விஷயம் வீடு வரை பரவி இருப்பது அருகில் இருப்பவர்களின் முகபாவனையில் தெரிந்தது. அவர்களின் அந்த ‘ஐயோ பாவம்’ என்ற முகபாவனை அவனை கொஞ்சம் குறுக வைத்தது. இதற்காகத்தான்… இதேபோல் தன் பிள்ளைகளும் கூனிக்குறுகி நிற்கக் கூடாது என்றுதான் அவளின் காலில் விழாத குறையாக அழைத்தான்.
இங்கு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் இது தொடரும் என்று அவனுக்கு தெரியும். மனைவி இன்னொருவனுடன் சென்று விட்டாள் என்று தெரிந்த பொழுதே வீடு பார்க்க ஆரம்பித்துவிட்டான். அவன் வேலை செய்யும் இடத்தில் அருகே வீடும் பார்த்து விட்டான். ஆனால், பிள்ளைகளை எப்படி பள்ளிக்கு அனுப்புவது? தனியாக எப்படி விட்டு செல்வது? என்று குழப்பம் மட்டும் இருந்து கொண்டேயிருந்தது. எப்படியும் அவளை அழைத்து வந்துவிடலாம் என்று, கொஞ்சம் அலட்சியமாக இருந்து விட்டான். இப்பொழுதோ அதையும் சேர்த்து யோசித்திருக்க வேண்டும் என்று மனம் கதறுகிறது.
சற்று நேரத்தில் பசித்துவிடும் என்பதால், வரும் வழியிலேயே பிள்ளைகளுக்கு உணவை வாங்கி வந்துவிட்டான். இருவருக்கும் உணவு கொடுத்து, சில நிமிடங்கள் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்து, அவர்களை தூங்க வைத்து, குழந்தைகள் நடுவில் அமைதியாக விட்டத்தைப் பார்த்து படுத்தான்.
காலம் தனக்கு என்ன வைத்திருக்கிறது என்று அவனுக்குப் புரியவில்லை. ஆனால், தான் மிகுந்த மன தைரியத்துடன், திடமாக இருக்க வேண்டிய காலகட்டம் என்பது அவனுக்கு புரிந்தது.
நல்லவன்! அதனால்தானோ என்னவோ, சோதனைகளும் அதிகம் வருகிறது. அதுவும் அவன் மனைவி செய்தது முள்ளாய் குத்திக் கொல்கிறது. ‘என்ன குறை வைத்தேன் அவளுக்கு?’ அனைத்தும் அவள் கேட்கும் முன் கிடைக்கும். அவளின் தேவைக்காகவே அளவுக்கு அதிகமாக உழைக்கிறான். குழந்தைகள் பிறந்து அவர்களுக்குச் சேகரிக்க என்று இன்னும் உழைக்கிறான்.
கொஞ்சம் கொஞ்சமாக மேலேறி வருகையில், மலையில் இருந்து பாதாளத்தில் தள்ளிவிட்டது போலானது அவனது நிலைமை. இச்சம்பவத்தால் தன் குணம் மாறாமல் இருக்க வேண்டும் என்றும் கடவுளை வேண்டுகிறான்.
ஏனெனில் இச்சமூகத்தில் நிறைய கேள்விப்பட்டிருக்கிறான். இதேபோல் திருமணம் செய்து, மனைவியின் தவறான நடத்தையில் விவாகரத்து வாங்கி, இரண்டாவது வந்த பெண்ணை சந்தேகப்பட்டு, அவளை அடித்து கொடுமைபடுத்திய கதைகள் ஏராளம். ஏன்… முதல் மனைவி மேல் உள்ள கோபத்தை, இரண்டாம் மனைவியின் மீது காண்பித்து, கொலை செய்த சம்பவங்களும் பார்த்திருக்கிறான்.
அதைவிட தன்னால் முடியாது என்றுதானே இன்னொருவனை தேடினாள் என்று, அடுத்த வருபவளைப் பாலியல் ரீதியாக வன்கொடுமைகள் செய்வது பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறான். அதனால் அந்தப் பெண் அடையும் துன்பம் வரை அவனுக்கு தெரியும். ஏனெனில் அவன் உறவிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
அதனால் தான் இரண்டாவது ஒரு பொண்ணை மணமுடிக்க மனம் வரவில்லை சிவனந்தனுக்கு. இந்த மூன்று சம்பவத்தில், ஏதோ ஒன்றை தான் செய்துவிட்டால், அதைவிட பெரிய நரகம் வேறு எதுவும் இல்லை என்று அவன் மூளை எச்சரிக்கை செய்து கொண்டிருக்கிறது. அதனாலேயே உதவி ஆய்வாளர் சொன்ன பொழுதும், எப்படியாவது அவன் மனைவியை மட்டும் அழைத்து வந்துவிட நினைத்தான்.
ஏனெனில், அவள் அப்படித்தான் என்று தெரிந்துவிட்டது. இனி அதை மாற்றவும் முடியாது என்று சகித்து வாழ முடிவு செய்திருந்தான். அவளோ தன்னை ஒரு மனிதனாக கூட நினையாது, அவன்தான் வேண்டும் என்றது இன்னும் பலமாய் அவனைத் தாக்கியது.
‘உடல் தேவை மட்டும்தான் முக்கியமா? ஏன் என் மனம் முக்கியம் இல்லையா? குழந்தைகளை விட உடல் இச்சை முக்கியமா என்ன? ஒரு நொடியேனும் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து பார்த்திருந்தால், அந்தத் தவறு செய்யத் தோன்றி இருக்குமா? ஏன் திருமணமான ஆறு மாதத்தில் கணவனை இழந்தும், மறுமணம் செய்ய மறுக்கும் அவள் தங்கை இல்லையா? உனக்கு மட்டும் ஏனடி இந்த மோசமான எண்ணம்?’ மனம் மாறாது கண்கள் கண்ணீரை சிந்த இரவு மொத்தமும் நீண்டது.
சக்தீஸ்வரி இன்று காவல் நிலையத்தில் நடந்ததை மட்டுமே நினைத்திருந்தாள். அங்கு நடந்ததை முழுதாக தன் தந்தைக்கு சொல்லவில்லை என்றாலும், அவருககு புரியும் விதமாக சில வார்த்தைகளில் சொல்லிவிட்டாள்.
என்ன ஒன்று பிள்ளைகள் இருப்பதை மறந்து, “அப்பா என்னப்பா இவ இப்படி இருக்கா? விட்டா மாமா அவ கால்ல விழுந்து கெஞ்சுவார் போல. அந்தளவு பொண்டாட்டிக்காக இறங்கிப் போறார். இவ அசையாம நிக்கிறாப்பா. பிள்ளைங்கள நினைச்சு கூட பாக்கல. நம்ம குடும்பத்தில் எப்படி வந்து பொறந்தான்னு தெரியலப்பா. எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருந்தது. எல்லாத்தையும் பண்ணிட்டு எதுவுமே செய்யாத மாதிரி நிக்கிறா. பிள்ளைகள் எப்படிப்பா சமாளிக்கும்? இல்ல மாமா தான் எப்படி சமாளிப்பார்? இரண்டுமே விவரம் தெரியாத குழந்தைக கிடையாது. ஒன்பது வயசு ஆகுது. நாம கூட்டிட்டு போகலாமாப்பா. பிள்ளைகளை பார்க்கணும் என்றால், மாமா வந்து பாத்துக்கட்டும். நீங்க வேலைய விட்டுட்டு வீட்டில் இருந்து பிள்ளைகளை பார்த்துக்கோங்க. நான் மட்டும் வேலைக்கு போறேன். இல்லன்னா நான் வீட்டுல இருக்கேன். நீங்க வேலைக்குப் போங்க” என்றாள் அனைத்தையும் யோசித்து.
“மாப்பிள்ளை என்ன சொல்லுறாரோ, அப்படி செய்துக்கலாம். அவர்தான் மனசளவில் காயப்பட்டிருக்கார். அவரின் முடிவை மதிப்போம்” என்றுவிட்டார்.
பிள்ளைகள் அதை வேறு விதமா எடுத்து, தன்னுடன் வருவேன் என்றது ஒருபுறம் சந்தோஷம் என்றாலும், எங்கே காவல் துறை உதவி ஆய்வாளர் சொன்னது போல், அக்கா இல்லையெனில் தங்கை மணப்பெண் என்ற வகையில், மறுமணம் என்று ஆரம்பித்து விடுவார்களோ என்ற பயமும் வந்துவிட்டது. அவர் சொன்னது என்னவோ சிவனந்தனிடம் தான். ஆனால், நடந்து கொண்டிருந்த சக்திக்கும் அது கேட்டிருக்க, சட்டென உடலில் ஒரு நடுக்கம் வந்து ஒட்டிக்கொண்டது.
அந்த யோசனை தான் இப்பொழுது அவளுக்கு. மறுமணம் என்பதில் பெரும் பயம் அவளுக்கு. காரணம் தனை அவள் உள் மனம் மட்டுமே அறியும். ஏதேதோ பழைய நினைவுகள் அவளை நடுங்க வைத்து உறக்கம் இல்லாது செய்ய, நள்ளிரவில் தான் உறக்கத்தை தழுவினாள்.
மறுநாள் பிள்ளைகளை பள்ளிக்கு விட்டு தன் கடைக்குச் சென்றான் சிவனந்தன். அவன் வைத்திருப்பது சிறிய வெல்டிங் பட்டறை. அதைப் பெரிய அளவில் எடுத்துச் செல்ல முனைப்பாக இருக்கிறான். அதற்கான ஓட்டம் தான் சமீபகாலமாக. தொழிலதிபர் மனைவி என்றால், அவளுக்கும் பெருமை தானே என்று அவன் எண்ணியிருக்க, அவளோ சிறுமைப்பட்டுப் போனாள்.
முடிந்ததையே நினைப்பதில் பிரயோஜனம் இல்லை என்று உணர்ந்தவன், அடுத்து செய்ய வேண்டிய வேலையில் கவனத்தைத் திருப்பினான்.
இரண்டு நாள் கழித்து, சக்தீஸ்வரி வழக்கம்போல் பள்ளிக்குச் செல்ல கிளம்பி வாசல் வர, அங்கு நின்றவர்களை பார்த்து சந்தோசத்தில் ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள்.
“ஹேய் குட்டீஸ்… நீங்க எப்படி இங்க? அதுவும் இவ்வளவு காலையிலேயே” என்று கேட்டு இருவர் கன்னத்திலும் முத்தமிட,
“இன்னைக்கு சாட்டர்டே. ஸ்கூல் லீவ் சித்தி. அதான் அப்பாவிடம் கொண்டு வந்து விடனும் சொல்லி கேட்டுகிட்டோம். முதல்ல நோ தான் சொன்னாங்க. அப்புறம் அழுது கத்தி வர வச்சிட்டோம்” என்று பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி வந்த தகப்பனை நோக்கி கை நீட்டினார்கள்.
“அப்பாவை பிளாக்மெயில் பண்ணி கூட்டிட்டு வந்தீங்களா? இது தப்பில்லையா?” என்று கேட்டாள்.
“எங்களுக்கு உங்களை பார்க்கனும் என்று தோணுச்சு. நாங்க இன்னிக்கு நைட் வர இங்கதான் இருப்போம். அப்பா வேலை முடிச்சுட்டு வந்து கூட்டிட்டு போவாங்க. இல்லப்பா…” என்று தகப்பனிடமும் கேட்க,
அவர்களை முறைத்து அவ்விடத்தில் பதில் பேச முடியாது, “ஆமா சக்தி. ஒரே அடம். சரி சின்ன பிள்ளைங்க மனசளவு கொஞ்சம் இன்செக்யூர்டா ஃபீல் பண்ணுவாங்க அப்படின்னு தோணுச்சு. அதனால தான் கூட்டிட்டு வந்தேன். நீ பாத்துக்கோ. நான் கிளம்புறேன்” என்று வாசலோடு கிளம்ப,
“மாமா ஒரு நிமிஷம்” என்றவள், “நீங்க ஓகே தானே?” என்று கேட்டாள்.
விரக்தியான புன்னகை சிந்தியவன், “ஓகே ஆகிடுவேன்” என்று சொன்னான்.
“உள்ள வாங்க மருமகனே. ஏன் வெளியே நிக்கிறீங்க? வாங்க வந்து சாப்பிட்டு போகலாம்” என்று அழைத்தார் சக்தியின் அப்பா சாரங்கன்.
“இல்ல மாமா. டைம் ஆகுது. நான் கிளம்புறேன். நைட் வந்து பிள்ளைகளை கூப்பிட்டுக்கிறேன். வரேன் சக்தி” என்று கிளம்பினான்.
“என்னம்மா நீ ஸ்கூல் கிளம்பிட்ட. பிள்ளைங்களை நான் பாத்துக்கவா?” என்று கேட்டார்.
“இல்லப்பா நான் லீவு சொல்லிடறேன். இன்னைக்கு இவங்களோட தான் என்னுடைய நேரம் போகும். நீங்க எங்களுக்கு சாப்பிடறதுக்கு ஏதாவது வாங்கி கொடுத்துட்டு, அப்படியே சமையலுக்கு வாங்கி கொடுத்துட்டு, வேலைக்கு போயிட்டு வாங்க” என்றாள் அவள்.
“சரிமா. குட்டீஸ் இரண்டு பேரும் தாத்தா கூட வரீங்களா? கடைக்கு போயிட்டு வரலாம்” என்று அழைக்க,
“நாங்க சித்தி கூட தான் இருப்போம்” என்று அவர்கள் மறுத்து அவளின் இரு பக்கமும் வந்து நின்று கொண்டார்கள்.
முகம் முழுக்க புன்னகை பூச, இருவரையும் அணைத்து நெற்றியில் முத்தமிட்டு, உள்ளே அழைத்துச் சென்றாள் சக்தி.
அன்று முழுவதும் பிள்ளைகளுடன் தன் நேரத்தை செலவிட, தாய்க்கான அன்பை அவளிடம் தேடினார்களோ குழந்தைகள். அவளையே சுற்றிச்சுற்றி வர, அவளோ அன்பை அள்ள அள்ளக் குறையாது கொடுத்தாள்.
இரவு எட்டு மணிபோல் வீடு வந்தவன், பிள்ளைகளை வெளியே நின்றே அழைக்க, அங்கு வந்தசாரங்கன், “உள்ள வாங்க மருமகனே. காலைல தான் சாப்பிடாம போய்ட்டீங்க. இப்பயாவது வந்து சாப்பிட்டு கிளம்புங்க” என்றார் அவர்.
“இல்ல மாமா. பிள்ளைகள் அனுப்புங்க. நான் கிளம்புறேன்.”
“பாப்பா தூங்கிட்டா. பையன் பாதி துக்கத்தில் இருக்கிறான். என்ன பண்ணலாம்?” பதில் கேள்வி கேட்டார்.
“ஓ… அப்ப பையனை கொடுங்க மாமா. நான் தூக்கிட்டு போறேன்” என்றான் அவன்.
“உள்ள வாங்களேன் மருமகனே. ஏன் வெளியவே இருக்கீங்க? இது உங்க வீடு” என்றார்.
“இல்ல மாமா. வீட்டுல சக்தி இருக்கா. இந்நேரத்துல நான் உள்ள வந்தா அது மத்தவங்க பார்வைக்கு தப்பா தெரியும். அதுவும் இப்ப இருக்குற சூழ்நிலையில் எல்லாமே தப்பா தான் போகும். நான் பிள்ளைகளை மட்டும் கூட்டிட்டு போறேன். பாப்பா தூங்கிட்டா என்றால், நவீன் மட்டும் தூக்கிட்டு வாங்க மாமா. நாளை காலை வந்து விட்டுட்டு வேலைக்கு கிளம்புறேன்” என்றான்.
“ஒரு நிமிஷம் மருமகனே…” என்று உள்ளே சென்றவர், அங்கே மகளின் இந்த பக்கமும் அந்தப் பக்கமும் படுத்து, அவள் மேல் காலை போட்டு, மகள் சொல்லும் கதையைக் கேட்டு, இம் கொட்டிக்கொண்டு அரைத்துக்கத்தில் இருந்த பேரனை பார்த்தார்.
சின்ன சிரிப்புடன், “ஈஸுமா மாப்பிள்ளை வந்துருக்காரு. பிள்ளைங்கள கேட்டார். பாப்பா தூங்கிட்டதா சொன்னதும் நவீன மட்டும் கூப்பிட்டு வர சொன்னார்” என்று பேரனை தூக்க வர, அவனோ அவர் சொன்னதைக் கேட்டு சக்தியை இறுகி கட்டிக்கொண்டான்.
“கண்ணா அப்பா கூப்பிடுறாங்க பாரு. அப்பா தனியா இருப்பாங்க இல்ல. நீங்க இருந்தால்தான நிம்மதியா தூங்குவார். அப்பா கூட போங்க” என்று அவர் அழைக்க,
“நான் போக மாட்டேன் தாத்தா. நான் இங்க தான் இருப்பேன்” என்று நவீன் உளர,
அவரோ வெளியே சென்று பேரனின் மறுப்பைச் சொல்ல, சின்னதாக ஒரு எரிச்சலும், சலிப்பும் எட்டி பார்த்தது. ‘பிள்ளைகள் இல்லாமல் வீட்டிற்கு செல்வதா?’ அதைவிட பெரிய கொடுமை தனக்கு இருப்பதாகத் தோன்றவில்லை. ‘என்ன செய்வது?’ என்று நினைத்தவன் ஏதோ யோசனையில் நேரே அவளின் அறைக்குச் சென்றுவிட்டான்.
அறைக்குள் வந்ததும் தான் தெரிந்தது, தான் செய்த தவறு. மானசிகமாக தலையில் அடித்துக் கொண்டு அங்கு பார்க்க, சமீபமாக… இல்லையில்லை சில வருடங்களாக, தன் மனைவி பிள்ளைகளிடம் அவன் காணாத காட்சி. இருபுறமும் அவளை விடமாட்டேன் என்பதாய் இறுக்கிப்பிடித்திருக்க, தன் கையில் படுத்திருந்த நவீனின் கேசத்தை மெல்ல வருடி கொடுத்து ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.
“மருமகனே” என்று சத்தமாக அழைத்தபடி சாரங்கன் உள்ளே வர, அப்பொழுதுதான் மாமனை கண்டாள் சக்தீஸ்வரி. சட்டென்று எழ முடியாத சூழ்நிலை. அவளை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்காது சிவனந்தனும் வெளியே வந்துவிட்டான்.
பிள்ளைகளின் எதிர்பார்ப்பு அவனுக்கு புரிகிறது. ஆனால், இதையே தொடரவும் முடியாதே என்ற நிதர்சனம் உரைக்க, கொஞ்சம் தளர்ந்து தான் போனான்.
வெளியே வந்த மாமனாரிடம், “மாமா பிள்ளைங்க இங்கேயே இருக்கட்டும். நாளைக்கு சாயங்காலம் போல வந்து கூட்டிட்டு போறேன். ஆனா, சக்தியோட ஒட்டுற இந்த அன்பு, எங்கே போய் நிற்க போகுதோ தெரியல. சக்தியிடம் கொஞ்சம் சொல்லுங்க மாமா. இது நிரந்தரம் கிடையாது. இது தற்காலிக சந்தோசம். பிள்ளைங்க இந்த சந்தோஷத்துக்கு பழகுனா, எப்பவா இருந்தாலும் அவங்களுக்கு பிரச்சனையா வந்து நிக்கும். அதனால அன்பை கொஞ்சம் அளவோட காட்ட சொல்லுங்க மாமா” என்று வந்த வழியை சென்றுவிட்டான்.
பிள்ளைகள் இருவரும் உறங்கிப்போக, அதன் பின்னே வெளியே வந்தவள், “அப்பா மாமா கிளம்பிட்டாங்களா? மாமா என்ன சொன்னாங்க? சட்டுனு உள்ள வருவாங்கனு நான் எதிர்பார்க்கவே இல்லப்பா. பிள்ளைகளும் கழுத்தை கட்டிப்பிடித்து விடவே இல்லை.” என்று பதட்டமாய் கேட்க,
“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லம்மா. மருமகன் வீட்டுக்கு கிளம்பிட்டாரு. பிள்ளைகளை நாளைக்கு வரைக்கும் நீயே வச்சுப்பியாம். ஆனா, ஒரு விஷயம் சொன்னார்…” என்று அவன் சொன்னதை சொல்லத் தயங்க,
“என்னப்பா? என்ன விஷயம்? எதும் பிரச்சனையா? எனக் கேட்டாள்.
“பிரச்சனை எல்லாம் கிடையாதுமா. ஆனா, பிரச்சனை ஆகிடக்கூடாதுன்னு பயப்படுறார். அவர் எண்ணத்துலயும் தப்பு கிடையாது. பிள்ளைக உன்கிட்ட ரொம்ப ஒட்டிட்டா, உன்னை விட்டு பிரிய முடியாது. அது பிள்ளைங்களுக்கும் கஷ்டம்தானமா. இன்னைக்கு நாளைக்கு நீ பாத்துக்க. அடுத்து அவங்க அப்பா கூடதானே இருக்கணும் சொல்லிடு. அம்மாவோட அன்பை உன்னிடம் எதிர்பார்க்கிறாங்க தோணுதுமா.”
“அதில் தப்பில்லையேப்பா” என்றாள் புரியாது.
“தப்புதான்மா. அம்மா பாசத்துக்கு ஏங்குற பிள்ளைக, உன் அன்பை அனுபவிக்கிறப்ப, அடிக்கடி உன்னை பாக்கணும்னு நினைப்பாங்க. மருமகன் கண்டிச்சா பிள்ளைங்க அடம் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. மருமகனுக்கும் தர்மசங்கடம். இதனால பிள்ளைங்க படிப்பிலிருந்து மனசுல மனசு வரை எல்லாமே கெட்டுப் போகும். அதனால கொஞ்சம் இடைவெளி கொடுத்து பழகுமா” என்றார்.
“ம்… எனக்கும் புரியுதுப்பா. ஆனா, பிள்ளைகளை சட்டுனு விலக்க முடியாதே. அவங்க என்னைப் பாக்க வர்றது அந்த அன்புக்காக தான். அதையே கொடுக்கமாட்டேன்னு சொன்னா எப்படிப்பா? மாமா பயம் புரியுது. இருந்தாலும் பிள்ளைகளை தள்ளிவைத்து பார்க்க என்னால முடியாதுப்பா.”
“நடைமுறைன்னு ஒண்ணு இருக்கேமா.”
“சரிப்பா. எது எப்படியோ பிள்ளைங்க இப்ப சந்தோஷமா இருக்காங்க. இப்போதைக்கு இது போதும். கொஞ்சம் கொஞ்சமா விலகிக்கிறேன்ப்பா” என்றாள் மனத்தைக் கல்லாக்கி.