• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Jan 15, 2026
Messages
43
விவாதக் காதல்

விவாதம் – 21

ஒரு வாரம் கடந்த நிலையில் சனிக்கிழமை அன்று, கொடிவீரன் ஜவுளி கடைக்கு சென்று தன் கைபேசி மூலம் அவன் அக்காவை அழைத்தான்.

“என்னடா கடைக்குப் போயிட்டியா?”

“ம்... வந்துட்டேன் சொல்லுக்கா. என்ன வேணும்?”

“ஒரு கண்டாங்கி சேலை எடுத்துக்கோ.”

“ம்... வேற.”

“10 வயசு பையன் போடுற மாதிரி ஒரு பேண்ட் ஷர்ட் எடுத்துக்கோ.”

“ம்... அடுத்து?”

“அப்புறம் உன் நண்பன் சுரேஷ் இருக்காரு இல்ல. அவருக்கும் அவரோட மனைவிக்கும் டிரஸ் எடுத்துக்கோ”

“ம்... அப்புறம்?”

“அப்புறம் ஹாங். சுரேஷ்கு எத்தனை பசங்கன்னு சொன்ன?”

“நாலு பேர் இருக்காங்கக்கா.”

“வேணுக்கு சொல்லிட்டேன். அப்போ இன்னும் 3 பேருக்கு என்ன வயசுன்னு கேட்டு, அவங்க மூணு பேருக்கும் எடுத்துக்கோ.”

“ம்... சரிக்கா.”

“அப்புறம் ஹ்ம்... அப்புறம் அவ்வளவு தான்டா.” என்றாள் சசி.

“அக்காஆஆ” என்றவன் குரல் கொஞ்சம் சத்தமாக வர,

“என்னடா கத்துற?”

“அவங்களுக்கு எடுக்க வேணாமா?” என்றாள் சின்னக்குரலில்.

“யாருக்கு?” என கேட்ட சசிக்கு உள்ளுக்குள் புன்னகை.

“அதான் அவங்களுக்கு?”

“அதான் யாருடா? ஏன் அவங்களுக்கு பெயர் இல்லையா?”

“அதான் அக்கா அந்த பொண்ணுக்கு.”

“புரியுற மாதிரி பேசுடா. எந்த பொண்ணுக்கு?” என்று குரலை கொஞ்சம் மிரட்டலாகக் கொண்டு வந்தாள் சசி.

“ப்ச் அக்கா ஏன் இப்படி பண்ணுற?”

“நான் என்னடா பண்ணேன்?”

“சரி நான் போனை வச்சிடுறேன்.” என்று வைக்கப்போக,

“டேய் டேய் இரு” என்றாள்.

“என்ன?” என்று சிடுசிடுப்புடன் கேட்டான் கொடிவீரன்.

“சித்ராவை தானே கேக்குற?”

“ம்... ஆமா”

“ஏன் அத வாய் திறந்து கேட்டா என்ன?”

“ப்ச்... நீயா சொல்லுவன்னு நினைச்சேன். நீதான் ரொம்ப பிகு பண்ணுற.”

“நீயா கேக்கணும்னு நான் நினைச்சேன்” என்றாள் அவனுக்கு அக்கா நானடா என்பதாய்.

“ம்... உனக்கு ரொம்ப கிண்டல் தான்க்கா.” என்றான் சன்னமான சிரிப்புடன்.

“சரி அவளுக்கு அழகான பட்டுப்புடவை எடு.”

“அக்கா அந்தப் பொண்ணு பட்டுப்புடவை எல்லாம் கட்ட மாட்டாங்க போல.”

“பாருடா. ஹ்ம். ஆனா, அதெல்லாம் உனக்கு தேவையில்லாத வேலை. அவ கட்டலைனாலும் சரி. நீ அவளுக்கு ஒரு பட்டுப்புடவை எடுத்துடு.” என்றாள் உத்தரவாக.

“ம்... சரிக்கா” என்று சொன்னவன், தன் கைபேசி இணைப்பை துண்டித்து, அக்கா சொன்னது போல, அனைவருக்கும் ஆடைகளை வாங்கியவன், சித்ரமகிழினிக்கு புடவை வாங்குவதற்காக, பட்டுப்புடவை பிரிவுக்குள் சென்றான்.

சில பல புடவைகளை பார்த்தான். "இதுல எந்த கலர் அவங்களுக்கு பிடிக்கும்னு தெரியலையே" என்று தனக்குள் யோசித்தபடி புடவைகளை பார்த்து கொண்டு இருக்க, அவனை நோக்கி பெரியவர் ஒருவர் வந்தார்.

"என்ன தம்பி? என்ன கலர் புடவை வாங்குறதுன்னு தெரியலையா?" என்று அவர் கேட்டதும்

தன் தலையை சொறிந்தபடி நின்றவன், "ம்... ஆமா சார்" என்றான்

"என்னபா கல்யாணத்துக்கு புடவை எடுக்குறியா?" என்று அவர் கேட்க,

இவனும் இயல்பாக, "ஆமா சார். கல்யாணம் தான். ஆனா, என் அக்காவுக்கு கல்யாணம். அதுக்காக பத்திரிகை கூட வச்சி தர, வேற ஒரு பொண்ணுக்கு என் அக்கா புடவை வாங்க சொன்னாங்க. அதான் குழம்பி நிற்கிறேன்."

“ம்... சரிப்பா. இது எல்லாம் புது காலெக்ஷன் தான். இதுல எந்த புடவை பிடிச்சி இருக்குன்னு பாரு.” என்று அங்கு இருந்ததைக் காண்பித்தார்.

“அதான் சார் தெரியல. இதுல இருக்குற எந்த புடவை கட்டினாலும் அவங்களுக்கு நல்லா தான் இருக்கும். ஆனா...”

“வேற என்னப்பா?”

“தெரியல சார். அவங்களுக்கு நான் செலக்ட் பண்ணா பிடிக்குமான்னு தெரியலையே.”

“அப்போ அவங்களையே அழைச்சிட்டு வந்து வாங்கி தா.” என்றார்.

“ஏன் சார் நீங்க வேற. அவங்க எல்லாம் வரமாட்டாங்க.”

“அப்போ அந்த பொண்ணு எப்படி இருப்பாங்கன்னு சொல்லு? நான் அதுக்கு மேட்சா கான்பிக்குறேன்.”

“எப்படின்னா?” என்றான் புரியாது.

“நிறமா இருப்பாங்களா? இல்ல நிறம் கம்மியா, குண்டா இருப்பாங்களா? இல்ல ஒல்லியா?”

“ஏன் சார்? இதெல்லாம் பார்த்து தான் புடவை எடுக்கணுமா?”

“ம்... ஆமாபா. பொருத்தம் இல்லாததை எப்படி எடுத்துக் கொடுப்ப. அதுக்கு எடுக்காம இருக்கலாமே. சரி சொல்லு அந்த பொண்ணு எப்படி இருப்பாங்க?” என்றார்.

“பார்க்க லட்சணமா தான் இருப்பாங்க.”

“சரி. என்ன கலர் புடவை வேணும்?”

“சார் நானே அட்டைல இருக்குற புடவையை பார்த்து செலக்ட் பண்ணிக்கவா?”

“ம்... சரி போய்ப் பாருப்பா.” என்றார்.

மகிழினிக்காக இவனே தேடி தேடி அழகான பட்டுப்புடவையை எடுத்து, “சார் இந்த புடவை தாங்க” என்றான்.

“தம்பி இது கல்யாண புடவைப்பா.”

“அப்படினா?”

“இந்தப் புடவையை கல்யாண பொண்ணுக்குக் கட்டினா அழகா இருக்கும்.”

“அது என்ன கல்யாண பொண்ணு மட்டும் தான் கட்டணுமா என்ன? பொண்ணுனாலே புடவை கட்டலாம் தானே. எனக்கு இந்த புடவை ரொம்ப பிடிச்சி இருக்கு. சோ, நீங்க இதையே கொடுங்க” என்றவன் தான் வாங்கிய ஆடைகளுக்கு எல்லாம் பணம் செலுத்திய பின், துணிகளை வாங்கி கொண்டு வீட்டுக்கு செல்ல, வாசலில் இவன் வருகைக்காக காத்து இருந்தான் வேணு.

"சார் வாங்க வாங்க. உங்களுக்காக தான் வெயிட் பண்ணுறேன்" என்று சொன்னவன், தன் கையில் இருந்த சின்ன பார்சலை அவனிடம் நீட்டினான்.

"என்னடா இது?" என்று கொடி கேட்க

"நீங்க வந்தா உங்கிட்ட தர சொல்லி அத்த தந்தாங்க" என்று சொன்னான்.

கொடி அந்த பார்சலை வாங்கி, வாசலில் நின்றபடியே திறந்து பார்க்க, அதில் தன் அக்காவின் கல்யாண பத்திரிக்கை இருந்ததைக் கண்டு முகம் மலர்ந்தான்.

“என்ன சார்? தனியா சிரிக்கிறீங்க?”

“இல்லடா. என் அக்காவுக்கு கல்யாணம். அத நினைச்சு சிரித்தேன்.”

“ஓ... உங்க அக்காவை கட்டிக்க போற ஆளை நினைத்து சிரிக்கிறீங்களா?” என்று கிண்டல் செய்ய,

“ஆமா. என் அக்கா உன்னைப்போல அருந்த வாலு. அதான் அவங்களுக்கு ஒரு கல்யாணம் நடக்க போறத நினைத்து சிரிப்பு வந்துடுசசி.”

“சரி சரி நீங்க வீட்டுக்குள்ள வந்து சிரிங்க. வாசல்ல நின்னு சிரித்தா உங்கள ப்ராந்துன்னு நினைக்க போறாங்க.”

“ஏய் என்ன லந்தா. சரி பாட்டி எங்க?” எனக் கேட்டான்.

“அப்பா வந்துருக்காரு. அதான் பாட்டி கோவமா இருக்காங்க.”

“அவன் வந்தா ஏன் உங்க பாட்டி கோவப்படனும்?”

“ம்... அவருக்கு வேலையில ஏதோ பிரச்சனையாம். அதனால கொஞ்சம் பணம் தேவையாம். பாட்டிகிட்ட கேட்டாரா, அவங்க தர முடியாதுன்னு சொன்னதால, அத்த அவங்க கேன்டீன் பணத்தை எடுத்து தர, அப்பாவை அழைச்சிட்டு போய் இருக்காங்க அதான் பாட்டிக்கு கோவம்.”

“ஓ...”

“அதோ அத்தையும் அப்பாவும் வராங்க.” என்றான்.

“டேய் மச்சான். எப்படிடா இருக்க?”

“நலம் தான்டா. நீ எப்படி இருக்க? சிஸ்டர் எப்படி இருக்காங்க?”

“எல்லாம் இருக்கோம்.”

“அண்ணா உள்ள போய் பேசுங்க என்ன இது வாசல்ல நின்னுகிட்டு பேசுற பழக்கம்?”

“வாடா உள்ள போகலாம்” என்று அழைத்தான் சுரேஷ்.

“இல்லடா. நான் மேல போறேன்.”

“டேய் உள்ள வந்து டீ குடிச்சிட்டு போ” என்றவன் கொடியை கையோடு வீட்டுக்குள் அழைத்து சென்றான்.

இவன் உள்ளே நுழைந்த தருணம் கொடிக்கு தன் அம்மாவிடம் இருந்து கைபேசி மூலம் அழைப்பு வர, “சொல்லுங்க அம்மா” என்றான்.


“பத்திரிகை வந்துடுச்சு. ம்... சரிம்மா. அப்படியே பண்ணிடுறேன்.” என்றவன் கைபேசி இணைப்பை துண்டித்தான்

"என்ன தம்பி அக்கா கல்யாண வேலையெல்லாம் தடபுடலா நடக்குது போல" என்று கேட்டுக்கொண்டே பாட்டி கொடியை நோக்கி வந்தார்.

"ஆமா பாட்டி. எல்லாம் நல்ல விதமா நடக்குது" என்றவன் தான் வாங்கி வந்த துணிகளை எல்லாம் மேசை மேல் வைத்தான்.

"பாட்டி இந்த சம்பிரதாயம் எல்லாம் எனக்கு தெரியாது. அம்மா உங்க எல்லோர்கிட்டையும் அவங்க சார்புல பத்திரிகை வைக்க சொன்னாங்க. இந்தாங்க வாங்கிக்கோங்க" என்று தன் கையில் இருந்த பார்சலில் இருந்து, ஒரு பத்திரிகையை எடுத்து பாட்டியிடம் நீட்டினான்.

"ரொம்ப சந்தோஷம்பா” என்றவர் பத்திரிகையை பிரித்து வாசித்து கொண்டு இருக்க.

"டேய் மச்சான்! இந்தாடா உனக்கு ஒரு பத்திரிகை. நீயும் உன் குடும்பத்தோட கல்யாணத்துக்கு வந்துடனும்" என்றவன் சுரேஷிடம் ஒரு பத்திரிகையை நீட்ட, அவனும் சிரித்த முகத்துடன் வாங்கிகொண்டவன்

“எப்போ மச்சான் கல்யாணம்?” என்று விசாரிக்க

“இன்னும் ரெண்டு வாரம் இருக்கு மச்சான். நான் நாளைக்கு நைட் பஸ்கு கிளம்பிடுவேன். தலைக்கு மேல வேலை இருக்கும்” என்றவன் மேசை மேல் இருக்கும் துணிகள் நிரம்பிய பையை எடுத்து பாட்டியுடம் தந்தான்.

"பாட்டி அக்கா கல்யாணத்துக்காக, இதுல உங்க எல்லோருக்கும் துணிங்க இருக்கு. அது கூடவே பில் இருக்கு உங்களுக்கு பிடிக்கலைன்னா சேன்ஜ் பண்ணிக்கோங்க" என்றான் சிரித்த முகத்தோடு.

"ஏன்பா இதெல்லாம்" என்று பாட்டி சொல்ல, வேணு ஆசையாக அந்த பையை வாங்கிக்கொண்டான்.
 
Joined
Jan 15, 2026
Messages
43
மச்சான் நீங்க எல்லாம் கண்டிப்பா ரெண்டு நாள் முன்னதாகவே வந்து கல்யாணத்தை முடிச்சு கொடுக்கனும்” என்று கொடி சொன்னதும். தன் கட்டை உயர்த்தி 👍சம்மதம் சொன்னான் சுரேஷ்

“சரி பாட்டி நான் போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வரேன்” என்று மாடிக்குச் செல்ல, சில நிமிடங்கள் கடந்த நிலையில் மீண்டும் கீழே இறங்கி வர,

"வாடா மச்சான். உனக்காக தான் காத்து இருக்கேன்" என்றவன் கொடியுடன் சேர்ந்து இரவு உணவை சாப்பிட்டு கொண்டு இருக்க.

"என்னடா. ஏன் இத்தனை நாள் வீட்டு பக்கமே வரல? ஏன் எதாவது பிரெச்சனையா?"

“ம்... ஆமாடா. அவளுக்கு ஆபரேஷன் பண்ணனும்னு சொல்லிட்டாங்க. பணம் தேவைப்பட்டுச்சு நானும் வேலையில கேட்டேன். அங்க எல்லாம் தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க. கடைசியா என் தங்கச்சி தான் பணம் தந்து இருக்கா. ஒரு அண்ணனா இருந்து நான் பண்ண வேண்டிய வேலையெல்லாம், அவ பண்ணிக்கிட்டு இருக்கா.” என்றான் வருத்தமாக.

“சரி விடு மச்சான். கவலைப்படாத. பணம் தானே சம்பாதிச்சுக்கலாம். சரி சாப்பிடு” என்றான்.

“நீ சாப்பிட்டுட்டு என்னை பஸ் ஸ்டாண்ட்ல விட்டுட்டு வரியா” என்று சுரேஷ் கேட்க,

“ஏன்டா நைட்டே கிளம்பனுமா?”

“ஆமா மச்சான். டெலிவரி தேதி நெருங்கிடுச்சு, எந்த நேரத்துல வேணா என்ன வேணா நடக்கலாம், நான் அவகூடவே இருக்கனும்டா.”

“ம் சரி மச்சான். நீ சாப்பிட்டு வா. நான் போய் உன்ன பஸ் ஸ்டாண்ட்ல விட்டுட்டு வரேன்” என்று சொன்ன கொடி, சுரேஷை பேருந்து நிலையத்தில் இறக்கி விட்ட பின், வீட்டுக்கு திரும்பியவன், மாடியில் இருக்கும் தன் அறைக்கு செல்ல., அங்கே வேணுவும், மகிழினியும் காய போட்ட துணிகளை எடுத்து கொண்டு இருந்தனர்

"என்ன வேணு சாப்பிட்டியா" என்று கொடி கேட்டதும்.

"ம் சாப்பிட்டேன். ஆமா அப்பாவை இறக்கி வீட்டுட்டீங்களா” என்று வேணு கேட்க,

"ஹாங் இறக்கி விட்டுடேன்டா" என்று சொன்னவனின் கைபேசி ஒலிக்க.

"ஹலோ அக்கா" என்றவன் சில நொடிகள் தன் அக்கா சசி பேசியதை கேட்ட பின், தன் கைபேசி இணைப்பை துண்டித்தவனின் பார்வை மகிழினியை உள்வாங்கிய நிலையில் இருந்தது.

"என்ன சார்? எங்க அத்தையை முறைச்சுகிட்டு நிக்குறிங்க. என்ன விஷயம்?" என்று வேணு கேட்க,

"ஏங்க ஏன் என் அக்காகிட்ட பொய் சொன்னிங்க" என்று கொடி மகிழினியை பார்த்து கேள்வி கேட்டான்.

“நான் என்ன பொய் சொன்னேன்" என்று தன் காது மெஷினை சரி செய்தபடி மகிழினி கேட்டாள்

"நான் உங்களுக்கு பத்திரிகை வைக்கலன்னு, என் அக்காகிட்ட பொய் சொன்னிங்களா" என்று கோவமான குரலில் கொடி கேட்டதும்

"நான் பொய் எல்லாம் சொல்லையே. உண்மையை தான் சொன்னேன்” என்று சொன்னவள் காயப் போட்ட துணிகளை எடுத்து கொண்டு கீழே போக,

அவளை பின் தொடர்ந்து கீழே இறங்கிய கொடி, "ஏங்க நில்லுங்க. நான் தான் உங்க வீட்டுல இருக்குற எல்லோருக்கும் பத்திரிகையும், கூட துணி எல்லாம் கொடுத்து என் அக்கா கல்யாணத்துக்கு கூப்ட்பிடேனே" என்றான்.

"அப்படியா எனக்கு தெரியாது" என்றாள் மகிழினி

"விளையாடாதீங்க. அக்கா போன் பண்ணி நான் உங்கள கல்யாணத்துக்கு கூப்பிடலன்னு, நீங்க அவங்கிட்ட சொன்னதா சொல்லி, என்கிட்ட சண்டை போடுறாங்க" என்று கொடி சொல்ல

"சார். உங்க அக்கா உனக்கு என் தம்பி பத்திரிக்கை கொடுத்து, என் கல்யாணத்துக்கு வர சொன்னானான்னு கேட்டாங்க. நான் இல்லைன்னு சொன்னேன். இதுல நான் எங்க இருந்து பொய் சொல்லிருக்கேன்" என்று மகிழினி கேட்க,

"ஏங்க நான் தான் சுரேஷ்கு ஒரு பத்திரிகை. உங்க பாட்டிக்கு ஒரு பத்திரிகைன்னு ரெண்டு பத்திரிகை கொடுத்து, குடும்பத்தோட என் அக்கா கல்யாணத்துக்கு, உங்க எல்லோரையும் வர சொல்லி சொன்னேனே” என்றான் கொடி

"ஒ" என்றவள் அங்கிருந்து நகர்ந்தாள்

"என்னங்க. பதில் கேட்டா ஒ போட்டுட்டு போறீங்க" என்று கொடி கேட்டான்

"சார் நீங்க என் அண்ணனுக்கு ஒரு பத்திரிக்கை வச்சீங்க. என் பாட்டிக்கு ஒரு பத்திரிக்கை வச்சீங்க. ஆனா, எனக்கு நீங்க பத்திரிகையும் வைக்கல. என்னை உங்க வீட்டு கல்யாணத்துக்கும் கூப்பிடல" என்று தெளிவாக சொன்னாள் மகிழினி

"நீங்க உங்க பாட்டி கூட தானே இருக்கீங்க. அப்புறம் எப்படி நான் உங்களுக்கு தனியா பத்திரிக்கை வைக்க முடியும்" என்று எதார்த்தமான மனநிலையில் பதில் சொன்னான் கொடி.

"ஒ... அப்படி சொல்ல வறீங்களா. சரி இப்போ புரிஞ்சிது” என்றாள் மகிழினி சலித்து கொண்டே.

"ஏங்க என்ன தான் உங்க பிரச்சனை இப்போ என்னஉங்களுக்கு நான் தனியா ஒரு பத்திரிக்கை தரணுமா" என்று கொடி கேட்க,.

"சார் கெட்ட காரியத்துக்கு கேள்விப்பட்டதும் போகணும். நல்ல காரியத்துக்கு சொந்த குடும்பமா இருந்தாலும், கூப்பிடாம போக கூடாது" என்று மகிழினி சொன்னபடி அவள் அறைக்கு சென்று விட, அவள் சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் புரியாதவனாக, தன் அறைக்கு சென்றான் கொடி

அறைக்குள் சென்றவன் தன் கைபேசி வாயிலாக மீண்டும் தன் அக்காவை அழைத்து, மகிழினி சொன்ன வார்த்தைகளை சொல்லி அவளிடம் விளக்கம் கேட்க,

"டேய்! அந்த பொண்ணுக்கு நீ தனியா பத்திரிக்கை வைக்கலன்னு பீல் பண்ணுறா போலடா" என்றாள் சசி.

“என்ன அக்கா சொல்லுற? அவங்க பாட்டி கூட இருக்கும் போது அவங்களுக்கு ஏன் நான் தனியா பத்திரிக்கை தரணும்?”

“என்னமோடா. எனக்கும் ஒன்னும் புரியல. ஏன் சித்ரா இந்த விஷயத்துக்கு இவ்ளோ ரியாக்ட் பண்ணுறா?”

“அக்கா அவங்களுக்கு உன் கல்யாணத்துக்கு வர விருப்பம் இல்லயோ என்னமோ. அதான் சும்மா என்னை கார்னர் பண்ணி ஒரு ரீசன் தேடுறாங்க போல.”

“இல்ல இல்ல. எனக்கு என்னமோ அப்படி தோணல. அவ எதையும் நேர்ல பேசுற ஆளு. அவளுக்கு பிடிக்கலைன்னா வர முடியாதுன்னு சொல்லுறதுக்கு, உண்டான நேர்மை அவகிட்ட இருக்கு.”

“அப்போ ஏன் இந்த சின்ன விஷயத்துக்கு இப்படி பேசணும்.”

“ம்… தெரியலடா. சரி விடு. அம்மா இப்போ தூங்குறாங்க. நான் காலையில உனக்கு கால் பண்ணுறேன். நீ உன் போனை சித்ராகிட்ட கொடுத்து அம்மாகிட்ட பேச சொல்லு.” என்றவள் கைபேசி இணைப்பை துண்டிக்க கொடிவீரன் குழம்பிய மனநிலையோடு உறங்கி எழுந்தான்.

விவாதம் தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top