, ” என்னையும் உன் கூட கூட்டிட்டு போயிடுடி…தப்பு பண்ணிட்டேன் டி..” என கதறி அழ,
ஊரே ஓர் நல்ல குணம் கொண்ட பெண்ணை ஒரு பார்வையில் தவறாய் பேசியதை எண்ணி வருந்தி அவளிடம் மன்னிப்பு கேட்டு அவனை பாவமாய் பார்க்க,
நந்தனா அவனை தோளோடு அணைத்துக் கொண்டு, ” அக்கா பிளீஸ்… உன் மாமனை எனக்கு கொடுத்திடு… அவர் வாழனும்” என தாலியை கையில் ஏந்திக் கொண்டு கெஞ்சினாள்…..
கண்களில் கண்ணீர் வழிய, தருமனின் தலை முடியை காற்றால் வருடிய மல்லி காட்டேரி, ” நீங்க வாழனும் மாமா… உங்களை நானும் தப்பா நினைச்சுட்டேன்… மன்னிச்சுகிடுக. நந்தனா தங்கமான பொண்ணு மாமா.. அவளை கலங்க விடாம பர்த்துகிடுக” என கூறி,
நந்தனாவிடம் ” நீங்க சந்தோஷமா இருப்பதை பார்க்கும் அளவுக்கு எனக்கு தாராள மனசு இல்ல நந்தனா… என் மாமனை பத்திரமா பார்த்துக்கோ” என அவள் தலையிலும் காற்றால் ஆசிர்வதித்து அவ்வுருவம் காற்றில் கரைந்து மறைந்து போனது….
“மன்னிச்சுகிடுக” எனும் ஒரு வார்த்தையில் உயிரானவன் உயிரில் கலந்தும் பிரிந்தும் சென்றாள் மல்லிகா..
தருமன் கை பிடித்து அவனுக்கு அவன் மல்லி கூறிய அழகான வாழ்க்கையை கொடுக்க அழைத்துக் கொண்டு சென்றாள் நந்தனா…
மேலிருந்து அவர்கள் மேல் பூக்களை தூவிய கருப்பு நிற
உருவம் மல்லியாய் மாறி கண் கலங்க தன் காதலை எண்ணி மகிழ்வோடு சென்றது.
சுபம்.