New member
- Joined
- Dec 11, 2025
- Messages
- 27
- Thread Author
- #1
Chapter 5
நிந்திக்க நினைத்து தான்
நினைத்துக் கொண்டே இருக்கிறேன்.
நினைக்க நினைத்த போதெல்லாம்
உன்னை நிந்தித்துக் கொண்டே இருக்கிறேன்.
“உன் இஷ்டத்துக்கு வரதுக்கும் போறதுக்கும் இது ஒண்ணும் லாட்ஜ் கிடையாது”..என்ற அவனது தீயில் குளித்த வார்த்தைகளை கேட்டு அப்படியே சிலையாக நின்று இருந்தாள் தேவி.
“காலையில வந்ததிலே இருந்து ஒரு வேலையும் பார்க்கலை ஆனா மதியம் ஆனதும் சாப்பாட்டுக்கு மட்டும் ஓடிட்ட. இது தான் வேலை பார்க்க வர லட்சனமா, வேலை செய்யாம எதையாவது காட்டி மயக்கலாம்னு நினைச்சுட்டு வந்தியோ. ஒழுங்கா வேலை செய்ய முடியும்னா செய் இல்லைன்னா என்னோட பணத்தை எடுத்து வச்சிட்டு வெளியே போய்ட்டே இரு”..என கத்தினான் வாசு.
வீட்டிற்கு சென்று விட்டு அப்போது தான் வேக நடையுடன் வந்தவளை வழியிலேயே நிறுத்தி வைத்து சிம்ம குரலில் அவன் கத்தவும், அங்கே இருந்தவர்கள் எல்லாம் செய்து கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு இவளை பார்ப்பதை ஒரு வேலையாக செய்தனர்.
அவளுக்கு அப்படியே பூமிக்குள் புதைந்து போய் விட மாட்டோமா என்று இருந்தது. வந்த முதல் நாளே என்ன மாதிரி பேச்செல்லம் கேட்க வேண்டி இருக்கிறது என்று நினைத்தவள் நெருப்பு கோழி தலையை மண்ணில் புதைத்து கொள்வது போல நின்றிருந்தாள்.
“இப்படி தரையை பார்த்துட்டு இருந்தா எல்லாம் சரியாகிடுமா, வந்ததுக்கு ஏதாவது வேலையை பார்க்க முயற்ச்சி பண்ணு”.. என்று விட்டு அவன் சென்று விட்டான். அப்போது தான் அவள் பேப்பர் கொடுத்த பெண் அங்கே நிற்பதை கண்டவள் அவளிடம் விரைந்தாள். தன்னை நிரூபிக்கும் பொருட்டு அவளிடம் சைகையில் பேப்பர் எங்கே என்று கேட்டாள். அவளோ கையில் இருந்ததை எடுத்து காட்டினாள். அதை பறித்து கொண்டு வேகமாக அவனை நோக்கி வந்தாள்.
அதற்குள் லோடு வண்டியில் ஏறி அமர்ந்து இருந்தவன் அருகே சென்றவள் அவன் கையை பற்றி அதில் தான் கொண்டு வந்த பேப்பரை திணித்தாள். அவன் என்னவென அதை பார்க்கும் முன்னரே, “ஓசியில காசு வாங்கிக்க எனக்கு ஒண்ணும் ஆசையில்லை, உங்க பணத்தை எப்படியாவது திருப்பி கொடுத்திடறேன். அது வரைக்கும் வெயிட் பண்ண முடியலைன்னா போலீஸ் கம்ப்ளைண்ட் குடுத்துகோங்க”..என்று கூறிவிட்டு வேகமாக வெளியேறினாள்.
அன்று தான் வேலைக்கு வந்திருந்தாள், வந்த முதல் நாளே இப்படியா அவமானப்பட வேண்டும். இருந்த கோபத்திற்கு செருப்பு கூட அணிய மறந்து விட்டாள். காலில் குத்திய கல்லு மண்ணோடு சேர்ந்து உள்ளத்திலும் அவன் கூறிய வார்த்தைகள் ஈட்டியாக குத்தி வலிக்க வைத்து கொண்டு இருந்தது. எதையாவது காட்டி மயக்க வந்திருக்கிறாயா என்ற அவன் கேள்வி காதுக்குள் விடாமல் ஒளித்து கொண்டிருந்தது. வீட்டிற்குள் வந்து தான் நின்றாள். முகம் எல்லாம் வியர்த்து கொட்டி இருக்க அப்படியே சுவற்றில் சாய்ந்து அமர்ந்து விட்டாள்.
முதுகு வலிக்க எவ்வளவு வேலை செய்திருக்கிறாள், இவனானால் ஏதோ சும்மா தூங்கி எழுந்து வந்தது போலல்லவா பேசிவிட்டான். அவள் அப்படிபட்டவளா, வேலை செய்யாமல் ஜாலம் செய்யும் குணமா அவளுக்கு, “சும்மா கொஞ்சம் நேரம் படும்மா என்று தந்தை எப்போது சொன்னாலும் அப்படி எல்லாம் இருக்க முடியலைப்பா” என்று ஏதாவது வேலையை இழுத்து வைத்து செய்து கொண்டிருப்பாளே. அவளை போய் என்ன சொல்லி விட்டான். அது மட்டுமா சொன்னான், எதையாவது காட்டி மயக்கும் எண்ணமாம் ஆமாம் இவன் பெரிய பேரழகன் இவனை அப்படியே மயக்க பார்க்கறாங்க. மனசில அவன் என்ன தான் நினைச்சுட்டு இருக்கான். என்னை பார்த்தா எப்படி இருக்கு அவனுக்கு.
காலையில் அவன் காட்டிய அந்த இடத்தை பார்க்கவே ஏதோ எலிக்குகை போன்று தான் காட்சியளித்தது தேவிக்கு. அந்த உருவகம் அளவில் அல்ல அதன் தூய்மையில். எலி எப்படி தான் உண்கிறோமோ இல்லையோ ஆனால் எல்லா பொருட்களையும் எடுத்து வந்து தனது இடத்தில் வைத்து கொள்ளுமோ அது போலத்தான் இருந்தது அந்த இடமும். டார்ச் லைட் வெளிச்சத்தில் ஒரு பல்பு. அழுக்கு படிந்த சுவர், கால் வைக்க இடம் இல்லாமல் எல்லா இடத்திலும் சிதறி கிடந்த பொருட்கள் பேப்பர்கள். எழுதுவதற்கு இருந்த பேனா கூட நான் சிமென்ட்டில் குளித்திருக்கிறேன் என்று சொல்லாமல் சொன்னது.
இருக்கை அதை கேட்கவே வேண்டாம், அந்த குஷன் வைத்த இருக்கையை பார்த்தாலே ஒப்பவில்லை, அந்த லட்சணத்தில் இருந்தது. பில் புக் என்ற பெயரில் இருந்ததை எடுத்தால் ஏதோ பழைய கால ஓலைசுவடியை எடுத்தது போல தூசி பறந்தது. அங்கே இருக்கவே அவளுக்கு மூச்சு திணறியது. இந்த அழகில் எப்படி அங்கே அமர்ந்து அவள் வேலை பார்ப்பாள். ஒரு நெடு மூச்சை இழுத்து விட, மூக்கில் தூசி பட்டு ஒரே தும்மலாக வந்தது. வேகமாக வெளியே வந்தவள் அச்சு அச்சு என ஒரு ஐந்தாறு அடுக்கு தும்மல்களை போட்டு வைத்தாள் தேவயானி.
காலையிலேயே வேலைக்கு வந்தவளை பார்த்தவன் ஒரு இதழ் நெளிவோடு தான் வரவேற்றான். “வர மாட்டேன்னு நினைச்சேன்”.. என்றவாறே அறையினுள் நுழைந்தான். அவன் பின்னேயே சென்றவளுக்கு அந்த அறையை பார்த்ததும் வந்த தும்மல் தான் இவை.
வெளியே வந்து தும்மி கொண்டு இருந்தவளை அசுவாரசியமாக பார்த்தவன், “இங்கே கவுண்ட்ஸ் தான் எல்லாமே. யார் யார் எவ்வளவு கல்லு ஏத்தராங்க, எவ்வளவு இறக்கராங்க எல்லாமே கணக்குல வரணும். இதுவரைக்கும் அவங்க சொன்னது தான் கணக்கு இனிமேல் நீயே கிட்ட இருந்து பார்க்கணும்”.. என்றான் கறாராக.
தும்மல் வந்ததால் கலங்கிய கண்களோடு அவனை பார்த்தவள் சரி என்பதாக தலையாட்டிக்கொண்டாள். அவன் அகன்றதும் உள்ளே செல்ல முனைந்தவள் முதல் வேலையாக தனது துப்பட்டாவை வைத்து முகமூடி கட்டிக்கொண்டாள். அங்கிருந்த குப்பைகளை எல்லாம் ஒரு கவரில் போட்டு கட்டினாள். அடுத்து துடைப்பத்தை எடுத்து பெருக்கினாள், அதில் அதிக அளவில் தூசி பறக்க அவளால் முடியவே இல்லை. இருந்தாலும் கஷ்டப்பட்டு அதை செய்து முடித்தாள். அடுத்து அங்கிருந்த ஒரு அழுக்கு துணியை நனைத்து மொத்த டேபிளையும் துடைத்து முடித்தாள். அப்போது தான் அவளுக்கு கொஞ்சமேனும் மூச்சு விட முடிந்தது. ஆனாலும் சுவற்றில் படிந்து இருந்த அழுக்கு என்னை கொஞ்சம் சீராக்கி விடேன் என்று கெஞ்சியது. இழுத்து பிடித்த மூச்சுடன் மொத்த இடத்தையும் சுத்தம் செய்தாள்.
அப்படியே மதிய நேரம் தாண்டி விட்டிருந்தது. அப்போது தான் மணியை பார்த்தவள் தந்தையின் நினைவு வரவும் வேகமாக எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு வெளியே வந்தாள். அவனிடம் சொல்லிவிட்டு போகலாம் என்று தேட அவன் எங்கும் தென்படவில்லை. சரி வேறு யாரிடமாவது சொல்லிக்கொண்டு செல்லலாம் என்று நினைத்தவள் அங்கே வேலை செய்தவர்களை நோக்கி சென்றாள்.
எல்லாரும் இவளை பார்த்தார்களே தவிர யாரும் என்ன என்று கேள்வி கேட்கவில்லை, இப்போ எப்படி போறது என நினைத்து அவள் நிற்க, ஒரு பெண் அவளிடம் வந்து, என்ன வேணும்கா என்று தெலுங்கில் கேட்டாள்.
அது சரி நான் உங்களுக்கு அக்காவா என நினைத்தவள் “நான் வீட்டுக்கு போய்ட்டு வரேன் அவர் வந்தா சொல்லிடறீங்களா”.. என்று கேட்டாள்.
இவள் நீளமாக சொல்லி முடித்ததும் “என்ன சொன்னீங்க” என அவள் கேட்டு வைக்க, எங்காவது சென்று முட்டி கொள்ளலாம் போல இருந்தது தேவிக்கு.
ஆனாலும் இவங்களுக்கு விளக்கம் சொல்ல முடியாது என்று நினைத்தவள், வேகமாக அந்த ஆபீஸ் ரூமிற்கே ஓடி வந்தாள். ஒரு பேப்பரை எடுத்து அதில் தான் வீட்டிற்கு சென்று வருவதாக எழுதி எடுத்து கொண்டு அந்த பெண்ணிடமே வந்தாள். இதை அவர் வந்தா குடுத்துடுங்க என கூறி விட்டு ஓட்டமும் நடையுமாக அங்கிருந்து கிளம்பினாள்.
முயன்றவரை முதுகு வலிக்க வேலை செய்தவளைத்தான் அவன் எதையாவது காட்டி மயக்க வந்தாயா என்று கேட்டு வைத்தான். இனி அவன் வேலையும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம் எப்படியாவாது அவனது பணத்தை திருப்பி கொடுத்தால் போதும் என்று தோன்ற அதற்கு என்ன செய்யலாம் என்று யோசிக்க துவங்கினாள். ஏற்கனவே கையில் காதில் இருந்ததெல்லாம் போயிற்று இனி என்ன என்று யோசிக்க ஒரு யோசனை பளீரிட்டது.
ஒரு பொருள் இருக்கிறது அதை விற்று கொடுக்கலாம், ஆனால் அதை பற்றி நினைக்கும்போதே நெஞ்சம் கனத்து போனது. மனதை பாரம் அழுத்தியது. வலிக்க துவங்கிய இதயத்தை கையால் நீவிகொண்டாள். அவள் வந்த அரவம் கேட்டு தேவி என அழைத்தார் சோமு.
அப்பா என வேகமாக எழுந்து அவரிடம் ஓடினாள். “என்னம்மா இப்போ தானே போன திரும்ப வந்துட்ட”..
அது அங்க”..அவள் என்ன கூறுவது என புரியாமல் தயங்கி நிற்க “நான் கிளம்பும்போது வந்தா போதும்னு சொன்னேனே மறந்துட்டியா”.. என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்திருந்தான் வாசு.
அவனை பார்த்ததும் முகத்தை திருப்பி நின்று கொண்டாள் தேவி. அவள் செய்கை அவனுக்கு சுவாரஸ்யத்தை கொடுக்க, சோமுவை பார்த்து “எப்படி இருக்கீங்க சார்”.. என்று கேட்டான்.
அவர் யாரென மகளை பார்க்க, “இவர் தான் எனக்கு வேலை கொடுத்து இருக்கார், ஹாஸ்பிடல் போக கூட ஹெல்ப் பண்ணாரே”.. என்று பட்டும் படாமலும் கூறினாள்.
“அப்படியா தம்பி, உங்க உதவிக்கு ரொம்ப நன்றி, என்னால எத்தனை பேருக்கு சிரமம்”.. என்றார் சங்கடமாக.
“இது மாதிரி எல்லாம் யோசிக்காதீங்க சார் உடம்பை பார்த்துகோங்க, என அவள் புறம் திரும்பியவன் நான் லோட் இறக்க போறேன் நீ ஆபீஸ் போய்டு” என்று சாதாரணமாக கூறினான்.
தந்தை முன்னே எதிர்த்து பேச முடியாமல் நின்றவள் ம்ம் என்று மட்டும் தலையாட்டி கொண்டாள்.
“அப்போ நான் வரேன் சார்”.. என்று கூறிவிட்டு வெளியே வந்தான்.
“நீயும் கிளம்பும்மா”.. என்று தந்தை சொல்ல சரி என தலையாட்டி விட்டு வெளியே வந்தாள். அவளுக்காகவே காத்திருந்தவன் போல, அவன் பைக்கில் இருந்து எதையோ எடுத்து கீழே போட்டான், அது அவளின் செருப்பு.
அங்கேயே விட்டு விட்டு வந்திருந்தாள், அவள் அவனையும் அதையும் மாறி மாறி பார்க்க முதல் முறையாக அவன் முகத்தில் சிரிப்பின் சாயல் தோன்றி உடனே மறைந்து போனது.
அது உண்மையா என்று அவனை பார்க்க, “ஆபீஸ பார்த்துக்கோ”.. என்று கூறிவிட்டு அவள் பதிலை வாங்காமல் கிளம்பி இருந்தான்.
அவள் விட்டு வந்த செருப்பை எதற்காக மெனக்கெட்டு எடுத்து வர வேண்டும், இதன் மூலம் என்ன சொல்ல வருகிறான். மன்னிப்பா அல்லது வேறேதுவுமா என யோசித்தபடியே அவள் கால்கள் அவன் கம்பனியை நோக்கி நடந்தது.