அத்தியாயம்-3-
மாணிக்கம் தனக்குத் தானே போட்ட டீயை ஒரு மடக்கு பருகவும்…!!!, அது தொண்டைக்குழிக்குள்ளாக இறங்கும் அந்தச் சுகத்திலே! கண்களை மூடி மெய்மறந்து நின்றான்…. அந்தச் சிறு இடைவெளியில், மீதமிருந்த அத்தனை டீயையும் மங்கலம் பருகிவிடவும் ..அதை குறிப்பால் உணர்ந்ததும் அவனுக்குக் கோபம் தலைக்கேறியது….ஆனால், டீயை அருந்தி இருந்தால் அவனுக்கு பேச தெம்பு கிடைத்திருக்கும் …அதை பருகவிடாமல் செய்ததால் அவனது தொண்டை வறண்டு கோபத்தை வெளிக்காட்ட முடியாத கையறு நிலையில் இருக்க…,
“உன்கிட்ட ஒரு முக்கிய விஷயம் பேசணும்… இங்க வா!”
என்று மங்கலமும் அழைக்க, வேறு வழியின்றி அவளது அந்தப் புதிய அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டவன் போலவும் , தன் பழைய கம்பீரம் மொத்தத்தையும் இழந்து தளர்ந்த நடையோடு அவளுக்குப் பின்னால் சென்றான் மாணிக்கம்…..அப்போது, வீட்டின் மூத்த பையன் வேலன், தன் அப்பாவின் நிலைமையைப் பார்த்து அவரை கேலிப் பொருளாக்கி காட்சிக்கு தகுந்தாற்போல ஒரு பாட்டைப் போட்டுச் சத்தமாகக் கேட்கச் செய்யவும்… கடுப்பான மாணிக்கம் அவனைத் திட்டி விரட்டினான். அப்போது சரியாக ,
“அங்க என்ன சத்தம்…? பேசணும்னு வரச் சொன்னேன்ல….?”
என்று தன் அழகான வண்ணம் பூசப்பட்ட நகப்பூச்சு விரல்களால் சொடக்கு போட்டு மங்களம் அதிகாரத் தோரணையில் அவனை அழைக்கவும்…., மாணிக்கத்திற்குத் தூக்கிவாரிப் போட்டது…
‘அடிப்பாவி… இத்தனை வருஷமா நான் அவளை எப்படி அதிகாரமா கூப்பிடுவேனோ…., அதே மாதிரி இப்ப இவ என்னய சொடக்கு போட்டு கூப்பிடுறாளே…!’
என மனதிற்குள் நொந்துகொண்டவன், மீண்டும் தளர்ந்த நடையில் நடந்து வந்து அவளுக்கு முன் வந்து நிற்கவும்…..
“மாட்டிக்கினாரு…. மாட்டிக்கினாரு….. ஒருத்தரு… இவர காப்பாத்தணும் காப்பாத்தணும் கர்த்தரு…”
என அங்கே திடீரென மற்றொரு பாடலின் ஒலி சத்தமாகக் கேட்டது….,
‘டேய் பெரியவனே நீதானே சிச்சுவேஷன் ஷாங் போடுறது … கையுல கிடைச்ச டீ தான்டி…. ச்ச்சீ நாக்கு டீ குடிக்காம குளறுது … மகனே நீ கையுல கிடைச்ச சட்னி தான்டி… எங்கடா இருக்க…?’
என்று யூகித்தப்படியே, தலையை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாகத் திருப்பித் மாணிக்கம் மகனைத் தேடவும்…. அங்கே அந்தப் பாட்டைக் கேட்டுக்கொண்டிருந்தது மூத்த மகன் அல்ல… அவனது செல்ல இளைய மகள் சாருலதா!
“அட நீயா பாப்பா…?, என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா….?, இந்த வீட்லயே நீதானே என் செல்லம்….? , உன்னை என் அம்மான்னு சொல்லிதானே கொஞ்சுவேன் பாப்பா…. அப்படியிருக்க அப்பாவ கிண்டல் பண்ணலாமா சாரு பாப்பா….?”
என்று மாணிக்கம் தளர்ந்த குரலிலேயே மகளிடம் கெஞ்சலாக விசாரிக்க……உடனே சுதாரித்துக்கொண்ட மகளோ,
“டாடி… உங்கள போய் நான் கிண்டல் பண்ணுவேனா….? இது சும்மா… பாட்டு நல்லா இருக்கேன்னு கேக்குறேன்…., அவ்வளோதான்…! வேற ஒண்ணுமில்ல டாடி…, நான் எப்பவுமே உங்க கட்சிதான் டாடி…”
என மிக அழகாக மழுப்பினாள்….
“அப்படியா தங்கம்….? அப்பசரி பாப்பா…”
என்றுவிட்டு மாணிக்கம் லேசாக நிம்மதியடைந்து திரும்புவதற்குள்…
“சொடக்…..!”
மீண்டும் ஒரு சொடக்கு இட்டு, மாணிக்கத்தை தன்பக்கமாக மங்களம் திருப்பவும்….. அடுத்து வரப்போகும் அந்தப் பூகம்பத்தை காலையில் இருந்து பச்சத் தண்ணீர் கூடக் குடிக்க முடியாத அவனது தொண்டையின் வறட்சியினாலயும், மேலும் பசியில் அவனது வயிறு கூப்பாடுப் போட…. அவனுக்கு மயக்க கிரக்கமாக வேறு இருக்க…. அதோடு, இவளை எதிர்கொள்ளத் தயாராகாமல், பரிதாபமாக அவளைப் பார்த்தான் மாணிக்கம்…..அவளோ மிகுந்த தெம்புடன் கம்பீரமாக அவனைப் பார்த்து,
“இங்க பாரு… இந்தப் பணம், காசு, நகை என எல்லாம் உன் ஸ்டேட்டஸுக்கு தகுந்தாப்புல என்கிட்ட ஈக்குவலா இல்லைன்னு தானே , ‘ஏணி வச்சாலும் எட்டாது நீ எனக்கு தகுந்தவளே இல்லை’ன்னு சொல்லி…. மறுமணம்! பண்ணிக்க போறதாகவும் சொல்லி…., இத்தனை நாளா என்னய நீ திட்டுவ…மிரட்டுவ….? இப்போ பாரு, என்கிட்ட எல்லாமே இருக்கு…!”
என்றுவிட்டு, மங்கலம் சிரிக்கவும்…. அவளைத் தீயாகப் பார்த்தவன்,
“இதெல்லாம் எங்க திருடினியோ….???, தெரியலயே…???!, திருட்டு நடந்த இடத்துல இன்னேரம் போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணி இருப்பாங்க….. அதனால நேரா நம்ம வீட்டுக்குத்தான் போலீஸ் அவங்க ஜீப்ல வந்து நிக்கப் போறாங்க… நம்ம வீட்டு வாசற்படியில போச்சு…போச்சு.!”
என்றவனை கேலியாக பார்த்து ,
“அப்படியா மாமே….? வரட்டும்…வரட்டும்…”
என்று துளியும் கவலைப்படாமலே தனது கூலிங் க்ளாஸை இறக்கி கண்ணடித்து அசட்டையாகச் சொன்னவளிடம்,
“அடிப்பாவி புதுசா என்னடி மாமேன்னு கூப்பிடுற… ஒழுங்கா மரியாதையா மாமான்னு சொல்லு….! ”
“முடியாது மாமே….”
“அதுசரி வீட்டுக்கு வர போகிற போலிஸூ உன்னய என்ன பண்ண போறானுங்க…? நீ அப்பாவியா முகரைக்கட்டையை வெச்சுப்ப….! அதனால உன்னய விட்டுட்டு…, என்னயத் தானே தூக்கி உள்ள வைப்பானுங்க? நான்தான் என்னவோ இந்த திருட்டுக்கு தூண்டிவிட்டேன்னு சொல்லி…”
என அவன் பயந்த குரலில் புலம்பவும்….. அவனது இந்தப் பரிதாப நிலையைக் கண்டு வாய்விட்டு,
“ஹா… ஹா…”
எனச் சத்தமாகச் சிரிக்கிறாள் மனைவி…..
“சிரி… சிரி… உனக்கு இது நல்ல நேரம்!”
“ஆமாம், இது என் நல்ல நேரம்தான்!”
என்றவள் மேலும் கல கலவென சிரித்து வைக்கவும்…..அதைப் பார்த்து பேய் முழி முளித்து விழி விரித்து பார்ப்பவனிடம்…,
“அதை விடு மாமே… இது திருட்டு இல்ல…”
என்று மங்கலம் விளக்க வர….அவளைச் சட்டை செய்யாமல், தன் கைப்பேசியை எடுத்த மாணிக்கம், தன் அம்மா, இவள் அம்மா என இரு வீட்டாரின் சொந்தபந்தங்கள் என எல்லாருக்கும் அதில் அழைப்பை விடுத்து,
“உடனே எல்லாரும் புறப்பட்டு வீட்டுக்கு வாங்க”
என வரவழைக்க முயற்சிக்கவும்… அதைப் பார்த்துவிட்டு மகனும் மகளும் மங்களத்திடம் வந்து,
“அய்யோ மம்மி… அப்பாவ தடுத்து நிறுத்தாமா இருக்கீங்களே….???, இப்போ அடுத்ததா என்ன பண்ண போறீங்க….?”
என்று பதட்டத்துடனே கேட்டவர்களிடம்,
“ஆமா… இது என்ன புதுசா….?, நான் ‘அச்சூ….!!!’ன்னு தும்முனா கூட இப்படித்தான் எல்லாரையும் கூப்பிட்டு வெச்சு பஞ்சாயத்து பண்ணுவாருன்னு உங்களுக்கும் இதெல்லாம் தெரியாதா என்ன….?”
எனத் தன் பிள்ளைகளைப் பார்த்து முகத்தில் சிறுக் கழக்கம் கூட இல்லாதவாறே மங்கலம் கேட்கவும்…..
“ஆமா…. ஆமா… நீங்க நின்னா குத்தம்…, உட்கார்ந்தா குத்தம்னு வந்தவங்களும் எப்பவும் உங்களயே குத்தம் சொல்லிட்டு போவாங்களே… அதானே நடக்கும் மம்மி….?”
எனப் பிள்ளைகளும் சலித்துக் கொள்ள…
“அதே… அதேல்லோ!”
என்று உதட்டோரம் குறும் புன்னகையுடனே கூலாகச் சொல்லி முடித்தாள் மங்கலம்….அந்த தருணத்தில் சரியாக வீட்டு வாசலில் வந்து நின்ற காரில் இருந்து மாணிக்கத்தின் அம்மா, அப்பா இறங்க… அதே நேரம் ஒரு ஆட்டோவில் வந்து இறங்கினாள் மங்களத்தின் அம்மா வள்ளி!.வாசலில் காலடி எடுத்து வைத்ததுமே மாணிக்கத்தின் அம்மா தன் அதிகாரத்தை ஆரம்பித்து,.
“இங்க பாரு வள்ளி… உம் பொண்ணு இன்னும் வீட்டு வாசல பெருக்கி கோலம் கூட போடல! இதான் நீ அவளுக்கு கத்து கொடுத்த லட்சணமா….?”
என்று வாசற்படியிலேயே மருமகளைத் திட்டிக்கொண்டே உள்ளே வரவும்….. அதற்கு வள்ளி,
“ஆமாம்மா… அவளை என்ன ஏதுன்னு கேட்போம், வாங்கம்மா…”
என்று சம்பந்தியின் முகத்திற்கு நேராக மிகவும் பணிவாகப் பதில் சொன்னாள்…..அந்த தருணத்தில் சரியாக இரு வீட்டாரின் சொந்தபந்தங்களும்,
“என்ன பிரச்சனை….? திடீர்னு வர சொல்லிட்டான்….?”
என விசாரித்தவாறே உள்ளே வரவும், தன் சொந்தக்காரர்களிடம் மெதுவாக முணுமுணுத்த வள்ளி,
“இவங்க பையன் பெரிய பணக்காரன் தானே….? வீட்ட கூட்டவும், கோலம் போடவும் ஒரு ஆளை வெச்சாதான் என்ன….? சும்மா எப்ப பார்த்தாலும் என் மகளையே குறை சொல்றான்…”
என அங்கொன்றும் இங்கொன்றுமாகத் பொய்யை உரைத்து தன் ஆதங்கத்தைக் கொட்டினாள் வள்ளி…. அதைக்கேட்கவும் மங்களத்தின் சொந்தக்காரர்கள்,
“அப்படியா விஷயம்….? இன்னிக்கு நடக்குற பஞ்சாயத்துல இத கேட்டு நாம அவங்க பையன கிழி கிழின்னு கிழிச்சு தொங்கவிடலாம்….! வள்ளி நீ கவலைப்படாதே…”
என்று உசுப்பேத்தும் கூட்டம் ஒருப் பக்கம் இருக்க……மேலும் வேறு சிலரோ,
“அப்பிராணி வள்ளி பாவம்… இங்க அவ பொண்ணை கொடுத்துட்டு கஷ்டப்படுறா பாவத்த….,”
என்று பரிதாபப்பட… வேறு சிலரோ,
“இங்க பாரேன் இந்த கூத்த….. சம்பந்தி முகத்துக்கு நேரா மக தான் தப்பு பண்ணான்னு ஒத்துக்கிட்டு அவங்ககிட்ட ‘ஆமாம்மா’ங்கிறதும், இங்க வந்து ஒண்ணு சொல்றதும்…. அங்க ஒண்ணும் சொல்றதுமாக இந்த வள்ளி எப்படி மாத்தி மாத்திப் பேசிட்டுத் திரியுது பாரேன்….!”
என்று தங்களுக்குள் கிசுகிசுத்தனர்…..இப்படியாக ஆளாளுக்குப் பேசிக்கொண்டும், குறை சொல்லிக்கொண்டும்,
‘வழக்கம் போல மங்கலம் ஏதோ தப்பு செய்து அவனிடம் அடியும் மிதியும் வாங்கிட்டு….ஏதோ ஒரு மூலையுல கண்ணீரும் கம்பலையுமா அழுதுகொண்டு தலைவிரி கோலமா நிற்பாள்…’
என்ற நினைப்போடு எல்வாருமாக வீட்டின் ஹாலுக்குள் நுழைய….. ஆனால் அங்கே, கண்களில் கூலிங் கிளாஸ்!, கழுத்து நிறைய நகைகள்!, கையில் பணச் சூட்கேஸுடன் கால் மேல் கால் போட்டு அஷ்டலட்சுமியாக மங்கலம் வீற்றிருப்பதைக் கண்டதும் அந்தப் பஞ்சாயத்து கூட்டத்தினர், எப்படி மாணிக்கம் முதல் முறையாக இவளைப் இப்படிப் பார்த்து விழி விரித்தானோ…?!, அதை விட ஒரு படிக்கு மேலே போய்…. அவளை பார்த்த கண்கள் யாவும் விழி விரித்து வாயைப் பிளந்து நின்றன….அப்படியே, மாணிக்கத்தின் அம்மா பேச்சியம்மாளும், அங்கே மருமகளை இப்படி பார்க்கவும்….. அதிர்ச்சியில் உறைந்து நின்றவளுக்கு மருமகள் அணிந்திருக்கும் கூலிங் கிளாஸோ, முகத்தில் இருக்கும் கம்பீரமோ கண்ணுக்குத் தெரியவில்லை….. மாறாக அவள் கழுத்தில் மின்னும் அந்தப் புது நகைகளும், அவளருகே திறந்திருக்கும் அந்தப் பணச் சூட்கேஸும் மட்டுமே அவர் கண்களை உறுத்தின……
‘அய்யோ… அய்யோ… எவ்ளோ பணம்…? எவ்ளோ நகை…? எப்புடி கொண்டு வந்து கொட்டி வெச்சிருக்கான் எம்மவன் இவளுக்கு…! அங்க என் மகளுங்க ஒரு முழம் பூவுக்கும், ஒரு பொட்டுத் தங்கம் வாங்குறதுக்கும் எவ்ளோ கஷ்டப்படுறாளுக….? ஆனா, இவ என்னடான்னா இங்க கால் மேல கால் போட்டு, மகராணியாட்டம் எவ்ளோ சொகுசா உக்காந்திருக்காளே…!’
என மாமியாரின் வயிறு பற்றி எரிந்து,பொறாமையாலும் ஆத்திரத்தாலும் மனதுக்குள்ளாகவே குமுற…..
“என்னடி வள்ளி… வீட்டுக்கு வெளிய நிக்கும்போது, உன் பொண்ண இவன் கொடுமை படுத்துறான்னு அவ்வளவு தூரம் சொன்ன…? ஆனா இங்க வந்து பாத்தா, இவ கோலமே வேறயா இருக்கேடி…!”
என்று பெண் வீட்டுச் சொந்தக்காரர்கள் வள்ளியிடம் ஆச்சரியமும் குழப்பமுமாகக் கேட்க…..
“அதான் எனக்கும் ஒண்ணுமே புரியல…”
எனச் சுவரில் முட்டாத குறையாகத் திருதிருவென விழித்தாள் வள்ளி….
–💒மறுமணாகும்….
♥️மங்கலத்தின் இந்த கோலத்திற்கான காரணத்தையும் , பணத்தின் உண்மையான ரகசியத்தையும் எப்படி உடைக்கப் போகிறாள்…? அடுத்த பகுதியில் பார்க்கலாம் ஆவலுடன் காத்திருங்கள்….