Stories that touch hearts

Home  /  01. சீமா (பாறைக்குள் ஓர் பனித்துளி)  /  Chapter 27

CHAPTER 27

பனித்துளி 27

By seema · November 6, 2026

0

கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே சிரிப்பும் கலகலப்புமாக நிறைந்திருந்த அந்தச் சிறிய வீடு, திடீரென ஆள் அரவமற்று அமைதியானது. ஆனால், அந்தத் தனிமை எழிலுக்குச் சிறிதும் சுமையாகத் தெரியவில்லை.

முறைப்படி தன் வீட்டிற்கே வந்து சம்மதம் பேசித் தாம்பூலம் மாற்றிக் கொண்ட அந்த நெகிழ்வான தருணமும், தன் குடும்பத்தாரின் முழுச் சம்மதமும் அவளுக்குள் அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தன. அந்தச் சந்தோஷத்தோடு, முகத்தில் பூத்த புன்னகையோடு வேலைக்குக் கிளம்பிச் சென்றாள்.

அதேவேளையில், எழில் தங்கியிருக்கும் வீட்டிற்குச் சென்று பெண் கேட்டதும், அதற்கு அவளின் பெற்றோர் மனதாரச் சம்மதித்த விஷயமும் கோயிலில் விரதத்தில் இருக்கும் ராயனுக்கு இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

“மகன் விரதம் முடிந்து காப்பு அறுத்து வீட்டிற்கு வந்த பிறகு, இந்தச் சந்தோஷமான செய்தியை அவனுக்குச் சர்ப்ரைஸாகச் சொல்லிக் கொள்ளலாம்,” என்று மருதுவும் மயிலாவும் முடிவு செய்து ரகசியமாக வைத்திருந்தனர்.

மூன்றாம் நாளும் வந்தது. கோயில் பூசாரி வழக்கமான சம்பிரதாயங்கள் செய்து முடிக்க, ராயனுக்கும் அவனது நண்பர்களுடன் மற்றவர்களுக்கும் முறைப்படி காப்பை அறுத்து விரதத்தை நிறைவு செய்தார்.

இத்தனை நாட்கள் விரதத்தின் தூய்மையோடும், பக்திப் பரவசத்தோடும் கோயிலில் தங்கியிருந்த ராயன், கம்பீரமான நடையோடு தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். வாசலிலேயே அவனுக்காகக் காத்திருந்த மயிலா, ஆரத்தி எடுத்து மகனை வீட்டிற்குள் அழைத்து உபசரித்தார்.

வீட்டிற்குள் நுழைந்து கழுத்திலிருந்த மாலையைக் கழற்றி சாமி படத்திற்கு முன்பு வைத்து விட்டு  சாமியை மீண்டும் கும்பிட்டுத் திரும்பிய மகனைப் பார்த்த மருது, முகம் நிறையப் புன்னகையோடு, “லே ராயா… உனக்கு ஒரு பொண்ணு பார்த்துப் பேசி முடிச்சிருக்கேன்டா!” என்றார் உரத்தக் குரலில்.

அதைக் கேட்டதும் ராயனுக்குத் தலைக்கேறியது கோபம்! ‘நாம் எழிலைக் காதலிப்பது தெரிந்துமே அப்பா இப்படிச் செய்கிறாரே’ என்று நினைத்துக் கொண்டவன், “மறுபடியும் ஆரம்பிச்சிட்டீங்களாப்பா?” என்று ஆத்திரமாகக் கத்தினான்.

“ஆமாடா… மறுபடியும் தான்! ஆனா இப்போ நாங்க பார்த்திருக்கிறது வேற யாரும் இல்லை… எல்லாம் உன் மனசுக்குப் பிடிச்சப் பொண்ணுதான்!” என்று தாய் மயிலா நடுவில் வந்து சிரிப்போடு சொன்னார்.

ராயனோ ஆச்சரியமும் குழப்பமுமாக, “என் மனசுக்குப் பிடிச்ச பொண்ணு சரி… ஆனா அதுக்கு அவ வீட்ல சம்மதிக்கணுமே? அவங்க அப்பா என்ன சாமானியப்பட்டவரா?” என்று ஆதங்கத்தோடு கேட்க…”அதெல்லாம் அவங்க வீட்ல பரிபூரணமா சம்மதிச்சாச்சுடா!” என்றார் மருது மீசையை முறுக்கியபடி.

“என்னப்பா சொல்ற?” – ராயனால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை!

“ஆமாடா! சம்மந்தி வீட்ல பேசி முடிச்சு இன்னையோட மூணு நாளாச்சு! உன் பொண்டாட்டியோட அப்பாவும் அம்மாவும் ரொம்பச் சந்தோஷமா சம்மதிச்சிட்டாங்க“

‘நேரடியா கல்யாணத்தை வச்சுக்கலாமா, இல்லை இப்போது நிச்சயதார்த்தம் பண்ணிக்கலாமான்னு மாப்பிள்ளையைக் கேட்டுட்டுச் சொல்லுங்க சம்பந்தி’ன்னு சொல்லிட்டுத்தான் ஊருக்குக் கிளம்பிப் போயிருக்காங்க!” என்று மருது விவரத்தைச் சொல்லிச் சிரித்தார்.

திடீரெனத் தன் காதில் விழுந்த இந்த எதிர்பாராத செய்தியைக் கேட்டவனோ, அப்படியே அதிர்ந்துபோய் உறைந்து நின்றான்!

அவனது ஆத்தா மலையம்மன் இவனது வேண்டுதல் கேட்டு இறங்கி ஆசீர்வதித்தாலும் எழில் சம்மதம் சொல்லவில்லை என்பதில் இத்தனை நாளாகத் தன் நெஞ்சில் இருந்த பாரமும் பயமும் கணப்பொழுதில் கரைந்து போக, அவனது கம்பீரமான முகத்தில் விவரிக்க முடியாத அளவற்ற மகிழ்ச்சியும் வெட்கமும் அரும்பியது.

ஒரே பாய்சலாக வீட்டின் மரப் படிகளில் ஏறித் தன் அறைக்கு ஓடும் மகனைப் பார்த்து, மருதுவும் மயிலாவும் மௌனமாக ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.

அறைக்குள் நுழைந்தவன், ஆவலோடு தன் போனை எடுத்து எழிலின் எண்ணிற்கு அழைப்பு விடுத்தான்.ஆனால், அந்தச் சமயத்தில் மருத்துவமனையில் ஒரு அவசரப் பிரசவ கேஸ் வந்திருந்ததால், டாக்டரோடு எழில் முழு மூச்சாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். அதனால் ராயனின் தொடர் அழைப்புகளை அவளால் எடுக்க முடியாமல் போனது.

போன் ரிங் ஆகிக்கொண்டே இருக்க, “ஏண்டி மேடம்… போனை எடுக்க மாட்டியா?” என்றபடி தொடர்ந்து கால் பண்ணியும் எழில் போனை எடுக்காமல் போகவே, ராயனுக்குள் ஆத்திரம் தலைக்கேறியது.

திமிர் பிடித்தவளென பற்களை நறநறவெனக் கடித்துத் தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முயன்றவன்,போனை எடுத்துச் சட்டைக் பாக்கெட்டில் திணித்துக்கொண்டு விறுவிறுவெனக் கீழே இறங்கி வந்து, சடாரெனப் புல்லட்டை முடுக்கிக்கொண்டு நேராக மருத்துவமனையை நோக்கிப் பறந்தான்.

மருத்துவமனை வாசலில் இரண்டு பேர் பதற்றத்தோடு காத்துக்கொண்டிருப்பதைப் பார்த்து, வண்டியை நிறுத்தி வாட்ச்மேனிடம், “என்ன தாத்தா சங்கதி? ஏன் அவங்க அப்படி நிக்கிறாங்க?” என்று விசாரித்தான்

‘”ராயா, அது உள்ளே ஒரு அவசரப் பிரசவக் கேஸ் போயிட்டு இருக்கு” என்று வாட்ச்மேன் சொன்னதும், ஓ… இதனாலதான் மேடம் போனை எடுக்கலையா!’ என்று புரிந்துகொள்ள மனதுக்குள் ஒரு மெல்லிய ஆறுதலோடு, மீண்டும் வண்டியைத் திருப்பிக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டான்.

திடீரெனப் புயல் போல வெளியே போய்விட்டு, மீண்டும் அமைதியாக வீட்டிற்குள் வரும் மகனைப் பார்த்த மருது, “என்னடி… உன் மவனுக்கு திடீர்னு பைத்தியம் கியித்தியம் பிடிச்சிருச்சா?” என்று நக்கலாகக் கேட்டார்.

அதைப் கேட்ட ராயன் மீசையை முறுக்கிக்கொண்டே, “ஆமா நாட்டாமை… காதல் பைத்தியம் பிடிச்சிருச்சு!” என்று உரக்கச் சொல்ல…”அதுதான் ஊருக்கே தெரியுமேடா!” என்று மருது சிரிக்க, “என்னப்பா நக்கலா?” என்று செல்லமாகக் கோபித்தபடியே மீண்டும் மாடி அறைக்குச் சென்றவனின்  கண்கள் தன்னவளின் வருகைக்காக வழியிலே காத்திருந்தன.

நேரமும் கடகடவெனக் கடந்தது. இரவு எட்டு மணிக்கு டியூட்டி முடிந்ததும், ரொம்ப டயர்டாக வீட்டிற்கு வந்த எழில், சாவியை எடுத்து வீட்டின் பூட்டைத் திறந்து உள்ளே நுழைந்து, கதவை மூடத் திரும்பிய நொடி...

இருட்டிற்குள்ளிருந்து நீண்டு இரண்டு பலமான கரங்கள், அவளது இடுப்பை வளைத்து மிகவும் இறுக்கமாக அணைத்துக்கொண்டன!திடீரென அந்த இருட்டில் யாரோ தன்னைக் கட்டுப்போடுவது போல அணைப்பதைக் கண்டு அதிர்ந்துபோனவள், பயத்தில் அலறிக் கத்த வாயைத் திறந்தாள்.

ஆனால், அதற்குள் ஒரு கரம் அவளது உதடுகளை அழுத்திப் பொத்தியது.அவளது காதோரம் அவனது சூடான மூச்சுக்காற்று படர, “நான்தான்டி…” என்று கம்பீரமான, மெல்லிய கிசுகிசுப்பில் ராயனின் குரல் ஒலித்தது.

அந்தக் குரலையும், அவனது உடலின் சூட்டையும் உணர்ந்த அடுத்த கணமே, எழிலின் பயம் மொத்தமாக வடிந்து, நெஞ்சில் ஒரு புதுவிதமான அதிர்வும் வெட்கமும் பரவத் தொடங்கின.

ராயனின் உடற்சூடும், அவனது அசுரத்தனமான அணைப்பும் தந்த உணர்வில் அவளின் உடல் சிலிர்த்துப் போனது. பயத்தில் வேகமாக அடித்துக்கொண்ட அவளது இருதயம், இப்போது அவனது அருகாமையில் காதலால் துடிக்கத் தொடங்கியது.

மெல்ல அவளது வாயிலிருந்த தன் கையை எடுத்தவன், அவளைத் தன் பக்கம் திருப்பி, ஜன்னல் வழியாக வந்த நிலவின் வெளிச்சத்தில் அவளது முகத்தை ஆழமாகப் பார்த்தவன், “அரசி… அவ்வளவு தூரம் போன் பண்றேன், போனை எடுக்காம என்னடி அப்படி ஒரு வேலை உங்களுக்கு?” என்று அவளது இடுப்போடு சேர்த்து இன்னும் இறுக்கமாக அணைத்தபடி, பொய்யான கோபத்தோடு அவள் காதோரம் கேட்டான்.

எழிலோ மூச்சிரைக்க அவனது மார்பில் தன் கரங்களை வைத்து லேசாகத் தள்ள முயன்றபடி, “விடுங்க! ஹாஸ்பிட்டல்ல திடீர்னு ஒரு டெலிவரி கேஸ் வந்துடுச்சு… ரொம்ப கிரிட்டிகல், அதான் போனைப் பார்க்கவே முடியல. அப்புறம்… நீங்க எப்படி உள்ள வந்தீங்க? யாராச்சும் பார்த்தா என்ன நினைப்பாங்க? தயவுசெஞ்சு விடுங்க!” என்று பதற்றமும் வெட்கமுமாகச் சொன்னாள்.

“யார் பார்த்தா எனக்கென்னடி? என் பொண்டாட்டியைத்தானே அணைச்சிருக்கேன்!” என்று ராயன் கம்பீரமாகச் சொல்ல, எழில் அதிர்ச்சியோடு அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு “என்னது… பொண்டாட்டியா?”

“என்னடி? எங்க அப்பா வந்து உங்க வீட்ல பொண்ணு கேட்டு, உங்க அப்பாவும் சம்மதிச்சுத் தாம்பூலம் மாத்தியாச்சாம்… இந்த விஷயம் கூடத் தெரியாம என்னடி டியூட்டி பார்க்கிறே நீ?” என்று ராயன் சிரித்துக்கொண்டே கேட்க…அந்த வார்த்தைகள் எழிலின் நெஞ்சில் பெரிய இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தின.

விஷயம் ராயனுக்குத் தெரிந்துவிட்டது என்பதையும், அவன் அதை எவ்வளவு உரிமையோடு சொல்கிறான் என்பதையும் உணர்ந்தவளுக்கு வெட்கம் தலைக்கேறியது.

“அது… அது வந்து… பெரியவங்க பேசி முடிச்சிருக்காங்கதான், ஆனா இன்னும் கல்யாணம் ஆகலதானே? முதல்ல கைய விடுங்க…” என்று பொய்யாகச் சிணுங்கினாள்.

“கல்யாணம் ஆகலதானே… ஆயிடும்டி! ஆனா அதுவரைக்கும் இந்த அசுரனுக்கு இந்த உரிமை கூடக் கிடையாதா?” என்று கேட்டவன், அவளது நெற்றியில் தன் உதடுகளை அழுத்தி, ஆழமான முத்தம் ஒன்றைப் பதித்தபடி எட்டி லைட்டை ஆன் பண்ணினான்.

அவனது அந்த உரிமையான ஸ்பரிசத்தில் அப்படியே உறைந்துபோய் அவனது மார்பிலேயே சாய்ந்துகொண்டாள்.அவனது அந்த ஆழமான முத்தமும் அணைப்பும் நெஞ்சை உருக்கினாலும், இத்தனை நாட்களாகத் தன்னைத் தவிக்கவிட்டு மௌனம் காத்தாயே என்ற கோபம் அவளுக்குள் மீண்டும் தலைதூக்க, தன்னவனைக் கொஞ்சம் வம்பிலுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தன் முகத்தைக் கடினமாக வைத்துக்கொண்டு அவனது மார்பைத் தள்ளினாள்.

ஏன் டி என்க, “போங்க மிஸ்டர் இளந்திரையன்… எங்க அப்பா நல்லாப் படிச்ச மாப்பிள்ளையைத்தான் பொண்ணுக்குப் பார்ப்பாரு! இந்த மாதிரி பட்டிக்காட்டானை எல்லாம் அவருக்குப் பிடிக்காது,” என்று வேண்டுமென்றே பொய்யான அலட்சியத்தோடு சொன்னாள்.

அவளது சேலை விலகி வெறுமையாக இருந்த இடைவெளியில் தன் தழும்பேறிய பலமான கரங்களைப் பதித்து, அவளைத் தன்னோடு இன்னும் இறுக்கமாக இழுத்து அணைத்துக்கொண்டவன் அவளது காதோரம் தலைசாய்த்து, “உங்கொப்பாருக்குப் படிச்ச மாப்பிள்ளையைப் பிடிக்கும்டி… ஆனா, அவரோட பொண்ணுக்கு இந்த பட்டிக்காட்டானைத்தானே பிடிச்சிருக்கு?” என்று மோமமும் காதலும் கலந்த கம்பீரக் குரலில் கேட்டான்.

அவனது அந்த அதிரடியான அணைப்பில் உடல் சிலிர்த்தாலும், “அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே! யாரு சொன்னா உங்களுக்கு?” என்று சமாளித்தபடி அவனது கரங்களைத் தட்டிவிட முயற்சி செய்தாள். ஆனால், அவளது மெல்லிய கரங்களால் அவனது இரும்பு போன்ற கரங்களை அசைக்கக் கூட முடியவில்லை.

ராயன் மீசையோரப் புன்னகையோடு, “யார் சொல்லணும்டி? இந்தக் காட்டானுக்குத் தெரியாதா தன் அரசியின் மனசு?” என்று கெத்தாகச் சொன்னான்.

“உங்களுக்கு ரொம்பத்தான்…” என்று சிணுங்கியவள், அவனது நெஞ்சில் லேசாகக் குட்டி, “பிடியை விடுங்க… நான் போய் முதல்ல குளிச்சிட்டு வரேன்,” என்றாள் மூச்சிரைக்க.

அவள் காதோரம் குனிந்தவன், “நான் வேணா வந்து உதவி பண்ணட்டுமாடி?” என்று நக்கலாகக் கேட்க, எழிலின் கன்னங்கள் சிவந்து போயின.

“ஒரு ஆணியும் பிடுங்க வேணாம்! தயவுசெஞ்சு நீங்க முதல்ல வீட்டை விட்டுப் போங்க,” என்று வெட்கமும் கோபமுமாக விரட்டினாள்.

சரி, இதற்குமேல் அவளைச் சோதிக்க வேண்டாம் என்று நினைத்த ராயன், அவளது பிடியை மெல்லத் தளர்த்தினான்.

விலகிச் செல்லும்முன் அவளது முகத்தை நிமிர்த்தி, “சரிடி… இப்போதைக்கு விடுறேன். ஆனா மொத்தமா உன்னைச் சுருட்டிக்கிற நேரம் சீக்கிரமே வரும்ல… அன்னைக்கு நீ என்கிட்ட இருந்து எப்படித் தப்பிக்கிறேன்னு நான் பார்க்கிறேன்டி!” என்று ஒற்றைப் புருவத்தை உயர்த்திக் சவாலாகச் சொல்லிவிட்டு, வந்த வழியாகவே இருட்டோடு இருட்டாக மறைந்துபோனான்.

ராயன் சென்ற வழியையே பார்த்துக் கொண்டிருந்த எழில், தன் இடுப்பில் இன்னும் அகலாத அவனது கைத்தட தடவலைத் தொட்டுப் பார்த்தபடி, உதடோரப் புன்னகையோடு குளிக்கச் சென்றாள்.

பனி சிந்தும்..

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!