New member
- Joined
- Jan 15, 2026
- Messages
- 23
- Thread Author
- #1
11
"ஹலோ யாருங்க பேசுறது" என்று அந்த நபர் கேட்டதும்.
"நான் மகிழினி பேசுறேன். பழனி அப்பா இருக்காரா?" என்று கேட்டாள்.
"அவருக்கு காலையில திடீர்னு நெஞ்சுவலி வந்துருச்சி. ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி இருக்கோம்மா" என்று அந்த நபர் சொன்னதும்
"என்ன நெஞ்சு வலியா? என்ன சொல்றீங்க? எந்த ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி இருக்கீங்க?" என்று மகிழினி பதட்டத்துடன் கேட்டாள்.
"ஜிஎச்-ல தான்மா அட்மிட் பண்ணி இருக்கோம். இப்ப நான் கூட அவரை பார்க்க அங்க தான் போக போறேன்" என்று ஆசிரமத்தில் இருக்கும் ஒரு நபர் சொல்ல
"ஐயோ! பயப்படுறதுக்கு ஒன்னும் இல்லையே" என்று மகிழினி பதற,
"இல்லமா. டாக்டர் பாத்துட்டு மருந்து எழுதிக் கொடுத்து இருக்காங்க. ஆனா, இன்னைக்கு ஒரு நாள் ஹாஸ்பிடல்லயே தங்க சொல்லி இருக்காங்க. அதான் நான் அவரை அங்க அட்மிட் பண்ணிட்டு, அவருக்கு சாப்பாடு கொண்டு போக வந்தேன்" என்று சொன்னார் அவர்.
"சரி. நீங்க அவரை பார்த்துக்கோங்க. நான் அவரை ஹாஸ்பிடல்ல வந்து பார்க்கிறேன்" என்று சொன்ன மகிழினி கொடியின் கைபேசியுடன் கண்களில் கண்ணீரோடு நின்று இருந்தாள்.
அதே சமயம் கொடி தன் ஆடைகளை மாற்றிக்கொண்டு மகிழினியின் அருகில் வந்து, "என்னங்க பேசிட்டீங்களா?" என்று கேட்டான்.
கொடியின் கைபேசியை அவன் கையில் கொடுத்தவள், "உங்களுக்கு ரொம்ப நன்றி. நான் கிளம்புறேன்" என்று கண்களைத் துடைத்துக் கொண்டு வாசலை நோக்கி மகிழினி ஓட,
"இவங்க ஏன் அழுதுகிட்டே போறாங்க. ஐயோ! இப்ப நம்ம ஏதாவது கேட்டாலும் பதில் சொல்ல மாட்டாங்க. சரி நமக்கு என்ன வந்தது. நம்ம அம்மா சொன்ன மாதிரி, அப்பாவுக்கு நல்லபடியா திதி கொடுத்தாச்சு. அந்த மட்டுக்கு சந்தோஷம்" என்று மீண்டும் கடவுளை சேவித்தபடி கோவிலில் இருந்து வெளியே செல்ல, அங்கே மகிழினி வாசலில் கண்கள் கலங்கி நின்றிருந்தாள்.
அவள் அருகில் சென்றவன், "என்னங்க ஏதாவது பிரச்சனையா? ஏன் அழுதுட்டு இருக்கீங்க?" என்று மனம் தாங்காமல் கேட்டு விட்டான்.
தன் கண்களில் வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்ட மகிழினி, "ஆமாங்க. கோவிலுக்கு வரதா சொன்னாரு இல்ல பழனி அப்பா, அவருக்கு நெஞ்சு வலி வந்து ஹாஸ்பிடல் சேர்த்து இருக்கிறாங்களாம். அவரைப்போய் பாக்குறதுக்காக தான் ஆட்டோவுக்கு வெயிட் பண்றேன். ஆனா இந்த நேரம் பார்த்து ஒரு ஆட்டோ கூட வரல" என்றாள் மகிழினி.
தன் பைக்கில் ஏறி அமர்ந்த கொடி, அவன் கைபேசி மூலம் வாடகைக் கார் பதிவு பண்ண, சில நொடிகளில் கோவில் வாசலில் கார் வந்து நின்றது.
"ஏங்க நீங்க அழாதீங்க இன்னைக்கு இந்த ஏரியால ஆட்டோ ஓடாது அவங்க எல்லாம் ஸ்ட்ரைக் பண்ணுறாங்க. சோ நீங்க கேப்ல போயிட்டு வாங்க" என்றான் கொடி.
"ம்... உங்களுக்கு ரொம்ப நன்றி" என்றவள், வாடகை வண்டியில் ஏறி அமர்ந்ததும் டிரைவர் காரை மருத்துவமனை நோக்கி விரட்டினார். மகிழினி மருத்துவமனைக்கு சென்றதும், அங்கே தன் கணவனின் மரியாதைக்குரிய பழனி என்ற நபரை பார்க்க வேகமாக உள்ளே ஓடினாள்
வழியில் உள்ள ஆட்களை விசாரித்த பின்பு பழனி இருக்கும் அறையை கண்டு கொண்டவள், சிகிச்சை அறைக்குள் நுழைய, அங்கே கட்டிலில் படுத்து இருந்தார் பழனி
"அப்பா" என்று அன்பாக அழைத்த மகிழினி, பழனியின் அருகில் சென்றதும். அவர் கண்களை விழித்தவர்
"அம்மாடி. என்னை மன்னிச்சுடுமா. என்னால கோவிலுக்கு வர முடியல" என்று கண்கள் கலங்கினார் பழனி
"அச்சோ இருக்கட்டும். அப்பா நீங்க இப்போ எப்படி இருக்கீங்க? என்ன இது திடிர்ன்னு நெஞ்சு வலி?" என பழனியை தன் தந்தையாக பாவித்து நலம் விசாரித்தாள் மகிழினி
"எனக்கு ஒண்ணுமில்லமா. இதெல்லாம் சும்மா தான். சரி நீ சொல்லு வீரனுக்கு திதி கொடுத்துட்டியா" என்று பழனி கேட்டதும்
"ம்..." என்று சொன்ன மகிழினியின் மனதில் கொடி கையில் இருந்து குளத்தில் விழுந்த பிண்டம் நினைவுக்கு வந்தது
"யாருமா வீரனுக்கு திதி தந்தாங்க?” என்று பழனி கேட்டதும்
"நான் தான் தந்தேன்" என்ற மகிழினி கொடியை பற்றிய விஷயத்தை பழனியிடம் சொல்லாது மறைத்தாள்,
"இந்த மாதிரி சாங்கியம் எல்லாம் பெண்கள் பண்ணக்கூடாதுன்னு சொல்லுவாங்க ஆனா என்ன பண்றது வீரனுக்கு தான் உடன் பிறந்த ஆளுங்க யாருமே இல்லையே" என்று கவலையுடன் சொன்னார் பழனி
"யாரு இருந்தா என்ன, இல்லைனா என்ன, அதான் என் வீரனுக்காக நான் இருக்கேனே. அது போதாதா" என்று மகிழினி சொன்ன வார்த்தைகள் அவள் தன் கணவன் மீது கொண்டுள்ள அன்பை மேலும் வலுப்படுத்தியது.
"சரிம்மா. எல்லாம் நன்மைக்கேன்னு நினைப்போம். எப்படியோ நம்ம வீரன் ஆத்மா சாந்தியடையனும்" என்று கண்கள் மூடி வீரனின் முகத்தை ஒரு நொடி நினைத்து பார்த்த பழனியின் கண்கள் அவரை கேளாமல் கலங்கியது
"அழாதீங்க அப்பா. என் வீரன் எப்பவும் நம்ம கூட தான் இருக்காரு. சரி நீங்க சாப்பிட்டீங்களா. நான் வேணா உங்களுக்கு நைட் டிபன் செய்து கொண்டு வரவா?" என்று மகிழினி பழனியின் உடல் நிலை மீது அக்கறை கொண்டாள்.
"அதெல்லாம் வேணாம்மா. என்னை பார்த்துக்க ஆஸ்ரமத்து ஆளுங்க இருக்காங்க. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. நீ நேரத்தோடு கிளம்பி வீட்டுக்கு போ. அப்புறம் உன் பாட்டிக்கு நீ என்னை பார்க்க வந்தது தெரிந்தால், அவங்க உன் மேல தான் கோவப்படுவாங்க" என்று பாட்டியின் மனநிலையை புரிந்து கொண்டு, அவருக்காக பரிந்து பேசினார் பழனி.
"அவங்கள நான் சமாளிச்சுப்பேன் அப்பா. நீங்க கவலைப்படாதீங்க. ஆமா நாளைக்கு நீங்க டிஸ்சார்ஜ் ஆகிடுவீங்க தானே?" என்று மகிழினி கேக்க
"அப்படி தான்மா டாக்டர் சொன்னாரு. எதுவா இருந்தாலும் மறுபடியும் நாளைக்கு காலையில அவரு வந்து என்னை செக் பண்ணா தான் விவரம் தெரியும்" என்று பழனி சொன்னதும் தன் பர்ஸில் இருந்து பணத்தை எடுத்த மகிழினி, அந்த பணத்தை மேசை மேல் வைத்தவள்
"அப்பா இந்த பணத்தை செலவுக்கு வச்சிக்கோங்க. கூடிய சீக்கிரமா வீரா பேர்ல இருக்குற இன்சூரன்ஸ் பணம் மொத்தத்தையும், நம்ம ஆஸ்ரமம் அக்கௌன்ட்ல டெபாசிட் பண்ண ஏற்பாடு பண்ணிட்டேன்" என்று பணத்தின் மீது நாட்டம் இல்லாத ஆளாக மகிழினி சொன்னதும், அவளின் பெருந்தன்மையை நினைத்து அவரின் உள்ளமும் மகிழ்ந்து இருந்தது.
"நல்லதுமா. அதெல்லாம் பொறுமையா நடக்கட்டும். நீ இப்போ முதல்ல வீட்டுக்கு கிளம்பு. ஆங் அப்புறம் தயவுசெய்து ஒரு செல்போன் வாங்குமா. அந்த மாதிரி உன்கிட்ட ஒரு போன் இல்லாததால தான், என்னால இன்னைக்கு கோவிலுக்கு வர முடியாது, என்ற செய்தியை கூட உனக்கு தெரியப்படுத்த முடியல" என்று பழனி சொன்னதும், அவரை பார்த்து வெறுமையாக சிரித்தாள் மகிழினி.
"சரிப்பா. நான் கிளம்புறேன். எதுக்கும் நாளைக்கு நான் உங்களுக்கு போன் பண்ணி பாத்துட்டே, நம்ம ஆஸ்ரமத்துக்கு வரேன்" என்று சொல்லி மருத்துவமனையில் இருந்து வெளியே வர, இவள் வருகைக்காக காத்து இருந்தான் கொடி.
அவனை பார்த்ததும் முதலில் முகம் மாறிய மகிழினி, ‘இவரு ஏன் இங்க நிக்கிறாரு. யாருக்கு என்னாச்சுன்னு தெரியலையே’ என்று தனக்குள் எண்ணியவள் அவன் அருகில் சென்றாள்.
"வந்துட்டீங்களா. அதோ அங்க ஒரு கேப் நிக்குது பாருங்க. அதுல நீங்க வீட்டுக்கு வீட்டுக்குப் போயிடுங்க" என்று மகிழினியின் முகத்தை பார்க்காமலேயே சொன்னான் கொடிவீரன்.
"நீங்க எப்படி இங்க?” என்று மகிழினி குழப்பதுடன் கேட்டாள்.
"உங்கிட்ட செல்போன் இல்லைன்னு சொன்னிங்க இல்ல. அதான் உங்களுக்கு கேப் எல்லாம் புக் பண்ண முடியாதுன்னு நானும் உங்க பின்னாடியே இங்க வந்தேன்" என்று சொன்னான் கொடி