Stories that touch hearts

Home  /  07. சரண்யா சதீஷ் (உறவாய் வந்து உயிரானவன்)  /  Chapter 2

CHAPTER 2

உயிரானவன் 2

By itsmesaransat@gmail.com · October 7, 2026

0

அன்று மதியம் இரண்டு மணிக்கு, ரமேஷின் இறுதிச்சடங்குகள் முடிந்து மயானத்திலிருந்து திரும்பிய கையோடு, அவனது வீட்டில் அனல் பறக்கும் விவாதம் நடந்து கொண்டிருந்தது.

வீட்டின் வரவேற்பறையில், மெலிந்து காய்ந்து போன தன் உடலையும், ஒரு சிறிய பழைய துணிப்பையையும் சுமந்தபடி அமைதியாக நின்றிருந்தாள் மைதிலி. அவளது தலை நிலத்தைப் பார்த்தபடி கவிழ்ந்திருந்தது. ஆனால், அந்த மௌனத்திற்குள் பயமோ பதற்றமோ இல்லை. மாறாக, அத்தனை காலம் அவளை நெரித்துக் கொண்டிருந்த அந்தச் சிறையிலிருந்து எப்போது காலடிகளை வெளியே வைப்போம் என்ற தவிப்பு மட்டும் தான் இருந்தது.

“கடன்காரி கடன்காரி…  எம்புள்ளயோட அழகுக்கும் அறிவுக்கும் எவ்வளவு பெரிய பெரிய இடத்துல இருந்து எல்லாம் வரன் வந்தது, அத்தனையையும் விட்டுட்டு இவளை கட்டினோம் பாரு, அப்பவே என் பையனுக்கு மரண கண்டம் ஆரம்பிச்சிடுச்சு.”

  படிக்கும் வயதிலேயே சிகரெட் மது என்று சுற்றி திரிந்தவன் ரமேஷ். இரண்டு மாதங்கள் சேர்ந்து கூட ஒரு வேலையில் உருப்படியாக அவன் இருந்ததில்லை. சித்தார்த் குழுமத்தில் சேர்ந்த பிறகு தான் சம்பளம் மற்றும் அங்கு வேலை செய்வதால் கிடைக்கும் மரியாதைக்காகத் தான் தொடர்ந்து அந்த வேலையில் தொடர்ந்து கொண்டு இருந்தான். திருமணம் செய்தால் சரியாகி விடுவான் என்று நம்பி மைதிலியின் குடும்ப சூழ்நிலையை பயன்படுத்தி அவசர அவசரமாக ஒரே வாரத்தில் பெண் பார்த்து திருமணத்தையும் முடித்து விட்டனர். ஆனால் தற்போது ரமேஷின் தாய் பேசுவதைக் கேட்டு, அந்த ஏரியாவை சேர்ந்த பெண்கள் தங்களுக்குள் பார்த்துக் கொண்டு யாரும் அறியாமல் நமட்டுச் சிரிப்பு சிரித்து கொண்டனர். பிறகு ரமேஷின் தாய் பார்த்து விட்டாள் சாமியாடி விடுவாளே!

  “அதிஷ்டக்கட்ட விளங்காதவளே உன்னை கட்டிக்கிட்டு எம்புள்ள என்னடி சுகத்தை கண்டான்? ஒரு புழு பூச்சிக்கு வழியுண்டா? இப்போ என் பையனை முழுங்கிட்டு இப்படியே நின்னுகிட்டு இருந்தா சரியாயிடுமா?”

ரமேஷின் தாய் கத்தினாள். அவளது தொண்டையிலிருந்து வெளிப்பட்ட குரலில் பெற்ற மகனை இழந்த சோகத்தை விட, நஞ்சும் ஆத்திரமும் தான் அதிகமிருந்தது.

“அவன் குடிச்சான், கூத்தடிச்சான் தான் ஆனா எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு அவனை வழிக்கு கொண்டு வர வேண்டியது ஒரு பொண்டாட்டியோட கடமை இல்லையாடி? அவனுக்கு என்ன குறை வச்சோம்? நாசமாப் போனவளே, நீ இந்த வீட்டுக்குள்ள காலடி வச்ச நேரம் தான் என் பையன் பிணமாப் போனான்!”

ரமேஷின் தம்பி அருவருப்போடு அவளைப் பார்த்தபடி குறுக்கிட்டான். 

“அம்மா, இவகிட்ட பேசி ஒரு பிரயோஜனமும் இல்ல. காலையில  எல்லார் முன்னாடியும் தாலியைக்  கழட்டிப் போட்டப்பவே இவ மனசு என்னன்னு தெரிஞ்சு போச்சே. கம்பெனியில இருந்து கொடுத்த பத்து லட்சம் செக் பணமும் இவ கைக்குத் தானே போகும்.அதுக்கு தான் காத்து நிக்கிறாப் போல, அண்ணணே போயிட்டான் இனி இவளுக்கு இந்த வீட்ல என்ன வேலை? வீட்டை விட்டு உடனே வெளியே போகச் சொல்லு!”

மைதிலி மெதுவாக நிமிர்ந்து பார்த்தாள். அவளது விழிகள் வறண்டு, தாகத்தோடு கிடக்கும் பாலைவன நிலத்தைப் போலக் கிடந்தன.

“நான் ஒன்னும் அந்த  பணத்துக்காக இங்க நிக்கல.” 

   மைதிலியின் குரல் மிக மெலிதாக, அதே நேரம் ஒரு பாறையின் உறுதியோடு வெளிப்பட்டது.

  “எனக்கு இந்த வீட்ல இதுவரை ஒரு துளி நிம்மதி கூடக் கிடைக்கல. இனியும்  கிடைக்காது… நான் கிளம்புறேன்.”

“ஓஹோ! பெரிய பத்தினினு நினைப்போ? கிளம்புடி! இனிமே இந்த வீட்டுப் பக்கமே வரக் கூடாது!”

   மாமியார் கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய, மைதிலி தன் சிறிய பையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறினாள்.

ஐந்தாண்டுகளாகத் தன் மூச்சை அடைத்து, தன் சுயமரியாதையைக் காலில் போட்டு மிதித்த அந்த நரகத்தின் கதவுகள் அவளுக்குப் பின்னால் பலமாகச் சாத்தப்பட்டன.

   அன்று மாலை ஐந்து மணிக்கு தன் பிறந்த வீட்டின் மரக்கதவின் முன்னே நின்றிருந்தாள் மைதிலி. பெற்ற தாயும் தந்தையும் வாழும் அந்த இல்லத்தின் வாசல் படிக்கு முன்னே வந்து நிற்கும் போது, அவளது நெஞ்சிற்குள் ஏதோ ஒரு மெல்லிய நம்பிக்கை துளிர் விட்டது. 

இப்போதாவது தன் வாழ்க்கையே சிதைந்து போன இந்த நிலையிலாவது பெற்றவர்கள் தன்னைப் புரிந்து கொள்வார்கள், வாடி என் மகளே என்று ஒரு ஆதரவான வார்த்தையை சொல்வார்கள் என்று அவள் மனம் ஏங்கியது.

  ஆனால் அங்கு நடந்ததோ வேறு, கதவைத் திறந்த அவளது தாய், வாசலில் மைதிலியைப் பார்த்ததும் அதிர்ச்சியில் பதறிப் போனாள்.

“ஏண்டி! இங்க எதுக்கு வந்தே? ஊரு உலகத்துல புருஷன் செத்த பொண்ணுங்க மாமியார் வீட்ல அடங்கி ஒடுங்கி இருக்க மாட்டாங்களா? அங்க என்ன பிரச்சனை பண்ணிட்டு இங்க ஓடி வந்தே?”

  தன்னை பத்து மாதம் சுமந்து பெற்ற தாயின், வாயில் இருந்து வந்த வார்த்தைகள் அவளை பலமாக தாக்கியது. 

 அவள் அதில் இருந்து மீள்வதற்கு முன்பே அடுத்து நடைப்பாதையில் அமர்ந்திருந்த அவளது தந்தை கடுமையான, இறுகிய குரலில் பேசினார். 

   “உன் அக்கா தான் ஓடிப் போய் குடும்ப மானத்தை வாங்குனான்னு பார்த்தா, நீ புருஷன் செத்த அன்னைக்கே தாலியைக் கழட்டி எறிஞ்சுட்டு வந்து நிக்கிறியா? உன்னை இங்க வச்சிருந்தா அக்கம் பக்கத்துல இருக்கவனுங்க எங்களை என்னன்னு பேசுவான்? உனக்கு அடைக்கலம் கொடுக்க எங்களுக்கு விருப்பமில்ல!”

மைதிலியின் நெஞ்சம் பிளந்தது. 

“அம்மா… நான் அந்த வீட்ல எவ்வளோ அடி வாங்கினேன், எவ்வளோ கொடுமை அனுபவிச்சேன்னு உங்களுக்குத் தெரியாதா அம்மா?” 

மைதிலியின் குரல் உடைந்து தழுதழுத்தது. 

 “எனக்குன்னு வேற யாருமே இல்லைம்மா… கொஞ்ச நாள் மட்டும் இங்க இருந்துக்கிறேனே.”

“வேண்டாண்டி!” 

  தாய் சற்றும் இரக்கமின்றி அவளது கையைப் பிடித்து வெளியே தள்ளினாள். 

“ஏற்கனவே உன் அக்காவால நாங்க தெருவுல தலைகுனிஞ்சு நிக்கிறோம். இப்போ உன்னையும் இங்க வச்சுக்கிட்டா ஊர் எங்களை வாழ விடாது. அந்த கம்பெனி கொடுத்த பணத்தை வச்சு எங்கயாவது போய்ப் பிழைச்சுக்கோ! எங்களை விட்டுடு!”

மைதிலியின் முகத்திற்கு நேராகப் பிறந்த வீட்டின் கதவும் பட்டென்று சாத்தப்பட்டது. அந்தச் சத்தமோ அவளது இதயத்தின் மீது விழுந்த இடியைப் போலிருந்தது.

அந்த வீட்டிற்கு வெளியே தெருவில் தனியாக நின்று கொண்டிருந்தாள் மைதிலி. பெற்ற தாயும் தந்தையும் கூடத் தன்மானத்திற்கும் போலி கௌரவத்திற்கும் பயந்துத் தன்னைத் தூக்கி எறிந்து விட்டார்கள் என்ற நிஜம் அவளது ஆன்மாவை உலுக்கியது.

  ஏனோ இந்நிலையிலும் அவளுக்கு கண்ணீர் வரவில்லை. அவளது கண்ணீர்ச் சுரப்பிகள் அனைத்தும் அந்த ஐந்தாண்டு நரகத்திலேயே வற்றிப் போயிருந்தன. கையில் இருந்த சிறிய பையையும், கம்பெனி கொடுத்த நஷ்ட ஈட்டுக் காசோலையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, முகவரியற்ற அந்த அகன்ற தெருவில், தன் புது வாழ்க்கையைத் தேடி மெதுவாக நடக்கத் தொடங்கினாள் மைதிலி.

​அதேநாள் இரவு சித்தார்த்தின் பிரம்மாண்டமான பங்களா பிரகாசமாக ஜொலித்துக் கொண்டிருந்தது. கார்ப்பரேட் உலகில் அஞ்சாத சிங்கமாக வலம் வரும் சித்தார்த், தன் வீட்டின் வாசலில் காலடி எடுத்து வைத்ததும் முற்றிலும் வேறு ஒரு மனிதனாக மாறிப் போனான்.

​அவனது முகம் கனிவிலும் பரிவிலும் நெகிழ்ந்தது. அவன் ஹாலில் நடந்து வந்த போது  ஓடி வந்து அவனது கால்களைக் கட்டிக் கொண்டாள் அந்த மூன்று வயதுப் பிஞ்சுத் தேவதையான தியா!

​”சித்தாமா… வந்துட்டியா?” 

என்று மழலைக் குரலில் கொஞ்சியபடி அவனது தோள்களில் தாவினாள்.

​சித்தார்த் அவளை அள்ளி தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். அவளது குட்டி உச்சந்தலையில் எழுந்த ஒரு முத்தமிட்டான்.

 “என் செல்லக் குட்டி தூங்காம என்ன பண்ணிட்டு இருக்கா இன்னும்?”

​”சித்தாமா கதை சொல்லலையே… அதான் வெயிட் பண்ணினேன்,” 

என்று அவள் செல்லமாகக் சிணுங்கினாள்.

​அலுவலகத்தின் அத்தனை சோர்வும், மன அழுத்தமும் அந்தப் பிஞ்சுத் தொடுதலில் பனி போல விலகின.

​தான் பெற்ற குழந்தை இல்லை என்ற உணர்வே இல்லாமல், அண்ணனும் அண்ணியும் விபத்தில் இறந்த அந்த கொடூரமான நாளில் இருந்து, தியாவைத் தன் சொந்த உயிராக வளர்த்து வருகிறான் சித்தார்த். அவளுக்குப் பால் புகட்டுவது, உடை மாற்றுவது, இரவு கதை சொல்லித் தூங்க வைப்பது என எல்லாவற்றையும் ஒரு தாயைப் போல அவனே பார்த்துக் கொண்டான்.

​தியாவைத் தூங்க வைத்து விட்டு, அவளது நெற்றியை வருடிக் கொண்டிருந்த சித்தார்த்தின் கண்கள் கலங்கின.

​சுவரில் இருந்த தன் அண்ணன் மற்றும் அண்ணியின் புகைப்படத்தைப் பார்த்தான். 

“அண்ணா… உன் பொண்ணை என் உயிர் இருக்கிற வரைக்கும் கண் இமை போலக் காப்பாத்துவேன்டா…”

 என்று மனதிற்குள் உறுதியேற்றுக் கொண்டான்.அப்போது அவனது தொலைபேசி அதிர்ந்தது. ​அழைத்தது அவனது வழக்கறிஞர் விவேக்.

​சித்தார்த் ஒரு நிமிடம் தியாவை பார்த்து விட்டு பிறகு பால்கனிக்கு வந்து அந்த அழைப்பை ஏற்றான்.

   “சொல்லு விவேக்.”

​”சித்தார்த்… ஒரு பேட் நியூஸ். உன் பெரியப்பா சும்மா இல்லாம கோர்ட்ல முறைப்படி மனு தாக்கல் பண்ணிட்டாரு. அதாவது திருமணமாகாத ஒரு இளம் தனி ஆணிடம் மூன்று வயது பெண் குழந்தை வளர்வது குழந்தைக்குப் பாதுகாப்பானது அல்லனு சைல்ட் வெல்ஃபேர் போர்டு மூலமா பிரஷர் கொடுக்குறாங்க.”

​சித்தார்த்தின் கம்பீரமான முகம் கணநேரத்தில் இறுகியது. அவனது கண்கள் கோபத்தில் சிவந்தன.

​”விவேக்! தியா என் உயிர்! அவளை என்கிட்ட இருந்து பிரிக்க நான் யாரையும் அனுமதி மாட்டேன்!”

​”புரியுது சித்தார்த்… ஆனா சட்டப்படி அவங்க சொல்றதுல ஒரு பாயிண்ட் இருக்கு. குழந்தைக்குத் தாய் அரவணைப்பும், ஒரு குடும்பச் சூழலும் தேவைன்னு ஜட்ஜ் நினைச்சா ஆபத்து. இதிலிருந்து தப்பிக்க உனக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு.”

​”என்ன வழி?”

​”நீ உடனடியாக ஒரு கல்யாணம் பண்ணிக்கணும்! உனக்குன்னு ஒரு குடும்பம் அமைஞ்சு, தியாவுக்கு ஒரு அம்மா கிடைச்சிட்டா… கோர்ட்ல அவங்க கேஸ் செல்லாம போயிடும்.” 

என்றான் விவேக். சித்தார்த் கைப்பேசியைக் கெட்டியாகப் பிடித்தபடி மௌனமானான்.

​அண்ணன் மகளுக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணிக்க நினைத்தவனுக்கு, திருமணம் என்ற சொல் ஒரு பெரிய முள்ளாகக் குத்தியது. ஆனால், தியாவைக் காப்பாற்ற அவன் எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருந்தான்!

சில நாட்கள் கழித்து சித்தார்த்  தலைமை அலுவலகத்தில் தன் பிரம்மாண்ட குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்திருந்தான். கண்ணாடி ஜன்னல் வழியே வெளியே பரவிக் கொண்டிருந்த மாலை நேர அந்தி வெளிச்சத்தைப் பார்த்தபடி அவனது சிந்தனை இயங்கிக் கொண்டிருந்தது.

அவனது உதவி மேனேஜர் பிரகாஷ் உள்ளே வந்து, ஒரு தடிமனான கோப்பை மேசை மீது சமர்ப்பித்தான்.

“சார், நீங்க கேட்ட ரமேஷ் மற்றும் அவனோட மனைவி மைதிலியைப் பற்றிய முழு விபரங்களும் இதுல இருக்கு.” 

என்றான் பிரகாஷ். சித்தார்த் கோப்பைப் திறந்தான். ஒவ்வொரு பக்கமாகப் படிக்கப் படிக்க, அவனது அடர்ந்த புருவங்கள் முடிச்சிட்டுக் கொண்டன. அவனது கண்களில் அன்று இருந்த சந்தேகமும் அருவருப்பும் மறைந்து, சொல்ல முடியாத அதிர்ச்சியும் கனமான தவிப்பும் குடியேறியது.

கோப்பில் இருந்த மைதிலியின் உண்மை நிலை இது தான். 

மைதிலியின் அக்கா வேறு சாதியைச் சேர்ந்தவனை காதலித்து அவனோடு  ஓடிப் போனதால், குடும்பக் கௌரவம் பறிபோனதாகக் கருதிய அவளது  பெற்றோர், மைதிலியும் ஓடிவிடுவாளோ என்ற பயத்தில்  அவசர அவசரமாக ஒரு வரனைத் தேடினார்கள். நல்ல வேலையில் இருக்கிறான் என்ற ஒரே காரணத்திற்காக, ரமேஷின் குணம் தெரியாமல் அவளுக்குத் திருமணம் செய்து வைத்தனர்.

  ஆனால், ரமேஷ் ஒரு மிகப்பெரிய குடிகாரன். எல்லை மீறிய சந்தேகப் புத்தி கொண்டவன். மைதிலி பால்கனியில் நின்றாலோ, பக்கத்து வீட்டாரிடம் பேசினாலோ,

“யாரோட கள்ளத் தொடர்பில் இருக்கே?” 

என்று கேட்டு அவளது உடலை இரத்தக் காயங்களால் நிரப்பினான்.

 காயங்களோடு பிறந்த வீட்டிற்கு ஓடி வந்த போதும், 

“பொம்பளையா பிறந்தா பொறுமை வேணும்டி, புருஷன் அடிச்சா சகிச்சுக்கிட்டு வாழறது தான் பொண்ணுக்கு அழகு. ” 

என்று பெற்ற தாயும் தந்தையும் அவளை புகுந்த வீட்டிற்க்கேத் திருப்பி அனுப்பினார்கள். மாமியார் வீடோ அவனது கொடுமைகளுக்கு முட்டுக் கொடுத்தது.

ஐந்தாண்டுகளாக, ஒவ்வொரு இரவும் ஒரு மிருகத்தின் பிடியில் உயிருள்ள பிணமாகவே வாழ்ந்திருக்கிறாள் மைதிலி.

கோப்பை மூடி வைத்த சித்தார்த்தின் நெஞ்சில் ஒரு பெரும் மலை வந்து விழுந்தது போலிருந்தது.

அன்று அவளது கணவன் பிணமாகக் கிடந்த போதும், தாலியைக் கழற்றி எறிந்த போதும் அவள் முகத்தில் கண்ட அந்த நிம்மதிக்கான காரணம் இப்போது அவனுக்குப் பளிச்செனப் புரிந்தது.

அவள் இழந்தது கணவனை அல்ல… தன்னைச் சித்திரவதை செய்த கொடூரமான சிறைக்காவலனை!

“இப்போ அந்தப் பொண்ணு எங்கே இருக்கா?” 

சித்தார்த் குரல் லேசாகத் தழுதழுக்கக் கேட்டான்.

“மாமியார் வீட்டிலும் பிறந்த வீட்டிலும் விரட்டிட்டாங்க சார். இப்போ நகரத்து எல்லையில ஒரு சின்ன வாடகை அறையை எடுத்துத் தனியா தங்கியிருக்காங்க. கம்பெனி கொடுத்த பத்து லட்சம் செக் பணத்தையும் எனக்கு இந்தப் பாவப்பட்ட பணம் வேண்டாம்னு கடிதம் எழுதி ஆபீஸ்க்கே கொரியர்ல திருப்பி அனுப்பிட்டாங்க…”

 என்றான் பிரகாஷ். சித்தார்த் ஜன்னல் வழியே வெறித்துப் பார்த்தான்.

சமூகத்தின் போலித்தனமான கௌரவத்திற்காக ஒரு பெண்ணின் வாழ்க்கையை நரகமாக்கிய பெற்றோர், அவளது துயரத்தைக் கண்டும் காணாமல் இருந்த உறவுகள்… அத்தனை கொடுமைகளையும் அனுபவித்துவிட்டு, இன்று ஒட்டுமொத்தப் பழிகளையும் சுமந்து கொண்டு தனியாக நிற்கும் மைதிலியின் பிம்பம் அவனது மனதை உலுக்கிக் கொண்டிருந்தது.

அதே நேரம், தன் வழக்கறிஞர் விவேக் சொன்ன வார்த்தைகளும் அவனது நினைவில் மோதின.

 “குழந்தைக்குத் தாய் அரவணைப்பும் ஒரு குடும்பச் சூழலும் தேவை… நீ உடனே ஒரு கல்யாணம் பண்ணிக்கணும்!”

சித்தார்த்தின் அடர்ந்த விழிகளில் ஒரு புதிய தீர்மானம் பிறந்தது.

“பிரகாஷ்! அந்தப் பொண்ணு தங்கியிருக்க முகவரியை எனக்கு அனுப்பு. நாம இப்போவே அங்க கிளம்புறோம்!”

“சார்… இந்த நேரத்துலயா?”

“ஆமா, இப்போவே!”

 சித்தார்த்தின் கம்பீரமான குரலில் மறுக்க முடியாத அதிகாரம் பளிச்சிட்டது

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!