கதவின் அருகில் நின்று கொண்டிருந்தவள், இத்தனை நாட்களாக அவனுடைய தவறுகளுக்குத் தன்னையே காரணமாக நினைத்துக்கொண்டிருந்தாள்.
ஆனால், இன்று அவன் செய்தது என்ன?
தான் வேலை செய்யும் அலுவலகத்துக்கே வந்து, எல்லோருக்கும் முன்னால் அடித்து அவமானப்படுத்தியிருக்கிறான்.
அவள் வேலை செய்வது அவனுக்காக மட்டுமல்ல. தன்னுடைய வருங்கால சந்ததிக்காகவும் முக்கியமாக தன்னுடைய வாழ்க்கைக்காகவும் தான்.
அதில் என்ன தவறு? என்று
அவளுக்குப் பதில் தெரியவில்லை.
உன்னை ஏன்தான் கல்யாணம் பண்ணேனோன்னு இருக்கு! என்ற
சுந்தரின் குரல் அவளுடைய சிந்தனையைக் கலைத்தது.
இன்னேரம் எங்கப்பா சொன்ன பொண்ணைக் கல்யாணம் பண்ணியிருந்தா, ராஜா மாதிரி வாழ்ந்திருப்பேன்! என்ற வார்த்தை பிறையின் காதில் விழுந்ததும்
அவள் மெதுவாக அவனை நோக்கித் திரும்பினாள். அவன் இன்னும் பேசிக்கொண்டே இருந்தான். “அனாத நாய் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, கண்டவன் கிட்ட பிச்சை எடுக்கிறேன் டி!”
அந்த வார்த்தைகள் அவளுடைய மனதைச் சிதைத்தது.
தந்தை இல்லாதவள் என்பதற்காக அவளை அவமானப்படுத்தினான். அவளுடைய தாயின் அன்பில் வளர்ந்த வாழ்க்கையைக்கூடக் கேவலப்படுத்தி இருக்கிறான்.
இத்தனை நாட்களாக அவன் இப்படிப் பேசும்போதெல்லாம் அவள் அதை பொறுத்துக் கொண்டு அமைதியாக இருந்திருக்கிறாள். அவனுடைய கோபம் குறையட்டும் என்று காத்திருந்திருக்கிறாள் அவள்.
அவனுடைய வாழ்க்கை சரியாகிவிடும் என்று நம்பியிருந்தாள். ஆனால், இன்று அவளை ஏதோ ஒன்று மாற்றி இருந்தது.
தன்னுடைய கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, “உன்னை யாரு என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொன்னா?” என்று ஆதங்கமாக கத்தினாள்.
அவளுடைய குரல் கேட்டதும் தான் சுந்தர் பேசுவதை நிறுத்தினான்.
பிறை அவனைப் பார்த்து… “என்னை அப்படியே விட்டிருந்தா, என் வாழ்க்கையாவது நல்லா இருந்திருக்கும்! என் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டு, உன் வாழ்க்கையையும் இப்படி நாசம் பண்ணிக்கிறியே!” என்றவளது குரல் நடுங்கியது. இருந்தும், அவள் தொடர்ந்து பேசினாள்.
அப்போ நான் உங்க வீட்டிலிருந்து உன்னைப் பிரிச்சுக் கூட்டிட்டு வந்துட்டேன்னு நினைச்சுத்தான் குடிச்சிட்டு வந்து தினமும் என்னைக் கொடுமைப்படுத்துறியா ? என்று கேட்டாள்.
அவளுடைய கேள்விக்கு அவன் உடனே பதில் சொல்லவில்லை.
அவள் இதுவரை கேட்டிராத ஒரு கேள்வியை அவனிடம் கேட்டிருந்தாள். அவனுடைய வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு தவறுக்கும் அவளே காரணமா? அவனுடைய மதுப்பழக்கத்திற்கும் அவளே காரணமா?
அவனுடைய கோபத்தையும் தவறுகளையும் பொறுத்துக்கொள்வதுதான் அவளுடைய கடமையா?
இத்தனை நாட்களாக அவள் மனதிற்குள் எழுந்த கேள்விகள் அனைத்தும் அன்று அவளுடைய வார்த்தைகளாக வெளிவந்தது.
நான் உன்னை நம்பித்தானே வந்தேன், சுந்தர்? உன்னோட வாழலாம்னு ஆசைப்பட்டுத்தானே என் வீட்டை விட்டுவந்தேன்? அதுக்காக என் வாழ்க்கை முழுவதும் நீ என்னைக் கஷ்டப்படுத்திக்கிட்டே இருக்கணுமா?
என்று கேட்டவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. நீ என்னை நேசிச்சது உண்மையா இருந்தா, இப்படி என்னை அடிச்சு அவமானப்படுத்துவியா? உனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்ததுதான் நான் செஞ்ச தப்பா? என்று கேட்டவள், பேசுவதை நிறுத்திவிட்டு, ஒரு பெருமூச்சை இழுத்து வெளியேற்றினாள்.
அவனிடமிருந்து பதிலை எதிர்பார்த்து பெசியவளுக்கு, அவன் முகத்தில் கோபத்தைத் தவிர வேறு எதுவும் பதிலாக கிடைக்கவில்லை.
அவனுடைய மௌனம் அவளுக்குப் புதிதல்ல. ஆனால், இன்றுதான் அந்த மௌனத்தைப் பார்த்து அவள் பயப்படாமல் பேசினாள். அந்த நிமிடத்தில் அவளுக்குள் ஒரு சிறிய தெளிவு பிறந்தது.
ஒருவரை நேசிப்பதற்காகத் தன்னுடைய சுயமரியாதையை இழக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைத்தாள்.
ஒரு திருமணத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத் தன்னுடைய வாழ்க்கையையே இழக்க வேண்டியதுமில்லை என்று நினைத்தாள்.
அந்த உண்மையை அவள் முழுமையாகப் புரிந்துகொண்டுவிட்டாள் என்று சொல்ல முடியாது.
ஆனால், இதுவரை தன்னைத்தானே குற்றவாளியாக நினைத்துக்கொண்டிருந்த பிறை, முதல்முறையாகத் தன்னுடைய தவறு என்னவென்று கேட்கத் தொடங்கியிருந்தாள்.
அவளுக்குள் தேக்கி வைத்திருந்த வலியெல்லாம் அன்று வார்த்தைகளாக வெடித்துச் சிதறியது.
அப்போது தற்செயலாக அறையின் மூலையில் அவருடைய பார்வை திரும்பியது நிலைத்தது. அங்கு தன்னுடைய வருங்காலக் குழந்தைக்காக ஆசை ஆசையாக அவள் வாங்கி வைத்திருந்த விளையாட்டுப் பொருட்கள் அவளுடைய பார்வையில் பட்டது.
அந்தச் சிறிய பொம்மைகளைப் பார்த்ததும், அவளுடைய இதயத்தில் புதைந்து கிடந்த காயங்கள் மீண்டும் ரணமாகின.
தன்னுடைய குழந்தை இந்த உலகத்தில் இருந்திருந்தால், அந்தப் பொம்மைகளைக் கையில் வைத்துக்கொண்டு ஓடியாடி விளையாடியிருக்குமே!
அந்த எண்ணமே அவளுடைய நெஞ்சை சுக்குநூறாக உடைத்தது.
கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்ட பிறை, சுந்தரை வெறித்துப் பார்த்தாள்.
“உன்னாலதான் டா… எல்லாமே உன்னாலதான்!” அவளுடைய குரலில் கோபமும் ஆற்றாமையும் கலந்து ஒலித்தன.
“என் குழந்தையைக்கூட இழந்துட்டு, இன்னைக்கு அனாதையா நிக்கிறேன் பாரு! எதுக்காக டா இதையெல்லாம் பொறுத்துக்கிட்டேன்? உனக்காகத்தானே! உன் மேல இருந்த காதலுக்காகத்தானே!”
அவளுடைய குரல் உடைந்து, தொண்டையில் ஏதோ அடைத்துக்கொண்டது.
நீ இன்னைக்கு மாறுவ… நாளைக்கு மாறுவ… ஒருநாள் என்னைப் புரிஞ்சுக்குவன்னு இத்தனை நாளா காத்திருந்தேன். ஆனா, நீ… என்று அவனைப் பார்த்தவள், கண்ணீரை அடக்க முடியாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
“ச்சீ… உன்னை நினைச்சாலே எனக்கு அருவருப்பா இருக்கு. நீ எல்லாம் ஒரு மனுஷனா? என்று அவள் அந்த வார்த்தைகளைச் சொல்லி முடிப்பதற்குள், சுந்தரின் முகம் ஆத்திரத்தில் சிவந்தது.
“என்னடி சொன்ன? என்னைப் பார்த்தால் உனக்கு அருவருப்பா இருக்கா? கேட்டு அவன் ஆவேசமாக அவளை நோக்கி வந்தான்.
பிறை அவனைப் பார்த்தாள். அவளுடைய கண்களில் பயம் இருந்தது. ஆனாலும், இம்முறை அவள் தன்னுடைய வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
ஆமா! அருவருப்பா இருக்கு. உன்ன நான் மொத்தமா வெறுக்கிறேன்! உன்னை மட்டுமில்ல… உன்னை நம்பி என் வாழ்க்கையை ஒப்படைச்ச என்னையே வெறுக்கிறேன்! என்றாள்.
அடுத்த நொடி சுந்தரின் கை அவளுடைய கழுத்தைப் பற்றியது.
வாயை மூடுடி!…
அவனுடைய பிடி இறுக, பிறையின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. அவனிடமிருந்து திமிறிய படி “சுந்தர்… கை… எடு…” என்று
அவள் அவனுடைய கைகளை விலக்க முயன்றாள். ஆனால், மதுவின் போதையும் ஆத்திரமும் அவனுடைய அறிவை மங்கச் செய்திருந்தது.
அவளுடைய கழுத்தைப் பிடித்தபடியே சுவரை நோக்கி அவளை அழுத்தினான்.
இத்தனை நாளா உன்னைத் தலைமேல தூக்கி வச்சிருந்தேன்! என்னையே எதிர்த்துப் பேசுற அளவுக்கு வந்துட்டியா? நீ என்ற
அவனுடைய வார்த்தைகள் அவளுடைய காதில் விழுந்தும், அதை புரிந்துகொள்ளக்கூட முடியாத அளவுக்கு மூச்சுத் திணறியது பிறைக்கு.
“சுந்தர்… வலிக்குது… என்னை விடு…” என்று அவனை பார்த்து கெஞ்சினாள் அவள்.
ஒரு நொடி… அவளுடைய கண்களைப் பார்த்தான் சுந்தர். அந்தக் கண்களில் அவன் இதுவரை பார்த்திராத ஏதோ ஒன்று விசித்திரமாக இருந்தது.
அது அவன் மீதான வெறுப்பு!
தன்னைக் கண்டு பயந்த அந்தப் பெண்ணின் கண்களில், இத்தனை ஆண்டுகளாக அவன்மீது இருந்த காதல் மறைந்து, வெறுப்பு மட்டுமே மிஞ்சியிருப்பதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
அந்த ஆத்திரத்தில், அவளைப் பிடித்து வலுக்கட்டாயமாக போடி!… என்று தள்ளிவிட்டான்.
அடுத்த நொடி… பிறையின் உடல் சுவரில் மோதி, நிலைதடுமாறித் தரையில் விழுந்தது.
“ஆ…”
அவளுடைய தலையின் ஓரத்தில் அடிபட்டது. வலியைத் தாங்க முடியாமல் அவள் கண்களை இறுக மூடினாள்.
சில நொடிகள் அசையாமல் கிடந்தவளின் நெற்றியோரத்திலிருந்து சிவந்த ரத்தம் மெல்ல வழியத் தொடங்கியது.
தரையில் விழுந்திருந்த பிறையின் கண்கள் மங்கின.
அப்போதும் “சு…ந்தர்…” என்று மிகவும் பலவீனமான குரலில் அவனை அழைத்தாள்.
ஆனால், அதற்குள் அவளுடைய உடல் தளர்ந்து, கண்கள் மூடிக்கொண்டன.
அவளைப் பார்த்துக்கொண்டிருந்த சுந்தரின் ஆத்திரம் மெல்ல மறைந்தது.
என்னடி ஆக்டிங் விடுறியா? என்று கேட்டபடி அருகில் இருந்த கட்டிலில் சென்று அமர்ந்தான்.
அப்படியே அமர்ந்திருந்தவன் எழுந்து போய் சோறு போடுடி என்று அதட்டினான்.
ஆனால் பிறை இடமிருந்து எந்த அசைவும் இல்லை. சற்று நேரம் அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன்.
“பிறை…” ஏய் விளையாடாத’ என்று அவன் அவளை நோக்கி ஓடி
பிறை! என்னடி ஆச்சு? என்னை பாரு என்றபடி அவளைத் தொட்டுப் பார்த்தவன், அவளுடைய நெற்றியிலிருந்து ரத்தம் வழிவதைக் கண்டதும் அதிர்ச்சியில் உறைந்தான்.
ஐயோ… பிறை! என்று கதறியபடி அவளைத் தன்னுடைய மடியில் தூக்கிப் போட்டுக்கொண்டான். பிறை… கண்ணைத் திறடி! என்னைப் பாருடி! என்று அவளுடைய கன்னங்களைத் தட்டினான்.
அவளிடம் எந்தப் பதிலும் இல்லை.
பிறை… ப்ளீஸ்! என்னை இப்படிப் பயமுறுத்தாதடி! என்றபடி சில நிமிடங்களுக்கு முன்பு அவளுடைய கழுத்தைப் பிடித்த அதே கைகள், இப்போது அவளுடைய முகத்தை நடுக்கத்துடன் வருடியது.
அவளுடைய தலையைத் தன் மடியில் மெதுவாகத் தாங்கிக்கொண்டவன், ரத்தம் படிந்த தன்னுடைய விரல்களைப் பார்த்தான்.
அந்தச் சிவப்பு நிறம் அவனுடைய கண்களை மறைத்தது. அவனுடைய கைகளால்தான் அவளுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது என்ற உண்மை, மெல்ல அவனுடைய மூளையை எட்டியது.
நான்… நான் உன்னை இப்படிப் பண்ணணும்னு நினைக்கலடி என்றவனது குரல் உடைந்தது.
நீ என்னை அப்படி பேசினதும் கோபம் வந்துடுச்சு… அதுக்காக இப்படியா பண்ணுவேன்? பிறை… எழுந்திருடி…
அவளுடைய தலையைத் தன்னுடைய மார்போடு அணைத்துக்கொண்டான்.
நீ எப்பவும் என்னை எதிர்த்துப் பேச மாட்டியேடி… நான் என்ன சொன்னாலும் அமைதியா இருந்துருவியே… இன்னைக்கு மட்டும் ஏன்டி இப்படிப் பேசின? என்று கேட்டு
அழுதான் அவன்.
அப்போதும் அவளிடமிருந்து பதில் இல்லை.
பிறை… ப்ளீஸ் டி… உனக்கு ஒண்ணும் ஆகாது. நான் பார்த்துக்கிறேன். நீ கண்ணைத் திறந்துட்டா போதும்…என்றபடி அவளுடைய முகத்தைப் பார்த்தவன், அவளுடைய நெற்றியில் வழிந்த ரத்தத்தைத் தன்னுடைய கைகளால் துடைக்க முயன்றான்.
ஆனால், அவன் துடைக்கத் துடைக்க, அவனுடைய விரல்களில் சிவப்பு நிறம் படிந்துகொண்டே இருந்தது.
ஐயோ… என்னடி பண்ணிட்டேன் நான்?
அவனுடைய கண்ணீர்த் துளிகள் பிறையின் கன்னத்தில் விழுந்து தெறித்தது.
அவளை இன்னும் இறுக்கமாகத் தன்னுடைய மடியில் அணைத்துக்கொண்டு கதறினான்.
பிறை… என்னை விட்டுப் போயிடாதடி! நீ இல்லாம என்னால இருக்க முடியாது!
அந்த வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டிருந்தவனுக்குச் சில நிமிடங்களுக்கு முன்பு அவளே கேட்ட கேள்வி நினைவுக்கு வந்தது.
நீ என்னை நேசிச்சது உண்மையா இருந்தா, இப்படி என்னை அடிச்சு அவமானப்படுத்துவியா? அந்தக் கேள்விக்கு அப்போதும் அவனிடம் பதில் இல்லை. இப்போதும் இல்லை.
ஆனால், அவன் செய்த தவறின் விளைவு அவனுடைய மடியிலேயே ரத்தம் வழிந்தபடி கிடந்தாள் பிறை.
அவள் தன்னுடைய குழந்தையை இழந்த வலியைக்கூட மறந்து, அவனுடைய வாழ்க்கை மாறும் என்று காத்திருந்தாள்.
ஆனால், அவளுடைய காத்திருப்புக்கு அவன் கொடுத்த பரிசு இதுதானா?
சுந்தர் தன்னுடைய தலையில் அடித்துக்கொண்டான். நான் ஒரு மனுஷனா? என்னை நம்பி வந்தவளையே இப்படிப் பண்ணிட்டேனே!
அவளுடைய கைகளைத் தன்னுடைய கைகளுக்குள் வைத்துக்கொண்டு அழுதான்.
பிறை… உனக்கு ஏதாவது ஆச்சுன்னா… என்னால என்னை மன்னிக்கவே முடியாது டி. அந்த அறை முழுவதும் அவனுடைய அழுகை மட்டுமே எதிரொலித்தது.
மூலையில் கிடந்த குழந்தையின் விளையாட்டுப் பொருட்கள் அப்படியே இருந்தன.
அந்தப் பொம்மைகளுக்காக ஆசைப்பட்ட ஒரு தாய், தன் வாழ்க்கையில் நிம்மதியைத் தேடி வந்த ஒரு பெண், காதலித்தவனே தன்னைப் புரிந்துகொள்வான் என்று நம்பிய ஒரு மனைவி… இன்று அவனுடைய மடியிலேயே உயிரற்றவள்போல் கிடந்தாள்.
அவளைக் காப்பாற்ற வேண்டியவன் அவளைக் காயப்படுத்தியிருந்தான்.
அவளை நேசிப்பதாகச் சொல்லியவன், அவளுடைய கண்ணீருக்குக் காரணமாகியிருந்தான்.
அவளுக்காக அழுதுகொண்டிருந்தவன், அவள் இப்படி அழ வேண்டிய நிலைக்குத் தள்ளியதும் தான்தான் என்பதை உணரத் தொடங்கியிருந்தான்.
பிறை… பிறை… என்று அவன் மீண்டும் மீண்டும் அவளை அழைத்தான். ஆனால், அவள் கண்களைத் திறக்கவில்லை.
அந்த நிமிடத்தில், தன்னுடைய மடியில் கிடந்த பிறையைப் பார்த்து முதன்முறையாகச் சுந்தர் பயந்தான்.
அவளை இழந்துவிடுவோமோ என்ற பயம்.
தான் செய்த தவறை ஒருபோதும் சரிசெய்ய முடியாமல் போய்விடுமோ என்ற பயம்.
ஆனால், அவனுடைய பயத்தைவிடப் பெரியது அவன் செய்த தவறு.
அதை அழுகையால் மட்டுமே சரிசெய்துவிட முடியாது என்பதை அவன் இன்னும் முழுமையாக உணரவில்லை.
அவளைத் தன்னுடைய மடியில் தாங்கியபடியே, நடுங்கும் கைகளால் கைப்பேசியைத் தேடினான்.
யாராவது வாங்க… ப்ளீஸ்… என் பொண்டாட்டிக்கு ஏதோ ஆகிடுச்சு!
அவனுடைய குரல் அந்த அறையைத் தாண்டி வெளியே ஒலித்தது.
பிறை உயிர் பிழைப்பாலா? மீண்டும் அவனை நம்பி தன் வாழ்க்கையை கெடுத்துக் கொள்வாளா?