• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Jan 15, 2026
Messages
53
விவாதக் காதல் – 26


சில நொடிகளில் கீழே இறங்கி வந்த சசி கோவமாக சோபாவில் அமர்ந்தாள்.

“என்ன அக்கா எதாவது பிரச்சனையா?” என்று மகிழினி கேட்க,

“ஆமா சித்ரா. இந்த சிவா சரியான அம்மாஞ்சி போல. எல்லாத்துக்கும் அக்கா. மாமா. அக்கா. மாமான்னு அவங்க புராணமே பாடுறான்” என்று சசி கடிந்து கொண்டாள்.

“யாரு சிவா? உங்கள கட்டிக்க போற மாப்பிள்ள தானே?” என்று மகிழினி கேட்க,

“அந்த புண்ணியம் பண்ணவன் தான்” என்று சசி சொன்னதும் மகிழினி சிரித்து கொண்டாள்.

“என்னடி என்ன பிரச்சனை? என்று கேட்டுக்கொண்டே ஜெயா இவர்களை நோக்கி வர, பாட்டியும் உடன் வந்து சோபாவில் அமர்ந்து கொள்ள,

“என்னத்தம்மா சொல்ல சொல்றிங்க? சிவாவோட அக்கா, மாமாவுக்கு என்ன பிடிக்குதோ, அதை தான் நம்ம பண்ணணுமாம். அவங்க மனசு கஷ்டப்படும்படி நடந்துக்க கூடாதாம். அதுவும் சிவாவோட மாமாவுக்கு, யாரோ ஒரு அக்கா இருக்காங்களாம். அவங்களுக்கு கூட நம்ம மரியாதை பண்ணணுமாம்” என்று கடுப்பாக சொன்னாள் சசி.

“அதுக்கு என்ன பண்ணிட்டா போச்சு” என்று ஜெயா சொல்ல மேலும் கடுப்பானவள்,

“சரி எங்க இந்த கொடி பையனை காணோம்” என்றவள் வாசலை பார்த்தாள்.

“அக்கா அவரு உங்ககிட்ட இதோ இந்த பொருளை எல்லாம் தரச் சொல்லிட்டு வேனுக்கு சொல்லிட்டு வரேன்னு போய் இருக்காரு” என்றாள் மகிழினி.

“சரி சித்ரா. நீங்க பேசிகிட்டு இருங்க. நான் போய் டின்னர் ரெடி பண்ணுறேன்” என்று சசி சோபாவில் இருந்து எழுந்ததும், அவளை பின் தொடர்ந்து மகிழினியும் சமையல் அறைக்குள் நுழைந்தாள்.

“அக்கா உங்க கிச்சன் ரொம்ப அழகா இருக்கு. சரி கொடுங்க இன்னைக்கு நான் டின்னர் பண்ணுறேன். என்ன பண்ணனும் மட்டும் சொல்லுங்க?” என்றாள்.

“நீதான் பல வகை சாம்பார் வைப்பியாமே. அதுல எதாவது ஒன்னு பண்ணு “என்று சசி சிரிக்காமல் சொல்ல

“உங்களுக்கு யாரு சொன்னது?” என்று கேட்டாள் மகிழினி.

“வேற யாருமா. எல்லாம் உன்னோட சமையலின் அடிமை தான் சொன்னான்” என்று அவள் சொல்ல,

“ஆமா அக்கா. உங்க தம்பிக்கு சாம்பார் தான் ரொம்ப பிடிக்கும்” என்று மகிழினி சொன்னாள்.

“அப்படியா?? பாரேன்!! எனக்கு இது இத்தனை வருடம் தெரியாமல் போச்சு” என்று சசி சொன்னதும் மகிழினி தன் நாக்கை கடித்து கொண்டவள்,

“சாரி அக்கா. நான் எனக்கு தெரிந்ததை தான் சொன்னேன்” என்று தயங்கியவளின் கன்னத்தை செல்லமாக கிள்ளிய சசி, அவளை பார்த்து கண் சிமிட்டினாள்.

“அக்கா உங்களுக்கு நாளைய மறுநாள் கல்யாணம் என்ற பயமே இல்லையா?”

“நான் ஏன் பயப்படனும்? என்னை கட்டிக்கப்போற சிவா தான் பயப்படணும்” என்றதும் மகிழினி அழகாக சிரித்து கொண்டாள்.

இருவரும் பேசிக்கொண்டே ஒரு வழியாக இரவு சமையலை முடிக்க.

“அம்மா டின்னர் ரெடி. வேணு, பாட்டி வாங்க சாப்பிடலாம்” என்று சசி அழைத்தாள்

“எங்கமா கொடி தம்பி. அவரும் வரட்டுமே சேர்ந்தே சாப்பிடலாம்” என்று பாட்டி சொல்ல,

“அவன் வெளிய போனா, அப்படியே அவங்க நண்பனை எல்லாம் பார்த்துட்டு தான் வருவான். நீங்க வாங்க நம்ம நேரதோடு சாப்பிட்டு படுப்போம். நாளைக்கு வெள்ளன வண்டி வந்துடும்” என்று ஜெயா சொன்னதும், அனைவரும் சேர்ந்து இரவு உணவை சாப்பிட்டு முடித்த பின், நாளைய மறுநாள் சசிக்கு நடக்க இருக்கும், கல்யாணத்தை பற்றி பேசி கொண்டு இருந்தனர்.

“ஏன்மா ஜெயா. சசிக்கு கல்யாணம் முடிந்த கையோடு, உன் மவனுக்கும் தானே கல்யாணம் பண்ணி வச்சிடுவ” என்று கேட்டார் பாட்டி.

“அவனுக்கும் தான்மா பொண்ணு பார்க்கணும். முதல்ல இவ கல்யாணம் முடியட்டும்னு தான் இன்னைவரை, அவன் ஜாதகத்தை ஜோசியர்கிட்ட காட்டல” என்றார் ஜெயா

“ஏம்மா ஜெயா நாங்க உள்ள வரும்போது, ஒரு சுட்டி பொண்ணு கொடி தம்பிகிட்ட உரிமையா பேசிகிட்டு இருந்தாளே. அதான் நீ கூட உன் அண்ணன் மகள்னு சொன்னியே. அந்த பொண்ணை கொடி தம்பிக்கு கேட்கலாம் இல்ல” என்றதும் ஜெயாவும், சசியும் ஒருவரை பார்த்து ஒருவர் சிரித்து கொண்டனர்.

“ஏன் சிரிக்கிறீங்?க பாட்டி எதாவது தப்பா சொல்லிட்டாங்களா?” என்று மகிழினி கேட்டாள்

“இல்ல சித்ரா. அவங்க கேட்டது சரி தான். ஆனா, என் தம்பி அந்த பொண்ணை அவ தங்கச்சி போல பாக்குறான். அதனால யாரு என்ன சொன்னாலும், அவன் அவளை கட்டிக்க மாட்டான்” என்றாள் சசி.

“என்ன மாமன் மகளை தங்கச்சி போல பாக்குறதா. இது எந்த ஊர் நியாயம்?” என்று பாட்டி கேட்க,

“ஐயோ பாட்டி! இதுல நியாயம் தர்மம் எல்லாம் ஏதும் இல்ல. நான் தான் ரதியை சின்ன வயசுல இருந்து, என் தங்கச்சியை போலவே பார்த்துட்டேன். எனக்கு சசி அக்கா எப்படியோ, அப்படி தான் ரதியும்” என்று சொல்லிக்கொண்டே கொடி இவர்கள் அருகில் வந்து, வேணுவின் அருகில் அமர்ந்து கொண்டான்.

“ஆனா, அந்த பொண்ணு பேசுறத பார்த்தா, அவளுக்கு உன் மேல அன்பை மீறி வேற என்னமோ இருக்கு போலபா” என்று தன் அனுபவத்தில் சொன்னார் பாட்டி.

“ம்... இருக்கலாம் பாட்டி. அதுக்கு காரணம் நம்ம சொந்தங்கள் தான். பிறந்த பிள்ளைங்ககிட்ட இவன் தான் உனக்குன்னு, சின்னதுல எதையாவது சொல்லி வச்சி, அவங்க மூளையை குழப்பி விட்டுறாங்க. அப்படி தான் ரதிகிட்டையும், சின்னக் குழந்தைங்ககிட்ட, இந்த மிட்டாய் உனக்கு தான்னு சொல்ற மாதிரி, நான் தான் அவளுக்குன்னு சொல்லி வச்சிருக்காங்க. அவ சின்ன பொண்ணு பாட்டி. இப்போ தான் பனிரெண்டு படிக்கிறா. இன்னும் அவளுக்கு காலேஜ் படிப்பு எல்லாம் இருக்கு. அப்போ கண்டிப்பா அவளோட மனசு மாறும். ஆனா, சத்தியமா என்னால அவளை அப்படி எல்லாம் யோசிக்க முடியாது. அதான் அம்மாகிட்ட முன்னவே நான் ரதி விஷயத்தை பற்றி பேசவேகூடாதுன்னு சொல்லிட்டேன்.” என்று தெளிவாக சொன்னான் கொடி.

“ம்... இவனுக்குன்னு இனிமே ஒரு பொண்ணு பிறக்க போறது இல்ல. கண்டிப்பா எங்காவது பிறந்து இருப்பா, அவ வந்ததும் இவனுக்கு ஒரு கல்யாணத்தை முடிச்சுட்டு, நான் சித்ரா கூட வந்து தங்க போறேன்” என்றார் ஜெயா.

“கண்டிப்பா நீங்க நம்ம வீட்டுக்கு வந்துடுங்கம்மா” என்று முகம் மலர்ந்து சொன்னாள் மகிழினி.

“ம்... பாருடா தம்பி, கூட்டணியை. சரி சரி நீ சீக்கிரம் போய் சாப்பிடு” என்றாள் சசி

“வேணு நீ சாப்பிட்டியா?” என்று கொடி கேட்க,

“ம்...” என்று கண்கள் கசக்கி கொண்டான் வேணு

“அக்கா வேணுக்கு தூக்கம் போல. நீ இவங்க தூங்கறதுக்கு ஏற்பாடு பண்ணு. நான் சாப்பாடு எடுத்து வச்சி சாப்பிடுறேன்” என்று சொன்னவன். சமையல் அறைக்குள் சென்று தட்டில் இட்லியை வைத்து, சாம்பார் பாத்திரத்தை திறந்து பார்க்க அதில் சாம்பார் இல்லை.

“அக்கா அக்கா தொட்டுக்க எதும் இல்லையா?” என்று சமையல் அறையில் இருந்தபடி கத்த, அவன் சத்தம் கேட்டு அங்கு சசி வர, அவளைப் பின் தொடர்ந்து மகிழினியும் வந்தாள்.

“ஏன்டா கத்துற?” என்று சசி கேட்க,.

“தொட்டுக்க எதுவும் இல்லையா?”

“அதான் இல்லைனு தெரியுது இல்ல. பின்ன என்ன வெறும் இட்லியை தின்னு” என்று சசி சொல்லவும் மகிழினியின் முகம் மாறியது.

“அக்கா ஏன் இப்படி பண்ணுறீங்க? அவருக்கு எடுத்து வச்ச சாம்பாரை அவர்கிட்ட கொடுத்துடுங்க” என்றாள் கெஞ்சலாக.

“ம்... பாருடா அவனுக்கு நீ என்ன சப்போர்ட்டா” என்று முறைத்த சசி, தனியாக எடுத்து வைத்து இருந்த பாத்திரதை அவனிடம் நீட்டினாள்.

சம்பாரின் மனத்தை நுகர்ந்தவன், “ஏங்க. இன்னைக்கு நீங்க தானே சாம்பார் வச்சீங்க?” என்று ஆசையாகக் கேட்க,.

“ம்...” என்று தலையசைத்தாள் மகிழினி

“அடேய் சாம்பார் மண்டயா. இதெல்லாம் ரொம்ப ஓவர். போய் ஒழுங்கா சாப்பிடு சொல்லிட்டேன்” என்று சசி கோவமாக சொன்னதும், இரண்டு இட்லிக்கு ஒரு சட்டி சாம்பாரை ஊற்றி, ரசித்து சாப்பிடுபவனை கண்டு மனம் மகிழிந்தாள் மகிழினி.

“சரி சித்ரா. நீ வா நம்ம போய் தூங்கலாம். டேய் சாப்பிட்டுட்டு கதவை சாத்திட்டு, அப்படியே அம்மா ரூம்ல தூங்குற பாட்டிக்கு எதாவது வேணுமான்னு கேட்டுட்டு, நீயும் நேரத்தோடு தூங்கு.” என்று சசி சொல்ல, அவள் பேசும் எதையும் காதில் வாங்காத கொடி, இட்லி சாம்பாரை இன்னமும் ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டே இருந்தான்.

தம்பியவனின் செயலைக் கண்டு தலையில் அடித்தப்படி, மகிழினியை அழைத்துக்கொண்டு அவள் அறைக்கு சென்றாள் சசி.
 
Joined
Jan 15, 2026
Messages
53
“சித்ரா நீ வேணு கூட படுத்துக்கோ. நான் இங்க படுத்துக்குறேன்” என்று மகிழினி கையில் ஒரு போர்வையை தந்தாள்.

“ஏன் அக்கா நீங்களும் இந்த கட்டில்லயே படுங்களேன். அதான் இடம் இருக்கே” என்று சொல்லியதோடு, கட்டிலில் படுத்து இருந்த வேணுவை ஓரமாக படுக்க வைத்தாள்.

“இல்லமா. நான் கீழே படுத்துக்குறேன். ஒன்னும் பிரச்சனை இல்லை” என்றாள் சசி.

“அக்கா நாளைக்கு காலையில இங்க இருந்து, எத்தனை மணிக்கு உங்க மாப்பிள வீட்டுக்கு நாம கிளம்பனும்?”

“ஆறு மணிக்கு கிளம்புனா சரியா இருக்கும் சித்ரா” என்று சொன்னாள் சசி.

“ஏன் அக்கா. இந்த ஊருல இருக்குற சிவன் கோவில் எப்போ திறப்பாங்க?” என்று மகிழினி கேட்க,

“ஏய் உனக்கு எங்க கிராமத்துல இருக்குற சிவன் கோவிலை பற்றி எல்லாம் தெரியுமா!!??” என்று ஆச்சிரியமாக கேட்டாள் சசி.

“ம்... தெரியும் அக்கா. எனக்கு கூட அந்த கோவில்ல ஒரு வேண்டுதல் இருக்கு. நான் திரும்ப ஊருக்கு போறதுக்குள்ள, அந்தக் கோவிலுக்கு போய் என்னோட காணிக்கையை செலுத்தணும்” என்றாள் மகிழினி.

“என்ன? இந்த ஊர் கோவில்ல வேண்டுதலா?? அப்போ நீ ஏற்கனவே இந்த ஊருக்கு வந்து இருக்கியா?” என்று கேட்டு தன் படுக்கையில் இருந்து எழுந்து, மகிழினியின் அருகில் வந்து அமர்ந்தாள்.

“ம்... வந்து இருக்கேன் அக்கா” என்றாள் மகிழினி.

“எப்ப வந்த நீ?” என்று ஆச்சிரியமாக கேட்க,

“ம்... ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நான் வொர்க் பண்ண ஹாஸ்பிடல்ல ஒரு கேம்ப் கண்டக்ட் பண்ணாங்க. அப்போ நான் இந்த ஊருக்கு வந்து இருக்கேன். அந்த சமயத்துல தான், இந்த ஊர் சிவன் கோவில்ல, நான் என் அண்ணா கூட மீண்டும் சேரணும்னு வேண்டுகிட்டு போனேன். அதான் இப்போ போய் என் வேண்டுதலை முடிக்கலாம்னு உங்கிட்ட விவரம் கேட்டேன்” என்று மகிழினி சொல்லவும், மேலும் குழம்பி போனாள் சசி.

“ஏய் இரு இரு என்ன ஹாஸ்பிட்டல்? என்ன கேம்ப்? எனக்கு ஒன்னும் புரியல. முதல்ல எனக்கு தெளிவா ஒரு விஷயம் சொல்லு. நீ ஹாஸ்பிட்டல்ல வொர்க் பண்ணியா?” என்று ஆர்வமாக கேட்டாள்.

“ம்... ஆமா அக்கா. டிரைனிங் போனேன்.”

“அப்போ அப்போ நீ டாக்டர். இல்ல இல்ல நர்ஸ். நீ நர்ஸா சித்ரா?” என்று சசி மகிழினியின் தோள்களை பற்றிக்கொண்டு கேட்டதும்,

“ஆமா அக்கா. ஆனா, நர்ஸ்கு படிச்சிட்டு ஜஸ்ட் டூ மந்த்ஸ் கூட அந்த சேவையை செய்யலை”. என்று வருத்தமாக சொன்னாள்.

“ஏய்! என்ன சொல்ற சித்ரா!! நீ நர்சிங் படிச்சிருக்கியா??” என்று மீண்டும் அதிகப்படியான மகிழ்ச்சியுடன் கேட்டாள்.

“ம்... ஆமா அக்கா.” சசியின் ஆர்வம் எதனால் என்று ஏதும் புரியதவளாக பதில் சொன்னாள்.

“அப்போ ரெண்டு வருஷம் முன்னாடி, நீ இந்த ஊருக்கு கேம்ப் போட்டப்ப வந்துருக்க?” என்று கேட்ட சசி, மகிழினியின் கைகளை இறுக்கமாக பற்றிக்கொள்ள,

“அட ஆமா அக்கா. இதை ஏன் இத்தன முறை கேக்குறீங்க?” என்று மகிழினி குழம்பி போக,

“அப்போ அப்போ நீ. டேய் தம்பி! சீக்கிரம் வாடா இங்க. அடேய் கொடி வீரா எங்க இருக்க?” என்று உணர்ச்சி வேகத்தில் கத்தி கூச்சல் போட, என்ன விவரம் என்று தெரியாமல் கொடி, தலை தெறிக்க ஓடி வந்தான்.

“அக்கா என்னாச்சு? பாம்பு, பேய்னு எதையாவது பார்த்து பயந்துட்டியா? இல்ல கண்ணாடி எதையாவது பார்த்துட்டியா?” என்று கொடி தன் அக்காவை கிண்டல் செய்ததும், சித்ரமகிழினி அழகாகச் சிரித்தாள்.

“டேய் லூசு தம்பி. உனக்கு விஷயம் தெரியுமா? நம்ம சித்ரா நர்சிங் படிச்சி இருக்காளாம். அது மட்டும் இல்லடா. நம்ம ஊருக்கு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ட்ரைனிங்கு கூட வந்து இருக்கேன்னு சொல்லுறா” என்று சந்தோஷமாக சொல்ல, இன்னுமே புரியாது நின்றான் கொடிவீரன்..

“அக்கா அதுக்கு ஏன் இப்படி கத்துறீங்க? இப்போ என்ன அதுக்கு?” என்று மகிழினி கேட்க,

“ஐயோ இரு சித்ரா. உனக்கு விஷயம் புரியாது. இப்போ மட்டும் என்கிட்ட மாஸ்க் இருந்துச்சினு வையு, இல்ல இல்ல மாஸ்க் எல்லாம் வேணாம். இதோ இந்த போர்வை போதும்” என்றவள் சட்டென்று கட்டிலின் மேல் இருந்த போர்வையை எடுத்து, சித்ர மகிழினியின் பாதி முகத்தை மறைத்தாள்.

“டேய்! நீ ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி பார்த்து, பிளாட் ஆன அதே விழிகள் இவ கண்ணு தானே” என்று சசி உற்சாமாக கேட்ட தருணம், கொடிவீரனின் கண்கள், சித்ரமகிழினியின் வதனம் பாதி மூடிய நிலையில், மீதம் இருக்கும் இரண்டு விழிகளை உன்னிப்பாக உள் வாங்கியிருந்தது.

“சொல்லுடா. இவ கண்ணு தானே” என்று மீண்டும் சசி ஆர்வமாக கேட்க,

“ம்... ஆமா அக்கா. இதே கண்கள் தான்.” என்று கண் இமைக்காமல் சொன்னவனைக் கண்டு, மகிழினி குழப்பமாக, அவளையே அறியாமல் தன் மான் விழிப் பார்வையால், அவனைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாள்.

Author – ஹையோ! இதற்குப் பெயர் தான் விழிச் சிறையோ!

Urs

SK💙💛
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top