• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

விவாதக் காதல் - 12

New member
Joined
Jan 15, 2026
Messages
25
விவாதக் காதல்
Part 12

“என் வீராவோட புகைப்படம் எனக்கு என் உயிருக்கு சமம் என்று தெரிந்தும், நீங்க எப்போ இப்படி பண்ணீங்களோ, அதோட உங்களுக்கும் எனக்கும் இருக்குற சொந்தம் முடிஞ்சு போச்சு. நான் போறேன். நான் என் வீரா கூடவே போறேன்." என்று வேகமாக கீழே இறங்கி ஓடிய மகிழினியை வேணு பின் தொடர்ந்தான்.

சில நொடிகளில், "அத்த அத்த. கீழே இறங்கு அத்த. ஐயோ பாட்டி. அத்தையை வந்து பாருங்க" என்று வேணு கத்தும் சத்தம் கேட்டு, பாட்டி கீழே ஓடி வர, பாட்டியை பின் தொடர்ந்து ஓடி வந்தான் கொடிவீரன்.

"என்னடா? என்னாச்சு?" என்று பாட்டி பதற, மகிழினி இருக்கும் அறையின் ஜன்னல் பக்கம் நின்று அழுது கொண்டு இருந்தான் வேணு.

"ஐயோ சித்ரா. கீழ இறங்குமா. இனிமே நான் உன்னை ஒண்ணுமே சொல்லமாட்டேன். என் அம்மா இல்ல. தயவு செய்து கீழே இறங்குமா" என்று பாட்டி அலறினார்.

பாட்டியை பின் தொடர்ந்து வந்த கொடி, மகிழினியின் அறை கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றவன், நாற்காலியின் மேல் ஏறி நின்று இருந்த, மகிழினியின் கையில் வைத்திருந்த புடவையை பிடுங்கி தூரம் வீசியவன், மகிழினியின் கன்னத்தில் ஒரு அரை விட்ட சமயம். கண்கள் கிறங்கி மகிழினி கொடி வீரனின் இதயத்தில் சரிந்தாள்.

அதைக் கண்டு பாட்டி பதறி போன சமயம், "ஐயோ அத்த. என் அத்தைக்கு என்னாச்சு?" என்று வேணு ஒரு பக்கம் கதறினான்.

"தம்பி. என் பேத்திக்கு என்னாச்சுபா?" என்று பாட்டியும் கத்த.

அருகில் இருக்கும் பாட்டிலில் இருந்த தண்ணீரைக் கொண்டு, மகிழினியின் முகத்தில் தண்ணீரை தெளித்து தெளிய வைக்க முயற்சித்தான்.

“ஐயோ என்ன இது? ஏன் என் பேத்தி கண் விழிக்க மாட்டேன்றா. தம்பி எனக்கு ரொம்ப பயமா இருக்குப்பா. எதாவது செய்” என்றார் பாட்டி.

“பாட்டி. பக்கத்துல எங்காவது கிளினிக் இருக்கா?”

“ஹாங் பக்கத்து தெருவுல இருக்கு தம்பி. இருப்பா நான் போய் ஆட்டோ அழைச்சிட்டு வரேன்.”

“இல்ல பாட்டி. இன்னைக்கும், நாளைக்கும் ஆட்டோ எல்லாம் ஸ்டிரைக். சரி நான் இவங்கள கட்டில்ல படுக்க வச்சிட்டு, அந்த கிளினிக்ல இருந்து டாக்டரை அழைச்சிட்டு வரேன். பார்த்துக்கோங்க.” என்று கொடிவீரன் சொல்லவும், பாட்டி சம்மதமாய் தலையசைக்க, அவன் மருத்துவரை அழைக்கச் சென்றுவிட்டான். “சித்ரா. என்னை பாருமா. பாட்டியை மன்னிச்சுடு தாயி.” என்று பாட்டி தன் அவசர புத்தியை நினைத்து கவலை பட்டவர், மகிழினியின் காலடியில் அமர்ந்து அழுது கொண்டு இருந்தார்.

வேணுவுக்கோ இங்கே என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ள முடியாமல், தன் அத்தையின் நிலையை கண்டு கலங்கி நின்றான்..

சில நிமிடங்களில் வீட்டுக்கு வந்த கொடிவீரன், "பாட்டி. கிளினிக்ல இருக்குற டாக்டர்ஸ் எல்லாம் வீட்டுக்கு வர மாட்டாங்களாம். நம்ம தான் இவங்கள அங்க அழைச்சிட்டு போகணும். நான் கேப் வர சொல்லிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடும்" என்று கொடி சொல்லி முடிப்பதற்குள், வாசலில் வண்டி வந்து நின்ற சத்தத்தை கேட்ட உடனே தன் கரங்களால் மகிழினியை தூக்கிக் கொண்டான் கொடிவீரன்.
பாட்டியும் வேணுவும் அவனை பின் தொடர்ந்து செல்ல, சில நிமிடங்களில் அருகில் இருந்த கிளினிக்கில் மகிழினிக்கு முதல் உதவி நடந்து கொண்டிருந்தது.
பாட்டி கண்களில் கண்ணீர் மட்டும் வற்றாமல் பெருக, "பாட்டி. அழாதீங்க பாட்டி. அவங்களுக்கு ஏதும் ஆகாது. அவங்க நல்லா ஆகிடுவாங்க" என்று பாட்டிக்கு ஆறுதல் சொன்னான்.

"ஏன் பாட்டி நீங்க மாமாவோட போட்டோவை கிழிச்சி போட்டிங்க. நீங்க அந்த போட்டோவை கிழிச்சதால தானே அத்த இப்படி எல்லாம் பண்ணாங்க. போங்க பாட்டி நான் இனிமே உங்க கூட பேச மாட்டேன். என் அத்தைக்கு மட்டும் எதாவது ஆச்சுன்னா, நான் உங்க கூட இருக்கவே மாட்டேன்" என்று சிறுவன் வேணுவும் அழுது கொண்டு இருந்தான்.

"டேய். உன் அத்தைக்கு ஒன்னும் ஆகாதுடா. நீ அழாத" என்று கொடி சிறுவனுக்கு ஆறுதல் சொன்ன தருணம்,
"டாக்டர் உங்கள வர சொல்லுறாரு" என்று செவிலி வந்து சொல்ல, கொடி வீரன் பாட்டி, வேணுவுடன் உள்ளே சென்றான்.

கைகளில் ட்ரிப்ஸ் ஏறிய நிலையில் மகிழினிக்கு சிகிச்சை நடந்து கொண்டு இருக்கும் காட்சியை பார்த்து பாட்டி கதறி அழ, கொடி சமாதானம் செய்தான்.

"இவங்களுக்கு பயப்படுற அளவுக்கு ஒன்னும் இல்ல. பட் ரொம்ப வீக்கா இருக்காங்க. பிபி ரைஸ் ஆகியிருக்கு. அதோட சாப்பிடாம வேற இருந்து இருக்காங்க போல. நாங்க ட்ரிப்ஸ் போட்டு இருக்கோம். இன்னைக்கு நைட் இவங்க இங்கேயே இருக்கட்டும். நாளைக்கு காலையில செக் பண்ணிட்டு மேற்கொண்டு என்ன ஏதுன்னு பாக்கலாம்" என்று டாக்டர் சொன்னதும், பாட்டி மருத்துவரை கையெடுத்து கும்பிட்டு தன் நன்றியை தெரிவித்தார்.

“பாட்டி பயப்படாதீங்க. அவங்க நல்லா தான் இருக்காங்க. நீங்க இப்போ அழுது மேற்கொண்டு உங்க உடம்ப கெடுத்துக்காதீங்க. ஏற்கனவே உங்களுக்கு நெஞ்சு வலி வேற இருக்கு. அதனால நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க.

“என்னால எப்படி தம்பி அமைதியா இருக்க முடியும்? அவ நல்லா இருக்கணும்னு தானே நான் இப்பவரை அவளுக்காக வாழ்ந்துட்டு இருக்கேன். ஆனா, அவளுக்கு என் அன்பு புரியல. செத்தவனுக்காக என்னை விட்டு போக முடிவு பண்ணிட்டாளேப்பா. என்னால தாங்கிக்கவே முடியலை” என்று வாயை மூடி சத்தம் வராமல் அழுதார்.

“பாட்டி சொல்லுறேன்னு கோச்சிக்காதீங்க. நம்மள பொறுத்த வரை அவங்க கணவர் இறந்துட்டாரு. ஆனா அவங்கள பொறுத்தவரை அவர் இன்னும் அவங்க மனசுல வாழ்ந்துக்கிட்டு தான் இருக்காரு. நீங்க அவங்க உணர்வுக்கு மதிப்பு கொடுத்து தான் ஆகணும். காலம் எல்லாத்தையும் மாத்தும். முதல்ல நீங்க அவங்கள கல்யாணம் பண்ணச் சொல்லி கம்பல் பண்ணாதீங்க. அவங்கள அவங்க போக்குல விட்டுடுங்க.” என்று மகிழினியின் மன நிலையில் இருந்து கொடிவீரன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும். பாட்டியின் மனதில் நல்லதோர் மாற்றத்தை உண்டாக்கியது.

“பாட்டி. நீங்க உங்க பேத்தி கூட இருங்க. நானும் வேணுவும் போய் உங்களுக்கு சாப்பாடு கொண்டு வரோம்.”

“இல்ல தம்பி. நீங்க போய் ரெஸ்ட் எடுத்துக்கோங்க. நான் பாத்துக்குறேன்.”

“என்ன பாட்டி நீங்க. உங்கள இந்த நிலைமையில விட்டுட்டு நான் மட்டும் எப்படி போய் ரெஸ்ட் எடுக்க இயலும்?” என்று சொன்னான்.

“உனக்கு ஏன்பா எங்களால தொல்லை. நாங்க பார்த்துக்கறோம்” என்று கொஞ்சம் தவிப்புடன் சொன்னார் பாட்டி.

“தொல்லை எல்லாம் இல்ல பாட்டி. நீங்க அமைதியா இருங்க. வேணு நீ என்கூட வரியா?” எனக் கேட்டான்.

“ம்... வரேன்.”

“பாட்டி. உங்க மாத்திரை எல்லாம் எங்க இருக்குன்னு வேணுவுக்கு தெரியும்ல? என்று கேட்க,

“எனக்குத் தெரியும்.” என்றான் வேணு.

“சரி. சாவியை வாங்கிகிட்டு என்கூட நீ வா. நம்ம நடந்தே போயிட்டு. வரும் போது வண்டியில வந்துடலாம்.” என்று கொடி சொன்னதும். வேணு அவனுடன் மகிழினியின் வீட்டுக்குச் சென்றான்.

அங்கே இவர்களுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து கொண்டு மீண்டும் கிளினிக்கிற்கு வர, கட்டிலில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவ மகிழிநியைப் பார்த்து கொடிவீரன் பெருமூச்சு விட்டான்.

“பாட்டி. இதுல இட்லி இருக்கு. நீங்க சாப்பிட்டு மாத்திரை போடுங்க.”

“வேணாம் தம்பி. எனக்கு எதுவும் வேண்டாம். இவ இப்படி இருக்கிறப்ப என்னால எப்படி சாப்பிட முடியும்?”

“ஏன் இப்படி பண்ணுறீங்க. நீங்க சாப்பிடாம இருக்குறதால இங்கே எதுவும் மாறாது. பிளீஸ் சாப்பிடுங்க பாட்டி.”

“நீ சாப்பிட்டியாப்பா?”

“நானும் வேணுவும் சாப்பிட்டு தான் உங்களுக்கு இட்லி வாங்கிட்டு வந்தோம். நீங்க சாப்பிடுங்க” என்றான்.

“பாட்டி. அத்தைக்கு பசிக்காதா? அவங்களுக்கு கொடுக்கலை?” என்று அக்கறையாகக் கேட்டான்.

“அவங்களுக்கு ட்ரிப்ஸ் ஏறுது இல்ல. இப்போதைக்கு பசி இருக்காதுடா.” என்று பாட்டிக்குப் பதிலாக கொடிவீரன் பதில் சொன்னான்.

“ஓ... அத்த எப்போ கண் திறப்பாங்க?”

“அவள் கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்கட்டும். நான் தான் அவ மனசை புரிஞ்சிக்காம அவள ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். தப்பு எல்லாம் என்னிடம் தான்” என்று வருந்தினார் பாட்டி.
 
New member
Joined
Jan 15, 2026
Messages
25
பாட்டி தயவுசெய்து உங்களை நீங்களே குறை சொல்லி குற்றவுணர்ச்சிக்கு ஆளாகாதீங்க. நீங்க முதல்ல சாப்பிடுங்க.” என்றவனின் அன்பான கட்டளைக்கு அடிபணிந்த பாட்டி. கடமைக்கென்று சாப்பிட்டு முடிக்க, வேணு, மகிழினி அருகில் அமர்ந்தப்படி உறங்கி கொண்டு இருந்தான்.

“பாட்டி. நீங்க வேணும்னா, வேணுவை அழைச்சிட்டு வீட்டுக்கு போறிங்களா. நான் இங்க இருந்து இவங்கள பார்த்துக்குறேன்.” என்றான் கொடிவீரன்.

“இல்ல தம்பி. அங்க போனாலும் எனக்கு மனசு எல்லாம் இங்க தான் இருக்கும். என் பேத்தி கண் முழிக்கிற வரைக்கும் நான் இங்கேயே இருக்கேன்பா.” என்றதும் அவன் சம்மதமாய் தலையசைக்க, “தம்பி நீ வேணா வீட்டுக்கு போயேன். எங்களோட இருந்து நீயும் கஷ்டப்படுற.” என்றார்.

“இருக்கட்டும் பாட்டி. நானும் இங்கேயே இருக்கேன். நீங்க இந்த சேர்ல உக்காந்துக்கோங்க. நான் வெளிய போய் உக்காந்து இருக்கேன்.” என்ற கொடி, மகிழினி இருக்கும் சிகிச்சை அறையில் இருந்து வெளியேற அவனின் கைபேசி ஒலித்தது.

"சொல்லு அக்கா" என்றான் பொறுமையாக.

"என்னடா தம்பி. அப்பாவுக்கு திதி கொடுத்துட்டு வந்தியா இல்லையா? ஏன் காலையில இருந்து ஒரு போன் கூட பண்ணல? நீ அங்க நல்லா இருக்க தானே? உனக்கு அங்க எதாவது பிரச்சனையா?" என்று பதறினாள் சசிகலா.

"பிரச்சனை தான். ஆனா, எனக்கு இல்ல” என்று சொல்லிக்கொண்டே கிளினிக்கில் இருந்து வெளியே வந்தான் கொடி.

"வேற யாருக்கு. உன் காது மேல ஒன்னு வச்சாளே. அந்த மல்லிப்பூ தோட்டத்தின் சொந்தக்காரி. அவளுக்கு எதாவது பிரச்சனையா?" என்று சரியாகக் கணித்துக் கேட்டாள் சசிகலா.

"உனக்கு கிண்டல் அதிகம் தான்" என்று புன்முறுவல் பூத்தான் கொடி.

"சரி சொல்லு. அந்த பொண்ணுக்கு தான் பிரச்சனையா?"

"ம்... ஆமா அக்கா" என்று நடந்த சம்பவங்களை எல்லாம் தன் அக்காவிடம் சொன்னவனின் மனம் கலங்கியது.

மறுமுனையில் இருக்கும் சசியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

"என்ன அக்கா லைன்ல இருக்கியா?" என்று கேட்டான்.

"ம்... இருக்கேன்டா" என்று குரலில் சுருதி இல்லாமல் பதில் சொன்னாள் சசி.

"எனக்கு என்ன பண்ணுறதுனே தெரியலக்கா. ஆனா, என் கோவம் அந்த பொண்ணு மேல தான்" என்று சிறிது கோபம் கொண்டான் கொடி.

"டேய்! அவ என்னடா பண்ணா. அந்த கிழவி என்ன பைத்தியமா? கணவன் இறந்து ஒரு வருடம் கூட முழுசா முடியாத நிலைமையில, அந்தப் பொண்ணுக்கு இன்னோரு கல்யாணம் பண்ணி வைக்க, இந்த கிழவி ஏன் அவசரப்படுது" என்று மகிழினியின் மனநிலையை புரிந்து பேசினாள் சசி.

"அத நானும் சொன்னேன் அக்கா. அவங்களுக்கு கொஞ்சம் டைம் தாங்க. அவங்க மேல உங்க விருப்பு வெறுப்பை திணிக்காதீங்கன்னு, இப்போ தான் அந்த பாட்டிகிட்ட சொன்னேன்" என்று சலித்துச் சொன்னான் கொடி.

"ஏன்டா தம்பி. அந்த பொண்ணு பார்க்க எப்படிடா இருப்பா?” என்று ஆவலாக சசி கேக்க.

"ம்... பொண்ணு மாதிரி தான் இருக்காங்க" என்று இயல்பாக சொன்னான் கொடிவீரன்.

"அட லூசுப் பயலே. நான் அதைக் கேக்கல. ரொம்ப ராங்கியா இருப்பாளோ?” என்று கேள்வியுடன் நிறுத்தினாள்.

"ஏன் கேக்குற?” என்று புரியாமல் கேட்டான் கொடி.

"இல்ல. அன்னைக்கு உன் காது மேல ஒன்னு வச்சா. இன்னைக்கு அவ பாட்டி வாய் மேலேயே ஒன்னு வச்சி இருக்கா. நாளைக்கு இவ யாரை அடிக்க போறான்னே தெரியலையே” என்று தன் சந்தேகத்தை கிண்டலாக கேட்டாள் சசி.

"ஏன்? உன்ன அடிக்க நம்ம வீட்டுக்கு அவங்கள அழைச்சிட்டு வரவா?” என்று நக்கல் செய்தான் கொடி.

"எனக்கு என்னமோ நீ அடுத்து அதைத் தான் பண்ண போறன்னு தோணுதுடா படவா” என்று சந்தேகத்தை கொஞ்சம் கிண்டலாகச் சொன்னாள் சசி.

"ஆரம்பிச்சிட்டியா நீ. உனக்கு நான் எதாவது ஒரு பெண்ணை வீட்டுக்கு அழைச்சிட்டு வர போறேன்னு பயம். அப்படி தானே?” என்று கோவமாக கேட்டான் கொடி.

"அதுக்கு எல்லாம் கட்ஸ் வேணும் தம்பி. அதுதான் உனக்கு இல்லையே” என்று நக்கல் வழிய சொன்னாள் சசி.

"ம்... ஒரு பொண்ணை அழைச்சிட்டு வர கட்ஸ் இருந்தா போதாது. நம்மகூட வர அந்த பொண்ணுக்கு நம்ம மேல ட்ரஸ்ட் இருக்கனும்” என்று கொடி பதில் சொன்னான்

"பாருடா. நல்லா தான்டா பேசுற தம்பிப்பையா” என்று சிரித்து கொண்டாள் சசி.

"சரி இந்த கதையை விடுங்க. அம்மா எப்படி இருக்காங்க?” என்று தாயைப்பற்றி கேட்டான் கொடி கேக்க.

"ம்... நல்லா இருக்காங்க. எப்பவும் போல கோவிலை சுத்திட்டு வந்து கால் வலின்னு படுத்து இருக்காங்க” என்றாள் சசி.

"சரிக்கா. நீயும் போய் நேரத்தோடு படுத்துக்கோ. நான் போனை வைக்கவா” என்று கொடி கேக்க.

"ஏய் இரு இரு” என்று அவனை தடுத்தாள் சசி.

"என்ன?” என்றான் புரியாது.

"அந்த பொண்ணு பெயர் என்னடா?” என்று சசி ஆர்வமாக கேட்டாள்

"எந்த பொண்ணு?” என்று புரியாமல் கேட்டான் கொடி

"அதான் உன் கன்னத்தை கண்டம் பண்ணாளே. அவ தான்” என்று சசி சிரித்தாள்

"அவங்க என்னை ஒரு முறை தான் அடிச்சாங்க. ஆனா, நீ அதை ஓராயிரம் முறை டெலிகாஸ்ட் பண்ணுற” என்று கோவம் கொண்டான் கொடி.

"சரி சரி சொல்லுடா. அந்த பொண்ணு பெயர் என்ன?” என்று மீண்டும் கேட்டாள் சசி

"சித்ரமகிழினி” என்று இனிமையான குரலில் சொன்னான் கொடி.

“வாவ்!!” என்று சசி சொல்ல.

"எதுக்கு இந்த வாவ்?” என்று கேட்டான்..

"பெயர் அழகா இருக்குடா” என்றாள்.

"ஆமா. நீ ஏன் அவங்க பெயரை கேக்குற?” என்று புரியாமல் கேட்டான் கொடி

"ப்ளேம்ஸ் போட்டு பாக்க " என்று விளையாட்டாக சொன்னாள் சசி.

"என்ன?” என்று சத்தமாகக் கேட்டுவிட,

"ஆமாடா. இன்னைக்கு ஸ்கூல்ல பிளேம்ஸ் போட்டு குட்டீஸ் எல்லாம் விளையாடுனாங்க. அதான் நானும் அந்த பொண்ணு பெயரை போட்டு பாக்குறேன்” என்றாள்.

"அக்கா! நீ டீச்சர்ன்னு உனக்கு நினைவு இருக்கா?” என்று கோவமாக கேட்டான் கொடி.

"ஏன் டீச்சர் போட்டா ப்ளேம்ஸ் வேலை செய்யாதா?” என்று சசி சிரித்து கொண்டே கேட்டாள்.

"ஆமா. நீ அவங்க பெயர யாரு பெயர் கூட போட்டு பார்க்கப் போற?” என்று கொடி சந்தேகத்துடன் கேக்க.

"அந்த சுண்டக்காய் எல்லாம் உனக்கு ஏன்? போ... போய் பாட்டிக்கு டீ வாங்கிக் கொடு. நான் போனை வைக்கிறேன்” என்று சசிகலா கைபேசி இணைப்பை துண்டித்தாள்.

தன் அக்காவின் சிறு பிள்ளை தனத்தை நினைத்துத் தனக்குள் சிரித்து, மீண்டும் கிளினிக்குள் நுழைய, மகிழினி இருக்கும் அறையில் பாட்டியும் வேணுவும் இருக்கையில் அமர்ந்தபடியே கண்கள் மூடி இருந்தனர். பாட்டியின் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்த கொடி, இன்னும் மயக்கத்தில் இருந்த மகிழியின் முகத்தை பார்த்தப்படி கண்கள் அசந்தான்.

சில மணி நேரம் கடந்த நிலையில், உறக்கம் கலைந்து கண்கள் விழித்த கொடிவீரனின் முன் மகிழினி இல்லையென்று தெரிந்து அவன் முகம் மாறியது.

"பாட்டி. பாட்டி” என்று கொடி எழுப்பியதும், கண் விழித்த பாட்டி. கட்டிலில் இருந்த மகிழினியைப் பார்க்க, அவள் அங்கு இல்லை என்றதும்,

"சித்ரா எங்கப்பா” என்று அவனிடம் கேட்டார்.

"அவங்கள இங்க காணோம் பாட்டி. நீங்க எதுக்கும் ரெஸ்ட் ரூம்குள்ள போய் பாக்குறீங்களா?” என்று சொன்னான்.

பாட்டி வேகமாக எழுந்து சென்றவர், அதே வேகத்துடனும் பதட்டத்துடனும், "இல்ல தம்பி. சித்ரா அங்க இல்லப்பா. எனக்குப் பயமா இருக்கு” என்று பாட்டி பதறியவரை சமாதானம் செய்த கொடி.

"பாட்டி நீங்க இங்கேயே இருங்க. நான் போய் அவன் எங்கன்னு பாக்குறேன்” என்று அதே வேகத்தோடு பைக்கை எடுத்து கொண்டு மகிழினியை தேடி அலைந்தான்.

"அண்ணா. இந்த பக்கமா கருப்பு கலர் புடவையில, ஒரு சின்ன பொண்ணு போனாங்களா?” என்று டீ கடையில் அமர்ந்து இருக்கும் ஒரு நபரிடம் விசாரித்தான்.

"தம்பி. அழுதுகிட்டே அந்த பக்கமா ஒரு பொண்ணு போனாப்பா. நான் கூட எதாவது பிரச்சனையாமானு கேட்டேன். அதுக்கு அந்த பொண்ணு என்கிட்ட எந்த பதிலும் சொல்லாமல் வேகமா நடந்து போயிடுசசி” என்று வயதான முதியவர் சொன்னதும், மேலும் பதற்றம் தொற்றிக்கொள்ள, மகிழினியை தேடி தன் பைக்கை வேகமாக விரட்டினான்.

மை இருட்டு இடத்தில் ஒரு பெண் முனகும் சத்தம் கேட்டு, தன் பைக்கின் முன்னால் உள்ள லைட் வெளிச்சத்தை கொண்டு சத்தம் கேக்கும் திசையில் ஒளியை படரவிட, அவன் கண்ணில் இரண்டு பெண்கள். மகிழினியின் கைகளை பிடித்துக்கொண்ட நிலையில், ஒருவன் மகிழினியின் காலை கட்டி போட்டுக்கொண்டு இருந்த காட்சியை பார்த்து அதிர்ந்தான் கொடிவீரன்.

காதல் தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top