• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

விவாதக் காதல் - 25

Joined
Jan 15, 2026
Messages
51
விவாதம் – 25


இதோ இன்று புதன்கிழமை மதிய உணவு நேரத்தில், “அக்கா. என்ன இது? யாரு இன்னைக்கு சமைச்சது?” என்று கேட்டவன் தன் கையில் இருந்த சாப்பாடு தட்டை எடுத்துக்கொண்டு சமையல் அறைக்குள் நுழைந்தான்.

“ஏன்டா. நம்ம வள்ளி அக்கா தான் வந்து சமைச்சு வச்சிட்டு போனாங்க. ஏன் என்னாச்சு?” என்றாள் சசி

“இந்த குழம்புக்கு என்ன பெயர்?” என்று முகத்தை சுளித்தான் கொடி.

“சாம்பார் வைக்கிறேன்னு தான் சொன்னாங்க. ஏன் என்னவா வச்சி இருக்காங்க?” என்று கேட்ட சசி, தம்பியின் தட்டில் இருந்து ஒரு வாய் எடுத்து சாப்பிட்டு, “ஏன் நல்லா தானே இருக்கு” என்றாள் சசி

“ஐயோ அக்கா. உனக்கு நாக்கு செத்துப் போச்சு போல. சாம்பார்னா எப்படி இருக்கனும் தெரியுமா?” என்றவன் தன் கையை அலம்பிய பின் சசியின் முந்தனையில் அவன் கையை துடைத்து கொண்டு இருக்க,

“எப்படி இருக்கனும்?” என்று சசி கேட்டாள்

“CM வைக்கிற மாதிரி இருக்கனும்” என்று பெருமிதமாக சொன்னான் கொடி.

“அது யாரு டா CM?” என்று புரியாதவளாக கேட்டாள் சசி.

“அதான் அக்கா. அவங்க” என்றவன் தன் கையில் இருந்த கைபேசியைப் பார்த்து கொண்டு இருந்தான்.

“அவங்கன்னா யாரு?” என்றாள் சசி

“நீ ஒரு மங்குனி அக்கா. நான் யாரை சொல்ல போறேன். எனக்கு வேற எந்த பொண்ணை தெரியும்” என்றவன் மீண்டும் அவன் கைபேசியை பார்த்து கொண்டிருந்தான்.

அவன் கையில் இருந்த கைபேசியை பிடுங்கியவள், "டேய் கேக்குறேன் இல்ல. சொல்லுடா. யாரு அந்த CM?" என்று அழுத்தமாக கேட்டாள்.

“அதான் அக்கா என் நண்பன் சுரேஷ் இருக்கான் இல்ல. அவங்க சிஸ்டர்.”

“டேய்! ஏன் அவளுக்கு பெயர் இல்லையா. அது என்ன CM?” என்று புரியாமல் கேட்க, மௌனமாக சிரித்தான் கொடி.

“என்னடா தம்பி சிரிக்குற? டேய் என்ன வெக்கப்படுறியா. சொல்லிட்டு பண்ணுடா சகிக்கல.” என்று கிண்டல் செய்தாள் சசி

“நான் வெக்கமும் படல. துக்கமும் படல. நீ போய் வேலையை பாரு.” என்றவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்ல,

அவனை பின் தொடர்ந்து வந்த சசி, “டேய் நில்லு. சித்ராவுக்கு செல்ல பெயர் வைக்கிற அளவுக்கு, நீ தேறிட்ட இல்ல” என்றாள்.

“ஐயோ அக்கா. செல்ல பெயர் எல்லாம் இல்ல. அது அவங்க பெயர் தான். நான் சித்ரமகிழினி என்ற பெயரை CM ன்னு கூப்பிட்டேன்.” என்றவனின் இதழ்கள் அவள் பெயரை சொல்லும் போதே புன்னகை பூத்தது.

“சரி அதெல்லாம் விடு. ஆமா அப்படி என்னடா அவ மட்டும் ஸ்பெஷலா சாம்பார் வைப்பா?” என்று கேட்டாள் சசி

“ஸ்பெஷலாவா! அக்கா நீ என்ன மிஞ்சி போனா பருப்புல கத்திரிக்காய், முருங்கைக்காய் மட்டும் தானே போட்டு சாம்பார் வைப்ப. ஆனா, அவங்க சுமார் 10 வகையான சாம்பார் வைப்பாங்க” என்று சொன்னவன் மீண்டும் தன் அக்காவின் அருகில் வந்து அமர்ந்தான்.

“என்னது பத்து வகையான சம்பாரா?” என்று கண்கள் விரிந்தாள் சசி

“ஆமா அக்கா. மணத்தக்காளி கீரை சாம்பார். அப்பளச் சாம்பார். சுண்டக்காய் சாம்பார். கதம்ப சாம்பார். வெங்காயத்தாள் சாம்பார். மொச்சை பயிர் சாம்பார். வெந்தய கீரை சாம்பார். பறங்கிக்காய் சாம்பார். வெண்டக்கா சாம்பார். பலாக்கொட்டை சாம்பார். கொடை மிளகா சாம்பார். அப்புறம்...”

“டேய் போதும்டா.” என்று அடுக்கிக்கொண்டே போன தம்பியைத் தடுத்து நிறுத்தினாள் சசி.

“ஏன்டா அந்த அளவுக்கு அவளோட சமையல் உனக்கு பிடிச்சி இருக்கா?” என்று கேட்டதும்...

“என்ன அக்கா இப்படி கேட்டுட்ட. அவங்க சூப்பரா சமைப்பாங்க. என்ன திறமை தெரியுமா அந்தப் பொண்ணுக்கு இந்த வயசுல ஒரு கேன்டீன் ரன் பண்ணுறாங்கன்னா, எவ்ளோ கெத்து பாரு. நமக்கு எல்லாம் அப்பா இறந்த பின்னாடி, அம்மானு ஒரு பந்தம் இருந்துச்சு. ஆனா, அந்தப் பொண்ணு படிக்கிற வயசுல அம்மா, அப்பாவை இழந்து, பாட்டி அரவணைப்பில் வளர்ந்து, அவங்க பாட்டி சொன்ன பையனை கல்யாணம் பண்ணி, அந்த வாழ்க்கையும் எதிர்பாராத விதமாக ஏமாற்றத்தை தந்தாலும், அவங்க புருஷன் பெயருல ஒரு கேன்டீன் ஆரம்பிச்சு, அதுல எவ்வளவோ பிரச்சனை வந்தாலும், தனி ஆளா நின்னு தில்லா சமாளிக்கிறாங்க பாருங்க. ரியலி பெரிய கிரெடிட் தரணும் அக்கா அவங்களுக்கு. அவங்க ஹஸ்பன்ட் இவங்க பெயர்ல போட்ட, இன்சூரன்ஸ் பணத்தை கூட, அந்த பொண்ணு ஒரு ருபா எடுத்துக்காம, வீரன் வளர்ந்த ஆஸ்ரமதுக்கே தந்துட்டாங்க. ப்ச் அந்த பொண்ணு உண்மையிலேயே கிரேட்க்கா” என்று மனம் மகிழ்ந்து, மகிழினியைக் கொடிவீரன் பாராட்டிக் கொண்டிருக்க, அவனைப் பார்த்து சிரித்தாள் சசி.

?என்ன அக்கா? ஏன் சிரிக்கிற?” என்றான் கொடி

“என் தம்பி முதல்முறை ஒரு பெண்ணை பற்றி இவ்வளவு அனாலிஸ் பண்ணிருக்கானே என்று யோசிச்சு சிரிக்கிறேன்” என்றாள் சசி.

“இதுல நீ யோசிக்கிவோ, சிரிக்கவோ ஒண்ணுமே இல்ல. போ போய் வேலையை பாரு” என்றவன் சோபாவில் இருந்து எழுந்ததும் அவன் கையை பிடித்த சசி “ஒண்ணுமே இல்லையா?” என்று ஆவலாக கேட்டாள்.

“அக்கா இன்னும் ரெண்டு நாளில் உனக்கு கல்யாணம். போ போய் அம்மா எங்கன்னு பாரு” என்றவன் தன் கைபேசியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அன்றைய தினம் இரவு நேரம், சசியின் திருமண ஏற்பாடுகளை எல்லாம் செய்து முடித்த கொடிவீரன், சோர்வாக தன் வீட்டின் திண்ணையில் வந்து அமர்ந்ததும், அவனுக்கு தண்ணீர் கொடுத்தபடி ஜெயா மகன் அருகில் வந்து அமர்ந்தார்.

“அம்மா. அக்கா எங்க?” என்று கொடி கேட்டதும்

“இதோ இருக்கேன்டா” என்று கைபேசியைப் பார்த்துக்கொண்டே வீட்டினுள் இருந்து வெளியே வந்த சசி, “டேய்! சித்ரா வர கார் நம்ம ஊர் எல்லைக்கு வந்துருச்சாம். இன்னும் 5 நிமிஷத்துல அவங்க இங்க இருப்பாங்களாம்” என்று அவள் சொன்ன நேரம் வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது.

“இதோ சித்ரா வீட்டுல இருந்து வந்துட்டாங்க போல” என்று ஆசையாக ஜெயா திண்ணையில் இருந்து எழுந்தவர் காரை நோக்கி நடக்க.

தாயைப் பின் தொடர்ந்து வந்த கொடிவீரனின் கண்கள், ஏனோ அவனின் CMமை பார்க்க ஆவலாகக் காத்திருக்க, அவனை நோக்கி ஓடி வந்த பெண்ணொருத்தி சட்டென்று அவனை கட்டிப்பிடித்து அவனின் கைகளில் இதழ் பதித்தாள்.

அதே நேரம் காரில் இருந்து இறங்கிய சித்ரமகிழினி கண்ணுக்கு எதிரில், கொடிவீரனின் மாமன் மகள் ரதி அவனை கட்டி கொண்டு நின்றிருந்தாள்.

“ஏய்! என்ன பண்ற? நீ ஏன் இப்போ நீ இங்க வந்த?” என்று ஜெயா கத்தியதும் ரதி கொடியின் பின் சென்று ஒளிந்து கொண்டாள்

“அம்மா இப்போ ஏன் அவளைக் கத்துறீங்க. பாவம் அவ பயந்துடப்போறா. நீங்க முதல்ல வந்தவுங்கள போய் வீட்டுக்குள்ள கூப்பிடுங்க” என்று கொடியின் வார்த்தையில், ரதி அன்பாக மீண்டும் அவனை ஒட்டிக்கொண்டாள்.

“வா சித்ரா. உள்ள வா. டேய் வேணு குட்டி, எப்படிடா இருக்க? பாட்டி வாங்க. எப்படி இருக்கீங்க?” என்று சசி அன்பாக இவர்களை வரவேற்று வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள்.

“சித்ரா வா வா. வா உள்ள வா மா எல்லோரும் உள்ள வாங்க.” என்று ஜெயாவும் அழைக்க பாட்டி, வேணு மற்றும் மகிழினி ஆகிய மூவரும் கொடி வீட்டிற்குள் நுழைந்தனர்.
 
Joined
Jan 15, 2026
Messages
51
பாட்டி எப்படி இருக்கீங்க? டேய் வேணு என்னடா நான் இல்லாம நிம்மதியா இருக்க போல” என்று வேணுவை கேட்டவன் தன் பார்வையை மகிழினி மீது செலுத்தினான்.

“தம்பி நீ இல்லாம வீடே ஒரு மாதிரி இருக்குபா. இப்போ உன் முகத்த பார்த்ததும் தான், ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோசம் மனசுல” என்று பாட்டி அன்பாக சொன்னார்.

“ஏங்க நீங்க எப்படி இருக்கீங்க?” என்று கொடி மகிழினியை பார்த்து கேள்வி கேட்க,

மகிழினியோ அவனுக்கு பதில் தராதவள், “அம்மா நல்லா இருக்கீங்களா? அக்கா நீங்க எப்படி இருக்கிங்க?” என்று மற்றவர்களை நலம் விசாரிக்க முகம் வாடி போனான் கொடி.

“மாமா யாரு இவங்க எல்லாம்? ஏன் இவங்க எல்லாம் நம்ம வீட்டுக்கு வந்து இருக்காங்க?” என்று கேட்ட ரதி மீண்டும் கொடியின் கையை கட்டி கொண்டாள்.

“இங்க பாரு. எங்க வீட்டுக்கு யாரு வேணா வருவாங்க. போவாங்க. நீ அதெல்லாம் கேள்வி கேக்கக்கூடாது. முதல்ல உன்னை யாரு இங்க வர சொன்னாங்க. கிளம்பு நீ. உன் அப்பன் பார்த்தா எங்களுக்கு தான் பிரச்சனை.” என்று வார்த்தையால் சீறினாள் சசி.

“நான் ஏன் போகனும்? நான் போக மாட்டேன். அத்த உங்களுக்கும், என் அப்பாவுக்கும் பிரச்சனைனா, நீங்க அடிச்சிக்கோங்க. என்னை ஏன் உங்கள விட்டு தள்ளி நிக்க சொல்றிங்க?” என்று கேட்டாள்.

“இங்க பாரு பாப்பா. நீ இங்க வந்தது தெரிந்தா, உன் அப்பா எங்க வீட்டுல வந்து சண்டை போடுவாரு. நீ கிளம்பு. அக்கா கல்யாணத்துக்காக நம்ம வீட்டுக்கு கெஸ்ட் எல்லாம் வந்துருக்காங்க.” என்று கொடி சொன்னவன் மீண்டும் மகிழினியை பார்க்க, பதிலுக்கு மகிழினி இவனை கண்டு கொள்ளாமல் சசியிடம் பேசி கொண்டு இருந்தாள்.

“இந்த வீட்டுக்கு வரப்போற மருமகள்னு, கொஞ்சம் கூட உங்களுக்கு என் மேல பயம் இல்லாம போச்சு. இருங்க சசி அண்ணி, கல்யாணம் முடியறதுக்குள்ள, எனக்கும், வீரன் மாமாவுக்கும் கல்யாணத்தை நான் முடிச்சி காட்டுறேன்” என்று சவால் விட்டவள் கொடியின் கன்னத்தை கிள்ளியப்படி அங்கிருந்து ஓடி விட்டாள்

“யாருமா அந்தப் பொண்ணு? பாக்க சுட்டித்தனமா இருக்காளே” என்று மகிழினியின் பாட்டி கேட்க,

“என் அண்ணன் மக தான். அவரு போன பின்னாடி, எல்லோரும் பணம் தான் முக்கியம்னு எங்கள ரொம்ப கஷ்டப்படுத்திட்டாங்க. அதான் நாங்க எல்லாம் அவங்க வேணான்னு ஒதுங்கிட்டோம்” என்று கவலையாக சொன்னார்.

“அம்மா இப்போ ஏன் அந்த கதையெல்லாம் பேசிட்டு இருக்கீங்க. வந்தவங்களுக்கு முதல்ல சாப்பிட கொடுங்கம்மா” என்றவன் தன் அருகில் இருந்த தண்ணீரை பாட்டியிடம் தந்தவன், மகிழினியை பார்த்து, “ஏங்க தண்ணி சாப்பிடுறிங்களா?” என்று கேட்டான்.

“எங்க அத்தையைப் பார்த்தா, உங்களுக்கு சரக்கு அடிக்கிற பொண்ணு போல தெரியுதா?” என்று வேணு கேட்க, மகிழினி கொடியை முறைத்தாள்.

“ஐயோ நான் அத மீன் பண்ணி சொல்லலங்க” என்று தன் கன்னங்களை பிடித்துக்கொண்டு அலற, மகிழினியின் இதழ்கள் அவளை மறந்து புன்னகையால் மலர்ந்தது.

“சரி. நீங்க பேசிகிட்டு இருங்க. பாட்டிமா நீங்க கொஞ்சம் உள்ள வாங்களேன்” என்ற ஜெயா, மகிழினியின் பாட்டியை அங்கிருந்து அழைத்து சென்றார்.

“என்ன சித்ரா இது? நீ என் தம்பியை என்ன பண்ண. உன்னை பார்த்தாலே என் தம்பி இப்படி பயப்படுறான்” என்று சசி கேட்க,

“ஆமா ஆமா. நான் அவரை பெஞ்ச் மேல ஏறி நிக்க சொல்லித்தரேன் பாருங்க. அவர் என்னை கண்டு பயந்து போக” என்று கடுப்பாக சொன்னாள் மகிழினி.

“ம்... என்னமோ போ. என் தம்பியை நீ ரொம்ப கஷ்டடுத்துற” என்று சசி சொன்னதும்,

“யாரு நானா? நானா அவரை கஷ்டப்படுத்துறேன். இவரு தான் அடுத்தவங்க மனசை புரிஞ்சிக்காம எப்போ பாரு அவர் நினைக்கிறது தான் சரின்னு சொல்லி என்னை கஷ்டப்படுத்தி பாக்குறாரு. என்று மகிழினி சத்தமாக பேசியதும் கொடியும், சசியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர்.

“இப்போ ஏன் சிரிக்கிறீங்க?” என்று மகிழினி சசியை பார்த்து பொய் கோபத்துடன் கேட்க,

அதே சமயம் சசிக்கு கைபேசி அழைப்பு வர, அங்கிருந்து அழைப்பை ஏற்றபடி தன் அறையை நோக்கி நகர்ந்தாள்.

வேணு உரிமையாக சோபாவில் அமர்ந்தவன், ரிமோட்டை எடுத்து டிவி சேனலை மாற்றி கொண்டு இருக்க, கொடி, மகிழினியை விட்டு தன் பார்வையை விலக்காமல் இருந்தான்.

“ஏங்க சுரேஷ் வரலையா?” என்று கொடி கேட்டதும், மகிழினி பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

“உங்கிட்ட தாங்க பேசுறேன். சுரேஷ் கல்யாணத்துக்கு வரலையா?” என்று மீண்டும் கேட்டான்.

“என்கிட்டயா கேக்குறீங்க?” என்று தன் புருவம் உயர்த்தி கேட்டாள் மகிழினி.

“ஆமா. உங்கிட்ட தான் கேட்டேன். ஏன் நான் கேட்டா நீங்க பதில் சொல்ல மாட்டிங்களா?” என்று கேட்டான்.

“நான் பதில் சொல்லுவேன் தான் சார். ஆனா, நீங்க தான் நான் என்ன சொன்னாலும் நம்பாமல், உங்க பையை தூக்கிட்டு, என்கூட சண்டை போட்டுக்கிட்டு, ஊருக்கு கிளம்பிடுவீங்க” என்றாள்.

இன்னும் அவளுக்குத் தன் மேல் உள்ள கோவம் குறையவில்லை என்று புரிந்து கொண்டான் கொடி. என்ன செய்து சமாதானம் செய்வது என்று தெரியவில்லை அவனுக்கு.

“டேய் தம்பி. இந்தாடா பில். ட்ரெஸ் எல்லாம் ரெடி ஆகிடுச்சாம். போ போய் அதெல்லாம் வாங்கிட்டு வந்துடு” என்றவள் தம்பியிடம் அந்த சீட்டைத் தந்தாள்.

“வேணு நம்ம கடைக்கு போகலாம் வரியா? என்று கேட்டதும்,

“ம்...” என்று சொன்ன வேணு, கொடியுடன் கிளம்பி வெளியே சென்றான்.

“சரி சித்ரா. நீ வா. ஊருல இருந்து வந்த கலைப்புல இருப்ப. வா வந்து குளிச்சிட்டு சாப்பிடு.” என்றவள் மகிழினியை அழைத்து கொண்டு தன் அறைக்கு சென்றாள்.

வேணுவுடன் வெளியே சென்ற கொடி, சில மணி நேரம் கடந்த நிலையில், சில பொருட்களை எல்லாம் வாங்கி கொண்டு வீட்டுக்குள் நுழைந்தபடி, “அக்கா இந்தா, பொருள் எல்லாம் சரியா இருக்கான்னு பாரு” என்றவன் முன் மகிழினி வந்து நின்றாள்.

“சசி அக்கா இப்போ தான் போனை எடுத்துகிட்டு மாடிக்கு போனாங்க. நீங்க வந்தா உங்கிட்ட இந்த நம்பரைத் தந்து, சாப்பாடு எல்லாம் சொன்ன நேரத்துக்கு வரணும்னு சொல்ல சொன்னாங்க.” என்று மகிழினி தன் கையில் இருந்த சீட்டை கொடியிடம் நீட்டினாள்.

“பாட்டியும், அம்மாவும் எங்க? என்று கேட்டு, மகிழினி கையில் இருந்த துண்டு சீட்டை வாங்கி, தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.

“கல்யாணத்துக்கு பிறகு அக்காவுக்கு என்ன சடங்கு எல்லாம் பண்ணனும்னு பேசிகிட்டு இருக்காங்க” என்றவள் அருகில் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டாள்.

கொடி தன் கைபேசியுடன் வெளியே சென்றவன், சில நொடிகள் கடந்த நிலையில் மீண்டும் வீட்டுக்குள் நுழைந்து, “இன்னுமா அக்கா கீழே இறங்கி வரல” என்று கேட்க,

“ஹ்ம் ஹ்ம் இல்ல.” என்று மகிழினி தலையாட்டினாள்.

“சரிங்க. அக்கா வந்தா நான் போன் பண்ணி பேசிட்டேன்னு சொல்லுங்க. நான் போய் நாளைக்கு காலையில மாப்பிள ஊருக்கு போக, வேன் எப்போ வரும்னு கேட்டுட்டு வரேன்” என்றவன் தன் பைக் சாவியை எடுத்து கொண்டு மீண்டும் வெளியே சென்றான்.

விவாதம் தொடரும்...
 
Last edited:

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top