New member
- Joined
- Jan 15, 2026
- Messages
- 27
- Thread Author
- #1
விவாதக் காதல்
விவாதம் - 13
விவாதம் - 13
கொடிவீரன், சித்ரமகிழினி சிக்கியிருந்த ஆள்களின் அருகில் வண்டியை நிறுத்தி, "ஏய் ஏய் என்ன பண்ணுறீங்க. விடுங்க அவங்கள” என்று கத்தியவன், மகிழினியின் காலை கட்டிக்கொண்டு இருந்தவன் கழுத்தில், ஒரு மிதி மிதித்தான்.
மகிழினியின் கையை பிடித்து இருந்த இரண்டு பெண்மணிகளும், கண் இமைக்கும் நேரத்தில், அங்கு இருந்து பயந்து ஓடினர்.
"ஏங்க. உங்களுக்கு ஒன்னும் ஆகலையே” என்று கொடி மகிழினியை விசாரிக்கும் தருவாயில், உடைந்த கண்ணாடி பாட்டிலை கொண்டு, ஒருவன் கொடியை குத்தும் காட்சியை கண்டு, மகிழினியின் விழிகள் அசைவின்றி நின்றது.
உடைந்த கண்ணாடி பாட்டிலை கொண்டு, வலது பக்க தோள் பட்டையில் குத்திய அந்த நபர், கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து ஓடி விட்டான். வலியால் துடித்த கொடிவீரனின் தோள் பட்டையில், ரத்தம் பீச்சிக் கொண்டு வெளியேறியது.
"ஐயோ ரத்தம்” என்ற மகிழினி, அரண்டு அடித்து கொடியின் அருகில் ஓடி வந்து, "ஏங்க. வாங்க உடனே ஹாஸ்ப்பிட்டல் போகலாம். ப்ளீஸ் யாராவது காப்பாத்துங்க” என்று கத்தியவள் கண்களில் கண்ணீர் பெறுகியது.
"உங்களுக்கு ஒன்னும் ஆகலையே “என்று தன் வலியை மறைத்து கொண்டு அவன் கேட்டதும், மகிழினி குற்றவுணர்ச்சியில் கூனிக் குறுகினாள்.
"உங்களைக் காணாம உங்க பாட்டி பயந்து இருக்காங்க. தயவுசெய்து முதல்ல அவங்கள போய்ப் பாருங்க” என்று சொன்னவன், தன் இடது கை கொண்டு, வலது புற தோள் பட்டையில் வெளியேறிய இரத்தத்தைக் கட்டுப்படுத்தினான்.
சுற்றி முற்றும் பார்த்த மகிழினி, தன் கண்ணீரை துடைத்து கொண்டு, சுற்றிலும் பார்த்தவள் என்ன நினைத்தாளோ, அருகில் இருந்த கூர்மையான கல்லில், தன் புடவையின் முந்தானைப் பகுதியை வைத்து கிழித்து, அவன் தோள் பட்டையில் சுத்தினாள்.
“சார். நீங்க எழுந்துடுங்க. நாம நடந்தே கிளினிக் போயிடலாம். இங்க கண்ணுக்கு எட்டும் தூரத்துல ஒருவரையும் காணோம்” என்றவள். கொடியை கைத் தாங்கலாக தூக்கினாள்.
"எனக்கு ஒண்ணுமில்லைங்க. நீங்க போங்க. நான் வண்டியை எடுத்துக்கிட்டு பின்னாடியே வரேன்” என்றான் கொடி.
"வண்டியெல்லாம் அப்புறம் எடுத்துக்கலாம். நம்ம முதல்ல கிளினிக் போகலாம் வாங்க” என்று கொடியின் இடது கரங்களை பற்றிக்கொண்டு கிளினிக்கை நோக்கி நடக்கையில், வழியில் நின்றிருந்த ஒன்று இரண்டு நபர்கள் கூட, வேடிக்கை பார்த்தனரே தவிர, இவர்களுக்கு உதவ முன் வரவில்லை. கசப்பான உண்மை என்னவென்றால் இதுதான் இந்தக் கலிகாலத்தின் நிஜமுகம்.
மகிழினியின் உதவியோடு, தன் வலியை பொறுத்து கொண்ட கொடிவீரன், அதே கிளினிக்கில் நுழைய, இவர்கள் வருகையை பார்த்து பாட்டியும், வேணுவும் அரண்டு போனவர்கள்.
"ஐயோ தம்பி என்னப்பா ஆச்சு” என்று பாட்டி பதற.
"ஒண்ணுமில்ல பாட்டி. சின்ன அடி தான்" என்று பாட்டியை சமாதானம் செய்த கொடி, அதிகப்படியான ரத்த வெளியேற்றத்தின் காரணமாக, அரை மயக்கத்தில் ஒரு இருக்கையில் அமர்ந்தவன் அருகில், வேணு கண்கள் கலங்கிய நிலையில் நின்று இருந்தான்.
"டாக்டர். சீக்கிரம் இவருக்கு சிகிச்சை பண்ணுங்க” என்று மகிழினி மருத்துவரிடம் பதட்டமாக சொன்னாள்.
"காயம் எப்படி ஏற்பட்டுச்சு” என்று கிளினிக்கில் விசாரிக்க.
"என்னை காப்பாத்த வந்த இவரை, ஒருவன் கண்ணாடி பாட்டில்ல குத்திட்டான்” என்று கண்கள் கலங்கி மகிழினி சொன்னதும்.
"தெரியாமல் நடக்கிற காயங்களுக்கு தான்மா நாங்க ட்ரீட்மென்ட் எடுப்போம். இது இரண்டு பேர் சண்டையினால ஏற்பட்டது. இந்த காயத்துக்கு ட்ரீட்மென்ட் பண்ணுறதுக்கு முன்னாடி, போலீஸ் கம்ப்ளைன்ட் காப்பி வேணும். அதைக் கொடுத்ததும் உடனே சிகிச்சை ஆரம்பிச்சிரலாம்” என்றார் மருத்துவர்.
பாட்டி மகிழினியை கோவமாக முறைத்தார். அவள் அவரைக் கவனிக்கும் நிலையில் இல்லை. "நீங்க முதல்ல டிரீட்மென்ட் தாங்க டாக்டர். போலீஸ் கேஸ் எல்லாம் நாங்க பாத்துக்குறோம். ப்ளீஸ் டாக்டர். அவருக்கு நிறைய இரத்தம் போகுது. பாருங்க டாக்டர்” என்று கரங்கள் கூப்பி மன்றாடினாள் மகிழினி.
"அதெல்லாம் சரிவராதுமா. ட்ரீட்மென்ட் ஆரம்பிச்ச பின்னால, ஏதாவது ஒண்ணுன்னா, எங்களை பலிகடா ஆக்கிட்டுப் போயிருவீங்க. நான் எதோ சின்னதா கிளினிக் வச்சிப் பிழைப்பை ஓட்டிட்டு இருக்கேன். என்னால முடியாதுமா” என்றார் உறுதியாக.
“டாக்டர். என்னைக் காப்பாத்தப் போய்தான் அவருக்கு இப்படி ஆச்சுது. நீங்க ஆரம்பிங்க. நான் இப்பவே போய் கம்ப்ளைன்ட் பண்ணி, அவங்க தருவதை வாங்கிட்டு வர்றேன். நீங்க தாமதிக்கிற நிமிடங்கள் தான் டாக்டர், அவருக்கு ஆபத்து. ப்ளீஸ் டாக்டர்” என்று கண்ணீருடன் கெஞ்சினாள்.
“ஓகே. நாங்க இப்போ டிரீட்மென்ட் தரோம். ஆனா, போலீஸ்ல நீங்க கேஸ் ரெஜிஸ்டர் பண்ணிட்டு, எங்கிட்ட எப்.ஐ.ஆர் காப்பி தரணும். அதுக்கு முன்ன இந்த பார்ம்ல கையெழுத்து போடுங்க” என்று கொடிவீரனுக்கு சிகிச்சை அளிக்கச் செல்ல, அவர்கள் சொன்னது போலவே எல்லா நிபந்தனைக்கும் சம்மதித்து மகிழினி கையெழுத்து போட்டு தந்தவள், அப்படியே காவல் நிலையம் சென்று, கம்ப்ளைன்ட் காப்பி வாங்கி வந்தாள்.
கொடியின் நிலையைக் கண்டு, மகிழினி கலங்கி இருந்த நிலையில், சிகிச்சை முடித்து வெளியே வந்த மருத்துவர், "அவருக்கு ப்ளீடிங் ஸ்டாப் பண்ணி, தோள்பட்டையில் கட்டு போட்டு, இன்ஜெக்ஷன் போட்டு இருக்கு. இப்போதைக்கு பெய்ன் கில்லர் தந்து இருக்கோம். வலி ரொம்ப இருந்தா, இன்னும் நாலு மணி நேரத்துல இன்னோரு டேப்லெட் தாங்க. இன்னும் இரண்டு மணிநேரம் கடந்து, நீங்க அவரை வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாம்” என்று கொடியின் நிலையை விவரித்து சொன்னார் மருத்துவர்.
"நாங்க போய் அவர பாக்கலாமா?” என்று மகிழினி கேட்க,
“போய்ப் பாருங்க” என்று மருத்துவர் சொன்னதும் அவனைப் பார்க்க, பாட்டியும், மகிழினியும் சிகிச்சை அறைக்கு செல்ல, இவர்களை பின் தொடர்ந்தான் வேணு.
தோள் பட்டையில் கட்டுடன் கொடி சிகிச்சை அறையின் கட்டிலில் படுத்து இருக்க, "என்னை மன்னிச்சிடுங்க. என்னால தான் உங்க கையில இவ்வளவு பெரிய காயம்” என்று மீண்டும் கண்ணீர் சிந்தினாள் மகிழினி.
"ஆமா. எல்லாம் உன்னால தான்டி பாவி. இந்தத் தம்பி யாரு பெத்த புள்ளையோ. உன்ன தேடி போய் இப்படி வந்திருக்கு. இந்தப் புள்ளைக்கு ஒன்னு கிடக்க ஒன்னு ஆகியிருந்தா, இவங்க அப்பா, அம்மாவுக்கு யாருடி பதில் சொல்றது?” என்று மகிழினியைக் கடிந்து கொண்டார் பாட்டி.
"எனக்கு தான் பயப்படும்படி ஒன்னும் ஆகலையே பாட்டி. அவங்களை எதுவும் சொல்லாதீங்க” என்றான் கொடி சோர்வாக.
"தம்பி வலி ரொம்ப இருக்காப்பா? இப்போ மயக்கம் வர மாதிரி இருந்தா, நீ ரெஸ்ட் எடுத்துக்கோ” என்று அக்கறையாக பாட்டி சொன்னதும், தன்னால் தான் கொடிக்கு இந்த நிலைமை என்று, தன்னையே நொந்து கொண்டாள் மகிழினி.
கொடி அவனை மறந்து சில நிமிடங்கள் கண் மூட, ரெண்டு மணி நேரம் கடந்த நிலையில், இவனே தன் கைபேசி மூலம் ஏற்பாடு செய்தான். பாட்டி சிகிச்சைக்கான பணம் கட்டி வந்த பிறகு, இவர்கள் அனைவரும் வீட்டிற்குத் திரும்பினார்கள்.
"தம்பி. நீ கூட இங்கேயே தங்கிக்கோ. உனக்கு கை சரியான பின்னாடி மாடிக்கு போகலாம்” என்று அன்புடன் பாட்டி சொல்ல,
"அச்சோ. இல்ல பாட்டி. நான் மாடி ரூம்லயே தங்கிப்பேன். எனக்கு அங்க தான் வசதியா இருக்கும்” என்றான் கொடிவீரன்.
"சரிப்பா. நீ வா. நான் உன்னை மாடிக்கு அழைச்சிட்டு போறேன்” என்றார்.
"பாட்டி நான் நல்லா இருக்கேன். வலது கையில் தான் வலி இருக்கு. மத்தப்படி நான் நல்லா தான் இருக்கேன். என்னை நினைச்சு நீங்க கவலைப்படாதீங்க” என்று சிரித்த முகத்துடன் சொல்லி மாடிக்கு சென்றான்.