Stories that touch hearts

Home  /  29. ராஜேஷ் (மதில் தாண்டுமா மனசு)  /  Chapter 7

CHAPTER 7

மனசு – 7

By karuppiahrajesh70@gmail.com · October 9, 2026

0

மதில் தாண்டுமா மனசு — 7

​

மாலை வெயில் தணிந்து அந்தி சாயும் வேளையில், கார்த்திக் தன் மனைவி ராதிகாவையும் குழந்தை நவீனையும் அழைத்துக்கொண்டு தாய் வீட்டிற்கு வந்திருந்தான்.

​வாசலில் அவர்களைக் கண்டதும் வனஜாவின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது. “வாடா செல்லக்குட்டி… வாங்கப்பா!” என்று வாஞ்சையோடு ஓடிவந்து பேரனை அணைத்துக் கொண்டார்.

அமுதாவும் புன்னகையோடு, “வாங்கப்பா, உள்ள வாங்க!” என்று அவர்களை வரவேற்றார்.

​

அனுவும் அண்ணனையும் அண்ணியையும் இன்முகத்துடன் வரவேற்க, குடும்பமே கலகலப்பானது. வரவேற்பறையில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து, வழக்கமான குடும்பக் கதைகளையும் சுகதுக்கங்களையும் பேசத் தொடங்கினர்.

​

அப்போது வனஜா மெல்லப் பேச்சைத் திருப்பினார். “நம்ம ஆனந்த் தங்கச்சி பொண்ணு மது இருக்காளே… அவ நம்ம அனுகிட்டத்தான் டியூஷன் படிக்க வர்றா. தினமும் ஆனந்த்தான் அவளைக் கொண்டு வந்து விட்டுட்டு கூட்டிட்டுப் போவான். வரும்போதெல்லாம் உன்னைப் பத்தி விசாரிப்பான். இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை லீவுங்கறதால வரல… இல்லாட்டி இந்நேரத்துக்கு வந்து இருப்பான்.”

​

ஆனந்தின் பெயர் காதில் விழுந்ததுமே கார்த்திக்கின் முகம் சட்டென மாறத் தொடங்கியது. இயல்பாக இருந்த அவனது அமைதி கலைந்து, நெற்றியில் சுருக்கங்கள் விழுந்தன.

​

அவன் முக மாற்றத்தைக் கவனித்த அமுதா, “என்ன கார்த்திக்? ஆனந்துக்கும் உனக்கும் ஏதாவது தகராறா? இவ்வளவு நேரம் இருந்த கலகலப்பு இப்போ உன்கிட்ட இல்லையே?” என்று வினவினார்.

​

கார்த்திக் அதை சாதாரணமாகக் கடக்க முயன்று, “அதெல்லாம் ஒன்னும் இல்லை சித்தி… நம்ம வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடி அவன் வீட்டுக்குத்தான் போயிட்டு வந்தேன்,” என்றான்.

​”அவன் வீட்ல என்ன விசேஷம்? எதுக்காக உன்னை கூப்பிட்டிருந்தான்?” வனஜா ஆவலுடன் கேட்டார்.

​”அவன் வீட்ல விசேஷம் எதுவும் இல்லைம்மா. எங்க முதலாளியோட இரண்டாவது பொண்ணு… கல்யாணமாகி ஒரு வருஷத்துலயே நம்ம அனு மாதிரி வாழ்க்கை முறிஞ்சு வீட்டுக்கு வந்துடுச்சு. அதுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைக்கணும்னு முதலாளி என்கிட்ட கேட்டுருந்தாரு. ஆனந்தனுக்கும் 35 வயசாகுது… அவங்களும் நிறைய இடத்துல பொண்ணு கேட்டு அலைஞ்சு சலிச்சுப் போயிருக்காங்க. அதனால இந்த வரனை ஏத்துப்பாங்கங்கற நம்பிக்கையிலதான் இந்த விஷயத்தைப் பேசப் போனேன்.”

​

வனஜா லேசான கவலையுடன், “என்ன… சம்மதம் சொல்லலியா? அதான் முகத்தை இப்படி வச்சிருக்கியா?” என்றார்.

​

“கனகமத்தையாவது சம்மதம் சொல்லிட்டாங்க… ஆனா இவன், ‘எனக்கு விருப்பமில்லை, சம்மதமும் இல்லை’னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டான்மா!” கார்த்திக்கின் குரலில் ஆத்திரம் வெளிப்பட்டது.

​

அமுதா குறுக்கிட்டு, “என்ன கார்த்திக் இது? அவனுக்குப் பிடிச்சிருக்கு பிடிக்கலைன்னு சொல்றது அவ்வளவு பெரிய குத்தமா? அதுக்கு எதுக்கு நீ இவ்வளவு கோபப்படுற?” என்று கேட்க,

கார்த்திக் மேலும் கொதித்தான்.

​”பிடிச்சிருக்கு பிடிக்கலைன்னு சொல்றது தப்பு இல்லை சித்தி… அதைச் சொல்ற முறைன்னு ஒன்னு இருக்கே! நான் ஒரு மாப்பிள்ளை பார்க்கச் சொல்லி இருக்காங்கங்கற விஷயத்தைச் சொல்லப் போயிருக்கேன். பிடிக்கவே இல்லைன்னாக்கூட, ‘சரி… வீட்ல கலந்து பேசிட்டு சொல்றோம்’னு ஒரு வார்த்தை சொல்லி அனுப்பினா என்ன குறைஞ்சா போயிடும்? அதை விட்டுட்டு, ‘இரண்டாந்தரமா எனக்கு வேண்டவே வேண்டாம்’னு முகத்துல அடிச்ச மாதிரி பேசுறான். அவனுக்கெல்லாம் இந்த ஜென்மத்துல கல்யாணமே நடக்காது!” என்று சாபமிடுவது போல் கத்தினான்.

​

வனஜா பதறிப்போய், “என்ன கார்த்திக் விடு… அதுக்காக இப்படி சாபம் கொடுக்குற மாதிரி பேசுவியா? அவன் ஏதோ கோபத்துல இருந்திருப்பான்,” என்று சமாதானப்படுத்த முயன்றார்.

​”என்ன கோபமா இருந்தா என்ன? ‘தான் புடிச்ச முயலுக்கு மூணு கால்’னு சொல்றது தப்புன்னு அவன் பக்கம் யாருமே பேச மாட்டீங்களா?” என்று கார்த்திக் எகிறினான்.

​

அருகில் அமர்ந்து இவர்கள் பேசுவதையே அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த அனுவின் மனதிற்குள் ஏதோ ஒரு யோசனை ஓடத் தொடங்கியது. ‘ஆனந்த்  ஏன் அப்படிப் பேசினார்?’ என்ற கேள்வி அவளுள் எழுந்தது. அதை அவனிடமே நேரடியாகக் கேட்டுவிட வேண்டும் என்றும் அவளது மனம் தோன்றியது.

​

வழக்கமாக விடுமுறை நாட்களில், கடைசி நேரத்தில் தனியறையில் அடைபட்டு அவசர அவசரமாக வீட்டுப்பாடம் எழுதுவதுதான் மதுவின் பாணி.

ஆனால் இன்று, அவளுக்குள் திடீரெனப் பொங்கிய மாமன் பாசத்தின் காரணமாக, சந்தோஷையும் தன் அறையிலேயே உட்கார வைத்திருந்தாள். அவனது கைகளுக்குள் ஒரு காகிதத்தையும் பென்சிலையும் கொடுத்து, ஒரு புதிய தொண்டில் ஈடுபடுத்தியிருந்தாள்.

​

தனக்கு அளிக்கப்பட்ட அந்தப் புதுவிதமான பணியை, அளப்பரிய ஆர்வத்தோடு சந்தோஷ் உற்று நோக்கிக் கொண்டிருந்தான்.

மது ஒவ்வொரு எழுத்தையும் மெத்தென எடுத்து, நிதானமாக யோசித்து மீண்டும் மீண்டும் எழுதும் அழகையும், அது முடிந்ததும் அடுத்த வரிக்குத் தாவுவதையும் அவன் கூர்ந்து கவனித்தான். அவளுடைய பாணியைப் பின்பற்றி, தன் கையிலிருந்த பென்சிலால் காகிதத்தில் சிறு சிறு கோடுகளையும், விசித்திரக் குறியீடுகளையும் வரைந்து தள்ளிக் கொண்டிருந்தான்.

​

ஒருபுறம் பாடத்தில் கவனம் இருந்தாலும், மறுபுறம் சந்தோஷின் மீதும் ஒரு கண் வைத்திருந்தாள் மது.

நேரம் நகர்ந்ததே தெரியாமல் இருவரும் அதில் மூழ்கியிருக்க, சுவர்க்கடிகாரம் பத்து முறை மணி அடித்து இரவுப் பொழுதை அறிவித்தது.

​வெளியே ஹாலில், கனகமும் மீனாவும் தொலைக்காட்சியின் ஒலியைக் குறைத்து வைத்துவிட்டு நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களோடு சேர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த ஆனந்தன், எப்போது தூங்கினான் என்றே தெரியாமல் தரையிலேயே சுருண்டு படுத்து உறங்கிவிட்டான்.

​அமர்ந்திருந்த இடத்திலிருந்தபடியே மீனா உரத்த குரலில், “மது! ஹோம் வொர்க் முடிச்சிட்டியா இல்லையா? எப்போப் பார்த்தாலும் கடைசி நேரத்துல இப்படி டார்ச்சர் பண்றதையே பொழப்பா வச்சிருக்க!” என்று அதட்டினாள்.

​

அறையினுள்ளிருந்து மதுவின் குரல் சட்டெனப் பதிலளித்தது, “லாஸ்ட் வந்துட்டேன்மா!”

​கனகம் தன் பங்குக்குச் சலித்துக் கொண்டார். “பகலெல்லாம் ஆட்டம் போடுறது, படுக்கும் போதுதான் வீட்டுப் பாடம் ஞாபகத்துக்கு வருது. இதெல்லாம் உன்னோட டீச்சர் கண்டிச்சுச் சொல்ல மாட்டாளா? இந்த டியூஷனுக்குத்தான் போவேன்னு அடம் பிடிச்சுப் போனாயே… அவளாவது உன்னை ஏன் ஏதுன்னு ஒரு வார்த்தை கேட்கக்கூடாதா?”

​மது சட்டென அறையிலிருந்து தலையை நீட்டி, தன் லாவகமான அறிவாளித்தனத்தை வெளிப்படுத்தினாள். “பாட்டிமா! அவங்க கொடுத்த ஹோம் வொர்க்கைத்தானே நான் செய்றேன்? ஹோம் வொர்க்கை ‘ஹோம்ல’தான செய்யணும்? டியூஷன்ல போய் செஞ்சா அது ‘டியூஷன் வொர்க்’ ஆயிடுமே!”

​”பதிலுக்குப் பதில் பேசாம எழுதி முடிக்கிற வழியைப் பாரு. உன்னால எங்களோட தூக்கமும் சேர்ந்து கெடுது!” மீனா மீண்டும் சலித்துக் கொண்டாள்.

​”ஓகே மா, டென்ஷன் ஆகாதீங்க… முடிச்சுட்டேன்!”

​எழுதி முடித்த நோட்டுகளை எடுத்துத் தன் பையில் பத்திரப்படுத்திய மது, சந்தோஷின் கிறுக்கல்கள் நிறைந்த தாளை வாங்கிப் பார்த்தாள். பார்த்த அடுத்த நொடி, அவளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை!

​

கனகம் டிவியை அணைத்துவிட்டு, வீட்டின் விளக்குகளை அணைப்பதற்காக நகர்ந்தார்.

மது எழுதி முடித்துவிட்டாள் என்பதை உறுதி செய்துகொண்ட மீனா, தன் அறைக்குள் சென்று படுக்கையில் சாய்ந்தாள்.

​அமைதியாய் அமர்ந்திருந்த சந்தோஷை மெல்ல தட்டிக்கொடுத்த மது, “சபாஷ் மாமா! சாதிச்சுட்ட! உனக்கு மூளையே இல்லைன்னு நினைச்சேன், ஆனா நீ செம டேலண்ட்டா இருக்கடா!” என்று பாராட்டுப் பத்திரம் வாசித்தாள்.

​

அவளுடைய பாராட்டில் சந்தோஷிற்கு அளவுகடந்த சந்தோஷம். “ஆகா… ஆகா… ஆகா…” என்று தொண்டையைக் கனைத்தபடி தன் சிரிப்பை வெளிப்படுத்தினான்.

சமையலறையில் சில பாத்திரங்களைக் கழுவி வைத்துக் கொண்டிருந்த கனகம், ‘இவனை வேற இன்னும் தூங்க வைக்கலையே…’ என்று பெருமூச்சுடன் நினைத்துக் கொண்டார்.

​

சந்தோஷ் அவனுக்குக் கொடுக்கப்பட்ட தாளில் ஏராளமான குறியீடுகள், கிடைமட்டக் கோடுகள், சாய்கோடுகள் என வரைந்து தள்ளி, இறுதியாக ஒரு பூஜ்ஜியத்தை – வட்டத்தை – மிகவும் அழகாக வரைந்திருந்தான். அதற்காகத்தான் மதுவிடமிருந்து அந்தப் பாராட்டு மழை!

​

அந்தப் பேப்பரைத் தன் கையில் ஏந்திக்கொண்டு, சந்தோஷை அப்படியே அறையில் விட்டுவிட்டு ஹாலுக்கு ஓடிவந்தாள் மது.

அங்கே ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ஆனந்தனைத் தட்டி எழுப்பினாள்.

​”மாமா! சந்தோஷ் மாமா முட்டை போட்டுட்டான் மாமா! சந்தோஷ் மாமா முட்டை போட்டுட்டான்!”

​

அயர்ந்த தூக்கத்திலிருந்து அரைகுறையாக விழித்த ஆனந்தன், “தினமும் செய்ற வேலைதானேடி இது… அதுல என்னடி புதுசா ஆச்சரியம்?” என்றான் சலிப்புடன்.

​மதுவிற்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது. “லூசு! நான் அதைச் சொல்லல… இங்கே பாரு, எவ்வளவு அழகா முட்டை போட்டு இருக்கான்னு!” என்று அந்தத் தாளை அவன் கண்ணெதிரே நீட்டினாள்.

​

ஆனந்த் அதை லேசாகப் பார்த்துவிட்டு, “இதுவாடி? இதுக்கெல்லாம் இப்போ பாராட்டற நிலைமையில நான் இல்லை. நீ உன்னோட அனு மேடம்கிட்ட இதைக் கொடு… அவங்க ஏதாவது அவார்டுக்கு ரெஃபர் பண்ணுவாங்க!” என்று சொல்லிவிட்டு மீண்டும் திரும்பிப் படுத்துக் கொண்டான்.

​எழுந்து நின்ற மது, அவன் படுத்திருந்த தோரணையைப் பார்த்து முறைத்தாள். அவனது பின்புறத்தில் செல்லமாக ஒரு உதையைக் கொடுத்துவிட்டுச் சமையலறைக்கு ஓடினாள்.

​

அங்கே வேலையாக இருந்த கனகத்திடம், “பாட்டிமா! மாமாவோட சாதனையைப் பாரு! என்னோட ட்ரீட்மென்ட்க்கு எவ்வளவு நல்ல பலன் கிடைச்சிருக்குன்னு பாரு… இங்க பாரு, எப்படி முட்டை போட்டு இருக்கான்னு!” என்று பேப்பரை நீட்டினாள்.

​

கனகம் அதை வாங்கிப் பார்த்துவிட்டு, “பரவாயில்லையே, நல்லா வரைஞ்சிருக்கான்! நீ ‘முட்டை போட்டு இருக்கான், முட்டை போட்டு இருக்கான்’னு கத்தினதும், இன்னும் அந்த ரூமையும் போய்க் கழுவணுமோன்னு பயந்தே போயிட்டேன்!” என்றார் நிம்மதியுடன்.

​”உன்னைப் போலவே உன் பையனும் லூசுத்தனமா சொல்லிட்டு தூங்குறான்… ஆல் ஆர் ஸ்டுப்பிட்!” என்று சலித்துக்கொண்ட மது, தூங்கிக் கொண்டிருக்கும் தன் தாயின் அருகே செல்ல முயன்றாள்.

​

அவளைத் தடுத்து நிறுத்திய கனகம், “பாவம் குட்டி… அவளைத் தொந்தரவு பண்ணாத, தூங்கட்டும்,” என்று பரிவோடு கேட்டுக்கொண்டார்.

​வேறு வழியின்றி அந்தத் தாளை எடுத்துச் சென்று தன் பைக்குள் பத்திரப்படுத்திய மது, அங்கே அமர்ந்திருந்த சந்தோஷிடம் சென்று, “சந்தோஷ் மாமா… குட் நைட்!” என்று கூறிவிட்டு அவனைக் கூட்டிச் சென்றாள்.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!