Stories that touch hearts

Home  /  33. நித்யா சபரி (இது மங்கலத்தின் மறுமணம்)  /  Chapter 24

CHAPTER 24

“இது மங்கலத்தின் மறுமணம்♥️💛…!!!”

By மோ.நித்யா சபரி · November 26, 2026

1

அத்தியாயம்-24-

” பிள்ளங்க ஓரளவுக்கு உருப்படியா ஓழுங்கா தான் இருக்காங்க…, நாம தான் எதுக்கும் லாயக்கில்ல…,நாம தான் சரியில்ல… அதான்… மங்கலம் நம்ம விட்டுட்டு போயிட்டா… எப்படியோ மங்கலமே போன அப்புறம் நம்ம வாழ்க்கையில இனி எங்கே மங்கலம்…?, ஏது மங்கலம்…?”      

என்றுவிட்டு, மாணிக்கம் அன்றையிலிருந்து தினமுமே, 

” அவ என்ன என்னவிட்டு ஓடி போன  மங்கலம்…  அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல.. அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல…. .அட இப்போ இப்போ எனக்கு வேணும் மங்கலம்…. அவ இல்ல இல்லங்குற நெனப்பு தானே நெஞ்சில… அவ எங்க எங்க போனா மங்கலம்... ”  

என்று இவ்வாறே சிந்து பாடிக் கோண்டே , அவனது வாழ்க்கையில் தினம்  ஒரு சோக சினிமாவும் தனக்குள்ளாக ஓட்டிக் கொண்டிருந்தான்  மாணிக்கம்… 

     “அவ எங்கேயோ ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா கூட இருக்கட்டுமே…”    

  என்றும்  தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக் கொண்டு, வெளியில் தலையைக் காட்டாமல் சோக மன்னன்! அவதாரத்தில் அவன் சுற்றிக் கொண்டிருக்கவும்….   

  அப்படியாக நாட்கள் பல நகர…, அவன் பிள்ளைகளுக்கு பரீட்சை முடிந்து லீவு வந்துவிட்டது…. உடனே வேலனும் சாருலதாவும்,     

“லீவுக்கு எங்கேயாவது கூட்டிட்டு போங்க டாடி….ப்ளீஸ்….”    

என்று அடம் பிடிக்கத் தொடங்கவும்…. மாணிக்கத்திற்கோ  இப்போதெல்லாம் வெளியுலகத்திற்கு தன் தலையை காட்டவே பிடிக்கவில்லை என்றாலும், பிள்ளைகளின் அடம் தாங்காமல்,    

   “சரிப்பா, எங்க போகணும்னு நீங்களே சொல்லுங்க…”    

  என்று  டூருக்கு போகும் ஊரின் சாய்ஸை தூக்கி  பிள்ளைகள் வசமாக விட்டுக் கொடுத்துவிட்டான்… அதன் விளைவாக,  

   ​”கோவா!”

   என்றான் வேலன். 

“ஆமா டாடி, கோவா தான் எனக்கும் போக ஆசை…!” 

என்று தங்கை சாருலதாவும் வேலனோடே கோரஸ் பாட, மாணிக்கம் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவன்,

   “கோவா தான் போகணுமா...?”  

  என்ற​தும் வேலனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வர,  

   “இதோ பாருங்க டாடி… நீங்க தான் எந்நேரமும் சோகமா இருக்கேன்னு பில்டப் குடுப்பீங்க…. ஆனா உங்களுடைய ஸ்கூல் ரீயூனியன், காலேஜ் ரீயூனியன், ஆபீஸ் மீட்டிங்னு சான்ஸ் கிடைச்சா மட்டும் கமுக்கமா கோவா போயிட்டு வந்துடுறீங்க…! நாங்க கேட்டா மட்டும் நோ சொல்றீங்க…!”  

​”சரி சரி…., இப்ப நான் என்ன சொல்லிப்புட்டேன் கோவா தான் போகனுமான்னு தானே கேட்டேன்…?”  

  என்று மாணிக்கம் சமாளிக்கப் பார்க்கவும்…., வேலன் விடுவதாக இல்லை,   

“பின்ன…! அரை டவுசர் போட்ட காலத்துல இருந்து கோவா கூட்டிட்டுப் போங்கன்னு கெஞ்சுறேன்…. இப்போ முக்கால் பேண்ட் காலத்தையும் தாண்டி …. முழுக்கால் பேண்ட் போடுற அளவுக்கு வளர்ந்துட்டேன்…, இன்னும் அந்த கோவாவுக்கு நீங்க எங்கள கூட்டிட்டு போகல….!”  

​ “நான் என்ன செய்ய…? , கொரோனா வந்தப்போ ‘கோ-கோரோனா’ன்னு வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடந்தோம்…. இப்போ தான் நேரம் கூடி வருது…”

என்று மாணிக்கம்   சொல்லி முடிப்பதற்குள் முந்திக் கொண்டு, அதையே பிடித்துக் கொண்ட வேலனோ,  

“இப்போ டைம் கிடைக்குதுல்ல, போவோம் டாடி வாங்க… கோ…. வா!”    

   என்ற மகனின் அந்தப் பேச்சுக்கு,     ‘மேல்முறையீடு ஏது…?, ‘   என்று   சிந்தித்த தந்தையோ,

   “டபுள் ஓகே பசங்களா கோவாவே போகலாம்…!, ஆனா…. எங்க தங்கலாம்..?, அது எந்த இடம்னும் நீங்களே பார்த்து முடிவு பண்ணி சொல்லுங்க பிள்ளைங்களா..?. இப்போ தான் நீங்க பெரிய மனுஷன் ஆயிட்டிங்களே!”ன்னு   

மாணிக்கம் அதையுமே அவங்களின் சாய்ஸாக  அவன் விட்டுக் கொடுக்க…, வேலனும் சாருலதாவும் லேப்டாப்பைத் தூக்கிக் கொண்டு அதன் வழியே  கோவாவுக்குள் புகுந்தவர்களோ,     ​

” அங்கே அந்த பீச்!, இந்தக் கோட்டை!, ஸ்விம்மிங் பூல்!, பார்ட்டி ஸ்பாட்!…”

என எல்லாமே அவர்களுக்கு  கண்ணை  கவர்வதாக இருக்கவும்… அதை பற்றியே சகோதரனும் சகோதரியுமாக பேசிக் கொள்ள …. மாணிக்கமோ,

“நம்மள தொந்தரவு பண்ணாம இருந்தா சரி..”ன்னு  

   தன் வேலையை மட்டுமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்….. ​கொஞ்ச நேரத்திலே  பிள்ளைகள் இருவருமாக அவனிடம் வந்து,   

  “டாடி,  நாங்க ஓரு இடம் முடிவு பண்ணிட்டோம்…! ‘சன்செட் ப்ரீஸ் ரிசார்ட்’ல தங்குவோம் சரியா…. அது செம ஃபேமஸ் ரிசார்ட்டாம்…. அங்க தங்குனா நாம ஊர் சுத்தி பார்க்கவும் வசதி, சாப்பாடும் சூப்பராம்…  அப்படியே இதை பத்தியும் தெரிஞ்சுக்கோங்க முக்கியமா உங்க வயித்துக்கு ஒண்ணும் பங்கம் வராது டாடி…. அப்புறம் அங்கே உள்ளேயே ஸ்விம்மிங் பூல்!, கேம்ஸ்னு எக்கச்சக்க வசதியும் இருக்கு….. அங்கேயே போவோம் டாடி…!”  

  ​”சரி…புள்ளங்களா , அப்படியே அந்த ரிசார்ட்ல ரூமூம் புக் பண்ணிடுங்க…”    

என்று மாணிக்கம் தன்னிடம் அனுமதி கேட்ட பிள்ளைகளிடம்  சொல்ல, வேலன் உடனே லேப்டாப்பில் தட்டி ஒரு வி.ஐ.பி. அறையை புக் செய்தான்….     

​அடுத்த கட்டமாக கோவா செல்வதற்காக வேண்டி பேக்கிங்!  செய்யவும்…. அப்பா  பிள்ளைகள் என மூவருமாக களத்தில் இறங்கியவர்களோ,

“இது வேணும்…, அது வேணும்…”

   என்று தங்களுக்கு  தேவைப்படுவதை  ஆளாளுக்கு அவங்களின் துணிப் பையிலே அள்ளிப் போட்டுக் கொண்டு, ஒரு வழியாக பேக்கிங்கை முடித்து, திட்டமிட்ட நாளில் கோவா கிளம்பத் தயாரானார்கள்…   

   அப்படியாக  அந்த நாளும் வரவும்… தேவையான தங்களின் லக்கேஜ்  பொருட்கள் இருக்கும் சூட்கேஸை எல்லாம்  எடுத்துக் கொண்டு வந்து,  அதை தான் புக் செய்திருந்த   வாடகை காரின் டிக்கியில் ஏற்றிக் கொண்டிருந்தான் மாணிக்கம்….   பிள்ளைகள் அதுகளோ ​கார் முன் சிட்டுக்குக்காக வேண்டி சின்ன தகராறொன்றை தங்களுக்குள்ளாக போட்டுக் கொண்டிருக்கவும்…  அந்த  பிள்ளைகளை பின் சீட்டில் சென்று அமர சொல்லி உரத்த குரலிலே கட்டளையிட்டுவிட்டு,   சந்தோசமாக மாணிக்கம் போய் முன் சீட்டில் அமர்ந்துக் கொள்கிறான்…  

    எப்படியோ  எல்லோருமாக அந்தக் காரில் வசதியாக தங்கள் விருப்பபடி  அமர்ந்துக் கொள்ளவும்… ஒருவழியாக  அந்த வாடகைக் காரை இயக்கும் ஓட்டுனரும் அந்த காரை இயக்க…. அது  வேகமாய் சாலையில் போய்க் கொண்டிருந்தது…..   

      அப்படியாக அந்தக் கார் நேராக ஒரு விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்து அதனுள் புகுந்து கொள்ளவும்…

  ‘ நம்ம புள்ளங்கலாம் பயங்கரம்…. ஒருவழியா பிடிவாதமா ப்ளைட் தான் போகனும்ன்னு அடம்பிடிச்சு … என்னய அதுக்கு டிக்கெட்டும் எடுக்க வச்சு….  இங்கேயும் கூட்டிட்டு வந்திருச்சுங்க….’    

    என்று  மாணிக்கம் மனதுக்குள்ளாக புலம்பியபடியே, தான் வந்திறங்கிய வாடகை காரைவிட்டு   பிள்ளைகளையும் இறங்கச் சொல்லிவிட்டு , அப்படியே லக்கேஜ் இருக்கும்  சூட்கேஸையும் அந்த   காரின் டிக்கியிலிருந்து இறக்கிய ஓட்டுநருக்கு  அவருக்கான பணத்தையும் அவர்  கையிலே திணித்துவிட்டு, அப்படியே அந்த  லக்கேஜ் சூட்கேஸையும் தானே இழுத்துக் கொண்டு,  பிள்ளைகளையும்  வழி நடத்திக் கொண்டு,    அந்த  விமான நிலையத்திற்க்குள்ளாக நுழைந்தான்….     

  ஒருவழியாக அங்கே வந்து சேர்ந்த மூவரும்,  அவரவர் ஏர் டிக்கெட்களை தங்களின் கையிலே பிடித்துக்கொண்டு, வரிசையில் சென்று நிற்கவும்…. சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மாணிக்கத்தின் கண்கள், பக்கத்து வரிசையில் போய் நின்றன….

     அங்கே… தன் முன்னால் மனைவி மங்கலமும், நந்தினியும் கைகோர்த்தபடியே அவர்களுமே அந்த  கியூவில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு மாணிக்கத்திற்குத் தூக்கிவாரிப் போட….!    ​

“ஆத்தாடி….ஆத்தா….! இதுங்க ரெண்டும் எங்கே இந்த பக்கம்….? , ஓஹோ! அதானா…?, நம்ம புள்ளங்கோ ரெண்டுமா ‘கோவா தான் போகணும்’னு தொங்கு தொங்குன்னு தொங்கி அடம் பிடிச்சுதுகளா…? சரியான கூட்டுக்களவாணிங்க…!”     

என்று மனதுக்குள் கணக்குப் போட்டபடி, கண்ணிமைக்காமல் அவர்களையே வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தவனை,  

   ​”டாடி… டாடி!”   

  என்று பிள்ளைகள் இருவருமாக அவனைப் பிடித்து உலுக்க, அப்போதுதான் சுயநினைவுக்கு வந்தவனிடம், 

   ​”டிக்கெட் கவுண்ட்டருக்கே வந்துட்டோம்… என்ன டாடி பகல் கனவு கண்டுட்டு நிக்கிறீங்க…? , சீக்கிரம் உங்க டிக்கெட்டை அவங்கட்ட கொடுங்க!”    

   என்று அதுகள்  கடிந்து பேசவும் …. பதற்றத்துடனே சுதாரித்துக் கொண்ட மாணிக்கமோ,       

  “ஏய்… அங்கே… அங்கே பாருங்கடா, மங்கலம்...!”    

என்றுவிட்டு,  அவன் ஒரு  வரிசையைக் கைகாட்டிப் பிதற்ற, சாருலதா தலையில் அடித்துக்கொண்டவள்,  

  ​”அடப் போங்க டாடி! ‘பகல் கனவு காண்பது தப்பு’ன்னு நீங்கதானே எங்களுக்கு அட்வைஸ் பண்ணுவீங்க…?, இப்போ நீங்களே கனவு கண்டா எப்புடி…? , அது போக… இங்கே எப்புடி டாடி உங்க எக்ஸ்-வைய்ஃப் வருவாங்க…?,  பேசாம வாயை முடிட்டு டிக்கெட்ட கொடுத்து வெரிஃபை பண்ணுங்க டாடி, போகலாம் இங்கிருந்து சீக்கிரமா..!”​

“இல்ல பாப்பா…., நான் என் கண்ணால பார்த்தேன் அவள…!”   

என்று மாணிக்கம் இன்னும் விடாப்பிடியாகச் சொல்ல,

” பின்ன எல்லாரும் காதுலயா  பாக்குறாங்க அட போங்க டாடி…”

என்றுவிட்டு,  அதே சமயம், 

‘இவர்கிட்ட பேசிப் பிரயோசனமில்ல…’   

எனவும் முடிவு செய்த வேலனோ, அப்பாவின். கையிலிருந்த அவரது டிக்கெட்டைத் தானே பிடுங்கி கவுண்ட்டரில் கொடுத்தான்….எப்படியோ ​ஒருவழியாக அங்கே செக்கிங் எல்லாம் முடிய, விமானத்தில் ஏறுவதற்கான இடத்திற்கு அவர்கள் யாவருமாகச் செல்லவும்…. ஆனால் மாணிக்கத்தின் மங்கலத்தை தேடும் வேட்டை மட்டும் நின்றபாடில்லை…!, அவன் விமானப் படிகளில் ஏறும்போதும் சரி, உள்ளே நுழைந்து அமரப் போகும்போதும் சரி, சீட்டில் உட்கார்ந்த பிறகும் சரி, கழுத்தை ஒட்டகச்சிவிங்கி போல நீட்டி நீட்டி,  

“எங்கே மங்கலம்…?”   

என்று அந்த ஃபிளைட் முழுக்க அலசிக் கொண்டிருந்தவனை​ பிள்ளைகளும் விடுவதாக இல்லை….  

   “டாடி, பேசாம உட்காருங்க, ஏர் ஹோஸ்டஸ் பார்த்தா தப்பா நினைக்க போறாங்க!...”   

என்று  பிள்ளைகள் இருவரும் சேர்ந்து மாணிக்கத்தை பயமுறுத்திவிட்டு  , கையோடு அவனுக்குரிய சீட்டிலே  அவனை எழுந்திரிக்க விடாமல் அழுத்தி பிடித்து உட்கார வைத்து, அப்படியே சீட் பெல்ட்டையும் மாட்டிவிடவும்….​ஒருவழியாக மாணிக்கத்தின் அந்த  தேடுதல் வேட்டைக்கு அதுகளால் முடிந்தவரை எண்ட்கார்ட்  போட்டு அடங்க வைக்க…, விமானமும் வின்னிலே பறக்கும் தனது பயணத்தைத் தொடங்கிவிட்டது…!,

அப்படியாக கோவாவுக்குச் செல்லும் அந்த ஒன்றரை மணி நேர விமானப் பயணம், மாணிக்கத்திற்கு ஒன்றரை யுகம் போலத் தெரியவும்….​விமானம் மேகங்களுக்கு நடுவே பறக்க ஆரம்பித்ததும்,

‘தன் சீட் பெல்ட்டை கழட்டலாம்..’

என்று நினைத்து திட்டம் போட்டு வைத்திருந்த மாணிக்கம் … அந்த நேரத்துக்காகவே காத்துக்கொண்டிருந்தவன் போல அவ்வளவுதான்! பிள்ளைகளின் பிடியிலிருந்து நழுவிய மாணிக்கம், மீண்டும் தான் மங்கலம் தேடுதல் வேட்டையில் இறங்குவதற்காக,

​”பாத்ரூம் போயிட்டு வரேன் பசங்களா…”

என்று பிள்ளைகளிடம் பொய் சொல்லிவிட்டு எழுந்து, பூனை போலப் பதுங்கிப் பதுங்கி விமானத்தின் பின்பக்க சீட்டுகளை நோட்டமிட்டபடியே அவன் நடக்கவும்… ​

அங்கே, இருக்கும் ஒரு ஜன்னலோர சீட்டில் மங்கலத்தைப் போலவே சீவிலஸ் ஜாக்கேட் போட்ட பச்சை நிறப் புடவை கட்டிக்கொண்டிருந்த ஒரு பெண்! தலையைத் திருப்பியபடி அமர்ந்திருந்தாள்…. அவளின் பக்கத்து சீட்டில் நந்தினி சாயலில் இன்னொரு பெண்ணும் இருக்கவும்…​மாணிக்கத்திற்கு இதயம் படபடவென அடித்தது….

“கண்டுபிடிச்சுட்டேன்…! என் கண்ணு என்னை ஏமாத்தாது…!”

என்று அவனது மனது குதூகலிக்கவும்…, சத்தமில்லாமல் அவர்கள் சீட்டுக்குப் பின்னால் போய் நின்றான்….

💒மறுமணமாகும்..

.🤔அது மங்கலம் தானா …? இல்லை வேற யாரோவா…?, இல்லை வெறும் கனவோ கற்பனையோ தானோ….

⚠️எதுவோ பாத்துடா மாணிக்கம் செருப்படி வாங்கிடாதா …?

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!