• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

விவாதக் காதல் - 13

New member
Joined
Jan 15, 2026
Messages
27
விவாதக் காதல்
விவாதம் - 13

கொடிவீரன், சித்ரமகிழினி சிக்கியிருந்த ஆள்களின் அருகில் வண்டியை நிறுத்தி, "ஏய் ஏய் என்ன பண்ணுறீங்க. விடுங்க அவங்கள” என்று கத்தியவன், மகிழினியின் காலை கட்டிக்கொண்டு இருந்தவன் கழுத்தில், ஒரு மிதி மிதித்தான்.

மகிழினியின் கையை பிடித்து இருந்த இரண்டு பெண்மணிகளும், கண் இமைக்கும் நேரத்தில், அங்கு இருந்து பயந்து ஓடினர்.

"ஏங்க. உங்களுக்கு ஒன்னும் ஆகலையே” என்று கொடி மகிழினியை விசாரிக்கும் தருவாயில், உடைந்த கண்ணாடி பாட்டிலை கொண்டு, ஒருவன் கொடியை குத்தும் காட்சியை கண்டு, மகிழினியின் விழிகள் அசைவின்றி நின்றது.

உடைந்த கண்ணாடி பாட்டிலை கொண்டு, வலது பக்க தோள் பட்டையில் குத்திய அந்த நபர், கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து ஓடி விட்டான். வலியால் துடித்த கொடிவீரனின் தோள் பட்டையில், ரத்தம் பீச்சிக் கொண்டு வெளியேறியது.

"ஐயோ ரத்தம்” என்ற மகிழினி, அரண்டு அடித்து கொடியின் அருகில் ஓடி வந்து, "ஏங்க. வாங்க உடனே ஹாஸ்ப்பிட்டல் போகலாம். ப்ளீஸ் யாராவது காப்பாத்துங்க” என்று கத்தியவள் கண்களில் கண்ணீர் பெறுகியது.

"உங்களுக்கு ஒன்னும் ஆகலையே “என்று தன் வலியை மறைத்து கொண்டு அவன் கேட்டதும், மகிழினி குற்றவுணர்ச்சியில் கூனிக் குறுகினாள்.

"உங்களைக் காணாம உங்க பாட்டி பயந்து இருக்காங்க. தயவுசெய்து முதல்ல அவங்கள போய்ப் பாருங்க” என்று சொன்னவன், தன் இடது கை கொண்டு, வலது புற தோள் பட்டையில் வெளியேறிய இரத்தத்தைக் கட்டுப்படுத்தினான்.

சுற்றி முற்றும் பார்த்த மகிழினி, தன் கண்ணீரை துடைத்து கொண்டு, சுற்றிலும் பார்த்தவள் என்ன நினைத்தாளோ, அருகில் இருந்த கூர்மையான கல்லில், தன் புடவையின் முந்தானைப் பகுதியை வைத்து கிழித்து, அவன் தோள் பட்டையில் சுத்தினாள்.

“சார். நீங்க எழுந்துடுங்க. நாம நடந்தே கிளினிக் போயிடலாம். இங்க கண்ணுக்கு எட்டும் தூரத்துல ஒருவரையும் காணோம்” என்றவள். கொடியை கைத் தாங்கலாக தூக்கினாள்.

"எனக்கு ஒண்ணுமில்லைங்க. நீங்க போங்க. நான் வண்டியை எடுத்துக்கிட்டு பின்னாடியே வரேன்” என்றான் கொடி.

"வண்டியெல்லாம் அப்புறம் எடுத்துக்கலாம். நம்ம முதல்ல கிளினிக் போகலாம் வாங்க” என்று கொடியின் இடது கரங்களை பற்றிக்கொண்டு கிளினிக்கை நோக்கி நடக்கையில், வழியில் நின்றிருந்த ஒன்று இரண்டு நபர்கள் கூட, வேடிக்கை பார்த்தனரே தவிர, இவர்களுக்கு உதவ முன் வரவில்லை. கசப்பான உண்மை என்னவென்றால் இதுதான் இந்தக் கலிகாலத்தின் நிஜமுகம்.

மகிழினியின் உதவியோடு, தன் வலியை பொறுத்து கொண்ட கொடிவீரன், அதே கிளினிக்கில் நுழைய, இவர்கள் வருகையை பார்த்து பாட்டியும், வேணுவும் அரண்டு போனவர்கள்.

"ஐயோ தம்பி என்னப்பா ஆச்சு” என்று பாட்டி பதற.

"ஒண்ணுமில்ல பாட்டி. சின்ன அடி தான்" என்று பாட்டியை சமாதானம் செய்த கொடி, அதிகப்படியான ரத்த வெளியேற்றத்தின் காரணமாக, அரை மயக்கத்தில் ஒரு இருக்கையில் அமர்ந்தவன் அருகில், வேணு கண்கள் கலங்கிய நிலையில் நின்று இருந்தான்.

"டாக்டர். சீக்கிரம் இவருக்கு சிகிச்சை பண்ணுங்க” என்று மகிழினி மருத்துவரிடம் பதட்டமாக சொன்னாள்.

"காயம் எப்படி ஏற்பட்டுச்சு” என்று கிளினிக்கில் விசாரிக்க.

"என்னை காப்பாத்த வந்த இவரை, ஒருவன் கண்ணாடி பாட்டில்ல குத்திட்டான்” என்று கண்கள் கலங்கி மகிழினி சொன்னதும்.

"தெரியாமல் நடக்கிற காயங்களுக்கு தான்மா நாங்க ட்ரீட்மென்ட் எடுப்போம். இது இரண்டு பேர் சண்டையினால ஏற்பட்டது. இந்த காயத்துக்கு ட்ரீட்மென்ட் பண்ணுறதுக்கு முன்னாடி, போலீஸ் கம்ப்ளைன்ட் காப்பி வேணும். அதைக் கொடுத்ததும் உடனே சிகிச்சை ஆரம்பிச்சிரலாம்” என்றார் மருத்துவர்.

பாட்டி மகிழினியை கோவமாக முறைத்தார். அவள் அவரைக் கவனிக்கும் நிலையில் இல்லை. "நீங்க முதல்ல டிரீட்மென்ட் தாங்க டாக்டர். போலீஸ் கேஸ் எல்லாம் நாங்க பாத்துக்குறோம். ப்ளீஸ் டாக்டர். அவருக்கு நிறைய இரத்தம் போகுது. பாருங்க டாக்டர்” என்று கரங்கள் கூப்பி மன்றாடினாள் மகிழினி.

"அதெல்லாம் சரிவராதுமா. ட்ரீட்மென்ட் ஆரம்பிச்ச பின்னால, ஏதாவது ஒண்ணுன்னா, எங்களை பலிகடா ஆக்கிட்டுப் போயிருவீங்க. நான் எதோ சின்னதா கிளினிக் வச்சிப் பிழைப்பை ஓட்டிட்டு இருக்கேன். என்னால முடியாதுமா” என்றார் உறுதியாக.

“டாக்டர். என்னைக் காப்பாத்தப் போய்தான் அவருக்கு இப்படி ஆச்சுது. நீங்க ஆரம்பிங்க. நான் இப்பவே போய் கம்ப்ளைன்ட் பண்ணி, அவங்க தருவதை வாங்கிட்டு வர்றேன். நீங்க தாமதிக்கிற நிமிடங்கள் தான் டாக்டர், அவருக்கு ஆபத்து. ப்ளீஸ் டாக்டர்” என்று கண்ணீருடன் கெஞ்சினாள்.

“ஓகே. நாங்க இப்போ டிரீட்மென்ட் தரோம். ஆனா, போலீஸ்ல நீங்க கேஸ் ரெஜிஸ்டர் பண்ணிட்டு, எங்கிட்ட எப்.ஐ.ஆர் காப்பி தரணும். அதுக்கு முன்ன இந்த பார்ம்ல கையெழுத்து போடுங்க” என்று கொடிவீரனுக்கு சிகிச்சை அளிக்கச் செல்ல, அவர்கள் சொன்னது போலவே எல்லா நிபந்தனைக்கும் சம்மதித்து மகிழினி கையெழுத்து போட்டு தந்தவள், அப்படியே காவல் நிலையம் சென்று, கம்ப்ளைன்ட் காப்பி வாங்கி வந்தாள்.

கொடியின் நிலையைக் கண்டு, மகிழினி கலங்கி இருந்த நிலையில், சிகிச்சை முடித்து வெளியே வந்த மருத்துவர், "அவருக்கு ப்ளீடிங் ஸ்டாப் பண்ணி, தோள்பட்டையில் கட்டு போட்டு, இன்ஜெக்ஷன் போட்டு இருக்கு. இப்போதைக்கு பெய்ன் கில்லர் தந்து இருக்கோம். வலி ரொம்ப இருந்தா, இன்னும் நாலு மணி நேரத்துல இன்னோரு டேப்லெட் தாங்க. இன்னும் இரண்டு மணிநேரம் கடந்து, நீங்க அவரை வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாம்” என்று கொடியின் நிலையை விவரித்து சொன்னார் மருத்துவர்.

"நாங்க போய் அவர பாக்கலாமா?” என்று மகிழினி கேட்க,
“போய்ப் பாருங்க” என்று மருத்துவர் சொன்னதும் அவனைப் பார்க்க, பாட்டியும், மகிழினியும் சிகிச்சை அறைக்கு செல்ல, இவர்களை பின் தொடர்ந்தான் வேணு.

தோள் பட்டையில் கட்டுடன் கொடி சிகிச்சை அறையின் கட்டிலில் படுத்து இருக்க, "என்னை மன்னிச்சிடுங்க. என்னால தான் உங்க கையில இவ்வளவு பெரிய காயம்” என்று மீண்டும் கண்ணீர் சிந்தினாள் மகிழினி.

"ஆமா. எல்லாம் உன்னால தான்டி பாவி. இந்தத் தம்பி யாரு பெத்த புள்ளையோ. உன்ன தேடி போய் இப்படி வந்திருக்கு. இந்தப் புள்ளைக்கு ஒன்னு கிடக்க ஒன்னு ஆகியிருந்தா, இவங்க அப்பா, அம்மாவுக்கு யாருடி பதில் சொல்றது?” என்று மகிழினியைக் கடிந்து கொண்டார் பாட்டி.

"எனக்கு தான் பயப்படும்படி ஒன்னும் ஆகலையே பாட்டி. அவங்களை எதுவும் சொல்லாதீங்க” என்றான் கொடி சோர்வாக.

"தம்பி வலி ரொம்ப இருக்காப்பா? இப்போ மயக்கம் வர மாதிரி இருந்தா, நீ ரெஸ்ட் எடுத்துக்கோ” என்று அக்கறையாக பாட்டி சொன்னதும், தன்னால் தான் கொடிக்கு இந்த நிலைமை என்று, தன்னையே நொந்து கொண்டாள் மகிழினி.

கொடி அவனை மறந்து சில நிமிடங்கள் கண் மூட, ரெண்டு மணி நேரம் கடந்த நிலையில், இவனே தன் கைபேசி மூலம் ஏற்பாடு செய்தான். பாட்டி சிகிச்சைக்கான பணம் கட்டி வந்த பிறகு, இவர்கள் அனைவரும் வீட்டிற்குத் திரும்பினார்கள்.

"தம்பி. நீ கூட இங்கேயே தங்கிக்கோ. உனக்கு கை சரியான பின்னாடி மாடிக்கு போகலாம்” என்று அன்புடன் பாட்டி சொல்ல,

"அச்சோ. இல்ல பாட்டி. நான் மாடி ரூம்லயே தங்கிப்பேன். எனக்கு அங்க தான் வசதியா இருக்கும்” என்றான் கொடிவீரன்.

"சரிப்பா. நீ வா. நான் உன்னை மாடிக்கு அழைச்சிட்டு போறேன்” என்றார்.

"பாட்டி நான் நல்லா இருக்கேன். வலது கையில் தான் வலி இருக்கு. மத்தப்படி நான் நல்லா தான் இருக்கேன். என்னை நினைச்சு நீங்க கவலைப்படாதீங்க” என்று சிரித்த முகத்துடன் சொல்லி மாடிக்கு சென்றான்.
 
New member
Joined
Jan 15, 2026
Messages
27
எதையும் யோசிக்காமல் மகிழினியும், வேணுவை அழைத்து கொண்டு, கொடியை பின் தொடர்ந்து மாடிக்கு செல்ல, அங்கே அறைக் கதவைத் திறக்க இயலாமல், கஷ்டப்பட்டு கொண்டு இருந்தான்.

“ஏங்க. என்கிட்ட தாங்க. நான் ஓபன் பண்ணுறேன்” என்று மகிழினி தன் கரங்களை நீட்ட,

கொடி அவளை ஆச்சிரியமாக பார்த்து, "வேணாங்க. நான் பார்த்துக்குறேன். நீங்க போய் ரெஸ்ட் எடுங்க” என்று சொல்லி கொண்டே மீண்டும் பூட்டை திறக்க முயற்சி செய்தவனின் கைகள் வலியை உணர்ந்தது.

"சொன்னா கேக்க மாட்டிங்களா. அதான் அத்தை கேக்குறாங்க இல்ல. கொடுங்க சாவியை” என்று வேணு கட்டளையிட, கொடி சாவியை மகிழினியிடம் தந்தான்.

பூட்டை திறந்து கொண்டு மகிழினி உள்ளே சென்று, அறையில் உள்ள கட்டிலை தட்டி விட்டு, அவன் அமர்ந்து கொள்ள ஏற்பாடு செய்தாள்.

"உங்களுக்கு ஏங்க சிரமம். நான் பார்த்துக்குறேன். ப்ளீஸ் நீங்க கீழே போங்க” என்றான் கொடி தர்மசங்கடத்துடன்.

"எனக்கு சிரமம் எல்லாம் இல்லிங்க. பாவம். என்னை காப்பாத்த வந்து உங்களுக்கு தான் தேவையில்லாம அடிபட்டு இருக்கு. அப்படின்னு பார்த்தா என்னால தான் உங்களுக்கு அதிக சிரமம்” என்று கவலையுடன் சொன்னாள் மகிழினி.

"இப்படியே மாறி மாறி, யாரால உங்களுக்கு சிரமம்ன்னு பேச, இங்க என்ன பட்டிமன்றமா நடக்குது. இப்போவே மணி நைட் இரண்டுக்கு மேல ஆச்சு. தயவு செய்து ரெண்டு பேரும் சீக்கிரமா ஒரு முடிவு எடுத்து தூங்க போங்க” என்று சலித்து கொண்டான் வேணு.

“சரிங்க. நீங்க வேணுவை அழைச்சிட்டு கீழே போங்க.” என்றான்.

“உங்களுக்கு டீ காபி எதாவது எடுத்து வரவா.” எனக் கேட்டாள்.

“இல்லிங்க வேணாம்.”

“சரி. வலி அதிகமா இருந்தா, இதோ இந்த மாத்திரை போடுங்க” என்றதும் அவன் சம்மதமாக தலையசைத்தான். “வேற எதாவது வேணும்னா பாட்டி நம்பருக்கு கால் பண்ணிச் சொல்றிங்களா? என கேட்க,

“ம்...” என்றான் ஓரெழுத்தில்.

"இப்படி எல்லாம் ஆகும்னு நான் நினைச்சு பாக்கல. எல்லாத்துக்கும் என்னோட அவசர புத்தி தான் காரணம். என்னை மன்னிச்சிருங்கன்னு கேக்குறதைத் தவிர, வேற எதுவும் உங்கிட்ட சொல்ல தெரியல” என்றாள் கண்கள் கலங்கியவாறு.

"எனக்கு ஒண்ணுமில்லிங்க. எதையும் யோசிக்காம நீங்க போய்ப் படுங்க” என்று கொடி சொன்னதும், மேற்கொண்டு அவனை தொல்லை செய்யாமல், வேணுவுடன் கீழே இறங்கிச் சென்றாள் மகிழினி.

வலியை மறக்க மாத்திரையை விழுங்கிய கொடிவீரன், ஆழ்ந்த நித்திரைக்கு செல்ல, மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த வேணு. களைப்பில் சோபாவில் படுக்க, பாட்டியும் சோர்வாக மறுபக்க சோபாவில் படுத்துக் கொண்டார்.

மகிழினி தன் அறைக்குள் சென்று, கிழிந்த அந்தப் புடவையை எடுத்துக் கொண்டு தோட்டத்துப் பக்கம் சென்றவள், விறகு அடுப்பைப் பற்ற வைத்து, அந்தப் புடவையைத் தீயிட்டுப் பொசுக்கினாள்.

குளியல் அறை சென்று குளித்து வந்து ஆடை மாற்றினாள். பின், பாட்டியால் கந்தலாக கிழிக்கப்பட்ட, தன் கணவனின் புகைப்படத்தை மேசை மேல் வைத்தவள், அதை அழகாக ஒருசேர இணைக்க ஆரம்பித்தாள். அதில் தன் கணவனின் பாதி பக்க முகம் தென்படாமல் போக, அர்த்த ராத்திரியில் கையில் டார்ச் லைட் உடன் மொட்டை மாடிக்கு ஓடியவள், மல்லி பூ செடிகளின் நடுவில், மகிழினியின் கணவன் வீரனின் கிழிந்த புகைப்படத்தை தேட, கண்ணுக்கு கிட்டியது என்னமோ ஏமாற்றமே.

வீரனின் புகைப்படத்தின் பாதியை காணாமல், மனம் உடைந்து போன மகிழினிக்கு, கண்களில் கண்ணீரும் வற்றி போனது.

யாரை நொந்து, என்ன பயன் என்று தனக்குள் அழுது கொண்ட மகிழினி, கீழே இறங்கி செல்ல, இந்தக் காட்சியை தன் அறையில் படுத்துக்கொண்டு, ஜன்னல் வழியே பார்த்தவன். மகிழினியின் நிலைமையை நினைத்து மனம் வருந்தினான்.

மகிழினியும் தன் வீரனின் புகைப்படத்தை ஒரு பையில் அள்ளி வைத்தவள், அதை தன் இதயதோடு இணைத்து கொண்டு கண்கள் மூடினாள்.

மறுநாள் காலை பொழுது யாருக்காகவும் தாமதிக்காமல் விடிந்தது. காலை ஆறு மணியளவில், வேணு தேநீருடன் மாடிக்கு சென்று கொடிவீரனிடம் கொடுத்துக் குடிக்க வைத்தான்.

“என்ன சார். நல்லா தூங்குனீங்களா?”

“ம்... தூங்குனேன்டா. ஆமா. உனக்கு ஸ்கூல் இல்ல?”

“பத்து நாள் லீவு விட்டுட்டாங்க சார்.”

“ஓஹ்... சூப்பர்டா.

“நீங்க கூட லீவுல தானே இருக்கீங்க.?”

“யாரு சொன்னாங்க. நான் இன்னைக்கு வேலைக்கு போவேன்டா.”

“கை இப்படி இருக்கும்போது, நீங்க எப்படி வேலைக்கு போவீங்க?” என்று கேட்டான்.

“இது சின்னக் காயம் தான்டா. நான் ஊருல கபடி விளையாடும் போது, இத விட பெரிய காயம் எல்லாம் படும். அப்போவே நான் அதெல்லாம் பெருசு பண்ண மாட்டேன். இதென்ன பெருசா” என்றான் அலட்டாது.

“நீங்க கபடி எல்லாம் விளையாடுவீங்களா?”

“ம்... ஏன் உனக்கு கபடி விளையாட தெரியாதா?”

“எனக்கு கபடியும் தெரியாது. கட்டிப் புடியும் தெரியாது. சரி நீங்க போய் ரெடியாகிட்டு வாங்க. நான் போய் அத்தை கேன்டீன்ல இருந்து டிபன் கொண்டு வரேன்” என்று வேணு சொன்ன சமயம், கையில் காலை உணவுடன் கொடியின் அறை கதவை தட்டிக்கொண்டு, உள்ளே வந்தாள் மகிழினி.

"அத்த. நீங்க என்ன கேன்டீன்ல இருந்து சீக்கிரமா வந்துட்டீங்க?” என்று கண்கள் விரித்தான் வேணு.

"அவங்களுக்கு எல்லாம் வேலையை பிரிச்சு கொடுத்துட்டு, நானே உங்களுக்கு டிபன் கொண்டு வந்துட்டேன்” என்று சொன்ன மகிழினி, மேசை மேல் உணவுப் பாத்திரத்தை வைக்க, அவளை ஆச்சர்யமாகப் பார்த்தான் கொடிவீரன்.


விவாதம் தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top