Member
- Joined
- Jan 15, 2026
- Messages
- 45
- Thread Author
- #1
விவாதம் – 22
மறுநாள் காலை எப்போதும் போலவே மகிழினியின் வீட்டுக்கு செல்ல, அங்கே வேணு மட்டும் பாட்டியுடன் அமர்ந்து இருந்தான்.
காலை உணவை சாப்பிட அமர்ந்த கொடியின் கண்கள் மகிழினியை தேடுவதை உணர்ந்த பாட்டி, “என்ன தம்பி? யாரை தேடுற?” என்று கேட்டார்.
“உங்க பேத்தி இல்லையா பாட்டி?”
“அவ பக்கத்துல இருக்குற கோவிலுக்கு போய் இருக்கா” என்று பாட்டி சொன்னதும், அவசரமாக இரண்டு இட்லியை விழுங்கியவன், "வேணு என்கூட வெளிய வரியா?" என்று கேட்டான்.
"ம் வரனே" என்றதும், கொடி வேணுவை அழைத்து கொண்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்றான்.
"வேணு உன் அத்தை இந்த கோவிலுக்கு தானே வந்து இருப்பாங்க" என்று கேட்டான்
"ம்..... ஆமா" என்றான் வேணு
"எங்க அவங்கள காணோம்" என்று தன் பார்வையை அலைய விட்டான் கொடிவீரன்.
"அத்த எப்போ கோவிலுக்கு வந்தாலும், தெப்பக்குளத்துல தான் போய் உக்காந்து இருப்பாங்க" என்று வேணு சொன்னதும், அவனை அழைத்து கொண்டு தெப்பக்குளத்தின் அருகில் சென்றவன் கண் முன், மகிழினி தெப்பக்குளத்தின் படிக்கட்டில் அமர்ந்து, குளத்தில் உள்ள மீன்களுக்கு எல்லாம் பொறி போட்டு கொண்டு இருப்பதை பார்த்தான்.
சத்தம் இல்லாமல் அவள் அருகில் சென்று நின்றவனின் பிம்பம், குளத்தின் உள் இருக்கும் நீரில் பிரதிபலிக்க, மகிழினி தலை தூக்கி பார்த்தவளின் விழிகளுக்குள் நிறைந்து இருந்த கொடிவீரன்
"ஏங்க என்ன தான் உங்க பிரச்சனை? நான் உங்க ப்ரண்ட்னு நீங்க தானே அன்னைக்கு சொன்னிங்க/ இப்போ ஏன் சின்ன விஷயத்துக்கு கூட இவ்ளோ ரியாக்ட் பண்ணுறீங்க" என்று புரியாமல் கேட்டான்.
"எது சின்ன விஷயம்... நீங்க என் அண்ணனுக்கு தனியா பத்திரிக்கை தருவிங்க. என் பாட்டிக்கு தனியா பத்திரிக்கை தருவிங்க. ஆனா, எனக்கு ஒரு பத்திரிக்கை தரணும்னு உங்களுக்கு தோணல இல்ல" என்று கோவமாக கேட்டாள் மகிழினி
"இப்போ என்னங்க? உங்களுக்கு ஒரு தனி பத்திரிக்கை தரணும் அவ்வளவு தானே. சரி தரேன்" என்றான் கொடிவீரன்.
"ப்ச் ஹலோ சார் பிரச்சனை தனி பத்திரிக்கை இல்ல” என்று மீண்டும் சீறினாள் மகிழினி
"பின்ன” என்று கொடி புருவம் உயர்த்தினான்
"நமக்குள்ள எத்தனையோ கருத்து வேறுபாடு இருந்தாலும், நான் உங்கள என்னோட நண்பனா தான் பார்த்தேன். ஆனா, நீங்க கூட என்னை அப்போ இந்த ஊர் உலகம் ஒதுக்கி பார்ப்பது போல தான் பாக்குறீங்க இல்ல" என்று மகிழினி கேட்கும் கேள்விக்கு உண்டான பதில் தெரியாமல் கொடிவீரன் குழம்பிய வண்ணம் நின்று இருந்தான்.
“ஏங்க... சத்தியமா நீங்க சொல்றது எனக்கு புரியல. நீங்க என் அக்கா கல்யாணத்துக்கு வந்தே ஆகணும்... இது என்னோட அம்மா, அக்காவின் ஆசை. பிளீஸ் நீங்க வரதுக்கு நான் இப்போ என்னங்க பண்ணனும்?”
“ஓ... உங்க அக்காவும், அம்மாவும் மட்டும்தான் ஆசைப்படுறாங்க இல்ல. நான் சசி அக்கா கல்யாணத்துக்கு வரணும்னு, உங்களுக்கு அப்போ ஆசை இல்ல. அப்படித்தானே?” என கோபமாகக் கேட்டாள்.
“ஏங்க. நீங்க எப்பவும் இப்படிதானா? இல்ல என்கிட்ட மட்டும் இப்படி இருக்கீங்களா?”
“எப்படி இருக்காங்க? நீங்க சொன்ன மாதிரி அழு மூஞ்சி, சிடு மூஞ்சி போல இருக்கேனா.”
“ஐயோ இல்லிங்க. அன்னைக்கு நான் ஏதோ கடுப்புல அப்படி சொல்லிட்டேன். உண்மைக்கே நான் உங்கள அப்படி சொல்லி இருக்க கூடாது. ஐஆம் ரியலி சாரி.”
“ம்..... இருக்கட்டும்... ஆமா. நீங்க என்ன காலையிலேயே கோவிலுக்கு வந்து இருக்கீங்க?”
“உங்கள பார்க்க தான் வந்தேங்க.”
“என்னையா” என்று ஆச்சர்யமாகக் கேட்டாள்.
“ம்ங்க.”
“நான் இங்க இருப்பேன்னு உங்களுக்கு யாரு சொன்னது?”
“வேணு தான். ஐயோ வேணு என்கூட வந்தான். அச்சோ பயபுள்ளயை நான் தொலைச்சிட்டேன் போல” என்று பதற்றமானான்.
“ஏங்க ஏங்க இருங்க. ஏன் பதறுறீங்க? அவனுக்கு இந்த கோவில் அத்துப்படிங்க. பிரசாதம் கொடுக்குற இடத்துல தான் நின்னுகிட்டு இருப்பான்.”
“ஒஹ்... கூட்டிட்டு வந்த பயல காணோம்னதும் கொஞ்சம் பயந்துட்டேன்.”
“சரி. நீங்க போங்க. நான் இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்துடுவேன்.”
”ஏங்க இன்னும் வேண்டுதல் முடியலையா?”
“இல்ல. நான் எப்பவுமே கோவிலுக்கு போனா. அங்க இருக்குற தெப்பக்குளத்துல கொஞ்ச நேரம் உக்காந்துட்டு தான் வருவேன்.” என்றாள் அவள்.
“ஏன் அப்படி?”
“ம்..... அது...”
“சரி விடுங்க. எதாவது பர்சனல்னா வேணாம்...”
“அப்படி எல்லாம் இல்ல. என்னை பொண்ணு பார்க்க வரும்போது, என்னோட வீரா இந்த மாதிரி இடத்துல தான் என்கூட நின்னு பேசினாரு. அந்த நியாபகம்...”
“ஓஹோ. ஆனா,” என்று நிறுத்த,
“ம்... என்ன?” என்று கேட்டாள்.
“இல்லிங்க ஒண்ணுமில்ல.”
“பரவாயில்ல கேளுங்க.”
“உங்களுக்கு அரேன்ஜ் மேரேஜ் தானே?” சந்தேகமாகக் கேட்டான் கொடிவீரன்.
“ம்... ஆமா.”
“நீங்க கோவப்பட்டாலும் பரவாயில்ல. சுரேஷ் சொன்னான் உங்களுக்கு கல்யாண முடிந்த முதல் நாளே அவரு... சாரி.” என்றான்.
“ம்... புரியுது. நீங்க கேக்க வந்ததை கேளுங்க.”
“எப்படிங்க ஒரு நாள் கூட அவரோட வாழாமல், உங்களுக்கு அவர் மேல இப்படி ஒரு பிரியம்?” அவள் காதலை எண்ணி வியந்து கேட்டான்.
“ம்... நீங்க யாரையாவது காதல் பண்றிங்களா?”
“ஐயோ அதெல்லாம் இல்லிங்க. நம்ம வாய்கு யாரும் சேர்ந்தா போல அரைமணி நேரம் கூட என்கிட்ட பேசமாட்டாங்க” என்றான் அவசரமாக.
“ம்... சரி. இந்த க்ரஷ்னு சொல்லறாங்களே அப்படி எதாவது?”
“ம்... இருக்கு. இரண்டு வருடம் முன்ன, எங்க சொந்த ஊருல ஒரு முறை ஒரு பொண்ணை பார்த்தேன். இல்ல இல்ல அவங்க கண்ண மட்டும் பார்த்தேன். என்னமோ தெரியல. அந்த கண்ணழகியை மீண்டும் பார்த்தா, அவங்களுக்கு கல்யாணம் முடியலைன்னா, முறைப்படி பொண்ணு கேட்டு அவங்கள கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை.”
“ம்... ஊர் பெயர் தெரியாத பொண்ணையே உங்களால இன்னும் மறக்க முடியல. பட், என் கழுத்துல மூணு முடிச்சு போட்ட நொடியில இருந்து, என் வீரா தான் இனி எனக்கு எல்லாமேன்னு, நான் அந்த தாலியோட மகிமையை உணரும் முன், என்னைக் காப்பாற்றி, அவர் உயிரைக் கொடுத்த என் புருஷனை நான் எப்படிங்க மறக்க முடியும்?” என்று கேட்டாள் சித்ரமகிழினி.
“ஐயோ. அவர நீங்க ஏன் மறக்க கூடாதுன்னு எல்லாம் நான் கேக்கலங்க. எப்படி இந்த அளவுக்கு உங்களுக்கு அவர் மேல அன்பு இருக்குன்னு தோணுச்சு. அதான் கேட்டேன். சரி நீங்க என்ன காலமெல்லாம் இப்படியே இருந்துடுவீங்களா என்ன?” என்று கேள்வியாய் நிறுத்தினான்.
“இருந்தா என்ன?? அது தப்பா??”
“தப்பு சரி எல்லாம் அவங்கவங்க பார்வையை பொறுத்தது. அடுத்தவங்க கண் குறைபாடுக்கு, நம்ம மூக்கு கண்ணாடி அணியக்கூடாது.
நான் என்ன கேக்குறேனா, உங்களுக்கு உங்க பாட்டி இன்னோரு கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்படுறாங்க இல்ல. நீங்க ஏன் அதை பற்றி யோசிக்கலன்னு கேட்டேன்.”
“அதுக்கெல்லாம் அவசியம் இல்லைன்னு தோணுச்சு. இன்னும் கேட்டா ஜெயா அம்மா சொன்னது போல, என் வீரன் கட்டின தாலியை நான் கழட்டிட்டேன். ஆனா, இனி பொட்டு எல்லாம் வச்சுக்கணும்னு தான் நானும் முடிவு பண்ணிருக்கேன். உங்களோட கண்டிப்பான அறிவுரை. ஜெயா அம்மாவோட அன்பான அரவணைப்பு, சசி அக்காவோட கிண்டல் பேச்சுன்னு, நானும் கொஞ்ச நாள் என்னை மாத்திகிட்டு தான் இருக்கேன். அதுக்காக தான் அன்னைக்கு நான் உங்களுக்கு மஞ்ச ரோஜா பூவை கொடுத்தேன். அந்த உரிமையில தான், ஏன் எனக்குன்னு நீங்க தனி அங்கீகாரம் தந்து, சசி அக்கா கல்யாணத்துக்கு என்னை தனியா இன்வைட் பண்ணலன்னு கேட்டேன். மற்றபடி உங்க மனச கஷ்டப்படுத்தணும்னு எல்லாம் நினைக்கல.”