முல்லை தன் அப்பாவை பார்த்ததும் அங்கிருந்து ஓடி வந்தவள் அவரை கட்டிப்பிடித்து “அப்பா இங்கே என்ன நடக்குது? இந்த அண்ணன் என்னென்னமோ சொல்றாரே. யாரு என்ன திருடனாங்க” என கேட்க,
“ஏய் என்னடி உன் அப்பன் கொடுத்த வைர ஒட்டியாணம் எங்க?” என்று கேட்டப்படி தனசேகரன் முல்லையின் தலை முடியை பிடிக்க,
“ஆ… வலிக்குது ஐயா விடுங்க. என்ன ஒட்டியானம்? எனக்கு எதுவும் தெரியாது” என்றாள்.
“மாமா முல்லை மேல இருந்து கையை எடுங்க. பெண்கள் கிட்ட இப்படியா நடந்துப்பிங்க?”
“அப்பா இங்க என்ன நடக்குது? என்னை விட சொல்லுங்க.”
“நடிக்காதடி. உன் அப்பா நேத்து நைட்டு எங்க வீட்ல இருந்து, அம்மனுக்கு சாத்த வேண்டிய வைர ஒட்டியாணத்தை திருடி உன்கிட்ட தந்து, நைட்டோட நைட்டா உன்னை வேற ஊருக்கு அனுப்பி வச்சிருக்கான் இல்ல” என்றார் தனசேகரன்.
“ஆ.. வலிக்குது முடியை விடுங்க” என்று அழ,
“மாமா சொல்றேன் இல்ல. கையை எடுங்க” என்றான் கதிர்.
“மாப்பிள்ள திருடங்களை இப்படி தான் விசாரிக்கணும். நீ வீட்டுக்கு போ.”
“யாரு திருடங்க?” எகிறி வந்தான் கதிர்.
“இதோ இவளும் இவனும் தான். ஏய் சொல்லுடி அந்த வைர ஒட்டியாணம் எங்க?”
“நீங்க என்ன சொல்றீங்க எனக்கு ஒண்ணுமே புரியல. நான் அதெல்லாம் பார்த்தது கூட இல்ல.”
“டேய் கணேஷா, இப்ப நீ உண்மையை சொல்றியா? இல்ல உன் மகளை நிர்வாணமாக்கி கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மேல ஊர்வலமா அனுப்பி விடவா.” அகங்காரத்தில் தனசேகரன் கத்த,
“ஐயா கடவுள் பொதுவாச் சொல்றேன் நான் எந்த நகையையும் என் கண்ணால் பார்த்தது கூட இல்லை. என்னை நம்புங்க. என் மகளுக்கு ஒன்றும் தெரியாது. அவளை விட்டுடுங்க” என்று கெஞ்சினார் கணேசன்.
”சரி அப்போ திடீர்னு நேற்றைய இரவு உன் மகளை பக்கத்து ஊருக்கு அனுப்ப வேண்டிய அவசியம் என்ன?” கதிரின் பெரிய மாமன் கேட்க,
“ஐயா என் மக தான் பாட்டி வீட்டுக்கு போகனும் என்று ஆசைப்பட்டாள். அதனாலதான் போக சொன்னேன்.”
“அதுக்கு நீ அவளை காலையில் அனுப்பி இருக்கலாமே. நடு சாமத்துல எதுக்கு அனுப்புன? இதுல இருந்தே தெரியுது நீ தான் அதை திருடி இருப்பேன்னு.”
“சேரன் அய்யா சொல்லுங்க. நான் அந்த மாதிரி இல்லன்னு சொல்லுங்க. சத்தியமா நான் திருடல.”
“நீ தான் திருடி இருக்க. எனக்கு அது நல்லாவே தெரியுது. உன் மேலே சந்தேகம் இருக்கறதால தான், என் மாமா சேரனும் வாயைத் திறக்காமல் இருக்காரு” என்றார் ராஜசேகர்.
“இல்ல நான் திருடன் இல்ல. என்னை நம்புங்க.”
“அப்பா அழாதீங்க” என்றாள் முல்லை.
“கணேசன் கடைசியா கேட்கிறேன். அந்த நகையை திருப்பி தந்துடு. இல்ல உன் பொண்ணு இந்த ஊர் எதிர்ல நிர்வாணமா ஊர்வலம்…”
“வாயை மூடுங்க மாமா. என்ன பேச்சு பேசுறீங்க? கணேசன் தான் அந்த நகையை திருடினார்ன்னு உங்கள் கிட்ட சாட்சி இருக்கா?” என்று அவரை பேசவிடாது தடுத்தான்.
“இவன் பொண்ணு வேற ஊருக்கு போய் இருக்காளே. அது போதாதா?”
“முல்லை ஊருக்கு போனதற்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். அதுக்காக இவுங்க தான் நகையை திருடுனாங்கன்னு நீங்கள் எப்படிச் சொல்லலாம்?”
“என்ன மாப்பிள்ள நீ. பிராது தந்தது நம்ம. நியாயமா நீ நம்ம வீட்டு பக்கம் தான் பேசணும்.”
“வாயை மூடுங்க மாமா. நியாயம் எதுவோ அந்த பக்கம் தான் நான் பேசுறேன். கணேசன் அந்த நகையை திருடினார்ன்னு, நீங்க கண்ணால பாத்தீங்களா? சொல்லுஙக மாமா?” இருவரும் இல்லை என்றதும், “அப்பா நீங்க பாத்தீங்களா?” என்று கேட்டான்.
“இல்லப்பா நான் பார்க்கல.”
“அப்புறம் எப்படி நீங்க அவரு மேல திருட்டு பழி போடுவிங்க?”
“அப்போ நகை எங்க?” என்றார் ராஜசேகர்.
“அதை கண்டுபிடிக்க வேண்டியது நீங்கதான். நாங்க உங்க தம்பி தனசேகர்கிட்ட கொடுத்த நகை காணாம போச்சுன்னா, அந்த வழக்குக்கு தனசேகரன் தான் பொறுப்பே தவிர, அத கணேசன் மேலே திருப்பி விடக் கூடாது.”
“என்ன மாப்பிள்ள, வழக்கு அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் பேசற. அப்ப அந்த நகைகளை நான் திருடி இருக்கன்னு சொல்றியா?”
“அப்படின்னு நான் சொல்லல. ஆனா நீங்க பண்றதை பாத்தா ஒருவேளை ஏன் நீங்க பண்ணி இருக்க கூடாதுன்னு தோணுது சின்ன மாமா” என்றான் நேரடியாக.
“என்ன பேச்சு பேசுற மாப்பிள்ள நீ. நாங்க உன் தாய் மாமாங்க.”
“யாரா இருக்கட்டும். நியாயம்னா நியாமா பேசனும். இப்ப என்ன அந்த நகை எங்கன்னு தெரியனும் அவ்வளவு தானே? இருங்க நானே போலீஸ்க்கு தகவல் சொல்லி அனுப்புறேன்” என்றான் கதிர்.
“போலீசா? என்னப்பா இந்த ஊருகுள்ள காக்கி சட்டை எல்லாம் வரக்கூடாதுன்னு உனக்கு தெரியாதா?” சின்னவர் கேட்க,
“போதும். இன்னும் எத்தனை காலத்துக்கு இதயே சொல்லுவீங்க. உங்களுக்குன்னு ஒரு தீர்ப்பு. உங்களுக்குன்னு ஒரு நியாயமா? நீங்க எல்லாம் மேல் ஜாதிகாரங்க என்பதால, நீங்க பண்ணுற எல்லா கெட்டதுக்கும் இவுங்க தண்டனை அனுபவிக்கனுமா? அதெல்லாம் இல்ல இந்த வழக்கை நான் காவல்துறை அதிகாரிகிட்ட விசாரிக்க சொல்ல தான் போறேன்” என்றான்.
“எங்க பேர்ல வழக்கெல்லாம் வந்தால் நம்ம சொந்தமே விட்டுப் போயிடும் சொல்லிட்டேன்” என்றார் பெரிய மாமன்.
என்ன நடந்தாலும் சரி. இந்த வழக்கை கண்டிப்பா காவல்துறை அதிகாரிகள் தான் விசாரிக்கணும். அப்பா உங்களுக்கு அப்புறம் இந்த ஊர் தலைவர் நான் தானே” எனக் கேட்டான்.
“இதுல என்ன உனக்கு சந்தேகம்? என்றார் அவரும்.
“அப்போ நான் சொல்றேன், இந்த வழக்கை காவல் துறையினர் விசாரிக்கட்டும். கணேசன் நீங்க வீட்டுக்கு போங்க. முல்லை நீயும் போ. ஊர் மக்கள் எல்லாரும் போய்ட்டு வாங்க” என்று பஞ்சாயத்தைக் கலைத்தான்.
“கதிர் என்ன நடக்குது இங்கே?”
“இனிமேல் தான் நடக்கப்போகுது மாமா. அந்த நகை எங்க போச்சுன்னு நாளைக்கு இந்த நேரதுக்குள்ள தெரியவரும் பாருங்கள்” என்று சொன்னபடி கதிர் அவன் காரில் ஏற, சேரன் எதுவும் சொல்லாமல் கதிரை பின்தொடர்ந்தார்.
அன்றைய இரவு முல்லையின் வீட்டுக்கு கதிரும், அவனின் நண்பன் மணியும் செல்ல, முல்லை மட்டும் அங்கே தனியே வீட்டில் அழுது கொண்டு அமர்ந்து இருந்தாள்.
“முல்லை!” கதிர் அழைக்க,
“கதிர்… கதிர் நாங்க எதையும் திருடல. ஏன் எங்கள பஞ்சாயத்துல நிக்க வச்சு திருடங்கன்னு சொன்னாங்க?” என்று அழுதாள்.
“ஏய் இப்ப நீ ஏன் அழுவுற? அழாத முல்லை ப்ளீஸ். நான் இருக்கேன் உங்களுக்கு. என்னை மீறி உங்களுக்கு எதுவும் ஆகாது.”
“உங்க மாமா ஏன் என் முடியை எல்லாம் பிடிச்சு இழுத்தாரு? நீ என்ன சொன்ன? நீ இருக்கும் போது யாரும் என்னை எதும் பண்ண முடியாதுன்னு தானே சொன்ன” என்று அழுகையைத் தொடர,
“முல்லை அழாத சொல்றேன் இல்ல. இங்க பாரு முகமெல்லாம் எப்படி வீங்கி இருக்குன்னு. சரி நீ சாப்பிட்டியா?”
“நேத்துல இருந்து நான் எதுவும் சாப்பிடல.”
“ம்… தெரியும். அதான் உனக்கு நான் பதார்த்தம் எடுத்துட்டு வந்தேன். டேய் மணி அத தா” என்றான் நண்பனிடம்.
“இந்தா மச்சான். நான் வெளிய இருக்கேன். நீ சிஸ்டர்க்கு சாப்பிட கொடு.”
“முல்லை இந்தா சாப்பிடு.”
“இல்ல வேணாம்.”
“ஏன்மா?”
“ஏன்னு தெரியல. ஆனா வேணாம்.”
“சரி ஆ காட்டு நான் ஊட்டி விடுறேன்.”
“என் அப்பா தான் எனக்கு ஊட்டி விடும். நீ என்ன எனக்கு ஊட்டி விடுறேன்னு சொல்ற?” என்றாள் புரியாது.
“அப்பா மகளுக்கு ஊட்டி விடலாம். அதே போல ஒரு காதலிக்கு அவள் காதலனும் ஊட்டி விடலாம்.”
“அப்ப நான் உன் காதலியா?”
“அப்பன்னு இல்ல, இப்பன்னு இல்ல, எப்போவுமே நீ ஒருத்தி மட்டும் தான் என் காதலி. என்ன அப்படி பாக்குற?”
“அப்போ நீ என்னை கட்டிப்பியா?”
“நான் கட்டுற தாலி தான் உன் கழுத்துல கடைசி வரைக்கும் இருக்கும்.”
“உங்க அப்பா, உங்க மாமா எல்லாம் உன்னை அடிக்க மாட்டாங்களா?”
“ம்ஹூம் மாட்டாங்க” என்றான் குழந்தைக்குச் சொல்லுவது போல.
“அப்போ என்னை?”
“உன் மேல யாராவது கை வச்சா நான் அவுங்கள கொன்னுடுவேன்.”
“இல்ல வேணாம் வேணாம்” என்றாள்.
“சரி ஆ காட்டு.”
“ம்…. நீ சாப்பிடல?”
“நீ எனக்கு ஊட்டி விடுறியா?”
“நானா?”
“ஆமா நீ தானே என் காதலி. அப்ப நீதான் ஊட்டனும்.”
“நா…” என திணற,
“சரி சரி அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். ஆமா உங்க அப்பா கணேஷன் எங்க?”
“சேரன் ஐயா வர சொன்னாருன்னு தானே ரெண்டு பேர் வந்து என் அப்பாவை அழைச்சிட்டு போனாங்க.”
“என்ன எங்க அப்பாவா?”
“அக்கா… அக்கா” என்று சிறுவன் ஒருவன் வந்தான்.
“என்னப்பா?”
“உங்க அப்பா… உங்க அப்பா…”
“என்னடா சொல்ல வர்ற?
“டேய் என்னாச்சு” என்றான் மணியும்.
“முல்லை அக்காவோட அப்பா இந்த ஊர் எல்லையில தூக்குல தொங்கிட்டாரு.” என்றதும் அனைவரும் அதிர, “அப்பா…” என்று அலறி அடித்து முல்லை ஊரின் எல்லை பகுதிக்கு ஓட, கதிரும், மணியும் முல்லையை பின் தொடர்ந்தனர்.
அங்கே கணேஷனின் உடல் கயிற்றில் தொங்குவதை பார்த்த முல்லை கண்கள் கிறங்கி தலை சுற்றி மயங்கியபடி கீழே சரிந்தாள்.
‘இருக்கப்பட்டவன் நினைத்தால், கெட்டவனும் கொடி கட்டி பறப்பான். நல்லவனையும் நடு தெருவில் தூக்கிட்டு தொங்க விடுவான்.’
முல்லை மயங்கி விழுந்ததும் கதிர் அவளை தன் மடியில் தாங்க, “முல்லை, முல்லை… டேய்! மணி அங்க யார்கிட்டயாவது தண்ணி வாங்கிட்டு வாடா” என்றான்.
மயங்கிய முல்லையின் முகத்தில் தண்ணீர் தெளித்ததும் முல்லை மயக்கத்திலிருந்து எழுந்தவள், தன் தந்தையின் சடலத்தை பார்த்து பிரமை பிடித்தது போல் நின்றிருக்க, அவள் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை
“முல்லை இங்க பாரு. என்னை பாரு முல்லை.”
“கதிர் அப்பா, அப்பா, ஏன் அப்பா இங்க? அப்பாக்கு என்ன ஆச்சு? சொல்லு கதிர் அப்பாக்கு என்ன ஆச்சு?” என்று கதறினாள்.
“டேய் மணி முல்லையை பிடிடா. நான் என்னனு பாக்குறேன்.”
கதிர் சடலத்தின் அருகில் செல்வதற்குள், ஊர் ஜனம் மொத்தமும் அந்த மரத்தை சுற்றி வளைத்து ஆளாளுக்கு ஒரு விதமாக பேசிக்கொண்டு இருந்த சமயம், ஜீப்பில் கதிரின் தந்தை சேரன் மற்றும் கதிரின் தாய்மாமன்கள் ராஜசேகர், தனசேகர் மற்றும் தனசேகரனின் மனைவி கலைவாணி, ராஜசேகரின் மனைவி கலையரசி ஆகியோர் வந்து இறங்கினார்கள்.