New member
- Joined
- Dec 11, 2025
- Messages
- 27
- Thread Author
- #1
Chapter 8
நீயாக என்னை நெருங்கிடாத போதும்
உன் நினைவுகள் என்னை
வலம் வந்து கொண்டே இருக்கிறது.
சீண்டல்களால் தீண்டாமல்
பார்வைகளால் என்னை பலவந்தம்
செய்கிறாயே..
நெடுநாட்களுக்கு பிறகு நல்ல சமையலின் மணம் வீட்டை வலம் வர, மூச்சை இழுத்து அதன் சுகத்தை அனுபவித்தார் சோமு. மணக்க மணக்க வத்தக்குழம்பும், அப்பள கூட்டும் செய்து கொண்டிருந்தாள் தேவி. அவள் அன்னை வசந்தியின் கை பக்குவம் அப்படியே அவளுக்கு இருந்தது.
காரணமே இல்லாமல் மனதில் உற்சாகம் குமிழ் விட்டு இருக்க, அதை மறைக்க முடியாமல் முகத்தை இறுக்கமாக வைக்க முயன்று தோற்று போனவளாக வேலையை செய்து கொண்டிருந்தாள். எப்போதும் பிடித்த வேலையை செய்யும்போது வரும் உற்சாகம் இது என்று மனதோடு கூறிக்கொண்டவளுக்கு, அது அவனுக்காக உணவு சமைப்பதால் உண்டான உற்சாகம் என தெரியவில்லை.
சமைத்து முடித்து விட்டு மீண்டும் ஒரு குளியலை போட்டவள் தந்தைக்கு சற்றே காரம் குறைத்து வைத்த உணவை எடுத்து வந்து கொடுத்தாள். சோமுவின் உடல் நிலை இப்போது கொஞ்சம் தேறி இருந்தது. லேசான காரமில்லாத உணவுகளை கொடுத்து வருகிறாள். வேகவைத்த காய்கறி பருப்பு லேசாக நெய் விட்ட குழம்பு சாதம் என கொடுத்து கொண்டிருந்தாள். கற்பகம் வேறு ஏதாவது கொண்டு வந்து கொடுத்து இவளை உண்ணவைத்து கொண்டு இருந்தாள். எப்போதும் அவளே கொடுத்து கொண்டிருக்க இப்போது கற்பகதுக்கும் கொஞ்சம் குழம்பு கூட்டு எடுத்து வைத்து கொண்டாள்.
மகளின் கைபக்குவத்தில் உணவின் வாசம் மூக்கை துளைக்க ரசித்து உண்டார் சோமு, தந்தை வயிரார உண்டதிலேயே மகளின் மனம் நிறைந்து போனது.
இன்னும் தந்தையிடம் வாசுவிற்கு உணவை எடுத்து செல்வதை கூறி இருக்கவில்லை அவள். தந்தை தன்னை தவறாக நினைக்க மாட்டார் தான் இருந்தாலும் கூட ஏதோ ஒன்று அவளை தடுத்தது. ஆனால் அவரிடம் கூறாமல் இருப்பது அதை விட பெரிய தவறு என்பதால் துணிந்து கூறி விட்டாள்.
“என்னம்மா” தயங்கி தயங்கி நின்ற மகளின் முகத்தை பார்த்தே கேட்டு விட்டார் சோமு.
“அப்பா அது வாசு சார் இருக்காருள்ள அவர் என்னை சமைச்சு எடுத்துட்டு வர முடியுமான்னு கேட்டார். வீட்டு சாப்பாட்டை சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகுதாம்”. என்றாள் லேசான தடுமாற்றத்தோடு.
உடனே “அதுக்கென்னம்மா கொண்டு போய் கொடு” என்று இலகுவான வழியை கூறி விட்டார் தந்தை.
மகிழ்வுடன் கிளம்பியவள் கற்பகத்துக்கு தன் கைபக்குவத்தில் உண்டான உணவை கொடுக்க, “என்ன தேவி வாசனை கல்லு கம்பெனி வரைக்கும் வரும்போல” என்று கேட்டு சிரித்து வைத்தாள்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லைக்கா” என சிரித்து வைத்து விட்டு கிளம்பி இருந்தாள் வேலைக்கு.
வேலைக்கு வந்தவள் அவனை தேட, அவன் இல்லை. சரி இங்கே தானே வருவான் கொடுத்து கொள்ளலாம் என்று வேலையை பார்க்க துவங்கி இருந்தாள்.
மதியம் வேளையில் வேகமாக உள்ளே வந்தவன் போனை சார்ஜ் போட்டு விட்டு இவளை திரும்பியும் பாராமல் வெளியே செல்ல போக, அவனை எப்படி அழைப்பது என்று புரியாமல் ஒரு நிமிஷம் என்று நிறுத்தி இருந்தாள். அது அவளுக்கே க்ரின்ச்சாக இருந்தது தான் ஆனால் வேறு வழி இல்லை. அவனை அப்படி பெயர் சொல்லி கூப்பிட சட்டென வரவில்லை என்பது தான் உண்மை. மற்றவர்களிடம் வாசு சார் என்று இயல்பாக கூறுபவள் அவனிடம் மட்டும் பெயரில்லாதவன் (அனாமிகன்) போல அழைத்து வைப்பாள். இங்க பாருங்க, ஒரு நிமிஷம், என்றோ அல்லது பேச வேண்டிய பேச்சை நேரடியாக தொடர்பு படுத்தியோ பேசி வைப்பாள். அவனும் இதுநாள் வரை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனால் இன்று என்ன காண்டோ தெரியவில்லை அவளை முறைத்தவன், “ஏன் எனக்கு பேர் இல்லையா இல்லை என் பேர் சொல்லி கூப்பிட பிடிக்கலையா” என்றான் எடுத்ததும்.
கடுகடுப்பாக அவன் பேசியதும், உணவை எடுத்து வந்திருக்கிறேன் என கூற வந்தவள் அந்த விஷயத்தையே மறந்து போனாள். அவனும் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.
அப்படியே அமர்ந்து விட்டவள், அடுத்து அடுத்த வேலைகளில் கவனம் செலுத்தினாலும் இருக்கைக்கு அருகே இருந்த உணவு பை மீது அவள் பார்வை அடிக்கடி சென்று மீண்டது. ஏக்கமாக அதையே பார்த்து கொண்டு மதிய உணவு இடைவேளையை கூட மறந்து அமர்ந்து இருந்தவள் உள்ளே வந்தவனை கவனிக்கவில்லை.
ஏதோ சிந்தனை வயப்பட்டு அமர்ந்து இருந்தவளின் பார்வை சேர்ந்திருந்த இடத்தை பார்த்தவன், கண்கள் மகிழ்ச்சியில் மின்னின, பரவாயில்லையே எடுத்துட்டு வர மாட்டா நினைச்சேன் கொண்டு வந்துட்டாளே என நினைத்து கொண்டே வேறு வேலை பார்ப்பது போல, “மதியம் வீட்டுக்கு போகலையா” என்று கேட்டான்.
அப்போது தான் அவன் அங்கிருப்பதையே உணர்ந்தவளாக திடுக்கிட்டு பார்த்தவள், கோபத்துடன் எழுந்து வெளியே சென்றாள்.
வேகமாக வெளியே சென்றவள் அதே வேகத்துடன் திரும்பி உள்ளே வந்து கீழே இருந்த உணவு பையை எடுத்து மேசை மீது பொத்தென வைத்தாள். “சாப்பாடு கொண்டு வந்திருக்கேன், பிடிச்சிருந்தா சாப்பிடுங்க இல்லைன்னா எடுத்து கீழே கொட்டுங்க” என கூறிவிட்டு, மேசை இழுப்பறையில் இருந்த சாக்லேட்டை எடுத்து கொண்டு வேகமாக வெளியேறினாள்.
செல்லும் அவளையே இமைக்காமல் பார்த்திருந்தவன் கைகள் அவள் கொண்டு வந்த உணவை எடுத்து வைக்க துவங்கியது. வேகமாக சென்று முகம் கழுவி வந்தவன் காணாததை கண்டது போல அந்த உணவை எடுத்து வைத்து கொண்டு உண்ண துவங்கினான்.
இதுநாள் வரையில் பசிக்கு உணவை உண்டவன் இன்று ரசித்து ருசித்து உண்டான். அவள் எப்படி செய்திருந்தாலுமே அவனுக்கு நன்றாகத்தான் இருந்திருக்கும் ஆனால் அவள் செய்ததே அற்புதமாக இருக்க உண்டவனுக்கோ அமிர்தமாக இருந்தது. முன்னரே இதை கேட்டிருக்க வேண்டுமோ இத்தனை நாட்களும் இந்த ருசியை இழந்து விட்டேனே என்று தன்னையே திட்டி கொண்டான்.
உணவின் சுவையை மட்டுமா இழந்தாய் வாழ்வின் பொருளை, அதன் அர்த்தத்தை, இனிமையை இப்படி எல்லாவற்றையும் தான் இழந்து நிற்கிறாய். இனியும் அவளை விட்டுவிடாதே பிடித்துகொள். உனக்குள் பத்திரமாய் வைத்து பூட்டிக்கொள் என்று உள்ளிருந்து ஒரு குரல் ஓங்கி ஒளித்து கொண்டிருந்தது.
சிறிய சிரிப்புடனேயே ஒரு பருக்கை கூட மிச்சம் வைக்காமல் உண்டு முடித்தான். கைகழுவ வெளியே வந்தவனை அங்கே வேலை செய்யும் வேலு என்னண்ணே சாப்பிட்டியா என்று கேட்டான் ஆச்சரியமாக.
அவனை முறைத்து பார்த்தவன் “அதுல உனக்கு ஏதாவது வருத்தமா” என்று கேட்டான்.
“இல்லை நாம ரெண்டு பெரும் தானே சேர்ந்து சாப்பிட போவோம் அதான் கேட்டேன்” என்றான் ஏமாற்றமாக. எப்போதும் வாசு சாப்பிட செல்லும்பொது அவனும் உடன் தொற்றிகொள்வான். சாப்பிட்டு முடிந்ததும் வாசுவே இருவருக்கும் சேர்த்து பணம் கொடுத்து விடுவான். சாப்பிட்டாதற்கு கணக்கு பார்க்கும் பழக்கம் அவனுக்கு இல்லை. அதே போல வேலை செய்பவர்கள் யாரேனும் சாப்பாடு வாங்கி வர கூறினாலும் மறுக்காமல் வாங்கி வந்து கொடுத்து விடுவான். சிறு வயதில் உணவிற்காக அவன் பட்ட கஷ்டம் அவனை அப்படி நடக்க வைத்து கொண்டிருக்கிறது. அதை தவறாக பயன்படுத்தி கொள்ளும் இந்த வேலு போன்ற ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
“அப்படியா இனிமேல் நீ தனியா போய் சாப்பிடு எனக்கு வீட்டு சாப்பாடு வந்திருக்கு” என்றவன் அத்தோடு பேச்சை முடித்து கொண்டு வேலையை பார்க்க சென்று விட்டான்.
“அய்யயோ இனி காசு கொடுத்து தான் சாப்பிடனுமா” என உள்ளே எட்டி பார்க்க அங்கே காலையில் தேவி வரும்போது கொண்டு வந்த உணவு பை இருந்தது. இது தானா விஷயம் இவள் கொண்டு வந்து கொடுத்தது தானா அந்த வீட்டு சாப்பாடு என முனகிக்கொண்டவன், எங்கிருந்து தான் வாராளுங்களோ என் சோத்துல மண்ணை போட என கருவிகொண்டே சென்று விட்டான்.
மதியம் வந்தவளுக்கு காலியான உணவு பாத்திரம் கண்ணில் பட, சொல்லவியலாத ஒரு நிம்மதியுணர்வு நெஞ்சில் தோன்றியது.
அத்தோடே மேசை இழுப்பறையை திறந்து பேனாவை எடுக்க போக, அங்கே மீண்டும் ஒரு சாக்லேட் அமர்ந்து கொண்டு அவளை பார்த்து அழகாக சிரித்தது.
இது எதுக்கு என கேட்டுக்கொண்டாலும் அதை எடுத்து பத்திரப்படுத்திக்கொள்ள மறுக்கவில்லை அவள்.
மாலையில் கணக்கை முடித்து வைத்து விட்டு அவனிடம் கூறிக்கொண்டு போக காத்திருந்தாள். நேரம் ஆனதே தவிர அவன் வரவில்லை. சரி துண்டு சீட்டு எழுதி வைத்து விட்டு கிளம்பலாம் என நினைத்து பேப்பரை எடுக்கவாசலில் நிழலாடியது. அவன் தான் என தெரிந்ததும் நிமிர்ந்து பார்க்காமல் நோட்டு புத்தகத்தை அவன் பார்வைக்கு நகரத்தி வைத்து விட்டு பொருட்களை எடுத்து கொண்டு கிளம்பினாள்.
முற்றிலுமாக வாசலை அடைத்து கொண்டு நின்று இருந்தவன், அவளுக்காக ஒரு பக்கம் மட்டும் வழி விட்டு நின்றான். அந்த வாசலை தாண்ட வேண்டும் என்றால் அவளும் ஒரு பக்கமாக தான் செல்ல வேண்டும் எப்படியும் அவன் மீது உரசாமல் செல்ல முடியாது அவள் அவனை முறைத்து கொண்டே நின்றாள்.
“என்ன” என்றான் புருவம் உயர்த்தி
“இப்படி வழியில நின்னா எப்படி போகறது” என கேட்டாள் அவள்.
“ஆமா நீ அப்படியே பேரல் சைஸ்ல இருக்க பாரு, இந்த வழி பத்தாம போறதுக்கு” என கூற “ஏதாவது வம்பு வளர்க்கறதே வேலையா போச்சு” என அவனை முறைத்தபடியே அந்த வழியே ஒதுங்கி சென்றாள்.
சரியாக அவனை கடக்கும் நேரம், “சாப்பாடு செமையா இருந்துச்சி, தினமும் கிடைக்குமா” என்றான் கிறங்கிய குரலில். அவன் உடல் அவளை தீண்டவில்லை, உரசவில்லை ஆனால் அவன் மூச்சு காற்று அவளை தீண்டி உயிரை உரசி சென்றது. அத்தனை நெருக்கத்தில் கண் மூக்கு உதடு கன்னம் என வியர்வையில் மினுமினுத்த அவன் அவயங்கள் அவள் கண்களில் அழுத்தமாக பதிந்து கொண்டிருந்தது.
உடலின் செல்கள் எல்லாம் ரசவாத மாற்றங்கள் நிகழ்த்திட, வார்த்தைகள் வெளி வர மறுத்து சண்டித்தனம் செய்தது பெண்ணவளுக்கு. விடை தெரியாத வினோத கேள்விகளை அவன் கேட்டது போல அப்படியே நின்று விட்டாள் தேவி.
நகர்ந்து போ என மூளை அறிவுறுத்தியும் சிமெண்ட் போட்டு பூசிய கல்தூண் போல கால்கள் அங்கேயே நிற்க, விழிகள் என்ன கேட்டாய் என்பது போல அவன் கேள்வியில் தொக்கி நின்றது. கேள்விக்கான பதிலை கூறாமல் அப்படியே நின்றவளை பார்த்தவன் இதழ்கள் நெளிய, “சாப்பாடு தான்மா கேட்டேன் வேற ஏதோ கேட்ட மாதிரி இப்படி யோசிக்கற” என்றான் குறும்பில் மிளிர்ந்த குரலில்.
அப்போதும் அவள் அவனையே இமைக்க மறந்து பார்த்து வைக்கவும், “என்ன” என்றான் கண்ணை சிமிட்டி.
ஒன்றுமில்லை என்பது போல தலையசைத்து வெளியே செல்ல, “எனக்கு தேவையானது கிடைக்குமான்னு இன்னும் சொல்லவே இல்லையே” என்று கேட்டான் வாசு தேவன்.
அவன் கேள்வி அவளை துரத்தி வர, கண்ணுக்கு புலப்படாத ஏதோ ஒன்றிடம் இருந்து தப்பிப்பதை போல வேகமாக வீட்டிற்கு ஓடி இருந்தாள் அவள்.
வழக்கம் போல செல்லும் அவளையே சிரிப்புடன் பார்த்து இருந்தவன் அவள் அமர்ந்து இருந்த இருக்கையை விரல்களால் வருடி தானும் அதில் தொப்பென அமர்ந்தான்.
கடும் வெயில் சூழ்ந்த பாலைவனத்தில், காண கிடைக்காத அதிசயத்தை கண்டது போல பசுமை மிகு சோலையாக அவள் கிடைத்திருந்தாள் அவனுக்கு. அவளை தவற விட கூடாது என்பதற்காகவே தன்னுடன் வைத்து கொள்ள தவியாய் தவித்தது அவன் மனம்.