Member
- Joined
- Jan 15, 2026
- Messages
- 89
- Thread Author
- #1
விவாதக் காதல்
விவாதம் – 44
“இங்க பாரும்மா. என் மாறன் என்னை நல்லா தான் பாத்துக்குறாரு” என்றாள் மகி.
“அடியே வக்கீலுக்கு படிச்சும், வாழ்க்கையை தொலைத்த என் அருமை மகளே. நல்லா பார்த்துக்குறதுனா நீ போகும்போதும், வரும்போதும் உன்னையே பார்த்துகிட்டு இருக்குறதுக்குப் பெயர் நல்லா பார்த்துக்குறது இல்ல. உன்மேல அன்போடு காதலா பார்த்துக்கணும். அதுக்கு பெயர்தான் நல்லா பார்த்துக்குறது.”
“அத்தை” என்று மாறன் இடையிட,
“வாயை மூடுடா. ஏதோ என் மக கழுத்துல தாலி கட்டிருக்கனு பாக்கறேன். இல்லைனு வை...”
“உங்க புருஷனை பழனிக்கு அனுப்பி வச்ச மாதிரி, என்னையும் அனுப்பி வைச்சிடுவீங்களா?”
“ஏய் அவரை பற்றி எல்லாம் நீ பேசாத.”
“அவர பற்றி நீங்களே பேசுறது இல்ல” என்றான் பதிலுக்கு.
“ஐயோ மாமா கொஞ்சம் சும்மா இரு.” என்றாள் மகி.
“இப்போ என்ன நான் உன் அம்மா தலையில பேனா பார்த்துகிட்டு இருக்கேன். சும்மா இருனு சொல்ற.”
“ஆமா இந்த வாய்க்கு ஒன்னும் குறை இல்ல. புருஷனா லட்சணமா வேலைக்கு போய், என் மகளை காப்பாத்தாம, அவ சம்பாதிப்பாலாம். இவரு கபடி ஆடிக்கிட்டு சுத்திகிட்டு இருப்பாராம். இவர் கெட்டக்கேடுக்கு நான் இவர பார்த்ததும் மாப்பிளன்னு தூக்கி மடியில வச்சி கொஞ்சணுமாம்” என்று கீதா நக்கலாக பேச,
“அம்மா” என்று அதட்டினாள் மகி.
“இப்போ என்ன உங்க பிரச்சனை? நான் கபடி ஆடுறது தான் உங்க பிரச்சனையா?”
“ஆமா நீங்க கபடி விளையாட போறது எனக்கு பிடிக்கல. நான் இவ அப்பாகிட்ட சொல்லி நீங்க படிச்ச படிப்புக்கு ஒரு அரசாங்க வேலை வாங்கி தர சொல்லுறேன். இந்த கபடி காத்தாடி எல்லாம் ஏரகட்டிட்டு வேலைக்கு போய் என் பொண்ணை காப்பாத்துற வழியை பாருங்க.”
“அப்படி இல்லைனா?”
“நான் என்னைக்குமே உங்கள என் மருமகனா ஏத்துக்க மாட்டேன். நீங்களும் என்னை இனி அத்தைன்னு கூப்பிடக்கூடாது” என்றார்.
“அம்மா” என்று மகி அலற,
“அத்தை என்ன இதெல்லாம்? ஏன் இப்படி பேசுறீங்க?” என்று கொடிவீரன் கேட்க,
“ஹ்ம் சரி மகி. நான் கிளம்புறேன். நீ வரியா இல்ல இங்க இருந்துட்டு வர போறியா?”
“நானும் வரேன் மாமா” என்றாள் அவள்.
“ம்... சரிடா தம்பி. நான் கிளம்புறேன். நேரம் இருக்கும்போது உன் பொண்டாட்டியை கூப்பிட்டுக்கிட்டு பாண்டிச்சேரிக்கு வா.” என்றான் மாறன்.
“அண்ணா இருங்க. இப்போ தானே வந்திங்க. அதுக்குள்ள எங்க கிளம்பிட்டிங்க?”
“நம்ம டீம் பசங்களுக்கு ட்ரைனிங் தரணும்டா. நான் கிளம்புறேன்.”
“மேட்ச் எப்போ?”
“நாளைக்கு ஈவினிங்.”
“அப்போ ரெண்டு நாள் அண்ணி உங்க கூடதானே இருப்பாங்க.”
“ம்... ஆமாடா. அவ என்னை விட்டு எங்க போக போறா.”
“அப்போ அண்ணி இங்க இருக்கட்டும். நீங்க போய் டீம் பசங்க கூட இருங்க. நான் நாளைக்கு வேலை முடிச்சிட்டு அண்ணியை மேட்ச் நடக்குற இடத்துக்கு அழைச்சிட்டு வரேன்.”
“ஐயோ வேணாம் கொழுந்தனாரே. என் மாறனுக்கு மரியாதை இல்லாத இடத்துல நானும் இருக்க மாட்டேன். நாங்க கிளம்புறோம்.” என்றதில் கீதா விழிக்க, அங்கிருந்த மகிழினியைப் பார்த்தவள், “இவங்க தான் உன் பொண்டாட்டியா? ஹாய்மா” என்றாள்.
“வணக்கம்ங்க” என்று மகிழினி சொல்ல,
“சாரி. நாங்க உங்களுக்கு வாழ்த்து சொல்ல தான் வந்தோம். பட் வந்த இடத்துல எங்க பர்சனல் ப்ராப்ளம்ல உங்கள கண்டுக்க முடியல.”
“அச்சோ இல்லங்க. பரவாயில்ல.”
“சரிடா தம்பி. நாளைக்கு ப்ரீயா இருந்தா மேட்ச் பார்க்க வா.”
“ம்... ட்ரை பண்ணுறேன் அண்ணா.” என்றான் கொடிவீரன்.
“என்ன கொழுந்தனாரே கபடி களமே கதின்னு படுத்து இருந்த காலம் எல்லாம் மறந்து போச்சா. இப்போ நேரம் இருந்தா வரேன்னு சொல்லுறீங்க.” என்று கிண்டலாகக் கேட்டாள் மகி.
“என் சின்ன மாப்பிளை வாழ்க்கைக்கு எது தேவையோ அதில் சரியா இருக்கார். மத்தவங்க மாதிரி கபடி கதகளினு இவரு ஊர் சுத்திகிட்டு இருந்தா, இன்னைக்கு இவரால இவரோட அக்காவுக்கு கால்யாணம் பண்ணி வச்சிருக்க முடியுமா?”
“ஐயோ அதெல்லாம் இல்ல அத்தை. கால மாற்றம் எனக்கு மட்டும் விதிவிலக்கா என்ன? அப்போ ஒரு டைம்ல சோறு தண்ணி இல்லாம கபடி களத்துல காட்டுத்தனமா துள்ளி குதிச்சுகிட்டு இருந்ததை, இப்போ நினைச்சாலும் மனசுக்கு தெம்பா தான் இருக்கு. ஆனா, என்ன பண்ண அம்மாவுக்கு பிடிக்கலன்னு சொல்லும்போது, நம்ம விருப்பு வெறுப்பை எல்லாம் தள்ளி வைக்க வேண்டியதா தானே இருக்கு” என்றான் கொடிவீரன்.
“நீ தான்பா தங்கமான பிள்ள.”
“ஆமா அவன் தங்கம் தான். அவனை அப்படியே மோதிரம் செய்து உங்க காதுல மாட்டிக்கோங்க” என்று மாறன் சொல்லவும் கீதா முறைக்க, “மகி வா போகலாம்” என்றான்.
“இருங்க சாப்பிட்டு போகலாம்.” மகிழினி அழைக்க,
“இல்லமா பரவாயில்ல. நாங்க இன்னோரு நாள் வரும்போது சாப்பிட்டுட்டு போறோம்.”
“அண்ணா மேட்ச் முடிஞ்ச பின்னாடி நீங்க நம்ம வீட்டுக்கு வந்து ரெண்டு நாள் தங்கிட்டு தான் போகணும்.”
“ம் பாப்போம்டா. கீதா போயிட்டு வரேன்” என்று மாமியாரை வம்பிழுத்தான்.
“ஏய் என்ன திமிரா?”
“நீங்க தானே உங்கள அத்தைன்னு கூப்பிட வேணான்னு சொன்னிங்க. அதான் அப்படி கூப்பிட்டேன். ஹான் அப்புறம் முக்கியமான விஷயம். வயசான காலத்துல தம் கட்டிக்கிட்டு அதிக வசனம் எல்லாம் பேசாதீங்க. அப்புறம் உங்களுக்கு எதாவது ஒன்னுனா, உங்க மாப்பிள்ள நான்தான் ஓடி வரணும்.”
“டேய் எனக்கு எல்லாம் ஒன்னும் ஆகாதுடா. நீ போய் ஒழுங்கா கதகளி ஆடு போ” என்றார்.
“ம்... உன் அம்மாவுக்கு கிண்டல் ரொம்ப அதிகம்தான் மகி.”
“உங்களுக்கு மட்டும் என்ன கம்மியாவா இருக்கு.”
“எனக்கு எதுமே கம்மி இல்லடி. உன் மேல இருக்குற காதலையும் சேர்த்து.”
“எதாவது பேசுனா அழகா பேசி வாயை அடச்சீடுவிங்க.” என்று குரலை இறக்க,
“பேசி மட்டும் தானா உன் வாயை நான் அடைச்சு இருக்கேன்.” அவன் கேலி பேச,
“ம்... போதும் போகலாம் மாமா.” மாறன் தன் மனைவியுடன் வெளியே செல்ல,
கோவமாக சோபாவில் அமர்ந்த கீதாவின் கண்கள் கலங்குவதை பார்த்த மகிழினி, “அம்மா என்னாச்சு ஏன் அழறீங்க?” என்று கேட்டாள்.
“அத்தை இப்போ என்ன மாறன் அண்ணன் பேசுனத நினைத்து அழறீங்களா?”
“இல்ல மாப்பிள்ள. என் மக இன்னைக்கு சந்தோஷமா தான் இருக்கா. ஆனா, இவன் இப்படி கபடி கபடின்னு சுத்திகிட்டு இருந்தா, அவளுக்கு எங்க இருந்து இந்த சந்தோஷம் நிலைக்கும் சொல்லுங்க?”
“இவங்க என்ன சொல்லுறாங்க?” என்று மகிழினி புரியாது கேட்க,
“அத்தை உங்க பயம் எனக்கு புரியுது. ஆனா, நீங்க பயப்புடுற மாதிரி எல்லாம் ஒன்னும் ஆகாது. நீங்க வாங்க நம்ம போய் சாப்பிடலாம். ஆமா பாட்டி எங்க?”
“பாட்டி பக்கத்து தெருவுக்கு சீட்டு கட்ட போயிருக்காங்க” என்றான் வேணு.
“சரி அவங்க வரும்போது வரட்டும் அத்தை. நீங்க வாங்க நம்ம சாப்பிடலாம்.”
“இல்ல மாப்பிள்ள. எனக்கு மனசு சரியில்ல. நான் கோவிலுக்கு போயிட்டு வந்து சாப்பிடுறேன்.”
“சரி இருங்க. நான் வண்டியில அழைச்சிட்டு போறேன்.”
“இல்ல மாப்பிள்ள. நான் நடந்தே போய்ட்டு வரேன்” என்றான்.
“பாட்டி இருங்க. நானும் வரேன்” என்றதும் வேணுவை கோவிலுக்கு அழைத்துச் சென்றார்
“ஆமா ஏன் உங்க அத்தை இவ்ளோ எமோஷனல் ஆகுறாங்க? ஏன் கபடி ஆடுறது அவ்ளோ பெரிய குத்தமா?”
“ஐயோ இல்ல. இல்லிங்க. கபடி விளையாட அதிக சக்தியும் திறனும் இருக்கனும். கபடி விளையாடும் போது தல, கண்ணு, கால், கைன்னு எங்க வேணா அடிபட வாய்ப்பு இருக்கு. ஏன் ஒரு சிலவங்களுக்கு உயிரே போய் இருக்கு...”
“ஐயோ” என்று அலறினாள்.
“ம்... அப்படி ஒருமுறை நாங்க விளையாடும் போது, எங்க பங்காளி ஒருவர் கபடி களத்துலேயே வீர மரணம் அடைஞ்சுட்டாரு. அதுல இருந்து எங்க அம்மா என்னை கபடி பக்கமே அனுப்பமாட்டேன்னு சொல்லிட்டாங்க. ஆனா, மாறன் அண்ணன் மட்டும் இப்போ வரை எல்லா போட்டியிலும் கலந்துகிட்டு இருக்கார். இன்னும் கேட்டா அண்ணன் கபடி ஆடுற திறமையை பார்த்துதான், மகி அண்ணி அவர லவ் பண்ணி மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க. ஆனா, அண்ணன் தொடர்ந்து கபடி ஆடுனா அவருக்கு எதாவது ஆகிடுமோன்னு அத்தைக்கு பயம்.” என்றான்.