Member
- Joined
- Jan 15, 2026
- Messages
- 59
- Thread Author
- #1
விவாதக் காதல் – 28
“வண்டி வந்துடுச்சு. வண்டி வந்துடுச்சு” என்று வேணு கத்தினான்.
வீட்டில் உள்ள அனைவரும், ஆளுக்கோரு பொருளாக வேனில் வைத்த பின்பு, “சசி. போய் சாமி அறையில விளக்கெற்றி சாமி கும்பிட்டுட்டு வந்து வண்டியில ஏறு தாயி” என்று பாட்டி சொன்னதும், சசியும் அவர்கள் சொன்னது போலவே செய்தாள்.
“ம்... கிளம்பலாமா?” என்று சசி கேக்க,
கொடி வீரன் வீட்டை பூட்ட, வேனில் அக்கம் பக்கத்தினர் எல்லாம் ஏறியதும், கைகள் அசைத்து வண்டியை கிளம்ப சொன்னவன், “ஏங்க நம்ம கிளம்பலாமா?” என்று மகிழினியை கேட்டான்.
“இல்லிங்க, நான் நடந்தே வரேன். நீங்க வேணுவை அழைச்சிட்டு கிளம்புங்க” என்றதும், கொடியின் முகம் மாறி போனது.
“ஏங்க இப்படி பண்ணுறீங்க? ஏன், என் கூட வண்டியில வந்தா, நான் என்ன உங்கள கடத்திக்கிட்டா போயிட போறேன்” என்று கொடி கேட்க,
“ஆமா ஆமா நீங்க அப்படியே சினிமா வில்லன் பாருங்க. கதாநாயகியை கடத்திட்டு போக” என்றவள் முகத்தை வேறு பக்கமாக திருப்பி கொண்டாள்.
“நான் வில்லனான்னு எல்லாம் தெரியலைங்க. ஆனா நீங்க கண்டிப்பா கதாநாயகி தான்” என்று அவன் சொன்னதும், அவனை பார்வையால் முறைத்தவள், “என்ன காமெடியா?” என்றாள்.
“ஐயோ, உண்மைங்க. நீங்க பாக்க ஹீரோயின் போல தான் இருக்கிங்க. சரி அத விடுங்க. வாங்க நம்ம கிளம்பலாம் நேரமாகுது.” என்றவன், பைக்கின் முன் பக்கம் வேணுவை அமர்த்தி கொண்ட நிலையில், “ஏங்க, வாங்க நேரமாகுது,” என்றான்.
அவளோ தயங்கி நிற்க, அவளின் தயக்கத்தை கண்டு சில நொடி யோசித்தான். பின்பு, “சரிங்க, நீங்க இங்க வெயிட் பண்ணுங்க. நான் ஒரு 5 நிமிஷத்துல வந்துடுறேன்” என்றவன். வேணுவை இறக்கி விட்டபடி தன் பைக்கை வேகமாக விரட்டியவனை பார்த்த வேணு.
“அத்த இவரு எங்க போறாரு? நம்ம அப்போ எப்படி போறது? என்ன அத்த நீ, நம்ம பேசாம வேன்லையே போய் இருக்கலாம். போ அத்த, நீ சரியான இம்சை” என்று வேணு சிணுங்கி கொண்ட தருணம், இவர்கள் நிற்கும் இடத்தை நோக்கி நீல நிற கார் வந்து இவர்கள் அருகில் நின்றது.
“ஐ... அத்த, அங்க பாரு காருல கொடி மாமா” என்று வேணு குதித்து கொண்டே சொன்னதும், மகிழினி டிரைவர் சீட்டில் அமர்ந்து இருக்கும் கொடிவீரனை பார்த்தாள்.
“என்னங்க இது. இந்த கார் யாரோடது” என்று கேக்க,
“நம்மது தாங்க, வாங்க காருல போகலாம்” என்றதும், வேணு காரின் பின் பக்கம் அமர்ந்து கொள்ள. அவன் அருகில் மகிழினியும் அமர்ந்தாள்.
“டேய் சீட் பெல்ட் போடு” என்று வேணுவை கண்டித்தாள்.
“அத்த, சீட் பெல்ட் போட்டா கழுத்து அறுக்கும் அத்த. எனக்கு அதெல்லாம் வேணாம்” என்று வேணு அடம் பிடிக்க,
“சொன்னா கேக்க மாட்ட.” என்றவள் சிறுவனின் தலையில் குட்டு வைத்ததும், சீட் பெல்டை போட்டு கொண்ட வேணு, “ம்... போகலாம்.” என்று சொல்ல, கொடிவீரன் கோவிலை நோக்கி காரை விரட்டியவன், வழியெல்லாம் ஏதும் பேசாமல் அமைதியாக வந்தான்.
அவன் அமைதியைக் கண்டு, “என் மேல எதாவது கோவமா?” என்று மகிழினி கேட்டாள்.
“ஏன், நான் கோவப்படும் படி நீங்க என்ன பண்ணீங்க?” என்று கொடி கேக்க,
“இல்லிங்க, உங்ககூட பைக்ல வர தயங்கினேன் இல்ல. அதுக்காக கேட்டேன்” என்று சொன்னதும், கொடி வீரன் சிரித்தான்.
“ஏன் சிரிக்கிறீங்க.??” என்றாள் கேள்வியாக
“பைக்ல போறோமோ, காருல போறோமோ, இல்ல நடந்து போறோமோ, அதெல்லாம் முக்கியம் இல்லிங்க, போக வேண்டிய இடத்துக்கு, போக வேண்டிய ஆளுக்கூட போறோமா என்பது தான் முக்கியம்” என்று கொடி வீரன் சொன்னதும், மகிழினி அவன் பேச்சில் உள்ள உள்ளர்த்தத்தை புரிந்து கொள்ள முடியாமல் போனாள்.
அடுத்த சில நிமிடங்களில் கொடி வீரன் விரட்டிய கார், சிவன் கோவில் வாசலை சென்றடைந்தது,
“நீங்களும் வாங்களேன் கோவிலுக்கு” என்று மகிழினி அழைக்க.
“ம்...,” என்று சொன்னவன். வேணுவை அழைத்து கொண்டு மகிழினியுடன் கோவிலுக்குள் நுழைய,
"டேய். என்னடா இது. நாளைக்கு உன் அக்காவுக்கு தானே கல்யாணம். நீ என்ன இன்னைக்கே புது மாப்பிள்ள மாதிரி கிளம்பி இருக்க. யாருடா இந்த பொண்ணு? வேலைக்கு போன இடத்துல இவளை வீட்டுக்கு இழுத்துகிட்டு வந்துட்டியா" என்று வயதில் மூத்த பெண்மணி ஒருவர் கேட்டதும், மகிழினி கடும் கோபத்துடன் அந்த பெண்மணியை முறைக்க,
“ஐயோ! ஏங்க, அவசரப்பட்டு இவங்கள அடிச்சிட்ட போறீங்க. இவங்க என்னோட அத்த” என்று வேகமாக சொன்னான் கொடி வீரன்.
"என்ன, என்னை உன் பொஞ்சாதி அடிப்பாளா? எங்க, என்மேல கை வைக்க சொல்லு பாப்போம் உன் பொஞ்சாதியை. என்ன, என்னை பார்த்தா உன் பொஞ்சாதிகிட்ட அடி வாங்குற கைப்புள்ள போல தெரியுதா? நான் யாரு, என்னோட பவர் என்னனு, உன் பொஞ்சாதிகிட்ட நீ சொல்லலையா. ஏய் இங்க பாருடி புது பொண்ணே. நான் அந்த பழனிக்கே பக்கெட் பிரியாணி தந்தவள். என்கிட்ட முறைச்சுகிட்டன்னு வையு, என் தம்பி மகன் கூட, நீ வாழ முடியாத அளவுக்கு, உனக்கு நான் கட்டம் கட்டிடுவேன்." என்று கொடி வீரனின் அத்தை கோவில் வாசல் படியில் நின்று கொண்டு அலப்பறை கொடுத்தார்.
“ஏங்க என்ன இது. ஏன் இவங்க இப்படி எல்லாம் பேசுறாங்க. பிளீஸ் கொஞ்சம் இவங்கள சும்மா இருக்க சொல்லுங்க. யாராவது இவங்க பேசுறத கேட்டா உங்களுக்கு தான் பிரச்சனை” என்று பதறினாள் மகிழினி.
“இருங்க இருங்க. நான் அவங்ககிட்ட பேசுறேன். பிளீஸ் நீங்க டென்சன் ஆகாதீங்க” என்றான் சின்ன தவிப்புடன்.
"எப்பா சாமி, இந்த அநியாயம் எந்த ஊருலயும் நடக்காதுடா. புதுசா கட்டிக்கிட்டு வந்த பொண்ணுகிட்ட, நீ என்னமோ இந்த பம்மு பம்முற. என்னடா உன் பொஞ்சாதி உன்னை அந்த அளவுக்கு மிரட்டி வச்சிருக்காளா?" என்று கொடியின் அத்தை கீதா வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு இருக்க, கோவிலுக்கு வந்த பக்தகர்கள் சிலர், இவர்களை பார்த்தபடி கோவிலை சுற்றி வந்தனர்.
கொடியின் அத்தை உண்மை தெரியாமல் அளவுக்கு அதிகமாக பேசுவதை எண்ணி மகிழினியின் கண்கள் தானாக கலங்கியது.
"ஏய் கிழவி! யாரு நீ? எதுக்காக என் அத்தையை திட்டுற? என்ன, என் அத்தைக்கு யாரும் இல்லன்னு நினைச்சியா? நான் இருக்கேன் அவங்களுக்கு" என்று தன் தலையை தூக்கி கொடியின் அத்தையை எதிரித்து பேசினான் வேணு.
"என்ன, நீ இருக்கியா? டேய் சோப்பு டப்பா, பார்க்க நல்லா சேம்புள்கு இலவசமா தந்த முருங்க ஊறுகா பொட்டலம் போல இருந்துகிட்டு, நீ என்னை எதிரித்து பேசுறியா?" என்று கொடியின் அத்தை மீண்டும் கத்த,
"ஐயோ அத்த, கொஞ்சம் சும்மா இருக்கிங்களா நீங்க? ஏன் இப்படி சத்தம் போட்டு நம்ம குடும்ப விஷயத்தை ஏலம் போடுறீங்க. இங்க பாருங்க. நீங்க நினைக்கிறது போல இவங்க என் பொஞ்சாதி எல்லாம் இல்ல" என்றான் பதட்டமாக.
"அப்போ நீ அவ புருஷனா?" என்றார் கிண்டலுடன்.
"ஐயோ பழனி ஆண்டவா. ரொம்ப கஷ்டம் போல இந்த வாய்க்கு மூடி போட" என்று கடுப்புடன் முனகினான்.
"டேய் என்னடா முனங்குற?" என்றார் முறைப்பாக
"அத்த, இவங்க என் நண்பனோட தங்கச்சி. சசி அக்கா கல்யாணத்துக்காக சென்னை பக்கம் இருந்து வந்து இருக்காங்க. இவங்களுக்கு இந்த கோவில்ல ஒரு வேண்டுதல் இருக்காம். அதான் நான் இவங்கள இங்க அழைச்சிட்டு வந்தேன். நீங்க என்னடானா உண்மை தெரியாம, வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுறீங்க" என்றான் கொடிவீரன்.
"என்னடா சொல்ற நீ? அப்போ உன் பொஞ்சாதி இல்லையா இவ" என்று மீண்டும் இவன் அத்தை கேக்க,
"இங்க பாருங்க. வயசுல பெரியவங்க தானே நீங்க. இப்படி தான் நடு கோவில்ல நிக்க வச்சி, வர போறவங்க பாக்குற மாதிரி எங்களை விசாரணை பண்ணுவிங்களா. அங்க பாருங்க. இந்த கோவிலுக்கு வந்த எல்லோரும் உங்க வாயை தான் பாத்துகிட்டு நிக்குறாங்க. அதான் அவரு சொல்லுறாரு இல்ல. நான் அவரோட நண்பனின் தங்கச்சின்னு. இன்னும் உங்களுக்கு வேற என்ன வேணும்?" என்று தன் கண்கள் சிவந்தாள் மகிழினி.