“பரவாயில்லையே. இருட்டா இருந்தாலும் என் மாப்பிள்ளை கில்லி மாதிரி மோதிரத்த கையில போட்டுட்டாரு” என்று இந்து சொல்ல,
முல்லை அகிலனைப் பார்த்து சிரித்தப்படி, “உங்க மாப்பிள்ளை… அதாவது என் மாமன் கில்லி தான் அம்மா.” என்று சந்தோஷமாக சொன்னாள்.
அவளின் இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம் என்று அகிலுக்கு புரியாமல் இருக்க பொறுமையாக, “முல்லை. உன் கையில நான் மோதிரத்தை போடல” என்றான்.
“டேய்! டொனால்ட் மண்டையா. நீ அதுக்கான ஆள் இல்லை என்று எனக்கு எப்போவோ தெரியும். போடா. டுமாங்கோலி.” என்று முல்லை திமிராக சொல்லவும், மோதிரத்தை போட்டது யார் என்ற கேள்வி அகிலனுக்கு வந்தது.
அன்றைய இரவு முல்லையின் அறையில், “என்னடி ரொம்ப ஹாப்பியா இருக்க” எனக் கேட்டாள் ஷாமிலி.
“ஆமா ஹாப்பி தான். என் மாமன் சரியான நேரத்தில், என் கையில எப்படி மோதிரத்தைப் போட்டாருன்னு பாத்தியா.”
“ஆமாடி. நான் கூட கரண்ட் நின்னதும் பயந்துட்டேன். ஆனா, பரவாயில்ல கரெக்டா வந்து கதிர் மாமா ஆஜராகி, மோதிரத்தைப் போட்டுருச்சு. ஆனா, அதுக்கப்புறம் எங்க போச்சு” என்றாள் அவன் அங்கு இல்லாததை மனதில் வைத்து.
“வேற எங்கே போயிருக்கும். இவ்வளவு நேரமும் நம்ம பேசுறத இந்த கட்டிலுக்கு கீழே படுத்துகிட்டு கேட்டுக் கொண்டு தான் இருக்கும்” என்று சொன்னப்படி முல்லையும், ஷாமலியும் கீழே குனிய, கதிர் கட்டிலின் கீழ் கண்களை மூடிக்கொண்டு உறங்குவது போல நடித்துக் கொண்டிருந்தான்.
அதைப் பார்த்த ஷாமிலி, “அது சரி. நல்ல புருஷன் நல்ல பொண்டாட்டி. ஏய்! நீ கதவை சாத்திக்கோ நான் போறேன்” என்றாள் ஷாமிலி.
“அக்கா எங்க போற?”
“எப்படி இருந்தாலும், நீங்க ரெண்டு பேரும் இப்போ கொத்து பரோட்டா போட போறீங்க. நான் எதுக்கு உங்களுக்கு இடைஞ்சலாக இருந்துகிட்டு. நான் போயி உம்மாவை நினைச்சு சும்மா இருக்கிற என்னுடைய ஆளை பார்க்கிறேன்” என்று சொன்னபடி சென்றாள்.
தன் அறையின் கதவை தாழிட்ட முல்லை பொறுமையாக கட்டிலின் கீழ் போனவள், “மாமா மாமா” என்றழைத்தாள்.
“என்னடி?”
“நடிச்சது போதும். எழுந்திரி மாமா.”
“தூங்கும்போது எழுப்பாத.”
“நடிக்கிறன்னு தெரிந்தும் அதை மெய்ண்டைன் செய்யுற பார்த்தியா. நீ எப்படி அங்க சரியான நேரத்துக்கு வந்த? என்ன தான் நீ வந்திருவ தெரிஞ்சாலும், நேரம் ஆகவும் நான் பயந்துட்டேன். அந்த அகிலன் மட்டும் என் கையில மோதிரத்தை போட்டிருந்தான் வை.,,”
அவள் முடிக்கும் முன், “அவனுடைய இன்னொரு கையையும் வெட்டி இருப்பேன். நான் ஒருத்தன் இருக்கும் போது, உன் விரலை தொடக்கூடிய தைரியம் அந்த அகிலனுக்கு மட்டுமில்லை. இந்த அகிலத்தில் இருக்கும் எவருக்கும் வரக்கூடாது. புரியுதா.”
“ம்… புரியுது. ஆனா, எனக்கு முதுவெல்லாம் வலிக்குது.”
“ஏன்டி?”.
“கட்டிலுக்கு கீழே படுக்க முடியல மாமா.”
“ம்… அப்போ கட்டிலுக்கு மேலே படுக்கலாம்னு சொல்றல்ல.”
“ம்க்கும்… புரிஞ்சா சரி. சரி சரி மேலே ஏறு மாமா.”
“ஏய் என்னடி ஆச்சு உனக்கு? தப்புத் தப்பா பேசுற.”
“ச்சி. கட்டில் மேலே ஏறி படு மாமா.” என்றாள்.
“நான் கூட ஷாக் ஆகிட்டேன்” என்று நெஞ்சைப் பிடித்தான் கதிர்.
“ஆகுவ ஆகுவ. சரி மாமா நீ சாப்டியா?”
“இல்லடி கொள்ளை பசியில இருக்கேன். இனிமேல்தான் உன்னை சாப்பிட போறேன்.”
“நான் அந்த சாப்பாடு கேக்கல. நீ வயித்துக்கு சாப்பிட்டியானு கேட்டேன்.”
“இந்த பங்க்சன் டென்சன்ல சாப்பிடலை.”
“நான் போய் உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வரட்டுமா?”
“ஒன்னும் தேவை இல்ல. நான் நாளைக்கு காலைல வீட்டுக்கு போய் சாப்பிட்டுக்குறேன்” என்றான்.
“ஏன் மாமா? இது உன்னோட வீடு இல்லையா?”
“அப்படி இல்ல. நமக்கு கிடைக்கிறதே கொஞ்ச நேரம். இந்த நேரத்தில் அன்னத்தில் கை வைக்கக்கூடாது. என்னுடைய அழகியின் கன்னத்தில்தான் கை வைக்க வேண்டும்.” ❤என்று சொன்னபடி கதிர் முல்லையை கட்டி அணைக்க, கணவனும் மனைவியும் இல்லற வாழ்க்கையில் இன்பமாக அன்றைய இரவைக் கழித்தனர். இப்படியே பத்துப் பதினைந்து நாட்கள் கடந்தது.
“என்னடா மகனே? ஏன் இவ்வளவு சோகமா இருக்க?” என்று அகிலனிடம் கேட்டார் சேது.
“ஏய் கிழவா! அன்னைக்கு நான் முல்லை கையில மோதிரத்தை போடவே இல்ல. இங்கே வேற என்னமோ நம்மளை சுத்தி நடக்குது.”
“என்னடா சொல்ற?” என்று பதறினார் சேது.
“ஆமா. நான் அவ கையில மோதிரம் போடவே இல்ல.”
“ஆனா, முல்லை கையில மோதிரம் இருக்கே. அப்போ யாரு அந்த மோதிரத்தை போட்டு இருப்பாங்க?”
“அதான் தெரியல.”
“என்னடா இது? புதுசு புதுசா கதை நடக்குது.”
“ஏய் கிழவா! நீ முல்லை முகத்துல சந்தோஷத்தை பாத்தியா. நான் மோதிரம் போட்டால் அவ இப்படியா சந்தோஷப்படுவாளா? எதோ நம்மை மீறி நடக்குது” என்றான் யோசனையாக.
“ஆமாடா. எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு. சரி யாரோ கதவை தட்டறாங்க யாருன்னு பாரு” என்றார்.
வெளியே இந்து நின்றிருப்பதைப் பார்த்த அகிலன், “அத்தை வாங்க. என்ன இந்த நேரத்துல?” என்றான்.
“இரு முதல்ல கதவ சாத்து. ஏய் அகில்! இங்கே என்ன நடக்குது?” என்றார்.
“ஏன் அத்தை? எதுக்கு இவ்வளவு கோவப்படுறீங்க?”
“இங்க பாரு. எனக்கு டிபார்ட்மெண்டில் இருந்து கம்ப்ளைன்ட் வந்து இருக்கு.”
“என்ன அத்தை? என்ன கம்ப்ளைன்ட்?” என்றான் புரியாது.
“நம்ம சட்டத்துக்கு விரோதமா சொத்து சேர்த்து வைத்திருக்கிறோமாம். அதுவுமில்லாமல் நான் வேற ஏதேதோ பிசினஸ் பண்ணி தான், இந்த சொத்தை எல்லாம் சேர்த்து இருக்கேனாம்.”
“ஐயோ யாரு நம்ம மேல கம்ப்ளைன்ட் தந்து இருப்பாங்க?” என்றான் ஒன்றும் அறியாதவனாய்.
“இந்த சொத்துல பாதி, கீதா, மற்றும் லட்சுமி, பாண்டியனுடைய மகன் கதிரின் பங்கு. நான் என்னைக்குமே அடுத்தவங்க சொத்துக்கு ஆசைப்பட மாட்டேன். அவங்க என்னைக்கு வந்து கேட்டாலும், இந்தச் சொத்தை நான் திருப்பிக் கொடுத்துவிடுவேன். எனக்கு என்னமோ இந்த பிசினஸ்சை ஆரம்பிக்க வேணாம்னு தோணுது” என்றார்.
“என்ன நீங்க? இதுல நம்ப கோடி கணக்குல இன்வெஸ்ட் பண்ணி இருக்கோம் அத்தை.
“ஆமா இந்து. அதெல்லாம் ஒன்னும் இல்ல. இந்த பிசினஸ் நல்ல பிசினஸ் தான். என் மகன் அகில் எல்லாத்தையும் பார்த்துப்பான்.” என்றார் சேது.
“இல்ல. எனக்கு என்னமோ இதெல்லாம் சரி வரல. நாளைக்கே டாக்குமென்ட் ரெடி பண்ணு. நான் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துடுறேன். பத்தாததுக்கு இந்த நகையும், பணமும் வேற காணாம போச்சு. இது எல்லாத்தையும் சேர்த்து கனக்ட் பண்ணி பார்க்கும்பொழுது, வேற ஏதோ எங்கேயோ இடிக்குது. கூடிய சீக்கிரம் நான் அத கண்டுபிடிக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, இந்துவிற்கு தன் தோழியிடம் இருந்து அழைப்பு வந்தது.
“ஹலோ. சொல்லுடி. அப்படியா? உண்மையாவா? இல்ல என்னால நம்ப முடியலையே. சரி எங்க வீடியோவை அனுப்பு.” என்று இந்து தன் தோழியிடம் பேச, அவர் அனுப்பிய வீடியோவில், அகிலனின் தந்தை சேது அந்த ரவுடிகளிடம், ‘இந்திரா வரும் பொழுது பணத்தையும், நகையையும் என் மகனின் கழுத்தில் கத்தியை வைத்து வழிப்பறிக் கொள்ளை அடிக்க வேண்டும்’ என்று பேசிக்கொண்டிருந்த வீடியோவைப் பார்த்து இந்துவின் கோவம் உச்சம் தொட்டது.
“டேய். உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்றீங்களா?” என்று கத்தினார்.
“என்ன சொல்றீங்க அத்தை?”
“யாருக்கு யாரு அத்தை. அப்போ என் நகை, பணம் எல்லாம் திருடினது நீங்கதானா?”
“இல்ல நான் இல்ல அத்தை.” என்றான் வேகமாக.
“ஏய் இதோ எனகிட்ட இருக்கு.”
“ஐயோ இந்துமா. பணத்து மேல ஆசைப்பட்டு இந்த விஷயத்தை செய்தது நான் தான். என் மகனுக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.” என்றார் சேது.
“நீ எல்லாம் ஒரு அண்ணனா? ஒழுங்கு மரியாதையா என்னுடைய பணம், நகையெல்லாம் குடுத்துட்டு, இந்த ஊரிலே இல்லாம ஓடிப் போயிடு. இல்ல உள்ள தள்ளி கம்பி எண்ண வைத்து விடுவேன்” நேற்று கோவத்தில் கொந்தளித்தார் இந்து.
அகிலன் சேதுவைப் பார்த்து கண்ணடித்து, “நீயெல்லாம் ஒரு மனுசனா? அத்தை எவ்வளவு நல்லவங்க. அவங்களுக்கு போய் துரோகம் பண்ண உனக்கு எப்படி மனசு வந்துச்சு. அத்தை, எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் அப்பாவுடைய இந்த கீழ்த்தரமான புத்திக்கு, நான் என்னைக்கும் துணை போக மாட்டேன். நான் முல்லையை எவ்வளவு காதலிக்கிறேன் தெரியுமா? நான் அவளுக்காகத்தான் உயிர் வாழறேன்” என்று வசனம் பேசினான்.
“இல்ல இல்ல. உன் அப்பா மாதிரி தான் நீயும் இருப்ப. அதனால ஒழுங்கு மரியாதையா அப்பா, புள்ள ரெண்டு பேரும் இந்த வீட்டை விட்டு இடத்தை காலி பண்ணுங்க” என்றார்.
“அத்தை என்னை நம்புங்க. நான் முல்லையை உயிருக்கு உயிரா காதலிக்கிறேன். என்னை நம்புங்கள்” என்று சொன்னபடி அகிலன் இந்துவின் கால்லில் விழுந்தவன், இந்துவின் காலை வாரி விட, இந்து பின்பக்கமாக சாய்ந்து கீழே விழ, தலையில் அடிபட்டு அதே இடத்தில் மயங்கினார்.
“டேய்! என்ன காரியம் பண்ணிருக்க?” என்று மகனை திட்ட,
“பின்ன என்ன கிழவா. இந்த பொம்பளைக்கு நம்மள பத்தி எல்லாமே தெரிஞ்சிருச்சு. இந்த பொம்பளையை நைட்டோட நைட்டா நம்மளுடைய இடத்துக்கு தூக்கணும்.” என்றான் அகிலன்.
“என்னடா சொல்ற?”
“ஆமா கிழவா. பிசினஸ் விஷயமா இந்து வெளியூர் போய் இருக்குது. அப்படின்னு சொல்லி இந்த கல்யாணத்தை நம்ப சீக்கிரம் முடிக்கணும்.”
“டேய்! இந்து இல்லாம கல்யாணம் எப்படிடா முடியும்?”
“அது எல்லாம் முடியும். நீ சும்மா இரு. நம்ம இடத்துக்கு இந்துவை தூக்கிட்டு போய், இது கழுத்துல கத்திய வச்சு, நாம இந்த கல்யாணத்தை நடத்த சொல்லி பேச சொல்லுவோம்” என்று சொன்ன அகிலன், இரவோடு இரவாக இந்துவை அவனது இடத்திற்கு கடத்தினான்.
மறுநாள் காலை இந்து மயக்கத்திலிருந்து எழுந்த இந்து, “டேய்! உங்களையெல்லாம் நான் தூக்கி உள்ள வைக்கிறேன் பாரு. நான் யாருன்னு நெனச்சே. நான் ஒரு போலீஸ்டா” என்று கத்தினார்.
“யாரு நீ போலீஸ்? ஹாஹா..” என்று சத்தமாகச் சிரித்து, “நீ எல்லாம் ஒரு போலிஸ்? உன்ன நெனச்சா எனக்கு சிரிப்பா இருக்கு. ஏய் இந்து நீ ஒரு ஏமாந்த பொம்பள” என்றான் அகிலன்.
“ஏய் யாரை பார்த்து திமிரா பேசுற?”
“பின்ன என்ன. நான் எவ்வளோ பெரிய தில்லாலங்கடி தெரியுமா. உன் விரலை வச்சே உன் கண்ணை குத்தினேன் பாத்தியா.” என்றான்.
“என்ன உளர்றே?”
“ஆமா. நான் பதினெட்டு வயசுல உன் வீட்டுக்குள்ள நுழையும் போதே, உன்னுடைய தம்பி பாண்டியனுடைய மகனுக்கு, உன் கையாளயே கட்டம் கட்ட வைத்தேன். ஆனால், நீ ஒரு படி மேல போய் அவனை ஜெயில்லேயே வச்சிட்ட.”
“என்னடா சொல்ற.?”
“ஆமா இந்து. அன்னைக்கு கதிர் ஜெயிலுக்கு போனதுக்கு காரணம் யார் தெரியுமா? நான் தான். நான் மட்டும்தான் காரணம்” என்றான் அகிலன்.
“வாட்?” என்று இந்து அதிர,
“ஆமா அத்த. சின்ன வயசுலேயே அவன் என்கிட்ட ரொம்ப ஓவரா சீன் போட்டான். அதான் அவன் மேல பொய் சொல்லி, அவனை இந்த சீனில் இருந்தே தூக்கி உள்ளே தள்ளினேன்.”
“அடப்பாவி!”
“ம்… இப்போ உன் மகளையும் சரி. உன் குடும்பத்தையும் சரி. என்ன வேனும்னாலும் பன்னுவேன். அன்னைக்கு உன்னுடைய மகள்கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணது நான் தான். கதிர் அதை தடுக்க வந்தான். அப்பேர்ப்பட்டவன் மேல தான் நான் திருட்டு பழி போட்டேன். நீ வீட்டை விட்டு வெளில அனுப்புவ பார்த்தா, ஒரு படி மேலே போய் ஜெயில்ல தள்ளிட்ட. ம்… அவன் இன்ன வரைக்கும் ஆள் எங்கன்னே தெரியல. அந்த கிழவி கீதுவும் இல்ல. சோ, எல்லா சொத்தும் எனக்கு தான்” என்றான் சிரித்தபடி.
“அடப்பாவி. என் தம்பி மகனுக்கு, தாயாக இருக்க வேண்டிய நானே, அவனை உள்ள தள்ளிட்டேனே. அப்ப இதுக்கு எல்லாம் காரணம் நீ தானா? அந்த பிள்ளையின் சாபம் தான் இன்னைக்கு உன்னை நம்பி நான் இப்படி இருக்கேன். உன்ன நான் சும்மா விடமாட்டேன்.” என்று கத்தினார் இந்து.
“ஏய்! சும்மா கத்தாதே. உன்னால ஒண்ணுமே பண்ண முடியாது. இந்தா போன். இப்போ ஒழுங்கு மரியாதையா உன் புருஷன கூப்பிட்டு, நாளைக்கே அகிலனுக்கும், முல்லைக்கும் கல்யாண ஏற்பாடு பண்ண சொல்லு” என்றார் சேது.
“என் உயிரே போனாலும், நான் இதுக்கு சம்மதிக்க மாட்டேன்.”
“உன் உயிர் போகாது அத்தை. ஆனா, உன் குடும்பத்துல இருக்குற எல்லாரின் உயிரும் போய்விடும். பரவாயில்லையா?” என்றான் நக்கலாக.
“என்னடா சொல்ற?”
“அப்பா இந்த வீடியோவை குடு.” என்று சொல்ல அந்த வீடியோவில் இந்துவின் வீட்டைச் சுற்றி பாம் வைக்கப்பட்டிருந்தது.
“டேய் என்னடா என்ன காரியம் பண்ண?”
“ஆமா அத்த. எண்ணி நாளைக்குள் இந்த கல்யாணம் நடக்கலைன்னா, அடுத்த நிமிடம் இந்துவோட பில்டிங்கே இடிந்து தரைமட்டம் ஆயிடும். பரவாயில்லையா.”
“டேய்! அந்த மாதிரி எல்லாம் பண்ணிடாத என் மகள் வாழ வேண்டியவள்.”
“ஆமா ஆமா. வாழ வேண்டியவ தான். அவ எட்டு வயதிலேயே உன் தம்பி மகன் கதிர் மேல, பாசம் வைக்க ஆரம்பிச்சா. ஆனால், அவளுடைய தலை எழுத்து, என் மகன்கிட்ட அவ மாட்டிக்கிட்டு சாகணும்னு இருந்தால், அதை யாராலும் மாற்ற முடியும்” என்றார் சேது.
“இல்ல எது நடந்தாலும் பரவாயில்லை. என் மகளுக்கு நீ என்னைக்குமே ஜோடியாக முடியாது.”
“ஏய்! இப்போ ஒழுங்கு மரியாதையா நீ போன் பண்ணி, நாளைக்கு இந்த கல்யாணம் நடக்கணும்னு சொல்லலனா, அந்த வீட்ல இருக்கிற பாமை வெடிக்க வைக்க சொல்லிடுவேன்.” என்று மிரட்டினான்.
“நீ என்ன சொன்னாலும் சரி. நான் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேன்.”
“டேய் அகில் பேசாம நம்ம ஆளுங்ககிட்ட சொல்லி, முல்லையை இங்க தூக்கிட்டு வர சொல்லிடு. அவ எதிரில் அவங்க அம்மா கழுத்தில் கத்தியை வச்சா, அவளே உனக்கு கழுத்தை நீட்டப்போறா.”
“வாவ்! இது செம்மையா இருக்கே. இரு நான் அவனுங்களுக்கு போன் பண்றேன்” என்று சொன்ன அகிலன், தனது அடியாட்களிடம் முல்லையை அவனின் இடத்திற்கு கடத்தி வர சொல்லி கட்டளையிட்டான்.
அங்கே இந்துவின் வீட்டில் முல்லையின் அறையில், “ஏய் எங்கடி கிளம்புற” எனக் கேட்டாள் ஷாமிலி.
“வேற எங்க. இந்த திருட்டு பையலை தேடி தான்.”
“யாரு அகிலனையா?”
“ஏய் ச்சி… என் மாமனைச் சொன்னேன். அவர் என்னை பாக்க வந்து ரெண்டு நாள் ஆச்சு. ஆள் எங்க போய் கையை வச்சி மாட்டிக்கிட்டு இருக்குனு தெரியல. சரி எங்க அம்மாவை காணோம்? காலையில டிபன் சாப்பிடும் போது கூட ஆளை காணோமே. எங்கன்னு பார்த்தியா?” எனக் கேட்டாள்.
“எதோ பிசினஸ் விஷயமா நைட்டே அம்மா வெளியூர் போயிட்டாங்கனு அப்பா சொன்னாரு.”
“சரி அக்கா. எனக்கு உன்னோட பேன்ட் சர்ட் குடு. யூனிபார்ம் டைட்டா இருக்கு.”
“ஆமாடி. ஆள் கொஞ்சம் குண்டாகிட்ட.” என்றாள் கிண்டலாக.
“நான் குண்டா ஆகல. உண்டாகிட்டேன்.” என்று சிரித்தாள்.
“ஏய்! என்ன சொல்ற? எப்படி?” என்று கேட்டாள்.
“என்னக்கா நீ. லூசு மாதிரி கேக்குற?”
“அது இல்லடி. அம்மாக்கு தெரிந்தால்? அதை நினைச்சி கேட்டேன்.”
“அதனால் என்ன? நான் மூணு நாளைக்கு முன்னால தான், கதிர் மாமாவை பிரக்ணன்ஸி கிட் வாங்கி தர சொல்லி செக் பண்ணேன்.”
“சூப்பர்டி. மாமாக்கு தெரியுமா?”
“ம்… தெரியும். அவர் முகத்துல எவ்வளவு சந்தோஷம் தெரியுமா. என்னை அள்ளி எடுத்து எவ்வளவு முத்தம் தந்தார் தெரியுமா. அவுங்களோட அம்மா லட்சுமியே திரும்ப பிறக்க போறாங்கன்னு சொல்லி கொண்டாடித் தீர்த்துட்டார்.” என்று சந்தோசமாக சொன்னாள்.
“அப்போ நான் தான் வேஸ்ட் போல.” என்றாள் ஷாமிலி சோகமாக.
“ஏன்கா. நீயும் மணிமாறன் மாமாவை கல்யாணம் பண்ணிக்கோ.”
“யாரு அவனையா? அவன் ஒரு வீணா போனவன். உம்மா இவனுக்கு குல்ஃபீ. அதுவும் மும்பை குல்ஃபீ குடுத்துட்டு, அது அவங்க மாமாக்கூட அம்மா வீட்டுக்கு போயிடுது. பட், இந்த வீனா போன மாறன் உம்மா. உம்மான்னு சும்மா உயிரை எடுக்கிறான்.”
“அக்கா யாரோ கதவை தட்டுறாங்க. என்ன இது இவ்வளவு வேகமா தட்டுறாங்க? அநேகமா அந்த அகிலனா தான் இருப்பான். என்னை இப்போ அவன் இங்க பார்த்தான்னு வை. வம்பு பண்ணுவான். அதனால நான் அந்த பாத்ரூம்ல போய் ஒளிஞ்சிகிறேன்.” என்று சொன்ன முல்லை, கதவை தட்டியது அகிலன் என்று நினைத்துக் கொண்டு குளியல் அறையில் சென்று ஒளிந்துகொண்டாள்.
அகிலனின் அடியாட்கள் ஷாமிலியை முல்லை என்று நினைத்து, அவளின் முகத்தில் மயக்க மருந்தை அடித்து, அவளையும், சந்திரனையும் அகிலனின் இடத்திற்கு தூக்கி சென்றனர்.
முல்லைக்குப் பதில் ஷாமிலி இருப்பதைக் கண்ட அகிலன், “டேய் அறிவு கெட்டவனுங்களா, யார தூக்கிட்டு வர சொன்னா, யாரை தூக்கிட்டு வந்து இருக்கிங்க” என்றான்.
“பாஸ் அங்க இந்த பொண்ணு தான் இருந்துச்சு. அதான் தூக்கிட்டோம்.”
“டேய்! இது நான் கட்டிக்கப்போற பொண்ணு இல்லடா. அவளோட அக்கா” என்றான் கோவமாக.
“டேய்! கெட்டதிலும் ஒரு நல்லது இருக்குடா. இவ கழுத்துலயும் தாலியை கட்டு” என்றார் சேது.
“தாலி கட்டுவதற்கு ரெண்டு கை தேவை. பட் உனக்கு ஒரு கை தான் இருக்கு. ஆனா இப்போ அந்த ஒரு கைக்கும், விலங்கு மாட்ட நான் வந்திருக்கிறேன்” என்று சொல்ல, அந்த குரலுக்கு சொந்தக்காரன் யார்?