New member
- Joined
- Jan 15, 2026
- Messages
- 20
- Thread Author
- #1
9.2
“சாரி டியர். உங்க அம்மாகிட்ட நான் பேசலாமா?" என்று சிரித்த முகத்துடன் கேட்டாள் ரேஷ்மா.
"அதுக்கு அவசியம் வராது ரேஷ்மா. ஏன்னா என் அம்மா வேற டைப்." என்று பைலை புரட்டிக்கொண்டே அவளை புறக்கணித்தான் கொடி.
"வேற டைப்னா எப்படி!?" என்று தன் ஆள் காட்டி விரலை அவளின் பற்கள் நடுவில் கடித்துக்கொண்டே கேட்டாள் ரேஷ்மா.
"ஜாதகம், நல்ல நேரம், ராசி, பூஜைன்னு என் அம்மா ஒரு லிஸ்ட்டே வச்சிருப்பாங்க ரேஷ்மா. அதெல்லாம் உங்களுக்கு செட் ஆகாது" என்று சிரித்துக்கொண்டே தெளிவாக தன் அம்மாவின் மனதை படம்பிடித்து சொன்னான் கொடி.
"ஓ... இந்த சீரியல் மாமியாரா" என்று ரேஷ்மா முகம் சுழிக்க,
"அவ்ளோ சீன் இல்ல. ஆனா கொஞ்சம் அப்படிதான்" என்று தன் அம்மாவின் மனநிலையை புரிந்து கொண்ட மகனாக இருந்தான் கொடி.
"அப்போ இதுக்கு வேற வழி இல்லையா" என்று சோகமாக கேட்டாள் ரேஷ்மா.
"நான் இங்க வந்து பத்து நாள் தானே ஆகுது. என்னோட நடவடிக்கையில ஏதோ ஒன்று உங்கள கவர்ந்ததால, நீங்க என்னை நேசிக்க ஆரம்பிச்சிருக்கீங்க. பட், இந்த உலகம் ரொம்ப பெருசு. எனக்கானவள் நீங்க இல்லைன்னும் போது, உங்களுக்கானவன் கண்டிப்பா இந்த உலகத்துல பிறந்து இருப்பான். So அந்த லக்கி பெர்சன் வரும் வரைக்கும் காத்து இருங்க" என்று சிரித்து கொண்டே, ஒரு பைலை எடுத்து அங்கிருந்து நகர்ந்தான்.
கொடியின் இந்த விளக்கம் ரேஷ்மாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், இனி அவனை தொல்லை தரக்கூடாது என்று முடிவெடுத்த ரேஷ்மா, அன்றைய தினத்தில் இருந்து அந்த அலுவலகத்திற்கு வருவதை விரும்பாதவள் அவளது வேலையில் இருந்து வெளியேறினாள்.
நாட்கள் கடிகாரத்தில் உள்ள நொடி முள்ளை போல வேகமாக நகர்ந்தது.
கொடிவீரன் வேலையில் இருந்து வரும் முன்னதாகவே மொட்டை மாடியில் உள்ள மல்லி செடிகளை சுத்தம் செய்து, நீர் ஊற்றி, தன் கடமைகளை முடித்துக்கொண்டு, அவன் கண்ணில் படாமல் உலா வந்தாள் மகிழினி.
காலை, இரவு என்று இரண்டு வேளை உணவையும் வேணுவுடன் சேர்ந்து பாட்டியின் வீட்டிலேயே சாப்பிட ஒத்துக்கொண்டான் கொடி.
தன் மனைவியின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால், மகிழினியின் அண்ணன் சுரேஷ், சில நாட்களாக பாட்டியை பார்க்க வராதவன் கைபேசி மூலமாக, இவர்களுடன் பேசுவதை வாடிக்கையாகக் கொண்டு இருந்தான்
காலையில் இருந்து இரவு வரை, தன் வாழ்வில் நடக்கும் எல்லா நிகழ்வுகளையும், தன் உடன் பிறப்பான சசியிடம் கைபேசி வாயிலாக தெரியப்படுத்திய பின் தான் உறங்க செல்வான் கொடி.
அன்றைய தினம் பாட்டியின் வீட்டிற்கு, மகிழினியின் கணவன் வீரன் வளர்ந்த ஆஸ்ரமத்தில் இருந்து வந்த பெரியவர் பழனி, மகிழினியைக் காண வந்திருப்பதை அறிந்து கொண்ட பாட்டி, கோவமாக அவர் அறையில் இருந்து வெளியே வந்தார்.
"நீங்க ஏன் இப்போ இங்க வந்திங்க? உங்கள தயவு செய்து கேக்குறேன் இனி என் பேத்தியை பாக்க வராதீங்க" என்று கோவமாக பாட்டி கத்தியதும்,
"நான் சித்ரா பாப்பாகிட்ட ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லிட்டு போயிடுறேன்மா" என்று வருத்தமாக சொன்னார் பழனி
"இங்க பாருங்க. நான் சொல்றேன்னு நீங்க கோச்சுக்கிட்டாலும் பரவாயில்ல. இனிமேல் என் பேத்தியை பார்க்க நீங்க வராதீங்க. என் பேத்திக்கு நான் மறுமணம் செய்து வைக்கப் போராடிக்கிட்டு இருக்கேன். ஆனா, அவ என்னடானா இறந்து போன வீரனையே நெனச்சுக்கிட்டு இருக்கா. என் உயிரைக் கொடுத்து வீரனை உயிரோடு அழைச்சிட்டு வர முடியும் என்று ஒரு விதி இருந்தால், கண்டிப்பா நான் என் உயிரை கொடுப்பேன். ஆனா, அது முடியாத பட்சத்திலே என் பேத்தியின் வாழ்க்கை நல்லா இருக்கனும்னு நான் நினைக்கிறதுல தப்பு இல்ல. புரியுதா உங்களுக்கு? தயவுசெய்து இனிமேல் வீரன் சம்பந்தப்பட்ட ஆட்கள் யாரும் என் பேத்தியை பார்க்க வராதீங்க. இப்போ நீங்க வெளியே போகலாம்" என்று பாட்டி தன் பேத்திக்கு மறுமணம் செய்து வைக்க வேண்டும் என்ற தீர்க்கமான முடிவில் இருந்தபடியால், பழனியை வீட்டை விட்டு வெளியே துரத்தினாள்.
பாட்டியின் இந்த பேச்சை சற்றும் எதிர்பார்க்காத பழனி, வருத்தமாக அந்த வீட்டில் இருந்து வெளியே வந்தவரின் எதிரில் வந்து நின்ற மகிழினி,
பழனியை மாடியில் உள்ள மல்லிப்பூ செடிகளின் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றாள்.
"என்னப்பா பாட்டி அப்படி பேசினத நினைச்சு கவலைப்படுறீங்களா? அவங்க கொஞ்ச நாளாவே இப்படி தான் இருக்காங்க. உங்க மனசு கஷ்டப்படுற மாதிரி அவங்க பேசி இருந்தா நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்." என்று தன் இரு கரங்கள் கூப்பி பழனியிடம் மன்னிப்பு கேட்டாள் மகிழினி.
"ஐயோ இல்லம்மா. பாட்டியுடைய தரப்புல அவங்க பேசுறது நியாயம் தான். எனக்கு அவங்க மேல கோவம் எல்லாம் இல்ல" என்று தன் வருத்தத்தை மறைத்துக் கொண்டு பேசினார் பழனி
"சரிப்பா என்ன இவ்வளவு தூரம் வந்து இருக்கீங்க? ஏதாவது முக்கியமான விஷயமா?" என்று பழனி வந்த விஷயத்தை கேட்டுத் தெரிந்துகொள்ள நினைத்தாள்.
"இல்லம்மா அது வந்து” என்று தன் வார்த்தையை மென்று விழுங்கினார் பழனி.
"என்ன அப்பா இன்சூரன்ஸ் பணம் பத்தி ஏதாவது கேட்கணுமா?என்னன்னு தெரியல அந்த ஆபீஸ்ல இருந்து இன்னும் நல்ல செய்தி வரல/ அநேகமா அடுத்த வாரம் பணம் கிடைச்சுரும்னு நினைக்கிறேன்" என்று சொன்ன மகிழினியின் முன் கண்கள் கலங்கி நின்றிருந்தார் பழனி.
"என்னப்பா எதுக்கு கண் கலங்குறிங்க? வேற ஏதாவது பிரச்சனையா?" என்று பதற்றத்துடன் கேட்டாள் மகிழினி
"பிரச்சனை எல்லாம் இல்லம்மா. நாளையோட வீரன் இறந்து ஒரு வருஷம் ஆகப்போகுது. அவனுக்கு திதி கொடுக்கணும். அதைப் பத்தி பேச தான் நான் இங்கே வந்தேன்" என்று கண்கள் கலங்கினார் பழனி
"அப்பா! என்னைப் பொறுத்தவரை அவர் சாகல. அவர் என்னுடன் தான் இருக்காரு. ஆனா, அவருடைய ஆத்மா சாந்தி அடையனும்னா, அந்த சடங்கை எல்லாம் செய்யணும்னு ஏற்கனவே நீங்க என்கிட்ட சொன்னது எனக்கு நினைவிருக்கு. நேத்தே நான் பக்கத்து தெருவுல இருக்குற கோவில்ல ஐயர் ஏற்பாடு பண்ணிட்டேன். நாளைக்கு காலையில நீங்க அங்க வந்துடுங்க. என் வீராவுக்கு அப்பா ஸ்தானத்துல நீங்களே உங்க கையால திதி கொடுக்கலாம்" என்று மகிழினி சொன்னதும் பழனி தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.
மகிழினி தலையில் தன் கரங்களை வைத்து "நீ நல்லா இருக்கணும்மா. உன்னுடைய பாட்டியின் ஆசையும் கூடிய சீக்கிரமே நிறைவேறனும். அப்போதான் உன் கணவனுடைய ஆத்மாவும் சாந்தி அடையும். சரி நாளைக்கு காலைல பத்து மணிக்கு நான் கோவில்ல சந்திக்கிறேன்" என்று சொன்ன பழனி வீட்டில் இருந்து வெளியேறினார்.
மகிழினிக்கு தன் பாட்டியின் மீது கோபம் இருந்தாலும், அவரது மனநிலையில் இருந்து யோசித்தவள், இந்த பிரச்சனையை பெரிதாக்காமல் அன்றைய தினத்தை கடந்தாள்.
மறுநாள் காலை எப்பொழுதும் போலவே மகிழினி கேண்டினுக்கு கிளம்பியவள், அங்கே வேலைகளை முடித்த பிறகு கோவிலுக்குச் சென்று, தன் கணவன் வீராவை வளர்த்த பழனியின் வருகைக்காக காத்திருந்தாள்.
நேரம் காலை 11 மணியான பின்னரும் பழனி கோவிலுக்கு வராத நிலையில், மகிழினியிடம் கைபேசி இல்லாத காரணத்தால், பழனியை தொடர்பு கொள்ள முடியாத நிலமையில், குழம்பி போய் நின்று இருந்தாள் மகிழினி.
"ஏன்மா எனக்கு நேரமாகுது. நான் வீட்டுக்கு போகணும். உன் புருஷனுக்கு திதி கொடுக்க யாராவது வருவாங்களா மாட்டாங்களா" என்று ஐயர் வார்த்தையில் கோவத்தை வெளிப்படுத்தினார்.
"இல்லிங்க. என் கணவரோட அப்பா வரேன்னு சொன்னாரு. ஆனா, ஏன் வரலைன்னு தெரியல" என்று பதறினாள் மகிழினி
"நேரமாகுதுமா. இதுக்கு மேல நேரம் கடந்தா இந்த சாங்கியத்தை பண்ணக்கூடாது. இன்னும் அரை மணி நேரத்துல அவரு வந்தா பாரு. இல்லையா இன்னொரு நாள் பண்ணிக்கலாம்" என்று ஐயர் சொன்னதும், ஐயரின் எதிரில் சம்மணம் போட்டு அமர்ந்தாள் மகிழினி.
"அவர் வரலைன்னா என்ன? என் புருஷனுக்காக நானே எல்லா சடங்கையும் பண்றேன். நீங்க மேற்கொண்டு ஆக வேண்டிய வேலையை பாருங்கள்" என்று ஒரு முடிவோடு சொன்னாள் மகிழினி.
"என்னம்மா சொல்ற? பொம்மனாட்டிகள் எல்லாம் இந்த சடங்க பண்ணக்கூடாது. உன் ஆம்படையான் கூட பிறந்த உடன்பிறப்பு யாராவது இருந்தா பண்ணலாம். இல்லையா உனக்கு புள்ள குட்டி இருந்தா பண்ணலாம், அப்படி இல்லையா உன் புருஷனைப் பெத்த அப்பா இருந்தா பண்ணலாம், மத்தபடி பொம்மனாட்டிகள் எல்லாம் இந்த சடங்கை பண்ணக்கூடாதுமா" என்று தெளிவாக சொன்னார் ஐயர்.
"என் கணவர் கூட பிறந்த உடன் பிறப்பு எல்லாம் யாரும் இல்லிங்க. அதான் அவருக்கு எல்லாமுமா நான் இருக்கேன் இல்ல அது போதும். நீங்க ஆக வேண்டியதைப் பாருங்க. நானே என் வீராவுக்கு எல்லா சடங்கையும் பண்றேன்" என்று திட்டவட்டமாக சொன்னாள் மகிழினி
"பொம்மனாட்டிங்க இதெல்லாம் பண்ணக்கூடாது. அப்படி மீறி நீ தான் பண்ணுவேன்னு சொன்னா, என்னால என்ன பண்ண முடியும். சரி எனக்கு என்ன வந்துச்சு?" என்று புலம்பிக் கொண்டே சில சாங்கியத்தை செய்த ஐயர் பிண்டங்களை ஒரு தட்டில் வைத்து மகிழினியிடம் தந்தார்.
"அதோ பாருமா. அங்க தெப்பக்குளம் இருக்கு இல்ல. அங்க போய் இந்த பிண்டதை கரைச்சிடு" என்று ஐயர் சொன்னதும் மகிழினி அவர் தந்த பிண்டதை எடுத்துக்கொண்டு குளத்தின் படியில் இறங்கியவள், கால் தடுக்கி கீழே விழுந்த வேகத்தில், அவள் கையில் இருந்த பிண்ட உருண்டைகள் உருண்டோடி கொடிவீரனின் காலின் கீழ் விழ,
அந்த பிண்டதை கையில் எடுத்த கொடியும், அதை கீழே தவற விட அந்த பிண்டங்கள் கொடி வீரனின் கையில் இருந்து கீழே விழுந்து, தெப்பக்குளத்தில் கரையும் காட்சியை பார்த்து மகிழினியின் கண்கள் அகலமாக விரிந்தது.
"உன் புருஷனே இந்த தம்பியை அவரோட உடன் பிறந்த சகோதரனா ஏத்துகிட்டாரு போலமா. அதான் அவர் கையால உன் புருஷனுக்கு இன்னைக்கு சடங்கு நடந்து முடிந்து இருக்கு" என்று மனநிறைவோடு ஐயர் சொல்ல,
வெள்ளை வேஷ்டியுடன் தன் மார்பின் மீது வெள்ளை துண்டை போர்த்திக் கொண்டு, நெற்றியில் பட்டையுடன் நின்று இருந்த கொடிவீரன், தெப்பக்குள்ளத்தில் நின்றபடி மகிழினியை குழம்பிய வண்ணம் பார்த்து கொண்டு இருந்தான்.