Member
- Joined
- Jan 15, 2026
- Messages
- 61
- Thread Author
- #1
விவாதக் காதல் – 30
"என்ன சித்ரா? உனக்கு என்ன பிரச்சனை? ஏன் மயக்கம் அது இதுன்னு சொல்ற? என்னாச்சுமா?" என்று கேட்க,
"இல்ல பாட்டி. அது சும்மா. இவர் கூட காருல வரும்போது, லைட்டா மயக்கம் வர மாதிரி இருந்துச்சு. மத்தபடி பயப்படுற மாதிரி எல்லாம் ஒண்ணுமே இல்ல” என்றாள் சமாளிக்கும் விதமாக.
"எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லணும். புரியுதா” என்று கண்டித்தவர். அந்த அறையில் இருந்து வெளியே சென்றார்.
மகிழினி கடுங்கோபத்துடன் கொடிவீரனை முறைக்க, “ஏங்க என்னை இப்படி முறைக்கிறிங்க” என்றான் அப்பாவியாக.
"பண்றதை எல்லாம் பண்ணிட்டு, முகத்தை ஒன்னும் தெரியாத நல்ல பிள்ளை போல வச்சிக்கிறீங்களா” என்றாள் கடுப்பான குரலில்.
"நான் நல்ல பிள்ளை தான்ங்க.”
"ஆமா, ஆமா, சொன்னாங்க.” என்றாள் கடுப்புடன்.
“சரி, நீங்க இங்க வந்து என்ன சொன்னிங்க, ஏன் என் பாட்டி என்னை அவ்வளவு கோவமா கூப்பிட்டாங்க”
"நான் விளையாட்டா உங்கள அப்படி கூப்பிட சொன்னேன். அவங்களும் கூப்பிட்டாங்க. ஆனா, நீங்க தான் வந்த வேகத்துக்கு அவங்ககிட்ட எல்லா உண்மையும் சொல்லிட்டீங்க” என்றான் கொடிவீரன்.
"ஹ்ம்... இருந்தாலும் உங்களுக்கு கொஞ்சம் ஓவர் தான்” என்று நொடிக்க,
"ம்... ஆமாங்க ஓவர் தான். உங்க மேல எனக்கு அக்கறை கொஞ்சம் ஓவரா தான் இருக்கு.”
"உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றி சார்.”
"நன்றியெல்லாம் வேணாம்ங்க. முதல்ல நீங்க ஊருக்கு போய் ஒழுங்கா மாத்திரை எல்லாம் கன்டினியூ பண்ணுங்க போதும்” என்றதும் அவள் சம்மதமாய் தலையசைக்க, "சரி, நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் நகை கடைக்கு போயிட்டு வந்துடுறேன்” என்றான் அவன்.
"ஐயோ ஆமாம் இல்ல. ஜெயா அம்மா உங்கள தாலி வாங்க சொன்னாங்களே. அச்சோ! என்னால தான் நீங்க கடைக்கு போகலையா?” என்று கொஞ்சம் பதறிப்போய் கேட்டாள்.
"அப்டி எல்லாம் இல்ல. சரி என் அம்மா வந்து கேட்டா நீங்க சொல்லிடுங்க” என்றவன், அங்கிருந்து வெளியே சென்றான்.
விடிந்தால் கொடியின் அக்கா சசிக்குத் திருமணம் என்பதால், ஜெயா அங்கும் இங்கும் ஆடி ஓடி வேலை செய்து கொண்டு இருந்தார். மகிழினியும் அறையில் அடைந்து இருக்க விரும்பாமல் அவளாகவே சென்று தன்னால் முடிந்த வேலைகளை செய்தாள்.
சசியை திருமணம் செய்து கொள்ள போகும் மாப்பிளை சிவா, இவர்கள் இருக்கும் வீட்டிற்கு வந்தவன், அனைவரிடமும் சகஜமாக பேசிக்கொண்டு இருக்கும் வேளையில், சிவாவின் அக்கா ஆண்டாள், மற்றும் மாமா நாராயணன் இவர்களை நோக்கி வந்தார்கள்.
"விடிந்தா கல்யாணம். நீ என்னடா சிவா, பொண்ணுகிட்ட இவ்வளவு சகஜமா பேசிகிட்டு இருக்குற” என்று கேட்டார் சிவாவின் அக்கா ஆண்டாள்.
"இல்ல அக்கா. சும்மா தான்” என்று தயங்கியப்படி சசியை பார்த்தான் சிவா.
"ம்... சீக்கிரம் நீ நம்ம வீட்டுக்கு போ” என்றான் சிவாவின் மாமா நாராயணன் சற்று கண்டிப்பான் குரலில்.
"ஹாங் அப்புறம் இவரோட அக்கா வர கார் வேற பாதியலேயே பிரேக் டௌன் ஆகிடுச்சாம். அதைனால அவங்க வர லேட் ஆகும். அவங்க வந்ததும், நீங்க அவங்களுக்கு மரியாதை பண்ணனும்” என்றாள் சிவாவின் அக்கா ஆண்டாள் ஜெயாவை பார்த்து.
"அதெல்லாம் நான் சொல்லிட்டேன் அக்கா. சசியோட தம்பி வெளிய போயிருக்காரு. அவர் வந்ததும், நம்ம மாமாவோட அக்காவுக்கு முறை படி மரியாதை பண்ணுவாரு” என்றான் சிவா,
"இங்க பாருங்க. இந்த ஊருலேயே என் புருஷனும், அவரோட அக்காவும் தான் பெரிய ஆளுங்க. அவங்க என்ன சொல்லுறாங்களோ அது தான் இங்க வேதவாக்கு. இன்னும் சொல்ல போனா என் தம்பி சிவாக்கு நாங்க வெளி சம்மந்தம் எல்லாம் பாக்க கூடாதுன்னு தான் இருந்தோம். ஆனா, அந்த ஜோசியக்காரர் தான் உங்க பொண்ணுக்கும் என் தம்பி சிவாக்கும் கல்யாணம் பண்ணா, இவங்க எதிர் காலம் நல்லா இருக்கும்னு சொன்னாரு. அது மட்டும் இல்லாம, இவனுக்கும் உங்க பொண்ணை ரொம்ப பிடிச்சி போச்சு. அதைனால தான் நான் என் புருஷங்கிட்டயும் அவரோட அக்காகிட்டயும் பேசி சம்மந்தம் வாங்கி, இந்தக் கல்யாணத்த நடத்துறேன். அதைனால எல்லாம் ஒழுங்கா, இவங்க மனசு நோகாம, பயபக்தியுடன் மரியாதை பண்ணனும் புரியுதா” என்றாள் ஆண்டாள்.
"அதெல்லாம் நாங்க எந்த குறையும் இல்லாம பண்ணிடுவோம். நீங்க கவலை படாதீங்க” என்றார் ஜெயா.
"ம்... சரி. நாளைக்கு விடியற்காலை முகூர்த்தம். அதுவரை மாப்பிள்ளை பெண்ணை அடிக்கடி சந்திக்க விடமாட்டோம் நாங்க. இவனே வந்தாலும் நீங்க தான் வர வேணான்னு சொல்லனும்” என்று ஆண்டாள் சொன்னதும், சசியின் முகம் இறுகிப்போனது.
"அக்கா. நான் கல்யாணம் முடியுற வரை இவங்கள பார்க்கல போதுமா. முதல்ல வாங்க நம்ம கிளம்புவோம்” என்ற சிவா, கையோடு தன் அக்கா மாமாவை அங்கிருந்து அழைத்து செல்ல, அதிகப்படியான கோபத்துடன் சசி தன் கையில் இருந்த பொருளைக் கொண்டு மேசை மேல் அடித்தாள்.
"அக்கா என்னாச்சு? ஏன் இப்படி கோவப்படுறிங்க?” என்று மகிழினி கேட்க,
அதே சமயம் கொடிவீரன், சாமிக்கு சாத்துவதற்காக மாங்கல்யம் வாங்கி வந்தவன், தன் அம்மா ஜெயா கையில் அந்த மாங்கல்யத்தை தந்தவன், "என்னம்மா? என்னாச்சு? ஏன் அக்கா கோவமா இருக்காங்க?” என்று கேட்டான்.
"டேய்!! என்னடா குடும்பம் இது. எப்போ பாரு நாட்டாமை படத்துல வர ஆளுங்க போல. ஆயிரத்தெட்டு கண்டிஷன் போடுறாங்க. நானெல்லாம் கல்யாணம் முடிந்த பின்னாடி, இந்த சிவாவோட அக்கா மாமாவையே எங்க வைக்கணுமோ அங்க தான் வச்சிப் பார்ப்பேன். இதுல இந்த சிவா அக்கா புருஷனோட, அக்காவுக்கு நம்ம மரியாதை மண்ணாங்கடி எல்லாம் பண்ணணுமாம். இல்ல இல்ல, என்னை இவங்க ரொம்ப டென்சன் பண்ணுறாங்க, அம்மா, பேசாம நான் சிவாகிட்ட இதெல்லாம் எங்களால பண்ண இயலாதுன்னு சொல்லட்டா” என்றாள் அதிகப்படியான கோபத்துடன்.
"என் குடி காக்கப் பிறந்தவளே, ஏன்டி உனக்கு இவ்வளவு வாய்? அவங்க, அவங்களோட உறவு முறைக்கு மரியாதை கொடுத்து ஒரு சில விஷயங்களை பண்ணச் சொல்லுறாங்க. நம்ம அதெல்லாம் பண்ணுறதால இப்போ என்ன ஆகப்போகுது?” என்று கேட்டார்.
"அம்மா, அதுக்குன்னு இவங்க எல்லாம் ரொம்ப ஓவரா பண்ணுறாங்கம்மா.”
"அக்கா. ஏன் இப்போ நீங்க இவ்வளவு டென்சன் ஆகுறீங்க? கல்யாணம்னா ரெண்டு பேரோட முடியுற விஷயம் இல்லையே. அதுவும் இல்லாம நீங்க கட்டிக்கப்போற மாப்பிள்ளையை வளர்த்தது அவரோட அக்காவும் மாமாவும். அதைனால அவங்க சொல்றதை சிவா மாமா பண்ணி தான் ஆகணும்” என்றான் சசியை சமாதானம் பண்ணும் வகையில்.
"டேய்!! அவரு என்ன வேணா பண்ணட்டும்டா. நம்ம ஏன் அவரோட மாமாவோட அக்காவுக்கு எல்லாம் மரியாதை பண்ணனும்?” என்றாள் கோபத்துடன்.
"அப்படி பண்ணுறதால யாரும் குறையப்போறது இல்லை. நீ இதெல்லாம் கண்டுக்காத. நானும் அம்மாவும் இதெல்லாம் பார்த்துப்போம். முதல்ல நீ போய் கொஞ்சநேரம் தூங்கு. அப்போ தான் நாளைக்கு கல்யாணத்துல போட்டோ எடுக்கும்போது நீ ரொம்ப அழகா இருப்ப” என்றான் சிரித்துக் கொண்டே.
“ஆமா சசி. போ, போய் நீ தூங்கு. அம்மாடி சித்ரா, சசியை அழைச்சிட்டு போமா. டேய்! வீரா, நீ உன் அத்தையை அழைச்சிட்டு போய் ஒரு பட்டு புடவையும், வேஷ்டி, துண்டு, பூ, பழம் எல்லாம் தட்டு நிறைய வைக்குற மாதிரி வாங்கிக்கோ. மாப்பிளையோட, மாமாவோட அக்கா குடும்பத்துக்கு நம்ம மரியாதை பண்ணனும்னு சொல்லிருக்காங்க.”
“ம்... சரிம்மா. நான் அத்தை கூடப் போறேன். டேய்! வேணு. நீயும் வா” என்றவன், தன் அத்தையையும் வேணுவையும் அழைத்து கொண்டு கடைக்குக் கிளம்பினான்.
மகிழினியின் பாட்டியும், ஜெயாவும் நாளை காலை நடக்க இருக்கும் திருமணத்திற்கு செய்ய வேண்டிய சடங்குகளுக்கு தேவையான விஷயங்களை எல்லாம் செய்துகொண்டு இருந்தனர்.
கடுங்கோபத்துடன் அறைக்குள் சென்ற சசி, கட்டிலில் அமர்ந்து கண்கள் கலங்கினாள்.