• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

விவாதக் காதல் - 15

Joined
Jan 15, 2026
Messages
33
விவாதக் காதல்

விவாதம் - 15

"சரி இருங்க. நான் போய் சன்னிதானத்தை இன்னும் ஒரு முறை சுத்திட்டு வந்திடுறேன். சசி நீயும் வா” என்று ஜெயா தன் மகளை அழைத்து கொண்டு கோவிலை சுற்றி வர சென்றார்.

"ஏங்க. ஏன் இதெல்லாம். நான் அவங்கள வெளிய வீடு எடுத்து தங்க வச்சிக்கிறேன்” என்று கொடி மீண்டும் முதல் இருந்து ஆரம்பிக்க.

“ப்ளீஸ் சார். நான் உங்களுக்கு நிறைய கடமைப்பட்டு இருக்கேன். இந்த ஒரு செயலை செய்தாவது, உங்களுக்கு நான் பட்ட கடனை சரி பண்ணிக்கிறனே” என்று சொன்ன மகிழினியை எதிர்த்து பேச மனமில்லாமல் சிலையாக நின்று இருந்தான் கொடி

ஏதோ யோசனையில் கோவிலை சுற்றி வந்த ஜெயா, தொலைவில் இருந்து கொடியையும் மகிழினியையும் பார்த்தவர்.

"ஏன்டி சசி. அந்தப் பொண்ணு பார்க்க நல்ல பொண்ணா இருக்கா இல்ல. எவ்வளவு அமைதியா பேசுறா. நல்ல முக லட்சணமா வேற இருக்கா. இந்த பொண்ணு என்ன ஆளுங்கனு கேட்டா, நம்ம கொடி வீரனுக்கு இவளை பேசி முடிக்கலாம் இல்ல” என்று ஜெயா தன் மனதில் பட்ட ஆசையை தன் மகளிடம் வெளிப்படுத்தினார்.

‘அவளோட அழகை பார்த்து ரசிக்கிற உனக்கு. அவளோட ஆழ்மனசுல இருக்குற வேதனை புரியாதும்மா’ என்று சசி தனக்குள் எண்ணிகொண்டாள்.

"சரி வாடி போகலாம். நேரமாகுது பாரு” என்று ஜெயா தன் மகளை அழைக்க, மகிழினி ஒரு ஆட்டோவில், கொடியின் அக்காவையும், அம்மாவையும் தன் வீட்டுக்கு அழைத்து செல்ல, இவர்களை பின் தொடர்ந்து வந்தான் கொடி.

ஆட்டோவில் இருந்து முதலில் இறங்கிய மகிழினியை பார்த்து, வாசலில் நின்று இருந்த அவளின் பாட்டி, மகிழ்ச்சியில் ஓடி வந்து அவளை கட்டி கொள்ள காரணம், மகிழினியின் நெற்றியில் இருந்த குங்குமப் பொட்டு என்ற உண்மை கொடிக்கு மட்டுமே தெரிந்து இருந்தது.

"பாட்டி. இவங்க இவரோட அம்மாவும், அக்காவும். ஒரு சின்ன வேலையா நம்ம சென்னைக்கு வந்து இருக்காங்க. அந்த வேலை முடியும் வரை இவங்க நம்ம வீட்டுலயே இருக்கட்டும்னு தான் அழைச்சிட்டு வந்தேன்”
என்று மகிழினி சொன்ன எதுவும் பாட்டியின் காதில் விழவில்லை.

"வணக்கம்ங்க” என்று ஜெயா சொல்ல.
“ஹாய் பாட்டி.” என்று சுட்டிதனமாக கண் அடித்தாள் சசி.

"பாட்டி. நான் பக்கத்து தெருவுல தான் ஒரு வீடு பாத்து இருக்கேன். என் அம்மாவும், அக்காவும் பத்து நாளைக்கு அங்கேயே தங்கி அவங்க பூஜையை முடிச்சிட்டு கிளம்பிடுவாங்க. ஆனா, உங்க பேத்தி தான். பிடிவாதமா இவங்கள உங்க வீட்டுலயே தங்க வைக்கலாம்னு இங்க அழைச்சிட்டு வந்துட்டாங்க” என்று கொடி சங்கோஜாத்துடன் சொன்னான்.

"என்ன தம்பி நீ. என் பேத்தி சொல்ற மாதிரி, உங்க அம்மாவும், அக்காவும். எத்தனை நாள் வேணுனாலும் இங்கேயே இருக்கட்டும். முதல்ல இவங்கள உள்ள அழைச்சிட்டு வாங்க. வாங்க உள்ள வாங்க” என்று பாட்டி அனைவரையும் அன்போடு வீட்டுக்குள் அழைத்தார்.

சசியும், ஜெயாவும் மகிழினியின் வீட்டுக்குள் நுழைந்ததும், மகிழினி இவர்களுக்கு தண்ணீர் கொடுத்து, "அம்மா என்ன குடிக்கிறிங்க. காபி டீ. இல்லைனா ஜூஸ் போடவா?” என்று கேட்டாள்.

"யாரு இவங்க எல்லாம். என்ன ஒரே கூட்டம். மறுபடியும் என் அத்தையை பொண்ணு பார்க்க யாராவது வந்து இருக்காங்களா என்ன” என்று குரலை உசத்தி கொண்டே வேணு உள்ளே நுழைய.

"டேய் வாலு. கொஞ்சம் சும்மா இருக்கியா. இவங்க நம்ம கொடி தம்பியோட அம்மாவும் அக்காவும்" என்று பாட்டி சொன்னதும், வேணு வந்தவர்களை மேல் இருந்து கீழ் வரை முறைத்து பார்த்தான்.

"என்ன தம்பி. கண்ணு தெரியலையா என்ன. இந்த லுக்கு விடுற. வேணும்னா சாப்பாட்டுக்கு முருங்க கீரை அதிகமா சேர்த்துக்கோ பா. கண்ணு நல்லா தெரியும்” என்று சசி கிண்டல் பண்ண.

"ஹலோ. என்ன லந்தா. எனக்கு கண்ணு எல்லாம் நல்லா தான் தெரியும்” என்று கோவமாக சொன்ன வேணு, அவன் அறைக்குள் புகுந்து கொண்டான்.

"அவன் இப்படி தான் பேசுவான். நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதிங்க. சரி நீங்க பாட்டி கிட்ட பேசிகிட்டு இருங்க. நான் உங்களுக்கு குடிக்க டீ எடுத்துட்டு வரேன்” என்று சொன்ன மகிழினி சமையல் அறைக்குள் நுழைய, பாட்டி அவள் பின் வந்தார்.

“அம்மாடி சித்ரா. இவங்களுக்கு எந்த ரூம் தர போற.?”

“உங்க ரூமுக்கு எதிர்ல இருக்குற அறையை தான் தரலாம்னு இருக்கேன் பாட்டி. அதானே கொஞ்சம் பெருசா இருக்கும்.”

“சரி மா. உன் இஷ்டம்.”

“ம்ம்... என்றாள் மகிழினி

“சித்ரா!”

“சொல்லுங்க பாட்டி.”

“நீ இனிமே உன் நெற்றியில பொட்டு வச்சிக்கோடா. இப்போ தான் லட்சணமா இருக்க.” என்று பாட்டி சொன்னதும் தான் மகிழினிக்கு நினைவு வந்தது. ஜெயா தன் நெற்றியில் வைத்த பொட்டு இன்னும் கலையாமல் இருக்கிறது என்று.

இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் இடத்துக்கு "உள்ளே வரலாமா” என்று கேட்டுக்கொண்டே சசி உள்ளே நுழைந்தாள்.

"வாங்க அக்கா” என்று மகிழினி அழைக்க, பாட்டி அங்கிருந்து சிரித்தபடியே வெளியே செல்ல.

"நாங்க இங்க தங்குறது உங்களுக்கு ஏதும் தொந்தரவு இல்லையே” என்று சசி கேட்டதும்.

"அப்படி எல்லாம் இல்ல அக்கா. நீங்க இங்க நிம்மதியா தங்கி, உங்க பூஜையை சந்தோஷமா முடிச்சிட்டு போங்க” என்று சொன்ன மகிழினி. சசியிடம் டீயை நீட்டினாள்.

“தேங்க்ஸ்மா” என்று சொன்னவள் கையில் ஒரு கப்பை எடுத்து கொள்ள.

மீதம் இருக்கும் தேநீர் நிரம்பிய கோப்பைகளை எடுத்துக்கொண்டு, வரவேற்பறை சென்றவள், அங்கே அமர்ந்து இருக்கும் பாட்டி மற்றும் ஜெயாவுக்கு முதலில் தேநீரை கொடுத்தவள், மீதம் இருக்கும் ஒரு கோப்பையை கொடி முன் நீட்டினாள்.

"ம்., சட்டுப்புட்டுன்னு டீயை குடிச்சிட்டு பொண்ணு பிடிச்சிருக்கான்னு சொல்லுடா" . என்று சசி கிண்டலாக கொடியின் காதில் சொல்ல, தன் கையில் எடுக்கப்போன கோப்பையை எடுக்காமல், கைகள் நடுங்கினான் கொடி.

"என்னாச்சு. டீ வேணாமா?” என்று மகிழினி கேக்க.

"ம்... எடுத்துக்கோடா தம்பி” என்று சசி சொன்னதும், சட்டென்று டீ கோப்பையை கையில் எடுத்தவன்.

"நீ பேசுனது மட்டும் அந்த பொண்ணு காதுல விழுந்து இருந்திச்சு. இந்த டீயை என் மூஞ்சில ஊத்தி இருப்பாங்க” என்று சசியின் காதை கடித்தான் கொடி.

"அம்மா. நீங்க அந்த ரூம்ல தங்கிக்கோங்க. உங்களுக்கு வேற என்ன தேவைன்னாலும் சொல்லுங்க. இது உங்க வீடு மாதிரி. எதுக்கும் சங்கோஜம் படாதீங்க” என்று மகிழினி சொல்ல. ஏனோ ஜெயாவின் கண்கள் மகிழினியை விட்டு விலகாமல் இருந்தது.

"ஏன் தம்பி. இந்த ரூம் நல்லா பெருசா இருக்கும்பா. நீயும் கூட உங்க அம்மா, அக்கா கூடவே தங்கிக்கலாம் இல்ல.” என்று பாட்டி சொன்னதும்.

"இல்ல பாட்டி. நான் மாடிலேயே தங்கிக்கிறேன்” என்று சொன்ன கொடியை மேலும் யாரும் வற்புறுத்தவில்லை.

பிரயாண களைப்பில் கொடியின் அம்மாவும், அக்காவும் தங்குவதற்க்காக. மகிழினி ஏற்பாடு செய்து கொடுத்த அறையில் நிம்மதியாக ஓய்வு எடுத்தார்கள் இருவரும்.

இரவு உணவைத் தயார் செய்த மகிழினி வழக்கம் போல் அதை மேசை மேல் வைத்து விட்டு தன் அறைக்குள் புகுந்து கொள்ளாமல். அவள் கைகளாலேயே கொடியின் அம்மாவுக்கும் அக்காவுக்கும் பரிமாறுவதை பார்த்து மகிழினியின் பாட்டிக்கு ஆச்சிரியம் கலந்த மகிழ்ச்சியாக இருந்தது.

"சாப்பாடு ரொம்ப நல்லா இருக்குமா. ரொம்ப அருமையா பண்ணி இருக்க” என்று ஜெயாவின் பாராட்டிற்கு தகுதியான பெண்ணாக இருந்தாள் மகிழினி.

"சாரி சித்ரா. நான் உங்கக்கூட வந்து ஹெல்ப் பண்ணலாம்னு நினைச்சேன். பட் ரொம்ப அசதியா இருந்துச்சு. நல்லா தூங்கிட்டேன் போல” என்று சசி வருத்தமாக சொன்னாள்.

"எங்க அத்தைக்கு இதெல்லாம் ஒரு வேலை இல்ல. எங்க அத்த தினமும் 150 பேருக்கு சமைச்சு தராங்க” என்று முருங்கை அடையை முழுங்கி கொண்டே பேசினான் வேணு.

"உங்களுக்கு இன்னொரு இட்லி வைக்கவா” என்று மகிழினி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், சாம்பாரை ருசித்து சாப்பிட்டு கொண்டு இருந்த கொடியை, தன் விரல்களை சுண்டி அழைத்தாள் சசி.

"என்ன அக்கா” என்று தன் புருவத்தை உயர்த்தியவன் அக்காவின் பார்வை மகிழினி பக்கம் இருப்பதை உணர்ந்து, "என்னங்க?” என்று கேட்டான்.

தன் கையில் இருந்த இட்லியை பார்த்து, "இன்னொரு இட்லி வைக்கவா' என்றாள் மகிழினி.

"இல்ல இல்ல போதும்ங்க. நிறைய சாப்பிட்டுட்டேன். நம்மளே எடுத்து வச்சி சாப்பிடும் போது நமக்கு அளவு தெரியும். பட், யாராவது பரிமாறி சாப்பிட்டா, எத்தனை இட்லி உள்ள போகுதுனே தெரியல. நான் அதிகமா சாப்பிட்டது போல இருக்கு” என்று மூச்சை இழுத்துப் பிடித்தான் கொடி.

"நீயும் உக்காந்து சாப்பிடுமா” என்று ஜெயா சொன்னதும்,

"எங்க அத்த இதெல்லாம் சாப்பிட மாட்டாங்க. அவங்க நைட்ல ஒரு கிளாஸ் பால் மட்டும் தான் குடிப்பாங்க” என்றான் வேணு.

"ஐயையோ! நைட் ஒரு வேள சாப்பிடலைனா ஒரு சிட்டுக் குருவி அளவுக்கு நம்ம உடம்புல சதை குறைந்துடும். வா வா. வந்து எங்க கூட உக்காந்து சாப்பிடு வா” என்று உரிமையாக ஜெயா அழைத்து, மகிழினியை தன் அருகில் அமர்த்தி, ஒரு தட்டில் சாப்பாட்டை எடுத்து வைத்தார்.

மறுப்பு ஏதும் சொல்லாமல், இரவு உணவை பேத்தி சாப்பிடுவதை பார்த்து பாட்டிக்கு ஆச்சிரியம் கூடிப் போனது.
 
Joined
Jan 15, 2026
Messages
33
ஒரு வழியாக அனைவரும் இரவு உணவை சாப்பிட்டு முடிக்க, கொடி சில மணி நேரம் தன் அம்மா அக்காவிடம் பேசிக்கொண்டு இருந்தான். பாட்டியும் இவர்களுடன் சேர்ந்து அரட்டை அடித்து கொண்டு இருக்க, .மகிழினி எப்போதும் போலவே கையில் தண்ணீருடன், மாடிக்கு மல்லி பூ தோட்டத்தை நோக்கி செல்ல, சசியின் கவனம் மட்டும் மகிழினியின் மீதே இருந்தது.

"ஏம்ப்பா. நாளைக்கு இங்க இருந்து எத்தனை மணிக்கு கிளம்புனா சரியா இருக்கும்?” என்று ஜெயா கேக்க.

"ஆறு மணிக்கு கிளம்புங்க. சரியா இருக்கும்" என்று சொன்னான்.

"என்ன கிளம்புங்களாவா? அப்போ நீ வரலையா?" என்று மகனிடம் கேட்டார் ஜெயா.

"அம்மா. என்னால வேலைக்கு லீவு எல்லாம் போட முடியாது. நான் கேப் புக் பண்ணித் தரேன். நீங்க அக்காவை அழைச்சிக்கிட்டு தினமும் கோவிலுக்கு போய் எங்க எல்லாம் பூஜை பண்ணணுமோ அங்கெல்லாம் பண்ணிட்டு வந்துடுங்க”என்று கொடி சொன்னான்.

"கேப்ல போற மாதிரி இருந்தா. பாட்டி கூட எங்களோட வரலாமே” என்று சசி கேட்டாள்.

"நானா?” என்று பாட்டி யோசிக்க.

"ஏன் பாட்டி. வேணுவுக்கு கூட லீவு தானே. நீங்களும் இவங்க கூட கோவிலுக்கு போயிட்டு வாங்களேன். காலையில போயிட்டு எப்படியும் சாய்ங்காலம் எல்லாம் வந்துவிடலாம்” என்று கொடி சொன்னான்.

"ம்... சரிப்பா. எனக்கும் வீட்ல இருக்க கடுப்பா தான் இருக்கு. நான் என் பேத்திகிட்ட சொல்லிட்டு, வேணுவை அழைச்சிட்டு கோவிலுக்கு போய்ட்டு வரேன்” என்றார் பாட்டி.

"ஐயோ! நானெல்லாம் வரல. நான் அங்க வந்தா. என் அத்தை கூட யாரு இருப்பாங்க” என்று வேணு கேக்க.

"உங்க அத்தையை காக்காவா தூக்கிட்டு போக போகுது. எங்க கூட வாங்க சார். நீங்க வந்தா எங்க கூட ஒரு ஆண் துணை வந்தது போல இருக்கும் இல்ல” என்று சசி சொல்ல.

"சரி சரி. நைட்டுக்குள்ள வீடு திரும்புற மாதிரி இருந்தா நான் வரேன்” என்று வேணு சம்மதம் சொன்னான்.

"ஏன்பா. அப்போ உன் அத்தைக்கு கல்யாணம் முடிஞ்சு இந்த வீட்டை விட்டு போயிட்டாங்கனா, நீ என்ன அவங்க கூடவா போக போற. அப்போ நீ தனியா தானே இருக்கனும்” என்று கொடியின் அம்மா ஜெயா சிரித்து கொண்டே கேட்டாள்.

"எங்க அத்த தான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களே” என்று வேணு சொன்னதும், ஜெயா புரியாமல் பாட்டியை பார்க்க.

"என் பேத்திக்கு ஒரு மறுமணம் பண்ணி வைக்க தான்மா நானும் போராடிக்கிட்டு இருக்கேன்” என்று பாட்டி கண்கள் கலங்கினார்.

"என்ன சொல்றிங்க? மறுமணமா?” என்று அதிர்ந்தார் ஜெயா.

அப்போது தான், மகிழினியின் கடந்த கால இழப்பை பற்றி முழுவதுமாக மகிழினியின் பாட்டி அனைவரின் முன்னிலையிலும் சொல்லி கண் கலங்க, ஜெயாவின் கண்களும் கண்ணீர் சிந்தியது.

"பாட்டி. நீங்க கவலைப்படாதீங்க. உங்க பேத்திக்கு சீக்கிரம் நல்லது நடக்கும். நாளைக்கு நீங்க எங்க கூட கோவிலுக்கு வாங்க” என்று சசி சொன்னதும், ஒரு வழியாக இவர்களுக்குள் பேசி, மறுநாள் காலை கோவிலுக்கு செல்ல முடிவெடுத்த நிலையில், அன்றைய இரவு அனைவரும் நிம்மதியாக உறங்க செல்ல, ஏனோ கொடியின் அம்மா ஜெயாவிற்கு மட்டும் மகிழினியின் நினைவாகவே கண் மூட மறுத்தது.

மறுநாள் காலை எப்போதும் போலவே, மகிழினி வீட்டு வேலையை முடித்த பின். அவள் உணவகம் செல்ல.

கொடி ஏற்பாடு செய்த கேப்பில் சசி, ஜெயா, வேணு மற்றும் பாட்டி ஆகியோர் கோவிலுக்கு கிளம்பினார்கள்.

கொடியும் எப்பொழுதும் போலவே தன் வேலைக்கு கிளம்ப, அன்றைய தினம் மாலை 4 மணி அளவில். மகிழினியும், மகிழினியின் கணவர் வீரன் வளர்ந்த ஆஸ்ரமத்தின் உரிமையாளருமான பழனியும், கொடியின் அலுவலகத்திற்கு வருகை தந்து இருந்தனர்.

மகிழினியை பார்த்த கொடி, தானாக முன் வந்து அவளுக்கு என்ன தேவை என்று விசாரித்தான்.

“வணக்கம் சார். இன்னும் பணம் என் அக்கௌன்ட்க்கு ட்ரேன்ஸ்பர் ஆகல. அதான் என்ன விவரம்ன்னு கேக்க வந்தோம்.” என்றாள் மகிழினி.

“இன்னுமா உங்க அக்கௌன்ட்க்கு பணம் வரல. பிளீஸ் நீங்க உள்ள வெயிட் பண்ணுங்க. நான் என்ன ஏதுன்னு செக் பண்ணிட்டு சொல்லுறேன்.” என்றதும் சம்மதித்து உள்ளே செல்ல, சில ஆவணங்களை புரட்டி பார்த்த கொடி, அதில் தன் கையொப்பதை போட்டான்.

“மன்னிச்சிக்கோங்க. என்னால தான் டிலே ஆகியிருக்கு. இதோ இப்ப நான் சிஸ்டம்ல ஏத்திட்டேன். கண்டிப்பா நாளைக்கு காலையில உங்க அக்கௌன்ட்ல பணம் இருக்கும்.” என்று கொடி வாக்குறுதி தந்தான்.

"ரொம்ப நன்றிங்க. அப்பா போகலாமா” என்று பழனியை பார்த்து மகிழினி கேக்க.

"ம். போகலாம்மா” என்று பழனி இருக்கையில் இருந்து எழுந்தார்.

"காபி டீ எதாவது குடிக்கிறிங்களா ஐயா?” என்று கொடி பழனியை விசாரிக்க.

"இல்ல தம்பி. வேணாம்பா. நாங்க கிளம்புறோம்” என்று பழனி அங்கிருந்து வெளியேற.

"வீரா சார் . உங்கள மேனேஜர் கூப்பிடுறாரு” என்று ஒருவன் கொடிவீரனை அழைத்தான்.

"உங்க பெயர் வீராவா தம்பி?” என்று பழனி கேட்டார்.

"ம்... ஆமா சார். கொடி வீரன்” என்றான் கொடி.

சட்டென்று கண்கள் கலங்கிய பழனி. "சரிப்பா நாங்க கிளம்புறோம்” என்று சொன்னவர், மகிழினியை அழைத்து கொண்டு அங்கிருந்து வெளியே வர,

"எதுல வந்திங்க. நான் கேப் புக் பண்ணி தரவா?" என்று கொடி பழனியை பார்த்து கேட்டான்.

"இல்ல சார். ஆட்டோ வெளிய தான் வெயிட் பண்ணுது. நாங்க அதுல போய்கிறோம்” என்று சொன்ன மகிழினி, பழனியுடன் மின்தூக்கிக்குள் ஏறியவள், எதுவும் பேசாமல் அமைதியாக நின்று இருந்தாள்.

"ஏன்மா... அந்த்த தம்பி பெயரைக் கேட்டியா? அவன் பெயரும் வீரன் தான் போல. அவன் அந்த பெயரை சொன்னதும், எனக்கு நம்ம வீரா நினைப்பு தான் வந்துச்சு. இந்த புள்ள கூட நம்ம வீரனை போல, நல்ல குணமான புள்ள போல” என்றார் பழனி.

"அப்பா. ஒருவரின் பெயரை போல, இந்த உலகத்துல பல்லாயிரம் பேருக்கு ஒரே பெயர்கள் இருக்கலாம். ஆனா, நம்ம மனசுல ஒரு பெயருக்கு உண்டான அங்கீகாரத்தை நம்ம செதுக்கி வைத்து இருக்கும் இடத்தை, எப்பேர்ப்பட்ட கொம்பன் வந்தாலும் அவர்களால் நிரப்ப இயலாது”
என்று மகிழினி சொன்ன வார்த்தைகள், இன்றளவும் அவள் தன் கணவன் வீரன் மேல் வைத்து இருக்கும் அன்பை வெளிப்படுத்துகிறது.

பழனியும், மகிழினியும் லிஃட்டில் இருந்து வெளியே வர, அதே சமயம் கொடிவீரன் கையில் கோப்புடன் படிக்கட்டு வழியாக இறங்கி வந்தவன் இவர்களை பார்த்ததும், பரஸ்பரமான புன்னகையை வெளிப்படுத்தினான்.

தன் பைக்கை எடுக்க போன சமயம், அலுவலகத்தின் வாசலில் சிலர் பேனர் வைத்து பட்டாசு வெடிக்க, அதன் சத்தத்தில், தன் காதைப் பிடித்து கொண்டு மகிழினி அதே இடத்தில் மயங்கி கீழே விழுந்தாள்.

அவளைக் கண்டு பதற்றமடைந்த பழனி, "ஐயோ சித்ரா. என்னமா என்னாச்சு?” என்று அருகில் செல்ல,

மயங்கிய மகிழினியைப் பார்த்த கொடி தன் இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கியவன், இவர்களை நோக்கி பதற்றமாக ஓடி வந்தான்.

Urs

SK💙💛
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top