Stories that touch hearts

Home  /  04. சாலிஹா அலி (என் மனம் உருகுதே அனுதினம்)  /  Chapter 1

CHAPTER 1

அத்தியாயம் – 1

By shaliha ali · November 25, 2026

0

என் மனம் உருகுதே அனுதினம்

அத்தியாயம் -1

வளைந்து நெளிந்து செல்லும் பாதையில் கார் சீரான வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தது.விழிகளை மூடி அமர்ந்திருந்தவளுக்கு குமட்டிக் கொண்டு வர ஆரம்பித்தது.

சரிவான மலைப்பாதையும் குறுகலான இடத்தில் வண்டிச் சென்றுக் கொண்டிருப்பதால்  அவளின் வயிற்றைப் போட்டு பிரட்டவும் வேறு வழியில்லாமல் கையில் வைத்திருந்த நெகிழிப் பையில் வாந்தி எடுக்க ஆரம்பித்தாள்.

அப்பொழுது ஆதரவாய் ஒரு சின்னக் கரங்கள் அவளின் தோளின் மேல் மெதுவாக அழுத்தம் கொடுத்து  வருடிக் கொடுத்தது.

இப்பொழுது அந்த ஆதரவே அவளுக்கு பெரிதாக இருந்தது.அவள் முழுவதும் வாந்தி எடுத்து முடிக்கவும் “அங்கிள் வண்டியை கொஞ்சம் ஓரமா நிறுத்துங்க அம்மா முகத்தை கழுவனும்” என்று ஒரு  கீச்சுக் குரல் அதட்டலாகக் கேட்டது.

முன்னாள் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த நபரோ அந்த குழந்தையின் சத்தத்தைக் கேட்டு “சரிங்க பாப்பா கொஞ்சம் ஓரமான இடமா நிப்பாட்டுறேன்” என்று  ஒரு ஓரமாக நிறுத்தினார்.

உடனே அந்தச் சிறுமி “அம்மா கீழே இறங்கி முகத்தை கழுவுங்க” என்று சொன்னாள்.  இவளும் மெதுவாக  இறங்கவும் கையில் ஒரு பாட்டில் தண்ணீரைக் கொடுத்ததும் முகத்தை கழுவினாள்.அடுத்து தயாராக கைக்குட்டையைக் அந்தச் சிறுமி கொடுத்தாள். இவளும் வாங்கி தன்  முகத்தை  துடைத்தவள் வயதில் சிறியவளாக இருந்தாலும் அக்கறையாக பார்த்துக் கொள்ளும் தன் மகளை கெட்டியாக அணைத்துக் கொண்டபடி “தாங்ஸ்  மென்கா” என்றதும் இவளின் விழிகள் இரண்டும் கண்ணீரை நிரப்பிக் கொண்டது.

அவள் ஒரு தாயாக பார்த்துக் கொள்ள வேண்டிய இடத்தில் மகளோ இப்போது அவளுக்கு அன்னையாக கவனித்துக் கொள்கிறாள்.

தன் அம்மாவை அன்பாய் கட்டிக் கொண்டவள் கன்னத்தில் முத்தமிட்டபடி “ஐ லவ் யூமா” என்றதும் உடைந்துப் போய் இருந்தவளுக்கு எல்லாம் ஒன்றாக சேர்ந்து பழைய படி ஒரு உத்வேகம் அவளுள் வந்தது.

“ஐ லவ் யூ டூடூடூ”என்று சொல்லி சிரிக்கவும் அந்த புன்னகை இப்போது மென்காவின் முகத்திலும் ஒட்டிக் கொண்டது.

“அம்மா நாம போற இடத்தைப் பத்தி நினைக்க நினைக்க எனக்கு ரொம்ப எக்ஸ்ஸைட்மெண்ட்டா இருக்கு” என்று கண்களை விரித்துக் கொண்டு சொன்னாள்.

அவளோ “எனக்கும் தான் சீக்கிரமா போய் சேரணும்” என்றதும் இருவருமாக வண்டியில் ஏறினார்கள்.

இவர்கள் இருவரும் பேசுவதை  காரை ஓட்டுபவன் பார்த்துக் கொண்டே இருந்தான்.இரண்டு மணிநேர பயணத்தில் ஒருமணி நேரம் தான் முடிந்து இருந்தது.அதற்குள்ளே இவளுக்கு தலையைச் சுற்றிக் கொண்டு வர இன்னும் ஒருமணிநேரம் எப்படி சமாளிக்கப் போகிறோமோ? என்ற யோசனையில் ஆழ்ந்து இருக்க மென்கா  தன் பையில் இருந்து ஒரு ஸ்டாபெர்ரி  சுவையுடைய ஒரு புளிப்பு மிட்டாயைக் கொடுத்து “அம்மா இதை சாப்பிடுங்க கொஞ்ச நேரத்திற்கு நல்லா இருக்கும்” என்று கொடுக்கவும் அதை வாங்கியவளுக்கு அன்று நடந்தது நினைவில் வந்தது.

இரண்டு மாதத்திற்கு முன்னால்  பள்ளியில் மென்கா சென்று இருந்த சுற்றுலாவிற்கு அவளுக்கு தன்னைப் போலவே பயணம் ஒத்துக் கொள்ளாமல் இருந்தால் என்ன செய்வதென்று நினைத்தவள் அந்த மிட்டாய் எதற்காக என்று சொல்லி வாங்கிக் கொடுத்த மிட்டாய் என்று தோன்றவும் அதை சிரித்தப்படியே வாங்கிக் கொண்டவள் “தாங்க்யூ” என்று வாயில் போட்டுக் கொண்டாள்.

வெளியே இருவரும் வேடிக்கைப் பார்த்தபடியே பயணம் தொடர்ந்தது.

மலைகளின் ராணியான ஊட்டிக்குத் தான் அவளும் ஏழு வயதான மென்காவும்  சென்றுக் கொண்டிருந்தனர்.

முன்னால் வண்டி ஓட்டிக் கொண்டிருந்த ஓட்டுநர் “மேடம் இங்கேயே செட்டில் ஆகுற மாதிரி வந்து இருக்கீங்களா?”

“ஆமாம்” என்றாள்.

“சாருக்கு நீங்க ரொம்ப நெருக்கமா?”

“ஏன் இந்தக் கேள்வி திடீர்னு என்னைப் பார்த்து கேட்கிறீங்க?” என்று அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டு கேட்டாள்.

“மேடம் நான் கேட்டதை தப்பா நினைக்காதீங்க ஏன்னா சார் இதுவரைக்கும் அவரோட வேலையைப் பார்க்க  நேர்லயே வந்துடுவாங்க இப்போ என்னன்னா மேனஜரா உங்களை அப்பாயிண்ட்மெண்ட் பண்ணி இருக்காங்களே அதான் கேட்டேன்” என்றான்.

அவளோ லேசான புன்னகையோடு  “சார் புதியதாக ரெண்டு தொழில் அவர் இருக்கிற பெங்களூர்ல ஆரம்பிக்க போறாங்களாம் அதனால இனிமேல் ஊட்டிக்கு அடிக்கடி  வர முடியாதுன்னு  தான் என்னை புதுசா அப்பாயிண்ட் மெண்ட் பண்ணி இருக்காங்க” என்று  சிரித்த முகத்தோடு சொன்னாள்.

காரை ஓட்டியவனும் சரியென்பது போல் தலையசைத்தான்.வெளியே இருவரும் வேடிக்கைப் பார்த்தபடியே பயணம் தொடர்ந்தது.அவர்கள் வர வேண்டிய இடத்திற்கு வந்து இருந்தனர்.விடியற்காலையில் மலைக்கு ஏற ஆரம்பித்ததில் இப்பொழுது நன்றாக விடிந்து இருந்தது.ஆனால் ஒரு குளிர்ச்சி தொடர்ந்து இருந்தது.

எங்கு பார்த்தாலும் பச்சை பசலென்ற இயற்கையின் அன்னையின் அழகுமுகம் கொட்டிக் கிடந்தது.இப்பொழுது மே மாதத்தின் இறுதி என்பதால் குளிரின் தன்மை கொஞ்சமாகவே இருந்தது.

முன்னால் இருந்தவன் “மேம் நாம வந்தாச்சு” என்றதும் ஓரமாய் வைத்திருந்த தன் கைப்பையை எடுத்து கரங்களில் அணிந்தபடி காரின் கதவை திறந்துக் கொண்டு அங்கே இருந்த அந்த கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்தவாறு  இறங்கினாள்.

மென்கா இன்னொரு பக்கம் கதவை திறந்துக் கொண்டு துள்ளிக் குதித்தபடி தன் அம்மாவின் அருகில் நின்றாள்.

ஓட்டுநர் “மேடம் சாரோட வீடு விடுதிகள் இருக்கிற இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளி இருக்கு வாங்க நான் வீட்டை காட்டுறேன்” என்று அவன் காரிலிருந்த அவளுடைய பெட்டியையும் பையையும் எடுத்துக் கொள்ளச் செல்ல அவளும் அவனுடன்  நின்று உதவினாள்.

அவனைப் பார்த்து “உங்களை செந்தில்னு கூப்பிடட்டுமா?” என்று கேள்வியாகக் கேட்டாள்.

உடனே அவனோ சிரித்துக் கொண்டு “சரிங்க மேடம் கூப்பிடுங்க” என்றான்.

அவளோ சிரித்துக் கொண்டே “எனக்கு இனிமேல் நீங்க தான் எல்லா விவரங்களையும் சொல்லப் போறீங்க. எப்படி 

வேலன் சாரோட அசிஸ்டென்ட்டா வொர்க் செய்தீங்களோ! அதே மாதிரி எனக்கும் நீங்க தான் அசிஸ்டென்ட்.செந்தில் இந்த விஷயத்தை  சார் உங்ககிட்ட சொல்லச் சொன்னதை தான் நான் சொல்றேன்” என்று சொன்னாள்.

செந்திலும் சரியென்பது போல் தலையசைத்தான்.இவர்கள் இங்கே பேசிக் கொண்டிருக்கும் போது  மென்கா அங்கே ஓரமாக புல்வெளியில் இருந்த சின்னப் பட்டாம்பூச்சியை உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

செந்தில் “மேடம் உங்களைப் பத்தி நீங்க எதுவும் சொல்லலையே” என்று கொஞ்சம் ஆர்வமாகக் கேட்டான்.

அதற்கு புன்னகையை முதலில்  பதிலாகத் தந்தவள் “என்னோட பெயர் மெல்லினி என் பொண்ணோட பெயர் மென்கா.நான் டிவோர்ஸ் வாங்கிட்டேன் இனி இங்கே இருக்கலாம்னு வந்து இருக்கிறேன் சொல்ற அளவுக்கு சொந்தங்கள் ஒன்றும் பெரிதாக ஒன்னுமில்லை” என்று சொன்னாள்.

அதை எல்லாம் கேட்டவன் “ஓஓ… சரி” என்று பதிலுரைத்தான்.அதைக் கேட்ட

மெல்லினி சிரித்து கொண்டே “வேலன் சார் தான் என்னைப் பற்றிய எல்லா விவரங்களையும்  சொன்னதாக சொன்னாங்களே” என்று அவனுக்கு தெரியும் என்பது தனக்கு  தெரிந்ததையும் சேர்த்து சொன்னாள்.

அவனோ “சார் சொன்னாங்க தான் ஆனால் உங்ககிட்டே கேட்கலாம் தான்” என்றான்.

அவளோ சரியென்பது போல் தலையசைக்கவும் அவர்கள் வர  வேண்டிய வீடும் வந்து இருந்தது.கதவை திறந்து உள்ளே சென்றவன் மெல்லினியின் பெட்டிகளை எடுத்து உள்ளே வைத்தான்.

மெல்லினியும் மென்காவும் உள்ளே வந்தனர்.முதலில் இருந்த வரவேற்பறையில் வந்தவர்கள் அங்கே இருந்த எல்லாவற்றையும் ஒரு பார்வை பார்த்தனர்.

அப்பொழுது உள்ளிருந்து ஒரு பெண் வேகமாக வந்தாள்.வந்தவுடன் இவர்கள் பார்த்து “வாங்க அம்மா” என்று சொன்னாள்.

செந்தில் “மேடம் இவங்க பேரு கீதா அக்கா இங்கே சாரு வந்தாங்கன்னா அவங்க சமைப்பாங்க மாசத்துக்கு ஒரு முறை வந்து வீட்டை க்ளீன் பண்ணி மெயிண்டெயிண்  பண்ணுவாங்க” என்று அவரைப் பற்றி சொன்னான்.

இவளும் “வணக்கம் என் பெயர் மெல்லினி நான் தான் இனிமேல் இந்த வீட்டுல தங்கப் போறேன் இது என் பொண்ணு” என்று தன்னைப் பற்றி அறிமுகப்படுத்தினாள்.

உடனே அவர் “அம்மா முதல்ல நீங்க குளிச்சிட்டு சாப்பிட வாங்க நான் சமைச்சு வைச்சு இருக்கேன்” என்று சொன்னார்.

மெல்லினி யோசனையாக சரியென்பது போல் தலையசைக்கவும் செந்தில் “மேம்  கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க நானும் சாப்பிட்டுட்டு மற்ற வேலையைப் முடிச்சு   திரும்ப வந்து உங்ககிட்ட சில  விஷயங்களைப் பேசுறேன் எதுவும் அவசரம்னா நீங்க போன் போடுங்க நான் வரேன் கீதா அக்கா இங்கே தான் இருப்பாங்க அவங்ககிட்ட எந்த உதவினாலும் கேளுங்க கண்டிப்பா செய்வாங்க” என்றான்.

அவள் எல்லாவற்றிருக்கும் சரியென்பது போல் தலையசைத்தாள்.

அங்கே வரவேற்பறையில் கொஞ்சம் தள்ளி ஒரு அறை இருந்தது.அங்கே தன்னுடைய பெட்டிக்களை நகர்த்திக் கொண்டு போனாள்.அவள் பின்னாலேயே மென்காவும் சென்றாள்.

கதவை உள்ளே தாழிட்டவள் அப்படியே அங்கே கிடந்த மெத்தையின் நிமிர்ந்து கிடந்தவள்  மனதினுள்ளே பலவிதமான யோசனைகளோடு நேராக பாத்தாள்.

அவளின் யோசனையை கலைக்கும் விதமாக மென்கா ஓடிவந்து அவளருகிருகில் படுத்துக் கொண்டு  “அம்மா இந்த இடமும் வீடும் சூப்பரா இருக்கும்மா  ஐ அம் வெரி லக்கிம்மா” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.

மகளின் பக்கமாக தலையை திருப்பிக் கொண்டு “ஏன் லக்கினு சொல்றே?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் மெல்லினி.

தன் சின்ன கருவிழிக் குண்டு கண்களை விரித்து “இவ்ளோ அழகான இடத்துக்கு என்னை கூடிட்டு வந்து இருக்கீங்கல்ல அதனால் தான் நான் லக்கி” என்று சொல்லி சிரித்தாள் மென்கா.

அதைக் கேட்டு மெல்லினி “உண்மையாகவா?” என்று ஆச்சரியமாகக் கேட்டாள்.மென்கா “எஸ் அம்மா” என்று தலையை ஆட்டிச் சொல்லவும்  இருவரும்

ஒன்றாக சிரித்தனர்.

இருவரும் தங்களுடைய தனிப்பட்ட வேலைகளை முடித்து விட்டு வெளியே வந்தனர்.கீதா  மதிய உணவிற்கான வேலையைப் பார்க்க ஆரம்பித்து இருந்தார்.

மெல்லினி மெதுவாக சமையலறைக்குப் போய் நின்றாள்.பின்னால் வந்த மென்கா சத்தமாக “ஆன்ட்டி பயங்கரமா பசிக்குது சாப்பாடு தாங்க” என்று குதித்துக் கொண்டே வந்து கேட்டாள்.

சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தால்  அங்கே மெல்லினி அமைதியாக நின்றுக் கொண்டிருந்தாள்.

“வாங்க அம்மா”  என்று அந்த பெண்மணி சொன்னார்.உடனே மெல்லினி “என்னை அம்மான்னு சொல்லாதீங்க பேர் சொல்லி கூப்பிடுங்க  நான் உங்களை விட வயசு சின்னவ தான்” என்றாள்.

அவரோ சிரித்துக் கொண்டு “மெல்லினி அம்மானு கூப்பிடட்டுமா?” என்று கேட்டார்.

அவளோ சிரித்துக் கொண்டே “நான்  கீதா அக்கானே சொல்றேன் சரியா” என்றாள்.அவரும் சரியென்பது போல் தலையசைத்தார்.

காலையில் சூடாக ஆப்பமும் வெள்ளை குருமாவும்  செய்து இருந்தார்.மெல்லினி சாப்பிட ஆரம்பிக்கவும் “அக்கா நீங்க சாப்பிட்டீங்களா?”

“இல்லைம்மா நீங்க சாப்பிடுங்க” என்று அவர்  சொன்னார்.உடனே மெல்லினி “நீங்களும் வாங்க ஒன்னா சாப்பிடலாம்” என்று அழைத்தாள்.

கீதாவோ “உங்களுக்கு முதல்ல நான் பரிமாறுகிறேன்  பிறகு நானும் என் பையனும் சாப்பிடுவோம்” என்றார்.

மெல்லினி ஆர்வமாக “உங்களுக்கு பையன் இருக்கானா?”

“ஆமாம் பதினைந்து வயசு ஆகுது” என்று சிரித்துக் கொண்டு சொன்னார்.

மெல்லினி ஒன்றுக்கு இரண்டு  கவளம் உணவு உண்டவள் “ரொம்ப டேஸ்டா சமைக்கிறீங்க அக்கா நல்லா இருக்கு” என்று சொல்லவும் மென்காவும் சேர்ந்து “சூப்பரா இருக்கு ஆன்ட்டி” என்று  கைகளை உயர்த்தி சைகையோடு சொன்னாள்.

அம்மா மற்றும் மகளின் இனிமையான வார்த்தைகள் அவரின் மனதை நிறைத்தது.இங்கே  மனிதர்களின் மனங்களை சின்னச் சின்ன வார்த்தைகள் தானே இனிமையாக்கிறது.

← Previous All Chapters Next →

Leave a Comment

error: Content is protected !!