Stories that touch hearts

Home  /  40. ஓரோவியள் (இதயம் இடம் மாறியதோ)  /  Chapter 1

CHAPTER 1

அத்தியாயம் 1

By Oroviyal · October 21, 2026

0

உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார சக்தியாக விளங்கும் நாடாம் ஜப்பான். இந்நாட்டின் ஒன்சூ தீவில், தலைநகர் டோக்கியோவின் தென்மேற்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மவுண்ட் ஃபூஜி என்று அழைக்கப்படும் அந்த மலை சுமார் 3,776 மீட்டர் வரை உயரம் கொண்ட ஒரு சுழல்வடிவ அடுக்கு எரிமலையாகும். இந்த மலை 2013-ம் ஆண்டு உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. இது ஜப்பானின் மூன்று புனித மலைகளில் ஒன்றாகும். பல நூற்றாண்டுகளாக இது ஒரு புனித யாத்திரைத் தலமாகவும் திகழ்கிறது. பார்க்கவும் ரசிக்கவும் அத்தனை அழகாய் கட்சி தரும் அந்த மலை தன்னுள் சுற்றி இருக்கும் அனைத்தையும் அழிக்கும் ஆற்றலையும் வைத்துள்ளது.

அந்த ஆபத்து நிறைந்த அழகிய மலையை நோக்கி சுற்றி மிக மெதுவாய் ஒரு மகிழுந்து சென்று கொண்டிருந்தது. இருக்கும் அத்தனை இயற்கை அழகையும், ஆங்காங்கே அழகாய் அமைக்கப்பட்டிருந்த வீடுகளையும், கடைகளையும் பார்த்து வியந்த படி அந்த வாகனத்தில் இருந்த அனைவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டே பயணிக்க, அதில் ஒருவனின் கவனம் மட்டும் அங்கிருந்த எந்த அழகிலும் லயிக்கலாம் நாடு தாண்டி, கடல் தாண்டி வேறு எங்கோ சென்று கொண்டிருந்தது.

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா

குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா

என் மனதில் அம்பு விட்ட நிலா

இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா..

என்ற பாடல் அந்த ஊருக்கும், இடத்திருக்கும், சூழளுக்கும் சற்றும் பொருந்தாமல் அந்த வாகனத்தில் ஒலித்துகொண்டிருக்க அவன் மனம் மட்டும் மொத்தமாய் அந்த பாடலின் வரிகளில் மூழ்கி வேறொருவரின் நினைவுகளை தட்டி எழுப்ப துவங்கியிருந்தது.

“ ஷியாம்.. அந்த பாட்டை கொஞ்சம் நிறுத்தேன் சார் கிட்ட கொஞ்சம் பேசணும். “ என்ற குரலில் ஷாம் என்று அழைக்கப்பட்ட அந்த நபர் வாகனம் ஓட்டுவதில் கவனம் வைத்த படி பாடலை நிறுத்த. விழி மூடி அமைதியாய் பாடல் வரிகளில் லயித்து எங்கோ செல்ல இருந்த நினைவுகள் பாடல் ஒலியோட சேர்ந்து தடைப்பட சட்டென விழிகளை திறந்தவன் விழிகள் சுருக்கி முன்னே அமந்திருந்தவர்களை கேள்வியாய் பார்த்தான்.

“ அது.. உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் சார் அதான். “ என்று சிறு தயக்கத்துடன் பதில் அளித்தான் பாடலை நிறுத்தக் கூறியவன்.  பின்னிருந்தவன் அமைதியாய் மற்றவன் முகம் பார்க்க. அந்த பார்வைக்கான அர்த்தம் புரிந்தவன் போல் அவனும் பதில் அளித்தான்.

” டைரக்டர் ஒரு மணிக்கு கால் பண்ணிருந்தாரு. இன்னைக்கு ஷூட் பண்ண போற லொகேஷன்கு இன்னும் பர்மிட் கிடைக்கலையாம். அது வரைக்கும் இங்க பக்கத்துல ஒரு ரிசார்ட்ல ரூம் புக் பண்ணிருக்காராம். எல்லாரையும் அங்க ஸ்டே பண்ணிக்க சொல்லிருக்காரு. எல்லாம் முடிஞ்சதும் லொகேஷன் போய் பாக்கலாம்னு சொன்னாரு. ” என்று சிறு தயக்கத்துடனே கூறி முடித்தான். கடைசி நேர தகவல்களை இவன் விரும்பவதில்லை என்று அறிந்ததால் எங்கே தன்னை கடித்து குதறி விடுவானோ என்று சிறு பயம் இருக்கவே இந்த தயக்கம்.

” This is the last warning for you. இனிமே இப்படி லேட்டா விஷயத்தை சொல்லிட்டு இருக்காத. ” என்றவன் மீண்டும் கண்களை மூடிக் கொண்டு இருக்கையில் தலையை சாய்த்துக் கொண்டான்.

” அந்த பாட்டை ஆன் பண்ணி விடு ஷியாம். ” என்று சொல்லி விட்டு.

ஆறாத ஆசைகள் தோன்றும் என்னைத் தூண்டும்

ஆனாலும் வாய் பேச அஞ்சும் இந்த நெஞ்சம்

அவள் பேரை நாளும் அசை போடும் உள்ளம்

அவள் போகும் பாதை நிழல் போல செல்லும்

மௌனம் பாதி மோகம் பாதி என்னை கொல்லும் எந்நாளும்..

யாரை மறக்க நினைத்து, யாரை நினைக்கவே கூடாது என்று நாடு கடந்து ஓடி வந்தானோ அவளின் நினைவுகலையே இந்த பாடல் வரிகள் மீண்டும் தட்டி எழுப்பியிருக்க தன் மீதே கடல் அளவு கோபம் கொள்கிறான்.

” நீ எழுப்பு.. “

” எதுக்கு? ‘அந்தா பாரு புலி, அதுக்கு நான் பலி’ன்னு ஆகவா. போயா நீயாச்சும் அவராச்சும் ஆள வுடு ராசா புண்ணியமா போவும் உனுக்கு. எப்டியாச்சு உன் சாரை எழுப்பி கூட்டினு வந்து சேரு. நாங்க உள்ள போய் ரூமுக்கு இன்னான்னு பாக்குறோம். ” என்று சொன்ன படி அனைவரின் உடமைகளையும் உதவியாளர்களின் உதவியுடன் எடுத்துக் கொண்டு அந்த அழகிய ரிசார்ட்டினுள் நுழைந்தான் ஷியாம்.

” புலி, பலின்னு ரைமிங்கா பேசி என்னை இந்த சிறுத்தை கிட்ட மாட்டி விட்டுடு போறான் பாரு. ப்ளடி சால்ட் உன்னை அப்புறம் கவனிச்சிக்கிறேன்டா. அய்யோ! இந்த பாட்டு வேற முடிய மாட்டுது. இப்ப எழுப்புனா எதுவும் திட்டுவாரோ? ஆண்டவா உன் புள்ளைய இப்படி ஜப்பானுக்கு வந்தும் புலம்ப விட்டுட்டியே. ” என்று மகிழுந்தின் வெளியே நின்று புலம்பியவனுக்கு வாகனத்தின் உள்ளே கண்களை மூடிக் கொண்டு பாடலில் லயித்திருப்பவனை கலைக்க சிறு பயம் இருக்கவே செய்தது விஷ்ணுவுக்கு.

” சரி சிறுத்தைக்கு வாக்கப்பட்டாச்சு சிக்கித் தானே ஆகணும். ” என்று வாய்க்குள் முணங்கியவன் மகிழுந்தின் திறந்திருந்த கண்ணாடி வழி தலையை குணிந்து கண் மூடி கிடந்தவனை எழுப்ப முயன்றான்.

வினா தாள் போல் இங்கே.. கனா காணும் காளை..

விடை போலே அங்கே.. நடை போடும் பாவை..

ஒன்றாய் கூடும் ஒன்றாய் பாடும்..

பொன்னாள் இங்கு என்னாளோ..

என்ற பாடல் வரிகளில் தன் மனம் கூட்டிச் செல்லும் எண்ண அலைகளில் இருந்து சட்டென தன்னை விடுவித்துக் கொண்டு கண்கள் திறந்தான் அவன். எதையோ நினைத்து தவித்த மனதை தானே அமைதியடையச் செய்தான்.

” உன் நினைப்பு தப்பு. இந்த உறவு உனக்கு வேண்டாம்னு நீ தான் முடிவெடுத்துருக்க. அப்போ முதல்ல நீ அதுல உறுதியா இருக்கனும். இல்லை உன்னால இந்த உறவை ஏத்துக்க முடியும்னா தைரியமா அதை வெளிய சொல்லணும். எதுக்கு மனசுல ஒன்ன வச்சிட்டு வெளிய புடிக்காத மாதிரி நடிக்கணும்? ” என்ற மனசாட்சியின் கேள்விக்கு தன் மீதே கோபம் கொண்டான்.

” என் மனசுல எந்த எண்ணமும் இல்லை. நான் வேண்டாம்னு சொன்னது சொன்னதுதான். அதுல எந்த மாற்றமும் இல்லை. ” என்று பதில் அளித்தான்.

” அப்புறம் எதுக்கு பயந்து இவ்ளோ தூரம் ஓடிட்டு இருக்க? அதுவும் ரெண்டு வருஷமா வீட்டுக்கு கூட போகாம? ” என்ற மனதின் கேள்விக்கு பதில் அளிக்க விரும்பாதவன் அமைதியாய் வெற்றிடத்தை வெறித்திருக்க. அவனை எழுப்ப வந்த விஷ்ணுவோ தான் எழுப்பும் முன் அவனே கண் திறந்து விட்டதில் நிம்மதி மூச்சு விட்டு நிமிற. அமைதியாய் எங்கோ வெறித்து பார்த்த படி அமர்ந்திருப்பவனை குழப்பமாய் பார்த்து நின்றான்.

” சார்? ரிசார்ட் வந்தாச்சு.. ” என்று தயங்கி அழைக்க. உள்ளிருந்தவனோ ஒரு சிறு தலை அசைப்புடன் மகிழுந்தில் இருந்து கீழே இறங்கிக் கொண்டான். விஷ்ணு ‘ அப்பாடா ‘ என்று ஆசுவாசம் அடையும் முன் அவன் வேகமாய் உள்ளே செல்வதை கண்டு அவன் பின்னே ஓட்டமும் நடையுமாய் சென்றான்.

” ரூம்ஸ் பாத்தாச்சா? எல்லாருக்கும் ஓகேவா இருக்கும் தான? “” ஷியாம் பாத்துட்டு இருக்கான் சார். எல்லாருக்கும் ஓகேயா தான் இருக்கும். ” என்று அவன் கேள்விக்கு விஷ்ணு கொடுத்த பதில் தன் நடையை நிறுத்தி அவனை ஒரு பார்வை பார்க்க. அவனுக்கோ தொண்டை குழி அடைத்தது.

” ஷியாம் இந்த வேலையெல்லாம் பாக்குறாருன்னா அப்போ இனி அவரோட வேலைய நீ பாக்குறியா? உன் வேலைய நீ தான பாக்கணும்? ஷியாம் அதை பாக்குறான்னு சொல்லவா உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன்? ” என்ற அவன் கேள்வியில் பயத்தில் உறைந்து நின்றான் விஷ்ணு. இவனைப் பற்றி அறிந்தும் ஷியாம் சொன்னதும் யோசனை இன்றி அவனை அனுப்பி வைத்த தன்னையே உள்ளுக்குள்ள திட்டிக் கொண்டான்.

” சாரி சார், நான் தான் போயிருக்கனும். ம்ம்.. உங்களை கூப்புடணும்னு நான் நின்னதால ஷியாம் போறேன்னு சொன்னான் அதான்.. சாரி சார் இனிமே இப்படி நடக்காம பாத்துக்குறேன். ” என்ற படி தலை குணிந்து நின்றான். தன்னை இப்படி நிற்க வைத்த ஷியாமையும் உள்ளுக்குள் திட்டாமல் இல்லை அவன்.

” எல்லாத்துக்கும் ஒரு காரணம் வச்சிட்டு சும்மா சாரி கேட்டுட்டு இருக்காத விஷ்ணு. ஷியாமோட ஒர்க் டிரைவிங், உன்னோட ஒர்க் என்னன்னு நான் சொல்லி தரணுமா உனக்கு? இனி இந்த மாதிரி எக்ஸ்கியூஸ் கேட்டுட்டும், சாரி சொல்லிட்டும் நிக்காத. போய் வேலைய பாரு. ” என்று காட்டமாய் சொன்னதில் பெரிதாய் மண்டையை ஆட்டி விட்டு ஒரே ஓட்டமாய் ஓடி விட்டான் விஷ்ணு. அனைத்தையும் முடித்துக் கொண்டு எல்லோருக்கும் தங்குவதற்கு ஏற்படுகளையும் செய்து விட்டு அவனுக்கான அறையையும் காட்டி விட்டு பெரிதாய் மூச்சு விட்டு தொப்பென்று விழுந்தான் தனக்கான அறையில் போடப் பட்டிருந்த மெத்தையில்.

” இன்னாடா மன்சன் புழிஞ்சு எடுத்துட்டாரு போலையே? ” என்று கிண்டல் செய்த நண்பன் ஷியாமை வெறி கொண்டு முறைத்தான் பையன்.

” ஏன்டா எரும மாடு உன்னை நான் போய் எல்லாருக்கும் ரூம் பாருன்னு சொன்னேனா? நீ பாட்டுக்கு என்னை அந்த மனுஷன் கிட்ட கோர்த்து விட்டுட்டு ஓடிட்ட. அவரு என்னவோ நான் செய்ய வேண்டிய வேலைய உன்னை செய்ய விட்ட மாதிரி என்கிட்ட எகுறிட்டு வராரு. ஸ்ஸ்ஸப்பா.. முடியலடா சாமி இவரோட. ” என்று நண்பனை திட்டி விட்டு ஆதங்கமாய் புலம்ப ஆரம்பித்து விட ஷியாமோ சிரித்துக் கொண்டான்.

விஷ்ணு, ஷியாம் இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். குப்பத்தை சேர்ந்த இருவரில் படிப்பில் கெட்டியான விஷ்ணு நன்கு படித்து இப்போது இருக்கும் பணியில் சேர்ந்திருக்க. ஷியாமோ சிறுவயதில் இருந்தே படிப்பதில் துளி ஆர்வமின்றி இருந்து வளர வளர வாகனகள் ஓட்டக் கற்றுக்கொண்டு, அதை பழு பார்க்கும் வேலையையும் கற்றுக் கொண்டத்தில், நண்பனுக்கு நல்ல ஊதியத்தில் நிலையான வேலை வேண்டும் என்று எண்ணிய விஷ்ணு தான் வேலை செய்யும் இடத்திலே அவனுக்கும் அவனுக்கு தெரிந்த வகையில் ஓட்டுநர் பணியை பரிந்துரைக்க. ஷியாமும் நேர்காணல் மூலம் தகுதி பெற்று இந்த பணியில் சேர்ந்து கொண்டான். சிறு வயதில் இருந்தே ஒன்றாய் துள்ளித் திரிந்தவர்கள் இப்போதும் ஒன்றாகவே சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.

SP Productions என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் Kavi Foods ltd. என்ற குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்திற்கும் தற்போதைய தனிப்பட்ட உதவியாளராக பணி புரிகிறான் விஷ்ணு. அதே நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியின் மகிழுந்து ஓட்டுனராக பணிபுரிகிறான் ஷியாம். இவ்விருவரின் பேச்சுக்கும், புலம்பளுக்கும் காரணமானவன் வேறொரு அறையின் ஜன்னல் வழி இலக்கே இல்லாமல் எங்கோ வெறித்து பார்த்த படி நின்றிருந்தான். அவன் அருகே அவன் கைபேசி மீண்டுமாய் அதே பாடலை ஒலிக்க விட்டுக் கொண்டிருந்தது.

அவன் சத்யப்ரியன். SP Productions, Kavi foods ltd. இன் தற்போதைய தலைமை நிர்வாகி. சுந்தர் வாசுதேவன் – வசுந்தராவின் தம்பதிகளுக்கு மூத்த மகனாய் பிறந்தவன்.

படித்து முடித்த பின் தந்தையிடமிருந்து பெற்ற பணத்தையும், வங்கியில் கடனாய் பெற்ற பணத்தையும் வைத்து சுந்தர் தன் பெயரில் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து நடத்தி வந்தார். முதலில் சிறு படங்களை தயாரித்து வெளியிட்டு வெற்றி கண்டவர் பின் பிரபல நடிகர்களை வைத்தும் திரைப்படங்கள் தயாரிக்க அவரின் நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடைந்தது.

தன்னை நம்பி தொழில் துவங்க முதல் கொடுத்த தந்தையின் நம்பிக்கையை வீணாக்க விரும்பாதவர் தன் முப்பது வயதை வரை தொழிலை தவிர மற்ற எதிலுமே கவனம் செலுத்தியதில்லை. தொழில் துவங்கிய முதல் இரண்டு வருடத்தில் பெரிதாய் லாபம் இல்லை என்றாலும் நஷ்டம் இல்லாமல் நல்ல முறையில் செயல் பட்ட நிறுவனம் அடுத்தடுத்து நல்ல லாபத்தில் நல்ல உச்சத்தை அடைந்திருந்தது. தந்தையாய் மகனின் வளர்ச்சியில் பெருமை கொண்டவர் சுந்தரின் வாழ்வின் அடுத்த கட்ட முடிவை எடுக்க நினைத்து மகனுக்கு பெண் தேட.

சுந்தரை இளம் வயதில் இருந்து விரும்புவதாக வந்து நின்றார் வசுந்தரா. சுந்தரின் தூரத்து அத்தை மகள் உறவு. நல்ல அழகு, அறிவு, குணமும் கொண்ட பெண்ணாய் இருந்தவரை பார்த்ததும் சுந்தருக்கும், அவர் வீட்டினருக்கும் பிடித்து விட உடனே பேசி இருவரின் திருமணத்தையும் முடித்து வைத்தனர். திருமணம் முடிந்த கையோடு வாலிபத்தில் இருந்து சேமித்த அத்தனை காதல் உணர்வுகளையும் மனைவியிடம் கொட்டி அழகாய் குடும்ப வாழ்விலும் வெற்றி கண்டார் சுந்தர்.

அவர்கள் காதலின் சாட்சியாய் பிறந்த முதல் மகனுக்கு சத்யப்ரியன் என்று பெயர் வைத்தனர்.பெயருக்கு ஏற்றார் போல் பேச்சில் சத்தியத்தை மட்டுமே கொண்டும், செயல் ஒவ்வொன்றிலும் பிரியத்தை கொண்டும் தான் இருந்தான் மகன். ஆனால் பிரியத்தை மட்டும் வெளிப்படையாய் காட்டுவதில்லை அவன். பின்னணி காரணம் ஒன்றும் பெரிதாய் இல்லை. சில பல காரணங்களால் தன்னை கடினமாய் செதுக்கிக் கொண்டவனை காலம் சற்று இறுக வைத்து விட்டது அவ்வளவே. அதிலும் அவள் ஒருவளின் வருகையால் இதோ குடும்பத்தின் மீது உயிரையே வைத்திருந்தவன் கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த குடும்பத்தை விட்டு விலகியே இருக்கிறான்.

அவனின் இந்த இறுகிய வாழ்வை இலகுவாக்கும் ஜீவன் யாரோ?..

இதயம் வரும்..

← Previous All Chapters Next →

1 comment

Oroviyal October 21, 2026 - 1:10 pm

ஹாய் நான் 🫵🏻 ஓரோவியள்.
இந்த தளத்திற்கு புதிய முகம். போட்டி கதையா இந்த கதை எழுதுறேன். 👩🏻‍💻
உங்களோட அன்பையும், ஆதரவையும் எதிர் நோக்கி காத்திருக்கிறேன். 🤗
என் கதையை படித்து விட்டு உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை விமர்சனங்களாக இங்கே கொடுக்கவும். 😌

Leave a Comment

error: Content is protected !!