Member
- Joined
- Jan 15, 2026
- Messages
- 67
- Thread Author
- #1
விவாதம் – 33
"என்ன சசி. என்னாச்சு? இங்க என்ன ப்ராப்ளம்?” என்று சிவா சசியிடம் விசாரித்தான்.
"என்னன்னே தெரியல. அதோ அங்க நிக்கிறாறே அவரு தான், கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நாங்க தங்கி இருக்குற வீட்டுக்கு வந்து, என் தம்பியும் சித்ராவும் கோவில் ரூம்ல...” என்று வார்த்தையை சொல்ல முடியாமல் தவித்து நின்றாள்.
சசி பேசியதை காதில் வாங்கிய கொடிவீரன், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று புரியாமல் தன் மீது கை வைத்த நபரை தடுக்கப்போக, இன்னொருவன் மகிழினியின் முன் வந்து நின்றான்.
"இந்தாமா. நீ எல்லாம் பொம்பளையா. நல்ல குடும்பத்துல பிறந்து இருந்தா இப்படி ஒரு கேவலத்தை பண்ணிருப்பியா? ச்சீ... இந்த வேலை பாக்குறதுக்கு நீ போய் பிச்சை எடுத்து பிழைக்கலாம். உங்க உடம்பு சுகத்தை தீர்த்து கொள்ள, உங்களுக்கு கோவில் தான் கிடைச்சுதா” என்று அந்த நபர் கேட்டதும், தன் காலரைப் பிடித்து இருந்தவனை கீழே தள்ளிவிட்ட கொடிவீரன், மகிழினியை தவறாகப் பேசிய அந்த நபரின் கன்னத்தில் ஒரு அறை கொடுக்க, மகிழினியின் கண்களில் கண்ணீர் மட்டும் வற்றாத ஜீவநதியாக பெறுகிக்கொண்டு இருந்தது.
"ஏய், என்ன தைரியம் இருந்தா, இப்படி ஒரு கேவலமான செயலை பண்ணிட்டு என் மேலேயே நீ கை வைப்ப” என்று அவன் எகிற,
"டேய்! நிறுத்துங்க. என்ன பிரச்சனை இங்க? எதுக்காக நைட்டு ஒரு மணிக்கு பஞ்சாயத்தை கூட்டி இருக்கிங்க? விடிந்தால் என் மச்சான் சிவாவுக்கு இந்த கோவில்ல கல்யாணம் நடக்கப்போறது உங்களுக்கு எல்லாம் தெரியுமா இல்லையா?” என்று கேட்ட நாராயணன் வெளி வேஷம் போட்டான்.
"ஐயா! நீங்க என்னங்க. இவங்கனால நம்ம கோவில் புனிதமே கெட்டு போச்சுன்னு நாங்க சொல்லுறோம். நீங்க என்னடானா கல்யாணம் காட்சியை பற்றி பேசுறீங்க” என்று அந்த ஒருவன் சொல்ல,
இவர்கள் போட்ட திட்டம் நிறைவேறிக்கொண்டு இருப்பதை நினைத்த வனிதா மனம் சந்தோஷத்தில் துள்ளியது.
"என்ன சொல்லுறீங்க? அப்படி என்ன இவங்களால இந்த கோவிலின் புனிதம் கெட்டு போச்சு?” என்று வனிதா தான் சொல்லி தந்த திட்டதுக்கு சாதகமான விடையை எதிர்பார்த்தே அந்த ஒருவனிடம் கேள்வி கேட்டாள்.
"அம்மா, இவங்க ரெண்டு பேரும் கோவில்னு கூட பாக்காம அந்த ரூம்ல ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து” என்று பொய் சொன்னான்.
"போதும் நிறுத்துங்க. இனி ஒரு முறை எங்களப் பற்றித் தப்பா பேசுனீங்க, உங்களுக்கு மரியாதை கெட்டு போய்டும் சொல்லிட்டேன்” என்று இவர்களை கண்டித்தாள் மகிழினி.
"ஐயோ சித்ரா. என்ன மா இதெல்லாம்" என்று பாட்டி அலற.
"இங்க பாருமா பொண்ணே. உனக்கு எவ்வளவு திமிர்? இப்படி ஒரு அசிங்கத்தை பண்ணிட்டு, இவ்வளவு தைரியமா பேச முடியுது” என்று ஒருவன் கேட்க,
"என்ன இது? நீங்களே ஆள் ஆளுக்கு பேசிகிட்டு இருந்தா, அப்போ எங்கள ஏன் வர சொன்னிங்க?” என்று நாராயணன் கேட்க,
"அதானே. என்ன தான் நடந்துச்சு? யாராவது ஒருத்தவங்க சொல்லி தொலைங்களேன்” என்று வனிதா கேட்க,
"அம்மா நாங்க கோவிலை பூட்டும்போது இவங்க அந்த ரூம்ல இருந்ததை நாங்க கவனிக்கலமா. ஆனா, நான் என்னோட செல்போனை எடுக்க மறுபடியும் என் மச்சானை அழைச்சிகிட்டு கோவிலுக்குள்ள வரும்போது, அங்க இவங்க ரெண்டு பேரும் உள்ள, ச்சி, எனக்கு சொல்லவே கேவலமா இருக்கு” என்று அந்த நபர் மீண்டும் அசிங்கமான தோரணையில் சொன்னதும், மகிழினியின் கண்கள் அதிகமாக கலங்கியது.
"ஏய் ஏய், ஏன் இப்படி அபாண்டமா பொய் சொல்றிங்க. நான், நான் எப்படி அந்த ரூமுக்குள்ள இருந்தேன்னு எனக்கு சத்தியமா தெரியாது. நான் மயக்கத்துல இருந்து கண் விழிக்கும் போது தான் நானே இவங்கள பார்த்தேன். அங்க இவங்களும் அந்த ரூம்ல மயக்கத்துல இருந்தாங்க. நான் இவங்கள எழுப்பி, இவங்க எப்படி அங்க வந்தாங்கன்னு கேக்குறதுக்கு முன்னாடி, அந்த ரூமுக்கு வெளிய நின்னுகிட்டு எங்கள பற்றி நீங்க தப்புப்தப்பா பேச ஆரம்பிச்சிட்டீங்க” என்று கொடிவீரன் பதற்றதுடன் அங்கே நடந்த விஷயங்களை சொன்னான்.
வாய்விட்டுச் சிரித்த வனிதாவின் கண்கள் மகிழினியை மட்டுமே பழிவாங்கும் எண்ணத்தோடு எதிர்நோக்கி இருந்தது.
"ஓ... இதெல்லாம் உங்க வேலை தானா? இப்போ எதுக்காக நீங்க இந்த நாடகத்தை எல்லாம் அரங்கேற்றம் பண்ணுறீங்க” என்று துல்லியமாக கணித்தவள் நேரடியாகவே வனிதாவிடம் கேள்வி கேட்டாள்.
"என்னமா பாப்பா சொல்ற? என்னைப் பார்த்தா பேசுற? நான் என்ன நாடகம் போடுறேன், முதல்ல இங்க என்ன நடக்குதுனே எனக்கு புரியலமா பாப்பா. நாளைக்கு என் தம்பியோட மச்சானுக்கு நடக்க இருக்குற கல்யாணத்துக்காக, நாங்க எல்லாம் ஓடி ஆடி வேலை செய்துட்டு இருக்கும் வேளையில், இவனுங்க என் தம்பிக்கு போன் பண்ணி, ஒரு ஆணும் பெண்ணும் கோவில்னு கூட பாக்காம, உள்ள அசிங்கமா நடந்துக்குறாங்க. நீங்க வந்து என்னனு பாருங்கன்னு போன்ல சொன்னாங்க, அவங்க சொன்னதை வச்சிதான் நானும், என் தம்பியும் இங்க கிளம்பி வந்தோம். இங்க வந்த பின்னாடி தான் தெரியுது, உங்கனால தான் இந்த பஞ்சாயத்தே கூடி இருக்குன்னு" என்றாள் வனிதா சாமர்த்தியாமான வார்த்தைகளை கோர்வையாக கோர்த்து.
"போதும் நிறுத்துங்க உங்க வசனத்தை. நீங்க சொல்ற மாதிரி இங்க எதுவுமே நடக்கல. இன்னும் கேட்டா நான் எப்படி இந்த கோவிலுக்குள்ள வந்தேன்னு கூட எனக்கு தெரியல. ஆனா, இப்போ நீங்க இவ்ளோ தூரத்துக்கு தெளிவா பேசும்போது தான் எனக்கு புரியுது. இதெல்லாம் உங்க ஏற்பாடுன்னு. ச்சீ, நீங்க எல்லாம் என்ன பெரிய மனுஷங்க. இப்போ இந்த மாதிரி ஒரு சீன் கிரியேட் பண்ணி, நீங்க என்ன நிரூபிக்க ட்ரை பண்ணுறீங்க” என்று கடுங்கோபத்துடன் கேட்டான் கொடிவீரன்.
"தம்பி இரு இரு. யாரு சீன் போடுறாங்க. நாங்களா? ஏன்பா நீ ஊர் விட்டு ஊர் வந்து, இந்த பொண்ணு கூட கோவில்ல உல்லாசமா இருந்துட்டு, அதை என்னன்னு நாங்க கேட்க வந்தா, நீ எங்களையே சீன் போடுறோம்னு சொல்லுறியா” என்று கிண்டலாக கேட்டான் நாராயணன்.
"கடவுளே! இங்க என்ன நடக்குது? டேய்! தம்பி, நீ எப்படிடா பூட்டின கோவிலுக்குள்ள போன? சித்ரா, நீ எப்படி அந்த ரூம்ல?" என்று சசி ஊர் மக்களின் சந்தேகத்தை தெளிவுப்படுத்த மகிழினியிடம் கேள்வி கேட்டாள்.
"அக்கா, நான் இன்னைக்கு சாய்ங்காலம் இந்த கோவிலுக்கு வந்தேன்ல, அப்போ நான் தெப்பக்குளத்துல உக்காந்து இருந்தேன். அப்போ கோவில் மணி அடிச்ச சத்தம் கேட்டு எனக்கு தலை வலிக்க ஆரம்பிச்சு மயக்கம் வர மாதிரி இருந்துச்சு. அப்போ நான் கோவிலுக்குள்ள இருக்குற ஒரு அம்மாகிட்ட தண்ணி கேட்டேன். அவங்க ஒரு ரூம்ல இருந்து தண்ணி கொண்டு வந்து தந்தாங்க. அந்த தண்ணியை நான் குடிச்சேன். ஆனா, அப்புறம் நான் எப்படி அந்த கோவில் ரூம்ல இருந்தேன்னு சத்தியமா எனக்கு இப்போ வர புரியல” என்றாள் அதே குழப்பதுடன்.
"என்னம்மா சொல்ற? உன்னை காணாமல் தானே என் மருமகன் உன்னை தேடி கோவிலுக்கு வந்தான்” என்றார் கீதா.
"அத்தை. நான் இவங்களத் தேடி கோவிலுக்கு வரும்போதே, கோவில் வாசல் பூட்டி இருந்துச்சு. இவங்க வீட்டுக்கு திரும்ப வந்து இருப்பாங்களான்னு எனக்கும் ஒரு சந்தேகம் தோணுச்சு. ஆனா, நான் சசி அக்காகிட்ட விவரம் கேட்கலாம்னு என் போனை தேடி பார்த்தா, நான் போனை சார்ஜ்ல போட்டுட்டு வெளிய வந்துட்டேன். சரி இவங்க எங்க தான் போயிருப்பாங்கன்னு தெரியலையேன்னு, நான் குழப்பத்துல இருக்கும்போது, என் பின் தலையில யாரோ பலமா அடிச்ச மாதிரி இருந்தது. அதோட எனக்கு என்னாச்சுன்னு தெரியல. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் கண்ணை திறந்து பார்க்கும் போது தான் தெரிஞ்சுது, நான் அந்த கோவில் ரூம்ல மயங்கி இருந்தேன்னு. அதே ரூம்ல தான் இதோ இவங்களும் மயக்கத்துல இருந்தாங்க. அப்போ நான் தான் இவங்க முகத்துல தேங்காய் தண்ணி தெளித்து இவங்கள மயக்கத்துல இருந்து எழுப்பினேன். ஆனா, நாங்க ரெண்டு பேரும் எப்படி அங்க வந்தோம்னு நாங்க பேசி தெரிஞ்சிக்கிறதுக்கு முன்னாடியே, இந்த ஊர் மக்கள் எல்லாம் கூடி, ஆளாளுக்கு ஒரு கதை சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க” என்றான் முகம் இறுகிய நிலையில்.
"எப்பா... எப்பா... என்ன சூப்பரா கதை சொல்றிங்க நீங்க ரெண்டு பேரும். பரவாயில்ல நல்லா இருக்கு” என்று அவர்களை கிண்டல் செய்தான் நாராயணன்.
"இங்க பாருங்க. எந்த கதையும் சொல்லணும்னு எங்களுக்கு அவசியம் இல்ல. நாங்க சொல்றது தான் உண்மை” என்றான் தைரியமாக.
"என்ன நீங்க ஆளாளுக்கு பேசிகிட்டு இருந்தா இதுக்கு என்ன தான் முடிவு?” என்று ஒருவர் கேட்க,
"ஏங்க, அதான் என் மருமகன் தெளிவா சொல்லுறானே. இவங்க ரெண்டு பேருக்கும் ஆகாத யாரோ தான் இவங்கள இப்படி ஒண்ணா கோவில் ரூம்ல மயக்கமடைய வச்சி, இவங்க பெயரை கெடுக்க பிளான் பண்ணுறாங்க” என்று சரியாக சொன்னார் கீதா.