Member
- Joined
- Jan 15, 2026
- Messages
- 77
- Thread Author
- #1
விவாதம் – 37
கோவில் மணி விழுந்ததால் வனிதா, நாராயணன் இருவரையும், அவர்களின் விசுவாசிகள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
கோவிலில் ஐயர் சொன்ன சாங்கியங்களை செவ்வன செய்து முடித்த இரண்டு ஜோடியும், சில மணி நேரத்தில் கோவிலை விட்டு வெளியேற,
“சம்மந்தி முறைப்படி மாப்பிளையும் பெண்ணையும் எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போய் பால்பழம் எல்லாம் தரணும். ஆனா, என் புருஷனும் அவரோட அக்காவும் இப்போ ஹாஸ்பிடல் போய் இருக்குற நிலைமையில, என்னால இந்த சடங்குகளை எல்லாம் பண்ணமுடியாது. அதனால, நீங்களே உங்க வீட்டுக்கு இவங்கள அழைச்சிட்டுப் போய், அங்க என்ன முறை பண்ணனுமோ அதை எல்லாம் பண்ணிடுங்க. எப்படி இருந்தாலும், சிவா அவன் பொஞ்சாதி கூட மும்பையில தான் வாழ போறான். அவன் ஊருக்கு போறவரைக்கும் உங்க வீட்டுலயே இருக்கட்டும்” என்று ஆண்டாள் சொல்ல,
“அக்கா. ஏன் இப்படி எல்லாம் பேசுற? நான் எப்படி சசி வீட்டுல” என்று தயங்கினான் சிவா.
“தப்பு இல்லடா. இனி உன் மாமியார் தான் உனக்கு அம்மா மாதிரி. நம்ம இதுவரை உன் மாமனை நம்பி எவ்வளவோ அவருக்காக விட்டு கொடுத்து இருக்கோம். ஆனா, அவரு உன் கல்யாணம் நின்னாலும் பரவாயில்ல. அவரோட அக்கா சந்தோசமா இருக்கணும்னு, ரொம்ப கேவலமான விஷயத்தை எல்லாம் பண்ணிருக்காரு.”
“என்னக்கா சொல்லுற?” என்றான் புரியாது.
“என்ன அண்ணி சொல்லுறீங்க?” என்று சசியும் கேட்க,
“ஆமாம்மா. இதோ உன் தம்பி மேலயும், இந்தப் பொண்ணு மேலயும் அபாண்டமா பழி போட்டது அந்த வனிதா தான். அந்த வனிதாக்கு இவர் தான் துணையா இருந்து இருக்காரு.”
“உனக்கு எப்படி தெரியும்கா?”
“இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அந்த வனிதாவும் நாராயணனும் பேசிகிட்டு இருந்ததை நான் கேட்டேன். ஆனா, நல்லவங்களுக்கு நல்லதுதான் நடக்கும் என்பது போல, சசியோட தம்பிக்கு ஊர் கூடி கல்யாணம் நடந்துருக்கு. ஆனா, சாமி பேரை வச்சி விளையாடிய என் புருஷனுக்கும், அந்த ஆளோட அக்காவுக்கும் அந்த கடவுளே நல்ல தண்டனையை கொடுத்துருக்கு.” என்றாள் ஆண்டாள்.
”ஏன்கா மாமா இப்படி இருக்காரு?” என்றான் வருத்தமாக.
“அந்த ஆளு அப்படிதான். சரி. நீங்க நேரத்தோடு கிளம்புங்க. போனதும் எனக்கு போன் பண்ணு. இங்க பிரச்சனை எல்லாம் முடிந்த பின்னாடி நானே உன்னை உன் மாமியார் வீட்டுல வந்து பாக்குறேன். சசி என் தம்பியை பார்த்துக்கோ” என்று தம்பியிடம் பேசி, தம்பி மனைவியிடம் பொறுப்பை ஒப்படைத்தாள்.
“ம்... சரி அண்ணி. நாங்க வரோம்.”
“எப்படியோமா. கடைசியில எல்லாமே நல்லவிதமா முடிந்தது. ரொம்ப சந்தோசம். நாங்க கிளம்புறோம்” என்று ஜெயா சொல்ல,
“ம்... போய்ட்டு வாங்க” என்று ஆண்டாள் இவர்களை வழி அனுப்பி வைத்தாள்.
கீதா, ஜெயா, வேணு, பாட்டி, என்று அனைவரும் வேனில் ஏறிக் கிளம்ப, கொடிவீரன் தன் காரில் அவன் அக்கா, மாமா மற்றும் மகிழினியுடன் வேனை பின் தொடர்ந்தான்.
வழியெல்லாம் எந்த ஒரு சலனமும் இல்லாமல் மகிழினி அமைதியாக வர, காரின் கண்ணாடி வழியே பார்த்த கொடிவீரனின் மனதில், அவள் சிந்தையின் ஓட்டம் என்னவாக இருக்கும் என்ற ஆராய்ச்சியில் இறங்க, சில நிமிடங்களில் இவன் கார் தன் வீட்டு வாசலை சென்றடைந்தது.
வாசலில் நின்ற இரண்டு ஜோடிகளையும் ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அழைத்து வந்தார் கீதா.
சசியின் திருமணத்திற்கு வந்த இடத்தில், தன் பேத்திக்கு கல்யாணம் முடிந்ததை நினைத்து மனதளவில் மகிழ்ச்சி அடைந்தார் மகிழினியின் பாட்டி.
தன் மகன் மனதில் நினைத்த பெண்ணையே மனம் முடித்த சந்தோஷத்தில் அகம் மகிழிந்தார் ஜெயா.
கீதா புதுமண ஜோடிகளுக்கு அவர் கையால் பால் பழம் தந்து. சில சடங்குகளை செய்ய சொல்ல, பெரியவர்களின் எண்ணப்படியே எல்லா சாங்கீயமும் சுபமாக அரங்கேறியது.
"அம்மாடி சித்ரா. நீ வேணும்னா கொஞ்ச நேரம் போய் ரெஸ்ட் எடுத்துக்கோடா” என்று சொன்னதும், மகிழினியின் கண்கள் கொடிவீரனை தேட, அவன் அங்கு இல்லை என்று தெரியவும், பதில் ஏதும் கூறாமல் தன் இருக்கையில் அமர்ந்து இருந்தாள்.
"ஏன் ஜெயா. நம்ம சசியும், மாப்பிள்ளையும் எப்போ மும்பை போகணும்?” என்று கீதா கேட்க,
"நாங்க அடுத்த வாரம் போறோம் அம்மா. அது வர நான் இங்கதான் இருக்கணும் போல” என்று சிவா தயக்கத்துடன் சொன்னான்.
"இதுல என்ன இருக்கு மாப்பிள்ளை. இதுவும் உங்க வீடுதானே. நீங்க ஒரு வாரம்னு இல்ல. எத்தனை வருடம் வேணாலும் இங்கேயே இருக்கலாம்” என்று ஜெயா அன்பாக கூறினார்.
"சிஸ்டர். முதல்ல நீங்க என்னை மன்னிக்கணும். என் மாமா பண்ண கேவலத்தால உங்களுக்கு தான் சங்கடம். ப்ளீஸ் என்னை மன்னிடுங்க” என்று மனமார மகிழினியிடம் மன்னிப்பு கேட்டான் சிவா.
"ஆமா சித்ரா. நீ முழு மனசோடு இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லலைன்னு எங்க எல்லோருக்கும் தெரியும். ஆனா, காரண காரியம் இல்லாமல் இங்க எதுமே நடக்குறது இல்ல. அதேபோல தான் உனக்கு இன்னைக்கு நடந்த கல்யாணமும். அதனால நீ எதையும் மனசுல போட்டு குழப்பிக்காம, என் தம்பி கூட சேர்ந்து இனிமே நல்லதொரு வாழ்க்கையை நீ அரம்பிக்கணும்” என்ற சசி மகிழினியின் கரங்களை பிடித்து அவளுக்கு அறிவுரை கூறினாள்.
‘யார் என்ன சொன்னால் என்ன. நான் கல்யாணத்துக்கு முன்னதாகவே கேவியிடம் தெளிவாக என் மனதில் உள்ளதை பேசிவிட்டேன். இனி ஊருக்கு போய் நான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும்’ என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தாள் மகிழினி.
"அம்மாடி சித்ரா. நீ வா. உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்” என்று சொன்ன ஜெயா, தன் மருமகளின் கையைப்பிடித்து கேவியின் அறைக்குள் அழைத்து செல்ல, அங்கே ஜன்னல் வழியே தெரியும் மரக்கிளைகளில் கொஞ்சி விளையாடும் புறாவினை ரசித்தபடி நின்று இருந்தான் கொடிவீரன்.
"டேய்! தம்பி. நீ இங்க தான் இருக்கியா” என்று கேட்டுக்கொண்டே ஜெயா, மகிழினியுடன் அறைக்குள் நுழைய, தன்னவளின் கவிதை பேசும் கண்கள், ஊமை விழிகளாக மாறி இருந்ததைக் கண்டு இவனும் மௌனம் காத்தான்.
"சித்ரா இங்க வந்து உக்காருடா. தம்பி நீயும் இங்க வந்து உக்காரு” என்று ஜெயா சொன்னதும், இவர்கள் இருவரும் கட்டிலின் விழும்பில் ஆளுக்கொரு மூலையில் அமர, ஜெயா பெருமூச்சிவிட்டார்.
"சித்ரா. நீ இன்னைக்கு எடுத்த ஒரு நல்ல முடிவால தான் என் மக கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுது. அதுக்கு முதல்ல நான் உனக்கு நன்றி சொல்லிடுறேன்” என்று தன் காரங்கள் கூப்பிய ஜெயாவை,
"ஐயோ அம்மா என்ன காரியம் பண்றீங்க” என்று பதற்றதுடன் தடுத்தாள் மகிழினி.
"இல்லமா. உன்னோட மனநிலை என்னனு எனக்கு நல்லாவே தெரியும். என் மகளோட கல்யாணத்துக்கு வந்த உன் கழுத்துல, இன்னைக்கு என் மகன் கட்டிய தாலி தொங்குதுனா, கண்டிப்பா இதெல்லாம் அந்த ஈசன் அருளால் மட்டுமேதான். ஆனா, இந்த உண்மையை புரிஞ்சிக்க கண்டிப்பா உனக்கு கால அவகாசம் தேவைப்படும். இன்னைக்கு முறைப்படி உங்க ரெண்டு பேருக்கும் இந்த வீட்டுல முதல் இரவு ஏற்பாடு பண்ணனும்” என்றதும் மகிழினி அதிர, கொடிவீரன் யோசனையாய் இருந்தான்.
"ஆனா, நாங்க அதெல்லாம் பண்ண போறது இல்ல. கெட்டதாக நினைத்து அந்த வனிதா பண்ண ஒரு காரியம், இன்னைக்கு எங்களுக்கு நல்லதா நடந்து இருக்கு. ஆமாம்மா. உன்னை என் மகனுக்கு பொண்ணு கேட்கணும்னு நானே சசிகிட்ட சொல்லிக்கிட்டு தான் இருந்தேன். ஆனா, இப்போ பாரு. என் ஆசையை அந்த ஈசனே நிறைவேற்றி வச்சிட்டாரு.
சரி. அதெல்லாம் விடு. நீ என் மகன் கூட நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழனும். ஒருவரை ஒருவர் நீங்க இப்படிதான்னு புரிஞ்சிகிட்டு, நல்ல விஷயத்துக்காக மட்டும் உங்களை மாத்திகிட்டு நீங்க சந்தோசமா இருக்கனும்” எனவும் மகிழினி உள்ளூர கலங்கிப்போய் இருந்தால்.
“எனக்கு என் மகனை பற்றி நல்லாவே தெரியும். அவன் எங்க எப்படி நடந்துக்கணுமோ அப்படி நடந்துப்பான். எனக்கு உன்னை நினைத்தா தான் பயமா இருக்கு. எனக்கு நீங்க சந்தோஷமா இருக்கனும் அவ்வளவுதான். எனக்கு அந்த ஒரு வாக்குறுதியை மட்டும் நீங்க தந்தாபோதும்” என்று ஜெயா சொன்னதும், அன்பாக ஜெயாவின் கரங்களை பிடித்த மகிழினி கண்களில் கண்ணீர்த் துளி எட்டிப் பார்க்க, தன் முந்தனையை கொண்டு அவள் கண்ணீரை துடைத்த ஜெயா,
"இனி நீ எதுக்காகவும் அழக்கூடாது. உனக்காக இனி எல்லாமுமா என் மகன் இருப்பான். இல்ல இல்ல உன் புருஷன் உன்கூட இருப்பான். நீ மறுபடியும் இந்த வீட்டுக்கு வரும்போது. மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு தான் வரணும்” என்றவர் மகிழினியின் நெற்றியில் இதழ் பதித்ததோடு, தன் மகனின் உச்சந்தலையில் முத்தமிட்டு வெளியே செல்ல, அறை முழுதும் நிசப்தம் நிலவியது.
முதலில் யார் மௌனத்தை கலைப்பது என்ற இருவர் மனதிலும் எழுந்த கேள்விக்கு விடையாக கேவி யின் கைபேசி சிணுங்கி இசைபாட, அழைப்பைத் துண்டித்த கொடிவீரன், தன் அறையில், தன்னுடைய கட்டிலில், தான் ஆசை கொண்ட மங்கை மௌனமாக அமர்ந்து இருப்பதைக் கண்டு, ஒரு பக்கம் ரசித்தாலும், மறுபக்கம் அவளின் மனநிலையை உணர்ந்துதாம் இருந்தான்.
"ஏங்க” என்று கேவி அழைத்ததும்.
"ப்ளீஸ் கேவி. என்னை இங்க இருந்து என் வீட்டுக்கு அழைச்சிட்டு போறிங்களா. எனக்கு மூச்சு முட்டுற மாதிரியிருக்கு. உங்களை கெஞ்சி கேக்குறேன். எதுவா இருந்தாலும் நம்ம அங்க போய் பேசிக்கலாம். ப்ளீஸ்ங்க” என்றவள் கண்கள் கலங்கி அவனை நேர்கொண்டு பார்க்க இயலாமல் தன் பார்வையை தரையில் பதித்து இருந்தாள்.
"இப்போவா?” என்று இவன் கேட்டதும்,
“ம்... ப்ளீஸ்” என்று அவள் மீண்டும் கெஞ்சிய வண்ணமே அவனை பார்க்க,
சில நொடிகள் அவள் நிலையில் இருந்து யோசித்தவன், "ஹ்ம்... சரி. நான் அம்மாகிட்ட பேசுறேன். நீங்க அழாதீங்க. நம்ம இன்னைக்கே ஊருக்கு போகலாம்” என்று வாக்குறுதி கொடுக்க, மகிழினியின் இதயத்தில் அப்போது தான் சீரான ரத்த ஓட்டம் பாய்ந்தது.